NPG2

NPG2

கீதாஞ்சலி – 2

தன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவாறு சூரியோதயத்தை ரசித்தவாறே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் கௌஷிக். நீலக் கடலில் மூழ்கி எழுந்த செந்நிறப் பந்து ஒன்று தன் எண்ணிலடங்கா கரங்களை நீட்டி இந்தப் பரந்த உலகத்தை அணைத்துக் கொள்ளத் தயாராவது போலத் தோன்றியது அக்காட்சி.

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க முயன்று இசை படித்தது அவனுடைய அலைப்பேசி. அதனைப் புறக்கணித்துக் கோவப்படுத்தாமல், உடனே கையில் எடுத்து விரல்களால் தடவிக் கொடுக்க அலைப்பேசியின் முகம் பிரகாசமானது. அதில் ஒளிர்ந்த எண்களைப் பார்த்தவுடன் கௌஷிக்கின் முகம் பிரகாசமானது.

“ம்மா… என்னம்மா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டுட்டீங்க” தாயின் குரலைக் கேட்கப் போகும் உற்சாகம் இவன் குரலிலும் ஒலித்தது.

“கௌஷிக் கண்ணா எப்படிப்பா இருக்க? பின்ன, வேற எப்ப ஃபோன் பண்ணினாலும் எதாவது காரணம் சொல்லி பிசியா இருக்கேன்னு சொல்லுவ. சரி திருப்பி கூப்பிடவாவது செய்வியா? அதுவும் மாட்ட… அப்படி என்னதான் பிசியோ போ” செல்லமாக அலுத்துக் கொண்டார் சத்யவதி, கௌஷிக்கின் தாயார்.

வீட்டிற்கு மூத்தவன் கௌஷிக். இவனை அடுத்து கௌசல்யா என்று இரு குழந்தைகள் சத்யவதிக்கு. கௌசல்யா திருமணம் முடித்துக் கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். வந்த கடமை முடிந்ததென சத்யவதியின் கணவர் மறைந்துவிட இப்பொழுது சத்யவதி மட்டும் இவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் எனும் ஊரில் தனியாக வசித்து வருகிறார், கடந்து ஆறு வருட காலமாக அதாவது கௌஷிக் ராகுலிடம் வந்து சேர்ந்ததில் இருந்து.

“பேசாம என் கூட இங்க வந்து இருங்கன்னா கேட்குறீங்களாம்மா நீங்க?”

“ஐயையோ என்னை அந்த ஊருக்கு மட்டும் கூப்பிடாதேப்பா.”

“ஏன்மா இந்த சிங்காரச் சென்னையைப் பார்த்து உங்களுக்கு அவ்வளவு பயம்” சத்யவதியின் பதிலால் சிரித்துக் கொண்டே வினவினான் கௌஷிக்.

“அக்கம் பக்கத்துல வீடு இருக்குன்னு தான் பேரு. ஆனா ஒருத்தரும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டாங்க. நமக்கு நம்மளைச் சுத்தி ஆளு பேரு இருந்தா தான் சரியா வரும். என்னால தனியா நீ ராத்திரி வர்ற வரைக்கும் யார் கூடவும் பேசாமலேயே எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியாதுப்பா. ஆளை விடு.”

“உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு வேணா ஒரு ஆளை அப்பாயின்ட் பண்ணிடலாமாம்மா?”

“நல்லா இருக்குடா நீ பேசுறது. நீ வேலைக்கு எல்லாம் ஆள் ஏற்பாடு பண்ண வேணாம். பேசாம நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ. மருமக வந்துட்டா நானும் உன் கூடவே வந்து இருந்துடறேன்.”

“எதுக்கு? மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக்கிட்டு நடுவுல என் தலையைப் போட்டு உருட்டுறதுக்கா?”

“ம்க்கூம்… நீ முதல்ல கல்யாணத்தைப் பண்ணு. சண்டை போடுறதா இல்ல கூட்டணி வைச்சுக்கிறதாங்குறதை நானும் என் மருமகளும் முடிவு பண்ணிக்கிறோம்.”

“சண்டைங்கவும் ஞாபகத்துக்கு வருது. எப்படி இருக்கா உங்கப் பக்கத்து வீட்டுப் பொண்ணு… வர்ஷினி… அமிர்தவர்ஷினி?”

“அவளைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சுடா. குழந்தையோட சத்தத்தை வைச்சுத் தான் அவ வீட்ல இருக்காளா இல்லையான்னே தெரிஞ்சுக்க முடியுது.”

“நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்லையேம்மா. வாரத்துக்கு நாலு நாள் ஏதாவது சமைச்சுக் கொண்டு போய் கொடுத்துட்டு அவகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு வரலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே!”

“உனக்கே தெரியும், நான், வர்ஷினி அம்மா, ராகுலோட அக்கா எல்லாரும் எவ்வளவு க்ளோஸ் ஃபிரெண்ட்சுன்னு. அப்புறம் எப்படிடா இந்தப் பொண்ணை அப்படியே தனியா விட முடியும்? இந்தப் பொண்ணு அவங்க அம்மா வயத்துல இருந்ததுல இருந்து, இவ பொறந்து இவளுக்கு ஆறு, ஏழு வயசு ஆகுற வரைக்கும் நாம் எல்லாம் ஒன்னா தானேடா இருந்தோம்.

இப்படி அப்பா, அம்மா, அக்கா யாருமே இல்லாம தன்னந்தனியா கையில ஒரு குழந்தையோட வந்து நிக்கிறாளேடா. என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சு எதையும் சொல்லவும் மாட்டேங்குறா. எல்லாரும் இறந்துட்டாங்கன்னு ஒரே வரியில முடிச்சிட்டா. சரி அவங்க யாரும் தான் இல்லைன்னாலும் இந்தக் குழந்தையோட அப்பா அதான் இவ புருஷன் எங்க? அதைக் கேட்டா சண்டைக்கு வர்றா.

அவ சண்டை போடுறாங்கிறதுக்காக நான் அப்படியே விட்டுற முடியுமா? என் கண்ணுக்கு அவ இன்னும் சின்னப் பொண்ணாதான் தெரியிறா. அதான் அவ என்னதான் திட்டினாலும் நானே வலியக்கப் போய் பேசிடுறது.” நீளமாகப் பேசியதால் சற்றே மூச்சு வாங்கியது சத்யவதிக்கு.

படபடவென்றுப் பேசினாலும் சத்யவதிக்கு அமிர்தவர்ஷினி மீதிருந்த அக்கறையே அவர் பேச்சில் எதிரொலித்தது. ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் பழகிய பழக்கம் அவரை அவ்வாறுப் பேச வைத்தது.

ராகுல்ரவிவர்மன், கௌஷிக், அமிர்தவர்ஷினி மூவரது குடும்பமும் ஒன்றாக ஒற்றுமையாக அத்துனை அந்நியோன்யமாகக் கம்பத்தில் வசித்து வந்தார்கள். அப்பொழுது அந்த ஊர் அவ்வளவாக வளர்ச்சியடையாத கால கட்டம்.

இவர்களுடைய தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் மூவருடைய வீடுகள் மட்டுமே இருந்தன. கௌஷிக் மற்றும் அமிர்தவர்ஷினியின் வீடுகள் அருகருகே அமைந்திருக்கும். ராகுலின் வீடு சற்றுத் தள்ளி எதிர்புறமிருக்கும்.

ராகுல்ரவிவர்மன் அவனுடைய அக்கா மற்றும் அத்தானுடன் வசித்து வந்தான். இங்கிருந்த வரை அவன் வாழ்வில் எந்தவிதமான கஷ்டங்களும் வந்ததில்லை. அவனுடைய அத்தானின் உத்தியோகப் பணி இடமாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்ற பிறகுதான் அவன் வாழ்க்கை திசை மாறிப் போனது.

கௌஷிக் தனது தாய் தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வந்தான். அமிர்தவர்ஷினி அவளுடைய தாய் தந்தை மற்றும் அக்கா நித்யவர்ஷினியுடன் வாழ்ந்து வந்தாள். சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களிடத்தும் ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது.

நாளடைவில் அவரவர் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களுக்கு மாறிப் போக அப்படியே ஒருவருக்கொருவர் தொடர்பு விட்டுப் போயிருந்தது. கௌஷிக் மற்றும் அமிர்தவர்ஷினி குடும்பங்களுக்கு அது சொந்த வீடு என்கிற காரணத்தால் ஓரளவு அவர்களுக்கிடையில் கடிதப் போக்குவரத்தும், தொலைபேசி அழைப்புகளும் இருந்து கொண்டு தான் இருந்தது. அதுவும் நாளடைவில் குறைந்து போய் முற்றிலும் நின்றும் போயிருந்த வேளையில் தான் அமிர்தவர்ஷினி மீண்டுமாகக் கையில் ஒரு வயதே நிரம்பிய பெண் குழந்தையுடன் வந்து சேர்ந்தாள்.

