கைப்பேசி இசைக்க அதில் தன் நினைவிற்கு வந்த ஸ்வேதா… அதன் திரையைப் பார்க்க… அவள் அண்ணி தரணிதான் அழைத்திருந்தாள்.

மணியைப் பார்த்தால் பதினொன்றரை எனக் காட்டியது…

“என்ன அண்ணி இந்த டைம்ல போன் பண்றீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா??” என்றவளிடம்…

“இல்லை ஸ்வேதா! ஆபிஸ் வேலையை முடிக்காமல், வீட்டுக்கு எடுத்து வந்திட்டேன், ஒரு ப்ரோக்ராம் ரன் ஆகல… வை…பை… வேறு ஸ்லோவா இருக்கு… உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா? நான் அங்கேயே வரேன்…” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் தாரணி..

“சரி அண்ணி… வாங்க நான் ட்ரை பண்றேன்…” என ஸ்வேதா சொல்லவும்…

அடுத்த நிமிடமே… தன் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள் தரணி…

தன்னுடைய… மொபைல் ஹாட்ஸ்பாட் உதவியுடன்.. இருபது நிமிடத்தில் அவள் ப்ரோக்ராமை ரன் செய்து கொடுத்தாள் ஸ்வேதா…

தரணி அவளைக் கட்டிக்கொண்டு… “ரொம்ப தேங்க்ஸ் ஸ்வேதா! கம்பெனியிலிருந்து போன் வேறு வந்து கொண்டே இருக்கு…”

“செம டென்ஷன் ஆயிட்டேன்!”

“எங்க இன்றைக்குத் தூங்கவே முடியாதோன்னு நினைச்சேன்… தேங்க்ஸ்! தேங்க்ஸ்!” என்க…

“பரவால்ல அண்ணி… நீங்கப்போய் தூங்குங்க” என்று சொல்லி அவளை அனுப்பிய ஸ்வேதாவின் தூக்கம்தான்… தூரப் போயிருந்தது… ஹரியின் நினைவுகளால்…

அதே நேரம் துபாயிலிருந்து சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஹரி…

அவனும் ஸ்வேதாவை முதல் முதலில் பார்த்த நாளைப்பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தான்…

தந்தையின் வற்புறுத்தலால் மட்டுமே ME சேர்ந்திருந்தான் ஹரி…

அவன் வீடு திருவள்ளூரில்தான் இருந்தது… ஆனாலும் அவனுக்குத்…  தன் தந்தையுடன் அடிக்கடி ஏற்படும் உரசலைத் தவிர்க்கவே ஹாஸ்டலில் தங்கியிருந்தான்…

கல்லூரி தொடங்கி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது…

ஆனால் அதற்குள்ளாகவே அவன் வகுப்பில் உடன் படிக்கும் பாலுவுடன், அவனுடைய வெளிப்படையான குணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆழ்ந்தவொரு நட்பு உருவாகியிருந்தது ஹரிக்கு…

************************************

அப்பொழுது ஒருநாள் கல்லூரி நேரம் முடிந்தவுடன்… ஹரி!  இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த கல் மேடையில்  உட்கார்ந்தவாறு… பாலுவிற்காக காத்திருந்தான்.

அன்றுதான், அங்கேதான் அவன் வாழ்க்கையே மாற்றிப்போட்ட அவனுடைய தேவதைப் பெண்ணை அவன் முதன்முதலில் பார்த்தது.

அழகிய மாம்பழ நிறமும் வயலட் நிறமும் கலந்த சல்வார் அணிந்து… கொடிபோன்று மெல்லியளாய்… கவிபாடும் கருவண்டு கண்களுடன், வில்லென வளைந்த புருவங்களின் மத்தியில் சிறிய திலகம் இட்டு… கூர் நாசியுடன், சிவந்த உதடுகள் சுழித்திருக்க அங்கே வந்தாள் ஸ்வேதா…

சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவள்… பாலுவின் பைக்கை கண்டு… “நல்லவேளை” என்று முணுமுணுத்தவாறே அதன் அருகில் வந்து நின்றுகொண்டு… தன் கைப்பேசியில்… “பாலு அண்ணா… நான், காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்… போகும்போது என்னை வீட்டுல டிராப் பண்ணுவீங்களாம்”.. என்க…

