14
‘உன்னால அவ பட்டினி’ மனம் அடித்துக்கொள்ள, மாதவன் பேசிக்கொண்டிருப்பது எதுவுமே பைரவின் காதில் விழவில்லை. தேவையில்லாமல் அவளை கடிந்துகொண்டதை எண்ணி தன்னை தானே நொந்தவன், அவள் கைபேசிக்கு அழைத்தான். அவள் ஏற்கவில்லை. சில நொடிகளில் அவளே அழைத்தாள்.
“எங்க டா இருக்க?”
“நான் ரிசார்ட்க்கு வெளியே இருக்கேன், இங்க கைரேகை ஜோசியம் சொல்றவங்க இருக்காங்கன்னு சொன்னாங்க, அதான் குறிகேட்கலாம்னு…”
நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தவன், “சொல்லாம இப்படித்தான் போவியா? பத்திரமா இரு, வரோம்” அழைப்பை துண்டித்தான்.
“வா மாதவா…” மாயா சொன்னதை பைரவ் வேகமாக நடந்தபடியே மாதவனிடம் சொல்ல, இருவரும் ரிசார்டின் வெளியே அவள் சொன்ன இடத்தை நோக்கி நடந்தனர்.
அங்கே மரத்தின் நிழலில் நடுத்தர வயது பெண் ஒருவர் அமர்ந்திருக்க, அவரிடம் கையை நீட்டியபடி ஆர்வமாக அமர்ந்திருந்தாள் மாயா.
இவர்கள் அவளை நெருங்கிய பொழுது, அந்த ஜோஸ்யக்கார பெண்ணோ, “கண்டிப்பா நான் சொல்றது நடக்கும் போது, நீயா என்னை தேடிவந்து சொல்லபோற பாரேன்” என்று சொல்ல, மாயாவோ ஏக்கமாக,
“இதுக்கு பரிகாரம் கிடையாதா ஆன்ட்டி?”
“நல்லதா தானே சொன்னேன், ஏன் மா பரிகாரம் கேட்கறே?”
சிலநொடிகள் குழப்பமாய் அவரை பார்த்திருந்த மாயா, மேலே எதுவும் பேசாது, அவரிடம் பணத்தை தந்துவிட்டு எழுந்தாள்.
“இங்க என்ன பண்றே?” மாதவன் கேட்க, பைரவோ மௌனமாக இருக்க,
“அவங்க…” துவங்கியவள் “வேணாம் போ…” ஏனோ கோவமாக முன்னே நடக்க துவங்கினாள்.
ஆண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, “சொல்லுமா என்னாச்சு ?” மாதவன் கேட்க, பைரவிற்கோ ஒன்றும் விளங்கவில்லை.
“என்னத்த சொல்ல?” கோவமாக திரும்பியவள், “அவங்க… வேணாம் விடு” இம்முறையும் எதுவும் சொல்லாது ரிஸார்ட்டிற்குள் நுழைந்தாள்.
பொறுமையிழந்த பைரவோ “மரியாதையா சொல்லு, கேட்டுட்டே இருக்கான்ல.”
மாதவனும் குழப்பமாய், “அப்படி என்னடி சொன்னாங்க, இப்படி வருத்தப்படுற மாதிரி?”
“போடா எனக்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகிடுமாம்! அதுவும் பெரியவங்க பார்த்து செஞ்சு வைப்பாங்களாம்! போதுமா?”
சிரித்துவிட்ட மாதவனோ, “இதுக்கா பரிகாரம் கேட்ட?”
பைரவும் “இதுல என்ன வருத்தமோ மேடமுக்கு, பரிகாரம் செஞ்சு நிவர்த்தி செய்ற அளவுக்கு?” என்று வம்பிழுக்க,
அதுவரை, வேகமாக நடந்து கொண்டிருந்தவள் ஒரு நொடி நின்று, சன்னமான குரலில் கேள்வியாய், “பெரியவங்க பார்த்துவைப்பாங்கன்னு… அப்போ முகில்?” என்றவள் அதற்குமேல் ஏதும் சொல்லாது வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
மாதவன் இதை எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும், மொத்தமாய் அதிர்ந்தது பைரவ் தான்.
‘அவள் கேட்டதின் அர்த்தம் என்ன? மாயா ஒருவேளை முகிலனை?’
“நான்சென்ஸ்!” வாய்விட்டு கத்தியவனை பார்த்த மாதவன்,
“என்ன பைரவ்?”
