காலையில் கொஞ்சம் தாமதமாகத்தான் கண் விழித்தாள் மாதவி. இரவு தூங்க வெகுநேரம் ஆகிப்போனது. எவ்வளவு முயற்சித்தும் தூக்கம் வருவேனா என்று அவளிடம் அடம்பிடித்திருந்தது.

டாக்டர் இப்படியெல்லாம் காலேஜ் பையன் போல நடந்து கொள்வார் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவளுக்கும் கொஞ்சம் பூரிப்பாகத்தான் இருந்தது.
எப்போதும் குடும்பம், அதன் நன்மைகள் இப்படித்தான் மாதவிக்கு யோசித்துப் பழக்கம்.

முதன்முறையாக தனக்கென்று மட்டுமே யோசிப்பது நன்றாகத்தான் இருக்கிறது.
மலர்ந்த முகமாக எழுந்த பெண் பாத்ரூமிற்குள் போனாள். அனேகமாக இன்னேரம் டாக்டரும் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவார் போலும். நேற்று இரவு வீடு சென்ற பிறகும் திரும்பவும் இவளை அழைத்துப் பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார்.

மாதவிக்கு எல்லாம் கனவு போல இருந்தது. இது என்ன மாதிரியான அன்பு என்று அவளுக்குப் புரியவே இல்லை. எத்தனை உயரத்தில் இருக்கும் அருமையான மனிதர்!
அவர் அன்பு கிடைக்கத் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எல்லாம் புரிந்த போதும் ஏதோ ஒன்று அந்த மனிதரை நெருங்க விடாமல் மாதவியைத் தடுத்தது.

அன்று அவளுக்கு நைட் ட்யூட்டி என்பதால் சாவகாசமாகக் குளித்தாள் பெண். இன்றைக்கு அவரும் நைட் ட்யூட்டிக்கு வருவாராமே! வரட்டும் வரட்டும்.

எப்படியாவது பழையபடி ஹாஸ்பிடல் வந்தால் அவளுக்கு சந்தோஷம் தான்.

குளித்து முடித்து விட்டு தலையை உலர்த்திய படி கிணற்றடித் தென்னை மரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாதவி. ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ரூமிற்குள் வர எப்போதும் அனுமதி கேட்கும் நாகரிகம் அப்பா கடைப்பிடிக்கும் நல்ல விஷயம். ஓடிப்போய் கதவைத் திறந்தாள் பெண்.

“அப்பா!”

“குளிச்சு முடிச்சுட்டயா மாதவி?”

“ஆமாப்பா.”

“அப்போக் கொஞ்சம் வெளியே வாம்மா. அப்பா உங்க எல்லார் கூடவும் கொஞ்சம் பேசணும்.”

“சரிப்பா.” நெஞ்சிற்குள் ஒரு பயப்பந்து உருள வீட்டின் ஹாலுக்கு வந்தாள் மாதவி. என்னவாக இருக்கும்?

“அமுதா… அருண்…” அப்பா குரல் கொடுக்கவும் இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

“எல்லாரும் கொஞ்சம் உக்காருங்க. நான் உங்கக்கிட்டப் பேசணும்.” அமுதவல்லி சட்டென்று மகனைத் திரும்பிப் பார்த்தார்.

“என்னடா? ஏதாவது வம்பு பண்ணி வெச்சிருக்கியா?”

“ஆமா… நீங்க எப்பதான் என்னை நல்லா நினைச்சிருக்கீங்க!”

“அமுதா… நான் பேசப்போறது அருண் பத்தியில்லை… மாதவியோட கல்யாண விஷயம் பத்தி. எல்லாரும் உக்காருங்க.” கணவரின் பேச்சில் சட்டென்று உட்கார்ந்தார் அமுதவல்லி.

“ஏதாவது நல்ல வரன் வந்திருக்காங்க?” அம்மா பரபரப்பாகக் கேட்கவும் மாதவிக்குத் திக்கென்றது. ஆனால் உமாசங்கர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

“என்னாச்சுங்க? எதைச் சொல்ல
இப்படித் தயங்குறீங்க?”

