Uyir Vangum Rojave–EPI 3
Uyir Vangum Rojave–EPI 3
அத்தியாயம் 3
காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும்
இது வைரமுத்து சொன்னது
காதலிக்காம இருந்துப்பார் உன் தலையெழுத்து அழகாகும்
இது யாரோ சொன்னது !!!
அங்கே விருந்தில் ஒப்புக்குக் கொறித்துவிட்டு வந்திருந்தாள் தேவி. வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடலாம் என டைனிங் ஹாலுக்கு சென்றவள் ராகவனை அங்கே பார்த்து விட்டு ஒன்றும் சாப்பிடாமல் மாடி ஏறிவிட்டாள். அவள் பின்னோடு வந்த கார்த்திக் முனிம்மாவிடம் மேலே சாப்பாடு கொண்டு கொடுக்க சொல்லி ஜாடை காட்டினான்.
அவர் சென்றதும் ராகவனுடன் சாப்பிட உட்கார்ந்தான் அவன். இரவு எந்த நேரமானாலும் அவனுக்கு சோறு வேண்டும். சோறு போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தவன் தட்டில் அயிட்டங்களைப் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார் ராகவன்.
“போதும் சார். இதுக்கு மேல சாப்பிட முடியாது” என அவரை தடுத்தான் கார்த்திக்.
“சாப்பிடுப்பா. அவ பின்னாடி ஓடி ஓடி இப்படி துரும்பா இளைச்சிட்ட. வேலைக்கு வந்த போது நல்லா கொலு கொலுன்னு இருந்த. இப்ப கழுத்து எலும்பெல்லாம் தெரியுது”பாசமாக பேசினார் அவர்.
“நான் எப்போதும் மாதிரி தான் சார் இருக்கேன். “ அவன் குரலில் சற்றி ஒதுக்கம்.
பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர்,
“சாப்பிட்டு பத்திரமா போப்பா. இங்கயே தங்கிக்கன்னு சொன்னா கேட்க மாட்டிக்கிற”
அவருக்கு ஒரு புன்னகை மட்டும்தான் அவனிடம் இருந்து கிடைத்தது.
முனிம்மா கொடுத்த உணவை சாப்பிட்டவள், உடல் வலி தீர பாத் டப்பில் சிறிது நேரம் அமிழ்ந்திருந்தாள். குளித்து விட்டு பைஜாமா அணிந்து கொண்டவள் ஜன்னல் ஓரம் வந்து நின்றாள். கடல் காற்று ஊசியாய் குத்தியது. தன் இரு கரங்களாலும் தன்னையே அணைத்துக் கொண்டவள் தூரத்துக் கடலை அந்த இருட்டிலும் வெறித்துக் கொண்டு நின்றாள்.
சிறு வயதில் இருந்து கூட வரும் தனிமை அவளை பாடாய் படுத்தியது. மனம் விட்டு பேச, மனக் கஸ்டங்களை சொல்லி அழ ஒரு தோள் வேண்டும் போல் இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி நின்றாளோ தெரியாது. பின் தன்னையே உலுக்கிக் கொண்டவள்,
‘எனக்கு நான் மட்டும் தான். என்னை நான் தான் சந்தோஷமா வச்சிக்கனும்’ என உருப்போட்டுக் கொண்டாள்.
எப்பொழும் போல் தூக்க மாத்திரை போட்டலை எடுத்தவள் இரு மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள். பிறகு அந்த போட்டலையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அப்படியே எல்லாத்தையும் வாயில கொட்டிக்கலாமா? இந்த தனிமையிலிருந்து விடுதலை கிடைக்குமே’ என ஒரு நிமிடம் தான் நினைத்தாள். அந்த எண்ணம் வந்தவுடனே அப்படி ஒரு ஆங்காரம் வந்தது அவளுக்கு. போட்டலை விட்டு அடித்தவள், அறையில் ஒரு மூலையில் வைத்திருக்கும் டென்னிஸ் மட்டையை கையிலெடுத்தாள் . மனதின் ஆத்திரம் தீரும் வரை கண்ணில் பார்த்த எல்லா பொருட்களையும் அடித்து நொருக்கினாள். ஹிஸ்டீரியா வந்தது போல்,
“நான் ஏன் சாகனும்? நீங்க எல்லாரும் தான் சாகனும். என்னை இந்த நிலைமைக்கு தள்ளின நீங்க எல்லாம் தான் சாகனும். நான் சாக மாட்டேன். யோ ராகவா!!! உன்னை நான்தான்யா கொல்லுவேன். என் ரெண்டு கையாலயும் கழுத்தை நெரிச்சிக் கொல்லுவேன். நீ தான் சாகனும், நீ தான் சாகனும்.” என கத்தினாள்.