“என்ன முகில்? என்னவாம் அவனுக்கு? என்ன லவ் பண்றளாமா? நீ போய் செக் அவுட் விசாரி நான் பேசிட்டு வரேன்” படபடவென பொரிந்து தள்ளியவன் சில நொடிகள் எங்கோ கோவமாக வெறித்திருந்துவிட்டு, வேகமாக வாணியின் அறைக்கு புறப்பட்டான்.
மாயா சோகமாக நாற்காலியில் அமர்ந்திருக்க, வாணி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
“இப்போ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்றபடி கோவமாக வந்த மகனை பார்த்தவர்,
“என்னடா?”
“வாணிமா இதுல இன்வால்வ் ஆகாதே” அவரை கடிந்து கொண்டவன்,
மாயாவிடம் “ஹோய் உன்னைத்தான்! என்ன நெனச்சுட்டு இருக்க? வேலைலாம் விட்டுட்டு எல்லாரும் உனக்காக வந்துருக்கோம், ஆனா உனக்கு கொஞ்சமும் எங்க நினைப்பே இல்லையா? யாரவன்? நேத்துதான் பார்த்த அதுக்குள்ள என்ன பெரிய இது…” பொரிந்து தள்ளினான்.
“ப்ளீஸ் விடு” அவள் திரும்பிக்கொள்ள,
“என்ன விடு? மரியாதையா சொல்லு”
“முடியாது போ”
“மாயா!”
“என்னடா?”
“ஆர் யு இன் லவ்?”
“இல்ல! ஆனா அது…”
அவள் பதிலுக்கு எனோ அவன் காத்திருக்கவில்லை, கோவமாக வெளியேறிவிட்டான்.
மாதவனுக்கு பைரவை சமாதானம் செய்வதைவிடவும் மாயாவிடம் பேசுவது இப்பொழுது முக்கியமாக பட, அறையின் கதவை தட்டிவிட்டு நுழைந்தவன் வாணியை பார்க்க அவரோ இன்னும் ஏதும் விளங்காமல் மாயாவை பார்த்திருக்க, மாயாவோ கால்களை கட்டிக்கொண்டு, முகத்தை மூட்டுகளில் புதைத்து கொண்டிருந்தாள். தங்கையின் தோளில் மெதுவாக கைவைத்தவன்,
“கண்ணா என்னாச்சு. ஏதாவதுன்னா என்கிட்டே சொல்லுவியே இப்போ ஏன் இப்படி பண்ற?” பொறுமையாக கேட்டான்.
“எனக்கு…” அவள் மாதவிடம் பேச பேச, தெளிவது ஏனோ வாணியாக இருந்தார்.
“சரி நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு, கொஞ்ச நேரத்துல ட்ரீ ஹவுஸ் போகணும்” என்றவன், “நான் பைரவ் கிட்ட பேசிக்கறேன். அவன் புரிஞ்சுப்பான்” மாதவன், அறையை விட்டு வெளியேறும் முன் வாணியிடம்,
“பாத்துக்கோங்க ஆன்ட்டி நான் பைரவ பார்த்துட்டு வரேன்” சின்ன தலையசைப்புடன் சென்றான்.
—
இயற்கை எழிலை ரசிக்க மனமின்றி, சிறிய பாறைகளின் மேலே மோதிச்செல்லும் வெண்ணிற நீரோடை அருகே , குளிருக்கு இதமாக மெல்லிய வெளிச்சம் முகத்தில் படர, யூகலிப்டஸ் வாசம் நாசியை துளைக்க, கண்களை மூடி மரத்தில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் பைரவ்.
இயற்கையின் அமைதிக்கு புறம்பாய் அவன் மனமோ,
‘அவளுக்குனு ஒருத்தனை பிடிச்சுருக்கு அதுல உனக்கென்ன இப்போ பொறாமை?’
‘நான் ஒன்னும் பொறாம படல! என்னமோ பயம்…’
‘என்ன பயம்? உன்னைவிட அவன்தான் முக்கியம்னு போயிடுவாளோன்னா?’
‘சேச்சே, பாத்துகிட்டே இரு அவன் கிட்ட பேச பிடிக்காம என்கிட்டே வந்துடுவா. எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் செட் ஆகும். வேற யார் கூடவும் அவ செட் ஆக மாட்டா!’
‘அப்போ அவ அவனை விட்டு பிரியனும்? அவளுக்குனு விருப்பம் இருக்க கூடாது? அப்படித்தானே?’
‘எல்லாத்துக்கும் என்னை அவிப்பிராயம் கேப்பா, ஆனா முகிலன் விஷயத்துல வாயே தொறக்கல. அவ என்னை விட்டு போகக்கூடாதுன்னு தான் நினைக்கறேன். அதுல என்ன தப்பு?’