“அமுதா… வேற வரன் பார்க்குற ஐடியாவெல்லாம் எனக்கு இப்போ இல்லை.”

“அப்போ என்னப் பண்ணப்போறீங்க?”

“வந்த வரனையே முடிச்சிரலாம்னு பார்க்குறேன்.”

“வந்த வரனா? நீங்க எதைச் சொல்லுறீங்க?”

“டாக்டரைத்தான் சொல்லுறேன்.”

“அப்பா!” உமாசங்கர் சொல்லி முடித்தபோது அருணின் குரல் கர்ஜித்தது. ஆனால் மாதவியின் முகம் ஒரு கணம் மலர்ந்து விகசித்ததை அப்பா கவனிக்கத் தவறவில்லை.

“நீ என்ன சொல்றே அமுதா?”

“ஒன்னுக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சுப் பார்த்து முடிவெடுக்கலாங்க.”

“இதுல யோசிக்க எதுவும் இல்லை அமுதா.”

“அப்பா! இந்த சம்பந்தம் வேணாம்.” அருண் குறுக்கிட்டான்.

“நீ கொஞ்சம் அமைதியா இரு அருண்.”

“எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கலைப்பா.”

“உனக்குப் பிடிக்குது பிடிக்கலைங்கிறது இப்போ முக்கியம் இல்லை அருண். எனக்கு மாதவியோட வாழ்க்கை தான் முக்கியம்.”

“நான் அந்த வாசப்படி கூட மிதிக்க மாட்டேன்பா.”

“எனக்கு அதைப்பத்தியெல்லாம் இப்போக் கவலை இல்லை அருண். எனக்கு மாதவி வாழ்க்கை மட்டும்தான் இப்போக் கண்ணுக்குத் தெரியுது. எம் பொண்ணு வாழ்க்கையில நாளைக்கு எந்தச் சிக்கலும் வந்திடக்கூடாது.”

“எந்த உலகத்துலப்பா இருக்கீங்க? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு நல்ல பையனாப் பார்த்து நடந்த விஷயத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமச் சொல்லியே கல்யாணம் பண்ணலாம்.” அருணின் பேச்சில் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் உமாசங்கர். அவர் முகத்திலும் சங்கடம் கலந்த கவலையே தெரிந்தது.

“அருண்… நீ சொல்றது எல்லாம் வெறும் கதைக்கும், காவியத்துக்கும் வேணும்னா நல்லா இருக்கலாம். ஆனா இது வாழ்க்கை… எம் பொண்ணோட வாழ்க்கை. அதுல பரிசோதனை பண்ணிப் பார்க்க நான் ஆயத்தம் இல்லை.”

“இந்த விஷயத்துல எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லைப்பா.”

“நான் உனக்கும் உங்கம்மாக்கும் தகவல் தான் சொல்றேன். அபிப்பிராயம் கேக்கலை.”

“இது மாதவியோட கல்யாணம். இதைப்பத்திப் பேச அப்போ எனக்கு உரிமை இல்லையா?” அருணின் கோபம் அவன் முகத்திலேயே தெரிந்தது.

“நீ சின்னப் பையன். இளஞ்செழியன் மேல உள்ள கோபம் உன்னோட கண்ணை மறைக்குது. ஆனா நான் அப்படி இல்லை அருண். கோப தாபத்தையெல்லாம்‌ ஒதுக்கி வெச்சுட்டு நிதானமா யோசிக்கிற பக்குவம் எனக்கிருக்கு.”

“அப்போ… மாதவியை யாருக்கும் தெரியாம, ஏன் அவளுக்கே தெரியாம எங்கேயோ கூட்டிட்டுப் போனது சரிங்கிறீங்களா?”

“இல்லை… இல்லவேயில்லை… ஆனா என்னை என்னப் பண்ணச் சொல்றே? நீ பண்ணினது தப்புன்னு சொல்லி எவனோ ஒருத்தனுக்குக் கட்டிக் குடுத்துட்டு நாளைக்கு மாதவிக்கு ஒரு கஷ்டம் வந்தா நாம தாங்குவோமா? அப்போ என்ன நினைப்போம்? ஆசையாசையாக் கேட்டவனுக்குக் கட்டிக் குடுத்திருந்தா நம்மப் பொண்ணு சந்தோஷமா இருந்திருப்பாளேன்னு நினைக்கத் தோணாதா? யோசிச்சுப் பாரு அருண். அப்பா சொல்றதுல உள்ள நியாயம் உனக்கும் புரியும்.”

