Oh Papa Laali–Epi 11

அத்தியாயம் 11

யூனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூரின் அட்வெண்ட்சர் பார்க்காகும். இந்த இடத்தில் இருபத்து நான்கு ரோலர் கோஸ்டர் ரைட்ஸ் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி, கொண்டாடி களிக்க உகந்த இடம் இந்த யூனிவர்சல் ஸ்டூடியோ.

 

“ரகுண்ணா! இந்தாங்க உங்க டீ ஷர்ட்லாம் அயர்ன் பண்ணிட்டேன்! அழகா போட்டுட்டு போங்க வேலைக்கு” என சிரித்த முகமாக தன் முன் நிற்பவளை என்ன சொல்வது என புரியாமல் நின்றிருந்தான் ரகுராம்.

“எதுக்கும்மா இந்த வேலைலாம் செய்யற? நான் ஆடி ஓடி வேலை செய்யற லட்சணத்துக்கு பத்து நிமிசத்துல கசங்கிட போகுது! அதுக்கு எதுக்கு மெனெக்கெடனும்!”

“இல்லண்ணா! சுருங்கி சுருங்கி இருந்தா நல்லாவா இருக்குப் பார்க்க! அதான் அயர்ன் பண்ணேன். எனக்கு இதெல்லாம் கஸ்டமாவே இல்ல”

அந்த நேரம் பார்த்து கிண்டர்கார்டனுக்கு மகனைக் கிளப்பிக் கூட்டி வந்தாள் மதுரா.

“குட் மார்னிங் ரோஹி! என்னடா கண்ணா தலை சரியாவே சீவக்காணோம். இரு அத்தை அழகா சீவி விடறேன்! மதுக்கா, நீங்க ப்ரேக்பஸ்ட் சாப்பிடுங்க! நான் டூ மினிட்ல இவனுக்குத் தலை சீவி விட்டுடறேன்” என ரோஹித்தின் கைப்பிடித்து ரூமுக்கு அழைத்துப் போனாள் வான்மதி. அவனோ மதுராவை அழ ஆரம்பிக்கப் போகும் முகத்துடன் பார்த்தப்படியே போனான். சின்னவனும் என்னதான் செய்வான்! தினம் பள்ளிக்குப் போகும் நேரம் தலையை சீவி விடுகிறேன் பேர்வழி என தன் அத்தை அடிக்கும் கூத்து அவனுக்கு முடியே வேண்டாம் எனும் அளவுக்கு வெறுத்திருந்தது. முடி கொஞ்சம் சிலிப்பிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் சீவி அது படியும் வரை விட மாட்டாள் வான்மதி.

மகன் படும் பாட்டைப் பார்க்கும் மதுராவுக்குப் பாவமாய் தான் இருக்கும். ஆனாலும் தம்பியின் ஆசை மனைவி ஆசையாய் தன் மகனைக் கவனித்து செய்வதை வேண்டாம் என சட்டென எப்படி சொல்வது என தவித்துப் போவாள்.   

ரகு சின்ன குரலில்,

“மதும்மா, இப்படியே போச்சு நம்ம மகன் சின்ன வயசுலயே சொட்டையாகி கின்னஸ் ரெக்கார்ட் படைச்சிருவான். இவனையே இந்த சீவு சீவுறாளே என் தங்கச்சி, உன் தம்பிய விட்டு வச்சிருப்பான்னு நினைக்கற? உன் தம்பி சாமி கும்பிட்டு பட்டைப் போடறானோ இல்லையோ, அவன் பொண்டாட்டி சீவற சீவுல சீக்கிரம் சொட்டைப் போடப் போறான்” என சொல்லி நகைத்தான்.

