NSOV – FINAL
NSOV – FINAL
ஹரியை… நெருங்கி உட்கார்ந்த ஸ்வேதா… அவனது தோளில்… தலை சாய்த்தவாறு… ஆதரவாகத் தனது கை விரல்களை… அவனது விரல்களுடன் கோர்த்துக்கொண்டு…
“பழசையெல்லாம்… மறந்திடுவோம் ஹரி!!! இப்படி இறுகிப்போயிருக்கும் உங்களோட முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவே… வேதனையாக இருக்கு…”
“அன்று நம்ம ரெண்டுபேருக்குமே… சூழ்நிலையை சரியாகக் கையாளும் அளவிற்கு… முதிர்ச்சியும் பக்குவமும் இல்லை என்பதுதான் உண்மை…”
“திருமணம் ஆன பிறகும்கூட… ஒருவருக்கு ஒருவர் சரியான புரிதல் இல்லாமல்… சகிப்புத்தன்மை இல்லாமல்… பொறுமை இல்லாமல்… விவகாரத்திற்காக நீதிமன்றத்தை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கும் மக்களை… பார்த்துக்கொண்டுதானே இருக்கோம்…”
“அன்று இருந்த நிலையில்… நாம் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும்… பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்… ஆனால்… இப்பொழுது… நாம் திருமணம் செய்துகொண்டால்… வாழ்க்கை… நிச்சயம் தெளிவானதாகத்தான் இருக்கும்…”
“அதனால முதலில் எங்க அப்பாவிடம் வந்து பேசுங்க…” என்று முடித்தாள் ஸ்வேதா
அப்படியுமே அவன் முகம் தெளிவடையாமல் இருக்கவும்…
“ப்சு… நீங்க இப்படியே இருந்தால்… நான் அமெரிக்கா போனவுடன்… அங்கேயே… வேலையில் ஜாயின் பண்ணிடுவேன்… பிறகு… இன்னும்… மூணு வருஷத்துக்கு…என்னால் இங்கே வரமுடியாது! பரவாயில்லையா?” என மிரட்டுவது போல் ஸ்வேதா கேட்கவும்…
கோவத்தில் அவனது முகம்… ஜிவு ஜிவு எனச் சிவந்து போனது…
“போவடி… போவ… என்ன திமிரா… இவ்வளவு நாள் உன்னை, உன் போக்கிலேயே விட்டு வெச்சதால… என்னை… கேனையன்னு நினைச்சியா? நானும் பாக்கறேன்… நீ எப்படி யூ.எஸ் போறேன்னு!” கோபத்தின் உச்சியில் ருத்ரமூர்த்தியாக கர்ஜித்தவனை…
“என்ன… இப்படிலாம் மிரட்டினா… நான் போக மாட்டேன்னு நினைச்சீங்களா… யாராலயும் என்னைத் தடுக்க முடியாது!” சவால் விடுவதுபோல் அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே… அவளுக்குச் சிரிப்பு வந்துவிட…
அவள் கிண்டல் செய்கிறாள் என்பது புரியவும்…
“என்ன? என்னால தடுக்க முடியாதா… நான் நினச்சா உன்னை என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா?” கோபத்துடனே வந்தது அவனது வார்த்தைகள்…
“ஐயோ! இவனை ரொம்பவே… டென்ஷன் பண்ணிட்டோமோ!!” என்று எண்ணிய ஸ்வேதா பயத்துடனே அவனது முகத்தைப் பார்க்க…
அடக்கப்பட்ட புன்னகையில்… அவனது உதடுகள் துடித்துக்கொண்டிருக்க… கோபத்திற்குப் பதில் அவனது முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது…
உஃப்! என்ற பெருமூச்சு எழ… “அப்படினா… இதுபோல சிரித்த முகமாகவே இருக்கணும்… மிஸ்டர் ஹரி கிருஷ்ணன்!!!” என்று ஸ்வேதா… கெத்தாக சொல்லவும்…
“நீங்க என் கூட இருந்தால்… நான் இப்படியே இருப்பேன் ஸ்வீட்டா மேடம்!!!” என்றான் ஹரி…
அதற்குள் முகம் வாடியவள்… “ப்சு… ஆனாலும், நான் இன்னும் இரண்டு நாளில்… யூ எஸ் பொய்தானே ஆகணும்!” என்று வருத்தத்துடன் ஸ்வேதா சொல்லவும்…
“ஆறு மாதங்கள்தானே… கண் மூடித் திறப்பதற்குள் ஓடிப்போயிடும்… நோ ஒரீஸ்!” என்றான் ஹரி…
எதோ நினைவு வந்தவளாக… நேரத்தைப் பார்க்கவென… ஹரியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, அவனது கைப்பேசியை உரிமையுடன் அவள் எடுக்க… அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது…
அதைத் திறந்து பார்க்கவும்… ஒரு நொடி, இன்பமாய் அதிர்ந்தாள் ஸ்வேதா… அதில் முகப்புப் படமாக… அவள்தான் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள்…
அவள்… அந்தப் படத்தை ஆராய… அது டெக்ஸாஸில் உள்ள வர்ஷினியின் வீட்டில் எடுக்கப்பட்டதெனத் தெரியவும்…
“அடப்பாவிகளா! அத்தனைப்பேரும்… சரியான கூட்டுக் களவாணிங்க! இருக்கு அந்த மரியம்மாவுக்கு!” என ஸ்வேதா எகிற…
அடக்கமுடியாமல் வாய் விட்டுச் சிரித்த ஹரி… இதுக்கே இப்படின்னா… மொத்தமும் பார்த்தால் அவளை நீ என்ன செய்வ?!!” என்றவன்… அவளது கையைப் பிடித்து இழுத்தவாறு… வீட்டிற்குள் அழைத்துச்சென்று… முதல் தளத்திற்குள் நுழைய…