“என்னமோ பண்ணுங்க. இந்த டாக்டர் மட்டும் உங்க மகளை உள்ளங்கைல வெச்சுத் தாங்கிடுவாரா என்ன?”

“அருண்! என்ன வார்த்தைடா பேசுறே? எங்க இருந்தாலும் மாதவி நல்லா இருக்கணும்.” அதுவரை கையைப் பிசைந்த படி இருந்த அமுதவல்லி சத்தம் போட்டார்.

“அது அப்பாக்குப் புரியலையேம்மா.”

“என்னப் புரியலை? உனக்குப் புரியுறதை விட அப்பாக்கு எல்லாம் நல்லாவே புரியும். நீ வாயை மூடு.”

“அமுதா… வீணான விவாதம் வேணாம். நான் டாக்டர் சந்திரமோகனைப் பார்த்துப் பேசிட்டேன்.”

“இது எப்போங்க?”

“நேத்து… மாப்பிள்ளை வீட்டுல பேசுங்க, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு சொல்லிட்டேன்.”

“என்ன சொன்னார்?”

“சந்தோஷப்பட்டார். நல்ல முடிவு எடுத்திருக்கீங்க… மாதவி அங்க எந்தக் குறையும் இல்லாம நல்லா இருப்பான்னு சொன்னார்.”

“ஆண்டவா… அவர் வார்த்தை பலிக்கணும்.”

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து
கூடிய சீக்கிரமா ஒரு நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன் அமுதா.”

“சரிங்க.” அப்பா அம்மாவின் பேச்சில் ஆத்திரப்பட்ட அருண் தட்தட்டென்று பாதங்களால் சத்தம் எழுப்பிய படி கோபமாக வெளியே போய்விட்டான். மாதவி மௌனமாகத் தலைகுனிந்த படி நின்றிருந்தாள்.

“மாதவி… நீ எதைப் பத்தியும் யோசிக்காதம்மா. அப்பா எது பண்ணினாலும் அதுல உனக்கு நன்மைதான் இருக்கும்.”

“அதுல எனக்குச் சந்தேகம்
இல்லைப்பா. ஆனா அருண்…”

“சின்னப் பையன் இல்லையா… அனுபவம் போதலை. வாழ்க்கைன்னா என்னன்னு புரியலை. போகப்போகப் புரிஞ்சுக்குவான்.”

“ம்…” மாதவியின் மனம் அருணை நினைத்து லேசாகக் கலங்கினாலும் அப்பாவின் முடிவை நினைத்துக் குதூகலித்தது.

***
“கற்பகம்…” குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தார் சந்திரமோகன். கிச்சனில் பிஸியாக நின்றிருந்த கற்பகம் அந்தக் குரலை இனம் கண்டு சட்டென்று வெளியே வந்தார்.

“அடடே! வாங்கண்ணா. என்ன ஆச்சரியமா இருக்கு. இந்நேரத்துக்கு இங்க வந்திருக்கீங்க?”

“எல்லாம் முக்கியமான விஷயந்தான். கருணா இன்னும் கிளம்பலை இல்லை?”

“இல்லைண்ணா.”

“அப்போச்சரி. அவனைப் பார்க்கத்தான் அடிச்சுப் பிடிச்சுக் கிளம்பி வந்தேன். ஒரு காஃபி குடும்மா.”

“இதோ…” அவசர அவசரமாக கற்பகம் உள்ளே செல்ல சந்திரமோகன் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தார்.

“குட் மார்னிங் அங்கிள்.”

“குட் மார்னிங் அர்ச்சனா. காலேஜ் போக ரெடி ஆகிட்டயா?”

