Oh Papa Laali–Epi 9

அத்தியாயம் 9

வீவோ சிட்டி என அழைக்கப்படும் ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ் தான் சிங்கப்பூரின் ஆக பெரிய ஷாப்பிங் மால் ஆகும். இந்த மால் ஹார்பர் ஃப்ராண்ட் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து செந்தோசா தீவுக்கு கேபிள் கார் எடுத்து செல்லலாம். நூலகம், உணவகம், பிள்ளைகள் விளையாட்டு இடம், கடைகள் என அழகாக இருக்கும் இந்த வீவோ சிட்டி.

 

“சோபா மேல ஏறி குதிக்காதடா ரோஹி! கீழ விழுந்து வலிக்குதுன்னு என் கிட்ட வராதே! வலிக்கற இடத்துலயே அடி வைப்பேன், சொல்லிட்டேன்!”

துவைத்த துணியை மூங்கில் போல நீளமாக இருக்கும் குச்சியில் காய போட்டு வெளியே கொடுத்திருக்கும் இந்த குச்சியை சொறுக என பிரத்தியேகமாக இருக்கும் ஓட்டையில் சொறுகி தான் துணி காய வைப்பார்கள் ப்ளாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள். துணி காய வைத்து எடுப்பது என்பது அவர்களுக்குப் போராட்டம்தான். சரியாக பின் குத்தாவிட்டால் நம் துணி கீழே விழுந்துக் கிடக்கும். அதோடு மேல் ப்ளாட் காரர்கள் ஈரமான துணியைக் காயப்போட்டால் நம் துணியும் ஈரமாகிப் போகும்.

அந்த கடுப்பான துணி காய போடும் வேலை எப்போதுமே ரகுவின் வசம்தான். அவர்கள் நிறுவனத்தில் ஒரு வாரம் மாக்காவ் சென்றிருந்தார்கள் சுற்றிப் பார்க்க. அதனால் அந்த வேலையை மதுரா செய்துக் கொண்டே கிண்டர்கார்டனில் இருந்து வந்துவிட்ட மகனையும் கண்காணித்துக் கொண்டிருந்தாள். சூர்யாவோ இன்று ப்ரிண்டிங் ஆபிஸ் சென்றிருந்தான்.   

“அப்பா இல்லாம சமைக்கவே கடுப்பா இருக்குடா ரோஹி! மாமாவும் நைட் தான் வருவாங்க. நாம லன்ச்சுக்கு சகுந்தலால ஹோம் டெலிவரி ஆர்டர் செஞ்சிப்போமா?”

“ஐ ஜாலி ஜாலி! எனக்கு பிரியாணி வேணும். தென் குலாப் ஜாமுன் வேணும்! தென் க்ரேப் ரசம். தென்..”

“தென்….உதைப்பேன்!!!! மவனே! எல்லாம் கேப்ப, கடைசில நான் தான் சாப்பிட்டு முடிக்கனும். போய் அம்மா போன் எடுத்துட்டு வா, ஆர்டர் பண்ணலாம்”

மகன் ரூமுக்கு ஓட, காலிங் பெல் சத்தம் கேட்டது.

“யாரு இந்த நேரத்துல!” என வாய் விட்டு சொல்லியபடியே வாசலுக்குப் போனாள் மதுரா. வெளியே புதுப்பெண் ஒருத்தி நிற்க கண்டவள்,

“யாருங்க?” என கேட்டாள்.

“அக்கா, என் பேரு வான்மதி! உங்க தம்பியோட கேர்ள்ப்ரேண்ட்”

“என்னது!!! என் தம்பி கேர்ள்ப்ரேண்டா?” ஆச்சரியமாக வந்தவளை மேலும் கீழும் பார்த்தாள் மதுரா.