‘அப்போ அவளை நீ உரிமைகொண்டாடற ஆனா அவ விருப்பத்தை நீ மதிக்கல அப்படித்தானே?’
‘நோ! இல்ல, அவன் யாரோ எவரோ? நல்லவனா எதுமே தெரியாம இப்படியா… நான் மாயாவை அப்படி விட முடியாது.’
‘நமக்கு பிடிச்சவங்களை கட்டிப்போட்டு அன்பா இருக்க செய்யமுடியாது, அன்பிருந்தா அவங்களே இருப்பாங்க. இதுகூட உனக்கு புரியலையா?’
எதிரும் புதிருமாய் தன் மனமே இரண்டாய் பிளந்து வாதம் செய்ய, அந்த நொடி அமைதி என்ற வார்த்தை கூட அவனுக்கு அந்நியமாக தோன்றியது.
“பைரவ்” மாதவனின் குரலில் கண் திறந்தவன்,
“மாயா சாப்பிட்டாளா?”
“இல்ல ஆனா நாம நினைச்சமாதிரி ஒன்னும் இல்ல”
“புரியலை”
“அவளுக்கு வந்துருகறது காதலே இல்ல பைரவ், நீ டென்ஷன் ஆகாத, வா ரூம் வெகேட் பண்ணிட்டு ட்ரீ ஹவுஸ் போகணும்”
அமைதியாகவே மாதவனுடன் புறப்பட்டான் பைரவ்.
ரிசார்டிலிருந்து ட்ரீ ஹவுஸிற்கு மாறினர்.
அகண்ட வலிமையான மரங்களின் மேலே, இரும்பும் மரமும் கொண்டு அற்புதமாய் அமைக்க பட்டிருந்தது இரு மரவீடுகள். மேலே ஏறிச்செல்ல படிக்கட்டும் கீழே சற்றுத்தொலைவில் உணவகம், பரந்துவிரிந்த புல்வெளி, அடர்ந்த மரங்கள் என அற்புதமாய் காட்சியளிக்க, பைரவின் மனம் கூட அமைதியானது.
படியேறி சென்றவர்களை வரவேற்றது அந்த வீட்டின் சிட்டவுட்.
ஒருவர் அமரும் மூங்கில் ஊஞ்சல், காபி மேஜை, மூங்கில் சோஃபா, சிட்டவுட்டை கடந்து உள்ளே சென்றால், ஒரு டபிள் காட், ஒரு சிங்கிள் காட், கொசு வலையால் போர்த்தப்பட்டிருந்தது, அட்டேச்சுடு குளியலறையும் இருந்தது.
பைரவ், வாணி, மாயா ஒரு வீட்டிலும், அதை ஒட்டியிருந்த வீட்டில் கிருஷ்ணன், கீதா தம்பதியினர் மற்றும் மாதவன் தாங்கிக்கொள்ள முடிவு செய்தனர்.
அனைவரும் உற்சாகமாக வீட்டை சுற்றிப்பார்க்க, மாயாவோ சோகமாக ஆடும் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவளை நெருங்கிய பைரவ்,
“மாயா நீ இன்னும் சாப்படலையா? ஆன்ட்டி சொன்னாங்க?”
“மூட் இல்ல”
“உனக்கு சாப்பிட மூட் வேணுமா? எனக்கு தெரியாதே!” புன்னகைத்து சமாதானத்திற்கு அடிப்போட்டான்.
“ப்ளீஸ் வேணாம் விடு” கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.
“மாயா வா சாப்பிட போகலாம், எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க”
“நீங்க போயிட்டு வாங்க”
“ப்ளீ…” அவன் முடிக்கும் முன்னே மாயாவின் கைபேசி ஒலிக்க, திரையில் முகில் என்று எழுத்து வந்ததை பைரவும் கவனித்தான்.
‘இவன் எதுக்கு கால் பண்றான்?’ பைரவ் பற்களை கடிக்க,
அதுவரை சோகமாக இருந்த மாயாவோ உற்சாகமாக, “ஹாய் வந்துடீங்களா?” என்று துள்ளி எழ,
‘என்ன இங்கயுமா!’ முகம் வெளிறினான்.
“ஓ எஸ்!” அழைப்பை துண்டித்தவள்,
“வா பாஸ் சாப்பிட போகலாம்” எதுவுமே நடக்காததை போலே அவள் முன்னே செல்ல,
“இப்போதான் கூப்பிடலாம்னு வந்தேன், சாப்பிட்டுவந்து பேசிட்டே இருங்க” வாணி வந்து அழைக்க மௌனமாகவே கிளம்பினான் பைரவ்.
