“யாருடா அந்த மரகதவல்லி… ரோபோ மாதிரி இருக்கும் உன்னையே… திரும்பிப் பார்க்க வச்சிருக்கா! எனக்கே அவளை பார்க்கணும் போல இருக்கே!” என சசி ஆதியை ஓட்டி எடுத்துக்கொண்டிருந்தான்… உடன் வினோதினி வேறு…

“அண்ணா… அவதான் என்னோட வருங்கால அண்ணியா!” என்று கேட்க…

“சும்மா இருக்கப்போறிங்களா… இல்லையா ரெண்டுபேரும்… அவ ரொம்ப சின்ன பொண்ணு வினோ… இப்பதான் செகண்ட் இயர் படிக்கறாளாம்… நம்ம கம்பெனில வேலை கொடுக்கலாம்னு மட்டும்தான் நினைச்சேன்… வேற ஏதும் இல்லை… நீங்களே எதையாவது கற்பனை பண்ணாதீங்க!” என்று அவர்களை அடக்கினான் ஆதி…

அன்று சசி-வினோதினி திருமண நாள் என்பதால்… அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தவனைத்தான் உண்டு இல்லை என்று செய்துகொண்டிருந்தார்கள் இருவரும்…

சசி… ஆதிக்கு உதவியாக… அவனது வியாபார நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்ததால்…

கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கும் ‘ராயல் அமிர்தாஸின்’ தொடக்கவிழா பற்றிய ஆலோசனையில்… நண்பர்கள் இருவரும் இறங்கிவிட…

“போச்சுடா! ஆரம்பிச்சிட்டாங்க இவங்க போர்ட் மீட்டிங்கை!!” என்று அலுத்துக்கொண்டே சமையலை கவனிக்கச்சென்றாள் வினோ…

சரவணன்… விடுதியில் தங்கி மருத்துவம் படித்துக்கொண்டிருந்ததால்… அவன் அங்கே இல்லை…

அதன் பின்பு வந்த நாட்களில்… ‘ராயல் அமிர்தாஸ்’ திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது…

இதற்கிடையில்… வினோத் – தாமரை திருமணமும் நடந்து முடிந்தது…

அதன் பிறகு… சிங்கப்பூரில் அமிர்தம் ரெஸ்டாரண்ட்ஸ்…  கிளை ஒன்றைத் தொடங்கினான்… ஆதி…

முழுவதும் தொழில் சார்த்த வேலைகளில்… தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால்… மரகதவல்லியைப் பற்றிய நினைவு… உள்ளே அமிழ்ந்துவிட…

நியூ ஜெர்ஸியில்… அவனது சின்ன மாமா சந்திரனின் வீட்டில்… தங்கியிருந்தவாறு அங்கே ஆதி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அமிர்தம் ரெஸ்டாரண்ட்ஸ் இரண்டின் கிளைகளைத் தொடங்க… ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொண்டிருந்தான் ஆதி…

அந்தச் சமயத்தில்தான்… மரகதவல்லியை… தங்கள் டிசைன்னிங் பிரிவில்… ட்ரைனிங்கிற்காக தேர்ந்தெடுத்திருந்தான் சசி…

அதை ஆதி இந்தியா வந்தபிறகு… மரகதவல்லியும் அங்கே ஜாயின் செய்தபிறகு… அவனுக்கு சார்ப்ரைஸ் கொடுத்து… நேரிலேயே… பார்த்துக்கொள்ளச் செய்யலாம் என்று விட்டுவிட்டான்  அவன்…

இந்த நிலையில்… அம்முவின் நினைவு நாளிற்காக… சில நாட்களுக்கு…  இந்தியா வந்திருந்தான் ஆதி…

ஜூன் ஆறு… அன்றுதான் அவனது பிறந்த நாள்…  ஆனால் அந்த வருடம் அம்முவின் திதி… அதே நாளில் வரவும்… அன்றைய அதிகப்படியான வேலைகளிலும்… அம்முவின் நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சலில்… மூட்டுவலியும்  சேர்ந்துகொள்ள … லட்சுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனது… 

அதனால் அன்று அவரை அழைத்துக்கொண்டு… ‘கேர் ஃபார் லைஃப்’ வந்திருந்தான் ஆதி…

அப்பொழுதுதான் அவன் மல்லியை மறுபடியும் பார்த்தது!

மல்லி என்று அவளை மற்றவர்கள் அழைத்ததைக் கவனித்து… அவள்தான் அம்முவின் தோழியோ என… மெய்சிலிர்த்தது…

அவளது மனிதநேயமிக்க செயலைக் கண்டு அதிர்ந்தது!!

அவளது அழகில் மறுபடி மயங்கியது!

அவளிடம் இதயத்தைப் பறிகொடுத்தது!

