கீதாஞ்சலி – 4

மங்கிய விளக்கொளியில் ரம்மியமான இசை காதோடு சேர்த்து மனதையும் வருடிச் சென்றது. ஜன நெருக்கடி அதிகமில்லாத இடத்தில் அமைந்திருந்த அந்த ரெஸ்டரென்ட்டினுள் அமர்ந்திருந்தான் ராகுல்ரவிவர்மன். எதிரில் அழகான ஒரு யுவதி கண்களால் இவனை விழுங்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள். இவர்களின் பார்வைக்குப் புலப்படாதவாறு சற்றுத் தள்ளி கௌஷிக்.

தனக்குத் தெரிந்த பெண்ணிற்குப் பாடுவதில் ஆர்வம் அதிகமெனவும் ராகுலைச் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் கூறி ராகுலை இங்கு அழைத்து வந்திருந்தான் கௌஷிக். அந்தப் பெண் வரவும் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு வராத ஃபோன் காலுக்குப் பதில் சொல்வதாகப் பேர் பண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகியிருந்தான் கௌஷிக்.

அப்பெண்ணுடன் பேசிய சில நொடிகளிலேயே ராகுலுக்குப் புரிந்து போனது பெண்ணிற்கும் பாட்டுக்கும் வெகு தூரமென. ஒரு அளவிடும் பார்வையைப் பாவையின் மீது வீசினான்.

அணிந்திருந்த இறுக்கமான நீல நிற மெல்லிய துணியால் ஆன கவுன் அளவுக்கு அதிகமாகவே பெண்ணை வெளிச்சம் போட்டுக் காட்ட பார்வையின் முடிவில் லேசான மயக்கம் தெரிந்தது ராகுலின் கண்களில். அதைக் கண்டுகொண்ட பெண்ணுக்குப் பெருமிதம் தாளவில்லை. வந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டாள்.

“ஆர்.வீ உங்களை மீட் பண்ணப் போறோமுன்னு தெரிஞ்ச உடனே நான் எவ்வளவு ஹேப்பியா ஃபீல் பண்ணினேன் தெரியுமா?”

பதிலேதும் பேசாமல் அப்படியா என்பதைப் போல மெச்சுதலாக ஒரு பார்வை மட்டுமே பதிலாக வந்தது ராகுலிடமிருந்து.

“ஆனா மீட்டிங் ப்ளேஸ் விஷயத்துல தான் நீங்க என்னை டிஸ் அப்பாயின்ட் பண்ணிட்டீங்க” உதட்டை ஒரு மாதிரியாக சுளித்துக் கொண்டு சொன்னாள் பெண்.

“ஏன்? இந்த இடத்துக்கு என்ன? நல்லாதானே இருக்கு. க்ரௌட் கூட டீசன்ட் க்ரௌட் தான். யாரும் வந்து டிஸ்டர்ப் பண்ணக் கூட இல்லயே! அப்புறம் என்ன?” வெயிட்டர் வந்து வைத்து விட்டுப் போன ஒயிட் ஒயினை அருந்தியவாறே வினவினான் ராகுல்.

“உங்க ரேஞ்சுக்கு எதாவது செவன் ஸ்டார் ஹோட்டல், ரூஃப் டாப் கார்டன் ரெஸ்டரென்ட் ஃபுல்லா புக் பண்ணி ஒரு கேன்டில் லைட் டின்னர் கொடுத்திருந்தா எவ்வளவு ரொமென்டிக்கா இருந்திருக்கும்?” கண்களில் அப்பட்டமாக ஆசை வழிந்தது பெண்ணுக்கு.

“ரொமென்டிக்?” கேள்வியாகப் புருவத்தைச் சுருக்கினான் ராகுல். இந்தப் பெண் இப்பொழுது பேசியது, கௌஷிக் இவ்வளவு நேரமாக வராமல் இருப்பது எல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும் பொழுது லேசாக ஏதோ புரிவது போலத் தோன்றியது.