அங்கே இருந்த ஹால் முழுவதிலும்… சிறியதும் பெரியதும்… புகைப்படமாக… வேறு வேறு கோணங்களில்… ஸ்வேதா! ஸ்வேதா! ஸ்வேதாதான்!!! மொத்தமுமே கேண்டிட் போட்டோக்கள்…
அனைத்தும் வர்ஷினியின் கைவண்ணம் என்பது நன்றாகவே புரிந்தது… அவளுக்கு…
நெகிழ்ச்சியில் கண்களில்… நீர் கோர்த்தது… அவளுக்கு…
அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அவளை அமரச்சொன்னவன்… தானும் எதிரில், இருந்த இருக்கையில்… அவளைப்… பார்ப்பதுபோல் அமர்ந்துகொண்டு…
மென்மையுடன்… சுவீட்… என்று அவளை அழைத்தவன்… “லன்ச்… சொல்லட்டுமா… மணி இரண்டு ஆகிவிட்டது!” என்றான் ஹரி…
“என்ன… ரெண்டு மணியா!” எனப் பதறியவள்… “ஐயோ… உடனே வீட்டுக்குக் கிளம்பனும்… ஹரி!” என்க…
“லன்ச் சாப்பிட்டுக் கிளம்பலாம்” என்றான் ஹரி…
“இல்ல… பிரேக் பாஸ்டையே… லேட்டாத்தானே… சாப்பிட்டோம்… எனக்கு பசிக்கல” என்றவள்… உங்களுக்குப் பசித்தால் சாப்பிடலாம்” என்று அவனுக்காகச் சொல்ல…
“இல்ல! எனக்கும் பசிக்கல!” என்றவன்… தனது கைப்பேசியில்… அங்கே வேலை செய்பவரை அழைத்து… காபி எடுத்துவரச் சொன்னான்…
அவரும் சில நிமிடங்களில்… காபி அடங்கிய ட்ரேவை அங்கே கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றுவிட… கோப்பைகளில்… அதை ஊற்றி அவளிடம்… ஒன்றை நீட்டியவன்… தானும் ஒன்றை எடுத்துக்கொண்டவரே..
“ஆமாம்! உனக்குத்தான் காபியே பிடிக்காதே… நீ எப்படி… அதுவும்… இவளவு… ஸ்ட்ராங்கா… கசப்பா… என்னோட ப்ளெண்ட்ல சாப்பிடுற…” என்று அதற்கான விடையைத் தெரிந்துகொண்டே… அவள் வார்த்தையாகக் கேட்கும் ஆவலுடன்… கேட்டான் ஹரி…
அவனது கேள்வியில்… “அது!! அது வந்து!!” எனத் தடுமாறியவள்… நாணத்துடன்… “உங்களுக்குப் பிடித்த மாதிரி… ட்ரை பண்ணிப் பார்த்தேன்… எனக்கும் பிடித்துவிட்டது” என்றாள் ஸ்வேதா…
மேலும் விடாமல்… “எப்படி?” என்றவன் அவளது முகத்தைச் சுட்டிக்காட்டியவாறே… “இந்த மூக்குத்தி… இந்த பூரான்… தேள் எல்லாம் மாறி… இப்படி அழகான இந்த குட்டியானப் போட்டு! இப்படியெல்லாமா?” என்று கேட்க…
“போங்க ஹரி! இப்பவே நேரம் ஆகிவிட்டது… கிளம்பனும்!” என்று அவள் கீழே செல்ல எத்தனிக்க… அவளைப் போகவிடாமல் தடுத்து… “காபியைச் சாப்பிடு!” என்றான் ஹரி… அப்பொழுதுதான் கவனித்தாள் அவள்.. அந்தக் காபி கோப்பையிலும்… அவளது படத்தை பதிந்து வைத்திருந்தான்…
“ஓ மை காட்! ஹரி…” இதையும் விடலியா நீங்க… ” என்று அவள் கேட்க… அவளது கையில் இருந்த கோப்பையைச் சுட்டிக் காண்பித்தவன்… “இதுல இருப்பது யாராம்?” என்று கேட்க…
அதைத் திருப்பிப் பார்த்தவளின் முகம்… செக்கச்சிவந்து போனது… அதில் அவனது படத்தைக் கண்டு…
அவசரமாக அதில் இருந்த காபியை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டவள்…”நான் கீழே போறேன்… என்னோட மொபைலை பார்க்கணும்… எத்தனை மிஸ்ட் கால்ஸ் இருக்கோ?” என்று திரும்பியவளை… அவனது குரல் தடுத்தது…
“ம்ஹும்! இன்னும் நீ செய்ய வேண்டியது ஒண்ணு… பாலன்ஸ் இருக்கு… நீ அதைச் செய்தால் மட்டுமே… நான் உன்னை வீட்டில் விடுவேன்!!” என்று அவன் கறார் குரலில் சொல்ல… அவனது முகத்தில் குரும்பு கூத்தாடிக்கொண்டிருந்தது…
“ஐயோ! என்ன சொல்வானோ!” என்ற பயத்தில் அவளது இதயம் இடம்மாறித் துடிக்க…
“என்ன! என்ன செய்யணும்?” என்று ஸ்வேதாவின் வார்த்தைகள் தந்தி அடிக்க…
“ஒண்ணும் பெருசா இல்ல! எனக்காக.. நீ ஒரே ஒரு!” என்று அவன் நிறுத்த…
“என்ன! ஒரே ஒரு!” திக்கித்திணறி அவள் கேட்க… அதைக்கண்டு சிரித்தவன்…
“எனக்காக… ஒரே ஒரு பட்டுப் பாடுன்னு கேட்க வந்தேன்… நீ என்ன நினைச்ச?” என்று அவன்… அவளை…மடக்க…
“உஃப்!” என்றவள் “நான் ஒண்ணும் நினைக்கல… ஆனால் என்னால இப்பொழுது பாட்டெல்லாம் பாட முடியாது…” என்றாள் ஸ்வேதா…
உண்மையில் அவள் இருக்கும் நெகிழ்ச்சியான மன நிலையில்… அதுவும் அவன் செய்த சேட்டையில்… அவளது ரத்த அழுத்தம்…ஏகத்திற்கும் எகிறி இருக்க… அவளால் பேசவே முடியவில்லை… இதில் எங்கிருந்து பாடுவது? அதனால்தான் அவள் அப்படிச் சொன்னது…
ஆனால் ஹரியோ விடாப்பிடியாக… “நான் பாடி… நீ கேட்டிருக்கத்தானே? ஆனால் நீ பாடி ஒரு முறைக்கூட… நான் கேட்டதில்லை… எனக்காக குட்டியா… ஒரே ஒரு பாட்டு… பாடு… போதும்… நாம இங்கிருந்து கிளம்பலாம்” என்றான் ஹரி….
