SY17

சரி © 17

மதுரையில் சித்துவின் இல்லத்தில், சித்துவின் தந்தை மார்தாண்டம், காலை உணவை முடித்துவிட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். அவருக்கு மதிய உணவை தயார் செய்து, கேரியரில் வைத்துக்கொண்டிருந்தார் சித்துவின் தாய் பாமா.

 

என்னங்க ஒரு எட்டு சென்னைக்கு போய், கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்துருவோமா?, பாமா.

 

என்ன பர்ச்சேஸ் பண்ணணும்?, மார்தாண்டம்.

 

முகூர்த்தப் பட்டுல இருந்து, கூரப்பொடவ வரைக்கும் வாங்கணும்ல! அது போக ஒங்க புள்ளைக்கும் டிரஸ் வாங்க வேண்டாமா?, பாமா.

 

அன்னக்கித்தான் அவசரமா நிச்சயத்தையே முடிச்சிட்டீங்க! மத்ததையாவது கொஞ்சம் பொறுமையா நல்ல நாள், நேரம் எல்லாம் பாத்து, ஒன்னுக்கு நாலுதடவ யோசுச்சு பண்ணுவோம்

 

ஈசியா நீங்க சொல்லுவீங்க! முகூர்த்தப் பட்டு எடுத்து, அப்பறம்தான் ப்ளவுஸ் தைக்கக் கொடுக்க முடியும். அதப் பத்தி எல்லாம் ஒங்களுக்கு ஒன்னுந்தெரியாது! பொம்பளைங்க சமாச்சாரம்!

 

எடுத்த எடுப்பில ப்ளவுஸ் தைக்க போயிருவாகளாக்கும்! எல்லா சமாச்சாரமும் எங்களுக்கும் தெரியும்! மொதல்ல காலண்டர எடுத்து நாலஞ்சு முகூர்த்தத்த குறிச்சிக்கோ. சாயந்தரம் ஜோசியர பாத்துட்டு வந்துருவோம்

 

அதான பாத்தேன்! எங்க மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன் பாமா.

 

அதிகம் பேசாத மார்தாண்டம் வீட்டை விட்டு அலுவலகம் புறப்பட்டதும், பாமா குளித்து முடித்து, வழக்கமாக வணங்கும் தெய்வங்களை வணங்கிக்கொண்டு, காலண்டரை எடுத்து நான்கைந்து முகூர்த்தங்களை குறித்தார். பின்புதான் பார்த்தார், அதில் மூன்றுதான் வளர்பிறை முகூர்த்தங்களாக இருந்தன.

 

வளர்பிறையிலேயே திருமணத் தேதி அமைந்துவிட்டால், நன்றாக இருக்கும் என்று கடவுளை நினைத்துக்கொண்டு, குறித்த காகிதத்தை சாமி அறையிலேயே, குலதெய்வத்தின் முன்பு பத்திரமாக வைத்தார்.

 

சம்யுக்தாவின் தாயார் அனுசியாவுடன் தொடர்புகொண்டு, தான் குறித்து வைத்திருக்கும் தேதிகள் பற்றிப் பேசினார். அவற்றில் சம்யுக்தாவிற்கு ஏதுவான நாட்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

 

அதே நேரத்தில் சித்துவின் தந்தை மார்தாண்டம் அலுவலகத்தில் இருந்து, சம்யுக்தாவின் தந்தை தாமோதரனுடன் தொடர்புகொண்டு, அவரால் எப்போது மதுரைக்கு வரமுடியும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

திருமண விசயம் என்பதால், இரு இல்ல பிரமுகர்களும் கலந்து ஆலோசித்து, பந்தக்கால் நடுவது முதல், சாந்திமுகூர்த்தம் வரை அனைத்திற்கும் நாள், நேரம் பார்த்து பேசி முடிவெடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.

 

ஆனால், சம்யுக்தாவின் தந்தை தாமோதரன், தனக்கு வேலை பார்க்கும் ஊரில் ஒரு சொத்துத் தகராறின் காரணமாக அப்போது அங்கிருந்து வர இயலாது என்றும், முகூர்த்தங்கள் குறித்து பெண்ணின் தாயார் அனுவையே கலந்தாலோசித்துக்கொள்ளுமாறும், தனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறிவிட்டார்.

