Oviya Paavai 1
Oviya Paavai 1
ஓவியம் 01
ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன்.
நேரம், காலை பத்து மணி.
தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து காமெராக்கள் படம் பிடிக்க அந்த சிவப்புக் கம்பளத்தில் அனைவருக்கும் ஒரு சின்னப் புன்னகையோடு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
முழு சூட்டில் ஒரு அலட்சியம் கலந்த புன்னகையோடு நின்றிருந்த அந்த முப்பது வயது இளைஞனைப் பார்த்த போது கொஞ்சம் மயங்கத்தான் சொல்லியது மனது.
வலது கையில் இன்றைய விழாவிற்கு அவனைக் கதாநாயகன் ஆக்கிய விருதைத் தாங்கிய படி நின்றிருந்தான் ரஞ்சன்.
சற்று அப்பால் தன் மகனைப் பெருமிதத்தோடு பார்த்த படி நின்றிருந்தார்கள் சந்திர மூர்த்தி, ஷாரதா தம்பதியினர்.
“ஷாரதா! எம் பையனைப் பார்த்தியா? ஒரு காலத்துல இப்பிடியொரு நிலைக்கு வரணும்னு நான் எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா?” சந்திர மூர்த்திக்கு பேசும் போதே கண்கள் கலங்கி விட்டன.
“உஷ்… மூர்த்தி, என்ன இது?! கண்ணைத் துடைச்சுக்கோங்க.” மெல்லிய குரலில் அதட்டிய மனைவியைப் பார்த்துச் சிரித்தார் சந்திர மூர்த்தி.
“இது ஆனந்தக் கண்ணீர்டி, எம் புள்ளையைப் பாருடி ஷாரதா!” மனைவியின் தோளை இறுக அணைத்தபடி மகிழ்ச்சி பொங்கச் சிரித்தார் மனிதர்.
“அடேயப்பா! போதுமே உங்கப் பெருமை!” சலித்துக் கொண்டாலும் ஷாரதாவின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘ஆண்டவா! உனக்கு நன்றி! எம் புள்ளைக்கு எந்தக் கண்ணும் பட்டுடாம நீதான் அவனைப் பாதுகாக்கணும்!’ அந்தத் தாய் மனது கம்பீரமே உருவாக நிற்கும் தன் மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தித்தது.
இங்கிலாந்தில் வருடா வருடம் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் அந்த வருடத்திற்கான மிகச்சிறந்த ஓவியமாக ரஞ்சனின் ஓவியம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கான பிரத்தியேக விழா இன்றைக்கு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இது போன்ற விழாக்களுக்கு இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் தலைமை தாங்குவது வழக்கம்.
விழாவின் நாயகன் ஒரு இளைஞன் என்பதால் அரச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசன் ‘வில்லியம்’ அன்றைய விழாவிற்கு வந்து சிறப்பித்திருந்தார்.
சற்று முன்புதான் விழா இனிதாக நிறைவு பெற்றிருக்க இப்போது பத்திரிக்கையாளர்கள், பல சேனல்களை சார்ந்தவர்கள் என பலர் ரஞ்சனை சூழ்ந்து கொண்டார்கள்.
“மிஸ்டர் ரஞ்சன், இந்தத் துறைக்கு வரணும்னு எப்பிடி உங்களுக்குத் தோணிச்சு? யாரு உங்களை இந்தளவுக்கு ஊக்கப் படுத்தினாங்க?” ஒரு நிருபர் கேட்க ரஞ்சன் புன்னகைத்தான்.
“என்னோட அப்பா… எனக்கு எல்லாமே அவர்தான்.” ரஞ்சன் இதைச் சொல்லும்போது சந்திர மூர்த்தி இங்கே வானத்தில் பறந்து கொண்டிருந்தார்.
“உங்க ஓவியத்தோட கருப்பொருள் என்ன மிஸ்டர் ரஞ்சன்?”
“அது பார்வைக்குப் பார்வை வேறுபடும்.”
“எல்லாக் கேள்விக்கும் ரொம்பச் சின்னதாப் பதில் சொல்றீங்களே, நீங்க அதிகமாப் பேச மாட்டீங்களோ?” அந்தக் கேள்விக்குச் சின்னதாக ஒரு சிரிப்பு மட்டுமேப் பதிலாகக் கிடைத்தது.
