Oh Papa Laali–Epi 2

அத்தியாயம் 2

சிங்கப்பூருக்கு வந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று கார்டன் பை தெ பே. இந்த இடம் மரினா பேயில் உள்ளது. கண்ணுக்குக் குளிர்ச்சியாக பல வண்ணங்களில் 1,500,000கும் மேற்பட்ட செடி கொடிகள் இங்கே இருக்கின்றன. பல வகையான சிற்பங்களும் இங்கே செதுக்கப்பட்டு அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

 

புதிதாக வசந்தம் சேனலில் ஒளிபரப்பாக போகும் ‘ருசியோ ருசி’ எனும் நிகழ்ச்சிக்கு சூர்யாவை ஹோஸ்டாக தேர்ந்தெடுத்திருந்தார்கள். சிங்கப்பூரை சுற்றி வந்து மக்களால் அறியப்படாத சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிட்டு, உணவுக்கு ரிவீயு கொடுத்து கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும்.

இவன் கொளு கொளு உடம்பைப் பார்த்து சான்ஸ் வந்ததா இல்லை கலகல குணத்தைப் பார்த்து வந்ததா என தெரியவில்லை. ஆஃபர் கிடைத்ததில் இருந்து இவனது மாமா ரகுராம் விடாமல் இவனை ஓட்டித் தள்ளிக் கொண்ருந்தான்.

“மாப்பு, உனக்கு மட்டும் எப்டிடா இப்படிலாம் சான்ஸ் கிடைக்குது? ப்ரீ சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு, சம்பள காசுக்கு காசும் ஆச்சு. இதுக்குப் பேருதான் கையிலயும் காசு வாயிலயும் தோசையா? பார்த்துடா இன்னும் உடம்பு போட்டுறாதே, பொண்ணு கிடைக்க கஸ்டமா ஆகிடப்போது!”

“இப்ப எதுக்கு அவன கலாய்ச்சு தள்ளறீங்க? இத்தனை திறமையான மக்கள் இருக்கும் இந்த சிங்கப்பூருல, டேலண்ட் ஷோக்கு போய் அவன் வாய மட்டுமே மூலதனமா வச்சு வின் பண்ணான் என் தம்பி. இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டே வரான். இதெல்லாம் அவனோட அயராத கடும் உழைப்பு. சும்மா யாரும் இந்த வேலைய தூக்கிக் குடுத்துரல!” என சத்தம் போட்டாள் மதுரா.

“விடுக்கா! மாமா என்னைக் கலாய்க்கறதும் நான் அவரை டபாய்க்கறதும் சகஜம்தானே! இதப்போய் ஏன் சீரியசா எடுத்துக்கற?”

“என்னமோடா நாம பாசமா வளர்த்துட்ட புள்ளைய யாராச்சும் அடிச்சிட்டாளோ, கொறைச்சிப் பேசிட்டாளோ நம்மாள தாங்க முடியறது இல்ல. அப்படி பேசறது நம்மள பெத்த அம்மாவா இருந்தாலும் சரி, கட்டுன புருஷனா இருந்தாலும் சரி கோபம் வரத்தான் செய்யுது. வீ லேடிஸ் காண்ட் ஹெல்ப் இட் யூ க்னோ!”

“அப்போ ஏன் என்னை உன் தம்பி கழுவி ஊத்தறப்போலாம் சும்மா இருக்க நீ?” என சலுகையாக மனைவியை வம்பிழுத்தான் ரகு.

“நீங்க உங்கம்மா பெத்த புள்ளைதானே! எனக்கு ஏன் கோபம் வரப்போகுது!”

“ஒரு பொண்ணுக்கு கட்டுன புருஷன் தான் முதல் குழந்தைன்னு பேஸ்புக்ல படிச்சேன் மதும்மா!”

“அதுல்லாம் பொம்பள பேரு வச்ச ஆம்பள ஃபேக் ஐடி யாராச்சும் சொல்லிருக்கும்! பச்சப் புள்ள மாதிரி எல்லாத்தையும் நம்பக்கூடாது ரகு”

“யக்கா! உன் ஆத்துக்காரா பச்சைப்புள்ள, அவரு பலான புள்ளக்கா! என் கூட நாடகத்துல நடிச்ச தாமிரா நம்பரு வேணும்னு கேக்கறாருக்கா! என்ன செய்தின்னு கொஞ்சம் கேட்டு வை” என போகிற போக்கில் கொளுத்திப் போட்டுவிட்டு ரூமுக்குள் நுழைந்துக் கொண்டான் சூர்யா.