 

அவர் பேசி முடித்ததும், மனைவியிடமிருந்து மார்தாண்டத்திற்கு அழைப்பு வந்தது. மார்தாண்டத்தின் தாய், தந்தையர் அருகில் இருந்தால் நன்றாயிருக்கும் என்று பாமா தன் கருத்தைக் கூறினார். கிராமத்தில் இருக்கும் அவர்களை ஓரிரு நாட்களில் அழைத்து வருவதாகக் கூறினார் மார்தாண்டம்.

©©|©©

 

 

அலுவலகத்தில் இருந்த சித்தார்த்தன், அன்று தன் பணியில் முடிக்க வேண்டியவற்றை விரைவாக முடித்துவிட்டான். அதனால் தேனீர் அருந்த அருகில் இருந்த கடைக்கு வந்தமர்தவன், சம்யுக்தாவின் நினைவு வரவே அவளை அழைத்தான்.

 

ஹாய் சம்யு! ஆர் யூ ஃப்ரீ நௌ?, சித்து.

 

என்ன மச்சான்! இந்நேரத்துல? ரொமான்ஸா!, சம்யு சந்தோசமாக சிலாகித்தாள்.

 

சீக்கிரமே வேலை முடிஞ்சிருச்சு. இனிமே அடுத்த புராஜெக்ட் வந்தாத்தான் ஐயா பிஸியாவேன். அதுவரைக்கும் ஒரு என்டர்டெய்ன்மென்ட் வேண்டாமா!

 

ஓ, அப்படியா! சொல்லுங்க என்கிட்ட என்ன என்டர்டெய்ன்மென்ட் எதிர்பார்க்கறீங்க?

 

என்டர்டெய்ன்மென்ட் அப்படீங்கறதவிட என்கரேஜ்மென்ட்தான் ஒங்கிட்ட அதிகமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்!

 

என்ன திடீர்னு சீரியஸ் வாய்ஸ் வந்த மாதிரி இருக்கு!

 

அதெல்லாம் இல்ல, ஒரு ஃப்லோல இதெல்லாம் சொல்லி வச்சிறனும்! ஃப்யூச்சருக்கு யூசாகும்ல!

 

ம், ஃப்யூச்சரப் பத்தி யோசிக்கவெல்லாம் செய்றீங்களா நீங்க?

 

நா, நெறைய ப்ளான் வச்சிருக்கேன் தெரியுமா?

 

என்ன? ஒன் பை ஒன்னா சொல்லுங்க கேப்போம்!

 

ஏய்! ஒனக்கு இப்ப டூட்டி டைம் இல்லையா?

 

டூட்டிதான், ஆனாலும் ஒங்கட்ட பேசுனா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க!

 

ஏய்! அப்பப் பக்கத்துல எல்லாரும் இருக்காங்களா?

 

இல்ல, இல்ல நான் எந்திருச்சு தனியா வந்துட்டேன். அப்படி வந்தாலே நீங்கதான் லைன்ல இருக்கீங்கன்னு கண்டுபுடுச்சிட்டு, கண்டுக்காத மாதிரி இருந்துருவாங்க. நானும், நாம பேசிகிட்டு இருக்கறதுனால வேலைல பென்டிங் வந்துறாம முடிச்சுட்டுத்தான் கிளம்புவேன், என்று சம்யு தன் வேலையில் நெளிவு சுளிவுடன் இருப்பதை நாசுக்காக தெரிவித்தாள்.

 

இவ்வாறு இருவருமே தங்கள் பணிகளில் உள்ள சௌகரிய, அசௌகரியங்களையும், கால நேரம் பாராமல் கடமையாற்ற வேண்டிய தருணங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென சித்தார்த்திற்கு பொழுதுபோக்காக எங்காவது செல்லலாம் என்று தோன்றியது.

 

சரி எங்கயாவது போவோமா?, சித்து.

 

எங்க போகலாம்? எப்பவும்போல ரிது, யாஷிகாட்ட கன்சல்ட் பண்ணவா?, சம்யு.

 

இல்ல சம்யு! நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா போவோமான்னு கேட்டேன், சித்து மட்டும் என்பதில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.

