kamyavanam2

                                                          காம்யவனம்

                                                                    2

 

வாசலை உறைந்து பார்த்த வண்ணம் இருந்தனர் நால்வரும். சென்று பார்க்க ஆர்வம் இருந்தாலும், சிறு நடுக்கம் அவர்களது கால்களை கட்டிப் போட்டு விட்டது.

மாயாவின் ஆவல் அவளை அங்கிருந்து நகர வைத்தது. ஓரடி முன்னாள் எடுத்து வைக்க, அவளைத் தடுத்தான் குரு.

“இரு. நான் கூட வரேன்!”, நிதானமாகப் பேசினான்.

அவள் ஆமோதிப்பாக தலையசைக்க, இருவரும் சென்றனர். இவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் அந்த ஓசை ஓரடி பின்னால் சென்றது.

நெஞ்சின் நடுக்கம் இருந்த மற்ற இருவரையும் தொற்றிக் கொள்ள, அவர்களும் எழுந்து இவர்களின் பின்னால் வந்து நின்றனர். அந்த ஓசை இப்போது வேகமாகப் பின் வாங்கியது.

மாயா தைரியமாக முன்னேறி வேகமாக எட்டிப் பார்க்க, அவளது முகத்தை வேகமான காற்று மோதியது. அதில் ஒரு நொடி கண்மூட, அந்த ஒலி மாயமானது.

மகதி நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டாள்.

“ஹப்பாடா ஒன்னும் இல்ல” சற்று ஆசுவாசம் அடைந்து வீட்டிற்குள் வந்தாள்.

“மகி என்ன பேசற நீ.. எதாவது இருந்திருந்தா பிரச்சனையே இல்லை. இப்போ அது என்ன ஏதுன்னு ஒவ்வொரு நொடியும் யோசிக்க வேண்டியதா போச்சு” தேவா விளக்கிக் கூற, 

“இனிமே ஒவ்வொரு நாளும் இப்படி திரில்லா வே போக போகுது” குரு சரியாகக் கணித்தான்.

“எல்லாம் தெரிஞ்சு தான வந்தோம். இப்போ எதுக்கு பயம். உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.” சிரித்தாள் மாயா.

“ஜல் ஜல்” என்ற ஒழி மீண்டும் வாசலில் ஒலிக்க, கண்கள் அதிர திரும்பிப் பார்த்தாள் மாயா. இப்போது அங்கே ஒரு பெண் கையில் சிறு பழக் கூடையுடன் நின்றிருந்தாள்.

ஒருவேளை இவள் தான் முதலில் வந்திருப்பாளோ என்று நினைத்து, மற்றவர்களைப் பார்த்து, “டவுட் கிளியர்ட்?!” என்றுவிட்டு வாசலை நோக்கிச் சென்றாள்.

அந்தப் பெண் எதுவும் பேசாமல் மாயாவிடம் பழக் கூடையை நீட்ட, “நீங்க தான் முன்னாடி வந்ததா?”, சிநேகப் புன்னகையுடன் கேட்டாள்.

“நான் இப்போ தான் வரேன்.சாப்பிட குடுக்கச் சொன்னாரு எங்க அப்பா” என்றாள் அப்பெண்.

“யார் உங்க அப்பா?” மாயா கேட்க,

“கடற்கரை” என்றாள்.

“இதுக்கு முன்னாடி ஒரு சலங்கை சத்தம் கேட்டுச்சே!” குழப்பாமாக மாயா கேட்க,

“எனக்குத் தெரியாதே!” என்று சொல்லி ஓடிவிட்டாள்.

குழப்பம் தீராமலே அந்த நாள் ஓடிக்கொண்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை தேவையான படி எடுத்து வைத்துக் கொண்டனர். அங்கிருந்த விறகடுப்பை உபயோகிக்கும் முறை நால்வருமே அறிந்திருந்தனர்.

ஏனெனில் இப்படிப் பட்ட காலங்களின் அது உதவும் என்பதற்காகத் தான். ஒரு காட்டில் வசிக்க என்னென்ன தெரிந்திருக்க வேண்டுமோ அனைத்தும் பழகி இருந்தனர். எல்லாம் அனுபவம் தான்.