வயது பற்றிய சிந்தனையெல்லாம் களைந்து… அவளை மணந்துகொண்டே தீரவேண்டும் என  முடிவை எடுத்தது!!! எல்லாம்…

அம்மு இறந்த பிறகு… தனது பிறந்தநாளை கொண்டாடுவதையே விட்டுவிட்டான் ஆதி…

ஆனால் எப்பொழுதுமே அவனது பிறந்தநாளைக்கென… ஆதியை ஆச்சரியப் படுத்தும் விதமாக…  எதாவது  பரிசு ஒன்றைக் கொடுக்கும் அம்மு… இந்தவருடம்…  மல்லியை அவனுக்கு அடையாளம் காட்டிவிட்டாள் போலும்…

அதன் பிறகு லட்சுமியை… மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றவன்… அவருக்கு பிசியோதெரப்பி… கொடுக்க… மருத்துவர் பரிந்துரைக்கவும்…

அவரை அந்தப் பிரிவில் விட்டுவிட்டு… அது முடிய நாற்பது நிமிடங்கள் ஆகலாம் என்று அறியவும்… வினோத்தின் கன்சல்டன்சி அறையில் அவனைச் சந்திக்கச் சென்றான் ஆதி…

அவன் அங்கே வந்திருப்பதை அறிந்துகொண்ட தாமரையும் அங்கே வந்திருந்தாள்…

இருவரிடமும் பொதுவாக… “என்னப்பா நடக்குது உங்க ஹாஸ்பிடல்ல… இங்கே வந்தா… கிட்னி ஹார்ட்ன்னு எல்லாத்தையும் கழட்டி எடுத்துட்டுதான் அனுப்புவீங்களா என்ன?” என்று விளையாட்டாகக் கேட்பதுபோல் கேட்டான் ஆதி…

அவன் எதோ நகைச்சுவை சொல்வது போல் தாமரை… “அண்ணா! இந்த கண்ணு… காது… மூக்கு… இதையெல்லாம் விட்டுட்டீங்களே”… என்று சொல்லி சிரித்துவைக்க…

வினோத்தின் கண்களோ… அவனைக் கேள்வியுடன் பார்த்தது…

“என்ன சொல்லவர… ஆதி… புரியல” என அவன் கேட்க…

ஆதி  யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்… “இல்ல இங்க… கிட்னி தானம் என்ற பெயரில்… வியாபாரம் நடக்குது… இதுக்கு ப்ரோக்கரெல்லாம் இருக்காங்க போலிருக்கே… இதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல்தான் நடக்குமா என்ன?” என்று அவன் காரமேறிய குரலில் கேட்கவும்…

அதிர்ந்தாள் தாமரை…

உணர்ச்சியற்ற முகத்துடன்… “இதெல்லாம் வெளியேதான் நடக்குது ஆதி… இங்கே எல்லாமே சட்டப்படிதான் நடக்குது… ஃபர்ஸ்ட் ரிலேடிவ்ஸ்… மட்டும்தான் கிட்னி கொடுக்கமுடியும்… மற்றபடி… பிரைன் டெட் ஆனவங்களோட உடல் உறுப்புகளை மட்டும்தான்… தேவைப் படுறவங்களுக்கு பிக்ஸ் பன்றோம்… அதுவும் தனமாக மட்டுமே…”

“இங்கே வரும்பொழுதே… போலியான பேப்பர்சுடன் வந்தால்… எங்களாலும் ஒண்ணும் செய்ய முடியாது…” என்று சொல்லி முடித்தான் வினோத்…

“நல்லவேளை… நான் ரொம்பவே பயந்திட்டேன் ஆதிண்ணா…” என்றவள்… வினோத்திடம் திரும்பி… “நீங்கதானே… மொத்த நிர்வாகமும் கவனிக்கிறீங்க… இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க வினோ…” என்று அவனிடம் கட்டளையாகவே சொல்லி முடித்தாள் தாமரை…

“இதை நீ சொல்லவே வேண்டாம் டியர்…” என்று அசடு வழிந்தான் வினோத்…

தாமரையின் அந்த வார்த்தைகளே போதுமானதாக இருக்கவே… அதைப்பற்றி மேலும் ஆராய முற்படாமல்… அங்கிருந்து கிளம்பினான் ஆதி…

அன்று இரவே சசியை ‘ராயல் அமிர்தாஸ்’ வரச்சொன்னவன்… அவனைத் திட்டித் தீர்த்தான்… மல்லியை அவர்களது நிறுவனத்தின் பணிக்கான பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்ததை சொல்லாமல்… விட்டதற்காக…

“டேய்! உன் கண்ணுலேந்து… எதுவுமே தப்பாதாடா? நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தானேடா சொல்லாம விட்டேன்… இப்படிப் போட்டு தாக்கறையேடா!” எனப் பாவமாய் சசி சொல்ல… போனால் போகிறது என அவனை ஒருவழியாக விட்டான் ஆதி…

அவன் கண்களிலிருந்தும் தப்பிய பல விஷயங்கள் உண்டு என்பதை அறியாமல் போனானே சசிகுமார்!!