“எதுக்கு இப்போ அந்த தாமிரா நம்பரு தொரைக்கு? வீட்ல இருக்கற மதுரா பத்தலையா? தாமிரா வேற கேக்குதா?”

“அவ என் ஸ்கூல் மேட்டும்மா! கேதரிங்கு கூப்படலாம்னு தான் நம்பர் கேட்டேன்! சத்தியமா வேற ஒன்னும் இல்ல மதும்மா!”

“என்னா கேதரிங்? 96 மாதிரியா? இந்த கர்மத்துக்குத்தான் உங்களுக்கு ரகு ராம்…………னு பேர் வச்சிருக்காங்களா? நீங்க ராம், அவ என்ன ஜானுவா?” என மதுரா ஒரு பிடி பிடிக்க, ரகு திண்டாட கடைசியில் சூர்யா தான் வந்து காப்பாற்றி விட்டான்.

வீட்டில் நடந்த கூத்தை நினைத்து புன்னகைத்தப்படியே அன்று அவர்கள் ஷூட்டிங் போக போகும் செம்பாவாங் ஃபூட் செண்டருக்குள் நுழைந்தான் சூர்ய வர்மன். இந்திய முஸ்லிம் உணவகத்தில் பரிமாறப்படும் மீ சியாம்(நூடுல்ஸ்) பற்றிதான் இன்றைய ஷூட்டிங். மீ சியாம் உறைப்பு, புளிப்பு, லேசாக இனிப்பு என எல்லாம் கலந்து இருக்கும்.

முதலில் ஒரு போவ்லில் நூடுல்சை தயாரித்து இவனுக்குக் கொடுத்து டேஸ்ட் செய்ய சொன்னார்கள். கொஞ்சமாக சாப்பிட்டு ருசி எப்படி இருக்கிறது என தெரிந்துக் கொண்டான் சூர்யா. அதன் பின் நிகழ்ச்சியின் போது என்ன பேசலாம் என டைரக்டருடன் கலந்தாலோசித்து முக்கிய டையலாக்ஸ் மட்டும் எழுதி வைத்துக் கொண்டான். மற்றதெல்லாம் ப்ளோவில் தானாக வரும் அவனுக்கு.

பின் மேக்கப் போடும் பெண் வந்து, அவன் முகத்தைத் துடைத்து கொஞ்சமாக டச்சப் செய்து விட்டாள். அந்த சீன பெண் வேலையை கவனிக்க இவன் சிரித்தப்படியே அவளிடம் கடலை வறுத்தான். முகத்தை ஸ்கிரினில் பளபளவென தெரியும்படி பட்டி டிங்கரிங் செய்தவள், அவன் தோளளவு இருந்த முடியை அழகாக வாரி இரண்டு பக்கமும் தெரியும்படி முன்னே இழுத்து விட்டு செட் செய்தாள்.

“ரெடி டூ கோ பாஸ்” என டைரக்டரை பார்த்து சொன்ன அந்த மேக்கப் பெண், சூர்யா அமரப் போகும் இடத்துக்கு யாரும் வராதபடி அணையாக நின்றுக் கொண்டாள். குட்டி மைக்ரோபோன் ஒன்று சூர்யாவின் சட்டை பட்டன் அருகே மாட்டப்பட்டது. லைட்டிங் சரியாக அமைய அவனது தலைக்கு மேல் நீள் சதுர வெள்ளை அட்டை ஒன்றுப் பிடிக்கப்பட்டது.

டைரக்டர் சமிக்ஞை கொடுக்க அழகான பவுலில் இன்னொரு ப்ரேஸ்சான மீ சியாம் எடுத்து வரப்பட்டு சூர்யாவின் முன்னே வைக்கப்பட்டது.

“சூர்யா! ரெடி டு கோ?” என டைரக்டர் கம் கேமராமேன் கேட்க, இவன் ஆமென தலையசைத்தான்.

“அக்‌ஷேன்!” என அவர் குரல் கொடுக்க, இவன் பாட ஆரம்பித்தான்.