“ஆமா அங்கிள். அம்மா எல்லாம் ரெடியா?” டைனிங் டேபிளில் அமர்ந்தபடி கிச்சனை நோக்கிக் குரல் கொடுத்தாள் பெண்.

“இதோ வந்தர்றேன் கொஞ்சம் பொறு. அண்ணா… நீங்களும் வாங்க ரெண்டு தோசை சாப்பிடலாம். அர்ச்சனா, அப்பா இன்னும் ரெடியாகலையா?” கேட்டுக் கொண்டிருக்கும் போதே கருணாகரன் மாடிப்படிகளில் இறங்கியபடி கீழே வந்தார்.

“குட் மார்னிங் மோகன். என்ன காலங்காத்தால இங்க வந்திருக்க? ஹாஸ்பிடல் போகலையா?”

“உன்னைப் பார்க்கத்தான் அவசரமாக் கிளம்பி வந்தேன் கருணா.”

“என்ன விஷயம்?”

“முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க. அண்ணாக்கும் ஹாஸ்பிடலுக்கு நேரமாகுதில்லை.” கற்பகம் எல்லோருக்கும் பரிமாற ஆரம்பிக்க, உண்டபடி பேச்சும் ஆரம்பமானது.

“கருணா… நேத்து மாதவியோட அப்பா என்னை வந்து பார்த்தாரு.” சந்திரமோகனின் வார்த்தைகளில் மற்ற மூவரும் சற்றே திகைத்துப் போனார்கள்.

“ஏதாவது பிரச்சனையா மோகன்?” கருணாகரனின் குரலில் அத்தனை நிதானம் இப்போது.

“சேச்சே… அந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை கருணா.”

“பின்ன எதுக்கு உன்னை வந்துப் பார்க்கணும்?”

“ஒரு தகப்பனா அவரோட பொண்ணு வாழ்க்கையை நினைச்சுக் கவலைப்பட்டார் அந்த மனுஷன்.”

“மேல சொல்லு…” கருணாகரன் குரல் லேசாகக் கடினப்பட்டிருந்தது

“கருணா… நம்ம பையன் மேலதான் எல்லாத் தப்பும். அப்படியிருக்கும் போது…”

“சீக்கிரமா விஷயத்துக்கு வா மோகன். எதுக்கு இப்படி இழுக்கிற?”

“ஆரம்பிச்ச கல்யாணப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு நடத்தலாம்னு அவர் பிரியப்படுறார்.”

“அதெப்படி மோகன்? பொண்ணுக் கேட்டப்போ மறுத்தது அவங்கதானே?”

“ஆமா… மறுத்தாங்க தான். உங்க உயரம் பார்த்து இது நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு ஒதுங்கினாங்க. அதோட விஷயம் முடிஞ்சிருந்தா ஓகே. நம்ம பயல் விடல்லையே? அதால அவங்க இப்போ இப்படியொரு முடிவுக்கு வந்திருக்காங்க.”

“எனக்கு இப்பக்கூட என்ன சொல்றதுன்னு புரியலை மோகன். நீதான் இந்தச் சம்பந்தத்தைக் கொண்டு வந்தே. இதோ நிக்குறாளே… இவ தான் முதல்ல பொண்ணைப் பார்த்துட்டு ஆசைப்பட்டா. இப்போ பையன் என்னடான்னா கட்டினா அந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறான். என்னமோப் பண்ணுங்க.” கோபமாகச் சொன்ன கருணாகரன் கையைக் கழுவிக் கொண்டார்.

சந்திரமோகன் ஏதோ அதற்குப் பதில் சொல்லப் போக அவரைப் பார்வையாலேயே தடுத்தார் கற்பகம்.

“ஆனா ஒன்னு மோகன்… செழியன் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுல ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.”

“அதுக்கு நான் பொறுப்பு கருணா. அந்தக் குடும்பம் அவ்வளவு நல்ல மாதிரி. நீயே அதை ஒரு நாளைக்கு எங்கிட்டச் சொல்லுவ.”

“அப்படியே நடந்தா எனக்கும் சந்தோஷம்தான். நான் கிளம்புறேன்.” கருணாகரன் விடுவிடுவென்று வெளியே போய் விட்டார். அர்ச்சனா எல்லாவற்றையும் கேட்டபடி அமைதியாகத் தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“அர்ச்சனா நீ என்னம்மா சொல்றே?”

