மேகதூதம் 2
காலையில் தனக்கும் மகளுக்கும் மட்டும் உணவைச் சமைத்து டப்பாவில் அடைத்தார் காமாட்சி. அவர் தன் வேலையை இன்னும் விட்டுவிடவில்லை.
பிரபு எப்போதும் ஏழு மணிக்கு ஆபீஸ் பஸ்ஸிலேயே சென்று விடுவான். ஆளுக்கொரு வீடு சாவி வைத்திருந்தனர். ஆகையால் காமுவும் ஒரு முறை நன்றாகத் தூங்கும் மகளை எட்டிப் பார்த்துவிட்டு , வெளிப்புறம் கதவைப் பூட்டிச் சென்றாள்.
அஞ்சலி இப்போது தன் வேலையில் ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்தாள்,ஆகவே சற்று தாமதமாகச் செல்வாள். எல்லோரும் சென்ற பிறகு பொறுமையாக எழுந்தாள்.
பிளாஸ்க்கில் இருக்கும் காபியை டம்பளரில் ஊற்றிக் கொண்டு பால்கனியில் வந்து அமர்ந்தாள். எதிர் பிளாட்டில் இருக்கும் புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நின்று சீயர்ஸ் சொல்லி காபி குடிப்பதைக் கண்டாள் அஞ்சலி.
‘ “எனக்கு காஃபி குடிக்கறப்ப பக்கத்துல நீ இருக்கணும்.”
“இல்லனா?”
“இல்லனா காஃபியே குடிக்கமாட்டேன்”
“பொய் பொய், உங்களுக்கு தான் அது ரொம்ப பிடிக்குமே”
“உன்னை விட இல்லை அஞ்சு” ‘ வார்த்தைகள் ஒவ்வொன்றும் மறக்கமுடியாமல் நினைவில் வந்தது அஞ்சலிக்கு.
‘மறுபடியும் இந்த நினைப்பா!’ என தலையை சிலுப்பிக் கொண்டாள்.
அதற்குள் ஆபிசிலிருந்து போன் வர தற்காலிகமாக அந்த நினைப்பை துண்டித்து எழுந்து சென்றாள்.
“ஐ வில் பீ தேர் இன் ஒன் ஹவர்” போனை வைத்துவிட்டு இளையராஜா பாடலை கார்வானில் ஓடவிட்டுக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா…’ கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு தயாரானாள்.
கரும்பச்சை நிற டாப்சும் நீல நிற ஜீன்சும் அணிந்து , மறக்காமல் கண்களில் மை தீட்டிக் கொண்டாள், அதை எப்போதும் ரசிப்பதாக அவன் கூறியதால்!
ஹாட் பாக்சில் இருக்கும் தோசையை தின்றுவிட்டு, காமு கட்டிவைத்த உணவையும் மறக்காமல் எடுத்துக் கொண்டாள். தன்னுடைய புதிய டயோட்டோ காரில் கிளம்பினாள். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வாங்கியிருந்தாள். அவனுக்குப் பிடித்த கருப்பு நிறத்தில்.
ஆபீசுக்குள் நுழைந்துவிட்டால், தான் யார் என்பதைக் கூட மறந்துவிடும் அளவிற்கு வேளைகளில் மூழ்கி விடுவாள்.
“அஞ்சலி ”
“….” லேப்டாப்பில் மூழ்கி இருந்தாள்.
“அஞ்சலி …….” தோளில் கைவைத்து உலுக்கினாள் சந்திரா.
“ஹே என்ன..எங்க ஏரியாக்கு வந்திருக்க?” ரோலிங் சேரை சுழற்றிக் கொண்டு அவளை பார்க்க,
“கங்கிராட்ஸ்..” என கை நீட்டினாள்.
தன்னிச்சையாக கை குலுக்கிவிட்டு பின்பு “என்ன?” என்று விசாரித்தாள்.
“நீ இன்னும் நாப்பது நாள் ல கனடா போற.. ஊஊஊ …” சந்திரா உற்சாகத்தில் கத்தினாள்.
அஞ்சலிக்கு மனதில் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது.
“என்ன சொல்ற .. நிஜமாவா!” அவளின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு கேட்க,
“ஹே ஆமா டீ. மெயில் வந்திருக்கு பாரு. யு ஆர் பிளையிங் பேபி” அஞ்சலியைக் கட்டிக் கொண்டாள் சந்திரா.
அஞ்சலிக்கு தாயின் திருமண நச்சரிப்பிலிருந்து இன்னும் இரண்டு வருடம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிம்மதி பெருகியது.
மறுபுறம் தாயையும் தம்பியையும் இரண்டாம் முறையாகப் பிரியப் போகும் வருத்தமும் வந்தது. ஒரு முறை பிரிந்து சென்ற போது தான் வாழ்வில் மின்னல், இடி, மழை என ஒரு புயலடித்து ஓய்ந்தது. இப்போது மீண்டும் இன்னொரு பிரிவு. இம்முறை என்ன வந்துவிடப் போகிறது! எவ்வளவோ துன்பங்களை தாங்கியாகி விட்டது, இனி பிரளயமே வந்தாலும் அவளுக்குப் பெரிதாகப் படாது.