“சரி சரி நீ பேச்சை மாத்தாதே. எப்ப தான் நீ கல்யாணம் பண்ணப் போறே? முப்பத்தி இரண்டு வருஷத்தை முழுசா முழுங்கிட்டு இப்படி ஒத்தையில நிக்கிறியேப்பா. அம்மா நடை உடையா இருக்கும் போதே ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பேரப் பிள்ளைகளைக் கண்ணுல காட்டிடுப்பா” பெற்றவளின் ஆதங்கம் அங்குக் கெஞ்சலாக வெளிப்பட்டது.

“நானா மாட்டேங்குறேன். ஒரு காலத்துல நான் காட்டின பொண்ணையெல்லாம் எதாவது சாக்கு போக்கு சொல்லி நீங்க தானேம்மா தட்டிக் கழிச்சீங்க” சலிப்பாகச் சொல்வது போல் கௌஷிக்.

“ஹ்ம்ம்… அஞ்சாவது படிக்கும் போது டியூஷன் சொல்லிக் கொடுத்த அக்கா, பத்தாவது படிக்கும் போது உங்க இங்கிலீஷ் மிஸ்… இதெல்லாம் தானே நீ சொன்ன பொண்ணுங்க! அடேய் நீ புரிஞ்சு தான் பேசுறியா?”

“நான் எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன். நீங்க தான் மறந்துட்டீங்க. திருச்சியில இருக்கும் போது நம்ம பக்கத்து வீட்ல இருந்த காயத்ரி அக்காவை மறந்துட்டீங்களே ம்மா.”

“நீ சரிப்பட்டு வர மாட்ட. இனி நான் யாருகிட்ட பேசணுமோ அங்க பேசிக்கிறேன்.”

“சரி நீங்க எங்க வேணா பேசி என்ன வேணா பண்ணுங்க. இப்ப எனக்கு டைமாச்சு. நான் அப்புறமா பேசி மித்த கதை எல்லாம் கேட்டுக்கிறேன். இப்ப வைக்கட்டுமா ம்மா?”

“கௌஷிக் கண்ணா கண்ணுக்குள்ளயே நிக்கறப்பா. வந்து ஒரு தடவை முகத்தைக் காட்டிட்டு போ ராஜா. அம்மாவுக்குப் பார்க்கணும் போல இருக்கு. வரும் போது ராகுலையும் கூட்டிட்டு வாப்பா.”

“சரிம்மா இந்த மாசக் கடைசியில வரப் பார்க்கிறேன். ராகுல் வருவானான்னு தெரியலைம்மா. வந்தா கண்டிப்பா கூட்டிட்டு வரேன். அது வரைக்கும் கண்ணுக்குள்ள நிக்கிற எனக்கு ஒரு செயர் போட்டு உட்கார வைங்க. ரொம்ப நேரம் நின்னா எனக்கு கால் வலிக்கும்”

“போடா அரட்டை. ஒழுங்கா ராகுலையும் கூட்டிட்டு ஊருக்கு வந்துட்டுப் போ.”

அலைப்பேசி அழைப்பைத் துண்டித்து விட்டு, முகம் முழுக்கப் புன்னகையுடன் அன்றைய வேலைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பினான் கௌஷிக்.

***—***—***—***—***

சரியாகக் காலை மணி ஏழு முப்பதுக்கெல்லாம் கௌஷிக்கின் கார் ராகுலின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. இனி இரவு வரை அவன் சிந்தனை முழுவதும் ராகுலும் அவன் சார்ந்த வேலைகளில் மட்டுமே இருக்கும்.

ராகுலின் வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் தனித்தனியாக அதற்கான ஆட்களை நியமித்திருந்தான் கௌஷிக். சமையல் பொறுப்பு சாந்தியிடம். சந்தோஷைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கமலம்மாவிற்கு. சந்தோஷைப் பள்ளியில் விட்டுக் கூட்டி வர மாணிக்கம் என்றொரு டிரைவரும் இருந்தார்.