அதற்கு அவன் என்ன சொன்னானோ… “ஓவரா சீன் போடாதீங்க… உங்க பைக் பக்கத்துலதான் நிக்கறேன்.. உங்க பிரண்ட ஒரே ஒரு நாள் நடந்து போக சொல்லுங்க… ஹாஸ்டல் இங்கேந்து அரை கிலோமீட்டர்தான இருக்கும்.. ப்ளீஸ்” என்று கூறியவள்… அவன் ஏதோ கூற, குறும்பு கொப்பளிக்கும் குரலில் “ம்க்கும் ரொம்ப தேங்ஸ்” என்று அழைப்பைத் துண்டித்தாள் அவள்…

“ஓ இவள்தான்… ‘என் ப்ரண்ட் நத்தாவின் தங்கை இங்கேதான் CS… செகண்ட் இயர் படிக்கறா…  +2 மாத்ஸ்…ல செண்டம்… சூப்பரா பாடுவாள்!’ என்றெல்லாம் நம்ம காதே ஓட்டையாகும் போல பாலு… புகழ்ந்து பாடிக்கொண்டிரும் ஸ்வேதாவா?” என தனக்குத்தானே கேட்டுக்கொண்ட ஹரி… கண்களை எடுக்கமுடியாமல்… அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த சில நிமிடங்களிலேயே, அவளின் எழிலில், அவளுடைய பாவத்தில் தன்னை மொத்தமாகத் தொலைத்திருந்தான் ஹரி… அவனையும் அறியாமல் மெலிதாக பாடத்தொடங்கியிருந்தான்

 

“முன் அந்திச் சாரல் நீ

முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும் பாடல் நீ

பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ

விடிந்தாலும் தூக்கத்தில்

விழி ஓரத்தில்

வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

வந்தால் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே..”

ஆனால் அங்கே இப்படி ஒருவன் தனக்காக உருகிக் கொண்டிருப்பதைக்கூட கவனிக்காமல், அந்த பைக்கிலேயே சாய்ந்து நின்றவாறு… பாலுவிற்காக காத்திருந்தாள்.. ஸ்வேதா!!!!

அதே நேரம் ஹரியை அழைத்திருந்தான் பாலு… “சாரி ஹரி…” என அவன் ஆரம்பித்த உடனேயே…

“என்ன உன்னோட பாசமலரை வீட்டுல ட்ராப் செய்யப்போற… அதுதானே” என்று கேட்க…

“எப்படிடா தெரியும்” என்ற பாலுவிடம், உன் ப்ரண்டுடைய தங்கைதானே அவங்க…? போன்ல எல்லாம் பேசியிருக்க வேண்டாம்டா… அப்படியே பேசியிருந்தாலே உனக்குக் கேட்டிருக்கும்” என்ற ஹரி…

“நான் ஹாஸ்டலுக்கு நடந்தே போய்க்கொள்கிறேன்… நீ கிளம்பு என்றவாறு” போனைக் கட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அன்றிலிருந்து தினமும் ஸ்வேதா கல்லூரிக்கு வரும் பொழுதும், திரும்பச் செல்லும் பொழுதும்… தூரத்திலிருந்து அவளை சைட் அடிப்பதை வழக்கமாக்கியிருந்தான் ஹரி…

அவன் படித்தது மொத்தமுமே கோஎட் தான்… நிறைய தோழிகளும் உண்டு அவனுக்கு… ஆனாலும் இவளைப் போல வேறு யாரும் அவனைப் பாதித்ததில்லை… அது ஏனென்றும் அவனுக்கு தெரியவில்லை…

****************************

அன்று பாலுவிடம் சரியான கோவத்தில் இருந்தான் ஹரி…

“வைரம் தொலைக்காட்சி நடத்துகிற சூப்பர் சிங்கர் ப்ரோக்ராமோட செலெக்ஷன், நேரு ஸ்டேடியத்துல நடக்கிறது. வரியா.. ஜஸ்ட் ஒரு ட்ரை” என அவன் பாலுவை அழைக்க…

