NUA–EPI 1

அத்தியாயம் 1

உன்ன கண் போலத்தான்

வச்சு காப்பேனடி

அடி உன்னைத்தான் நினைச்சேன்

உன்னையே மணப்பேன்!!! (முத்துக்காளை)

 

காலை ஐந்து மணிக்கு தன் கடமையை செவ்வனே செய்தது சேவல். அதன் கூவலில் மெல்ல அசைந்தார் காமாட்சி. கண் விழித்ததும் உடம்பு வலியும் கூடவே விழித்தது. அதை எப்பொழுதும் போல புறம் தள்ளியவர் எழுந்து அமர்ந்தார்.

“அப்பனே விநாயகா!” என கூரையைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவர், பாயில் இருந்து எழுந்து நின்று போர்வையை மடித்து வைத்தார்.

கலைந்து கிடந்த தலைமுடியை ஒரே அள்ளாக அள்ளி கொண்டைப் போட்டுக் கொண்டவர், தூரத்தில் படுத்திருந்த கணவருக்குக் குரல் கொடுத்தார்.

“வேலை வெட்டி கெடக்க வீட்டு ஆம்பளைக்கு இன்னும் என்னா தூக்கம்?”

மனைவியின் குரலில் படக்கென எழுந்து அமர்ந்தார் மச்சக்காளை.

“தோ எழுந்தாச்சு புள்ள!” என பதில் குரல் கொடுத்தவர், லுங்கியை இழுத்துக் கட்டிக் கொண்டு பாயை சுருட்டினார். கணவனும் மனைவியும் வீட்டு முற்றத்தில் காற்றோட்டமாக பாய் விரித்துத்தான் படுத்துக் கொள்வார்கள். மழை வந்தால் மட்டும்தான் அறைக்குள் படுத்துக் கொள்வார்கள் இருவரும். இயற்கை காற்று இருக்க செயற்கையாய் சுழலும் காற்றாடி இவர்களுக்குப் பிடிப்பதில்லை.

அந்த சோலையூர் கிராமத்தில் இவர்கள் வீடுதான் பெரிய வீடு. நான்கு பெரிய தூண் வைத்து வீட்டு நடுவில் முற்றம், தாழ்வாரம், மூன்று அறைகள், சமயலறை, வெளியே குளியலறை கழிப்பறை வசதியோடு, வீட்டை சுற்றி பழ மரங்கள், மாட்டு கொட்டகை என நல்ல வசதியான வீடுதான். விவசாய நிலங்களும் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. காமாட்சியின் தம்பி நிலத்தின் மேலே கேஸ் போட்டிருக்க, தீர்ப்பு இவர்கள் பக்கம் சாதகமாக வந்து சில வருடங்கள் ஆகின்றன.

காமாட்சியும், மச்சக்காளையும் நல்ல உழைப்பாளிகள். இவர்களுக்கு கண்ணின் மணி போல இரண்டு பிள்ளைகள். பெரியவள் பெண், பெயர் ராஜேஸ்வரி. திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. பக்கத்து ஊரில் வசிக்கிறாள். இளையவன் முத்துக்காளை. இன்னும் கால்கட்டு இல்லாமல் கட்டுக்கடங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

பெண் பிள்ளைக்காக பாத்ரூம் வசதி செய்திருந்தாலும், காமாட்சிக்கு கிணற்றில் நீரெடுத்து முகம் கழுவி வாய் கொப்புளித்தால் தான் திருப்தி. கிணற்றடிக்கு போக, அங்கே வாளியில் ஏற்கனவே நீர் சேந்தி வைக்கப்பட்டிருந்தது. மெல்லிய புன்னகை முகத்தில் எட்டிப் பார்க்க முகத்தைக் கழுவி காலை கடமையை முடித்து குளித்து விட்டு சமயல் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே ஏற்கனவே கடுங்காப்பி போட்டு பித்தளை சொம்பில் மூடி வைக்கப்பட்டிருந்தது. புன்னகை இன்னும் விரிய, காபியை கணவருக்கும் ஒரு தம்ளரில் ஊற்றியவர், தானும் தொண்டையில் சரித்துக் கொண்டார். உடல் வலியெல்லாம் ஓடி புது தெம்பு வந்தது போல இருந்தது.