இதுதவிர வாட்ச்மேன், தோட்டக்காரன், எடுபிடி என்று ஒரு பத்து பேர் இருந்தார்கள். இவர்களுள் கமலாம்மா மட்டுமே வீட்டோடு தங்கி இருப்பவர். பாதிரியார் சந்தோஷைக் கவனித்துக் கொள்ள அனுப்பிய காலத்திலிருந்தே இவர்களுடனே தங்கிவிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் சம்பளம் முதல் அவர்கள் பிரத்யேகத் தேவைகள் வரை அனைத்தையும் கவனித்துக் கொள்வது கௌஷிக் தான்.

ராகுல் யார் எவ்வளவு கேட்டாலும் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடுவான். சொல்லப்படும் காரணம் உண்மையா பொய்யா, கொடுத்த பணத்திற்கு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த சிந்தனையும் அவனுக்குள் எழாது.

இந்தக் குணத்தைப் பயன்படுத்தியே ராகுலிடம் ஏமாற்றிப் பணம் பறித்தவர் பலர். கௌஷிக் வந்த பிறகு அத்தகைய ஆட்களை இனம் கண்டு வெளியேற்றி நம்பிக்கையானவர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருந்தான்.

இதனால் தற்சமயம் ராகுலிடம் வேலை செய்பவர்களுக்கு, ராகுல் மீது எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் உள்ளதோ அதே அளவு கௌஷிக் மீதும் உள்ளது. அது வீடாக இருந்தாலும் சரி, ராகுலுடைய ஸ்டுடியோவாக இருந்தாலும் சரி கௌஷிக் ராகுலுக்கு இணையாக மதித்தே நடத்தப்பட்டான்.

நேராக சமையலறைக்குள் சென்ற கௌஷிக், அங்கு வேலை செய்து கொண்டிருந்த சாந்தியிடம்,

“அக்கா எனக்கொரு காஃபி. ராகுல் ஜாகிங் முடிச்சு வந்தாச்சாக்கா?”

“இல்ல தம்பி. இன்னும் ராகுல் தம்பி வரலை” என்று அந்தப் பெண்மணி பதில் சொல்லிவிட்டு இவனுக்கான காஃபியைக் கலக்கிக் கையில் கொடுத்தார்.

“சரிக்கா நான் போய் சந்தோஷ் ரெடியான்னு பார்க்கிறேன். இன்னைக்கு நாங்களும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். பிரேக்ஃபாஸ்ட் சீக்கிரம் ரெடி பண்ணிடுங்க” என்று சொல்லிவிட்டுக் காஃபியைப் பருகிக் கொண்டே சந்தோஷின் அறை நோக்கிச் சென்றான்.

அங்கு சந்தோஷ் குளித்து முடித்து கமலாம்மா கொடுத்த சத்து மாவுக் கஞ்சியை சமத்தாகக் குடித்துக் கொண்டிருந்தான்.

“கௌஷிக் அங்கிள் குட்மார்னிங்” மலர்ந்துப் புன்னகைத்தான் சிறுவன்.

“குட்மார்னிங் மை பாய். குட்நைட் சொல்லும் போது கௌ அங்கிள், குட்மார்னிங் சொல்லும் போது கௌஷிக் அங்கிளா? விவரம்டா நீ” பேச்சு பேச்சாக இருந்தாலும் கை அதன் போக்கில் சந்தோஷின் ஸ்கூல் பேகை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“அங்கிள் ஐ ஆல்ரெடி பேக்ட் எவ்ரிதிங்க். யூ நோ நீட் டூ வொரி” என்றான் சந்தோஷ்.

“உன்ன மாதிரியே…” ஏதோ சொல்ல வந்தவன் அங்கு கமலாம்மா நிற்பதைக் கவனித்துவிட்டு, “கமலாம்மா ராத்திரி சீக்கிரம் தூங்கப் போயிட்டீங்களோ? சந்தோஷ் தனியா முழிச்சிட்டு இருந்தான் போலயே” குரல் சாதாரணமாக இருந்தாலும் பார்வை கண்டனம் தெரிவிப்பதாகவே இருந்தது.

“இல்ல தம்பி. ரெண்டு நாளா பிரசர் மாத்திரை போடலை. அதான் நேத்து ஒரு மாதிரி வந்துடுச்சு. சந்தோஷ் குட்டியும் நீங்க போய் தூங்குங்க கமலாம்மான்னு சொல்லுச்சா அதான் போய் படுத்துட்டேன்.”