அவனோ… “என்னால அங்க வந்து… நாலு ஐந்து மணிநேரமெல்லாம் வெட்டியா உட்கார்ந்திருக்க முடியாது! போன தடவ தெரியாத்தனமாக அந்த ஸ்வேதா குரங்குடன்?? நான் போய் மாட்டிக்கொண்டது எனக்குதானே தெரியும்…” என்றதுடன் நில்லாமல்… அவனை நன்றாக கிண்டலடித்துவிட்டு வேறு சென்றுவிட்டான் பாலு…

பாலு அவனை கிண்டல் செய்ததோடல்லாமல் அவனுடைய “மனதிற்கு  இனியவளை” குரங்கு என்று வேறு சொல்லி விட்டதால் நொந்தே போன ஹரி…

“மறுபடியும் பிராஜக்ட், அது இதுன்னு நம்மகிட்ட வராமலே போயிடுவானா??? அப்ப இருக்கு அவனுக்கு” என மனதிற்குள்ளேயே அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த நேரம்… பாலுவே அவனை கைப்பேசியில் அழைத்து ஸ்வேதாவை அந்த குரல் தேர்வுக்கு ஹரியையே…  உடன் அழைத்து போகச் சொல்லவும்… அவன் பாலுவிடம் கொண்ட கோபமெல்லாம் போன இடம் தெரியாமல் போனது… 

**********************************

அடர் நீல ஜீன்ஸ், வெள்ளையில் நீலநிற பூவேலை செய்யப்பட்ட குர்தி அணிந்து… தலைமுடியை கிளிப் போட்டு அடக்கி, ஐ லைனரினால் நெற்றியில் மெல்லிய கிறுக்கலாக வரைந்து எழிலுற இருந்தவளைப் பார்த்தவாறே, மகிழ்ச்சியில் சிறகின்றி பறந்துதான் வந்தானோ! நடந்துதான் வந்தானோ!!

சரக்கோன்றை மரத்தடியில், அவர்கள் உர்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் ஹரி…

பாலு அவனைப் பெண்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, மிகவும் முயன்று முகத்தில் உணர்களை வெளிக்காட்டாமல், சகஜமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ஸ்வேதவுடன், நேரு ஸ்டேடியம் நோக்கி கிளம்பிச் சென்றான் ஹரி.

அன்றைய நாள்… அவனது வாழ்க்கையில் ஒரு பொன்னான நாளாகிப்போனது… ஹாஸ்டல் திரும்பிய பின்னர்கூட அன்றைய தினத்தில் நடந்ததையே நினைத்திருந்தான்.

என்னதான் பாலு சொன்னான் என்றாலும் அன்றுதான் முதல்முதலாக பார்த்த தன்னுடன், தன்னை நம்பி வந்திருக்கிறாள் என்பதே அவனை ஆனந்த மழையில் நனைத்தது…

அதுவும், அவன் ஹாஸ்டல் போய் சேர நேரமாகும் என்று அவளுடைய உணவை அவனுக்குக் கொடுத்து மேலும் அவனை மகிழ வைத்தாள்…

அவளுக்குப் பிடித்த பாடலை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவலில்தான் கேட்டான் அவள் என்ன பாடல் பாடப்போகிறாளென்று… அவள் சொன்னாள் “நின்னை சரணடைந்தேன்” என்று… அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்… BE படிக்கும்போது ஒருமுறை இன்டர்காலேஜ் மீட் டில் அந்த பாடலைப் பாடி முதல் பரிசும் வாங்கியிருந்தான்…

அவள் நீங்க… என்று கேட்கவும் கொஞ்சமும் யோசிக்காமல்… “முன் அந்தி சாரல் நீ” என்றான்…

“வாவ் எனக்கும் அந்த பாட்டு மிகவும் பிடிக்கும்” என்றவள்.. ” உங்களுக்கு ஏன் அந்தப் பாட்டு பிடிக்கும்” என்று கேட்க…

” ஏன் என்றெல்லாம் தெரியாது… ஆனால் பிடிக்கும்”.. என்ற ஹரி.. “உன்னால்தானடி பெண்ணே… உன்னை முதல் முதலில் பார்த்தபோது என்னை அறியாமல் இந்தப் பாடலைத்தான் பாடத்தோன்றியது… அதனால்தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இதைச் சொன்னால் இவள் நம்மை ஒரு ப்ரண்டாகக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டாளே” என்று மனதினில் நினைத்துக்கொண்டான்..