“அவர் உங்க கிட்ட ஒன்னும் சொல்லலியாக்கா? தோ பாருங்க நாங்க எடுத்துகிட்ட செல்பி” என அன்று ஓசியனில் சாப்பிடப் போன போது அவன் அனுமதி பெற்று எடுத்துக் கொண்ட செல்பியைக் காட்டினாள் வான்மதி.

சூர்யா வீட்டில் இவளைப் பற்றி சொல்லியிருக்கவில்லை. சொன்னால், மதுரா தூண்டி துருவி விசாரிப்பாள், அவள் பின் தொடர்ந்தது முதல் இவன் ரிஜேக்ட் செய்தது வரை சொல்ல வேண்டும். ரகு வேறு இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என கலாய்ப்பான். அதனால்தான் சொல்லாமல் மறைத்து விட்டான்.

சிரித்த முகத்துடன் தம்பி போஸ் கொடுத்திருக்க, மதுராவுக்கு சின்னதாக கோபம் எட்டிப் பார்த்தது.

“பாரேன் இவன! ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லல”

கேட்டைத் திறந்து வான்மதியை உள்ளே விட்டவள், மகன் போனுடன் ஓடி வர அதைப் பெற்றுக் கொண்டாள்.

“வாம்மா! உள்ள வந்து உட்காரு” என அவளை ஹாலில் அமர வைத்தவள், தம்பிக்கு போனைப் போட்டாள். ஆபிஸ் கணக்கு வழக்குப் பார்க்க போனை சைலண்டில் போட்டிருந்தவன் தமக்கையின் காலை அட்டேண்ட் செய்யவில்லை.

“போன் பிக் அப் பண்ணல இவன்! வீட்டுக்கு வரட்டும், நல்லா குடுக்கறேன்! இரும்மா ஜூஸ் எடுத்துட்டு வரேன்.” என கிச்சனுக்குப் போக திரும்பிய மது,

“உன் பேரு என்னன்னு கூட கேட்கல பாரேன்! திடீர்னு நீ வந்து நிக்கவும் கைண்ட் ஆப் எக்சைட்டேட்! அதான்! கோவிச்சுக்காதே” என சொன்னாள்.

மெல்ல புன்னகைத்த வான்மதி,

“நான் வான்மதி! ஜூஸ்லாம் ஒன்னும் வேணாம்கா! லன்ச் டைம் ஆச்சே! வாங்க சாப்பிட்டிறலாம்” என கையில் பிடித்திருந்த பேப்பர் பேக்கை காட்டினாள் அவள்.

“சகுந்தலால இருந்து பார்சல் வாங்கிட்டே வந்துட்டியா? நாங்க அடிக்கடி அங்க குடும்பமா சாப்பிட போவோம்னு சொல்லிட்டானா இவன்!” என சிரித்தப்படியே பார்சலை வாங்கிக் கொண்டாள் மதுரா.

அவனைப் பின் தொடர்ந்த சமயங்களில் இவர்கள் அடிக்கடி அங்கே சாப்பிட போவதை கவனித்திருந்தாள் வான்மதி. டூ பீ இன் சேப் சைட், நம் மக்கள் எல்லோருக்கும் விருப்பமான பிரியாணியையே வாங்கி வந்திருந்தாள்.

மது கிச்சனுக்குப் போக, ரோஹியைப் பார்த்துப் புன்னகைத்தாள் வான்மதி.

“ஹலோ ஹேண்ட்சம்! ஹௌ ஆர் யூ?”

அவளை மேலும் கீழும் பார்த்த குட்டி,

“உங்கள நான் டூ டைம்ஸ் ஸ்வேன்சன்ல (இங்கே ஐஸ்க்ரீம் பிரமாதப்படும்) பார்த்தேன் ஆண்ட்டி. என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணீங்க! நானும் ஸ்மைல் பண்ணேன்” என சொன்னான்.