“இதை ஏன் கமலாம்மா நீங்க முதல்லயே சொல்லலை. கேட்டாதான் சொல்லுவீங்களா? இப்போ எப்படி இருக்கு உடம்புக்கு? டாக்டரை வரச் சொல்லட்டா?”

“ஐயோ இல்ல தம்பி. அதெல்லாம் வேண்டாம். மாத்திரை வாங்க அன்னைக்கு மெடிக்கலுக்குப் போனேன். ஸ்டாக் இல்ல. நீங்க போங்கம்மா நான் வீட்டுக்கு கொடுத்து விடுறேன்னு கடைக்காரன் சொன்னான். மறந்துட்டான் போல. திருப்பி போக எனக்கு முடியலை.”

“வீட்ல தான் நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்ல. எங்க யார்கிட்டயாவது சொன்னா நாங்க வாங்கிட்டு வந்து தர மாட்டோமா” என்று கடிந்து கொண்ட கௌஷிக் கையோடு ஆளை அனுப்பி அவருக்கு மாத்திரையை வாங்கி தந்த பிறகே ஓய்ந்தான். இது தான் கௌஷிக் கண்டிப்பும் இருக்கும் அக்கறையும் இருக்கும்.

சந்தோஷ் தொடர்ந்து கௌஷிக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன சந்தோஷ்” என்று வினவினான் கௌஷிக்.

“இல்ல அங்கிள் அப்பவே என்னமோ உன்ன மாதிரியே அப்படின்னு ஏதோ சொல்ல வந்தீங்களே…” என்று இழுக்க, ஒரு நிமிடம் யோசித்த கௌஷிக் பின் சிரித்துக் கொண்டே,

“உன்ன மாதிரியே உங்க அப்பாவும் இப்படி எல்லா வேலையும் பெர்ஃபெக்டா பண்ணிட்டா எனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்ன்னு சொல்ல வந்தேன் சந்தோஷ் கண்ணா. உனக்கு இந்தப் படம் தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் சொல்றேன்.

பழைய படத்துல சிவாஜி சார் ஒரு டயலாக் சொல்லுவார். அந்த அழகுத் தெய்வத்தின் மகனா இவன் அப்படின்னு. உங்க அப்பாவுக்கு இதை அப்படியே மாத்திச் சொல்லலாம். இந்த அழகுக் குட்டியின் அப்பாவா அவன்” என்று சிவாஜியைப் போலவே சொல்லிச் சிரிக்க சந்தோஷும் அவனுடன் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

இருவரின் முகமும் சிரிப்பில் விகசித்திருக்க அதை ரசித்தபடியே வந்து சேர்ந்தான் ராகுல்ரவிவர்மன். அணிந்திருந்த கறுப்பு நிற கையில்லா பனியன் வியர்வையில் நனைந்ததாலோ என்னவோ அவனுடைய சிக்ஸ் பேக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வயிற்றை இறுக்கிப் பிடித்து முழங்கால் வரை அதே கறுப்பு நிறத்தில் ஷார்ட்ஸ், கால்களில் டெஸ்டோனி ஷூஸ் பந்தா பண்ணிக் கொண்டிருந்தது. அவனுடைய கலருக்கும், கறுப்பு நிற உடைக்கும், அத்தனைப் பொருத்தமாக இருந்தது. வியர்வையில் குளித்த கிரேக்க சிற்பம் போல் காட்சியளித்தான்.

“குட் மார்னிங் டேட்” என்று சொல்லியபடியே கை நீட்டி அணைப்பது போல் ராகுலிடம் வந்தான் சந்தோஷ்.

“நோ சந்தோஷ். ஐ ஆம் வெட். யூனிஃபோர்ம் ஸ்பாயில் ஆயிடும்” என்று சொல்லி சந்தோஷைத் தடுத்து நிறுத்தினான் ராகுல்.

ஒரு நொடியே என்றாலும் சந்தோஷின் முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம் வந்து போனது. அதைக் கண்டு கொண்ட கௌஷிக் ராகுலை முறைக்க,

“என்னடா” என்று புரியாமல் வினவினான் ராகுல்.

“சந்தோஷ் கண்ணா, இன்னைக்கு நானும் அப்பாவும் உன்னை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு அப்படியே ரெக்கார்டிங் தியேட்டர் போறோம். ஓகேவா” ராகுலின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சந்தோஷிடம் டீல் பேசினான் கௌஷிக்.