அதற்குள் மச்சக்காளை மாடுகளுக்கு தண்ணி காட்டி விட்டு பால் கறந்து எடுத்து வந்தார். மனைவி வைத்திருந்த காபியை ஒரு மிடறு பருகியவர்,

“உன் மவன் போட்டானா?” என கேட்டார்.

“ஆமாங்க! காலங்காத்தாலேயே எழுந்து அம்புட்டு வேலையையும் பார்த்துருக்கான். தேங்காய் சட்னி கூட அம்மியில அரைச்சு வச்சிருக்கான். இனி சுட சுட இட்லி ஊத்தறதுதான் பாக்கி.”

“அவன் போட்ட காபி எனக்கு வேணாம்டி! உன் கையால ஒன்னு போட்டுக் குடு காமு”

“ஏன் வேணாங்கறேன்? அவன் சீனிக்கு பதிலு சாணியா போட்டு கலக்கிருக்கான்? நேத்துலாம் உடம்பு வலியா கெடக்குன்னு நான் பொலம்பனத பாத்து புள்ள வேலை மெனக்கெட்டு எல்லாம் செஞ்சிருக்கான். அத மதிக்காம வேற காபி வேணாமாம்முல்ல” நொடித்துக் கொண்டார் காமாட்சி.

“அடியே! உன் மவன் போட்டுக் குடுத்தா நீ சப்புக் கொட்டிக்கிட்டு குடிடி! என் பொஞ்சாதி கையால காபி தண்ணி குடிச்சாத்தான் அந்த நாளு எனக்கு விளங்கும்டி! பிகு பண்ணாம போட்டுக் குடேன்”

“நல்லா வெளங்கும்! இதே வாயிதான் நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல, எங்காத்தா காபி போட்டுக் குடுத்தா தான் என் ஒலகம் விடியும்னு பேசுச்சு!” எத்தனை வருடம் ஆனாலும், கணவர் செய்ததை ஞாபகம் வைத்திருந்து சமயம் பார்த்து போட்டு தாக்குவதில் வரும் சுகம் அம்மம்மா சொல்லில் வடிக்க முடியாது அதை!!

“அது.. அது..” அவர் பதிலுக்குத் தடுமாறி கொண்டிருக்கும் பொழுதே காபி அவர் புறம் நீட்டப்பட்டது. ஒரு இளிப்புடன் வாங்கிக் குடித்தார் அவர்.

அதற்குள் இட்லி ரெடியாகி இருக்க, தூக்கு சட்டியில் வைத்து கணவரிடம் கொடுத்தார் காமாட்சி.

“பையனுக்குப் பார்த்து பரிமாறுங்க! நான் பகலுக்கு ஆக்கி எடுத்துட்டு வரேன்” என சொல்லியவர் கணவனை அனுப்பி விட்டு வேலையை ஆரம்பித்தார். அதற்குள் வீட்டு வேலை செய்ய வரும் மாரி வந்திருந்தார்.

“மாரி, பையன் ரூமுல தொவைக்க துணி கெடக்கும்! அப்படியே அவன் ரூம கூட்டி மொழுகிடு! பாத்திரமெல்லாம் கிணத்துகிட்ட போட்டு வைக்கறேன், வெளக்கி வச்சிடு. அப்படியே வீட்ட சுத்தி கழுவி விட்டுரு, கோழி எச்சமா கெடக்கு!  அதுக்கு முன்ன இந்த காபிய குடிச்சுட்டு போ புள்ள”

“சரித்தா!” என காபியைக் குடித்து விட்டு வேலையை ஆரம்பித்தார் மாரி.

சமையலை முடித்த காமாட்சி,

“ஏத்தா மாரி! நம்ம தீட்டு ரூம சுத்தமா கழுவி துடைச்சு வைத்தா! அங்கன தங்க ஆளு வருது! அப்படியே பரண் மேல கெடக்கற தலவாணிய வெயில்ல உலாத்தி அங்கன கொண்டு போய் போடு! மெத்தைக்கு புது விரிப்பு மாத்திடு” என வேலை கொடுத்தார்.

