vav9

vav9

 

 

வா… அருகே வா! –  9

பூங்கோதை அதிகாலையில் திரும்பி படுக்க, “கிணி… கிணி…” என்று சத்தம் ஒலிக்க படக்கென்று எழுந்து அமர்ந்தாள் பூங்கோதை.

“அட கடவுளே! இது  மணி சத்தம் வேற செய்யுமா? கேடி! என்னவெல்லாம் செஞ்சி வச்சிருக்கான். இவனை எல்லாம், தீவிரவாதி கடத்திட்டு போக மாட்டாங்களா? என் உயிரை எடுக்க காஷ்மீர்ல இருந்து இங்க வந்திருக்கானோ?” என்று  புலம்பினாள் பூங்கோதை.

‘நேத்து நடந்த களேபரத்தில், இதை நான் கவனிக்கலை போல?’ என்று எண்ணி தன் இடுப்பில் இருக்கும் மணிகளை தடவியபடி  தலையை சிலுப்பினாள் பூங்கோதை. தன் அறையிலிருந்து வெளியே வந்து, பட்டாளையில் படுத்திருந்த  ஆச்சியைப் பார்த்தாள் பூங்கோதை.

‘ஆச்சி… கண்டுபிடிச்சிருவாகளோ?’ என்ற சந்தேகம் எழும்ப, “ரொம்ப மெல்லிய சத்தம்தென்… மத்த சத்தத்தில் கேட்காது. எனக்கு மட்டும்தென் கேட்கும்…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, வேலையைத் தொடங்கினாள் பூங்கோதை.

சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆச்சி, பூங்கோதையின் கால்களை நோட்டமிட்டார்.

“ஏட்டி… கொலுசு மாத்திருக்கியோ?” என்று முத்தமா ஆச்சி கேட்க, பூங்கோதை கையிலிருந்த பால் சொம்பு உருண்டோடியது.”என்ன கேட்டுட்டேன்னு இப்படி பதறுத?” என்று முத்தமா ஆச்சி கேட்க, பூங்கோதையின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

“ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்ததுன்னு கேட்டேன்… உனக்கு கேட்கலை?” என்று முத்தமா  ஆச்சி பூங்கோதையிடம் சந்தேகமாகக் கேட்க, “உனக்கு காது செவிடாகிருச்சு. அது தான் அமானுஷ்ய சத்தமெல்லாம் கேட்குது.” என்று பூங்கோதை எரிந்து விழுந்தாள்.

“செவிடான அமானுஷ்ய சத்தம் கேட்குமா? இது என்ன புது கதையா இருக்கு?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டே முத்தமா ஆச்சி வாசலை நோக்கி சென்றார்.

‘வயசானாலும், காதெல்லாம் நல்லா கேட்கும். நான் கண்டுபிடிக்கவே ஒரு ராத்திரி ஆச்சு…’ என்று மனதில்  புலம்பிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள் பூங்கோதை.

திலக் அவன் வீட்டில்  காஷ்மீர் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் பணி, அவனை அழைக்க, அவன் கண்கள் பூங்கோதையை தேடிக் கொண்டிருந்தது.

“கட்டின புருஷன் நான் இங்க இருக்கேன். இவளுக்கு அவ்வுளவு கொழுப்பு?” என்று திலக் முணுமுணுக்க, “அடேய்! அந்த பொண்ணு பூங்கோதை சொன்னது சரியா போச்சு! யார் புருஷன், யார் பொண்டாட்டி?” என்று பார்வதி ஆச்சி திலக் முன்னே கோபமாக நின்றார்.

‘ஐயோ! ஆச்சி இங்கன  எப்ப வந்தாக? பூங்கோதை என்ன சொன்னா? நேத்து சாயங்காலம் நடந்த விஷயம் அதுக்குள்ள எப்படி தெரியும்?’ என்று திலக்கின் இதயம் வேகமாகத் துடித்தது.