ஹரி “உனக்கு ஏன் இந்தப் பாட்டு பிடிக்கும்” எனக் கேட்க…

“ஏன்தான் கேட்டோமோ?” என அவனை அதிர வைத்தாள் ஸ்வேதா…

“ஹாரிஸ் ஜெயராஜின் மியுசிக் செமையா இருக்கும் ல” – ஸ்வேதா

“ம்” – ஹரி

“கார்த்திக் – மேகா வாய்ஸ் சூப்பரா இருக்கும் ல” – ஸ்வேதா

“ம் ம்”- ஹரி… மைன்ட் வாய்சில் “ஒரு பாட்டு ஏன் பிடிக்கும்ணு கேட்டதுக்கு… இவ்…ளோ டீடைல்ஸா… “

“நா.முத்துக்குமார் லிரிக்ஸ்… சான்ஸே இல்லை” – ஸ்வேதா…

“எக்ஸாட்லி…” – ஹரி

“பிக்சரைசேஷன்… அல்டிமேட்டாக இருக்கும் ல”

“சூர்யா… சிக்ஸ் பேக்ஸ்லாம் வச்சு… செமையா இருப்பார் ல” – ஸ்வேதா

ஹரி “அடிப்பாவி” … என்றுவிட…

அவள் முகத்தைச் சுருக்கி… “அடிப்பாவி யா?? ” என்க…

“பின்னே..” என்றவன்… “ஆமாம்… நீ எப்பவுமே இப்படித்தானா? எக்ஸாம்ல ஐந்து மார்க் க்வஸ்டின்கு ஐம்பது மார்க்குக்கு எழுதுவயா என்ன? ” என்று கேட்க…

“எழுதலாம்தான்… ஆனா மொத்த க்வஸ்டின் பேப்பரையும் முடிக்க டைம் இருக்காதே” என்று அவள் சொன்ன பாவனையில் சிரித்தேவிட்டான் ஹரி…

அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு… “குட்டியா… அழகா… ஒரு போட்டு வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்… இப்படி பாம்பு… தேளெல்லாம்… நெற்றியில் வரைந்து வைத்திருக்கிறாளே… இந்த அழகான கூர் நாசியில்… சின்னதாய்… வெள்ளைக்கல் மூக்குத்தி ஒன்று போட்டிருந்தால்… இன்னும் அழகாக இருக்குமே?” என எண்ணாமல் அவனால் இருக்கமுடியவில்லை…

அதை… தனது ரசனையை வெளிப்படையாகக் காண்பிக்காமல்… நாசூக்காக… அவளிடம் கேட்கவும் செய்தான் ஹரி…

“ப்சு… எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு…” என்ற ஸ்வேதா… “அதுவும்… மூக்கு குத்திக்கொள்வதா? ஐயோ… என்னால… வலி தங்க முடியாது… சான்சே இல்லை?” என அவள் நொடிந்து கொள்ள…

“தாயே சுசும்மாதான் சொன்னேன்… ஆளை விடு!” என்றான் ஹரி…

மாரியம்மா என வர்ஷினியை அழைப்பதற்கு அவள் சொன்ன விளக்கத்தை  நினைத்து அன்றைக்கெல்லாம் சிரித்துக்கொண்டே இருக்க… அது அவனது ரூம்மெட் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்கும்வரை தொடர்ந்தது…

பிறகு ஒரு வழியாக, வடிவேலு காமடி ஒன்றைச் சொல்லி சமாளிக்க வேண்டியதாய் போனது அவனுக்கு.

அதை நினைத்து கொண்டிருந்தவாறே… விமானத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு… இப்பொழுதும் மென் புன்னகை அரும்பியது… அவனது முகத்தில்…

விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பில் நிகழ்காலத்திற்கு வந்தவன்…

“இவளைப் பார்ப்பதற்காகவே எல்லா வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு வருகிறோம்!  நாளை நேரில் பார்க்கும் பொழுது எப்படி ரியாக்ட் செய்வாளோ… அந்த அழகான ராட்சசி?!!” என்று எண்ணியவாறே சென்னை… பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கினான் ஹரி..

error: Content is protected !!