மாமா மருமகனின் அவுட்டிங் டே அந்த உணவகத்தின் ஐஸ்க்ரீமில் தான் முடிவுறும். சூர்யாவை பின் தொடர்ந்த போது இவனைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாள். சின்னவன் அதை மறக்காமல் இருந்தது, அவளுக்கு புன்னகையைக் கொடுத்தது. அவன் கொளு கொளு கன்னத்தைப் பிடித்து செல்லமாக வருடியவள்,

“உங்க மாமா மாதிரியே அழகா இருக்கீங்க ரோஹி” என ஆசையாக சொன்னாள்.

கிச்சனில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த மதுராவுக்கும் புன்னகை மலர்ந்தது. தன் தம்பியை அழகு என சொல்லி விட்டாளே இந்தப் பெண். மனம் நிறைய நேசம் இருப்பவர்களுக்குத்தானே சுமாரானவன் கூட சுகுமாரனாய்(அழகானவன்) தெரிவான்.  

“வான்மதி! வா வந்து சாப்பிடு” என அழைத்தாள் மது.

“இல்லக்கா! உங்களுக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்! நீங்க சாப்பிடுங்க”

“பரவாயில்ல வா! நெறையவே வாங்கிட்டு வந்திருக்க! இப்போ கூட நாங்க ரெண்டு பேரும் சகுந்தலாவுக்கு டெலிவரி ஆர்டர் செய்யலாம்னு தான் இருந்தோம்! நீயே வாங்கிட்டு வந்துட்ட! ரோஹீ ஆண்ட்டிய கூட்டிட்டு வா, ஒன்னா சாப்பிடலாம்”

இவளும் பிகு பண்ணாமல் சாப்பாட்டு மேசைக்கு சென்றாள். ஒன்றாக அமர்ந்து இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கேட் திறக்கும் ஓசை கேட்டது.

“அக்கா, ஐம் ஹோம்! பசிக்குது சாப்பிட என்ன இருக்கு?” என கேட்டவாறே வந்தான் சூர்யா.

இந்த நேரத்தில் அவனை எதிர்ப்பார்த்திராத வான்மதிக்கு விக்கல் எடுக்க, அவளைத் தன் குடும்பத்தோடு பார்த்த இவனுக்கோ அதிர்ச்சி. தண்ணீர் கிளாசை அவள் புறம் நீட்டியவன்,

“குடி” என ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்தான்.

“வாடா பெரிய மனுஷா! நீ முன்னால போய் அக்காவ காக்கா புடி, நான் பின்னாலயே வரேன்னு சொல்லி விட்டியா இவ கிட்ட! சொக்ஸ் ஓட்டையாகற விஷயத்தைக் கூட என் கிட்ட ஷேர் பண்ணிக்கத் தெரிஞ்ச உனக்கு, ஒரு கேர்ள்ப்ரேண்ட் இருக்கான்ற பெரிய விஷயத்தை சொல்லத் தோணல இல்ல”

அக்காவுக்கு எந்த பதிலும் சொல்லாதவன், வான்மதியை கண்களால் துளைத்து எடுத்தான். அவளோ அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கீழே தலையைக் குனிந்துக் கொண்டாள்.

“அது வந்துக்கா….”

வான்மதி என்ன சொல்லி வைத்தாளோ என தெரியாத பட்சத்தில் இவன் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. தன் அக்காவின் முன்னே அவளை விட்டுக் கொடுக்கவும் பிடிக்கவில்லை. அதனால் பதில் சொல்ல தயங்கினான் சூர்யா.

“சரி விடு! அக்கா கிட்ட எப்படி சொல்லன்னு தயக்கமா இருந்துருக்கும்! ஆனாலும் உன் கிட்ட அக்கா மாதிரியாடா பழகனேன்!” ஒரு தோழியாக பழகினேன் என அவள் சொல்ல வருவதற்குள்,

“இல்லக்கா, நீ அக்கா மாதிரி நடந்துக்கல! எனக்கு ஒரு அம்மா மாதிரி தான் நடந்துகிட்ட” என சொன்னான் சூர்யா.