*********************

அதற்குப்பின் மூன்று மாதங்கள் கடந்து… ஆதி டெக்ஸ்டைல்ஸின்…  டிசைனிங் பிரிவில் ட்ரைனியாக சேர்ந்தாள் மல்லி… அந்தத் தகவலை… ஆதிக்குத் தெரியப்படுத்தினான் சசி… கொஞ்சம் கூட தாமதிக்காமல்…

இதற்கிடையில்… மல்லியைச் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் சிங்கப்பூர்… நியூ ஜெர்சி எனப் பறந்தன ஆதியின் நாட்கள்… ஏதேதோ காரணங்களால்… அங்கே வேலையும் இழுத்துக்கொண்டே போனது…

இதற்கிடையில்… ஆதி டெக்ஸ்டைல்ஸில்… அவர்கள் விரைவிலேயே அறிமுகப்படுத்தவிருக்கும்… புதிய ரக திருமண பட்டுப் புடைவைகளின்… மாதிரிகளை… பார்வையிடவும்… பல தரங்களில்… அவற்றின் உற்பத்தியைத் தொடக்கவும்… இரண்டு நாட்களுக்காக… சென்னை வந்திருந்தான் ஆதி…

அப்பொழுதுதான்… மல்லி அவனது தனிப்பட்ட எண்ணிற்கு… அழைத்தது…

அப்பொழுது மல்லியின் கைப்பேசி எண்ணை… அறிந்திருக்கவில்லை ஆதி… அதனால்…”யார் அந்தப் பெண்… அதுவும்… இந்த நள்ளிரவு வேளையில் அழைத்து… அம்முவைப்பற்றிக் கேட்பது?” என முதலில் எரிச்சலுற்றவன்…

அடுத்த நாளே… அதே எண்ணிலிருந்து “sorry  for the disturbance. Mistakenly called “என்ற குறுந்தகவல் வரவும்… குழம்பித்தான் போனான்…

பிறகு… விஜித்திடம் அந்த எண்ணை கொடுத்து… அது யாருடையது என்பதை கண்டுபிடிக்கச்சொல்லி… மல்லியுடையதுதான் என்பதை அறிந்துகொண்டான்…

அவளது… விண்ணப்பத்துடன்… சேர்க்கப்பட்டிருந்த அவளது… தகவல்களைப் பார்த்து… அந்த மரகதவல்லிதான் அம்முவின் தோழி… மல்லி என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டான்…

ஆனாலும்… அவனது எண் மல்லிக்கு எப்படித் தெரிந்திருக்கும் என குழம்பித்தான்போனான் தேவாதிராஜன்…

அவளைப்பற்றி… சசியிடம் சொல்ல அவனது மனம் இடங்கொடுக்கவில்லை… அதனால் மல்லியைப் பற்றிய சந்தேகங்களுடனும்… குழப்பங்களுடனுமே… அமெரிக்கா சென்றான் ஆதி…

அதன்பிறகு… வந்த நாட்களில்… அவளது திறமையை அறியவே… சசி மூலமாக… கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக அவர்கள் தயாரிக்கவிருக்கும் உடைகளின் சில மாதிரிகளை… வடிவமைக்கும் வாய்ப்பை… மல்லியுடன் சேர்த்து… மற்ற இரண்டு பெண்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தான்…

மின்னஞ்சல் மூலமாக அவற்றை… பார்வையிட்டவன்… மற்ற இரண்டு பெண்களுடையதைக் காட்டிலும் மல்லி வடிவமைத்திருந்த  மாதிரிகள்… மிகவும் அட்டகாசமாய் இருக்க… மனதிற்குள்ளேயே அவளை மெச்சிக்கொண்டவன்… அந்த உடைகள் உடனே விற்பனைக்கு வருமாறும் ஏற்பாடு செய்தான்… அதுவும்… அந்த உடை அதிக வரவேற்பைப் பெறவும்… மகிழ்ந்துதான் போனான் ஆதி…

அதன்பிறகு…  பொங்கல் பண்டிகைக்கு கூட… சென்னை திரும்பாமல்… அனைத்து வேலைகளையும்… முழுவீச்சில் முடித்து… ‘ராயல் அமிர்தசில்’ அவர்கள்… அந்த பார்ட்டி ஏற்பாடு செய்த அந்த நாளில்தான்… அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்திருந்தான்…

மாலை அந்த விழாவில்… தன் டீம் தோழர்களை தன் கண்களால் தேடியபடியே… அங்கே நுழைந்தாள் மல்லி…

அங்கே காஞ்சனாவிடம் ஆதி… பேசிக்கொண்டிருக்க!!!  மரியாதை நிமித்தம் காஞ்சனாவிற்கு… கண்களால் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள் மல்லி.