பல சமயங்களில் இங்கே வீட்டில் நடப்பதுதான் இந்த சம்பவம். அவளது ஹிஸ்டீரியா சமயங்களில் கார்த்திக்கைத் தவிர யாரும் அவளிடம் நெருங்க முடியாது. எப்பொழுதும் போல் அவள் கத்திய கத்தில் ராகவன் தனது அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். கார்த்திக் தான் அவசரமாக கையைக் கழுவிக் கொண்டு மாடிக்கு ஓடினான்.
“மேடம்! மேடம் கதவைத் திறங்க. ப்ளீஸ் திறங்க” என கத்தினான். முனிம்மாவும் அவன் பின்னாலேயே மாடிக்கு வந்துவிட்டார். உள்ளே கத்தலும், உடைக்கும் சத்தமும் கூடியதே தவிர குறையவில்லை. எப்போழுதும் பேன்ட் போக்கேட்டில் வைத்திருக்கும் அந்த அறையின் சாவியைக் கொண்டு கதவைத் திறந்த கார்த்திக் பாய்ந்து சென்று தேவியைப் பிடித்துக் கொண்டான்.
அவள் கையில் இருந்த ரேக்கேட்டை பிடுங்கவே அவன் போராட வேண்டி இருந்தது. இந்த நேரங்களில் மென்மையான தேவிக்கு எங்கிருந்து தான் இந்த அசுர பலம் வருமோ தெரியாது. முனிம்மாவும் அவனும் போராடி அந்த ரேக்கேட்டைப் பிடுங்கினார்கள். ஆங்காரமாக கத்திக் கொண்டிருந்த தேவியை இருக அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
“ஒன்னும் இல்லைடா தேவிம்மா. கால்ம் டவுன். நான் இருக்கேன். ரிலேக்ஸ்” அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவாறே மென்மையாக குழந்தையிடம் பேசுவது போல் பேசினான். மெல்ல மெல்ல அவன் அணைப்பில் அடங்கியவள், அப்படியே அவன் மேலேயே மயங்கி சரிந்தாள். அவளை விழாமல் பூப்போல் ஏந்தியவன், உடைந்து கிடந்த பொருட்களை மிதிக்காமல் மெல்ல நடந்து சென்று தேவியைக் கட்டிலில் கிடத்தினான்.
அதற்குள் முனிம்மா ஈரத்துணியுடன் அவன் அருகில் வந்தார். துணியை வாங்கி அவள் முகத்தை மென்மையாக துடைத்துவிட்டான். ஏசியை அதிகரித்து அவளுக்கு போர்த்தி விட்டவன், முனிம்மாவிடம்,
“ரூம சத்தம் போடாம கிளின் பண்ணுங்க. இன்னிக்கு நைட்டு இங்கயே ஒரு ஓரமா படுத்துக்குங்க. திரும்பவும் இப்படி ஆச்சுனா ராத்திரி எத்தனை மணினாலும் எனக்கு கோல் பண்ணுங்கக்கா. மேடம் பத்திரம்”
“நான் பாத்துக்கிறேன்ப்பா. நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. பாரு ரொம்ப களைச்சி போய் தெரியற” என்றார் அவர்.
அழகாக சிரித்தவன்,
“முனிம்ஸ், இப்படி என்னை கவனிச்சுகிற உனக்கு மட்டும் வயசு குறைவா இருந்துச்சுனா சத்தியமா உன்னைத்தான் நான் கட்டுவேன்” என கண்ணடித்து விட்டு வெளியேறினான்.
சிரித்தபடியே அவனை அனுப்பியவர், கலைந்து போன சித்திரமாய் தூங்கும் தேவியை அனுதாபத்துடன் பார்த்தார்.