“மெதுவா பேசுங்க! அவளுக்குக் கேட்டுட போகுது! இப்படித்தான் நேத்து கோழி வாங்கிட்டு வந்தேன் சமைக்க! நான் சுத்தம் பண்ணி தரேன் அக்கான்னு, அதைப் போட்டு பத்து தடவை தண்ணி ஊத்திக் கழுவுறா! அந்தக் கோழிக்கு மட்டும் உயிர் இருந்து வாயும் இருந்துச்சு ‘மார்கழி மாச குளிருக்கு என்னை பத்து தடவை குளிப்பாட்டுறயே, நீ நல்லா இருப்பியான்னு’ சாபம் குடுத்துருக்கும் அது மட்டும் இல்ல, வீட்டையே புரட்டி மாத்தி வச்சிருக்கா! கரண்டி, கத்தி எல்லாத்தையும் வரிசையா அடுக்கி வச்சிருக்கா. நான் மாத்தி வச்சிட்டா, என்னைக் கூப்பிட்டு ‘அக்கா இது இங்க வரனும், அது அங்க வரனும்னு’ பாடம் எடுக்கறா” என சொல்லி பெருமூச்சொன்றை விட்டாள் மதுரா.  

“ஏன்டி, இதெல்லாம் உன் தம்பி கண்ணுக்குத் தெரியுதா இல்லையா?”

“காதல் மயக்கத்துல இருக்காங்க! இப்போதைக்கு எதுவும் தெரியாது”

“அப்படிங்கற!”

“ஆமா, ஆமா! என் மூக்கு சப்பையா இருக்கு, கன்னம் உப்பலா இருக்கு, கண்ணு ஆந்தை மாதிரி இருக்குன்னு எல்லாம் எப்போ கண்டுப்புடிச்சீங்க? கல்யாணம் ஆகி மூனு மாசத்துக்கு மேலதானே!”

“சேச்சே! அதெல்லாம் ஆரம்பத்துலயே கண்டுப்புடிச்சுட்டேன் மதும்மா! ஆனா மூனு மாசம் கழிச்சுத்தான் வாய திறந்து சொன்னேன்”

“ஹ்கும்! இவருக்குப் பெரிய அழகன்னு நெனைப்பு! அழகன் பட மம்முட்டி மாதிரி தொப்பையை வச்சிக்கிட்டு பேச்சப் பாரு, நக்கலப் பாரு, நையாண்டிய பாரு!”

ரோஹித்துடன் வான்மதி வர, இவர்கள் குட்டி சண்டை நின்றது.

“மதிம்மா! இன்னிக்கு தம்பிய கிண்டர்கார்டன்ல விட்டுட்டு வரியாடா? எனக்கு இடுப்பு வலிக்குதுடா”

“நான்..” விட்டுவிட்டு வருகிறேன் என ஆரம்பித்த ரகு, மதுவின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

“அதுக்கென்ன மதுக்கா! வித் ப்ளேஷர்” என கிளம்பிப் போனாள் வான்மதி. அவள் அந்தப்புறம் வெளியேற, தம்பியின் அறைக்கு குடுகுடுவென ஓடினாள் மதுரா, அவள் பின்னோடு ரகுவும்.

“டேய் தம்பி எழுந்திருடா!” என தூங்கிக் கொண்டிருந்த தம்பியை எழுப்பினாள் மதுரா. அவனோ அசைய மாட்டேன் என படுத்திருந்தான்.

“உன்ற தம்பிக்கு நைட்டுலாம் செம்ம உழைப்புடி! பாரு எழுந்திரிக்க கூட முடியல. அடேய் தடியா! ஏந்திரிடா”

“யாரப் பார்த்து தடியான்னு சொன்னீங்க! அவன் ஒன்னும் தடியாலாம் இல்ல! இனிமே அப்படி கூப்டு பாருங்க, மண்டையப் பொளக்கறேன்” என மதுரா கத்த, ரகு பதிலுக்கு மல்லுக்கட்ட, எழுந்து அமர்ந்தான் சூர்யா.

“அடடா! என்னக்கா காலையிலேயே சுப்ரபாதம் படிக்கிறீங்க ரெண்டு பேரும்” என சலித்துக் கொண்டான்.

“தம்பி மதி வெளிய போயிருக்காடா! அதுக்குள்ள உன் கிட்ட பேசனும்”

“என்னக்கா, என்னாச்சு?”