தீட்டு ரூம் என அழைக்கப்பட்ட அறை, அவர்கள் வீட்டை ஒட்டி கட்டப்பட்டிருந்த குட்டி அறை. ராஜேஸ்வரி இருந்த வரை, தீட்டு நாட்களில் அந்த ரூமில் தான் இருப்பாள். ஜன்னல் வைத்து, காற்றோட்டமாக கட்டி இருந்தார்கள். அவள் திருமணம் ஆகிப்போனதில் இருந்து அப்படியே கிடந்தது. இவர்கள் எல்லாம் இன்னும் மாதவிடாயின் போது வீட்டின் உள்ளே வரக்கூடாது, கணவன் மனைவி உறவு முடிந்து தலைக்கு ஊற்ற வேண்டும், குளிக்காமல் சமயல் அறைக்குப் போக கூடாது எனும் கட்டுத்திட்டங்களை கடைப்பிடிக்கும் மக்கள். ஆனாலும் பாசக்கார மக்கள்.

சமைத்த உணவைக் கட்டிக் கொண்டு மாந்தோட்டத்துக்குப் புறப்பட்டார் காமாட்சி. இவர்களுக்கு இருந்த நிலத்தில் மாங்காய் பயிரிட்டிருந்தனர். எல்லா சீசனிலும் கிடைக்கக் கூடிய வகையில் எல்லா வகை மாங்காயும் இவர்கள் நிலத்தில் விளைவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரே வகை மாங்காய் மட்டும்தான் பயிரிட்டிருந்தனர். சீசன் டைம் மட்டும் லாபம் பார்த்தவர்கள் மற்ற நேரங்களில் வருவாய்க்கு அல்லாடினர். மகன் தலையெடுக்க இவர்களின் கஸ்டமும் தீர்ந்தது.

முத்துக்காளைக்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் சின்ன வயதில் இருந்தே தாய் தந்தையுடன் பாடுபட்டவனுக்கு விவசாயம் நன்றாக வந்தது. இன்னும் லாபம் பார்க்க வேளாண்மை துறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்து என்ன பயிரிடலாம், எப்படி சாகுபடி செய்யலாம் என எல்லாம் கற்றுக் கொண்டவன் விவசாயத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருந்தான். மாங்காயை மட்டும் நம்பி இராமல் ஊடுபயிராக பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் என அதையும் பயிர் செய்தான். வருடம் முழுக்க பணவரவு இருப்பது போல பார்த்துக் கொண்டான். கஸ்டப்பட்டக் குடும்பம் கொஞ்சமாக தலையெடுக்கத் தொடங்கி இருந்தது.

வேலைக்கு ஆள் இருந்தாலும் இன்னும் இவர்கள் மூவரும் நிலத்தில் பாடுபடுவதை நிறுத்தவில்லை. மண்ணின் மேல் இவர்களுக்கு உள்ள காதல் மண்ணுக்கு போகும் போது தான் போகும்.

மாந்தோப்பை அடைந்த காமாட்சி, சேலை தலைப்பால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டார். ஊறுகாய் கம்பெனிக்கு லோடு ஏற்றிக் கொண்டிருந்தவன், தாயைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

“ஆத்தா, எதுக்கு இப்படி வெயிலுல நடந்து வந்த! இன்னும் கொஞ்ச நேரத்துல நானே வண்டி எடுத்துட்டு வந்துருப்பேன்ல” என சத்தம் போட்டான்.

“அட போடா! இதெல்லாம் ஒரு தூரமா! உன்னைய வயித்துல வச்சிக்கிட்டே காடுமேடெல்லாம் சுத்தி திரிஞ்சவடா நானு! இதென்ன பிசாத்து நடை”

“அப்போ நீ கொமரி! இப்போ நீ கெழவியாகிட்ட! இங்க நோவுது அங்க நோவுதுன்னு பாட்டுப் பாடனா காது தீஞ்சுப் போறது யாருக்கு? எனக்குத்தானே!’