அன்றைய பொழுது ஏனோ உற்சாகமாகவே சென்றது. ஆனால் காமாட்சி இவளுக்குத் தெரியாமல் ஒரு ஏற்பாட்டை அங்கே செய்து கொண்டிருந்தார். தன்னுடன் பணிபுரிபவர் மூலம் அஞ்சலிக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து வைத்திருந்தார். அவர்களுடன் பேசி நாளை மறுநாள் சனிக்கிழமை அஞ்சலியை கோவிலில் வைத்து பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டார். இனி அஞ்சலியிடம் கெஞ்சிப் பலனில்லை , தானே முடிவு செய்வது என யோசித்து இவ்வாறு செய்தார்.
எப்போதும் சனிக்கிழமை அஞ்சலி பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். சிலநாள் காமாட்சி உடன் செல்வாள், சில நாள் அவளே தனியாகச் சென்று விடுவாள். இம்முறை தானும் உடன் செல்ல வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தார் காமு.
ஆனால் அஞ்சலி அன்றிரவே தலையில் இடியை இறக்குவாள் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
அஞ்சலி பிரபுவிற்கு போன் செய்தாள்.
“சொல்லு” என்றான் மொட்டையாக,
“டேய் கனடா போக டிக்கெட்ஸ் வந்துடுச்சு இன்னும் நாப்பது நாள்ல கெளம்பனும்.” மகிழ்ச்சியாகத் தெரிவித்தாள்.
“ஹே செம டீ. கலக்கற போ. வீக்கென்ட் செலிபரேட் பண்ணிடுவோம். அம்மா கிட்ட சொல்லிட்டியா?” அவனுக்கும் அதே மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள,
“இல்ல டா , அம்மா லைன் கெடைக்கல வீட்டுக்கு போய் சொல்லிக்கலாம். எப்படியும் அவங்களுக்குப் பிடிக்காது” சிறு வருத்தம் குரலில் வந்தது.
“ஆமா, நீ கல்யாணம் பண்ணாம டிமிக்கி குடுத்துட்டு இருக்க, பின்ன எப்படி இருக்கும். ஆமா நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? ஏதாவது லவ் ?” பொறுப்பாக அதே சமயம் நக்கலாகக் கேட்க,
“நான் எப்போ டா கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். கொஞ்சம் டைம் குடுங்கன்னு தான் கேட்டேன். லவ் பத்தி பேசற அளவு நீ பெரியாள் ஆயிட்டியா..அடி வாங்குவ”
உண்மையை மறைத்து தம்பியிடம் நகைக்க,
“நீ சிரிச்சுகிட்டே சொன்னாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், உனக்கு என்ன பிரச்சனைனாலும் நான் கூட நிப்பேன். நம்ம அப்பா மாதிரி ஓடமாட்டேன். அத மட்டும் நீ மனசுல எப்பயும் வெச்சுக்கோ” குரல் கம்மியது அவனுக்கு.
பிரபுவின் வளர்ச்சி அவளுக்கு நன்றாகவே புரிந்தது. தம்பியின் இந்த வார்த்தைகள் மனதை வருடிக் கொடுக்கவே செய்தது. இருந்தாலும் அவள் இப்போது என்னவென்று சொல்வது. எதையும் சொல்லும் நிலையிலும் அவள் இல்லை. ஆகவே ,
“சரிங்க பெரிய மனுஷா. ஏதாவது பிரச்சனைனா கண்டிப்பா உங்க கிட்ட வரேன்.இப்போ வேலை இருக்கு , ஈவ்னிங் வீட்ல பாக்கலாம் சார்” பொதுவாக பேசி வைத்தாள்.
‘என் நிலைமை என்னனு எனக்கே நிச்சயமா தெரியாதப்ப, நான் உன்கிட்ட எப்படி ஹெல்ப் கேப்பேன். சாரி பிரபு’ என மனம் கனத்தது.
அன்று வீட்டிற்குச் சென்றதும் முதலில் காமுவை அழைத்தாள் அஞ்சலி.
“ஏன் இப்படி காட்டுக்கு கூச்சல் போடற. இங்க தான இருக்கேன்” சூடாக பஜ்ஜியுடன் வெளியே வந்தார் காமு.
“ம்ம்ம் … பசியே மறந்து போச்சு. பஜ்ஜி வாசனை தான் அத ஞாபகப் படுத்துச்சு” ஒரு வெங்காய பஜ்ஜியை இரு விரலால் பிடித்தபடி ஊத்திக்க கொண்டு எடுத்தாள்.
“பசியை மறக்க அளவுக்கு உனக்கு என்ன டி வேலை” சம்மணம் போட்டு சோபாவில் அமர்ந்து கொண்டு கேட்டார் காமு.