“என்னோட வாய் பேசுறதை விட கைதான் நிறையப் பேசும்னு சொல்லாமச் சொல்லுறீங்களா ரஞ்சன்?” ஒரு பெண் நிருபர் கேட்க கூடி நின்ற அத்தனைப் பேரும் சிரித்தார்கள்.
“உங்கப் புள்ளைப் பேசிட்டாலும்!” சிரித்த ஷாரதா தன் கணவரிடம் நொடித்துக் கொண்டார்.
ரஞ்சன் வரைந்த ஓவியம் அந்த ஹாலில் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கேயும் நான்கைந்து காமெராக்கள் அதைப் படம் பிடித்த வண்ணம் இருந்தன.
இன்றைய மாலை நேரப் பத்திரிகைகளின் பிரதான தலைப்புச் செய்தி அதுவாகத்தான் இருக்கும். மகன் வரைந்த ஓவியத்தைப் பார்த்த ஷாரதா நாசூக்காகக் கணவரின் காதில் கிசுகிசுத்தார்.
“எல்லாம் சரிதான் மூர்த்தி… ஆனாலும் ரஞ்சன் இப்பிடி படம் வரைஞ்சிருக்க வேணாம்.” இதற்கு முன்பும் பல தடவை இந்தக் கருத்தைச் சொல்லி ஷாரதா தன் கணவரிடம் வாங்கிக் கட்டி இருந்தாலும், அவரால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
“உன்னோட காட்டுப் புத்தியை இங்கயும் காட்டாமக் கலை நயத்தோட அந்த ஓவியத்தைப் பாரு ஷாரதா, வீட்டுல ரெண்டு ஆர்டிஸ்ட்டை வெச்சுக்கிட்டு நீ இப்பிடிப் பேசுறது ரொம்பக் கேவலமா இருக்கு.” வெளிப்படையாகவேத் தன் கோபத்தைக் காட்டிவிட்டு அப்பால் போய்விட்டார் சந்திர மூர்த்தி.
ஷாரதாவிற்கு என்ன சொல்வதென்றேப் புரியவில்லை. அவர்கள் வீட்டில் சந்திர மூர்த்திக்கு ஓவியம் மேல் தீராத காதல் இருந்தது.
முறையாக ஓவியம் வரையக் கற்றதால் அவருக்கு அந்த ஆர்வம் ஏற்படவில்லை. அவர் பரம்பரையில் யாருக்கோ அந்த ஆர்வம் இருந்திருக்க வேண்டும். இவர் ரத்தத்திலும் அது ஊறிப் போயிருந்தது.
ஆனால்… வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற சவாலை ஏற்றுக் கொண்டிருந்த மனிதருக்கு ஓவியத்தை முறையாகப் படிக்க நேரம் இருக்கவில்லை.
அதற்காக அந்த ஆர்வத்தை அவர் விட்டுவிடவும் இல்லை. வீட்டிலேயே ட்ராயிங் ரூம் ஒன்றை அவர் உபயோகத்திற்காக வைத்திருந்தார்.
குழந்தைகள் இரண்டு ஆகிப் போனது. மூத்தவள் ஸ்வப்னா. அம்மா ஷாரதாவை போல ஓவியம் என்றால்,
“இதை வரைய எவ்வளவு நேரமாகும்? இதுக்கு எவ்வளவு பணம் செலவாகும்?” இப்படிக் கேள்வி கேட்கும் ரகம்.
இளையவன் ரஞ்சன். சிறு வயது முதலே அப்பாவைப் போல ஓவியத்தின் மேல் இவனுக்கு ஆர்வம் இருந்தது. அதை சந்திர மூர்த்தி ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொண்டார்.
தான் முறையாகப் பயிலாத ஓவியக் கலையை மகனுக்குக் கற்பித்தார். விடுமுறை நாட்களில் அப்பாவும் மகனும் ஓவியக் கண்காட்சிகளுக்குப் போவார்கள்.
அப்படிப் போகும் நாட்களில் எல்லாம் வீட்டில் சதா இதே பேச்சாகத்தான் இருக்கும். அம்மாவும் மகளும் அப்போது முகத்தைச் சுளிப்பார்கள்.
“இவங்களுக்கு வேற வேலையே இல்லையாடி ஸ்வப்னா? எப்பப் பாரு இதைப்பத்தியேப் பேசுறாங்க!”
“ஆமா, சுத்த போர் ம்மா!”