“யாரு நான் கெழவியா? என்னிக்கு நீ புள்ளப் பெத்துக் குடுத்து அது என் மூஞ்சுல உச்சா போகுதோ, அப்போ ஒத்துக்கறேன்டா நான் கிழவின்னு”

“அக்காளுக்கு ரெண்டு புள்ள பொறந்து நீ பாட்டியாகி பல வருஷம் ஆச்சு ஆத்தா!”

“அதுங்களும் என் பேரக்குழந்தைங்க தான்! ஆனாலும் மவன் வூட்டு புள்ளைக் கணக்கா ஆகுமா? கோடி வூட்டு சரசா குத்த வச்சு ரெண்டு வருஷமாகுது! உனக்கு முறைதான். நானும் எப்படிலாம் கேக்கறேன் பிடிகுடுக்க மாட்டறியேடா காளை! அவள பொண்ணுப் பார்க்கப் போலாமா?”

“ஆத்தா நீ எப்படி டிசைனு டிசைனா கேட்டாலும் என் பதில் ஒன்னுதான்! எனக்கு கோடி வூட்டு சரசாவும் வேணா மாடி வூட்டு அம்சாவும் வேணா! லட்டு மாதிரி ஒரு பொண்ண பாரு பட்டுன்னு தாலிய கட்டறேன்”

“எடு அந்த வெளக்கமாத்த! அவளுக்கு கண்ணாலம் ஆகி புள்ள குட்டி ஆகிப்போச்சுடா! இன்னும் லட்டு ஜிலேபின்னுகிட்டு”

“லட்டு மாதிரி வேணும்னு தான் கேட்டேன்! அவளே வேணும்னு கேக்கல. எப்போ அவ கழுத்துல தாலி ஏறுச்சோ அப்பவே என் மனசுல இருந்து அவள எறக்கிட்டேன் ஆத்தா! அவள மாதிரி அழகா இல்லாங்கட்டியும் போகுது! நாலு வார்த்தை இங்கிலீசு பேசறவ தான் இந்த முத்துக்காளைக்கு பொஞ்சாதி. அது தான் என் லச்சியம், என் கனவு, என் ஆம்பிசேன்”

இவன் பண்ணும் அலம்பலில், காமாட்சி படித்த பெண்களைத் தேடி மொக்கை வாங்கியதுதான் மிச்சம். இவன் படித்திருந்தால்தானே படித்தப் பெண் கிடைக்கும். ப்ள்ஸ் டூ கூட முடிக்காதவனுக்கு யார் படித்த பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள்! அப்படியும் தகைந்த சில இடங்களில் முத்துக்காளையின் ஆஜானுபாகுவான உடலமைப்பையும், கரேல் என இருக்கும் நிற அழகையும் பார்த்தப் பெண்கள் பெரிய கும்பிடு போட்டு விட இவருக்கு மனம் விட்டுப் போனது.

“புள்ளையாருக்கு புள்ளயா போக பத்து பொருத்தமும் ஒனக்கு பொருந்தி வருதுடா டோய்! இந்த ஜென்மத்துல எனக்கு மகன் வயித்து பேரப்புள்ளைங்கள பார்க்க கொடுப்பினை இல்ல போலிருக்கு!” பெருமூச்சுவிட்டார் காமாட்சி.

“எனக்குன்னு ஒருத்தி பொறந்துருப்பா ஆத்தா! நீ கவலைய விட்டுப்புட்டு வந்து சோத்தப் போடு! பசி உயிர் போகுது” பசி எனும் வார்த்தை அவரைத் திசைத் திருப்பும் என அறிந்தவன் சரியாக அதைப் பயன்படுத்தினான். மச்சக்காளையும் வந்து சேர தன் கையாலேயே இருவருக்கும் பிசைந்து சாதத்தை ஊட்டினார் காமாட்சி.

