NPG-9
NPG-9
கீதாஞ்சலி – 9
அன்று முழுவதுமாக அமிர்தா எங்கும் வெளியில் செல்லவில்லை. அவள் வீட்டிற்குக் கூட அவளை அனுப்பவில்லை சத்யவதி. குழந்தை நிரஞ்ஜலாவும் அவ்வப்பொழுது கொஞ்சம் சிணுங்கிக் கொண்டேதான் இருந்தாள். அதைக் காரணமாகக் காட்டி அமிர்தாவையும் குழந்தையும் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டார் சத்யவதி.
அமிர்தா எதையும் மறுத்துப் பேசும் நிலையில் இல்லை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தாள். எனவே சத்யவதி கூறியதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் அவர் ஓய்வெடுக்குமாறு சுட்டிக் காட்டிய அறைக்குள் புகுந்து கொண்டாள். குழந்தைக்கும் அமிர்தாவிற்கும் மாற்று உடைகள் கூட சத்யவதி தான் அமிர்தா வீட்டிற்குச் சென்று எடுத்து வந்து கொடுத்தார்.
நிரஞ்ஜலா முதலில் நல்ல தூக்கம். சற்று நேர தூக்கத்திற்குப் பிறகு வயிறு நிரம்ப உணவையும் சத்யவதி ஊட்டி விட, அதன் பிறகு அவள் அந்த ரூமிற்குள் இருக்கவே இல்லை. சந்தோஷுடன் விளையாடிக் கொண்டு வீட்டை வலம் வரத் தொடங்கிவிட்டாள். ஆனால் அமிர்தா ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. உணவைக் கூட கட்டாயப்படுத்தி சத்யவதி தான் ரூமிற்கே சென்று கொடுத்தார்.
ராகுலோ மாடியில் அவன் அறைக்குள்ளாகவே சிறையிருக்க, அவனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கௌஷிக்கின் தலையில் விழுந்தது.
சத்யவதி இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு பின் பக்கம் தோட்டத்தில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்க அங்கு வந்த கௌஷிக் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
“ஹான்… ரவி. நான் கௌஷிக். மார்னிங் நியூஸ் பார்த்தீங்களா?”
“நானே கால் பண்ணணும்னு நினைச்சேன் கௌஷிக். ஹா…ஹா… எப்படி கரெக்டா ப்ரொபோஸ் பண்ற அன்னைக்கே கரெக்டா மீடியா கிட்ட மாட்டினாரு ராகுல்?”
“இல்லல்ல ரவி, அது எதார்த்தமா நடந்த ஒரு விஷயம். அதைப் பெரிசு பண்ணிட்டாங்க. நீங்களே சொல்லுங்க ஹாஸ்பிடல்ல போய் யாராவது ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?”
“என்னது ஹாஸ்பிடலா? ஹாஸ்பிடல்ல நடந்த விஷயமா அது?”
“ஆமா ரவி. அந்தப் பொண்ணு எங்க ரெண்டு பேரோட ஃபேமிலி ஃப்ரெண்ட். அவங்க குழந்தைக்கு நைட் திடீர்னு ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி. அதான் ராகுல் ஹெல்புக்காக கூடப் போயிருந்தான். அது கடைசில என்னென்னமோ நடந்துடுச்சு.”
“அப்பவே ராகுல் சாரே மறுத்து சொல்லியிருக்கலாம் இல்ல”
“திடீர்னு அந்தக் காலங்கார்த்தால நேரத்துல ஹாஸ்பிடல்ல இத்தனை பேரை அவனும் எதிர்பார்த்திருக்க மாட்டான் தானே. அதான் அப்போதைக்கு அங்கிருந்து தப்பிச்சா போதும்னு கிளம்பி இருக்கான்.”
“அதுவும் சரிதான். இப்ப என்ன கௌஷிக் பண்ணலாம்?”
“அதுக்குத் தான் நான் உங்களைக் கூப்பிட்டேன் ரவி. உடனடியா ஒரு ப்ரெஸ் மீட் அரேஞ்ச் பண்ணுங்க ப்ளீஸ்.”
“ப்ரெஸ் மீட் எங்க வைக்கிறது கௌஷிக். நீங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறமாவா?”