உணவகத்தின் வாயிலில் முகிலன் காத்துக்கொண்டிருந்தான். மாயாவை கண்டவன் முகமெங்கும் புன்னகை.
“வாங்க மேடம், எங்க நான் வரதுக்குள்ள என்னைவிட்டு சாப்பிட போயிருப்பீங்கன்னு நினைச்சேன்”
“அதெப்படி, வர சொல்லிட்டு தனியா போவேனா?”
“இவ்ளோநேரம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்துட்டு இப்போ இளிக்கிறத பாரேன்” மாதவனின் காதில் முணுமுணுத்தவன், “எப்படியோ தின்னா சரி” உணவகத்தின் உள்ளே சென்றான்.
அனைவரும் தங்களுக்கு வேண்டியதை சொல்ல, மாயா மட்டும் எதுவும் ஆர்டர் செய்யாமல் முகிலனிடம், “எனக்கும் நீங்களே ஆர்டர் பண்ணுங்க” மெனு கார்டை ஆர்வமாக முகிலனிடம் நீட்டினாள்.
“ஸ்யூர்” புன்னகையுடன் அதை பெற்றுக்கொண்ட முகிலன், பட்டியலை பார்க்க, மாயாவின் முழு கவனமும் முகிலன் மேலேயே இருந்தது.
மஷ்ரூம் பிரைட் ரைஸ், வெஜ் மஞ்சுரியன் ஆர்டர் செய்தான் தனக்கும் மாயாவிற்கும்.
“நோ! வேற சொல்லு மாயாக்கு மஷ்ரூம் பிடிக்காது!” பைரவ் மறுக்க. அவனை முறைத்த மாயா, “இல்ல பரவால்ல, அதுவே இருக்கட்டும்” முகிலனிடம் புன்னகைக்க,
“பரவால்ல வேற சொல்றேன்” முகிலன் மீண்டும் மெனுகார்டை எடுக்க, மாயா வற்புறுத்தி அவன் முதலில் சொன்னதையே ஆர்டர் செய்தாள்.
“நீங்க எப்படி இவ்ளோ பிட்டா…” மாயா முகிலனிடம் சிரித்து பேச துவங்க, பைரவ் ரசியமாக மாதவனிடம்,
“இந்த கொடுமைலாம் பார்கவா இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு இங்க வந்தோம்? ஏண்டா வழியக்கூட ஒரு வரையறை வேண்டாமா? சே…! ” கோவமும் ஆதங்கமும் அவன் கண்ணில் தெரிய,
“சொல்றேன்ல இது லவ் இல்ல! உனக்கு அப்பறம் பொறுமையா சொல்றேன், பாரு இப்போவே எல்லாரும் நம்மையே பாக்கறாங்க”
“பாக்கட்டுமே, உன் தங்கை அடிக்கிற கூத்தை விடவா? ஏதோ ப்ரூஸ்லீயே நேரா வந்தமாதிரி அப்படி என்ன ஆர்வம் அவ கண்ணுல?”
“என்னை நம்பு, நீ நினைக்கிற அளவுக்கு ஒரு சீனும் இல்ல”
அதன் பின்னே இவர்கள் இருவரின் உரையாடல் காதில் விழுந்திருந்தால் மாயா இருவரையும் துவம்சம் செய்திருப்பாள். ஆனால் அவளோ முகிலனிடம் பேசும் சந்தர்ப்பத்தை நொடியும் இழக்க விரும்பவில்லை.
உணவு பரிமாறபட, முகிலனை பார்த்தபடி வாயில் முதல் ஸ்பூன் உணவை வைத்தவள், கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.
இதுவரை வெறுத்த மஷ்ரூம்(காளான்) இன்றுமட்டும் இனிக்குமா என்ன? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவள் தவிக்க,
“தேவையா இது? பாரு அது முகத்தை” பைரவ் வருந்த,
மாதவனோ, “விடு சாப்பிட்டு அலர்ஜி ஆகி சொறிஞ்சுகிட்டு சுத்தட்டும், பைத்தியம் தெளிய உதவும்!”