 

நாம மட்டுமா!, பதறினாள் சம்யு.

 

ஆமா சம்யு! ஏன் போகக் கூடாதா?, சித்து.

 

எந்த ஒரு ஆணுடன், தனியாக வெளியில் போவது பற்றி அவள் நினைத்திருக்காததால், அவள் பதற்றம் முறையானதுதான். சித்தார்த் தன்னவன்தான். தனக்காக தானும், பெரியோர்களும் சம்மதித்து வாழ்க்கைத் துணைவனாக வருவிருக்கும் ஆண்தான். ஆனாலும், அவனையும் நாசூக்காக தவிர்க்கவே நினைத்தாள் சம்யுக்தா.

 

அய்யோ! எந்தம்பி, தங்கக் கம்பி எங்கயாவது சுத்திகிட்டே இருப்பான்! அவன் கண்ணுல படாம இருக்க முடியாது! பாத்தான்னா அப்பறம் பிரச்சினைதான், சம்யு.

 

ஓ! வில்லன வீட்லயே வளக்குறீங்களா! என்னப் பிரச்சினை வரும்?, சித்து சற்று சீண்டிப்பார்த்தான் சம்யுவை.

 

யாரு, எந்தம்பியா வில்லன்? நீங்கதான் வில்லன், வில்லாதி வில்லன்!

 

அப்ப நீ வில்லியா?

 

நா வில்லியோ, பல்லியோ! அத விடுங்க, எங்கம்மாட்ட ஒங்கம்மா பேசுனதுபத்தித் தெரியுமா ஒங்களுக்கு? எங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க, ஒங்கம்மா ஒங்ககிட்ட சொன்னாங்களா?, சம்யு சமயோஜிதமாக பேச்சை வேறு பக்கம் திருப்பினாள்.

 

என்ன பேசுனாங்களாம்?, சித்து.

 

முகூர்த்த நாள் குறிச்சிட்டாங்களாம்! சீக்கிரமே கல்யாணமாம். அனேகமா எங்க மாமி என்னயப் பாக்க வருவாங்கன்னு நெனக்கிறேன்

 

அடிப்பாவி! ஒரே நாள்ல கவுத்திட்டியேடி! என்னப் பாக்கக் கூட எங்கம்மா இதுவரைக்கும் இவ்ளோ தூரமெல்லாம் வந்ததில்ல தெரியுமா?

 

இந்த விசயத்தப் பொருத்தமட்ல நீங்க வேற, நா வேற மச்சான்!

 

என்ன திடீர்னு மச்சான்!

 

நீங்க மட்டும் மச்சி, மச்சின்னுதான பேசுறீங்க! அதான் நாங்க மச்சான்னு பேசுவோம்!

 

பேசுங்க! பேசுங்க! சரி, கல்யாணம் எப்பவாம்? முடிவு பண்ணிட்டாங்களா?, சித்து அவசரப்பட்டான்.

 

இன்னும் முடிவாத் தெரியல! இன்னக்கி அப்பா வீட்டுக்கு வருவார். அப்பறம் அம்மாட்ட பேசிட்டு, ஒங்க வீட்டுக்கும் கால் பறக்கும். நா பக்கத்து ரூம்ல ஒக்காந்து ஒட்டுக் கேட்டுட்டு வந்து, நாளைக்குச் சொல்றேன் கண்ணு! இப்போதைக்கு ஃபோனை வைக்கவா? உள்ள சூப்பிரண்டு ஏதோ சத்தம் போட்டுகிட்டு இருக்கார், என்று சம்யு அலைபேசியை அணைப்பதில் ஆர்வமானாள்.

 

ஓக்கே பை!, என்று சித்துவும் அலைபேசியை அணைத்துவிட்டு, அப்போதுதான் அருகில் கவனித்தான்.

 

அவனைச் சுற்றி கைக்கெட்டும் தூரத்தில் அலுவலக நண்பர்கள். அனைவரும் அவனையே உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். பிறகு என்ன! கேளியும் கிண்டலுமாய் அன்றைய மீதிப் பொழுது போனது சித்தார்த்துக்கு.