“இல்ல அது வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் ரவி. இங்கேயே ஏற்பாடு பண்ணுங்க. எதாவது ஹோட்டல் மாதிரி பார்த்து ஒரு கான்ஃப்ரென்ஸ் ஹால் புக் பண்ணிப் பண்ணுங்க ரவி.”
“ஓ… ஓகே கௌஷிக். நான் அரேஞ்ச் பண்ணிடறேன்.”
“மேக் இட் ஆஸ் சூன் ஆஸ் பாசிபிள் ரவி. ப்ளீஸ்… இதுல இன்னொரு பொண்ணோட லைஃபும் சிக்கல்ல மாட்டியிருக்கு.”
“யா… புரியுது கௌஷிக். நான் உடனடியா பிரெஸ் மீட் ஏற்பாடு பண்றேன். எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு டைம் அன்ட் பிளேஸ் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்.”
“ஓகே ரவி. தாங்க் யூ. பை” ஃபோனை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவன் சத்யவதியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
“கௌஷிக் யார்கிட்டப்பா பேசிக்கிட்டிருந்த?” கௌஷிக்கிடம் வினவினார் சத்யவதி.
“அவர் லீடிங் பி.ஆர்.ஓ.ம்மா. அதான் அவர்கிட்ட ஒரு ப்ரெஸ் மீட் அரேஞ்ச் பண்ண சொல்லிக் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்பத்தானே நாம மறுப்பு செய்தி போட சொல்ல முடியும்.”
“அதெல்லாம் ஒரு மறுப்பும் தெரிவிக்க வேண்டாம்.”
“ஏன்ம்மா?”
“நீதானே சொன்ன ராகுலுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்கச் சொல்லி. அது ஏன் அமிர்தாவா இருக்கக் கூடாது?” சட்டென்று சத்யவதி கேட்டுவிட அதிர்ந்து விழித்தான் கௌஷிக்.
“என்னம்மா சொல்றீங்க?”
“நீயே யோசிச்சுப் பாரு, முன்ன பின்ன தெரியாத யாரோ ஒரு பொண்ணைப் பார்க்கிறதை விட அமிர்தாவா இருந்தா நல்லா இருக்கும் தானே. சந்தோஷையும் நல்லபடியா பார்த்துக்குவா.”
“இல்லம்மா… அது வந்து…”
“ஏன் தயங்குற கௌஷிக்? அமிர்தா ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுன்னு யோசிக்கிறீயா? ராகுலும் அப்படித்தானேப்பா.”
“ச்சேச்சே நான் அப்படி யோசிக்கலை ம்மா. பட்…”
“அப்புறம் என்னடா? இந்த விஷயம் மட்டும் சரியா நடந்தா அப்பா இல்லாத நிலாவுக்கு ஒரு நல்ல அப்பா கிடைப்பான். அம்மா பாசம்னா என்னன்னே தெரியாத சந்தோஷுக்கும் ஒரு நல்ல அம்மா கிடைப்பா.”
“எனக்கென்னவோ இது சரியா வரும்னு தோனலை ம்மா.”
“ஏன்டா, பேச்சை ஆரம்பிக்கும் போதே அச்சாணியமா வாயை வைக்கிற.”
“அதுக்கில்லைம்மா. ராகுல் இப்போ முன்ன மாதிரி எல்லாம் இல்லை. கொஞ்சம் தப்புத் தப்பா யோசிச்சு…” இதற்கு மேல் தாயிடம் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை கௌஷிக்கிற்கு.
“தப்புத் தப்பா யோசிச்சு…” கௌஷிக் கூறியதையே திரும்பக் கூறி கேள்வியாக அவனைப் பார்த்தார் சத்யவதி.
“கொஞ்சம் கெட்ட பழக்கம் எல்லாம் பழகி வைச்சிருக்கான்ம்மா” சொல்லும் பொழுதே கௌஷிக்கின் தலை தானாகக் குனிந்து கொண்டது.
“நீ அவங்கூடத் தானே இருக்குற. நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல மாட்டியா? அப்புறம் என்ன ஃப்ரென்ட் டா நீ?”
“நானும் சொல்லத் தான்ம்மா செய்றேன். அதை அவன் கேட்டாதானே! எனக்குத் தெரியாம நைசா கிளம்பிடுறான். அதுக்கும் மேல அவன் என்ன சின்ன பப்பாவா ம்மா. நான் எடுத்து சொல்றதுக்கு. ஒரு மாதிரி அப்படியே போய்க்கிட்டு இருக்கு” பெருமூச்சுடன் கூறினான் கௌஷிக்.