“எப்படி இருக்கு மாயா?” முகிலன் கேட்க, செய்கையால் அருமை என்று மாயா உணவை நீர் கொண்டு விழுங்கி, கண்கள் லேசாக கலங்கியதை மறைக்க குனிந்து கொள்ள,
இதை காண சகியாத பைரவ், “ஒரு பிளேட் உப்பு எனக்கு சொல்லிடு மாதவா, இந்த கர்மத்தை பார்த்தும் ரோஷம் வராம இருக்கேனே”
“பிரீயா விடுடா” மாதவன் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே, மாயா திணறி கொண்டிருப்பதை காண சகியாத பைரவ்,
“சொன்னா கேட்டாத்தானே?” கோவமாக அவள் தட்டை தன்னிடம் இழுத்துக்கொண்டவன், தன் தட்டிலிருந்து சப்பாத்தியை அவளிடம் நகர்த்தி, “சாப்பிடு!” முறைத்தபடி சாப்பிட துவங்கினான்.
“தேங்க்ஸ்” என்று மெல்லிய குரலில் சொன்னவள் அதுவரை பசியில் இருந்ததால் வேகமாக உன்ன துவங்கினாள்.
முகிலன் பைரவையும் மாயாவையும் வித்தியாசமாக பார்த்ததை இருவரும் கவனிக்கவில்லை.
அவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம், வேறொரு உணவையும் மாயாவிற்காக ஆர்டர் செய்திருந்த பைரவ்,
“அவளுக்கு போதாது, மத்தியானமும் சாப்ட்ல” பொதுவாக சொல்லிவிட்டு அமைதியாக, மாதவனோ அவனை ‘இந்த விளக்கம் எதுக்கு?’ என்பதை போல் பார்க்க, கண்ணால் முகிலனை காட்டினான் பைரவ்.
மாயாவை முகிலன் தவறாக நினைக்க கூடாதென்று பைரவ் சொன்னதை உணர்ந்து கொண்டான்.
“பிடிக்காட்டி சொல்லலாம்ல?” முகிலன் கேட்க,
“…” என்னவென்று பதில் சொல்வாள்? அமைதியாகவே அசடு வழிந்து சமாளித்தாள்.
‘வாயெல்லாம் நம்ம கிட்டதான்’
பைரவ், “சாரி! நான் தூங்க போறேன், தலைவலிக்குது” என்று எழுந்து சென்றுவிட்டான்.
அறையில் கட்டிலில் படுத்தபடியே மேலே உள்ள கொசுவலை வழியே, கூரையை வெறித்திருந்தான்.
‘இனிமே அவ விருப்பத்துக்கு மாற யோசிக்க…’
“என்னடா உடம்புக்கு என்ன? சாப்பிட உடனே படுக்க கூடாதுன்னு சொல்லுவே, நீயே வந்து படுத்துட்டே” அறைக்குள்ளே நுழைந்த வாணி, கட்டிலில் அவனருகில் அமர்ந்து அவன் தலையை கோத,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை வாணிமா. ஆமா மாயா எங்க?”
“முகில் கூட வெளில போயிருக்கா வந்துடுவா. நீ தூங்கு”
“வாட்?” ஷாக் அடித்ததை போல் எழுந்தவன், கைகெடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதுவோ 8:30 தாண்டி கொண்டிருந்தது.
“என்ன இப்போ வெளில? மாதவன் போயிருக்கானா?”
“இல்லை அவன் அவங்க ரூம்க்கு போயாச்சு, முகிலன் அவளை கொஞ்ச நேரம் அப்புறம் ட்ராப் பண்ணிடுவான்”
“உங்க எல்லாருக்கும் மறகழண்டு போச்சா?” ஆவேசமாக எழுந்தவன்,
“வயசுப்பொண்ண கண்டவனோட அனுப்பிவைப்பீங்களா?”
“டேய் என்னடா அவன் தெரிஞ்ச பையன்தானே? அதுவும் மாயாவோட அப்பா, அம்மாவே சரினு சொன்ன அப்புறம் உனக்கு என்னடா?”
“அவங்களுக்கும் அறிவில்லை உனக்கும் இல்ல! மாதவனுக்குமா அறிவில்லை? கூட போயிருக்கலாம்ல?”
“டேய் ஏன்டா கத்தற? அவங்களுக்கு கேட்க போகுது” வாணி அவனை சமாதானம் செய்ய,
“கத்தாம?” ஒரு நொடிகூட நிற்காமல் நேராக மாயாவின் பெற்றோர் இருந்த ட்ரீஹவுஸிற்கு செல்ல, ஆதங்கத்துடன் வாணியும் அவனை பொறுமையாக இருக்கும்படி கெஞ்சிக்கொண்டே பின்தொடர்ந்தார்.