ஆனால் ஆண்கள் இருவரும் பெண்களின் பேச்சைக் கருத்தில் கொள்வதேயில்லை. ரஞ்சனின் படிப்பு முழுவதும் ஓவியம் சார்ந்ததாகவே இருந்தது.
“அவனவன் புள்ளைங்களை டாக்டர் ஆக்கணும், என்ஜினியர் ஆக்கணும்னு ஆசைப்படுவாங்க, உங்கப்பாவைப் பார்த்தியா ஸ்வப்னா?!”
“ஹா… ஹா… இன்டெரஸ்டிங் இல்லை ம்மா.” ஒருநாள் டைனிங் டேபிளில் இந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.
“ஷாரதா, டாக்டர் ஆக, என்ஜினியர் ஆக ஆயிரம் பேரு பொறந்திருப்பாங்க, ஆனா ரஞ்சன் கிட்ட இருக்கிற கலை கோடியில இருக்கிற ஒருத்தனுக்குத்தான் வரும், அதை நீ புரிஞ்சுக்கோ.”
“ஆமா… வரும் வரும், கலையும் கவிதையும் இருக்கிற வீட்டுல தரித்திரமும் கூட இருக்கும் ன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க.”
“உங்க ஊர்தானே! அந்தக் காட்டுப் பசங்க இப்பிடித்தான் பேசுவானுங்க, அவனுங்களுக்கு வேற எப்பிடிப் பேசத் தெரியும்?!” கணவரின் கேலியில் அவரை முறைத்து விட்டு அப்பால் போய்விட்டார் ஷாரதா.
ஆனால் இப்போது நடுநாயகமாக வீற்றிருக்கும் இந்த ஓவியத்தைப் பார்த்த போதும் அந்தத் தாயின் மனது சமாதானமாகவில்லை. பலராலும் போற்றி, சிலாகித்துப் பேசப்பட்ட அந்த ஓவியத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் சாதாரண கோலத்தில் இருக்கவில்லை. கலவி முடிந்த இன்பக் களிப்பு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பெண்ணின் உடலை ஆணின் உடல் முழுதாக மூடி இருந்தாலும் பல விபரீதமான கற்பனைகளுக்கு ஓவியம் வழி வகுத்தது.
பெண்ணின் முகத்தை முழுதாகக் காட்டியிருந்த ரஞ்சன், ஆணின் முகத்தை பக்கவாட்டிலேயே காட்டி இருந்தான். மிகவும் தத்ரூபமாகத்தான் இருந்தது ஓவியம். இருந்தாலும், ஒரு காலைக் காட்சி, மாலைக் காட்சி இப்படி எதையாவது வரைந்திருக்கக் கூடாதா?
“என்னம்மா சொல்லுது உம் பையனோட ட்ராயிங்?” கேட்டபடி அன்னைக்கு அருகே வந்து நின்றாள் ஸ்வப்னா.
“எங்க போன ஸ்வப்னா?”
“ஏன்? என்னாச்சு?”
“என்ன ஆகும் ன்னு உனக்குத் தெரியாதா? எப்பவும் போல உங்கப்பாக்கிட்ட வேண்டிக் கட்டிக்கிட்டேன்.”
“ஹா… ஹா… விடேம்மா, அவங்களுக்கு இது பிடிச்சிருக்கு, பண்ணுறாங்க.”
“நல்லவேளை மாப்பிள்ளை வரலை, வந்திருந்தா என்னோட மானம் போயிருக்கும்.”
“யாரு? உன்னோட மாப்பிள்ளை?! அவரும் இவங்களோட சேர்ந்து இன்னைக்குப் பூரா இதைப்பத்தியேப் பேசியிருப்பாரு.”
“ஏன் ஸ்வப்னா? ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும்தான் அப்பா சொல்ற மாதிரி ரசனைக் குறைச்சலோ?!”
“இருக்கலாம்.” தோளைக் குலுக்கிய படி ஸ்டைலாக சொன்னது பெண்.
“என்ன ரசனையோ?! பொண்ணு முகத்தைக் கற்பனையில வரைஞ்ச மாதிரி பையனோட முகத்தையும் கற்பனையில வரைஞ்சிருக்கலாம் இல்லை? எதுக்கு இவனோட முகத்தை வரைஞ்சிருக்கான்?”