‘காசு இருந்து என்னத்த செய்ய. மனசுல நிம்மதி இல்லையே இந்த புள்ளைக்கு. மாரியாத்தா, இவங்க மனக் கஸ்டத்தையெல்லாம் போக்கி ஒரு சந்தோஷமான வாழ்க்கைய குடுமா தாயி’ என மனதிற்குள்ளேயே வேண்டிக் கொண்டு தன் வேலையை கவனிக்க சென்றார்.
முனிம்மாவின் வேண்டுதல் மாரியம்மாவின் காதில் விழுமா?
மறுநாள் காலை வோர்க்கிங் சைட்டிலிருந்து தன் அம்மாவுக்கு போன் செய்தான் வேந்தன்.
“அம்மா, விடிகாலையில கனவு கண்ட பலிக்குமாம்மா?”
“அது எப்படிப்பட்ட கனவுங்கிறத பொருத்து தான் சொல்ல முடியும். லாட்டரி டிக்கட் வாங்காம, லாட்டரியில வின் பண்ண மாதிரி கனவு வந்தா அதெல்லாம் கப்ஸா கனவு. நம்பக் கூடாது. அதுவே அம்மாவுக்கு புது சேலை வாங்கிக் குடுக்கிற மாதிரி கனவு வந்தா அது நிஜ கனவு. கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன்”
“யம்மோ! என் கனவை வச்சி புது சேலைக்கு அடி போடுற பாத்தியா? அதெல்லாம் நடக்காது. இன்னிக்கு விடிகாலையிலே நான் ஒரு கனவு கண்டேன் இந்து. அதைப் பத்தி பேசனும்னு நெனச்சேன், காலை அவசரத்துல மறந்துட்டேன்.”
“சரி சரி சொல்லுடா, என்ன கனவு, யாரு வந்தா? ஐஸ்வர்யா ராயா இல்ல ஐஸ்வர்யா ராஜேசா? “
“அம்மா!!!” காண்டானான் வேந்தன்.
“சரிடா, ஒன்னும் பேசல. நீ சொல்லு”
“சுனாமி அடிக்குதுமா கனவுல. நீங்களும் தங்கச்சிங்களும் மட்டும் தப்பிச்சிட்டீங்க. நான் மட்டும் நல்லா மாட்டிகிட்டேன் சுழலுல”
“நாங்க தப்பிச்சுட்டமில்ல, அப்புறம் என்னடா பிரச்சனை?”
“மா!! பீ சீரியஸ். சுனாமி என்னை அப்படியே உள்ள இழுக்குது. நான் தத்தளிக்கிறேன். இன்னும் கூட அதோட தாக்கம் போகல. எனக்கு மனசே சரியில்லைமா”
“டேய் சுனாமிலாம் உன்னை என்னடா செய்யும். அப்படி வந்தாலும் நீ ‘ஏலே கிச்சான் வந்தாச்சு நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு’ன்னு நம்ப நவரச நாயகனோட மகன் மாதிரி பாட்டு பாடி நீந்தி வந்துருவடா கையில மீனோட”
பெரிதாக நகைத்தவன்,
“இதுக்குத்தான் மா உனக்கு போன் அடிச்சேன். இப்ப பெட்டரா பீல் பண்ணுறேன். ஐ லவ் யூ இந்து”
“போடா டேய். போய் ஆணிய புடுங்கற வேலைய பாரு.”
“பில்டிங் கட்டுற என்னைப் பார்த்து ஆணிய புடுங்கறன்னு சொல்லிட்டிங்களே? ஒரு எஞ்சினியர்கு இந்த வீட்டுல மரியாதையே இல்ல. சரி சரி, ராத்திரி பார்க்கலாம். பாய்” என போனை அடைத்துவிட்டு வேலையைப் பார்க்க சென்றான் அவன்.
மதிய உணவு இடைவேளையின் போது, வோர்க் ஷோப்பில் போட்டிருந்த பைக்கை எடுக்க கிளம்பினான் வேந்தன். அவன் வெளியே வருவதற்கும் தேவியின் கார் அங்கே வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. காரை நிறுத்தி விட்டு கார்த்திக் இறங்கி தேவிக்கு கார் கதவைத் திறந்துவிட்டான். நேரம் கிடைக்கும் போது அவர்கள் வந்து பார்பதுதான். கார்த்திக் மட்டும்தான் பேசுவான். அவள் வேலை நடப்பதை மட்டும் பார்வையிடுவாள். யாரிடமும் ஐ காண்டாக்ட் கொடுக்கமாட்டாள்.