வேலை வேலை என ஓடுபவன், மூன்று விஷயங்களில் மட்டும் கறாராய் இருப்பான். இடியே விழுந்தாலும் இந்த மூன்று காரியங்களை செய்வதை மட்டும் விடமாட்டான் முத்துக்காளை. வெள்ளி இரவு அவனது சோமபான இரவாகும். அன்று மட்டும் உடல் நோவு போக நண்பர்களுடன் மூச்சு முட்டக் குடிப்பான். சுவர் ஏறி குதித்து தீட்டு ரூமில் போய் படுத்துக் கொள்வான். அவன் குடிப்பது அரசல் புரசலாக தெரிந்தாலும் காமாட்சி கண்டுக் கொள்ளமாட்டார். மச்சக்காளையே தினம் சரக்கடிப்பவர்தான். அவர்கள் ஊரில் பால் கிடைக்கிறதோ இல்லையோ, சாராயம் நன்றாக புழங்கியது.

இரண்டாவது காரியம், சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளித்து விடுவான். அன்று மாடுகளை குளிப்பாட்டி விட்டு மகனுக்கு வருவார் காமாட்சி.  அவன் தலைக்கு எண்ணெய் வைத்து, உடம்பு முழுக்க பூசி எருமைமாட்டைக் குளிப்பாட்டும் கணக்காக முதுகு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவார். மச்சக்காளை தான் அவர்களுக்கு சுடுதண்ணீர் போட்டு எடுபுடி வேலைப்பார்ப்பார். மூன்றாவது காரியம் ஞாயிறு அன்று கண்டிப்பாக கறிக்குழம்பு இருக்க வேண்டும் அவனுக்கு. காலையில் இட்லியோடும், மதியத்தில் சாதத்தோடும், இரவில் தோசையோடும் கறிக்குழம்பு அல்லோலகல்லோலப்படும் அவர்கள் வீட்டில்.

அன்று வெள்ளிக்கிழமை. வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன், குளித்துக் கிளம்பினான். கரை இல்லாத வெள்ளை வேட்டி, நீல நிறத்தில் சட்டை. போனை எடுத்து சட்டைப் பைக்குள் வைத்தப்படியே,

“ஆத்தா, நான் வெளிய போய்ட்டு வந்துடறேன்” என குரல் கொடுத்தான்.

எங்கே போகிறான் என தெரிந்தும், இவர் ஒன்றும் சொல்லவில்லை.

“சாப்பிட்டுட்டுப் போடா!”

“வேணா ஆத்தா! செவல கூட சாப்டுக்கறேன்” என சொல்லியபடியே மேட்டார் வண்டியில் கிளம்பி விட்டான். வரும் போது, அது ஒரு மூலையில் கிடக்க, நடந்துதான் வருவான்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்தக் கள்ளுக்கடை. அங்கேயே சரக்கும் கிடைக்கும். அதோடு ஆம்லேட், அசைவ ஐட்டங்களையும் சுட சுட சமைத்துக் கொடுப்பார்கள். அன்று, ஒரு மரத்துக் கள் கிடைக்கவும் முத்துக்காளைக்கு ஏகப்பட்ட குஷி. கள் உள்ளே போக உள்ளம் கள்வெறிக் கொண்டது.

“மாப்ள! லட்டு மாதிரி ஆளுக்கெல்லாம் என்னைப் புடிக்காதாடா?” நூற்றி எட்டாவது முறையாக தன் நண்பன் செவலையிடம் கேட்டான் காளை.

‘ஆரம்ப்பிச்சுட்டான்டா! ஓசில வாங்கிக் குடுக்கறான்னு வந்தா, இப்படி வச்சி செய்யறானே’ முனகியவன்,

“லட்டுப் போனா போது மச்சி! ஒனக்கு பட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கும் பாரேன்!”

“ஆமாவா? என் மொகரைக்கட்டைக்கு அப்படி ஒரு பொண்ணு கெடைக்குமா? கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன், அது என் தப்பா மச்சான்?”

“கொஞ்மாவாடா கருப்பா இருக்க! பத்து வருஷம் அடுப்புல வெந்த தீஞ்சட்டி மாதிரி இருந்துட்டு கொஞ்சம் கருப்புன்னு சொன்னா சாமி கண்ண குத்தும்டா”

“இருந்துட்டுப் போறேன்! கருப்பா இருந்தா என்னடா! என் மனசு வெள்ளைடா! படிக்கலனா என்னடா, நான் படிக்காத மேதைடா! என்னை ஏன்டா ரிஜேக்ட் பண்ணறாங்க?”