உண்மையிலேயே படத்திலிருந்த ஆணின் முகமாகத் தன்னையே வரைந்திருந்தான் ரஞ்சன். அது ஷாரதாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
கலைஞரான சந்திர மூர்த்திக்கு அது ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை. ஆனால் ஷாரதா தவித்துப் போனார். ஒரு சாதாரண அம்மாவான அவருக்குத் தன் பிள்ளையைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்ப்பது போலவே இருந்தது.
“உங்கப்பா ஒரு தடவை என்னைப் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டுப் போயிருந்தாரு.”
“தமிழ் மூவியா?”
“பின்ன நான் என்ன ஜேம்ஸ் பாண்ட் மூவியா பார்க்கப் போவேன்?!”
“ம்…”
“அதுல இப்பிடித்தான் ஒரு சீன் வரும், பிரகாஷ் ராஜ் கவிதை சொல்ற மாதிரி, உங்கப்பா ரசிச்சுப் பார்த்தாரு, எனக்குப் பாதிப் படம் புரியவேயில்லை.”
“ஐயையோ!”
“என்னமோ… எம்ஜிஆர், கருணாநிதியோட கதையாம் அது.”
“சுத்தம்!”
“அதைச் சொல்லு, ஒரு விசு படத்துக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிருந்தா நல்லா ரசிச்சு நானும் பார்த்திருப்பேன்.”
“அது சரி!”
“ஏன் ஸ்வப்னா? கலைஞர்கள் ன்னாலே இப்பிடித்தான் கிறுக்கனுங்களா இருப்பாங்களா?!”
“அப்ப நம்ம வீட்டுல ரெண்டு கிறுக்குங்க இருக்காங்கன்னு சொல்றீங்களா?!”
“மாப்பிள்ளையை விட்டுட்டியே? மூனு ஸ்வப்னா.”
“அடிதான் வாங்கப் போறீங்க ம்மா.” மகள் மிரட்ட இப்போது தாய் சிரித்தார்.
ஆனால் அதேவேளை ஓவியத்தில் இருந்த பெண் உருவத்தைப் பற்றித்தான் ரஞ்சனிடம் ஒரு பெண் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“மிஸ்டர் ரஞ்சன், ஓவியத்துல இருக்கிற ஆண் நீங்க, பெண் யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?”
“அது என்னுடைய கற்பனை உருவம்.” தயக்கமின்றி வந்தது ரஞ்சனின் பதில்.
“இதை நாங்க நம்பலாமா?” கேள்வி கேட்ட பெண் சிரித்தது.
“கண்டிப்பா.”
“அந்தக் கற்பனை உரு இப்ப உங்களை மீடியாவுல சாடுறது உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் ரஞ்சன்?” இன்னொரு கேள்வி இப்படி வரவும் ரஞ்சன் திடுக்கிட்டுப் போனான்.
“புரியலை.”
தகவல் சொன்ன நபரை அனைவரும் இப்போது திரும்பிப் பார்க்க ரஞ்சன் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.
“அப்பா! என்ன சொல்றாங்க இவங்க?!” தந்தையிடம் வந்தவன் கேட்க அவருக்கும் எதுவும் புரியவில்லை.
“எனக்கும் ஒன்னும் புரியலை ரஞ்சன், டென்ஷன் ஆகாதே, அதை அப்புறமா வீட்டுக்குப் போய் என்னன்னு பார்த்துக்கலாம்.”
அதற்குப் பிறகு அங்கே ஏற்கனவேத் திட்டமிட்டபடி நடக்க வேண்டிய மீதி நிகழ்வுகள் நடந்தேற ரஞ்சனின் குடும்பம் வீடு திரும்பியது.
லண்டனை விட்டுச் சற்றேத் தொலைவில்தான் வீடு வாங்கி இருந்தார் சந்திர மூர்த்தி. இரண்டு பிள்ளைகள் என்று ஆனபிறகு வீடு கொஞ்சம் விசாலமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அத்தோடு மனைவி வேறு தாய் நாட்டில் நல்ல விஸ்தாரமான வீட்டில் வாழ்ந்து பழகியவள். தன்னை நம்பி வந்த பெண்ணுக்குத் தன்னால் முடிந்தவரை அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் சந்திர மூர்த்தி.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அப்பாவும் மகனும் தங்கள் லேப்டாப்பில் மும்முரமாகிவிட அம்மாவுக்கும் மகளுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“என்னங்க ஆச்சு? ஏன் ரெண்டு பேரும் டல்லாகிட்டீங்க?” மனைவியின் பேச்சைக் கூடக் கவனிக்காமல் சந்திர மூர்த்தி லேப்டாப்பின் திரையையேப் பார்த்திருக்க அவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் ஷாரதா.