சட்டென கண் கலங்கி விட்டது மதுராவுக்கு.

“இவன் அம்மா செல்லம் வான்மதி! எங்கம்மா அன்ப சாப்பாட்டுல தான் காட்டுவாங்க! இவன் வேணா போதும்னு சொன்னாலும் இன்னும் கொஞ்சம்யான்னு ஊட்டி விடுவாங்க. இவன் அழுதா சந்தோஷப்படுத்த எதாச்சும் சமைச்சுக் குடுப்பாங்க, இவன் சிரிச்சா அத கொண்டாட எதாச்சும் செய்வாங்க, இப்படி ஊட்டி ஊட்டி வளர்த்தாங்க. அம்மா போனதும் ரொம்ப உடஞ்சிப் போயிட்டான்! ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு அம்மா ஏக்கம் வராம பார்த்துக்கறேன்” என தம்பியின் மனம் கவர்ந்தவள் எனும் எண்ணத்தில் தங்கள் கதையைப் பகிர்ந்துக் கொண்டாள் மதுரா.

“யூ ஆர் கிரேட் அக்கா! வர்மன் இஸ் சோ லக்கி”

“ஓஹோ! இவன வர்மன்னு தான் கூப்புடுவியா! சோ ஸ்வீட்” என சிரித்தாள் மதுரா.

வெட்கப் புன்னகையை உதிர்த்த வான்மதி, மேசையில் இருந்த ப்ளேட்டை எடுத்து தராளமாக பிரியாணி வைத்து சூர்யாவின் புறம் நகர்த்தினாள்.

“பசிக்குதுன்னு சொன்னீங்களே வர்மன், சாப்பிடுங்க” என மெல்லிய குரலில் உபசரித்தாள்.

“ஆமா வர்மன், சாப்பிடுங்க!” என கேலி செய்தாள் மதுரா.

இவனுக்கோ தர்மசங்கடமாக இருந்தது. நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் வான்மதியின் அருகே மட்டும் தான் இடம் இருக்க, அங்குதான் அமர்ந்திருந்தான். அவளின் அருகாமை, தன் வீட்டில் பொருந்தி போன விதம், தனக்கு உணவிட்ட பாங்கு என வான்மதி அவனை வெகுவாக பாதித்திருந்தாள்.

பெண்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, இவன் அமைதியாக சாப்பிட்டான். உணவு வேளை முடிய,

“சூரி, எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்குடா! ரோஹிக்கும் நேப் டைம். நாங்க ரூமுக்குப் போறோம்! நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. வான்மதி, கிவ் மீ ஓன் ஹவர்டா! அப்புறம் வந்து டீ கலக்கித் தரேன்! அது வரைக்கும் இங்கயே இருப்பியா? வேலை எதாச்சும் இருக்கா?” என கேட்டாள் மதுரா.

“இல்லக்கா! நீங்க போய் படுங்க! நான் வேய்ட் பண்ணறேன்”

சின்னவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து மகனுடன் தனதறைக்குள் நுழைந்துக் கொண்டாள் மதுரா.

இவன் ஆரம்பிப்பதற்குள் வான்மதி,

“வர்மன், எனக்குத் தெரியும் உங்களுக்குக் கோபம்னு! நீங்க என்னை வேணாம்னு சொன்னதும் அப்படியே போகுது போன்னு என்னால இருக்க முடியல. அதான் அக்காவ பார்த்து ஒரே ஒரு முயற்சி செய்யலாம்னு வந்தேன். நீங்க வந்திருக்கலனா, அக்கா கிட்டே உங்கள எனக்கு மேரேஜ் பண்ணிக் குடுக்க சொல்லி கெஞ்சியிருப்பேன்!” என சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழியலானது.