“இந்த பொறப்புத்தான்

நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது

அத நினைச்சுத்தான்

மனம் உலகம் முழுவதும் பறக்குது!!!”

என தன் காந்தக் குரலால் பாடியவன் கேமராவைப் பார்த்து புன்னகைத்தான். பின் சாப்பிடும் கரண்டியை எடுத்து தன் முகத்தின் முன் ஆட்டிக் காட்டியவன்,

“வணக்கம் சிங்கப்பூர்! நான் உங்கள் நண்பன் சூர்யவர்மன். இது உங்கள் பசியை கிள்ளி ருசியைத் தேடி ஓட வைக்கப் போகும் ஷோ ‘ருசியோ ருசி” என ஆரம்பித்து, உணவை சாப்பிட்டுக் காட்டி, அதன் ருசியை பிரித்து மேய்ந்து என அருமையாக படைத்து முடித்தான்.

“குட் ஜாப் சூர்யா!” என டைரக்டர் பாராட்ட, சிரிப்புடன் அவரைக் கட்டிக் கொண்டான்.

அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மூன்று உணவு இடங்களைக் காட்டுவார்கள். இங்கே முடித்து விட்டு பேக் ஆப் செய்தவர்கள் அடுத்த ஃபூட் செண்டருக்கு வேனில் பயணித்தார்கள்.

கிடைத்த கேப்பில் போனை எடுத்து தனது பேஜில் ஒரு செல்பியை போட்டு, ‘வாழுங்க, வாழ விடுங்க’ என மொக்கையாக ஒரு வரியைத் தட்டி விட்டவன் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான். இந்த மாதிரி எண்டெர்டெண்ட்மெண்ட் ஃபீல்டில் இருப்பவர்கள் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால் சட்டென மக்கள் இவர்களை மறந்து அடுத்த ஆளைத் தேடி போய் விடுகிறார்கள்.

போனை பாக்கேட்டில் போடும் முன் நோடிபிகேஷன் சத்தம் கேட்டது. பிறகு பார்க்கலாம் என எண்ணியவன், பக்கத்தில் அமர்ந்து வந்த மேக்காப் பெண்ணிடம் மீண்டும் கதை அளக்க ஆரம்பித்தான். அவன் பேசுவது பிடிக்காதது போல மீண்டும் மீண்டும் போன் சத்தம் கேட்டப்படியே இருந்தது.

“யார்டா அது!” என முனகியவன் போனை எடுத்துப் பார்த்தான். பேஸ்புக்கில் தான் அத்தனை நோடிபிகேஷன் காட்டியது. திறந்துப் பார்த்தால், அந்த ஸ்கை மூன் அவன் பேஜை ஸ்பாம் செய்திருந்தாள் ஹார்ட்டாக விட்டு. அவன் அந்தப் பக்கத்தை ஆரம்பித்த போஸ்டில் இருந்து இப்போது அனுப்பிய போஸ்ட் வரைக்கும் ஹார்ட் விட்டிருந்தாள். அதுவே சுமார் ஆயிரத்தைத் தாண்டி இருந்தது.

“எவ இவ?”

அந்த ஸ்கை மூன் ப்ரோபைலைப் போய் அலசினான். புதிதாக திறக்கப்பட்டிருந்த அக்கவுன்ட். விதவிதமான நிலவு படங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. இவனது பேஜை லைக் செய்திருந்தவள், இவன் பெர்சனல் அக்கவுண்டுக்கு ரிக்வெஸ்ட் கொடுக்கவில்லை.

“யாரிந்த ஃபேக் ஐடி? திடீர்னு என் மேல எங்கிருந்து இவ்வளவு பாசம் பொங்குச்சு! செலிபரெட்டி லைப்ல இதெல்லாம் ஜகஜமப்பா!” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் கண்கள் அப்பொழுதுதான் வந்திருந்த மேசேஜை கவனித்தது.

“ஹாய் வர்மன்! ஹவ் ஆர் யூ? இன்னிக்கு நீங்க பாடன பாட்டு நச்சுன்னு இருந்துச்சு. அதுவும் நீங்க சாப்பிட்ட அழகு இருக்கே! அடடா, அதை வர்ணிக்க வார்த்தையே டிக்‌ஷனரில இல்ல. உங்க மெனெரிஷம்லாம் வெரி, வெரி கியூட்! அப்பவே உங்க எதிர வந்து உட்கார்ந்து, பவுல பிடுங்கி மீதிய நான் சாப்பிடனும் போல இருந்துச்சு!”