“அப்பிடி என்னத்தை இப்பிடி ஆர்வமா அப்பாவும் மகனும் பார்க்கிறீங்க?” கேட்ட படியேக் கணவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தவர் லேப்டாப்பை பார்த்தார். பார்த்தவர் அப்படியேத் திகைத்துப் போனார்.
“என்னங்க இது?!” ரஞ்சனின் ஓவியத்தில் இருந்த பெண் லேப்டாப் திரையில் ஆவேசம் கொண்டு தாறுமாறாகப் பேசிக் கொண்டிருந்தது.
“எனக்கும் ஒன்னும் புரியலை ஷாரதா!”
“அந்தப் பொண்ணு அவனோட கற்பனைன்னு சொன்னீங்க? இப்ப என்னடான்னா பொண்ணே வந்து கண்ணு முன்னாடி நிக்குது?!”
“என்னால நம்பவே முடியலை!” சந்திர மூர்த்திக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. அதிர்ச்சிப் பூண்டை மிதித்தாற் போல அப்படியே அமர்ந்திருந்தார்.
“இதுக்குத்தான் கண்டதையும் கிறுக்காதீங்கன்னு சொல்றது, நாம சொல்றதை இங்க யாரு கேட்கிறா! மானம் போகப் போகுது.” அங்கலாய்த்த படி ஷாரதா கோபமாக எழுந்து போய்விட்டார்.
“கேட்டியா ஸ்வப்னா சங்கதியை?!” மகளின் ரூமிற்கு வந்த அம்மா பிலாக்கணம் விரித்தார்.
“அம்மா!” இதைத்தாண்டி மகளின் வாயிலும் வேறு வார்த்தை வரவில்லை.
“நான்தான் அப்பவேத் தலையால அடிச்சுக்கிட்டேன் இல்லை! ஏதாவது ஒரு காட்சியை வரைஞ்சு தொலைக்க வேண்டியதுதானே! இப்பப் பார்த்தியா என்ன ஆச்சுன்னு?!”
“என்னால நம்பவே முடியலை ம்மா, அச்சு, அசல் ரஞ்சன் வரைஞ்ச மாதிரியே இருக்காம்மா அந்தப் பொண்ணு!”
“அடியேய்! நான் என்னப் பேசுறேன், நீ எதுக்கோ வாயைப் பொளக்கிற?! நாக்குல நரம்பே இல்லாம நார் நாராக் கிழிக்கிறா ஸ்வப்னா அந்தப் பொண்ணு!”
“பின்ன அள்ளிக் கொஞ்சவாம்மா செய்வாங்க?!”
“அதைச் சொல்லு! அவளும் ஒரு பொண்ணில்லையா?! இப்பிடித் தன்னோட படத்தை யாராவது வரைஞ்சு வெச்சாக் கோபம் வரத்தானேச் செய்யும்?!”
“அதுக்காக இந்தளவுக்கா ம்மா பேசுவாங்க?!”
“கொஞ்சம் ஓவராத்தான் பேசுறா… இருந்தாலும் அவ மேல தப்பில்லைன்னுதான் நான் சொல்லுவேன்.”
இங்கே அத்தனைப் பேரும் தங்கள் கருத்துக்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்க, ரஞ்சன் அவன் அறையில் அந்தப் பெண்ணின் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
‘இது எப்படிச் சாத்தியம்?!’ அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தை இதுவரை அவன் எங்கேயும் பார்த்ததில்லை. அது அவனது கற்பனை முகம், ஆசை முகம்.
அந்த முகம் இன்று அவனை வசைபாடுவது அவனுக்கு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், இன்னொரு புறம் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தான் இளையவன்.
அந்த முகம் அவன் உள்ளத்துக்குள் பல காலமாகப் பதிந்திருக்கிறது. அதை என்றைக்கும் ஓவியமாக வரைய வேண்டும் என்று ரஞ்சன் நினைத்ததில்லை.
அந்த முகம் அவன் கனவில் வரும், கவிதை தரும். அந்த முகத்தை அவன் வெகுவாக ரசிப்பான். கொஞ்சித் தீர்ப்பான். அதே முகம் நிஜமாக இன்று அவனுக்குக் காட்சி தந்த போது அந்த ஓவியனே ஒரு ஓவியமாகிப் போனான்.