‘சமாளிப்போம்…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, “ஐயோ… ஆச்சி… உனக்கு வயசான காது செவிடாப்போச்சு! மிலிட்டரிகாரன் நான் இங்கன இருக்கேன். தீவிரவாதிக்கு எவ்வுளவு கொழுப்ப்புனு, வேலையை பத்தி பேசிகிட்டு இருந்தேன். நான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேனா?” என்று திலக் தன் ஆச்சியின் தோளில் கைபோட்டு, சமரசம் பேசினான்.

பார்வதி ஆச்சி யோசனையாக பார்க்க, “அந்த பொண்ணு பூங்கோதை என்ன சொன்னா?” என்று தன் சந்தேகக்கத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆச்சியின் சந்தேகத்தை  கலைத்தான் திலக்.

“நீ எவளாவது, ஒரு தில்லிக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோடத்தேன் வருவேன்னு அந்த திமிர் பிடிச்சவ சொல்லுதா!” என்று பார்வதி ஆச்சி அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தபடி கூறினார்.

“திமிர் பிடிச்சவ… சரிதேன் ஆச்சி… ரொம்பத்தேன் கொழுப்பு! அவ கிட்ட சொல்லு ஆச்சி.. என் கல்யாணம் நம்ம இனம்,  நம்ம ஊர் பெண்ணொடுத்தேன்னு. உனக்கு தெரிஞ்ச பெண்ணொடுதேன்ன்னு சொல்லு ஆச்சி…” என்று திலக் கூற, ஆச்சி அவனை மேலும் கீழும் பார்த்தார்.

ஆச்சியின் பார்வையில், “என்ன ஆச்சி இப்ப பாக்குற?” என்று திலக்  கூற, “ஏலே! உன் பேச்சில், நீ பெண்ணை உறுதி செய்த மாதிரி தெரியுது.” என்று பார்வதி ஆச்சி கிடுக்கு பிடியாகக் கேட்க, ‘ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ?’ என்று யோசித்து சிரித்து மழுப்பினான் திலக்.

“என்னல ஒரே சிரிப்பாணியா இருக்கு?” என்று பார்வதி ஆச்சி அதே பிடியில் நிற்க, “ஆச்சி! நீ பேசி முடிச்சாத்தேன் எனக்கு கல்யாணம். இப்பதைக்கு, எனக்கு கல்யாணம் வேண்டாம்.” என்று திலக் உறுதியோடு கூற, பார்வதி ஆச்சி யோசனையோடு தலை அசைத்தார்.

திலக் தன் வேலையில் மூழ்கினான். ‘இன்னைக்கு வெளியவே வர மாட்டாளோ?நேத்து நான் எதுவும்  சொல்லாம வந்திருந்தா கூட,  பியூட்டி வெளிய வந்திருப்பா…’ போன்ற சிந்தனை அவனை வாட்டியது.

திலக்கின் இதயம், ‘பியூட்டி… பியூட்டி…’ என்று வேகமாகத் துடித்தது. தன் வீட்டில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

பூங்கோதை அவள் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் செவிகள், திலக் வீட்டில் நடக்கும் பேச்சு வார்த்தையில், முழு கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தது.

‘மிலிட்டரி போனால், நான் வெளிய வரணுமா? திமிர் பிடிச்சவன். இன்னைக்கு உன்னை நான் பார்க்க மாட்டேன். இன்னைக்கு இல்லை… என்னைக்கும்… எனக்கு பிடிக்கலைன்னா, பிடிக்கலைதென்.’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள் பூங்கோதை.

“ஆச்சி… நான் கிளம்புதேன்…” என்று திலக் சத்தமாகக் கூற, “பத்திரமா போயிட்டு வாடா…” என்று பார்வதி ஆச்சி, திலக் சம்மதமாகத் தலை அசைத்தான்.

“ஏல! உன் முகரையில் ஒரு சந்தோசமே இல்லை. என்னல? எப்பவும் இப்படி இருக்க மாட்டியே!” என்று பார்வதி ஆச்சி கேட்க, “அப்படி எல்லாம் இல்லை ஆச்சி. நான் முத்தமா ஆச்சி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பதேன்!” என்று கூறிக்கொண்டு முத்தமா ஆச்சி வீட்டிற்குச் சென்றான் திலக்.