“அங்கிள்!”

“இல்லை… இந்தக் கல்யாணம் தடைப்பட்டதுக்கு முக்கிய காரணம் நீயும் அந்தப் பையனும் தான். நின்னுபோன பேச்சு இப்போ திரும்பவும் ஆரம்பிக்குது. அதுதான் கேக்குறேன்.”

“அண்ணாவோட விருப்பம் தான் எனக்கு முக்கியம் அங்கிள்.” சொன்னவள் மேலே அங்கே இருக்காமல் காலேஜ் கிளம்பி விட்டாள்.

“என்ன கற்பகம்? ரெண்டும் பிடி குடுக்காமப் பேசுதுங்க?”

“அதை விடுங்க அண்ணா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. செழியன் தான் எனக்கு இப்போ முக்கியம். அப்பாவும் மகளும் என்ன வேணும்னாலும் பண்ணட்டும். இவங்களா வாழப்போறாங்க. நேத்து நடந்த கூத்தைக் கேட்டா நீங்க சிரிப்பீங்க.”

“அப்படியா? அப்படி என்ன நடந்துச்சு?”

“நேத்து மாதவி இங்க வந்திருந்தாண்ணா.”

“அப்படியா? என்னால நம்பவே முடியலை. நேத்து செழியனைப் பத்தி எங்கிட்ட விசாரிச்சா…”

“ஹாஸ்பிடல்ல இருந்து நேரா இங்கதான் வந்திருப்பா போல. அதுக்கே இவன் குதிக்க ஆரம்பிச்சுட்டான்.”

“ஹா… ஹா…”

“பொண்ணு சம்மதம் சொல்லி இருக்கும் போல. ஆடித் தீர்த்துட்டான். அவ்வளவு ஹாப்பி எம் புள்ளைக்கு. நல்லவேளை… இவங்க யாரும் வீட்டுல இல்லை.”

“ஓ…”

“அந்தப் பொண்ணு கிளம்பப்போகுது, நான் கொண்டு போய் ட்ராப் பண்ணுறேன்னு பின்னாடியே நாய்க்குட்டி மாதிரிப் போறான்.”

“நம்ம செழியன் தானா இது கற்பகம்?!”

“இது வெறும் ட்ரெய்லர் தான் அண்ணா… மெயின் பிக்சர் பின்னாடி வருது கேளுங்க.”

“அது வேறயா?”

“ஆமா… டின்னரை முடிச்சுட்டு வெளியே போனவன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வர்றான். எங்கப்பா போயிட்டு வர்றேன்னு கேட்டா… மாதவியைப் பார்த்துட்டு வர்றானாம். எங்கிட்டயே சொல்லுறான்.”

“என்ன? அந்நேரத்துக்கு மாதவியைப் பார்க்கப் போனானாமா?”

“ம்… எனக்கும் நடுங்கிருச்சு. எங்கப் போய்ப் பார்த்தேன்னு கேட்டா, அவங்க வீட்டுக்குத்தாங்கிறான்.”

“கற்பகம்! என்னம்மா இதெல்லாம்?”

“வெடலைப் பையன் மாதிரி சுவர் ஏறிக்குதிச்சுப் போயிருக்கான்.” சொன்ன கற்பகத்தின் முகத்தில் மட்டுமல்ல, சந்திரமோகன் முகத்திலும் இப்போது கவலை தெரிந்தது.

“இன்னும் காலம் கடத்துறது அவ்வளவு நல்லதில்லைண்ணா. மாதவியோட அப்பா வந்து உங்ககிட்டப் பேசலைன்னாலும் நான் இந்தப் பேச்சை ஆரம்பிச்சுத்தான் இருப்பேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா இந்த விஷயத்தை முடிக்கிறது செழியனுக்கு நல்லது.”

“ம்… நான் அதைப் பார்த்துக்கிறேன். ஆனா… கருணாவைச் சமாளிக்க வேண்டியது உம் பொறுப்பு.”

“அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்கண்ணா. அதை நான் பார்த்துக்கிறேன்.”

“அப்போச் சரிம்மா. நான் உமாசங்கர் கிட்ட மேற்கொண்டு பேசுறேன். சரியா?”

“சரிண்ணா… இன்னைக்கே பேசுங்க.”

“ம்… அப்போ நான் கிளம்புறேன். ஆமா… செழியன் எங்க?”

“சுவரேறிக் குதிச்ச களைப்பில ஐயா இன்னும் நல்லாத் தூங்குறார்.”

“ஓஹோ!” சந்திரமோகன் வெடிச்சிரிப்புச் சிரிக்க, கற்பகமும் இணைந்து கொண்டார்.

***
அன்று மாதவிக்கு நைட் ட்யூட்டி. சாவகாசமாக மாலை ஐந்து முப்பதுக்கு ஆட்டோவில் வந்து ஹாஸ்பிடல் முன்பாக இறங்கினாள். அருணுக்கு ஏதோ லைப்ரரி போகும் வேலை இருந்ததால் தனியாகத்தான் வந்திருந்தாள்.

ஆறு மணிக்குத்தான் ட்யூட்டி ஆரம்பிக்கும் என்பதால் நிதானமாக ரிசப்ஷனை வந்தடைந்தாள் மாதவி. மேனகா, ரஞ்சிதா இருவருமே அன்று ரிசப்ஷனில் இருந்தார்கள். வந்தவளை இருவரும் மேலும் கீழுமாகப் பார்க்கவும் மாதவி திகைத்துப்போய் சிரித்தாள்.

“என்னாச்சு? ரெண்டு பேரும் என்னைப் புதுசாப் பார்க்கிற மாதிரிப் பார்க்குறீங்க?”

“பின்னே… நீங்க இப்போப் புதுசாத்தானே எங்கக் கண்ணுக்குத் தெரியுறீங்க. பெரிய ஆளுங்க சகவாசமெல்லாம் தூள் பறக்குது!”

“பெரிய ஆளுங்களா? அது யாரு?”

“பாரு ரஞ்சிதா! இந்தம்மா இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பேசுறதை!”

“அதானே!” ரஞ்சிதாவும், மேனகாவும் பிலாக்கணம் விரிக்க மாதவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“எனக்கு நீங்க என்னப் பேசுறீங்கன்னேப் புரியலை.”

“ஆமாடியம்மா… உனக்கு இப்போ நாங்க பேசுறது எதுவும் புரியாது. டாக்டர் பேசுறது மட்டும் தான் புரியும். அதுவும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் இல்லை! அவர் பேச்சுத்தான் உன் ஹார்ட்டைட் டச் பண்ணும்.” மாதவி இப்போது நாக்கைக் கடித்துக் கொண்டாள். மேனகாவிடம் நேற்று டாக்டரின் அட்ரஸ் வாங்கியது அப்போதுதான் ஞாபகம் வந்தது.

“அது… வந்து…”

“என்ன வந்து போயீ… என்ன சொல்றாரு எங்க இதய நிபுணர்? நாங்கெல்லாம் அவரு கண்ணுக்குத் தெரிய மாட்டோமா? மாதவி மட்டும் தான் தெரியுமாமா?”

“அது மட்டுமா ரஞ்சிதா? அன்னைக்குப் பார்க்கணுமே… ஹாஸ்பிடல் ஃபங்ஷன்ல… இந்தம்மாக்கு லேசாத் தலை சுத்திச்சு. மனுஷன் பதறிட்டாரு. அடேங்கப்பா! என்னா கவனிப்பு… என்னா கவனிப்பு…” வசமாக மாட்டிய மாதவி பேச்சின்றித் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தாள்.

“மாதவி!” அந்தக் குரலில் மூன்று பெண்களும் திகைத்துப் போனார்கள்.

“டாக்டர்!” ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஆப்பரேஷனுக்காக இளஞ்செழியன் சற்று முன்பாகவே ஹாஸ்பிடல் வந்திருந்தான். ஏதோ வேலையாக அந்தப்பக்கம் வந்தவன் கண்களில் மாதவி தென்பட்டாள்.