முன்னேற்பாடாக கொண்டு வந்திருந்த அவசர உணவை அடுப்பு மூட்டி சமைத்து உண்டனர்.

பிறகு அனைவரும் ஓய்வெடுக்க எண்ணி தங்களின் ட்ராவெல் மெத்தையை ஆங்காங்கே விரித்துப் படுக்க, பயணக் களைப்போ எதுவோ ஆண்கள் இருவரையும் தூக்கம் உடனே ஆட்கொண்டது.

பெண்கள் இருவரும் மட்டும் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருக்க, மகதி பேச்சுக் கொடுத்தாள்.

“அந்தச் சத்தம் என்னவா இருக்கும்னு நெனைக்கற மாயா?” மெல்லிய குரலில் கேட்டாள்.

“எனக்கு ஒன்னும் தோணல, ஆனா நம்மள நோட்டம் விட்ட மாதிரி தோனுச்சு.” பார்வையை திருப்பாமல் மேலே பார்த்தபடியே கூறினாள் மாயா.

“எனக்கு கொஞ்ச நேரம் அள்ளுஇல்ல..” அந்த நேரத்தை மீண்டும் நினைவு கூர்ந்தாள் மகதி.

“எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணுவோம். பயபடாத” மாயாவின் பதிலைக் கேட்க மகதி அங்கே விழித்திருக்கவில்லை. அவளும் உறங்கிப்போயிருந்தாள்.

மாயா மட்டும் உறக்கமின்றித் தவிக்க, இப்போது மெலிதாக மீண்டும் அந்த ஒலி அவள் காதுகளை எட்டியது.

சட்டென எழுந்தவள் ஜன்னல் அருகில் சென்று நிற்க, மெல்லிய காற்று முகத்தை வருடி இதமளித்தது.

ஏனோ முன்பு இருந்த பயம் அவளுக்கு இப்போது தோன்றவில்லை. ஜன்னல் வழியே வெட்டவெளியை சுற்றிப் பார்த்தாள்.

ஒருவரும் நடமாடவில்லை. ஒருவேளை பிரம்மையாக இருக்குமோ என்று திரும்ப எத்தனிக்க, மீண்டும் அவள் அருகில் அந்த ஒளி கேட்க, ஜன்னலை நோக்கினாள்.

“மாயா…….” வசீகர ஆண்  குரல். ஆழ்ந்து அனுபவித்து மனதார அவளை அழைத்தது போல இருந்தது.

ஒரு நொடி உடலெல்லாம் சிலிர்த்தது. மெய் மறந்து நின்றாள். எங்கோ எப்போதோ கேட்டது போன்ற உணர்வு.

“மாயா…..” மீண்டும் அழைத்தது அக்குரல்.

இப்போது அந்தக் குரலுக்குறியவரை காணும் எண்ணம் தோன்ற , குடிசையை விட்டு வெளியே ஓடினாள்.

யாரும் இல்லை.

குடிசையச் சுற்றி ஓடினாள். சலங்கை ஒலி அவளுக்கு முன்னால் சற்று தொலைவில்  சென்றது போலக் கேட்க, அதைத் தொடர்ந்து சென்றாள்.

அவ்வொலி அவளை எங்கோ அழைத்துச் சென்றது. அவளுக்குத்  தான் வெகு தூரம் வந்தது கூட நினைவில் இல்லை. அனைத்தையும் மறக்கச் செய்தது அந்த ஒலி. அவளுக்குள் அந்த ஒலி ஏதோ ஒன்றை நினைவு படுத்துவது போல இருந்தது. அது என்றவென்று அறியும் ஆவல் தவிர வேறு எதுவும் மனதில் இல்லை.

அந்த ஒலி ஓரிடத்தில் நின்றது. மாயாவும் நின்றாள். மூச்சிறைத்தது. முழங்காலைப் பிடித்தபடி காற்றை வாய் வழியாக உள்ளிழுத்துக் கொண்டாள்.

தொண்டை வறண்டு தாகம் எடுக்க, நிமிர்ந்து சுற்றிப் பார்த்தாள்..

ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அதற்குள் மாலை நேரம் போல காட்சியளித்தது அந்த இடம்.