“சொல்ற விதத்துல சொன்னா கேட்டுக்கப் போறான்.”
“நீங்க ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க. அதை செயல் படுத்துறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தானே தெரியும்.”
“இதுக்காகத்தான் ரெண்டு பேரும் கல்யாணம்னு பேச்செடுத்தாலே பேய் முழி முழிக்கிறீங்களாடா?”
“நோ மை மதர். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்குறீங்க? நான் உங்கப் புள்ளையாக்கும். சொக்கத் தங்கம்மா உன் புள்ள” என்று சொல்லி இல்லாத டிஷர்ட் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் கௌஷிக்.
“ஹ்ம்கூம்… எனக்கென்னவோ ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்கன்னே தோனுது. சரி இப்ப பேச்சு உன்னைப் பத்திக் கிடையாது. ராகுல், அமிர்தா பத்தி. நீ அதுக்கு வா.”
“எனக்கு எந்தப் பக்கம் பேசுறதுன்னே தெரியலைம்மா. ஒரு பக்கம் ராகுல், இவனை அமிர்தா ஏத்துக்குவாளா? அவன் ஏற்கனவே நொந்து போயிருக்கான்ம்மா. இந்தக் கல்யாண விஷயத்துல இன்னும் ஒரு அடியை சத்தியமா அவனால தாங்கிக்க முடியாது.
அப்புறம் இந்தப் பக்கம் அமிர்தா, அந்தப் பொண்ணு வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னே நமக்குத் தெரியாது. ஏற்கனவே எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குது. இதுல இவனோட பழக்க வழக்கத்தால அது இன்னும் கொஞ்சம் பாதிக்கப்பட்டுறக் கூடாது இல்லையா? அதான், இந்த விஷயம் சரியா வருமான்னு ரொம்பக் குழப்பமா இருக்கு.” பெருங் குழப்பத்தோடு பதிலளித்தான் கௌஷிக்.
ராகுல் மற்றும் அமிர்தா இரண்டு பேரின் நண்பனாகவும் யோசித்தான் கௌஷிக். அவனுக்கு ராகுல் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அமிர்தாவும் இப்பொழுது முக்கியமாகத் தெரிந்தாள். ஒருவருடைய குணம் மற்றவருக்குத் தீராத மன வருத்தத்தைத் தந்து விடக் கூடாதே என்று இரண்டு பேரின் சார்பாகவும் யோசித்தான்.
அம்மாவிடம் மேம்போக்காக கெட்டப் பழக்கங்கள் என்று மட்டும் சொல்லியாகி விட்டது. அது என்னென்னவென்ற விபரங்கள் தெரிய வரும் பொழுது அமிர்தா அதை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வாள்? எந்தப் பெண்ணாலும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாதே.
அது மட்டும் அல்லாமல் சிறு வயதில் இருந்தே இருவருக்குமே ஆகாது என்பது வேறு கௌஷிக்கின் மனதை உறுத்தியது. ஆனால் இதில் கௌஷிக் யோசிக்காத ஒரு விஷயம் ‘எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்’ என்பது.
கௌஷிக் வயதிற்கு இதைப் பற்றி யோசிக்கத் தெரியவில்லை. ஆனால் சத்யவதி சரியாகப் பாயிண்டைப் பிடித்தார்.
“நீ இப்படி யோசிக்குற. நான் என்ன நினைக்கிறேன்னா ரெண்டு பேருமே முதல் தடவை அமைஞ்ச வாழ்க்கையில ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டு இருக்காங்க. பாதிக்கப்பட்ட ரெண்டு பேர் சேரும் போது அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா மாறவும் வாய்ப்பு இருக்கு இல்லையா?”
“அப்படி நடக்க வாய்ப்பிருக்கா ம்மா?”
“நிச்சயமா நடக்கும். அம்மா சொல்றேன். எல்லாம் சரியா வரும். நீ யோசிக்காம போய் ராகுல் கிட்ட இதைப் பத்திப் பேசிப் பாரு. நானும் அமிர்தா கிட்ட பேசுறேன்.”