©©|©©

 

கோலாகலமாக ஏஆர் கஃபே திறப்பு விழா ஆரம்பமானது! வட்டம், மாவட்டம், சட்ட மன்ற உறுப்பினர் என ஆரம்பித்து, மாவட்ட ஆட்சியர் வரை அழைத்திருந்தார் ராஜசிம்மன்.

 

மாவட்ட ஆட்சியர் தவிர மற்ற அனைவரும் வந்து விழாவினை சிறப்பித்து, வியாபாரம் நன்று வளர வாழ்த்துகள் கூறிச் சென்றனர். அனைவரையும், ராஜசிம்மனும், யோகியும் நன்கு கவனித்துக்கொண்டனர்.

 

யோகிக்கு துணையாக சித்து அன்று அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்ததோடு, சில வேலைகளையும் ஓடிச் சென்று முடித்துக்கொண்டிருந்தான். அதை கவனித்த ராஜசிம்மன் சற்று ஆச்சரியமாக, அதே சமயத்தில் சந்தோசமாகவும் உணர்ந்தார்.

 

முக்கிய விருந்தினர்கள் எல்லோரும் வந்து சென்றபின், ராஜசிம்மன் தன் மனைவிக்கு அழைப்புவிடுத்தார். பின்பே திலோத்தமையும், ரிதுவந்திகாவும் அங்கு வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

அங்கிருந்த அலுவலக அறைக்குள் சென்றவுடன், ராஜசிம்மன் சாளரம் வழியே சித்துவைக் காட்டி, அங்க பாரு யோகியோட ஃப்ரண்டு காலையிலயே வந்து யோகிக்கு எவ்ளோ உதவியெல்லாம் பண்றார். ஒங்க ஃப்ரண்டெல்லாம் வேஸ்ட், என்றார் ரிதுவிடம்.

 

எங்கள விட்டா, இந்நேரம் இந்த எடத்தையே சொர்க்கமா மாத்தி வச்சிருப்போம்! நீங்கதானப்பா வீஐப்பி எல்லாம் போனப்பறம் வரச் சொல்றீங்க! இப்ப மட்டுமா? எப்பவுமே அப்படித்தான செய்றீங்க!, என்றாள் மகள் ரிது சண்டை பிடிப்பதுபோல்.

 

அதெல்லாம் காரணமாத்தாம்மா!, ராஜு.

 

என்ன காரணம்?, ரிது விடவில்லை.

 

திடீர்னு யாராவது ஒரு வீஐப்பி ஒன்னப் பாத்துட்டு பொண்ணு கேட்டான்னா நா என்ன பண்றது?, ராஜு.

 

ஏன், பொண்ணக் கட்டிக்கொடுக்காம வீட்லயேவா வச்சிருக்கப் போறீங்க?, திலோ.

 

பொண்ணக் கூட கட்டிக் கொடுத்துருவேன், அவன் நல்லவனா இருந்தா! ஆனா, அவன் ஒன்ன பொண்ணுன்னு நெனச்சுக் கேட்டுட்டா!, என்று ராஜு திலோவையும் வம்பிக்கு இழுத்தார்.

 

சும்மா இருங்க! புள்ளைய கூட வச்சிக்கிட்டு, இந்த வயசுல என்ன பேசுறதுன்னு இல்லாம!, திலோ.

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கதவு நாகரீகமாக தட்டப்பட்டது. உள்ள வரச் சொன்னவுடன், யோகியும், சித்துவும் உள்ளே வந்தனர். மூவருக்கும் மூன்று தட்டுக்களில் சிற்றுண்டி மற்றும் காப்பி கொண்டு வந்து வைத்தனர்.

 

யோகி, சித்து இதெல்லாம் நீங்க செய்யக் கூடாது! எங்க மத்தவங்கள்லாம்? என்றார் ராஜு வேகமாக.

 

எல்லாரும் கஸ்டமர்ஸ கவனிச்சிட்டு இருக்காங்க சார். நல்ல கூட்டம் சார், அதான் நாங்களே எடுத்துட்டு வந்துட்டோம். ஒங்களுக்கு குடுக்கறது ஒன்னும் தப்பில்லைன்னு தோனுச்சு! அதான் நாங்களே வந்துட்டோம், யோகி.