பச்சைப் பசேலென எங்கு பார்த்தாலும் செடி கொடி மரம். வண்ண வண்ண பூக்கள் அதில் பூத்துக் குலுங்கியது. இது வரை பார்த்தேயிராத நிறங்களிலும் பூக்கள் கண்ணைக் கவர்ந்தது.

அவற்றிலிருந்து வந்த மணம் , மனதையும் சேர்த்து நிறைத்தது. அருகிலேயே சல சலக்கும் நீரோடை.

வேகமாக ஓடிச் சென்று தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளத் துடித்தாள். அருகில் சென்றதும் முழங்காலிட்டு அந்தக் கறையில் அமர, தெளிந்த நீர் அவளது முகத்தை கண்ணாடி போலக் காட்டியது.

பளிங்கு முகம். வில் போன்ற புருவம். வரைந்து வைத்தது போன்ற கண் அமைப்பு. அந்த வெள்ளை விழிகளுக்குள் இருந்தது அழகிய பச்சை நிறப் பார்வை. அது தான் அவளின் தனிச் சிறப்பு.

கூரானா மூக்கும் அதைத் தொடர்ந்து வந்த ரோஜா நிற இதழ்கள். பார்பவர்களை நிச்சயம் சுண்டி இழுக்கும் முக அமைப்பு. பளிங்குக் கழுத்தும் அதன் கீழே இருந்த அவயங்களும் ஆண்களை பித்தம் கொள்ள வைக்கும்.

சிற்றிடையும், நீண்ட கை கால்களும் அவளை பேரழகியாக்கியது. தேவ லோக மங்கை நிச்சயம் இவளிடம் தோற்கத் தான் வேண்டும்.

நீரின் வழி அவளது அழகை அவளே பார்க்க. எப்போதும் இல்லாத உணர்வு. கண்ணாடி பார்க்கும் போது தன்னை அவள் கர்வமாக என்றும் உணரந்ததில்லை. இன்று அவள் விழிகளுக்குள் வேறொருவர் புகுந்து அவளை ரசிப்பதாக தோன்றியது.

“இது என்ன வித்தியாசமா இருக்கு!” திகைத்தாள்.

“இது என்ன இடம்? நான் எவ்வளவு தூரம் வந்துட்டேன்?!” மனம் தேடலில் இறங்க,

“வர வேண்டிய இடத்துக்குத் தான் வந்திருக்க…” வசீகரக் குரல் மீண்டும் அவளை செவிவழி தீண்டியது.

சுற்றிப் பார்த்தாள். அழகு.. அழகு .. எங்கும் அழகு. அந்த பூஞ்சோலையைத் தவிர அங்கே ஒன்றும் இல்லை.

மீண்டும் சிறிது நேரம் அமைதி நிலவ, நா வறண்டது. இப்போது அந்த நீர் நிலையில் தண்ணீர் பருகினாள். அது வெறும் நீர் அல்ல. அமுத சோம பானம். அவ்வளவு ருசியாக இருந்தது. மீண்டும் மீண்டும் அள்ளிப் பருகினாள்.

அவளால் குடிப்பதை நிறுத்த முடியவில்லை. குடித்துக் களைத்தாள்.மயக்கம் வருவது போல இருந்தது. அத்தோடு தூங்க இருந்தவளை இத்தனை தூரம் வரவைத்தது அவளுக்கு களைப்பைத் தர, பருகிய நீரும் அவளை அசையவிடாமல் ஓரிடத்தில் அமர வைத்தது.

கண்கள் சொருகி தூக்கத்தின் அரை மயக்க நிலையில் பாதி திறந்த கண்களால் அந்த இடத்தின் அழகை ரசித்த படி அப்படியே அந்தப் புல் தரையில் சரிந்தாள்.

குயில்களின் கானம் இனிமையாகத் தாலாட்ட, மரங்களின் காற்று சாமரம் வீச, பூக்களின் நறுமணம் , வயிறு முட்டக் குடித்த சோம பானம் இவற்றை நொடி நொடியாய் ரசித்துக் கிடந்தாள்.

“இதை விட இன்பம் உலகில் வேறு ஏது…!” அவளின் மனம் நினைக்க, அந்த இன்பத்தோடு என்னையும் சேர்த்துக் கொள் என்றது அருகில் கேட்ட அந்தக் குரல்.