“ம்ம் சொல்றேன். எனக்கு ஹாப்பி நியூஸ்..உனக்கு அப்படி இருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் சொல்லாம இருக்க முடியுமா?” பீடிகை போட்டுவிட்டு பஜ்ஜியை சுவைத்தாள்.
“என்ன டீ சொல்லித் தொலை” காமுவிற்கு ஏதோ உறுத்த,
“இன்னும் கொஞ்ச நாள் ல கனடா போக டிக்கெட் வந்துடுச்சு. நாப்பது நாள் தான் இருக்கு” புன்னகையுடன் கூறினாள்.
“என்ன டி இப்படி சொல்ற , மூணு நாலு மாசம் ஆகும் னு சொன்ன” என்ன செய்வதென்று மனம் இப்போதே குழம்ப ஆரம்பித்தது காமுவிற்கு.
“நான் என்ன பண்றது? வேலை இருக்குனு சீக்கிரமா வர சொல்லிட்டாங்க.” இனி ஒன்றும் செய்ய முடியாது என்பது போல பார்த்தாள்.
பிரபுவும் சீக்கிரம் வந்தான்.
“அம்மா கேட்டியா, உன் மக கனடா போறா… பெரியாளாயிட்டாங்க மேடம். சூப்பர் அஞ்சலி” அவளுக்கு ஹை பைவ் கொடுத்தான்.
காமாட்சி எதையோ யோசித்தபடி தலையை குனிந்து கொண்டிருந்தார்.
“என்ன மா ரியாக்ஷனே குடுக்க மாட்டேங்கற?” பிரபு தாயின் அருகில் வந்து அமர்ந்தான்.
” உனக்கு நான் மாப்பிள்ளை பாத்துட்டேன். இப்போ நான் அவங்களுக்கு என்ன சொல்றது?” சட்டென நிமிர்ந்து கோபமாகக் கேட்க,
“அம்மா….” அதிர்ந்தாள் அஞ்சலி.
“ஆமா அஞ்சலி. இன்னிக்கு தான் அவங்க கிட்ட பேசி உன்னை கோவில்ல வெச்சி பார்க்கலாம் ன்னு சொல்லிட்டு வந்தேன்” உண்மையைக் கூறினார்.
“என்னால முடியாதுமா” அழுத்தமாக பதில் சொன்னாள் அஞ்சலி.
“விளையாடாத அஞ்சலி” கண்கள் சிவக்க அவளை முறைத்தார் காமு.
“அம்மா,என்னை கேட்காம நீ ஏன் அவங்க கிட்ட பேசின. நான் தான் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்ல” மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“அது வரைக்கும் உனக்கு வயசு ஆகாம இருக்குமா? இருபத்தேழு வயசாயிடும்.”
“அதெல்லாம் ஒரு வயசா? இப்போல்லாம் முப்பத்தஞ்சு வயசுக்கு தான் கல்யாணமே நடக்குது” தன் வாதத்தில் பிடிவாதமாக நின்றாள்.
“அறுவது வயசுக்கு கூட நீ பண்ணிப்ப, ஆனா அத பாக்கறதுக்கு நான் உயிரோட இருக்க மாட்டேன்” கண்கள் கலங்க ஆரம்பித்தது காமுவிற்கு.
“அனாவசியமா போட்டு குழப்பிக்காத மா. ஒரு ரெண்டு வருஷம் தான் கேக்கறேன்” அஞ்சலி இறங்கி வந்தாள்.
“அம்மா அவளை விடுங்க. ரெண்டு வருஷம் தான. அவளுக்கும் தன் வாழக்கையை இப்படி வாழனும்னு ஆசை இருக்கும்ல. வெளிநாடு போய்ட்டு வரட்டும். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு அவ தடை சொல்ல மாட்டா” பிரபு அக்காவிற்கு வக்காலத்து வாங்க,
“ஆமா மா ப்ளீஸ்… அவங்களுக்கு போன் பண்ணி வர வேண்டான்னு சொல்லுங்க.ப்ளீஸ் மா” பக்கத்தில் வந்து கொஞ்சி கெஞ்சி கேட்க,
வெகு நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு காமாட்சிக்கு அஞ்சலியை வற்புறுத்தும் எண்ணம் போய்விட்டது.
“சரி நீ கனடால இருந்து வந்ததும் உனக்கு கல்யாணம். அதுக்கு மேல நான் பொறுமையா கேட்டுட்டு இருக்க மாட்டேன். ” காமு சம்மதிக்கவும்
வேகமாக தலையை ஆட்டினாள் அஞ்சலி. ஒரு கவலை விட்டது அவளுக்கு. ஆனால் தீர்க்க முடியாத கவலைகள் அவள் அடி மனதில் இருந்துகொண்டு ஒவ்வொரு நிமிடமும் அவளை வாட்டிக் கொண்டு தான் இருந்தன.