சொல்லிவிட்டு சத்யவதி குழந்தைகள் இருவரின் மீதும் பார்வையைப் பதித்தார். அவர்கள் இருவரும் தங்களுக்கே ஆன பிரத்யேக உலகத்தில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
தன் அருகில் தரையில் ஊறிய சின்னஞ் சிறு எறும்பைப் பார்த்து நிரஞ்ஜலா பயந்ததைப் போல் ‘அண்ணா’ என்றழைத்து சந்தோஷிடம் உதட்டைப் பிதுக்க, சந்தோஷும் பெரிய மனிதத் தோரணையில்,
“அச்சோ, பேபி கிட்ட ஆன்ட் வந்துடுச்சா. நீ பயப்படாதே அண்ணா அதை விரட்டி விட்டுடறேன்” என்று சொல்லி அந்த எறும்பைத் தட்டி விட்டு நிரஞ்ஜலாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
இதே நிரஞ்ஜலா தனித்து விளையாடி இருந்தால் அங்கு காட்சியே வேறு. அந்த எறும்பைப் பிடித்து ஒன்று வாயில் போட்டிருப்பாள், இல்லையோ எதையாவது கொண்டு வந்து அதை அடித்து விட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாள். எறும்பு தான் அவளிடம மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டிருக்கும்.
இன்று சந்தோஷ் உடனிருக்கவும் அவனிடம் அத்தனை சலுகையாக அப்பாவி வேஷம் போட்டுக் கொண்டாள் அந்த தேவதைப் பெண். தன்னை அண்ணனாக ஒரு சிறு பெண் பாவித்துக் கொள்ளவும் சந்தோஷுக்கு அவ்வளவு சந்தோஷம். அண்ணனாகவே மாறிவிட்டான் அந்தச் சிறுவன்.
இக்காட்சியைப் பார்ப்பதற்கே ஒரு கவிதையாகத் தோன்றியது சத்யவதிக்கு. மனதிற்குள் இத்திருமணத்தை முடித்தே தீருவது என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
***************
கீழே சத்யவதியும் கௌஷிக்கும் பேசிக் கொண்டிருக்க மாடியிலோ ராகுல் ஒரு முடிவெடுத்து அதை செயல் படுத்தியும் இருந்தான்.
தனது ஃபோனை எடுத்து ஒரு வீடியோ ரெக்கார்ட் செய்து அதை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக ஊடகங்களிலும் பதிவேற்றமும் செய்தான். பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் அதைப் பார்த்துவிட அன்றைய நாளுக்கான டிரெண்டிங் வீடியோவாக இது அமைந்து போனது.
“ஹாய் மை டியர் ஸ்வரங்களே, எல்லாரும் எப்படி இருக்கீங்க? காலையில நியூஸ் பார்த்து என் ரசிகர்கள் குறிப்பா ரசிகைகள் மூட் அவுட் ஆக வேண்டாம். ஆக்ட்சுவலி என்ன நடந்துச்சுன்னா என் ஃப்ரென்டோட குழந்தைக்கு ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி. அதுக்காகத் தான் நாங்க ஹாஸ்பிடல் போயிருந்தோம்.
அங்க எதார்த்தமா நடந்த ஒரு விஷயத்தை அங்க இருந்த மீடியா பீப்பிள் சில பேர் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. அவ்வளவேதான். வேற ஒன்னுமே இல்லை. திரும்பவும் சொல்றேன். காலையில நியூஸ் ல பார்த்த பொண்ணுக்கும் எனக்கும் ஃபிரென்ட் அப்படிங்குற ஒரு ரிலேஷன்ஷிப்பைத் தவிர வேற எதுவும் கிடையாது. நீங்க எல்லாம் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்.
அஃப்கோர்ஸ், என் இசைக்கு என்னைத் தெரியாதா? இல்லை என் ஸ்வரங்களுக்குத் தான் என்னைப் புரியாதா? லவ் யூ ஆல் டியர்ஸ்” என்று கூறி அவனுடைய ரசிக ஸ்வரங்களுக்கு முத்தங்களைப் பறக்கவிட்டு முடித்திருந்தான்.
யாருடன் தனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று அடித்துக் கூறினானோ அவளுடன் தான் தன் வாழ்க்கையின் மொத்த சம்பந்தமும், அதுவும் இன்னும் இரண்டொரு நாட்களில் ஏற்படப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
************
மறுநாள் பொழுது யாருக்கும் காத்திராமல் இனிதே விடிந்தது. எல்லோருக்கும் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை சூரியன் உதிப்பதை வைத்தே கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லையே. அதனால் அன்றைய தினம் தங்கள் இருவருக்கும் என்ன வைத்துக் காத்திருக்கிறது என்பதைப் பற்றி அறியாமல் அந்த நாளைத் தொடங்கினார்கள் அமிர்தவர்ஷினியும் ராகுல்ரவிவர்மனும்.