“ஆச்சி!” என்று அழைக்க, அந்த சத்தத்தில் வீட்டிற்குள் மறைந்து கொண்டாள் பூங்கோதை.

திலக் ஆச்சியிடம் கூறிக்கொண்டு, கிளம்பினான்.

‘பியூட்டி… உன்னை வர வைக்கேன்… என்னை வழியனுப்ப…’ என்று உறுதியோடு ரயில் நிலையத்தை நோக்கிக் கிளம்பினான் திலக்.

திலக் சென்று சில நிமிடங்களில், பார்வதி ஆச்சி முத்தமா ஆச்சி வீட்டிற்கு வேகமாக நடந்து வந்தார்.

“ஏட்டி… பூங்கோதை… திலக் எதோ முக்கியமானது வச்சிகிட்டு போய்ட்டான் போல! உங்க அத்தான் ஊரில் இல்லையாம். ஏதோ அவசர சோலியா வெளியூர் போயிருக்கானாம். அவன் சேக்காளி யாருமில்லை. இதை ரயில்வே டேசனுக்கு கொண்டு வர சொல்லுதான். நான் கொண்டு வர நேரமாகுமாம். உன் கிட்ட கொண்டு வர சொல்லுதான் டீ.” என்று பார்வதி ஆச்சி உதவி கேட்க, மறுக்க முடியாமல் பூங்கோதை தர்ம சங்கடமாக நெளிந்தாள்.

“பூங்கோதை… இவ்வுளவு கேட்கால்லை. டேசன் வரைக்கும் தானே… ஒரு எட்டு போயிட்டு வந்திரு!” என்று முத்தமா ஆச்சி கூற, ‘மிலிட்டரி… ஒரு கேடி… வேணுமினே என்னை பார்க்கத்தேன் கூப்பிடுது!’ என்று பூங்கோதை சிந்தனையில் மூழ்கினாள்.

பூங்கோதையின் தயக்கத்தைப் பார்த்த முத்தமா ஆச்சி, “வேணுமின்னா, கயலை துணைக்கு கூட்டிட்டு போ!” என்று முத்தமா ஆச்சி, ‘ஐயோ! வேற வினையே வேணாம். அவ வேற எதையாவது கண்டுபிடிச்சிட்டான்னா?’ என்ற எண்ணத்தோடு, பார்வதி ஆச்சி கொடுத்த பையை வாங்கிக் கொண்டு வேகமாகக் கிளம்பினாள் பூங்கோதை.

திலக் சீட்டியடித்தபடி பூங்கோதையின்  வருகைக்காக காத்திருந்தான்.  கிராமத்து ரயில் நிலையத்தில் அத்தனை பெரிய கூட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சிலரே! அவர்களின் கவனமும் அவர்கள் வைத்திருந்த பெட்டியிலிருந்தது.

பூங்கோதை அவனை நெருங்க, “ஹே! பியூட்டி… புருஷன் போறேன்னு வழியணுப்ப வந்தியா?” என்று புருவம் உயர்த்தி, புன்னகையோடு கேட்டான் திலக்.

பூங்கோதை அவனை கோபமாக முறைத்து, அவள் கையிலிருந்த பையை நீட்ட, அதை வாங்காமல் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தான் திலக்.

“அதுல ஒண்ணுமில்லை பியூட்டி. உன்னை பார்க்கணும்னு தோணுச்சு. அதுக்குத்தேன் வர சொன்னேன்!” என்று திலக் கூற, தெரிஞ்ச விஷயம்தென்.’ என்று எண்ணியபடி பூங்கோதை மௌனமாக நின்றாள்.

“பியூட்டி பேச மாட்டியா?” என்று திலக்கின் குரல் கெஞ்சியது.

“நீ பண்றது தப்புன்னு உனக்கு தெரியலையா மிலிட்டரி? ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி காதல் வரவைக்கிறது, அந்த பெண்ணை பலவந்தப்படுத்துறதுக்கு சமம்.” என்று பூங்கோதை ஆழமான குரலில் கூறினாள்.