“அது வந்து…நீ பேசாம தனியா போயிருடா” என தயங்கி தயங்கி சொன்னாள் மதுரா.

“சரிக்கா”

“என்னடா பட்டுன்னு சரி சொல்லிட்ட” என ஆச்சரியமானான் ரகு.

“எனக்கும் கண்ணு இருக்கு! நானும் இங்க நடக்கறத பார்த்துட்டுத்தான் இருக்கேன் மாம்ஸ். மதி அவ மட்டும் இல்ல அவள சுத்தி இருக்கற எல்லாம் நேர்த்தியா இருக்கனும், சுத்தமா இருக்கனும்னு நினைக்கறா! அது சம்டைம்ஸ் கொஞ்சம் ஓவரா தான் போகுது. என் வைப்னு நான் பொறுத்துக்குவேன். அதையே உங்க கிட்டலாம் எதிர்ப்பார்க்க முடியுமா! எந்த மனஸ்தாபமும் வரதுக்குள்ள நானே தனியா போறத பத்திப் பேசனும்னு நினைச்சேன்கா”

“உனக்கு என் மேல வருத்தம் ஏதும் இல்லையேடா தம்பி?”

“சேச்சே, அதெல்லாம் இல்லக்கா! நீ எது சொன்னாலும் என் நன்மைக்குத்தான்னு தெரியும்கா! அவளுக்குத்தான் உங்கள எல்லாம் விட்டுட்டு வர முடியுமான்னு தெரியலக்கா! பாசத்துக்கு ஏங்கறவக்கா அவ. எப்படி உங்க கிட்ட ஒட்டிக்கிட்டா பாத்தீங்கல்ல. ஆனாலும் இது சரி வராதுக்கா! யாராச்சும் எதாச்சும் பேசி சண்டை வந்து தனியா போகாம, இப்பவே தனியா போய்டறோம்”

மதுராவுக்கு தொண்டையை அடைத்தது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவளாவது தன் தம்பி மனைவி என பொறுத்துப் போவாள்! ரகு எத்தனை நாள் அப்படி பொறுப்பான்! இது தான் சிறந்த வழி என மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்.

அன்று இரவு,

“மதிம்மா!” என மனைவியை பாசமாக அழைத்தான் சூர்யா.

“என்ன வர்மன்?”

“நாம தனியா போயிடலாமாடா?”

“ஏன், ஏன், ஏன்? அக்காவுக்கும் என்னைப் பிடிக்கலையா? போக சொல்லிட்டாங்களா? ரோஹீ குட்டிக்கு என்னைப் பிடிக்கலையா? ஏன் வர்மன் தனியா போகலாமான்னு கேக்கறீங்க? எனக்குத் தெரியும், என் கூட யாராலும் இருக்க முடியாதுன்னு. எனக்குத் தெரியும்!” என புலம்பியவளின் கண்களில் இருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.

சட்டென தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான் சூர்யா.

“அப்படிலாம் இல்லடி! எனக்கு உன் கூட சுதந்திரமா இருக்கனும். பார்க்கற இடத்துல எல்லாம் கட்டிக்கனும், முத்தம் குடுத்துக்கனும். அதெல்லாம் இங்க முடியுதா? யாரும் இல்லைன்னு நினைச்சுக் கட்டிப்புடிச்சா இந்த ரோஹி எங்கிருந்தோ வந்து நம்ம நடுவுல நுழைஞ்சிக்கிறான். கஸ்டமா இருக்குடி!” என சொல்லி அழுபவளை சமாதானப்படுத்தினான்.

“நெஜமா இந்தக் காரணம்தானா வர்மன்? வேற ஒன்னும் இல்லையே?” கண்ணில் சோகத்தை வைத்துக் கேட்டாள் வானத்து நிலவு.

“ஆமாம்டி ஆமாம்! எனக்கு என் பொண்டாட்டி வேணும்! எனக்கே எனக்கா வேணும்! என்னை மட்டும் கவனிச்சுக்க வேணும்!” என சொன்னவன் எப்படி கவனிக்க வேண்டும் என தன்னவளுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தான். 

 

பாடுவான்…