“நீங்க எவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா? இப்போ ஃபீல்ட்ல இருக்குற ஹீரோஸ் எல்லாம் உங்க கிட்டக் கூட வர முடியாது. நீங்க ஏன் ஹீரோவாக ட்ரை பண்ணக் கூடாது?” அருந்தி முடித்த ஒயின் போதையை மீறிய போதை பெண்ணின் பேச்சில்.

“எனக்கு எதுல இன்ட்ரெஸ்ட் இருக்கோ அதைத் தானேம்மா பண்ண முடியும்?”

“அதுவும் கரெக்ட் தான். எனக்கு எப்போடா நம்ம கல்யாணம் நடக்கும்னு இருக்கு.”

“கல்யாணமா!” அதிர்ந்தாலும் இப்பொழுது முழுதாகப் புரிந்தது இது கௌஷிக்கினுடைய ஏற்பாடென்று. அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல்,

“என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இப்ப தான் பார்த்தோம். அதுக்குள்ள இவ்வளவு பெரிய டிசிஷன் எடுக்குறீங்க?” என்று கேட்டான் ராகுல்.

“இதுக்கு மேல என்ன தெரியணும்? பார்க்க ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்கீங்க. உங்களுக்கு சொந்தமா ரெண்டு ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கு. அது மட்டுமில்லாம ஹாட் ஆஃப் த சிட்டியில ரெண்டு மூனு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கெஸ்ட் ஹவுசஸ், ஃபாரீன் கன்ட்ரீஸ்ல உங்களுக்கு சொந்தமா நிறைய யார்ட்ஸ் இருக்குன்னு கூட கேள்விப்பட்டிருக்கேன். இது போதாதா?”

“வெல்… என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க போல.”

“எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் ஆர்.வீ” கண்களிலும் குரலிலும் போதை வழிந்தோடச் சொன்னது பெண்.

“பட் எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு.”

“சோ வாட். அதான் டிவோர்ஸ் ஆகிடுச்சே. கமான் ஆர்.வீ, நம்மள மாதிரி ஹை சொசைட்டி ஆட்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.”

“ஆஹான். குட் டு ஹியர். பட் எனக்கு ஏழு வயசுல ஒரு பையன் இருக்கானே.”

“யா… ஐ நோவ். அதுவும் நல்லதுக்குத்தான். நான் தனியா குழந்தை பெத்துக்க வேணாம். என் அழகும் இளமையும் எப்போதும் உங்களுக்குத் தான். நம்ம ப்ரைவேட் டைம்ல உங்க சன் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா போதும். சோ சிம்பிள்.”

“நீங்க என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா டிசைட் பண்ணிட்டீங்க போல இருக்கு?”

“அஃப்கோர்ஸ்”

“வெல், என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. ஐ அம் ஹைலி இம்ப்ரெஸ்ட். எனக்கும் நீங்கதான் சரியான சாய்ஸா இருப்பீங்கன்னு தோனுது. உங்களை… உன்னைப் பார்க்கும் போது… யூ சீ… யூ ஆர் சோ ஹாட்.”

இதைக் கேட்டதும் கர்வமாகச் சிரித்தாள் பெண். அமர்ந்திருந்த இருக்கையிலிருந்த எழ முறபட்டவளைத் தடுத்தவன்,

“வெயிட்…வெயிட். அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடி என் லைஃப்ல இப்போ என்ன நடந்துகிட்டிருக்கு அப்படிங்குறதையும் உன்கிட்ட சொல்லிடறேன்.”

“கமான் ஆர்.வீ, இன்னும் என்ன?”

“நான் கொஞ்சம் தப்பான இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டேன். சோ கொஞ்சம் ஹெவி லாஸ் ஆகிடுச்சு. பண விஷயத்துல இப்போ நான் பெரிய சீரோ. என்ன நீ சொன்ன மத்த விஷயமெல்லாம் ஆல்ரெடி மீடியால வந்துடுச்சு. இது இன்னும் வெளிய வரலை. அவ்வளவு தான்” சிரித்துக் கொண்டே இலகுவாகச் சொன்னான் ராகுல்.