“நாம எதுக்குடா இவ்வளவு எர்லியா போகணும்? எதாவது மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருக்கியா என்ன?” என்றான் ராகுல்.

“இன்னைக்கு சுந்தரம் சார் படத்துக்கு ரீ ரெக்கார்டிங் வேலை ஸ்டார்ட் பண்ணணும். உனக்கு தான் தெரியுமில்ல அவரைப் பத்தி, கட் அண்ட் ரைட்டான ஆளு. காலையில எட்டு மணிக்கெல்லாம் அவர் ரெக்கார்டிங் தியேட்டர் வாசல்ல நிற்பார்.

உன்னை முதல் முதல்ல சினிமாவுல அறிமுகப்படுத்தினதே அவர் தான். அவரைக் காக்க வைச்சா நல்லா இருக்காது. கிளம்பு சீக்கிரம். போ போய் குளிச்சிட்டு வா. நான் போய் பிரேக்ஃபாஸ்ட் ரெடி ஆகிடுச்சான்னு பார்க்கிறேன்.

சந்தோஷ் நீ கொஞ்ச நேரம் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இரு. அப்பா ரெடியாகி வந்ததும் நாம எல்லாரும் சேர்ந்து போகலாம். ஓகே”

அவரவர் செய்ய வேண்டியவற்றைச் சொல்லி ராகுலை அவனறைக்கு அனுப்பி விட்டு கௌஷிக் டைனிங் ரூமுக்குச் சென்றான். ராகுல்ரவிவர்மன் குளித்து முடித்து வரும் பொழுது பிரேக்ஃபாஸ்ட் டைனிங் டேபிளில் தயாராக இருந்தது.

டைனிங் அறைக்குச் செல்லும் முன் ஹாலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷிடம் சென்றவன், “சந்தோஷ் கம்” என்று அழைத்து அவனை லேசாக அணைத்து விடுவித்தான் ராகுல்.

ஏதோ விருது வழங்கும் விழாவில் எதிரில் நிற்கும் நடிகரையோ அல்லது நடிகையையோ மரியாதை நிமித்தம் அணைப்பது போல பெற்றப் பிள்ளையை அணைத்து விடுவித்தவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தான் கௌஷிக்.

பின்பு மூவருமாகக் கிளம்ப, சந்தோஷின் பள்ளி வரும் வரையில் கௌஷிக்கும் சந்தோஷும் வளவளத்துக் கொண்டே வர, இடையிடையில் ஒரு சிரிப்பு அல்லது தலையாட்டல் மட்டுமே ராகுலிடமிருந்து.

பள்ளியின் வாயிலில் காரை நிறுத்திய கௌஷிக், “பாரு பத்து நிமிஷம் லேட் நாம. போ, போய் சந்தோஷ் கிளாஸ் மிஸ் கிட்ட எக்ஸ்க்யூஸ் சொல்லி அவனை விட்டுட்டு வா” என்று ராகுலைப் பணித்தான் கௌஷிக்.

“டேய் நானாடா இந்த ப்ளான் போட்டேன். நீ தானே திடீர்னு இப்படிச் சொன்ன. ஒழுங்கா மாணிக்கத்தோட அனுப்பியிருந்தா டைமுக்கு ஸ்கூலுக்கு வந்திருக்கலாம் இல்ல?”

“ம்ப்ச்.. இப்ப இதெல்லாம் பேசுற நேரமா? சீக்கிரம் போய் விட்டுட்டு வாடா. நமக்கு டைம் ஆச்சு.”

“டேய் எனக்கு இவன் கிளாஸ் ரூம் கூடத் தெரியாதுடா. யாராவது பார்த்துட்டா என்ன பண்றது?”

“அதான் கையோட வைச்சிருப்பியே ஒரு தொப்பியும் கண்ணாடியும். அதைப் போட்டுக்கிட்டு போ. அதுவுமில்லாம இது இந்த சிட்டியிலேயே நம்பர் ஒன் கான்வென்ட். இங்க எல்லாம் யாரும் உன் மேல வந்து விழுந்துட மாட்டாங்க. பயப்படாமப் போ”

“காலங்கார்த்தால உனக்குப் பிடிக்காததை எதையோ செஞ்சுட்டேன் போல, அதான் என்னை வைச்சு செய்ற. போறேன். இல்லாட்டி நீ விடவா போற. வா சந்தோஷ். ஆமா உங்க மிஸ் பேர் என்னடா?” என்று சந்தோஷைக் காரிலிருந்து இறங்க உதவி செய்தவாறே ராகுல் கேட்க,

“ராகுல்” என்று கண்டனக் குரல் எழுந்தது கௌஷிக்கிடமிருந்து.