“என்ன அங்கிள் மாயாவ எதுக்கு இப்போ அனுப்புனீங்க? இப்போவே லேட்! ஏன் மாதவா நீ போயிருக்கலாம்ல?” புயலென புகுந்தவன் படபடக்க, புன்னகையுடன் அவனை பார்த்த கிருஷ்ணனோ,
“எதுக்கு பைரவ் டென்சன்? அவங்க எங்க போறாங்கன்னு சொல்லிட்டுதான் போனாங்க. முகிலன் குரூப்ல இன்னும் 3 பொண்ணுங்க இருக்காங்க. பௌர்ணமில அருவி பக்கம் கேம்ப் அடிச்சுருக்காங்க அதான் கொஞ்சநேரம் மாயாவை அவங்க கூட இருக்க கூட்டிகிட்டு போயிருக்கான்”
“உங்களுக்கு பொறுப்பே இல்லையா? இப்படியா கண்டவன் கூட…”
“பைரவ் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” மாதவன் முறைக்க,
“உனக்கும் அறிவே இல்ல? நீ போகலாம்ல? நானாவது போயிருப்பேன்ல?” அவன் மாதவனின் கோவத்தை கண்டுகொள்வதாய் இல்லை.
“டேய் நீ ரூமுக்கு வா” வாணி அவனை அழைக்க,
“முடியாது! மாயா இப்போ இங்க வரணும்” அவரை முறைதான்.
மாதவனோ பொறுமையை மெனெக்கெட்டு இழுத்துப்பிடித்துவைத்தபடி, “பைரவ்! அவங்க பைக்ல போயிருக்காங்க. கார் போகமுடியாத பாதை. இல்லைனா நான் போயிருப்பேன்”
“வெரிகுட்! வெரிகுட்!” நக்கலாக சொன்னவன், “என் மாயாவை பாத்துக்க எனக்கு தெரியும் உங்க யாரையும் இனி நம்ப மாட்டேன். நானே போறேன்.”
“போடா போயேன் யார் வேண்டாம்னா! இந்த கூத்தெல்லாம் நட்புன்னு சொல்லிக்கிட்டு மட்டும் சுத்தாத!” வாணி முதல் முறை குரல் உயர்த்த,
“வாணிமா… ஸ்டாப்! எங்க பிரெண்ட்ஷிப்ப விமர்சனம் பண்ணாத”
“என்னடா? என்ன? பெத்தவங்கள விட, அண்ணனைவிட நீ அவளை பத்திரமா, அன்பா பாத்துக்க முடியுமா?” வாணியும் கோவம் தணியாமல் கேட்க,
“முடியும்! என்னால மட்டும்தான் முடியும்!” அவன் உறுதியில் அங்கிருந்த அனைவருமே ஸதம்பிக்க, அவனோ, “மாயாவோட வரேன்” நொடியும் நில்லாது அறையைவிட்டு வெளியேறினான்.
“மாதவா கூட போயிட்டுவா, அவன் நிதானமா இல்ல” கிருஷ்ணன் சொல்லவும், பைரவின் பேச்சில் கோவமாக இருந்த மாதவன் வேண்டாவெறுப்பாய் பைரவுடன் புறப்பட்டான்.
வாணியோ “சாரி! அவன் ஏன் இப்படி பொம்மையை பிடிச்சுவச்சுக்கிட்ட குழந்தை மாதிரி நடந்துக்கிறான்னு புரியலை, காதலன்னாலும் இல்லைன்றான். நான் அவன் கிட்ட பேசறேன். சின்னபையன் தெரியாம ஏதோ, நான் கண்டிக்கிறேன் அவனை தப்பா நெனைக்காதீங்க மன்னிச்சுடுங்க”
“ஐயோ என்னப்பா நீங்க?” பதறி எழுந்த கீதா, “நாங்களும் பாத்துக்கிட்டுதானே இருக்கோம், அந்த முகிலனை பார்த்ததுல இருந்து பைரவ் பேச்சு நடவடிக்கை எல்லாமே மாறிப்போச்சு. எங்க தன் பிரெண்டு தன்னைவிட்டு போயிடுவாளோனு பயப்படறான். நாங்க பெத்த லூசும் அதை புரிஞ்சுக்காம இருக்கா.
நீங்க இதுக்கெல்லாம் பெரியாவார்த்தை பேசலாமா? சின்னப்பசங்க இன்னிக்கி அடிச்சுப்பாங்க நாளைக்கே சேர்ந்துடுவாங்க. போயி ரெஸ்ட் எடுங்க” வாணியை சமாதானம் செய்தார்.