“வாட்” அதிர்ந்து போனாள் பெண்.

“பட் இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமா என்ன? உனக்குத் தான் என்னை ரொம்பப் பிடிச்சிருக்கே. பணம் இன்னைக்கு வரும். நாளைக்குப் போகும். நாம் கல்யாணம் பண்ணிக்கலாம் பேபி” இப்பொழுது மயக்கத்தோடு சொல்வது போல் பேசினான் ராகுல்.

தன் கைப்பையிலிருக்கும் அலைப்பேசி அலறுவது கூட அறியாத வண்ணம் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் பெண். அவள் கண் முன் சொடக்கிட்டு அலைப்பேசியைச் சுட்டிக் காட்டினான் ராகுல்.

“எக்ஸ்க்யூஸ் மீ. ஃபோன்ல நெட்வொர்க் இல்ல. பேசிட்டு வரேன் சர்” சொன்னவள் அலைப்பேசியில் பேசிக் கொண்டே வேக வேகமாக வெளியேறினாள். ஆர்.வீ இப்பொழுது சாராக மாறியிருந்தது. கண்களில் இருந்த மயக்கம் முற்றிலுமாக வடிந்து விட்டிருந்தது.

“மம்மீ… இவன் கிட்ட ஒன்னுமே இல்ல மம்மீ. லாசாகிடுச்சாம்” அந்தப் பெண் பேசிக் கொண்டே வெளியேறுவது ராகுல் காதில் நன்றாகவே விழுந்தது. சிரித்துக் கொண்டான்.

அந்தப் பெண் வெளியேறிய ஒரு சில நிமிடங்களிலேயே கௌஷிக் வந்து சேர்ந்தான்.

“எங்கடா அந்தப் பொண்ணு?”

“அவ ஃபோன்ல நெட்வொர்க் இல்லையாம். பேச போயிருக்கா.”

“ஓ அப்படியா… பேசிட்டு வந்திடுவாங்க”

“இல்ல இல்ல… இனிமே அந்த நெட்வொர்க் வரவே வராது.”

“என்னடா சொல்ற?”

“நான் சொல்றது இருக்கட்டும். முதல்ல நீ சொல்லு. என்ன நடந்துச்சு இங்க? மாப்பிளை பார்க்கும் படலமா?”

“சேச்சே அப்படியெல்லாம் இல்ல டா. எவ்வளவு நாள் தான் நீ இப்படியே தனியாவே இருக்க போற? உனக்காக இல்லைனாலும் சந்தோஷ் லைஃப் நல்லா இருக்க வேணாமா?”

“சந்தோஷ் லைஃப் நல்லா இருக்கணும்னு நினைச்சீன்னா இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கித் தூரப் போடு. ஐ அம் டன் மேன். ஐ அம் டோட்டலி டன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”

“சரி இந்தப் பொண்ணு பிடிக்கலைன்னா விடு. நாம வேற பார்க்கலாம்.”

“டேய் கௌஷிக் ப்ளீஸ் என்னை விட்டுடு. என்னோட லைஃப் ஸ்டைல், தாட் ப்ராசஸ் எல்லாமே செட் ஆகிடுச்சுடா. இதுக்கு மேல ஒரு பொண்ணுக்காக என்னால என்னை மாத்திக்க முடியாது.”

“இங்க தான் நீ தப்பு பண்ற. உன் வாழ்க்கை ஒன்னும் முடிஞ்சு போயிடல. இப்ப நீ ஓகே சொன்னா கூட உன்னைக் கட்டிக்க பொண்ணுங்க க்யூல வருவாங்க.”