அவனது வார்த்தையில் இருந்த ஆவல்… அவனது கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பு யாவும்… அவளது மனதைக் கரைக்க…
இருக்கையிலிருந்து, எழுந்து சென்றவள்… அங்கே மாட்டப்பட்டிருந்த… அவளது புகைப்படத்தின் அருகில் சென்று… சுவரில் சாய்ந்தவாறு…
“நான் பாடியே… பல வருஷங்கள் ஆச்சு ஹரி! அதனால எப்படி இருக்குமோ… உண்மையிலேயே நீங்கப் பாவம்தான்” என்ற ஸ்வேதா ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துத் தன்னைச் சமன் படுத்திகொண்டு… அவளது மன நிலையைப் பிரதிபலிக்கும்… வரணமாயிரம் பாடல்களை… பாடத் தொடங்கினாள்…
அவனது கைப்பேசி… அழகாய்… அதனைப் பதிவு செய்யத் தொடங்கியது…
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
இத்தனை அழகாய்… தன் மனதின் காதலை… எதிர்பார்ப்பை..ஒரு பெண்ணால்… எடுத்துரைக்க முடியுமா… என்று மலைக்கும் வண்ணம்… அமைந்திருந்த அந்தப் பாடல் வரிகளை… அவள் பாடி முடிக்கவும்… அவள் மனம்… அவனுக்குப் புரிய… ஐஸ்க்ரீம் கலந்த… சில்லென அவனை வருடிச்சென்ற… அவளது குரலில் இதயம் குளிர்ந்திருந்தான்… ஹரி…
அவள் பாடி முடித்து… சில நிமிடங்கள் கடந்த பிறகும்… மௌனமே அங்கு ஆட்சி செய்ய… இருவருமே உறைந்துபோய் அந்தத் தருணத்தை… மனதின் ஆழத்தில்… பதிவேற்றம் செய்திருந்தனர்…
சில நிமிடங்களில்… அவனது கைப்பேசி இசைக்கவும்… தன் நினைவிற்கு வந்த… ஹரி… அழைப்பைத் துடித்துவிட்டு… அவளை நெருங்கி வந்தவாறு… தனது வசீகரிக்கும் குரலில் படத்தொடங்கினான்… அவளதப பாடலுக்கு பதில் அளிக்கும் விதமாக…
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ!
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்!
காத்திருப்பேனோடீ இது பார்”!
என்று அந்தப் பாடல் முற்றுப்பெறாமல்… அவன் நிறுத்தவும்…
அதுவரை… அவனது குரலில்… லயித்திருந்தவள்… பாடல் வரிகளின் அர்த்தம் உணரவும்… அவனை அப்படியே… தள்ளிவிட்டு…
“இதெல்லாம் சரிவராது… நான் கால் டாக்ஸி புக் பண்ணி… போய்க்கறேன்… நீ ஒண்ணும் என்னை அழைத்துப் போக வேண்டாம் போடா!” என்றவாறு… ஸ்வேதா… கீழே இறங்கி ஓடவும்… அவளைப் பின் தொடர்ந்து வந்தவன்…
“ஏய்! சும்மா கலாட்டா பண்ணேன்பா! அதுக்காக… நீ டா போட்டுப் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!” என்றவன்…
நெகிழிச்சியுடன் “அருமையாய் பாடின ஸ்வேதா… ரொம்ப தேங்க்ஸ்டி!” என்று… முடித்தான் ஹரி…
அதில் முகம் மலர்ந்தவள்… “உண்மையாகவே… ரொ….ம்ப நேரம் ஆகிவிட்டது ஹரி… இனிமேல்… லேட் செய்ய முடியாது ப்ளீஸ்!” எனக் கெஞ்சும் குரலில் சொல்லவும்…
“சரி… நீ உன் பேக்கை எடுத்துக்கொண்டு ரெடியா இரு… இதோ வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான் ஹரி…
அவசரமாக… ஸ்வேதா… அவளது கைப்பேசியை எடுத்துப் பார்க்க… அவள் நினைத்தது போல்… நத்தாவிடமிருந்தும்… தரணியிடமிருந்தும்… ஏகப்பட்ட மிஸ்ட் கால்களைத் தாங்கியிருந்தது… அது…
“சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என்று இருவருக்கும்… குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு… ஹரிக்காகக் காத்திருந்தாள் ஸ்வேதா…
சில நிமிடங்களில்… வேறு உடைக்கு மாறி… மிகவும் கம்பீரமாக வந்தவனை… கண் இமைக்காமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க… “என்ன?” என்பதுபோல்… புருவங்களை ஏற்றி இறக்கி அவன் கேட்கவும்…
“ஒன்றுமில்லை!” என்பதுபோல் தலையாட்டியவளிடம்… “கிளம்பலாமா?” என்க…
அதற்கும் “சரி!” என்று அவள் தலையாட்டவும்…
“பூம் பூம் மாடுதானே… ம்” எனேறு சிரித்தேவிட்டான் ஹரி…
அதற்கு ஒரு முறைப்பை மட்டும் பதிலாக வீசிவிட்டு… அவனைக் கடந்து போனாள் ஸ்வேதா…
***************************
காரை அவன்… ஸ்டார்ட் செய்யவும்… MP3… மறுபடியும் படத்தொடங்கியது அதே பாடலை…
மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !
……….
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !
பாடல் வரிகளின் பாரம் தாங்காமல்… ஸ்வேதா அதை நிறுத்திவிட…
“ஏன் ஸ்வேதா… பாட்டை நிறுத்திட்ட?” என்று ஹரி கேட்க…
“ஒண்ணும் இல்ல ஹரி! அந்த பாட்டை கேட்கும்போது… மறுபடியும்… பழசெல்லாம் நினைவில் வருது… இன்றைக்கு… ஒரு முறை பழசையெல்லாம் நினைத்ததே போதும்… அதனால்தான்” என்றாள் ஸ்வேதா…
அவனுக்குமே அவள் சொல்வது சரியென்று தோன்றவும்… “நாம… பழசையெல்லாம் இனிமேல் எப்பவுமே பேச வேண்டாம் ஸ்வேதா!” என்றான் அவன்…
சில நிமிடங்களில்… அவளது குடியிருப்பின் வாயிலில் வண்டியை நிறுத்த… அவள் இறங்கியதும்… ஏதும் சொல்லாமல்… கிளம்பிச் சென்றுவிட்டான்… ஹரி…
அப்படி அவன் சென்றதன் காரணம் புரியாமல்… வெகுவாகக் குழம்பித்தான் போனாள் ஸ்வேதா…
குழப்பமும், தயக்கமுமாக வீட்டிற்குள் நுழைய எத்தனித்தவளை… வெளியிலிருந்தே பிடித்துக்கொண்டாள் தரணி… “உன்னைப் பெண் பார்க்க… அந்த TL பையன் … குடும்பத்திலிருந்து… வந்திருக்காங்க… நீ சீக்கிரம் போய் தயாராகு…” என அவள் கட்டளையாகச் சொல்லவும்… ஆடித்தான் போனாள் ஸ்வேதா…
உள்ளே அவர்கள் எல்லோரும்… அமர்ந்திருப்பது தெரியவும்… அவளால் எதையுமே, பேசவும் முடியவில்லை…
சத்தம் செய்யாமல்… பூனை நடையுடன்… அவளை, முதல் தளத்தில் இருந்த… அவளது அறைக்கு அழைத்து வந்த தரணி… “சீக்கிரமாக… நல்ல புடவையாக… கட்டிக்கொண்டு தயாராக இரு… இதோ வந்துடுறேன்…” என்றுவிட்டுச் செல்ல எத்தனிக்க… அவளைத் தடுத்த ஸ்வேதா…
“அண்ணி! நான் அவ்வளவு சொன்ன பிறகும்… நீங்க எல்லாரும்… ஏன் இப்படி செய்யறீங்க?” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்கவும்…
“என்னனு தெரியல ஸ்வேதா… உன் அண்ணாதான்… திடீரென்று… இந்த ஏற்பாடுகளைச் செய்துட்டார்… நீ எது கேட்பதனாலும்… எல்லாரும் போன பிறகு… அவரிடமே கேட்டுக்கோ!! பெண் பார்க்கத்தானே வந்திருக்காங்க… மாப்பிளை கூட இன்னும் வரல… உனக்கு பிடிக்கலைன்னா உன்னை யாரும் கட்டாயப் படுத்தப் போறதில்ல… அதனால… நோ ஒற்றீஸ்” என்று சொல்லிவிட்டு போனாள் தரணி…
“வெளியில் சென்று அனைத்தையும் சொல்லிவிடலாம்!” என்று எண்ணியவாறு… ஒரு முடிவுக்கு வந்தவளாக… அவளது பிறந்தநாளன்று… ஹரி அவளுக்குப் பரிசளித்த புடவையை எடுத்து… உடுத்திக்கொண்டாள் ஸ்வேதா…
கதவைத் தட்டிவிட்டு… அவளுடைய அம்மா லதாவுடன்… உள்ளே நுழைந்த தரணி… அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல்… சில நகைகளை அணிவித்து… எளிமையான ஒப்பனைகளையும் செய்துவிட்டு… மல்லிகை சரத்தையும் கூந்தலில் சூட்டினாள்…
பிறகு அவளைக் கீழே வருமாறு அழைக்கவும்… சில நிமிடங்களில் தானே வருவதாகச் சொல்லி… அவர்கள் இருவரையும் அனுப்பிட்டு… கைப்பேசியை எடுத்து ஹரிக்கு அழைக்க… அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை… அதில் கொஞ்சம் பதட்டமானவள்… வாட்ஸ் ஆப்பில்… குறுந்தகவல் அனுப்பவும்… அதையும் அவன் பார்க்கவில்லை…
வேறு வழியில்லாமல்… அவள் கீழே இறங்கி வரவும்… மாடிப் படியின் அருகிலேயே நின்றிருந்த தரணி… அவளை அழைத்துச்சென்று… வெங்கட் மற்றும் நந்தாவுடன் பேசிக்கொண்டிருந்த… அந்தப் புதியவர்களிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தாள்…
“இவங்கதான் மாப்பிள்ளையின் அப்பா…”
“மாப்பிள்ளையின் அம்மா”
“அவரது அக்கா… மாமா…” என அனைவரையும் இவளுக்கு அறிமுகப்படுத்த…
மரியாதையை நிமித்தம் இரு கரம் குவித்து… தலை அசைத்தாளேத் தவிர… மாப்பிளை என்ற வார்த்தை… அவளுக்கு அத்தனைக் கசப்பாக இருந்தது…
ஆனால்… அனைவருமே ஸ்வேதாவை பார்த்த பார்வையில்… அதீத அன்பும்… நட்புணர்வும் கலந்திருந்தது அவளுக்குப் புரிந்தது…
அவர்களது பார்வையே… அவர்களுக்கு இவளைப் பிடித்திருப்பதை சொல்லாமல் சொல்ல… அதுவேறு இவளைக் கொள்ளாமல் கொன்றது…