“பேர் கூடத் தெரியாம எப்படி எக்ஸ்க்யூஸ் கேட்கிறதாம்” முணுமுணுத்தவாறே சந்தோஷை அழைத்துக் கொண்டுப் பள்ளியினுள் விட்டு வந்தான் ராகுல்.

அவன் திரும்பி வந்ததும் அமைதியான கார் பயணம். ஸ்டுடியோவிற்கு சென்ற பிறகு நிற்க நேரமில்லாமல் இருவரையும் வேலை சூழ்ந்து கொண்டது. அதன் பிறகு உணவு இடைவெளியின் போதே இருவருக்கும் நேரமும் தனிமையும் வாய்த்தது.

“காலையில என்னடா தப்பு பண்ணினேன்?” ராகுல் கேட்ட தொனியில் உண்ணும் உணவு புரைக்கேறும் அளவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது கௌஷிக்கிற்கு.

“சும்மா ஏழு வயசுப் பையன் மாதிரி கேள்வி கேட்காதே. உனக்கே ஏழு வயசுல ஒரு பையன் இருக்கான். அதை மனசுல வைச்சு நடந்துக்கோ. காலையில புள்ள எவ்வளவு ஆசையா கட்டிப் பிடிக்க வந்தான். விட்டியா நீ? டிரெஸ் அழுக்கானாதான் என்ன இப்ப?”

“அதுக்காகவாடா கோவிச்சுக்கிட்ட. நான் குளிச்சிட்டு வந்தப்புறம் அவனை ஹக் பண்ணினேன்டா.”

“பார்த்தேன்… பார்த்தேன். அதையும் பார்த்தேன். திரும்பவும் சொல்றேன் ஏழு வயசுப் பையனுக்கு அப்பா மாதிரி நடந்துக்கோ.”

“சும்மா இதையே சொல்லாதடா. நானே ஏழு வயசுப் பையனாவே இருந்திருக்கலாம். வளர்ந்திருக்கவே வேண்டாம். நாமெல்லாம் அப்போ எவ்வளவு ஜாலியா இருந்தோம். நீ, நான், கௌசல்யா, அப்புறம் அந்த ரெண்டு பொண்ணுங்க. அவங்க பேர் கூட ஒரே மாதிரி வருமே” தாடியைத் தடவிக் கொண்டு சிறிது நேரம் யோசித்துப் பார்த்தான் ராகுல்.

“சோனி சோனின்னு கூப்பிட்டு அந்த சின்னப் பொண்ணோட பேரே மறந்துப் போச்சுடா. ஹப்பா அந்தச் சின்ன வயசுலேயே எப்படி வாயடிப்பா. உன்னைக் கூட அண்ணான்னு சொல்லுவா. என்னை அண்ணான்னு கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்லையே. அக்காகாரி வாயே திறக்க மாட்டா. அவளுக்கும் சேர்த்து வைச்சு தங்கச்சிகாரி பேசுவா.”

“இப்பப் போய் நீ சோனின்னு கூப்பிட்டுப் பாரு. உன் வாயைத் தைச்சு விட்ருவா.”

“ஹேய்… என்னடா சொல்ற? திரும்ப ஊருக்கே வந்துட்டாங்களா? அதே வீடு தானா? சோனி… அச்சோ அவ பேரைச் சொல்லுடா?” ஆர்வமாகக் கேட்டான் ராகுல்.

“அமிர்தவர்ஷினி”

“யெஸ் கரெக்ட். அமிர்தவர்ஷினி. மழை வர்றதுக்காகப் பாடப்படுற ராகத்தோட பெயர். எவ்வளவு அழகான பேர் இல்ல” சொல்லியபடியே அம்ருதவர்ஷினி ராகத்தில அமைந்த ஒரு பாடலைத் தன்னை அறியாமல் முணுமுணுக்கத் தொடங்கினான் ராகுல்.

‘தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும்

பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது

அன்பே நீ இல்லாது’

அவளுக்காக அவன் பாடும் கீதாஞ்சலிகள் இந்த நொடி முதல் தொடங்கியதை அறியவில்லை ராகுல்ரவிவர்மன்.

error: Content is protected !!