“அதுக்குக் காரணம் நான் ராகுல். த கிரேட் ஆர்.வீ. என்கிட்ட பணம் இருக்கு, புகழ் இருக்குங்குற காரணத்துக்காக வருவாங்க. மத்தபடி எந்தப் பொண்ணாலயும் என்னைத் தெரிஞ்சுக்கவும் முடியாது, புரிஞ்சுக்கவும் முடியாது. இந்த விஷயத்தை இதோட விட்டுடு. ப்ளீஸ். அப்படி உனக்குக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமின்னா நீ பண்ணிக்கோ.

அதுக்குன்னு இந்த மாதிரி பொண்ணைப் பார்த்து வைக்காதே. நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்குறேன்.”

இதைச் சொல்லிவிட்டுத் தானே அடக்கமாட்டாமல் சிரித்தான் ராகுல்.

“என்னடா எதுக்கு இப்படி சிரிக்கிற? நான் கல்யாணம் பண்ணிக்கிறது அவ்வளவு பெரிய காமெடியா என்ன?” ராகுலின் சிரிப்பு கௌஷிக்கையும் தொற்றிக் கொண்டது.

“இல்ல… நல்ல பொண்ணா பார்க்கத் தெரிஞ்சிருந்தா என் லைஃப் ஏன் இப்படி இருக்கப் போகுது. அதை நினைச்சேன். சிரிப்பு வராம இருக்குமா சொல்லு?” இலகுவாகப் பேசிக் கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

“ஏன் ராகுல் இப்படியெல்லாம் பேசுற? நீ வேணா பாரு உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டு உனக்கே உனக்காக ஒருத்தி வரத்தான் போறா. அப்படி ஒருத்தியை உன் வாழ்க்கையில கொண்டு வந்துட்டு தான் நானும் கல்யாணம் பண்ணிப்பேன்.”

“டோட்டல் வேஸ்ட் ஆஃப் டைம். நீ கடைசி வரை கல்யாணம் பண்ணாமலேயே பிரம்மச்சாரியாவே இருக்க வேண்டியது தான்.

ஒரு அப்பாவி நல்ல பொண்ணை என் வாழ்க்கையில கொண்டு வந்து அந்தப் பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கவும் நான் விரும்பலை. அதே மாதிரி இப்ப வந்துட்டுப் போன பொண்ணு மாதிரி ஆளுங்க கிட்ட நான் மறுபடியும் ஏமாறவும் தயாரா இல்லை. புரிஞ்சுதா.

வீணா என்னைப் பத்தி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாம நீ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற வழியைப் பாரு. உன் வைஃப் மூலமா வர்ற தங்கச்சிங்குற உறவாவது எனக்கு நிலைச்சு இருந்தா அதுவே போதும் எனக்கு. இப்ப எதுவும் பேசாம கிளம்பு.. கிளம்பு.”

சொல்லிவிட்டு குளிர் கண்ணாடி அணிந்து வேக நடையிட்டுச் செல்பவனையே ஒரு விதமான கையாலாகாத் தனத்துடன் பார்த்திருந்தான் கௌஷிக். பலமாக ஒரு பெருமூச்சுக் கிளம்பியது கௌஷிக்கிடமிருந்து.

*****—–*****—–*****

காலை நேரம் கிட்டத்தட்ட எட்டை நெருங்கியும் இன்னமும் சூரியன் தலையை வெளிக்காட்டாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. வானம் சற்று மேகமூட்டமாகக் காட்சியளித்தது.

அமிர்தவர்ஷினி வீட்டின் பின்பக்கம் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை நிரஞ்சலா சற்றுத் தள்ளி தண்ணீரும் மண்ணும் கைக்கெட்டாதத் தூரத்தில் சிமென்ட் தரையில் உட்கார்ந்து அருகில் இருக்கும் விளையாட்டு சாமான்களோடு ஐக்கியமாகி இருந்தாள்.

வீட்டினுடைய பின்பக்கக் க்ரில் கேட்டிலிருந்து வந்த மெல்லிய கயிறொன்று அவள் வயிற்றை இறுக்காத வண்ணம் லேசாகக் கட்டப்பட்டிருந்தது. இல்லாவிட்டால் அவளை சமாளிக்க முடியாதே. தண்ணீரைக் கண்டுவிட்டால் போதும். பசி தூக்கம் அத்தனையும் மறந்து போகும் நிரஞ்சலாவிற்கு.