செய்வதறியாமல் இவள் தவித்துப்போய் நின்றிருக்க… காலை முதல்… அவள் உணர்ந்த… ஹரி உபயோகிக்கும்… வாசனைத் திரவியத்தின் மணம்… அவளது நாசியைத் தீண்ட… “ஹரி!” என்று மெல்லிய குரலில் சொல்லியவாறு… அவசரமாகத் திருப்பினாள் ஸ்வேதா…
கைகளில்… சிவப்பு நிற ரோஜாக்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய பூங்கொத்து ஒன்றை ஏந்தியவாறு அவர்களை… நோக்கி வந்து கொண்டிருந்தான் ஹரி…
மூச்சு விட மறந்து… அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா…
அவனைக் கண்ட அந்த நொடி… அவளது மனதில் இருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி… தெளிவடைந்ததது…
அதற்குள்… ஹரி! என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்ட… மணமகனின் அன்னை… “இவன்தான் எங்கள் மகன்… ஹரி கிருஷ்ணா!!!” என்று அனைவருக்கும் அவனை அறிமுகப் படுத்தினார்… நந்தா “ஹாப்பி டு மீட் யூ” என்றவாறு, அவனுடன் கை குலுக்க…
வெங்கட்டும்… கை குலுக்கி பின்பு அவனை அணைத்துக்கொண்டார்…
அந்த மலர் கொத்தை… தன் அக்கா… கபிலாவிடம் கொடுத்து… அதை ஸ்வேதாவிற்கு… கொடுக்கச் சொல்லவும்…
இளையவர்கள்… “ஓஹோ!” என்று குரல் எழுப்பவும்…
அந்த இடமே மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது…
ஆச்சரியத்தில்… விழி விரித்து… கண்களே தெரித்துவிடும்போல் அவர்களைப் பார்த்த ஸ்வேதாவை நோக்கி… யாரும் அறியாதவாறு… கண்களைச் சிமிட்டி… எப்பொழுதும்போல் புருவத்தைத் தூக்கி… என்ன! என்று… ஹரி பார்க்க…
சிறிது நேரத்திற்குள்… அவளைப் படுத்தி எடுத்த கோபத்தில்… கண்களில் கணலைத் தேக்கி… நோக்கு வர்மத்தில் அவனைத் தாக்கியவள்…
பிறகு அனைவரிடமும் இயல்பாக பேசத் தொடங்கினாள் ஸ்வேதா…
“இவர்தான்… நம்ம பெண்ணை… விபத்து நடந்த சமயம்… அடையாளம் கண்டு… ஹாஸ்பிடலில் சேர்த்தவர்!” என்று ரகசியமாக வெங்கட்டிடம் சொன்னார் லதா…
அதைக் கேள்விப்பட்டதும்… மேலும் மகிழ்ச்சிதான் ஏற்பட்டது வெங்கட்டிற்கு…
பிறகு… ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணனுடன் கலந்து பேசிய, வெங்கட்… மறுநாள் எளிமையாகத் திருமணத்தை நிச்சயம் செய்துகொள்ளலாம் என்றும்…
ஸ்வேதாவின் படிப்பு முடிந்து… அவள் வந்தவுடன்… ஆறுமாத்திற்குப் பிறகு… திருமணத்தை நடத்தலாம் என்றும் தெரிவிக்க… அனைவருமே அதை ஏற்றுக்கொண்டனர்…
அப்பொழுது தரணியிடம்… “என்னுடைய சம்மதத்தை… யாருமே கேட்கவே இல்லையே!!!” என்று ஸ்வேதா அலுத்துக்கொள்ள…
“அப்படினா… உனக்கு விருப்பமில்லைனு… அப்பாவிடம் சொல்லிடவா” என்று தரணி அவளை மடக்க…
அசடு வழிந்த ஸ்வேதா… “அண்ணீஈஈஈஈ!” என்க…
“என்ன… தரணி! என்ன சொல்றா என் மருமக?” என விஜயா… உரிமையுடன் கேட்க…
“இல்லைம்மா… உங்க மகனுடன் அவள் கொஞ்சம் பேசணுமாம்!” என்று அவளை வகையாக மாட்டிவிட்டாள் தரணி…
“அவ்வளவுதானே! தா…ராளமாக பேசட்டுமே” என்று, கிண்டல் குரலில் ராகம் போட்டு கபிலா சொல்லவும்…
“அண்ணீஈஈஈ” என்று, தரணியைப் பார்த்து பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது ஸ்வேதாவால்…
பிறகு ஸ்வேதா… அவளது அறையில் ஹரியுடன் பேசுவது… என்பது முடிவாகவும்… அவனை அழைத்துக்கொண்டு அங்கே சென்றவள்…
“என்ன நடக்குது இங்க… ஃபிராடு! ஃபிராடு! பக்கா ஃபிராடு!” என அவனை அங்கே இருந்த தலையணையால் தாக்கத் தொடங்க…
அவளைத் தடுத்தவன்… “ஏய்! யார் ஃபிராடு? நான்தான் இன்று காலையிலேயே சொல்ல வந்தேன்… நீ காது கொடுத்து கேட்டால்தானே!” என்றவன்…
“உங்க அப்பாதான்… லவ் மேரேஜ்னா ஒத்துக்க மாட்டாரே… அதனால இந்த பாலுதான்… என்னையே என் கம்பெனில வேலை செய்யும் TL…ன்னு இந்த ஜிகினா வேலையெல்லாம் செய்து… என் ப்ரோஃபைலை… உங்க அப்பாவிற்கு அனுப்பியிருந்தான்”
“நீ கல்யாணம் வேண்டாம்னு… சொன்ன கோவத்தில் உன்னை நேரில் பார்த்து… ஒரு வழிசெய்யும் எண்ணத்தில்தான்… உன்னைப் பார்க்க, நான் கோவிலுக்கே வந்தது!”