“மாயா..”

“யார் நீ.. எனக்கு முன்னாடி வா! இப்படி எல்லாம் பண்ணா நான் பயந்துடுவேனா?”, குடித்தால் எங்கிருந்து தான் தைரியம் வருமோ! அந்தக் குரலுக்கு மாயாவும் பதில் தந்தாள்.

“ஹா ஹா.. நான் நேர்ல வரணுமா? உனக்கு முன்னாடி தான இருக்கேன். நல்லா பாரு!” சிரித்தடி கூறினான்.

“எங்க ?” கண்ணைத் தேய்த்துக் கொண்டு பார்த்தாள்.

அவளைக் கைகளால் யாரோ தூக்குவது போல இருந்தது. உடல் கூசியது. வன்மையான கைகள். நன்றாக அதை அவளால் உணர முடிந்தது.

அவளது இடையைத் தீண்டியது. அவள் அணிந்திருந்த ‘லோ வெய்ஸ்ட்’ ஜீன்சும் ‘கிராப்’ டாப்சும் அதை சுலபமாக்கியது.

பறப்பது போன்ற நிலை.

“ஹே! யார் நீ என்னை கீழ எறக்கி விடு.” உடலை அசைத்து அந்தக் கைகளிலிருந்து விடுபட நினைத்தாள். முடியவில்லை.

“உன்னை விட்டு நான் இவ்வளோ நாள் இருந்தது போதும் மாயா” காதல் பொங்கி வழிந்தது அந்தக் குரலில்.

“யார் நீ!?” மாயா கத்தினாள்.

“நான் இல்லாம நீ இல்ல..நீ இல்லாம நான் இல்ல..” சிரித்தது அந்த ஆண் குரல்.

“வாட்? என்ன உள்ளற? என்னை மொதல்ல எறக்கி விடு.” அவளுக்குக் கோபம் வந்தது.

“உன்ன விடறதுக்கா இவ்வளவு நாள் தவம்?”

“புல் ஷிட். என்ன விடப் போறியா இல்லையா. கத்தி கலாட்டா பண்ணா எல்லாரும் வருவாங்க!” அவனை அடிப்பதாக நினைத்து கைகாலை உதைத்தாள்.

“ரொம்ப தைரியமா இருக்கணும்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ சொன்னதா ஞாபகம்!” வம்பிழுத்தது.

கோபம் கொந்தளிக்க கஷ்டப்பட்டு அந்தக் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குதித்தாள்.

“எங்க இருக்க நீ! கண் முன்னாடி வா. என்னைப் பத்தி உனக்கு சரியா தெரியாது.” வாய்க்கு வந்ததை கத்தினாள்.

“ராத்திரி பூஜைக்கு வா. அங்க பாக்கறேன்” குரலின் வசீகரம் துளியும் குறையவில்லை. அவள் என்ன தான் கத்தினாலும் இனிமை மாறாமல் பேசியது.

“நேர்ல வந்த நீ காலி. உன்ன வெச்சு செஞ்சுடுவேன்.” காலால் இல்லாத ஒன்றை உதைத்தாள்.

“மாயா..மாயா!” அவளைப் பிடித்து உலுக்கியது இரு கைகள்.

“டேய்…விடமாட்டேன் உன்ன. என்கிட்டையே வம்பிழுக்கறியா” உச்சச்தானியில் கத்தினாள்.

“மாயா…” முகத்தில் நீர் தெளிக்கப் பட்டது.

சட்டென கண்ணில் ஒளிவந்தது போல விழித்துக் கொண்டாள்.

மூச்சிரைக்க எழுந்தாள். இன்னும் அதே குடிசையில் தன் படுக்கையில் தான் இருந்தாள். எழுப்பியது குரு தான்.

தேவா முகத்தில் நீர் தெளிக்க , அவளைப் உலுக்கிய படி இருந்தாள் மகதி.

“என்ன ஆச்சு மாயா?கனவா?” தேவா கேட்ட பிறகு தான் கனவு என்பதை தெரிந்தாள்.

ஆனால் அது கனவு போல இல்லையே. அத்தனையும் நேரில் தத்ரூபமாக உணர்ந்தாளே! முகம் வியர்க்க அமர்ந்திருந்தாள்.