குழந்தை நிரஞ்ஜலாவை அன்றும் சத்யவதி தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள அமிர்தா மட்டுமாக ஃபேக்டரிக்குக் கிளம்பிச் சென்றாள். வீட்டிலிருந்தே யாரோ தன்னைப் பின் தொடருவது போன்று தோன்றவே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள் அமிர்தா.
அமிர்தா கிளம்பி சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி வந்த ராகுல்,
“சத்யாம்மா, நாங்க சென்னைக்குக் கிளம்பட்டுமா?” என்று சத்யவதியின் அருகில் அமர்ந்து அவர் கைப்பிடித்துக் கேட்டான் ராகுல்.
“என்னப்பா இப்படித் திடுதிப்புன்னு வந்து சொல்ற?” கன்னத்தில் கை வைத்துக் கொண்டார் சத்யவதி.
“திடீர்னு என்ன ஆச்சுடா?” கௌஷிக்கும் தாயாருடன் இணைந்து கொண்டான்.
“இல்ல டா நம்ம டைரக்டர் ராஜேந்திர பிரசாத் கால் பண்ணினார். அடுத்த ப்ரொஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணணும்னு சொன்னார். அதான் யோசிக்கிறேன்.” யோசனையின் காரணமாக ராகுலின் கைகள் தாடியைத் தடவிக் கொண்டது.
“ஓஹ்… ராஜேந்திரப் பிரசாத்தா…” என்று கௌஷிக்கும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். திரைத் துறையில் மிகவும் பிரபலமான இயக்குநர் அவர். அவரின் திரைப்படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அது நிச்சயமாக ராகுலின் இசை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும். அதுவும் அவரே அழைக்கையில் அவர் பேச்சுக்கு மரியாதை கொடுத்து செல்வது தான் சரியென்றுப் பட்டது.
“ம்மா அப்போ நாங்க கிளம்புறது தான்ம்மா சரியா வரும்.”
“என்ன கௌஷிக் நீயும் இப்படி சொல்றே?” என்று உரக்கக் கேட்டவர், “நேத்து பேசினதெல்லாம் மறந்து போச்சாடா” என்று கௌஷிக்கின் காதைக் கடித்தார் சத்யவதி.
“உடனே எல்லாம் எப்படிம்மா முடியும். கொஞ்சம் கொஞ்சமா பேசிப் பேசித் தான் ரெண்டு பேரையும் வழிக்குக் கொண்டு வர முடியும். பொறுங்க. நானும் ராகுல் கிட்ட பேசுறேன். நீங்களும் அமிர்தா கிட்டப் பேசுங்க” என்று கௌஷிக்கும் ரகசியக் குரலில் சத்யவதியிடம் கூறினான்.
அதன் பிறகு நண்பர்கள் இருவரும் கடகடவென்று கிளம்ப குழந்தைகளின் முகம் தான் வாடிப் போனது. அதிலும் சந்தோஷ் ரொம்பவே ஏங்கிப் போனான். நிரஞ்ஜலாவிற்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியாவிட்டாலும் கடைசியாக சந்தோஷ் காரில் ஏறுகையில் அவனைப் போக விடாமல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள். சத்யவதிக்கு அவளை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. பின் ஒரு வழியாக மதிய உணவிற்குப் பிறகு நிலா உறங்கிய பின்னரே அவர்கள் கிளம்பினார்கள்.
அமிர்தாவிற்கு யாரோ தன்னை உற்று நோக்குவது போலவே தோன்றிக் கொண்டிருந்தது. பார்வைகள் அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. பல விதமான பார்வைகளை அவள் கண்டிருக்கிறாள், கடந்தும் இருக்கிறாள். ஆனாலும் இது வித்தியாசமான ஏதோ ஒரு உணர்வு. அடிவயிற்றில் ஒரு கலக்கம் உருவானது.