கருப்பு நிற ஸ்லாக்கும் கருப்பு நிற பெண்கள் அணியும் ஷெர்டும் போட்டிருந்தாள். அவள் நிறத்தை கருப்பு இன்னும் தூக்கி காட்டியது. வெயில் படாதவாறு இருக்க கூடையில் நெய்த தொப்பி ஸ்டைலாக தலையில் அமர்ந்திருந்தது.
“வாங்க மேடம். லன்ச் பிரேக் இப்போ. வோர்கர்ஸ் எல்லாம் சாப்பிட போயிருக்காங்க.” என வரவேற்றான் வேந்தன்.
பேசியது கேட்டது என்பது போல் ஒரு தலை அசைப்பு கிடைத்தது. அதற்குள் கார்த்திக் பார்க் செய்துவிட்டு வந்திருந்தான்.
“வேந்தன் சார், லாஸ்ட் மினிட் வோர்க்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்க வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் எங்க கூட இருந்து அப்டேட் பண்ணுங்க.” என கேட்டுக் கொண்டான் கார்த்திக்.
அவர்கள் இருவரையும் ஏ ப்ளாக்கின் பில்டிங்கிற்கு அழைத்து சென்றான் வேந்தன். அங்கே தான் வேலை முழுவதும் முடிந்திருந்தது. ஒரு அபார்ட்மென்டின் கதவை திறந்து அவர்களை உள்ளே போகுமாறு சைகை செய்தவன் தானும் அவர்களுடனே சென்றான். அந்த வீடு, ஒரு விஐபி அவரின் செட்டப்புக்காக வாங்கி இருந்தார். அவரின் விருப்பப்படி உள் அலங்காரமும் கணிசமான தொகையை வாங்கி கொண்டு இவர்களே செய்திருந்தார்கள். ரோஜா வர்ண வால்பேப்பர் ஒட்டப்பட்டு, வீடு முழுக்க டைல்ஸ் போட்டு பளபளவென இருந்தது.
கார்த்திக் மெதுவாக வேந்தனிடம்,
“மச்சி, செம்மையா இருக்குடா. என் செட்டப்புக்கும் நீதான் மச்சி இந்த மாதிரி செஞ்சு குடுக்கனும். உள்ளுக்கு நுழைந்தவுடனே அப்படியே லவ் மூட் ஸ்டார்ட் ஆயிருச்சு போ. “
புன்னகை மட்டும் தான் கார்த்திக்குக்கு பதிலாக கிடைத்தது.
அதற்குள் போன் மணி பாடி அழைத்தது.
“மச்சி, கேர்ள்பிரண்ட் நம்பர் பைவ், காந்த சிரிப்பழகி கூப்பிடுது. இருந்தாலும் மச்சி என் கேர்ள்பிரண்ட் எவளுமே நம்ம லட்டு மாதிரி பேரழகி இல்லை. பிரம்மன் படைச்ச மிகச்சிறந்த காவியம் நம்ம லட்டு மட்டும்தான்.” என கண்களால் சிரித்தான் கார்த்திக்.
“டேய்! சாவடிச்சிருவன்டா உன்னை. கருமம் பிடிச்சவனே. என் கிட்டயே என் தங்கச்சிய பத்தி காவியம் கோமியம்ன்னுகிட்டு.” ஆத்திரத்தில் வார்த்தையைக் கடித்துத் துப்பினான் வேந்தன்.
“கூல் மச்சி. ஆத்திரத்துல நீயும் அழகா தான்டா இருக்கே” என இன்னும் வேந்தனை உசுப்பேத்தினான் கார்த்திக்.
“ஆம்பிள்ளை பையனையும் விட்டு வைக்க மாட்டியாடா? வெளுத்து விடறதுக்குள்ள ஓடி போயிரு”
“ஹஹஹ! மேடத்தைப் பார்த்துக்க மச்சி. பேசிட்டு வரேன்” என சிரித்தபடியே வெளியேறினான் கார்த்திக்.