 

உக்காருங்க தம்பி!, என்று திலோத்தமை அந்த அறையில் சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த இருக்கைகளைக் காட்டி கூறினார். இருவரும் அமர மறுத்து, நின்றுகொண்டிருந்தனர்.

 

ஒனக்கொன்னு தெரியுமா திலோ! யோகிதான் இந்த பிஸினெசோட ஃபுல் இன்ச்சார்ஜ்! ஃபுல் ஃப்ரீடம் கொடுத்துருக்கேன். அன்னக்கி நம்ம வீட்டுக்கு வந்துருந்தாங்கள்ல, அப்பக்கூட, நா பத்து நிமிஷம் வாங்க யோகின்னு கூட்டிட்டுப் போனேனே, ஞாபகம் இருக்கா?

 

ஆமா!, திலோ.

 

அன்னக்கித்தான் அக்ரிமெண்ட்ல சைன் பண்ணி முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டார்!

 

ஓ! இதுதான் அந்த இன்னொரு சர்ப்ரைஸா?, ரிது மனதுள் எழுந்த கேள்வியோடு யோகியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

இதெல்லாம் எனக்கேத் தெரியலியே! ஏன்டீ ரிது ஒனக்கேதும் தெரியுமா?, திலோ.

 

ம்ஹும்! யோகிட்டருந்து ஒரு வார்த்தை கூட வராதும்மா! ரகசியத்த காப்பாத்துறதுல சிதம்பரத்துக்கு அப்பறம் இவருதான்!, ரிது.

 

நம்பிக்கை இருக்குறதுனாலத்தான் நான் யோகியை ச்சூஸ் பண்ணிருக்கேன், தெரியுமா?, ராஜு.

 

எப்படி டாடி, நீங்க இவ்ளோ நம்புறீங்க! ஆளப் பாத்தா பச்சப்புள்ள மாதிரி கூடத் தெரியலயே!

 

ரிதுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நண்பர்கள் இருவரும், லேசாக புன்னகைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

நிறையச் சொல்லலாம்மா! சமீபத்துல கூட நம்ம மால்ல சில இடங்கள்ல, ஸ்பை கேமரா வைக்கச் சொன்னாரு! வச்சேன். நிறைய தெஃப்ட் கேஸ் மாட்டுச்சுல்ல! எல்லார் மாதிரியும் யோகியும் எனக்கென்னன்னு இருக்கிறதில்ல! கம்பெனியோட க்ரோத்துல இன்ட்ரஸ்டா இருக்காரு. அதுவுமில்லாம, பிஸினஸ் திங்கிங் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கும், தெரியுமா?

 

அப்படி என்ன டிஃபரண்ட் திங்க்கிங்?, ரிது.

 

இந்த எடத்துல நீ இப்ப ஒக்காந்திருக்கிறதே, யோகியோட டிஃபரண்ட் திங்க்கிங்ல ஒன்னுதான்! ஆக்சுவலா நா இந்த எடத்த ச்சூஸ் பண்ணல, ஆனா அவர் ச்சூஸ் பண்ணதுக்கு நிறைய, நல்ல ரீசன்ஸ் இருந்ததால நா ஏத்துக்கிட்டேன், ராஜு.

 

வெல்டன் யோகி! இத்தன வருஷமா என்னோட பேச்சுக்கு கூட, ஏதாவது காரணம் சொல்லி, தட்டிக் கழிச்சிருவாரு, ஆனா இன்னிக்கு ஒங்க பேச்சக் கேக்க ஆரம்பிச்சிருக்காரே! பரவாயில்ல, திலோத்தமையும் யோகியை பாராட்டிப் பேசினார்.

 

அய்யோ! அப்படில்லாம் இல்ல மேடம்! சார் இத ஒடனே ஒத்துக்கல மேடம். ரீசனபில் பாய்ன்ட்ஸ் இருந்துச்சு, அதான் அக்செப்ட் பண்ணிட்டார், யோகி.

 

வேற எதுவும், கொண்டுவரச் சொல்லவா சார்?, என்று ராஜசிம்மனிடம் சித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

 

என்ன சித்து! நீங்க எப்பப்பாத்தாலும் சார், சார்னுதான் கூப்பிடுவீங்களா? இந்த அங்கிள், ஆண்டி இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு!, என்று ஓரக்கண்ணால் யோகியையும் பார்த்தாள்.