திலக் தன் கண்களை சுருக்கி அவளை ஒரு நொடி பார்த்தான்.

“நீ உங்க அத்தானை கட்டிக்கணுமுண்ணு நினைக்கிறாயா?” என்று திலக் கடுமையாகக் கேட்க, “நான் என்ன பேசுதேன்? நீ என்ன கேட்க?” என்று பூங்கோதை காட்டமாகக் கேட்டாள்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில்?” என்று திலக் மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்க, “என் அத்தானை நினைக்கலைனா, உன்னை நினைக்கணுமுன்னு எதாவது சட்டம் இருக்கா?” என்று பூங்கோதை தன் பற்களை நறநறத்தாள்.

“அதை கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம். எல்லாரும் காதலிச்சா கல்யாணம் பண்ணுதாக?” என்று திலக் முரண்டு பிடிக்க, “எனக்கு உன்னை ஒரு நாளும் பிடிக்காது.” என்று பூங்கோதை உறுதியாகக் கூறினாள்.

அப்பொழுது, அவர்களைக் கடந்து சென்ற நடுத்தர வயது பெண்மணி, “திலக், நீ போற சோலியே ஆபத்தானது. இதுல, இவளையா பார்த்திட்டு போவ?” என்று கழுத்தை நொடிக்க, “அதுதேன் இப்ப உங்க முகரையும் பார்த்துட்டாகள்ள, எல்லாம் சிறப்பா நடக்கும். அடுத்த முறை வரும் பொழுது  காஷ்மீர் மட்டுமில்லை மொத்த பாகிஸ்தானையும், இந்தியாவுக்குத்தேன்.” என்று பூங்கோதை தன் முகத்தை தன் தோள்பட்டையில் இடித்தாள்.

“ஹா… ஹா…” என்று திலக் பெருங்குரலில் சிரிக்க, “என்ன சிரிப்பாணி? உன்னால்தென்  எனக்கு இதெல்லாம். இந்த பையை வாங்கிக்கோ, இல்லைனா போற வழியில் குப்பை தொட்டியில் போடுதேன்.” என்று பூங்கோதை படக்கென்று திரும்ப, அவள் கைகளை பிடித்தான் திலக்.

பூங்கோதை அவனை கோபமாக முறைக்க, “கொஞ்ச நேரம்…” என்று  கைகளை விடுவித்து கொண்டே திலக்கின் கண்கள் கெஞ்சியது.

“பியூட்டி… இந்த பியூட்டிங்கிற பெரு, உன் அழகுக்கு மட்டுமில்லை. உன் மனசுக்கும் சேர்த்துதேன். ஊர் மக்கள் என்ன பேசினாலும், கம்பீரமா நிக்குற உன் தைரியம் தனி அழகு பியூட்டி.” என்று திலக் உதடுகள் பூங்கோதையை புகழ, அவன் விழிகள் காதல் மொழி பேசியது.

‘இவன் பேசியே என்னை மயக்கிருவான் போல?’ என்ற எண்ணத்தோடு பூங்கோதை தடுமாற திலக் தன்னை மீட்டுக் கொண்டான்.

“பியூட்டி, நீ அழவே மாட்டியா?” என்று கேலியாக கேட்டான் திலக்.

பூங்கோதை அவனை கேள்வியாக பார்க்க, “இல்லை. உன் புருஷன். மிலிட்டரி மாமென் கிளம்புதேன். ஒரு வருஷம் கழிச்சித்தேன் என்னை பார்க்க முடியும். அதுதேன் ஏக்கத்தில் அழுவியோன்னு கேட்டேன்!” என்று திலக் வம்பிழுக்க, “நான் அழவே மாட்டேன் மிலிட்டரி.” என்று அழுத்தமாக தன் கவனத்தை எங்கோ தொலைத்தபடி கூறினாள் பூங்கோதை.