கிருஷ்ணனும், “மாயாமேல இருக்க அக்கரைல படபடன்னு பொரியுறான். அவனும் எங்களுக்கு மாதவன் மாதிரித்தான். மாதவன் கோவப்பட்டா என்ன எதுன்னு ஆராயமாட்டோமா? பைரவ் கோவம் நியாயமானதுதானே? நாங்க அனுப்பினதும் தப்புதான் ஆனா முகிலன் அவ்ளோ சொல்லவே அனுப்பிட்டு இப்போ நீங்க வரவரை படபடப்பாதான் இருந்தோம்.”
கீதாவோ “அதான் நானே இவரை திட்டிகிட்டு இருந்தேன், மலை பிரதேசம் இருட்டு, அதுதான் லூசுத்தனமா கேட்டா இவருமா என்னை கேட்காம பெர்மிஷன் கொடுக்கணும்?” கணவனை முறைக்க, வாணி இருப்பதை மறந்து, கீதா, கிருஷ்ணன் வாக்குவாதம் துவங்கியது.
மறுமுனையில் காரில் மாதவனுடன் சென்றுகொண்டிருந்த பைரவ், விடாமல் மாயாவின் மொபைலிற்கு முயற்சி செய்ய, சிக்னல் இல்லாததால் இணைப்பு கிடைக்காமல் இருந்தது.
“முகிலன் நம்பருக்கு ட்ரை பண்ணு” மாதவனிடம் கடுகடுக்க, அவனோ கோவத்தில் அமைதியாகவே இருக்க,
“மாதாவா ப்ளீஸ்”
“…”
“சாரி! நான் அப்படி பேசியிருக்க கூடாது, சாரி, மாயாவுடைய பாதுகாப்ப நீங்க யோசிக்கலையோன்னு…”
“அப்படி விடுவோம்னு நீயா எப்படி நினைப்ப? சிலமாசமா பழகற உனக்கே இருக்கும்போது அவ பொறந்த நொடிலேந்து பாத்துக்குற எங்களுக்கு அக்கறை இல்லாம போகுமா? விசாரிக்காம அனுப்புவோமா?
நானே எங்கப்பாகிட்ட இப்படி எடுத்தெறிஞ்சு பேசினதில்ல, உன்கிட்ட இப்படி ஒரு பிஹேவியர் நான் எதிர்பார்கல”
“சாரி” வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த பைரவ் முகத்தில் வருத்தம்.
“ம்ம் இனிமே இப்படி நடக்காம பாத்துக்கோ. நான் முகிலனுக்கு கால் பண்றேன்”
முகிலனின் ஃபோனிற்கும் தொடர்பு கிடைக்கவில்லை. அவர்கள் இருக்குமிடம்வரை கிட்டத்தட்ட சென்றவர்கள், காரை சாலையோரம் நிறுத்தி, முகிலன் மாயாவுடன் புறப்படும் முன்னே லொகேஷன் ஷேர் செய்திருந்த இடத்தை நோக்கி நடக்க துவங்கினர்.
சாலையிலிருந்து பிரிந்து காடுபோன்ற பகுதியில் நடந்தபடியே,
“இவ்ளோ உள்ளுக்குள்ள தள்ளித்தான் கேம்ப் அடிக்கணுமா? அதுக்கு அறிவு இல்ல. அப்படி என்ன கர்மமோ அவன்மேல” பைரவ் கடுகடுத்தபடி நடக்க,
“பைரவ் நான் அவகிட்ட பேசினேன், அவ என்கிட்டே சொன்னத கேட்டா நீ டென்சன் ஆகமாட்டே. அது அறிவை பார்த்து பூரிச்சு போவே”
“என்ன தான் சொன்னா?”
எனோ அதுவரை இறுகிய முகத்துடன் இருந்த மாதவன் புன்னகையுடன், “லவ் மேரேஜ் பண்ணிக்க ஆசையாம் ஆனா யார்மேலவும் காதலே வரலயாம், அதுனால…” முடிக்காமல் சிரிக்க, “சொல்லிட்டு சிரி ப்ளீஸ்” பைரவ் மனம் ஏனோ தாறுமாறாக துடிக்க துவங்கியது.
“தூக்கம் வரணும்னா தூங்கிற மாதிரி நடிக்கணும் அதே மாதிரி காதல் வரணும்னா காதல் வந்தமாதிரி நடிக்கணுமாம். அதான் முகிலன் மேல காதல் வந்ததா கற்பனை செஞ்சுகிட்டு சுத்தறளாம்” மாதவனின் சிரிப்பு சத்தம் அந்த வனமெங்கும் எதிரொலிக்க, இப்பொழுது தூரத்தில் அருவி விழும் சத்தம் கேட்க துவங்கியது.