 

இல்ல ரிது, அம்மா, அப்பான்னு கூப்பிட்டு பழகிருக்கோம். ஆனா இந்த எடம் அஃபிசியலா இருக்கறதால அப்படி கூப்பிட்டா நல்லாருக்காதே!, சித்து.

 

சும்மா சொல்லக் கூடாது! ரெண்டுபேருமே செம ஷார்ப்தான்!, என்று திலோ சித்துவின் பக்கம் திரும்பிச் சொன்னார்.

 

ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் வரலயா ரிது?, ராஜு.

 

வீட்லருந்து வரும்போதே கால் பண்ணிட்டேன். சம்யுவுக்கு டைட் ஒர்க்காம். யாஷிகா இப்ப வந்துருவா. அவ கம்பெனி ரொம்ப பக்கம் தெரியுமா டாடி!, ரிது.

 

தெரியுமே! யாஷிகாவோட கம்பெனிய எனக்குத் தெரியாம இருக்குமா?

 

சார்! எனித்திங் மோர்?, என்று யோகி மேசையில் இருந்த குவளையை எடுக்கப் போனான்.

 

வெயிட் யோகி, என்று அவசரமாக தடுத்த ராஜு, கண்ணாடி சாளரம் வழியாக வெளியில் இரண்டு வினாடிகள் பார்த்தார்.

 

எதேச்சையாக அங்கிருந்த ஒரு பணியாள் இவரை நோக்கியவுடன், கையசைத்து உள்ளே வரச்சொல்லி, அங்கு அவர்கள் உபயோகித்திருந்த மேசையை சுத்தம் செய்யச் சொன்னார்.

 

சரி, நான் கிளம்பறேன். யோகி பாத்துக்கோங்க, என்று யோகியின் கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு, அவரது மற்ற அலுவல்களை கவனிக்கக் கிளம்பினார்.

 

நண்பர்கள் இருவரும் அவருடன் வெளியில் வந்தனர். எதிரில் யாஷிகா வந்து வண்டியை நிறுத்தினாள். அவளை அழைத்துச் செல்லுமாறு யோகியிடம் கூறிவிட்டு, சித்துவிடம் சிறிது நேரம் அவன் திருமண வேலைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

 

மேரேஜ் எங்க வைக்கலாம்னு இருக்கீங்க சித்து?, ராஜு.

 

இப்போதைக்கு முடிவாகல சார். அநேகமா சென்னைலதான் இருக்கும். ரிசப்ஷன் மதுரைன்னு நான் யோசிச்சு வச்சிருக்கேன், சித்து.

 

கல்யாணம் அல்லது ரிஷப்சன், ரெண்டுல ஒன்னு சென்னைல இருக்கும்!, ராஜு.

 

எஸ் சார்

 

எதுவா இருந்தாலும், தேவையான திங்க்ஸ் வாங்கறதுக்கு முன்னாடி என்ன கன்சல்ட் பண்ணுங்க. சென்னைல வாங்கற எல்லாத்துக்கும் நா கைட் பண்றேன். ஓக்கேயா?

 

ஒங்களோட பிஸி ஷெட்யூல்ல தொந்தரவு செய்யற மாதிரி இருக்குமே சார்!

 

நோ ஒர்ரி! அன்ஈசியா ஃபீல் பண்ணிங்கன்னா ரிதுட்டச் சொல்லுங்க, அவ என்னோட மூடுக்கேத்த மாதிரி பேசிட்டுப் போறா!

 

வித் ப்ளஷர் சார்!, என்று சித்து புன்னகைத்தான்.

 

ச்சீயரப்!, என்று சித்துவை தட்டிக்கொடுத்துவிட்டு, காரில் ஏறி கிளம்பிவிட்டார் ராஜு.

©©|©©

 

நண்பகலுக்கு மேல் ஏஆர் கஃபே கார்னரில் இருந்து திலோத்தமையும், ரிதுவந்திகாவும் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தனர். மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு, கையில் அலைபேசியுடன், ரிது தன் அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.  