ஆதியை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை…

அதிர்ந்துபோன காஞ்சனா… ஆதியையும்… மல்லியையும் மாற்றி… மாற்றி… பார்த்தவாறு… மல்லியை அழைக்க எத்தனிக்க… அவளைத் தடுத்துவிட்டான்… ஆதி…

அழகிய பூவேலை செய்யப்ட்ட,  இளஞ்சிவப்பில் கருப்பு பார்டருடன் கூடிய ரா சில்க் புடவையும்… கருப்பு பிளவுசும் அணிந்து, புடவையில் இடம்பெற்றிருந்த பூக்களைப்போன்றே வடிவமைக்கப்பட்ட  பேஷன் ஜுவெல்லரி அணிந்து, பிஷ் போன் ஸ்டைலில், தளர பின்னலிட்ட சடையை முன்னாலிட்டு, எளிமையான அழகுடன் இருந்த மல்லியையே… ஆதியின் விழிகள் தொடர்ந்தவண்ணம் இருக்க… அதைக் கொஞ்சமும் அறியவில்லை மல்லி…

ஆனால்… அதைக் கவனித்த காஞ்சனாவின் முகம்… வெளுறிப்போனது… அதைக் கவனித்த ஆதிக்கு… காரணம்தான் புரியவில்லை…

ஏதோ சரியில்லை என்பதுமட்டும்… அவனது உள்ளுணர்வுக்குத் தோன்றியது…

அப்பொழுதுதான் ஒன்றை உணர்ந்தான் ஆதி… அம்மு இறந்த அன்றும்… இதே போன்ற உணர்வு வந்துபோனது அவனுக்கு…

அன்று மயக்க நிலைக்குப் போனதால்… நடக்கவிருந்த விபரீதத்தை… அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை போலும்…

அதன் பிறகு… மல்லியைத் தாண்டி அவனது விழிகள்… எங்கும் செல்லவில்லை…

தொடர்ந்து… ஐஸ்வர்யாவின் அலட்டலான நடவடிக்கைகளையும்… அதற்கு மல்லி அசறாமல் கொடுத்த பதிலடியையும்… அதன் பின் மல்லியின் முகத்தில் வந்துபோன கலையான உணர்ச்சிகளையும்… பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஆதி…

அவளது குரல்… அவனுடைய செவிகளை எட்டவில்லையே தவிர… அவளது முக மறுதல்களே போதுமானதாக இருந்தது ஆதிக்கு… அவளது மனதில் இருக்கும் வலியைப் புரிந்துகொள்ள…

அந்த நொடியே முடிவுசெய்தான் ஆதி… அவளை அலட்சியமாக எண்ணும் அந்தப் பெண்கள் அனைவரும்… கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தில்… மல்லியைக் கொண்டுபோய் வைக்கவேண்டும் என்று…

அதன்பிறகு அவள் நேராகச் சென்று ஆரஞ்சு பழச்சாறை எடுத்துவரவும்… அவனது இதழ்களில்… மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது… அவனுக்குமே ஆரஞ்சு பழரசம்தான் பிடிக்கும் என்பதால்…

ஆனால் அவனுக்கு உடைமையான இடத்தில்… அவனது இதயத்தை உடைமையாக்கிக் கொண்டவள்… அந்தப் பழரசத்தை அருந்தும்பொழுது… அவன் அதைச் சந்தேகிக்கவில்லை…

அதன்பின் அவள் அந்த நீச்சல் குளத்தை நோக்கி தனிமையில் செல்லவும்… அவளைப் பின்தொடர்ந்து சென்றான் ஆதி…

அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தவளின் எழிலில்… தன்னைத் தொலைத்தவன்… அவளை அப்படியே தனது கைப்பேசிக்குள்… சிறைபிடித்தான்… அவனால் அதை மட்டுமே செய்ய முடிந்தது அப்பொழுது…

சில நிமிடங்கள் அப்படியே கரைய… எழுத்து நடக்கத் தொடங்கிய மல்லியிடம்… ஒரு தள்ளாட்டம் தெரியவுமே… பதறிய ஆதி… வேகமாக அவளை நெருங்கியிருந்தான்…

அதற்குள் அவள் மயங்கிச் சரியவும்… தனது வலிய கரங்களில் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான் தேவாதிராஜன்…

 

error: Content is protected !!