“நீ கோவிலுக்குப் போய் இருக்கும் தகவல் கூட பாலுதான் என்னிடம் சொன்னான்!”
“நீ அந்த ப்ரோஃபைலை பார்க்கவே இல்லைனு… உன்னுடன் பேசிய பிறகுதான் எனக்குப் புரிந்தது…” என்று மேலும் மேலும் ஆச்சரியத்தில் அவளை மூழ்கடித்தான் ஹரி…
“தேங்க்ஸ் ஹரி! எனக்காக இவ்வளவு செஞ்சிருக்கீங்க… நீங்க மட்டுமில்ல… பாலு அண்ணா… வர்ஷினி எல்லாருமே!” என அவள் நெகிழ்ச்சியுடன் சொல்ல..
.”இதுல… நந்தாவும்… உன் அண்ணி தரணியும் கூட… உதவி செஞ்சிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா!” என்றவனிடம்…
“இன்னும்… மிச்சம் மீதம் ஏதாவது இருந்தால்… அதையும் சொல்லிடுங்க ஹரி! இதுக்கு மேல என்னால் எதையும் தாங்க முடியாது!” என அவள் போலியாய் கோபித்துக்கொள்ள…
“அவ்வளவே! இனிமேல் எதுவும் இல்லை” என்றவன்… “எனக்காக இவ்வளவு செஞ்சிருக்கீங்கன்னு சொன்ன இல்ல? அதற்கு… எனக்கு என்ன பரிசுக் கொடுக்கப் போற?” என ஹரி அவளை நெருங்கி வர…
அதை சற்றும் சட்டை செய்யாமல்… எதோ நினைவு வந்தவளாக… அவசரமாக அங்கே இருந்த அவளது வார்டுரோப்பைத் திறந்து… சிறிய பெட்டியை எடுத்து… அதிலிருந்த ஒரு அழகிய மோதிரத்தை… அவன் விரலில் அணிவிக்க… அது கச்சிதமாய் அவனுக்குப் பொருந்திப்போனது…
பிறகு… “பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ஹரி!!” என்றவாறு அவனது விரல்களில் லேசாகத் தனது இதழைப் பதித்தவளின் கண்கள் கலங்கியிருந்தது…
“என் பிறந்தநாள்! இன்னுமா ஞாபகம் வச்சிருக்க… மறந்துட்டியோன்னு நினைச்சேன் ஸ்வேதா! சாரிடி!!” என்றவனது கண்களும் கலங்கியிருந்தது…
“அதை எப்படி மறப்பேன்… உங்களுடைய பிறந்தநாள் என்பதால்தானே கோவிலுக்குப் போனேன்! நீங்க செஞ்ச கலாட்டாவால்தான் காலையிலேயே வாழ்த்துச்சொல்ல மறந்துட்டேன்!!” என்றாள் ஸ்வேதா…
“ஹேய்! எனக்காக… அப்பொழுது நீ வாங்கின மோதிரம்தானே இது?” என ஹரி கேட்க…
“ஆமாம்” என்றாள் ஸ்வேதா…
“நல்ல வேளை… இப்ப கொடுத்த… நீ இந்த மோதிரத்தை அப்பவே கொடுத்திருந்தால்… இதுவும் உன்னை மாதிரியே இருந்திருக்கும்!!” என ஹரி சொல்லவும்…
என்ன சொல்கிறான் எனப் புரியாமல் ஸ்வேதா அவனைப் பார்க்க…
“லூசா!!!” என்றவனை… அடிக்கத் தலையணையை ஸ்வேதா எடுக்க…
“மீ எஸ்கேப்!!!” என்றவாறு அவளிடமிருந்து தப்பித்து… கீழே ஓடிச் சென்றான் ஹரி!!!
ஹரியை, பின் தொடர்ந்து… கீழே வந்த ஸ்வேதா… அங்கே உட்கார்ந்திருந்த பாலு மற்றும்… வசுதாவைக் கண்டு இன்பமாக அதிர்ந்தாள்…
அவர்களது… குட்டி இளவரசி… ஸ்ரவணியை… கைகளில் ஏந்தி… கொஞ்சிக்கொண்டிருந்தார்… விஜயா…
அருகில் விரித்து வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியின் திரையில்… வர்ஷினி… சலசலத்துக் கொண்டிருந்தாள்… லதா மற்றும் விஜயா இரண்டுபேருடனும்…
நம்ம ஸ்வேதா… அன்று பத்திரமாக… நமக்குக் கிடைக்க காரணம்… கபிலா அக்காதான்… பிறகு மேற்கொண்டு அவளது ட்ரீட்மெண்ட்க்கு… ஏற்பாடு செய்தது… சஞ்சய் மாமாதான்… என்று அவர்களைப் பற்றி புகழ்த்துக் கொண்டிருந்தான்… பாலு… லதாவிடம்…
“ப்ளீஸ்! அதெல்லாம் ஒண்ணும் இல்லை! நான் அப்ப ஷிப்ட்ல… இருந்ததால… சின்னதாக… உதவ முடிந்தது…” என்றார் கபிலா தன்னடக்கத்துடன்…
அதற்குள் விஜயா… “நான்… பாலு… வஸுதா… வர்ஷினி எல்லாரையுமே, பார்த்திருக்கேன்… ஆனால்… ஸ்வேதாவை மட்டும் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது!” என்றுவிட்டு…
“அவளே… எங்கள் வீட்டிற்கு மருமகளாக வரணும்னு இருப்பதால்தான்… போலும்!!!” என்று முடித்தார் அவர்…
அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வெங்கட்… ரகசியமாக மகனைத் தனியே அழைத்துச்சென்று…
“இங்கே எல்லோரும் பேசுவதைப் பார்த்தால்… இது… மேட்ரிமோனியில் பார்த்து அமைந்த சம்பந்தம் போல் தோணலையே நந்தா!!!”