அன்றைக்குச் சிறந்த ஓவியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஓவியத்தை அவ்வளவு சுலபத்தில் வரைந்து விடவில்லை ரஞ்சன்.
ஓவியக் கண்காட்சிக்கு நல்லதாக ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று அவன் சில வாரங்களாகவே நினைத்திருந்தான். ஆனால் ஓர் நாள் அதிகாலை அந்த முகம் அவன் கனவில் எப்போதும் போலக் கண் சிமிட்டியது.
எப்போதும் கனவில் உலாவரும் அந்த உருவம் அன்றைக்கு அவன் கனவில் கலவி கொண்டது. ரஞ்சன் திடுக்கிட்டு எழுந்து கொண்டான்.
உடம்பெல்லாம் வேர்த்துப் போனது. சட்டென்று ஜன்னலைத் திறந்தவன் பல்கூடத் துலக்காமல் தனது ஓவியத்தை ஆரம்பித்திருந்தான்.
எப்போதும் வரைய ஆரம்பித்து விட்டால் அங்கிருக்கும் உபகரணங்களுக்குள் ஒன்றாக அவனும் மாறிப் போவான்.
அவன் வரையும் போது அவன் முகம் மட்டுமல்ல, அவன் கையும் சிரிக்கும், அழும், கோபம் கொள்ளும்… இன்னும் ஏதேதோ செய்யும்.
ஆனால் இந்த ஓவியத்தை வரையும் போது அவன் அவனாகவே இருக்கவில்லை. வரைந்து முடித்த போது அந்தப் பெண்ணோடு ஒரு வாழ்க்கையையே வாழ்ந்த உணர்வு அவனுக்குள் உண்டானது.
சில பொழுதுகளில் தன்னோடு கலந்த பெண் எங்கே என்று அவன் தேடியதும் உண்டு! இன்றைக்கு அதே பெண் அவன் கண்களுக்குத் தெரிகிறாள்.
“எவனோ ஒரு பொறுக்கி ஓவியம் எங்கிற பெயர்ல எதையாவது கிறுக்கி வெச்சா நீங்களும் மைக்கைத் தூக்கிக்கிட்டு வந்திடுவீங்களா? போய் பொழைப்பைப் பாருங்கய்யா! அக்கா, தங்கைச்சிங்க கூடப் பொறக்காத காவாலியா இருக்கப் போறான்!” அந்தப் பெண்ணின் காட்டமான வார்த்தைகள் ரஞ்சனின் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஓவியமாகத் தெரிவு செய்யப்பட்ட அவன் படைப்பு! அங்கே ஒரு பெண்ணால் தாறுமாறாக விமர்சனம் செய்யப் பட்டிருந்தது.
ரஞ்சன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தான். அவன் லேப்டாப்பில் அவள் அவனைத் திட்டும் ஒரு கணத்தைச் சேமித்து வைத்திருந்தான்.
முகம் மட்டுமல்ல, திட்டும் அந்த உதடுகளும் இப்போது அவனை வசீகரித்தன. சட்டென்று எதுவோத் தோன்ற தூரிகையை எடுத்தான் ரஞ்சன்.
மனதுக்குள் ஆணி அடித்தாற் போல இருந்த அவள் முகத்தை இப்போது வெறும் கோட்டுச் சித்திரமாக வரைந்தான்.
அவள் முகத்தைப் பாதி மறைத்தாற் போல அவன் முகத்தை வரைந்தான். அவனை வசைபாடும் அந்த இதழ்களை முழுதாக அவனே மூடி இருப்பது போல இருந்தது அந்தக் கோட்டுச் சித்திரம்.
“இப்ப என்ன சொல்றேப் பொண்ணே?!” அவளிடம் சவால் விடுவது போல லேப்டாப்பில் இருந்த அவள் முகத்திடம் வாய்விட்டுக் கேட்டான் ரஞ்சன்.
அவன் உதட்டோரம் ஒரு திருப்திப் புன்னகைத் தோன்றியது. படங்களில் இருக்கும் அவன் கற்பனைகளை நனவாக்க மனதில் சட்டென்று ஒரு ஆசை தோன்றியது.
உடம்பெல்லாம் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ள சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான் ரஞ்சன். அந்த நிக்கோட்டின் சுகத்தையும் தாண்டி அவள் முகம் அவனுக்கு அதிக போதையைக் கொடுத்தது!