காலையில் வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது ஏற்பட்ட உணர்வு ஃபேக்ட்ரியின் உள்ளும் நீடித்தது. அப்படி எல்லாம் யாரும் வெளி நபர்கள் ஃபேக்டரிக்குள் நுழைய முடியாது. தனக்குத் தானே சமாதானமாக சொல்லிக் கொண்டாலும் அடுத்த நொடியே அவர்களுக்கு இருக்கும் பண பலத்திற்கும் ஆள் பலத்திற்கும் இந்த பிஸ்கட் ஃபாக்டரி எல்லாம் ஒரு விஷயமா? என்ற எண்ணமும் உடனே தோன்றி அவளை அச்சுறுத்தியது.
இதே சிந்தனையில் இருந்ததாலும் அதோடு வேலையும் வேறு சேர்ந்து கொள்ள தலை விண்விண் என்று தெறிப்பது போல் இருந்தது. மதியத்திற்கு மேல் தாங்க முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அமிர்தா வெளியேறி நடக்கத் தொடங்கியதுமே இரண்டு நபர்கள் அவளைப் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின் சற்று இடைவெளியில் மேலும் இருவர். அதற்கும் பின்னால் ஒரு வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ சத்தமில்லாமல் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அமிர்தாவும் இதைக் கண்டு கொண்டாள்.
விரைவாகக் கைப்பையைத் துழாவ, அதற்குள் பின்னாலிருந்த ஒருவன் கைப்பிடிக்கும் அளவிற்கு நெருங்கி விட சட்டென்று அங்கிருந்த குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கொண்டாள். அங்கு அந்தப் பெண் ரம்யா தான் இவளை வரவேற்றாள்.
“அமிர்தா மேம், நான் உங்க மேல கோவமா இருக்கேன், போங்க. நான் நேத்து அவ்வளவு சொல்லும் போதும் ஆர்.வீ உங்களுக்குத் தெரிஞ்சவர்னு நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லலைப் பார்த்தீங்களா?” ராகுலின் மேல் இருந்த தீவிர அபிமானத்தில் படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள் ரம்யா.
அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தபடி “ஏன் நேத்து நியூஸ் பார்த்தீங்களோ?” கேட்டாள் அமிர்தா.
“அந்த வீணா போன நியூசை விடுங்க மேம். நேத்து ரொம்ப நாளைக்கப்புறம் ஆர்.வீ ‘இன்ஸ்டா’ ல லைவ் வந்தாரே. நேத்து அவர் வீடியோ தான் மேம் டிரெண்டே. செம ஹிட் தெரியுமா?” கனவுலகில் மிதந்து கொண்டு பேசுவளைப் போலவே பேசினாள் ரம்யா.
“ஆர்.வீ மியூசிக் ரிலீசுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அதே மாதிரி இருந்துச்சு. இதுக்கு மேல உங்களைப் பத்தி யாரும் தப்பா பேசுறது என்ன நினைக்கக் கூட மாட்டாங்க மேம்.” ஆர்.வீ மீதிருந்த அதீத அபிமானமா அல்லது தினமும் அமிர்தாவைப் பார்ப்பதால் அவள் குணம் தெரிந்ததால் வந்த நம்பிக்கையா எதுவோ ஒன்று அந்தப் பெண்ணை அவ்வாறு பேச வைத்தது.
ஆனால் இந்த விஷயம் முற்றிலும் புதிது அமிர்தாவிற்கு. இது எப்போது நடந்தது? ஒரே வீட்டில் தான் இருந்திருக்கிறோம். நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே. இதைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்க விடாமல் ஜன்னல் வழியாகப் பின் தொடர்ந்தவர்களில் ஒருவனின் தலை தெரிந்தது.
அவர்கள் தனக்காகத் தான் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்து போனது அமிர்தாவிற்கு. மீண்டும் கைப்பையைத் துழாவினாள். ஆனால் அவள் தேடும் அலைப்பேசி மட்டும் அவள் கையில் சிக்கவே இல்லை. மறந்து ஃபேக்ட்ரியிலேயே வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது என்ன செய்வது? எப்படித் தப்பிப்பது? இனி நிலாவின் நிலை என்ன ஆகும்? தான் இவர்கள் கையில் சிக்கினால் உயிருடன் மீள்வதே அதிசயம் தான். அப்படி தனக்கு ஏதேனும் தீங்காக நேர்ந்து விட்டால் குழந்தையினுடைய கதி? அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? யார் வளர்ப்பார்கள்? கேள்விகள், கேள்விகள் விடை தெரியாத கேள்விகள் மட்டுமே அவள் மனதில்.