“மதி, மதி! ப்ளீஸ் அழாதே! நான் ஒன்னும் சொல்லல, போதுமா! வா, வா என் ரூமுக்குப் போய் பேசலாம். இங்கனா அக்கா எப்ப வேணும்னாலும் வெளிய வருவா” என அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கைப்பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்று கதவை மூடினான் சூர்யா.

உள்ளே நுழைந்தவள் முதலில் கேட்டது,

“என்ன சூர்யா ரூம இப்படி போட்டு வச்சிருக்கீங்க! என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல” என்பதுதான்.

அவளே கீழே இறைந்துக் கிடந்த துணிகளைப் பொருக்கிக் கூடையில் போட்டாள். தன் பேக்கில் இருந்த வெட் டிஷூ எடுத்து ட்ரெசிங் டேபிளை, பெட் சைட் டேபிளை எல்லாம் அழுத்தித் துடைக்க ஆரம்பித்தாள். இவனோ சற்று முன் கண்ணீர் விட்டவள் இவள் தானா என்பது போல பார்த்திருந்தான்.

அவளை நெருங்கி கைப்பிடித்து வேலை செய்வதை தடுத்து தன்னை நோக்கித் திருப்பியவன்,

“இதெல்லாம் நான் அப்புறம் செஞ்சிப்பேன் மதி! முதல்ல ஏன் இந்தப் பிடிவாதம்னு சொல்லு. அன்னைக்கே நல்ல விதமா நம்ம இருவர் தோற்றம், அந்தஸ்து, தராதாரம் எதிலயும் பொருத்தம் இல்ல! இந்தக் காதல், கத்திரிக்காய்லாம் சரி வராதுன்னு சொன்னேன் தானே! லெட்ஸ் பீ ப்ரேண்ட்ஸ்னு சொன்னதுக்கு சரி, சரின்னு தலையாட்டுன! அப்புறம் போன் பண்ணி வில் யூ மேரி மீன்னு கேட்டா என்ன அர்த்தம்? நேரா வீட்டுக்கு வந்து நின்னா என்ன அர்த்தம் மதி?” என பொறுமையாக கேட்டான் சூர்யா.  

இரு கைச்சந்தினையும் அவன் பற்றியிருக்க, நிமிர்ந்து பார்த்தவள், பட்டென அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“மதி!” அதற்கு மேல் வெறும் காற்று தான் வந்தது.

“ஐ டோண்ட் க்நோ வர்மன்! என்ன அர்த்தம்னு கேட்டா இதுதான் என் பதில்! உங்களை ரொம்பப் பிடிக்குது வர்மன். நீங்க என் கூடவே இருந்தா என் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது! ஐ வாண்ட் யூ இன் மை லைப்! குண்டா இருக்கீங்க, கருப்பா இருக்கீங்கன்னு நீங்க சொல்லுற ரீசன்லாம் என் கண்ணுக்குத் தெரியவே இல்ல. என் கண்ணுக்குத் தெரியறது எல்லாம் உங்க சிரிச்ச முகம்தான். சிரிக்கறப்போ ஒத்த கன்னத்துல விழற குழிதான். அந்தஸ்து, தராதாரம்லாம் சொல்லறீங்க! ஆனா உங்களோட குரல் தான் என்னை சாந்தப்படுத்துது! உங்க குரல்தான் என்னை ஆகர்ஷிக்குது! நீங்க சிரிக்க சிரிக்க பேசறதும், சில சமயம் சிந்திக்க வைக்கும்படி பேசறதும் தான் என்னை மயக்குது வர்மன். இந்த சூரியன் இந்த நிலவுக்கு மட்டும்தான் சொந்தமா இருக்கனும்னு ஒரு வெறியே வருது. என்னை வேணாம்னு ஒதுக்காதீங்க வர்மன். நான்…நான் செத்துப் போயிருவேன்” என அழுதபடியே சொன்னாள் வான்மதி.