இப்பொழுதும் கையில் வைத்துக் கொண்டிருந்த பொம்மை மீதான ஆர்வம் குறைந்து போக லேசாக சிணுங்கத் தொடங்கி இருந்தாள் குழந்தை. அவள் அழுகை உச்ச கட்டத்தை எட்டுவதற்குள் அமிர்தா வேலையை முடித்துக் கொண்டு அவளைத் தூக்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று முழுமைக்கும் அழுகை தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆகையால் குழந்தையுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே வேக வேகமாக வேலையை முடித்துக் கொண்டிருந்தாள்.

“நிலா குட்டியோட டக்கி எங்கே? அம்மாவுக்கு டக்கியை நடக்க வைச்சுக் காட்டுங்கடா.”

“ம்மா டக்கி நேணாம்மா. தைகர் நேணும்” என்று சொல்லித் தாயை நோக்கிக் கையை நீட்டியது குழந்தை.

“அவ்வளவுதான் டா குட்டி. இதோ முடிஞ்சுது. அம்மா இதை எல்லாம் காயப் போட்டுட்டு வந்து நிலா பாப்பாவுக்கு டைகர் பொம்மை எடுத்துத் தருவேனாம். அப்புறம் நாம ரெண்டு பேரும் மம் மம் சாப்பிட்டு டாடா போகலாம். சரியா”

அம்மாவின் பேச்சைக் கேட்டு அப்போதைக்கு மீண்டும் அருகிலிருந்த வாத்து பொம்மையை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு ஆராயத் தொடங்கினாள் நிரஞ்சலா.

பக்கத்து வீட்டில் இருந்து சத்யவதி பேசும் சத்தம் கேட்டது. அவரும் அவர் வீட்டுத் தோட்டத்தில் தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

“கௌஷிக் கண்ணா… எப்படிப்பா இருக்க? எப்ப வர்ற?”

“……..”

சத்யவதி பேசுவது நன்றாகவே அமிர்தாவின் காதிலும் விழுந்தது. இவர் பேசுவதை வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பக்கம் கௌஷிக் பேசுவது புரிந்தது. ஆனால் என்ன பேசினான் என்றுத் தெரியவில்லை.

அமிர்தா இங்கு வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை ஒரு முறை மட்டுமே கௌஷிக் வந்து போயிருக்கிறான். சத்யவதியோ ஒருமுறைக்கூட சென்னை சென்றதைப் போல் தெரியவில்லை.

‘எதற்கு இப்படி ஆளுக்கு ஒருத் திசையில் இருக்க வேண்டும். இருக்கும் வரைக்கும் ஒன்றாக இருக்கலாமே. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை. அப்படி இருக்கையில் எதற்கு இந்த வீண் பிரிவு?’

அமிர்தவர்ஷினியின் தற்போதைய நிலை அவளை இப்படித்தான் சிந்திக்க வைத்தது. அவள் சிந்தனையைத் தடை செய்யும் விதமாகக் கொஞ்சம் கோபமாக உரக்கப் பேசினார் சத்யவதி.

“நீ ஃபோனை ராகுல் கிட்ட கொடு. நான் ராகுல் கிட்டயே பேசிக்கிறேன்.”

“……..”

“இதுக்குத்தான் ராகுல் வேணுங்கிறது. பார்த்தியா நான் சொல்லாமலேயே நீ கண்டுபிடிச்சிட்ட. ரெண்டு பேரும் ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போங்களேன்ப்பா.”

“…….”

“நிஜமாவா சொல்ற ராகுல். இந்த கௌஷிக் பையன் என்கிட்ட சொல்லவே இல்லப்பா. நீங்க எப்படா வருவீங்கன்னு தானே நான் காத்துக் கிடக்கேன். வரும் பொழுது சந்தோஷ் குட்டியையும் கூட்டிட்டு வாங்கப்பா. போன தடவை மாதிரி அவனை விட்டுட்டு வந்துடாதீங்க.”