“இங்க என்னப் பண்ணுறீங்க? தியேட்டர் போக வேணாமா?”

“இதோ…” மாதவி விட்டால் போதுமென்று ஓடப்போனாள்.

“பார்த்தியா ரஞ்சி… நமக்கிட்ட இருந்து இந்தம்மாவை ஐயா காப்பாத்துறாராம்! அதுசரி இந்த வாரம் ஃபுல்லா மாதவிக்கு ஜெனரல் வார்ட்ல தானே ட்யூட்டி. அது என்ன இன்னைக்குப் புதுசா தியேட்டர்ல ட்யூட்டி?” ரகசியம் போல மேனகா பேசியது மாதவிக்கும் கேட்டது. புன்னகைத்தபடி ஓடி விட்டாள்.

“என்னாச்சு மாதவி?” டாக்டரின் முகம் முழுக்க இளநகை இருந்தது.

“நேத்து உங்க வீட்டு அட்ரஸ் மேனகாக்கிட்டத்தான் வாங்கினேன். அதான்… ரெண்டும் ஒரு வழி பண்ணுதுங்க.”

“ஹா… ஹா… நல்லா மாட்டினயா?”

“ஆமா… எனக்கு ட்யூட்டிக்கு டைம் ஆச்சு. பை டாக்டர்.”

“ஹேய்! எங்கப் போற மாதவி?”

“வார்டுக்குத்தான் டாக்டர். ஏன்?”

“இன்னைக்கு ட்யூட்டி தியேட்டர்ல.”

“இல்லை டாக்டர்… இந்த வாரம் எனக்…” அதற்கு மேல் மாதவி பேசவில்லை. இளஞ்செழியனின் கள்ளச்சிரிப்பு அவளுக்குப் பதில் சொல்லியது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சந்திரமோகன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“செழியா! எதுக்கும் இன்னொரு சர்ஜனை ஏற்பாடு பண்ணலாமா?”

“எதுக்கு அங்கிள்? அதான் நீங்களும் இருப்பீங்க இல்லை? அது போதும்.” சொல்லிவிட்டு செழியன் நகர்ந்து விட்டான்.

“மாதவி!” சீஃபின் குரலில் மாதவி நின்றாள்.

“அனேகமா நாலு மணி நேரம் ஆகும் ஆப்பரேஷன் முடிய. அதுக்கேத்த மாதிரி எல்லாத்தையும் ப்ளான் பண்ணிக்கோம்மா.”

“ஓகே டாக்டர்.”

“ஆப்பரேஷன் கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான். உன்னோட ஆள் டயர்ட் ஆகாமப் பார்த்துக்கோ.” அவர் பங்கிற்கு சந்திரமோகனும் கலாய்த்தார். மாதவி தலையைக் குனிந்து கொண்டாள்.

“கவலைப்படாதே… எல்லாம் நல்லபடியா நடக்கும்.” வாஞ்சையாக மாதவியின் தலையைத் தடவிக் கொடுத்தார் சந்திரமோகன்.
ஆப்பரேஷன் தியேட்டர் ரெடியாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வந்தான் இளஞ்செழியன். மாதவி அவனுக்கான உடைகளோடு காத்திருந்தாள்.

“என்ன? இன்னைக்கும் டாக்டர் குழந்தைக்கு உடம்புக்கு முடியலையாமா? இல்லை… டைமுக்கு அனஸ்தீஸியா பண்ண வந்துட்டாரா?” மாதவி அவன் முதுகுப் புறமாக ஏப்ரனின் முடிச்சுக்களைப் போட, வேண்டுமென்றே அவளைச் சீண்டினான் செழியன்.

“அதெல்லாம் டைமுக்குக் கரெக்டா வந்துட்டாங்க.”

“அப்படியா! அடேங்கப்பா… அன்னைக்கு என்னமா அந்த டாக்டருக்கு சப்போர்ட்டுக்கு வந்தீங்க. ஆனா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லலையே?” முடிச்சுக்களைப் போட்டு முடித்தவள் அவசரமாக நகரப் போக அவள் கைப்பிடித்துத் தடுத்தான் செழியன்.