“மாப்பிளை… TL… ன்னுதானே போட்டிருந்தது…
போன வாரம் அவருடைய பேட்டி கூட… பிசினஸ் மேகசின்ல வந்திருந்ததே… அவர் ஹரிதா குரூப்ஸ் மொத்தத்திற்கும் MD… ன்னு அதில் போட்டிருந்தாங்களே…”
“ஆனால் அவரை நேரில் பார்த்த பிறகுதானே தெரிகிறது…”
“அத்துடன்… காலேஜில்… இவங்க எல்லாரும் ஒன்றாக பழகியிருப்பாங்க போல இருக்கே!!!”
“இன்று காலை வரை கல்யாணம் வேண்டாம்னு மறுத்த ஸ்வேதா… இப்ப எப்படி திடீர்னு சம்மதிச்சா?”
“அப்பொழுதிலிருந்தே… இரண்டு பேருக்கும்… அது இதுன்னு… விருப்பம்… இருந்திருக்குமோ?”
காதல் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தயங்கியவாறு… அவனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்…
“அப்பா… எப்படி இருந்தால் என்ன… அவர்கள்… நம்மிடம் முறைப்படிதானே பெண் கேட்டு வந்திருக்காங்க… நம்ம ஸ்வேதவைப் பாருங்க… எவ்வளவு சந்தோஷமாக இருக்கா! இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?”
“அதனால… இதை தோண்டித் துருவாமல்… அப்படியே விட்டுடுங்கப்பா…” என்று முடித்தான் நந்தா…
அவன் சொன்னதும் சரியாகப் படவே… அதை அப்படியே இயல்பாக ஏற்றுக்கொண்டார் வெங்கட்…
அவர்கள் பேசிக்கொண்டது போல் அடுத்த நாள் எளிமையாக… ஸ்வேதா… ஹரியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது…
அடுத்த நாளே… அவளது PHD படிப்பை முடிக்கவென ஸ்வேதா அமெரிக்கா சென்றுவிட… அந்த ஆறு மாதமும்… பத்து முறைக்கு மேல் அங்கே சென்று… ஸ்வேதாவை மட்டுமல்லாது… வர்ஷினியையும் அதிரவைத்தான் ஹரி…
“அடப்பாவி… ஹரி அண்ணா! நான் எத்தனை முறை உங்களை இங்கே வரச்சொல்லி அழைத்திருப்பேன்… ஒரு தடவையாவது வந்தீங்களா? இப்ப இந்த ஸ்வேதாவால மாசத்துக்கு இரண்டு தடவ வாறீங்களே இது நியாயமா?” என அவனை வறுத்து எடுத்து… ஸ்வேதாவிடம்… இலவசமாக அடிகளையும் வாங்கிக்கொள்வாள் வர்ஷினி…
ஏனென்றால்… அவர்களது… மீட்டிங் ஸ்பாட் வர்ஷினியின் வீடாக இருந்தது…
அவள் படிப்பு முடிந்து தாய் நாடு திரும்பவும்… அவள் விருப்பப்படி… மிகப் பிரபலமான கல்லூரி ஒன்றில்… பேராசிரியராக… சேர்ந்தாள்… ஸ்வேதா… எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்… அவளுடைய அந்த ஆசைக்கு தடை போடவில்லை ஹரி!!
பிறகு…ஒரு சுப யோக சுப தினத்தில்… உற்றார் உறவினர் ஆசிர்வதிக்க… கூரைப் பட்டு உடுத்தி… பொன்னென ஜொலித்த… ஸ்வேதாவின் கழுத்தில்… மங்கல நாணைப் பூட்டி… அவளை முழுவதுமாக தன்னவள் ஆக்கிக்கொண்டான் ஹரி…
காதலும்… மகிழ்ச்சியாக… அவர்களது இல்வாழ்க்கை… அத்தனை அழகாய் ஆரம்பமானது…
ஐந்து வருடங்களுக்குப் பிறகு…
“ஐ! அப்பா… மைல்…ப்பா… மயில்” என்று மகிழ்ச்சியில் கூவிக்கொண்டிருந்தாள் அந்தக் குட்டி தேவதை…
ஹரி ஸ்வேதாவின் நான்கு வயது… செல்ல மகள்… ஹரிதா!!!
தமக்கை சுட்டிக் காட்டிய இடத்தில் உட்கார்ந்திருந்த மயிலைப் பார்த்து… “மா.. மய்.. மய்.” என்று குதிதான்… ஸ்வேதாவின் மடியில் உட்கார்ந்திருந்த அவர்களது, ஒன்றரை வயது குட்டி இளவரசன்… ராகவ் கிருஷ்ணா!!