“…….”

“ரொம்ப சந்தோஷம்ப்பா. நீங்க வேலையைப் பாருங்க. நான் கௌஷிக் கிட்ட நைட் பேசிக்கிறேன்.”

பேசி முடித்ததும் வாயெல்லாம் பல்லாக சந்தோஷத்துடன் அமிர்தாவை அழைத்துக் கொண்டே இரு வீட்டுக்கும் பொதுவாக இருக்கும் சுற்றுச் சுவர் பக்கமாக வந்தார் சத்யவதி.

“அமிர்தா, கௌஷிக்கும் ராகுலும் அடுத்த மாசம் இங்க வர்றாங்களாம். நடுவுல இந்த பத்மஸ்ரீ அவார்ட் ஃபங்க்ஷன் இருக்கில்ல, அதை முடிச்சிட்டு வர்றதா ராகுல் சொல்லியிருக்கான். ரெண்டு பேரையும் பார்த்தே ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு.”

சத்யவதியின் குரல் கேட்கவும் இப்பொழுது அவரை நோக்கிக் கையை நீட்டினாள் நிரஞ்சலா. “சத்யா பாத்தீ” உதடு பிதுங்கி அழுகைக்குத் தயாரானது.

“நிலா குட்டி என்னடா பண்றீங்க? அமிர்தா.. பிள்ளையைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கியா என்ன? பாரு குழந்தை அழறா. போய் தூக்கிட்டு வந்து என்கிட்ட குடும்மா. நீ வேலை எல்லாம் முடிக்கிற வரைக்கும் நான் பார்த்துக்குறேன்.”

“இல்ல அத்தை. உங்ககிட்டயும் இருக்க மாட்டா. அவளுக்கு இப்போ தண்ணிக்கு வரணும். வந்து ஆட்டம் போடணும். அதுக்குத்தான் இவ்வளவும் பண்றா.”

“என்கிட்ட குழந்தையை விட்டுட்டு வேலையைப் பாருங்கறேன். கேட்குறியா நீ? நான் ஒத்தை ஆள். எனக்கென்ன பெருசா வேலை இருக்கப் போகுது சொல்லு. சரி நீ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டுக் கிளம்பு. ஆபீஸ் போகணுமில்ல” என்று சொல்லிவிட்டு சத்யவதி தன் வீட்டை நோக்கித் திரும்பி நடந்தார்.

‘அத்தை ஃபோன்ல பேசும் போது சந்தோஷ்னு ஏதோ பேசினாங்களே! அது யாரா இருக்கும்? ஒருவேளை ராகுலோட பையனா இருக்குமோ? அப்படி இருந்தா கண்டிப்பா அவனைப் பார்க்கணும்’ எண்ணியபடியே தன் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானாள் அமிர்தவர்ஷினி.

*****—–*****—–*****

எஸ். எஸ். மழலையர் காப்பகம், இரும்பில் பொறிக்கப்பட்ட எழுத்து ஆர்ச் போல் வளைக்கப்பட்டிருந்தது. குழந்தையுடன் அங்கு வந்து சேர்ந்தாள் அமிர்தவர்ஷினி. உள்ளே நுழைந்ததும் இருந்த இடம் முழுவதும் மரங்களே நிழற்குடையாக மாறி நிற்க அதன் கீழ் சிறு குழந்தைகள் விளையாட ஏதுவாக சிறிய அளவில் ஸ்லைட்கள், ஊஞ்சல்கள், சீ சாக்கள் போடப்பட்டிருந்தது.

ஆங்காங்கே ஒரு சில குழந்தைகள் ஏதேதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சில குழந்தைகள் அழுது கொண்டுமென அந்த இடமும் அந்தச் சூழ்நிலையுமே மனதிற்கு அத்துனை இதமாக இருந்தது.