இப்போதைக்குத் தனக்கு உதவக் கூடிய ஒரே நபர் சத்யவதி தான். அவருக்கு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணியவளாக,
“ரம்யா, கொஞ்சம் உங்க ஃபோன் தரீங்களா, ப்ளீஸ்”
“ஏன் மேம், என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? இப்படி வேர்த்துக் கொட்டுது, எதாவது ப்ராப்ளமா?”
“அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் ரம்யா. ப்ளீஸ் இப்ப கொஞ்சம் உங்க ஃபோன் மட்டும் தாங்களேன்” அமிர்தா படபடக்க சட்டென்று தன்னுடைய அலைபேசியை அமிர்தாவிடம் நீட்டினாள் ரம்யா.
ஜன்னலின் மீது பார்வையை பதித்தபடி வேகமாக சத்யவதிக்கு அழைப்பு விடுத்தாள் அமிர்தா. சத்யவதி அழைப்பை ஏற்றதும்,
“அத்தை நான் அமிர்தா பேசுறேன். எதுவும் பேசாதீங்க. நான் சொல்றதை மட்டும் கேளுங்க. அத்தை எனக்கு இப்போதைக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லத்தை.
கெஞ்சிக் கேட்டுக்கிறேன். எப்படியாவது நிலாவைப் பத்திரமா பார்த்துக்கோங்க அத்தை. அவளை விட்றாதீங்க அத்தை” பேச முடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.
“அமிர்தா, ஐயோ என்னம்மா ஆச்சு. ஏன் என்னவெல்லாமோ பேசுற. இப்ப நீ எங்க இருக்க? இது யார் நம்பர்?”
“நான் ஃபேக்ட்ரிக்கு வெளியே நிலாவோட க்ரெச் ல இருந்து பேசுறேன் அத்தை. ஆனா என்னால ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. இங்க நிறைய குழந்தைங்க இருக்காங்க. என்னால அவங்களுக்கு எதுவும் ஆபத்து வந்துடக் கூடாது.”
“ஐயோ கடவுளே… என்னென்னமோ பேசுறாளே. எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை. இந்த நேரம் பார்த்து இந்தப் பசங்க வேற ஊருக்குக் கிளம்பிட்டாங்களே. நான் இப்ப என்ன பண்ணுவேன்?” பதறிப் போனார் சத்யவதி.
“ஊருக்குக் கிளம்பிட்டாங்களா…” மெல்ல முணுமுணுத்தது அமிர்தாவின் உதடுகள். எங்கோ இதயத்தின் ஒரு மூலையில் இருந்த நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்தது போல் இருந்தது.
“நிலா பத்திரம் அத்தை… நீங்களும் நிலாவைக் கூட்டிக்கிட்டு கௌஷிக் அண்ணா கிட்டயே போயிடுங்க” சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து அலைப்பேசியை ரம்யாவிடம் கொடுத்தவள் எதுவும் பேசாமல்,
ரம்யா, “மேம்…மேம்” என்று அழைப்பதைக் காதிலேயே வாங்காமல் விறுவிறுவென்று வெளியேறி விட்டாள். அவள் வெளியே வந்ததும் அவர்களின் ஊர்வலம் இவளுக்குப் பின்னால் தொடர்ந்தது.
எப்பொழுதும் வீட்டிற்குச் செல்லும் வழியைத் தேர்ந்தெடுக்காமல் நான்கு வழிச் சாலையை நோக்கி நடையை எட்டிப் போட்டாள். மதிய நேரம் என்பதாலோ என்னவோ அன்று அந்த சாலையும் கூட வெறிச்சோடிப் போயிருந்தது. அது அந்தக் கயவர்களுக்கு வசதியாகிப் போய்விட்டது.
மெயின் ரோட்டிற்கு வந்ததும் அது வரைப் பின்னால் வந்து கொண்டிருந்த ஸ்கார்ப்பியோ வேகமாக இவளைத் தாண்டிச் சென்று கிறீச்சிட்டு நின்றது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த இருவரும் இப்பொழுது அமிர்தாவின் இருபுறமும் நின்றனர். அதில் ஒருவன் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டுக் கொண்டே,
“ஏய், ஒழுங்கா பிரச்சனை பண்ணாம வண்டியில ஏறிடு” என்றான் கரகரத்த கட்டைக் குரலில்.