‘ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்துச்சோ இந்த மூன்! ஆனாலும் பிடிங்கி சாப்பிடனும்னு சொல்லறதெல்லாம் ரொம்பவே ஓவர்!’

சற்று நேரம் கழித்து இன்னொரு மேசேஜ் வந்தது.

“உங்க கிட்ட ஒன்னு சொல்லலாமா வர்மன்?”

‘ஒன்னு, ரெண்டு, மூனு எத்தனை வேணும்னாலும் சொல்லலாம்!’

“மீ சியாம் சம்பல் சட்டை பாக்கேட் கிட்ட லேசா தெறிச்சிருக்கு பாருங்க வர்மன்! அடுத்த ஷூட்கு கண்டிப்பா வேற சட்டைய மாத்திருங்க!”

மேசேஜைப் படித்தவன் குனிந்து தன் சட்டையைப் பார்த்தான். நிஜமாகவே சம்பல் பட்டிருந்தது.

‘என்னை சட்டை மாத்த சொல்லி ஆர்டர் போட நீ யாரு?’

எப்பொழுதும் இப்படி மெசெஞ்சரில் புகைப்படம் வைக்காத ப்ரோபைலில் இருந்து வரும் மேசேஜ்கு வெறும் ஹார்ட் பொம்மையை அனுப்பி வைப்பதுடன் பேச்சை முடித்துக் கொள்வான் சூர்யா. முகத்தைக் காட்ட துணியாத ஃபேக் ஐடியுடன் பேசுவது, குட்டி யானைக்கு டையபர் மாட்டுவது போல வேண்டாத வீண் வேலை என்பது அவன் எண்ணம்.

ஆனால் இந்த ஸ்கை மூன் அவன் பெர்சனல் ஸ்பேசில் நுழைய முற்பட்டது இவனுக்கு லேசான கோபத்தைக் கொடுத்தது. அந்தக் கோபம் அவனை பதிகல் போடவும் வைத்தது.

“யாரும்மா நீ? யாரும்மாவா யாருடாவா? என்னை ஸ்டால்க் பண்ணறியா?”

பத்து நிமிடம் கழித்து ரிப்ளை வந்தது.

“யாரும்மா தான்! டா இல்ல! கொஞ்ச நாளைக்கு யாரோவாவே இருக்க விரும்பறேன் வர்மன். அதுக்கு அப்புறமா உங்களுக்கு எல்லாமுமா இருக்கப் போறேன்! அண்ட் ஓன் மோர் திங்!!!!”

‘கொழுப்பப் பாரேன்’

“வாட்?” என இவன் பதில் போட,

“அந்த மேக்கப் போடற சைனிஸ் கூட என்ன வழிசல்? அதெல்லாம் வேணாமே! எனக்கு பிடிக்கல வர்மன்! ரொம்பவே கோபம் வருது!”

‘செய்யறது ஸ்டால்கிங்! அதுல என்னடி லூஸ் டால்கிங்?’

“உங்களுக்கு பிடிச்சா என்ன பிடிக்கலனா என்ன? அதனாலலாம் என் பழக்கத்த மாத்திக்க முடியாது! காட் இட் மிஸ்/மிஸ்டர் ஃபேக் ஐடி?”

“நான் மிஸ் தான் வர்மன்! நீங்க அனுமதிச்சா உங்களோட மிஸஸ்!”

“பார்டா! மூன் நீ நல்லா போடுற சீன்! ஆனா இந்த சீன்லாம் இங்க வேலைக்கு ஆகாது! இந்த விளையாட்டுக்கு நீங்க வேற ஆள பாருங்க ஃபேக் ஐடி. குட் பாய்!” என அனுப்பியவன் போனை தூக்கி பாக்கேட்டில் போட்டான். கைகள் சட்டைப் பாக்கேட்டில் இருந்த சம்பல் கறையைத் தடவிப் பார்த்துக் கொண்டது.