“மதி!!! லேடிஸ் மேல நான் கைய வச்சுது இல்ல! இன்னொரு தடவை செத்துப் போறேன்னு சொன்ன, கன்னம் பழுத்துரும்!”

தனக்கான சூர்யாவின் சுட்டெரிக்கும் கோபம் இவளை என்னவோ செய்தது. அவனை குளிர்விக்க சித்தம் கொண்ட நிலவு மகள் எக்கி நின்று அவன் முகம் முழுக்க ஈர முத்தத்தைப் பரிசளித்தாள்.

அவன் ஜெர்க்காகி நின்றிருக்க, தடாலடியாக சூர்யாவின் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்திக் கொண்டாள் வான்மதி. பெண்ணவள் கண்ணீரின் கரிப்போடு சேர்ந்து எச்சிலின் இனிப்பும் சூர்யவர்மனை மாயலோகத்துக்கு இழுத்துச் சென்றது.

‘வேறென்ன வேண்டும் எனக்கு? எனக்காக என்னை விரும்புகிறவள் வேண்டும்! என் தோற்றம் கண்டு எள்ளி நகையாடாதவள் வேண்டும்! நானே உலகமென எனை சுற்றி வருபவள் வேண்டும்! அன்பெனும் அமுதத்தை அள்ளி அள்ளித் தருபவள் வேண்டும்! அடக்கி வைத்த என் ஆசையை, இளமையின் ஓசையை தட்டி எழுப்புபவள் வேண்டும்! இதோ என் தேவதை! நான் கண்ட கனவுகள் கானல் நீராய் போய்விடாமல் என்னை ரட்சிக்க வந்த தேவதை’

இவள்தான் தனக்கு இனி உயிர்மூச்சு என முடிவெடுத்தவன், அடுத்த கணம் தன் உயிர் மூச்சை அவளுக்குள் செலுத்த ஆரம்பித்தான். அவள் ஆரம்பித்த முத்த சத்தத்தை இவன் யுத்தமாக்கி போர் புரிய முற்பட்டான். மூக்கோடு மூக்கு முட்டிக் கொள்ள, நாக்கோடு நாக்கு ஒட்டிக் கொண்டது. இத்தனைக் காலம் அவன் அடக்கி வைத்திருந்த ஏக்கத்தை எல்லாம் ஒற்றை முத்தத்தில் கரைக்க முற்பட்டான் சூர்யவர்மன்.

மூச்சு விட முடியாமல் தடுமாறியவள், அவன் நெஞ்சில் கை வைத்து மெல்ல தள்ள முனைந்தாள். அவள் குறிப்பறிந்து முத்தத்தை நிறுத்தியவன், மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கட்டிக் கொண்டான். அந்த டேடி பியரின் கதகதப்பில் ஆழ்ந்துப் போனவள் மெல்ல,

“வர்மன்” என அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“உங்களை செடியூஸ் பண்ணனும்கற நோக்கத்துல நான் கிஸ் பண்ணல வர்மன்”

“ஹ்ம்ம்”

“என் மேல கோவமா?”

அவள் முதுகை வருடியவன்,

“இல்லைம்மா” என மென்மையாக பதில் அளித்தான்.

“வந்து வர்மன்.. ஹ்ம்ம்.. என்னைக் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிப்பீங்களா?”

“யெஸ், யெஸ் ஐ வில் மேரி யூ! இனி நீயா போடான்னு சொன்னாலும் உன்னை விட்டுப் போக மாட்டேன் ஏஞ்சல்!”

“அப்படி நான் சொல்லவே மாட்டேன் வர்மன்! நீங்களும் என்னை விட்டுப் போக கூடாது!”

“கண்டிப்பா போக மாட்டேன்”

“வர்மன்!”

“ஹ்ம்ம்”

“ஐ லவ் யூ சோ சோ மச்”

“மீ டூ லவ் யூ சோ சோ சோ மச் மதிம்மா”

பாடுவான்…..