“அம்மா, அப்பாவே இல்லை, அதை விட என்ன பெரிய இழப்புக்கு அழப்போறேன்? எதுமே வேணும்ன்னு என்னக்கு தோனியதே இல்லை மிலிட்டரி.” என்று பூங்கோதை எங்கோ பார்த்தபடி கூற, “எனக்காக அழுவியா பியூட்டி?” என்று ஏக்கமாக கேட்டான் திலக்.

“மிலிட்டரி கொழுப்பா?” என்று பூங்கோதை எகிற, “ஆனந்த கண்ணீர் பியூட்டி. என் அன்பால் வரவைப்பேன் பியூட்டி.” என்று திலக் கண்சிமிட்ட, பையைக் கீழே வைத்துவிட்டுக் கிளம்பினாள் பூங்கோதை.

“கொஞ்சம் இரு பியூட்டி. நீ தனியா போக வேண்டாம். கதிரேசனை வர சொல்லிருக்கேன். சரியா ரயில் வர நேரத்துக்கு வருவான்.” என்று கூற, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் பியூட்டி.

“எம் பொஞ்சாதி என் பொறுப்பில்லையா? இருட்டிருச்சு தனியா அனுப்புவேனா?” என்று திலக் கேட்பதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“பியூட்டி, என்னை ஒரு சொட்டு கண்ணீரோடு ஆசையா வழி அனுப்பேன்?” என்று திலக் கெஞ்சிக் கொண்டே ரயிலை நோக்கிச் செல்ல, பூங்கோதை வேண்டுமென்றே தன் பற்களைக் காட்டியபடி அவனை வழி அனுப்பினாள் பூங்கோதை.

திலக் பூங்கோதையை பார்த்தபடி பின்னோக்கி நடந்தான். “ஹே பியூட்டி… என் பொஞ்சாதி என்னை சிரிச்சிகிட்டே வழியனுப்பணும்னு நினச்சேன். நடந்திருச்சு பியூட்டி.” என்று பேசிக்கொண்டே பின்னோக்கி நடக்க, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு நாற்காலியில் இடித்து  திலக் சரிய, அவனை ஓடி வந்து தாங்கி பிடித்தான் கதிரேசன்.

திலக் கால்களில் இரத்தம் வழிய, அவன் கண்கள் பூங்கோதையை பார்த்துக் கொண்டிருந்தது.

பூங்கோதையின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

‘ஐயோ! போகும் பொழுது இப்படி அபசகுனமா அடி படுத்தே…’ என்று பூங்கோதை மனம் அவளையும் மீறிப் பதற,

“கதிரேசா! என் மனசால் அவ என் பொஞ்சாதி. பத்திரமா பார்த்துக்கோ.” என்று கூற, அவனிடம் கேலி பேச கதிரேசனுக்கு ஆயிரம் விஷயங்கள் தோன்றினாலும், உணர்ச்சி பிடியில் சிக்கியிருந்த நண்பர்களால் கேலி பேச முடியவில்லை.

“திலக்… கால்ல பெரிய அடி இல்லையே? இங்கன நான் பாத்துக்குறேன். நீ பத்திரமா போயிட்டு வா!” என்று கதிரேசன் உணர்ச்சி பொங்கக் கூற, திலக் சம்மதமாகத் தலை அசைத்து ரயில் ஏறினான்.

பூங்கோதை பல யோசனையோடு அவனைப் பார்க்க, அவள் கண்களில் காதல் இல்லை என்றாலும் ஒரு பயம் தெரிய, ‘பியூட்டி! எனக்காக பயப்படுற பியூட்டி. இது எனக்கான வலி. இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு பியூட்டி…’ என்று ஏக்கத்தோடு, திலக் ரயிலின் வாசலில் நின்று கைகளை அசைக்க, கதிரேசன் அவன் ஏக்கத்தைப் புரிந்து கை அசைத்தான்.

‘போகும் போது அடி பட்டிருச்சே!’ என்ற கவலையோடு பூங்கோதையின் கைகள் அவளறியாமல் மேலே எழும்பி திலக்கிற்கு கை அசைத்தது.

வா… அருகே வா!  வரும்….

 

error: Content is protected !!