ஹரி காரை செலுத்திக் கொண்டிருக்க… மிதமான வேகத்தில் அவர்களது கார்… வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் சென்றுகொண்டிருந்தது…
வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரில் எப்பொழுதாவது ஒன்றிரண்டு மயில்கள் உட்கார்ந்திருக்கும்… அதைத்தான் ஹரிதா பார்த்தது… பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகளையும்…பின் பக்க இருக்கையில், ஸ்வேதாவுடன் அமர்ந்திருந்த மகனையும்… பெருமைப் பொங்க பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹரி…
ஓட்டுநர் இல்லாமல், ஹரி வண்டியை எடுத்தால்… தாய்க்கும்… மகளுக்கும்… பெரும் போரே மூண்டுவிடும்… அவனது பக்கத்து இருக்கைக்காக…
தந்தையின் ஓட்டு… கிடைத்துவிட… இறுதியில் வெற்றி என்னவோ… மகளுக்குத்தான் இருக்கும்…
முதலில் கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கோபமாக இருந்த ஸ்வேதா! குழந்தைகளின் மகிழ்ச்சியில் இணைந்து… குதூகலமாகவும்…
முன் பக்க கண்ணாடி வழியே அவளது முகைதை பார்த்து… சிரித்த ஹரி…
“என்ன சுவேதாம்மா கோவமெல்லாம் போச்சா?” என்று கேட்க… அவளது பார்வையும் அந்தக் கண்ணடியிலேயே இருக்க…
“ம்ஹும்! குட்டிமாவிடம் மட்டும்தான் கோபம் போச்சு! அவங்க அப்பாவிடம் இன்னும் போகல!” என ஹரிதா சொல்லவும்…
“அவங்க அம்மாவின் கோபத்தை எப்படி சரி செய்யணும்னு எனக்குத் தெரியுமே!” என அவன் கண் சிமிட்டவும்…
“ஐயோ! போதுமே!” என முகம் சிவந்தாள் ஸ்வேதா…
மறுபடியும்… “ஐ!!” என்று குதூகலமாக கத்திய ஹரிதா… “அம்மாவும், அப்பாவும்… படிச்ச காலேஜ்!” எனச் சொல்லவும்…
அப்பொழுதுதான் அதைக் கவனித்தாள் ஸ்வேதா… ஹரி அவளது புறமாக திரும்பவும்… மகிழ்ச்சியுடன் இருவரது கண்களும்… ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன… அவர்கள் முதன்முதலில் சந்தித்த நாளை நினைத்து!!
புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அவர்களை அழைத்து வந்திருந்தான் ஹரி…
மான் குட்டி போல் துள்ளி குதித்து… மலையின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள் குட்டி… ஹரிதா!
“ராகவ்வை… என்னிடம் கொடு!” என ஹரி கை நீட்ட…
அன்னையின் புடவையை இருகப் பற்றியவாறு… அவளது தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் அவர்களது செல்வ மகன்…
“சரி! விடுங்க ஹரி! நான் தூக்கிக்கொண்டு வரேன்… நீங்க ரித்து குட்டிய பாருங்க…” என ஸ்வேதா சொல்லிவிட… “கார்லயே போய்டலாம்னு சொன்னா… நீ கேட்க மாட்டேங்கற…” என்று அவளைக் கடிந்துகொண்டு… மகளின் பின்னால் ஓடினான் ஹரி…
மூச்சு வாங்க மகனைத் தூக்கிக்கொண்டு… கோவிலை அடைந்தாள் ஸ்வேதா…
மேலே வந்ததும்… ராகவ்… தாவிக்கொண்டு தந்தையிடம் போனானே பார்க்கலாம்! சிரிப்பே வந்து விட்டது ஹரிக்கு…
“பாருங்களேன்… இவன் என்ன பாடு படுத்தறான்” என்று ஸ்வேதாவுமே சிரித்துவிட…
மகிழ்ச்சியுடன் இறைவனை வணங்கிவிட்டு… குழந்தைக்ளுன் வீட்டிற்குத் திரும்பினர்… ஹரி ஸ்வேதா இருவரும்…
அவர்கள் வீட்டிற்குள் நுழையவும்…
“சர்ப்ரைஸ்” என்றவாறு… வர்ஷினியின் மூத்த மகள் சாரா… பார்ட்டி ப்ளாஸ்டரை வெடிக்கச்செய்யவும்…
“ஜாலி! சாராக்கா” என்றவாறு… அவளை நோக்கி ஓடினாள் ஹரிதா…
அங்கே ஹாலில்… ஹரியின் பெற்றோர்!
ஸ்வேதாவின் பெற்றோர்!
கபிலாவின் குடும்பம்…
நந்தாவின் குடும்பம்…
வர்ஷினியின் குடும்பம்…
பாலுவின் குடும்பம்…
என அனைவரும் குழுமி இருக்க… வீடே களை கட்டியிருந்தது…
“திருமண நாள் வாழ்த்துக்கள்” என ஹரி ஸ்வேதா இருவரையும் வாழ்த்தியவர்கள்…
“ஹாப்பி பர்த்டே! குட்டிமா!” எனப் பரிசுகளுடன் ஹரிதாவை வாழ்த்தினர்…
ஆம்… ஹரி ஸ்வேதாவின் முதல் திருமணநாள் அன்றுதான் ஹரிதா பிறந்தது!
அந்த நாளைக் கொண்டாடத்தான் அனைவரும் அங்கே வந்திருந்தனர்…
பாலு வரவழைத்திருந்த… மிகப்பெரிய கேக்கை வெட்டி… மதிய உணவையும் முடித்து… பின்னர் அனைவரும் ஓய்வாய் உட்கார்ந்திருக்கவும்…
வர்ஷினி… “ஹரி… ஸ்வேதா ரெண்டுபேரும் சேர்ந்து… ஒரு பாட்டு பாடணும்” என அவர்களை வற்புறுத்த…
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…
“நான் தான்அப்பாவோட சேர்ந்து பாடுவேன்!” என அதற்கும் அன்னையிடம் போட்டிக்கு வந்தாள் ஹரிதா!
அவளை இழுத்து தனது மடியில் அமர்த்திக்கொண்டு… அம்மா… அப்பா குட்டிமா மூணு பெரும் சேர்ந்தே பாடுவோமாம்!” என ஹரி தீர்ப்பைச் சொல்லவும்…
மூவருமாகப் பாடத்தொடங்கினர்…
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
…………..
அவர்கள் பாடி முடிக்கவும்…
“ஓஹோ! என்ற கூச்சலுடன்… அனைவரின் கர ஒலி… அந்த வீட்டையே அதிரச்செய்து கொண்டிருந்தது….
ஸ்வேதாவின் முகத்தில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சியைப் பார்த்து… ஹரியின் மனம் நிறைந்திருந்தது…
இதைபோன்றே… அனைவரின் வாழ்க்கையும் இன்பமாகவும் நிறைவுடனும்… அமைய இறைவனை வேண்டி விடை பெறுகிறேன்…
**** நன்றி***