‘இளிக்கிறத பாரு. இஞ்சி தின்ன கொரில்லா மாதிரி. காதல் பண்ண கலர் இருந்தா போதும் போல’ என கடுப்பாக நினைத்தபடியே கிச்சனுக்குள் நுழைந்திருந்த தேவியின் பின்னால் சென்றான் வேந்தன்.
நீல வண்ணத்தில் கிட்சேன் கேபினெட் அழகுற பொருத்தப்பட்டிருந்தது. அந்த விஐபி மதுபானங்கள் வைக்கும் கேபினெட்டுக்கு மட்டும் கண்ணாடி கதவு கேட்டிருந்தார். பூக்கள் போட்ட கண்ணாடி கதவு இன்றுதான் செய்து வந்திருந்தது. அதை வேலை செய்பவர்கள் இரு புறமும் ஏறும் மாதிரி இருக்கும் ஏணியின் மேல் வைத்து விட்டு சாப்பிட போயிருந்தனர். ஏணியை மட்டும் கவனித்த தேவி, மேலே இருந்த கண்ணாடி கதவை கவனிக்கவில்லை. ஏணி பக்கத்தில் இருந்த கேபினேட் கதவை திறந்தவள் அது போய் ஏணியை இடித்துக் கொண்டு நின்றதையோ அதன் மேல் இருந்த கண்ணாடியை ஆட்டி கீழே தள்ளியதையோ கவனிக்கவில்லை. தேவியைப் பின் தொடர்ந்த வேந்தன் நடக்க போகும் அசம்பாவிதத்தை சட்டென கண்டுக்கொண்டான். பாய்ந்து சென்றவன், தேவியைப் பிடித்து தள்ளவும் கண்ணாடி கதவு தொப்பென கீழே அவன் காலில் விழவும் சரியாக இருந்தது.
வேந்தன் தள்ளிய வேகத்துக்கு தலைக்குப்புற விழுந்திருந்தாள் தேவி. அதிர்ச்சியில் அசையாமல் கீழேயே படுத்திருந்தாள் அவள்.
காலணிகளை வெளியே கழட்டி விட்டு வந்திருந்ததால் கண்ணாடி சில்லுகள் வேந்தனின் இரு கால்களையும் பதம் பார்த்திருந்தன. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு நடந்தவன் கீழே விழுந்திருந்த தேவியைக் கை கொடுத்துத் தூக்கினான்.
“மேடம் உங்களுக்கு ஒன்னும் இல்லையே?” என கேட்டுக் கொண்டே அவள் உடம்பை தடவி பார்த்தான் எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று. அவளிடம் இருந்து சத்தமே வராமல் இருக்கவும், பயத்துடன் அவளது தொப்பியை கழட்டினான். தலையில் எங்காவது இடித்துக் கொண்டதால் அதிர்ச்சியில் அமைதியாக இருக்கிறாளா என கலவரத்துடன் வீக்கம் ஏதாவது தென்படுகிறதா என்று அவள் முடியில் கை விட்டு தடவி ஆராய்ந்தான்.
அவன் கண்ணில் தெரிந்த பயத்தையும், தவிப்பையும், கலக்கத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி. எப்பொழுதும் இறுக்கமாக இருக்கும் அவள் முகம் மெல்ல மெல்ல மலர்ந்தது. புன்னகை கூட அந்த பிங்க் இதழ்களை எட்டிப் பார்த்தது.
திடீரென அவள் புன்னகைக்கவும் பயம் பிடித்துக் கொண்டது வேந்தனுக்கு.
“மேடம், ஆர் யூ ஒகே?” என அவள் தோளைப் பற்றி உலுக்கினான். ஓங்கி ஒலித்த அவன் குரலில் தன்னிலை அடைந்தவள்,
“நேம்?” என அவனைப் பார்த்து கேட்டாள்.
“மலர்வேந்தன்”
“யா! மலர், மலர்” என தனக்குள் கூறிக் கொண்டவள் பின்புதான் ரத்த வெள்ளத்தில் இருந்த தரையையும், கண்ணாடி பதம் பார்த்திருந்த அவன் கால்களையும் பார்த்தாள்.
உடல் நடுங்க, கீழே குனிந்து அவன் கால்களை பார்த்தவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது. அவன் ரத்தத்தை தன் கையால் தொட்டவள்,
“கார்த்திக்!” என கத்தினாள்.
உயிரை வாங்குவாள்….