பப்ளிக் ஃபிகர் ஆன இந்த இரு வருடங்களில் இப்படி பல பல மேசேஜ்கள், இமேயில்கள், கார்ட்ஸ் என வந்த வண்ணம் தான் இருக்கின்றன இவனுக்கு. சக கலைஞர்கள் பலர் வீடியோ லீக் மேட்டர், ஸ்க்ரீன் ஷாட் மேட்டர் என சிக்கி சின்னாபின்னமானதை கண் கூடாக கண்டிருந்தவனுக்கு இப்படி வரும் மேசேஜ்கள் என்றாலே அலர்ஜி. தெரியாமலோ, தெரிந்தோ எதாவது பதில் போட, அது வைரலாகி தனக்கே ஆப்பை சொறுகும் என பயம் நிறையவே இருந்தது சூர்யாவுக்கு. நேரில் பெண்களிடம் வழிந்து வைத்தாலும் அதெல்லாம் ஹார்ம்லெஸ் ஃப்ளிர்ட் தான். நத்திங் சீரியஸ்! அதனாலேயே அந்த ஸ்கை மூனை மறந்து அடுத்த ஷூட்டிங்கில் என்ன பேசுவது என மனதில் ஓட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்ததாக அவர்கள் போனது ‘பாகுஸ்’ எனப்படும் ஃபூட் கோர்ட். அது யீஷூன் எனும் இடத்தில் இருந்தது. அவர்கள் ஷூட்டிங்குக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்க, ஒரு பதின்ம வயது மலாய் பையன் சூர்யாவை நெருங்கினான்.

“யெஸ் டூட்!” என சிரித்தமுகமாக பையனை எதிர் கொண்டான் இவன்.

தன் கையில் வைத்திருந்த ப்ளாஸ்டிக் பேக்கை சூர்யாவிடம் நீட்டியவன், யாரோ ஒரு இந்திய பெண் இதை கொடுத்து விட சொல்லியதாக சொன்னான். யார், எவர் என இவன் விசாரிக்க பாவாடை சட்டை போட்ட பெண் என சொன்னானே தவிர அவனுக்கும் யாரென்று தெரியவில்லை. டிப்ஸ்சாக ஐந்து டாலர் கிடைக்கவும் சரியென சொல்லி இருக்கிறான் அந்தப் பையன். சூர்யாவின் கையில் பையைத் திணித்தவன்,

“அம்பிக் ஜே! ஓராங் அடா கெர்ஜா லாயேன் சே!” (எடுத்துக்கொள்! எனக்கு வேறு வேலை இருக்கிறது என மலாயில் பொருள்படும். மலேசியாவில் லா சேர்த்து பேசுவது போல சிங்கப்பூரில் வாக்கியத்தின் முடிவில் சே என சேர்த்துக் கொள்வார்கள் மலாய்க்காரர்கள்) என சொல்லி கிளம்பிவிட்டான்.

பையைத் திறந்துப் பார்த்தான் சூர்யா! ஆகாய நீலத்தில் அழகான ஷேர்ட் இருந்தது உள்ளே. வெளியே எடுத்துப் பிரித்துப் பார்த்தான். டபள் எக்ஸ். எல் சைசில் இருந்தது. கூடவே ஒரு குட்டி கார்ட் சட்டையைப் பிரிக்கும் போது கீழே விழுந்தது. அதில்,

“ஸ்கை ப்ளூ ஷேர்ட் ஃபோர் மை வர்மன்.

ப்ரோம் : ஸ்கைமூன்” என இருந்தது.

மூன்று ஹார்ட் வேறு வரைந்து வைத்திருந்தாள். சாமி ரூமில் வைத்து கும்பிடலாம் போல இருந்தது அவளின் அழகான கையெழுத்து. அழகாய் அடுக்கி வைத்தது போல வரிசையாக இருந்தது.

“நம்ம சைஸ்தான்! சட்டைய மாத்த சொன்னவ, அத வாங்கியும் குடுத்து விட்டுருக்காளே!” என வாய் விட்டு முனகியவன், சுற்றிலும் கண்ணை ஓட்டினான். அந்த இடத்தில் பலர் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். அதில் இவள் யாரென கண்டுப்பிடிப்பான் சூர்யா!

“நீ வாங்கி குடுத்தா உடனே சட்டையை மாத்திடனுமா? முடியாது!” என வாய் விட்டு சொன்னவன், போட்டிருந்த அதே லேசான கறை படிந்த சட்டையுடனே ஷூட்டிங்கை முடித்தான்.