“யார் நீங்க? எதுக்காக நான் உங்க கூட வரணும். அதெல்லாம் முடியாது” அமிர்தா சொல்லவும் கடுப்பானவன்,
“ஏய் என்ன உங்க அம்மாவுக்கு அக்காவுக்கு எல்லாம் என்ன நடந்துச்சுன்னு மறந்து போச்சா? நீயும் அந்த கதிக்கு ஆளாகாம இருக்கணும்னா ஒழுங்கு மரியாதையா நீயே வந்து வண்டியில ஏறிடு” சத்தமில்லாமல் மிரட்டினான்.
“முடியாது. நான் போலீசைக் கூப்பிடுவேன்” அமிர்தா குரலை உயர்த்தவும்,
“டேய் இவ சரிப்பட்டு வர மாட்டா. தூக்குங்கடா இவளை வண்டிக்கு” என்று தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஆணையிட்டான் அவன்.
அவர்கள் இருவரும் வந்து அமிர்தாவின் கைப்பற்றி கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு செல்ல சரியாக அந்நேரம் ராகுலின் மெர்சிடீஸ் பென்ஸ் டிவைடருக்கு அந்தப் பக்கம் இவர்களுக்கு எதிர் புறத்தில் வந்து கொண்டிருந்தது.
கௌஷிக் காரை ஓட்டிக் கொண்டு வர அவனுக்குப் பின்புறமாக வலது பக்க ஓரத்தில் அமர்ந்திருந்த ராகுலுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தெரிந்தது. முதலில் ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து இழுப்பது போலத் தான் தெரிந்தது. உற்றுப் பார்க்கையில் தான் அந்தப் பெண் அமிர்தா என்பது ராகுலுக்குத் தெரிந்தது. கௌஷிக் காரை ஓட்டிக் கொண்டிருந்த படியால் சாலையின் மீதே கவனமாக இருந்ததால் இக்காட்சி அவன் கண்ணில் படவில்லை.
கணமும் யோசிக்காதவன் சட்டென்று, “கௌஷிக் வண்டியை நிறுத்து” என்றான். கௌஷிக்கும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தி இருக்க,
“சந்தோஷ் பத்திரம் கௌஷிக். நீ போலீசுக்கு கால் பண்ணு” என்று சொல்லியபடியே காரை விட்டிறங்கி சாலையைக் கடந்து டிவைடரை ஒரே தாவாகத் தாவிக் கடந்திருந்தான்.
ராகுல் இறங்கிய பிறகே கௌஷிக்கிற்கு என்ன நடக்கிறது என்பதே விளங்கியது. மின்னல் வேகத்தில் முடிவெடுத்து செயலாற்றி இருந்தான் ராகுல். அமிர்தா இருந்த இடத்திலிருந்து இவர்கள் கார் கொஞ்சம் தாண்டி வந்திருந்த காரணத்தால் கௌஷிக்கிற்கு யாரோ ஒரு பெண்ணிற்கு ஆபத்து என்று தான் புரிந்திருந்தது. அது அமிர்தாவாக இருக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“இவனோட…” என்று முணுமுணுத்தவாறே மொபைலை எடுத்து ஹைவே பேட்ரோலை அழைத்திருந்தான் கௌஷிக்.
அதற்குள் அந்த ஆட்கள் நால்வருமாகச் சேர்ந்து அமிர்தாவைக் கிட்டத்தட்ட அவர்கள் ஸ்கார்ப்பியோவை நெருங்கி இருந்தார்கள்.
“அமிர்தா…” ராகுல் உரத்தக் குரலில் கத்திக் கொண்டே ஓடி வரவும், அவர்கள் மேலும் அவசரமாக அவளை வண்டிக்குள் தள்ளப் பார்க்க, அமிர்தாவோ தனக்கு உதவிக்கு ஒரு ஆள் கிடைத்த திருப்தியில் முன்னை விட வேகமாக அவர்களிடம் இருந்து திமிறினாள்.
ராகுலின் குரலை வைத்தே அது அமிர்தா என்பதைப் புரிந்து கொண்ட கௌஷிக்கும் வேகமாகக் காரைக் கிளப்பி சற்றுத் தள்ளித் தெரிந்த யூ டர்னை நோக்கி வேகமாகக் காரை விரட்டினான்.