பைரவ் முகத்திலிருந்த அதிர்ச்சியும் கோவமும் இருட்டில் மாதவனுக்கு தெரியவில்லை.
‘அப்போ வராத காதலை வளர்க்க நினைக்கிறாளா? விடமாட்டேன்!’ கருவியபடி மௌனமாக நடந்தான்.
சில நிமிடங்களில் பௌர்ணமி நிலவொளியில் சற்றுத்தொலைவில் அருவியின் அழகு கண்ணைப்பறிக்க, அதற்கு முன்னே நான்கு டென்டுகள் இருக்க, நெருங்க நெருங்க டென்டிற்கு மறுபக்கம் நெருப்பை சுற்றி குளிர்காய்ந்தபடி மாயா, முகிலன் உள்பட குழுவாக அமர்ந்திருந்தனர்.
ஆண்கள் இருவரும் அவர்களை நெருங்க அவர்களை முதலில் கவனித்தது முகிலன்தான்.
“ஹே என்ன சர்ப்ரைஸ்!” புன்னகையுடன் இவர்களை பார்த்து அவன் கையசைக்க,
பைரவோ மாயாவை எரித்துவிடுவதை போல பார்த்துக்கொண்டே நெருங்கினான்.
இவர்களை எதிர்பார்க்காத மாயா, “ஹாய்! என்னங்கடா நீங்க இங்க? ஆமா பாஸ் நீ தூங்கலையா?” கையசைத்தபடி இருவரையும் கேட்க,
‘நீ ஒரே அடியா தூங்காம இருக்க கடவுளை வேண்டிக்கோ’ மனதில் தங்கையை எச்சரித்தான் மாதவன்.
பதில் பேசாத பைரவோ “கிளம்பு!” மாயாவை முறைக்க,
“ஹே கொஞ்ச நேரம்தான் ஆச்சு. போகலாம் என்ன அவசரம்?”
“உட்காருங்க கொஞ்சநேரம். ப்ளீஸ் ஜாயின் அஸ்” முகிலன் புன்னகைக்க,
“ஒரு டென் மினிட்ஸ் அப்புறம் கிளம்பனும்” மாதவன் அமர்ந்துகொள்ள, மாதவனிடம் குற்ற உணர்ச்சியில் இருந்த பைரவும் வேண்டா வெறுப்பாய் அமர்ந்துகொண்டான்.
“ஆமா நீங்க அடிக்கடி இப்படி டூர் வருவீங்களா?” ஆர்வமாக மாயா முகிலனை கேட்க,
“வருஷத்துக்கு ரெண்டு மூணு டூர் கண்டிப்பா போவோம். அடுத்த ட்ரிப் அந்தமான். இப்போவே பிளான் போட்டுட்டோம்” முகில் புன்னகைக்க,
‘அங்கேயே இருந்துடு தப்பித்தவறி திரும்பி வந்துடாதே’ பைரவ் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.
முகிலனின் குழுவுடன் மாதவன் இணைந்துகொண்டு பேசி சிரிக்க, பைரவ் மட்டும் கடிகாரத்தில் 10 நிமிடங்கள் எப்பொழுது கழியுமென பார்த்திருக்க,
“எனக்கு தூக்கம் வருது, நாம கிளம்பலாமா?” மாயாவின் குரலில் உற்சாகமானவன், மறுநொடியே “எஸ்” என்று எழுந்து நின்றான்.
அனைவரிடமும் மாயா, மாதவன் சொல்லிக்கொண்டு கிளம்ப, பைரவ் யாரையும் பார்க்காது விறுவிறுவென முன்னே நடந்தான்.
மாயாவிடம் மாதவன் ரகசியக்குரலில், “அவன் கைல சிக்காம இருந்துக்கோ, ஃபிரீ அட்வைஸ்”
“ஏன்டா?”
“சாருக்கு போஸ்ஸஸ்ஸிவ்நெஸ்” புன்னகைத்தான்.
“என்ன?” மாயாவின் கண்கள் விரிந்தன.
அதுவரை நடந்ததை தங்கையிடம் சுருக்கமாக மாதவன் சொல்லிமுடித்தான்.
“இதென்ன கொடுமை? நான் லவ் பண்ணா அவனுக்கு என்னவாம்?” முறைத்தவள், வேகமாக முன்னேறி பைரவை தாண்டி அவன் வழியை மறைத்தபடி நின்றாள்.
****