 

திலோத்தமை வீட்டின் சில பணிகளை முடித்து, தானும் புத்துயிர் பெற்று தன் அறைக்குச் செல்ல முனைந்தவர், ரிதுவிடம் சற்று உரையாடலாம் என்று அவள் அறைக்கு வந்து அமர்ந்துகொண்டார்.

 

தாயைப் பார்த்த மகள் ரிது கையில் இருந்த அலைபேசியை முறையான இடத்தில் வைத்துவிட்டு, தன் தாய் ஏதோ கேட்க வருவதை உணர்ந்து அவளே ஆரம்பித்தாள்.

 

அன்னையே, ஆரோக்கிய அன்னையே! ஏம் பாக்குறீங்க என்னையே!, ரிது.

 

மேடம் ஒரே சந்தோசமா இருக்கீங்க போல!, திலோ.

 

இருக்கக் கூடாதா? இன்னக்கி அப்பா புதுசா பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிருக்காருல்ல!

 

இப்பல்லாம் அப்பாவோட பிஸினஸ் பத்தில்லாம் ரொம்ப சந்தோசப்படுறீங்க போலயே!

 

ஆமா, அதுக்குத்தானம்மா நா படிச்சதே! அப்பா இப்பவே விட்டாக் கூட ஏதாவது ஒரு பிஸினஸ நானே சுயமா பண்ணுவேன், தெரியுமா?

 

நீயும் அப்பா மாதிரி தொணைக்கு, யோகி மாதிரி ஒரு ஆள வச்சிக்கிறியா?, திலோ.

 

யோகி மாதிரி என்ன! யோகியையே வச்சிக்கிறேன்!

 

அய்யோ! ஃப்லோல ஏதோ ஒலறிட்டேனோ?என்று ரிது மெல்ல நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

 

என்ன பேசுற ரிது? யோசிக்காம எதையாவது உளறாத!, திலோ கடிந்துகொண்டாள்.

 

சரிம்மா! சாரிம்மா!, என்று சரணடைந்தாள் மகள்.

 

சரி, உனக்கும் அப்பாட்டச் சொல்லி, ஒரு கஃபே வச்சுக் கொடுப்பமா?

 

ம், எதவேணாலும் வச்சுக்குடுங்க! டெவலப் பண்ணிக் காட்டுறேன்!, என்று தன்னையும் ஒரு யோகியாக நினைத்துக்கொண்டு பேசினாள்.

 

ஒன்னுமே தெரியாம இப்படி பேசுறியே!, திலோ.

 

என்ன ஒன்னும் தெரியாது? யோகி மட்டும் எல்லாமே தெரிஞ்சுகிட்டா இங்க வந்திருக்காரு? மதுரைல இருந்து இங்க வந்து இவ்ளோ சைன் பண்ணும்போது, சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என்னால ஏம்மா முடியாதுன்னு நினைக்கிறீங்க?, ரிது தன்னம்பிக்கையுடன் பேசினாள்.

 

சும்மா நீயா கற்பனைல பேசாத ரிது. யோகி இங்க வரும்போதே ரெண்டு வருச எக்ஸ்பீரியன்சோடதான்டீ வந்துருக்காரு. இந்த ஒரு பிஸினஸ் மட்டும் இல்ல, எந்த பிஸினஸ் பண்ணாலும், அதுல டீப்பா ஸ்டடி பண்ணி, அப்பறந்தாண்டீ ஸ்டார்ட் பண்றாரு. அப்பாவோட பழக்கமும் அதுதான். அதான்டி அப்பாவுக்கு அவர ரொம்ப புடிச்சிருக்கு!, திலோ.

 

அப்பாவுக்கு மட்டுந்தானா! எனக்குந்தான் புடிச்சிருக்கு!

 

ஓ!

 

உனக்குந்தான் பிடிச்சிருக்கு!, என்று ரிது தொடர்ந்து பேசி தப்பித்துக்கொள்ளப் பார்த்தாள்.

 

ஆனால், தாய் திலோத்தமை, மகளின் எண்ண ஓட்டத்தை சரியாக தீர்மானித்துவிட்டார். அதனால், இதற்கு மேல் ரிதுவிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. ஆழ்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே அறையைவிட்டு அகன்றார்.

 

பார்வை ஒன்றே போதுமே!

©©|©©