“குப்பம்மாவ பொண்ணு கேட்டுப் போனா அவ ஏண்டா ரிஜேக்ட் பண்ண போறா! நீ குவின் எலிசபெத்த போய் பொண்ணு கேட்டா ரிஜேக்ட் பண்ணாம கும்தலக்கடி கும்மான்னு உன் கூட டூயட்டா பாடுவா”

“மனுஷனா பொறந்தா லச்சியம் வேணும்டா என் சிப்சு! குப்பம்மாவ கட்டி குழந்தைக் குட்டி பெக்கறதா பெருசு? குவின் எலிசபெத்த கட்டி…”

“கட்டி, எலிக்குட்டி பெக்கப் போறியா?”

“என் லச்சியம் உனக்கு இளக்காரமா போச்சுல்ல! வெண்ட்ரு! நீ வேணும்னா பாருடா, நான் படிச்சவள கட்டறேன், பல்லாண்டு வாழறேன்!” என சொல்லியவன், தன்னைக் கிண்டல் செய்த நண்பனை புரட்டிப் போட்டிருந்தான். மற்றவர்கள் வந்து பிரித்து விட, பிரித்து விட்டவர்களையும் புரட்டி எடுத்தான்.

“காளைக்கு வெறிப்புடிச்சிருச்சு! அடக்குங்கடா” என ஒரு ஓரமாக அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருந்த மச்சக்காளை சவுண்ட் விட எல்லோரும் அவனைப் பிடித்து அமுக்கி அமர வைத்தார்கள். லேசாக போதை தெளியவும் வீட்டுக்குக் கிளம்பினான் காளை.

“யப்பா! வா போலாம்”

“நீ போடா! இன்னும் ஒரு ரவுண்டு உட்டுக்கிட்டு வரேன்”

“ஆத்தா உன்னை ரவுண்டு கட்டி மொத்துனா தான் நீ அடங்குவ” என தகப்பனை திட்டியபடியே தள்ளாடி வீட்டுக்கு நடந்தான். அவன் நண்பன் செவல அங்கேயே ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தான்.

வீட்டை அடைந்து, தள்ளாடி சுவர் ஏறியவன் சந்த்தம் செய்யாமல் தீட்டு ரூமுக்குள் மெல்ல நுழைந்தான். எப்பொழுதும் போல இருட்டாகத்தான் இருந்தது. மக்கிய வாடை வரும் அந்த இடம், இன்று சுகந்தமான வாசத்தை சுமந்திருந்தது. மெல்ல அந்த வாசனையை தன் நுரையீரலில் நிரப்பியவன், கண் மூடி நின்றான். அவன் அப்படி நின்றது சில நிமிடங்கள் தான்.

அடுத்த நிமிடம் கீழே விழுந்து கிடந்தான் முத்துக்காளை. அவன் நெஞ்சின் மேல் அமர்ந்த ஒர் உருவம், பளாரேன அவன் கன்னத்தில் விட்டது ஓர் அறை. போதையெல்லாம் சர்ரென இறங்க, கோபத்துடன் அந்த உருவத்தை உறுத்து விழித்தவனின் முகம் மெல்ல மெல்ல புன்னகையைப் பூசிக் கொண்டது.

“நீதான் என் குவின் எலிசபெத்தா?”

 

(அடிபணிவான்….)

 

(இந்த கதைல வர இடம் எல்லாம் கற்பனைதான். போன கதைக்கு டெமோகிராபிக்ஸ் எல்லாம் ரொம்ப கஸ்டப்பட்டேன். சோ இந்த கதைக்கு லாஜிக் இல்லாத மேஜிக் தான் ?கதைக்கு இன்னும் டைம் ஃப்ரேம் வைக்கல. சோ இப்போதைக்கு நேரம் கிடைக்கறப்போ எபி போடறேன்.)