அமிர்தாவைப் பார்க்கவும் அந்தக் காப்பகத்தில் வேலை பார்க்கும் ரம்யா ஒரு புன்சிரிப்புடன் வந்து கையை நீட்ட குழந்தை நிரஞ்சலாவும் ரம்யாவின் கைகளுக்குத் தாவிக் கொண்டாள்.

“குட் மார்னிங் நிலா பேபி. வாங்க வாங்க” என்று குழந்தையை ஏந்திக் கொண்டவள்,

“குழந்தைக்கு டயத்துக்கு எல்லாம் சரியா குடுத்திடணும். அழ வைக்கக் கூடாது. மீறி அவ அழுதா உங்களுக்கு உடனே கால் பண்ணி சொல்லிடணும். குழந்தையை விட உங்களுக்கு வேற எதுவும் முக்கியமில்ல. நீங்க உடனே இங்க வந்து நிப்பீங்க. என்ன அமிர்தவர்ஷினி மேடம் கரெக்டா சொல்லிட்டேனா? இல்ல எதையாவது மறந்துட்டேனா?” அமிர்தாவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டாள் அந்தப் பெண் ரம்யா.

ஒரு சிரிப்பும் தலையாட்டலுமே பதிலாகக் கிடைத்தது அமிர்தாவிடமிருந்து.

“ஹப்பா… சிரிச்சுட்டீங்களா? மேம் சும்மா சொல்லக் கூடாது நீங்க சிரிக்கும் போது செம்ம க்யூட்டா இருக்கீங்க. இப்படியே சிரிச்சுக்கிட்டே இருங்க”

“இந்தக் குழந்தைங்க எல்லாம் எப்படி இப்படிப் பேசுறாங்கன்னு நான் யோசிச்சிருக்கேன். இப்பத்தான் தெரியுது. எல்லாம் எங்க இருந்து வந்திருக்குன்னு.”

“போங்க மேடம். நான் தான் இந்தப் பசங்க கிட்ட இருந்து கத்துக்கிறேன்.”

“சரி நான் கிளம்பறேன். நிலா பத்திரம்” சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் அமிர்தவர்ஷினி.

‘இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஒரு இரண்டு வருட வயது வித்தியாசம் தான் இருக்கும். இந்தப் பெண்ணைப் போலத் தானே என் வாழ்வும் சென்ற வருடம் வரை இருந்தது. திடீரென்று என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி திசை மாறிப் போனது? இதில் நான் செய்த தவறுதான் என்ன?

இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாறுமா? எப்படி மாறும்? யாரால் மாற்ற முடியும்? நிலாவுக்காகவும் எனக்காகவும் என்று யாராவது ஒருவர் இந்தப் பரந்த உலகில் இருக்கிறார்களா?

நான் எதற்கு இப்படி யோசிக்கிறேன். எப்பொழுதிலிருந்து என் மனம் ஆறுதல் தேடத் தொடங்கியது? இல்லை. தேவையில்லை. எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. யாருடைய ஆறுதலும் தேவையில்லை.

குழந்தைக்காக மட்டுமே நான் உயிர் வாழ்வது. அவள் தான் என் உலகம், என் சொந்தம், பந்தம் அனைத்தும். இறுதி மூச்சு இருக்கும் வரைக்கும் அவளை நான் பத்திரமாகப் பாதுகாத்து நல்லபடியாக வளர்த்தால் அதுவே போதும்.’

எண்ணச் சிறையிலிருந்து மீண்டவள் நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள். நடையில் கம்பீரம் மீண்டிருந்தது. குழந்தையைப் பற்றிய நினைவு முகத்தில் தாய்மையுடன் கூடிய பூரிப்பை மிளிரச் செய்து அவளைப் பேரழகியாகக் காட்டியது.

“சின்னஞ்சிறு கிளியே,

கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலிதீர்த்தே

உலகில்

ஏற்றம் புரியவந்தாய்!”

error: Content is protected !!