“ஆமா கனவு” மெதுவாக வந்தன வார்த்தைகள்.

“சரியா போச்சு போ. நான் பயந்துட்டேன்”மகதி தேவாவின் கையில் இருந்த நீரை வாங்கிப் பருகினாள்.

“டைம் என்ன?”

“ஆறு மணி ஆயிடுச்சு.” குரு சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்க,

“பூஜைக்கு கண்டிப்பா போகணும். கெளம்புங்க” மட மட வென தயாராக ஆரம்பித்தாள் மாயா.

ஒரு வேளை தான் கண்டது கனவில்லையெனில் அந்தக் குரலுக்குறியவனை அங்கு காண நேரலாம் என்று அவளது மனம் சொன்னது.

உடுக்கை, உறுமி மேளம் , நாதம் முழங்க , பூஜைக்கு அந்த இடத்தில் வாழும் மக்கள் தயாராக இருந்தனர். இவர்களும் கிளம்பி வெளியே வர,

கடற்கரை அவர்களை அவர்களின் குடிசை வாசலிலேயே நிறுத்தினான்.

“இந்தாங்க. இந்த சேலைய கட்டிக்கிட்டுத் தான் பூஜைக்கு வரணும். நீங்களும் இந்த வேட்டியைத் தான் கட்டிக்கணும். அப்போ தான் பலன் சொல்லுவாங்க.” இதுவும் ஒரு ஆணை என்பது போல அவர்களிடம் கொடுத்துவிட்டு பதில் எதிர்ப்பார்க்காமல் சென்று விட்டான்.

குரு முறைத்தாலும், தேவாவிற்காக அதைப் பெற்றுக் கொண்டான்.

ஆண்கள் முதலில் வேட்டியைக் கட்டிக் கொண்டு வர, அதன் பின் மாயாவும் மகதியும் சிகப்பும் பச்சையுமான அந்த நூல் புடவையைக் கட்டிக் கொண்டு வந்தனர்.

மாயா அந்த சாதாரணப் புடவையிலும் அழகாக இருந்தாள்.

உடுக்கை சத்தம் இதயத்தைப் பிசைந்தது. மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்த இடத்திற்கு நால்வரும் சென்றனர்.

உறுமி மேளம் அடிப்பவன் மேலும் அதனை இழுத்து அடிக்க, உடுக்கை அடிப்பவர் நால்வரையும் பார்த்து மனதில் ஏதோ எண்ணினார்.

அது பௌர்ணமி பூஜை. பௌர்ணமி அன்று அந்தக் காம்யவனக் காட்டில் வெகு காலமாக தவம் இருக்கும் மன்மதனை ஆராதனை செய்வது அவர்களின் வழக்கம்.

காம்யவனக் காடு ஆசைகளின் மொத்த உறைவிடம். நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். காதல் பெருக்கெடுத்து ஓடும்.

சாட்ஷாத் அந்த கண்ணனே இந்தக் காட்டில் தான் ராதையுடன் காதல் சரசம் நடத்தினான். இக்காட்டின் காற்றில் கூட காதல் கலந்திருக்கும்.

பறவைகள், செடி கொடிகள், மண் , மரம் , நீர் , புல் பூண்டு அனைத்திலும் காதல் காதல் காதல்.

அதனால் இக்காட்டை மன்மதன் தன் இடமாக வைத்திருந்தான். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் அவனை ஆடிப் பாடி பூஜை செய்து மகிழ்கின்றனர்.

அப்போது இங்கே குறி சொல்வதுண்டு. யார் என்ன கேட்டாலும் அதற்கு பதில் கிடைக்கும். ஆனால் உண்மை மட்டுமே பேசவேண்டும்.

பொய்யை மறைத்து வைத்தாலும் அது அவர்கள் வாய் மூலமாகவே உண்மையை கொண்டு வந்துவிடும்.

உடுக்கை அடிப்பவர் தான் குறி சொல்வது வழக்கம். இன்று இந்நால்வரின் உண்மையை அங்கிருப்பவர்கள் தெரிந்து கொள்ளப் போவதாக அவரின் மனதில் பட்டது.