“என்ன மாதவி… நீ பெத்துக் குடுக்கிறியா?” விளையாட்டாக அவன் கேட்டபோதும் அந்த முகத்திலிருந்த கவலை ரேகையை மாதவி இனங்கண்டு கொண்டாள்.

“என்னாச்சு டாக்டர்?”

“மாதவி… கொஞ்சம் க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன் தான். பேஷன்ட் வேற கொஞ்சம் வயசானவர். ஃபிஃப்டி ஃபிஃப்டி தான்… ஆனா நான் மாக்ஸிமம் ட்ர்ரை பண்ணுவேன். கொஞ்சம் டென்ஷனா இருக்கு…” இளஞ்செழியனின் குரலில் இத்தனை பதட்டத்தை மாதவி இதுவரை பார்த்ததில்லை. அமைதியாக அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“உங்களால முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. குட் லக்!” என்றாள். இளஞ்செழியன் மலர்ந்து போனான்.

“தான்க் யூ மாதவி. தான்க் யூ சோ மச். யானை பலம் வந்த மாதிரி இருக்கு எனக்கு. நீ எம் பக்கத்துலயே நிக்கணும்… சரியா?”

“ம்… நான் உங்களை விட்டுட்டு வேற எங்கப் போகப் போறேன்?”

“ஆஹா! தியேட்டர்ல வெச்சு இவ இப்படியெல்லாம் பேசுறாளே…” மேலே எதுவோ வம்பாக டாக்டர் பேசப்போக அவன் சரியாகப் போடாமல் பேசுவதற்காக நாடியோடு வைத்திருந்த மாஸ்க்கை இழுத்துச் சரியாகப் போட்டுவிட்டு நகர்ந்து விட்டாள் மாதவி. இளஞ்செழியன் சிரித்துக் கொண்டான்.

ஆப்பரேஷன் சக்சஸாக முடிந்திருந்தது. ஆனால் நோயாளி எழுபதுகளில் இருந்ததால் இளஞ்செழியன் கொஞ்சம் போராட வேண்டித்தான் இருந்தது.
மாதவி தன்னால் முடிந்தவரை செழியனுக்கு உதவியாக இருந்தாள். டாக்டர் சந்திரமோகனும் எங்கேயும் அசையாமல் செழியனுக்குத் துணையாகவே நின்றிருந்தார். ஆப்பரேஷன் முடிந்த பின்னும் இரண்டு மணித்தியாலங்கள் ஐ.ஸி.யூ இல் பேஷன்ட்டோடு நேரம் செலவழித்தான் டாக்டர். மாதவிக்கே அவனைப் பார்ப்பதற்குக் கவலையாக இருந்தது. களைத்துப் போயிருந்தான்.

எல்லாம் ஒரு சீர் நிலைக்கு வந்து, இனி பேஷன்ட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் தனது அறைக்குப் போனான் இளஞ்செழியன். அப்போதும் வெளியே நின்றிருந்த நோயாளியின் குடும்பத்தார் டாக்டருக்கு நன்றி செலுத்திய போது மாதவி நெகிழ்ந்து போனாள்.

அதுவும் அந்த நோயாளியின் மனைவி செழியனின் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு குலுங்கி அழுத போது மாதவிக்கும் கண்கலங்கி விட்டது.

“நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் டாக்டர்!” என்று அந்தப் பெண்மணி வாழ்த்தியபோது மாதவி கான்டீனுக்கு நகர்ந்து விட்டாள்.
எத்தனை திறமையான டாக்டர் நான்கு நாட்கள் தன்னால் ஹாஸ்பிடல் வரவில்லை என்று நினைத்தபோது அவள் மனது லேசாகக் கலங்கியது. சூடாக இரண்டு காஃபியை வாங்கியவள் இளஞ்செழியனின் ரூமிற்குப் போனாள். நேரம் காலை ஐந்து ஆகியிருந்தது.

காலை நீட்டி இன்னொரு நாற்காலியில் போட்டுக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்தான் டாக்டர். மாதவி கதவைத் திறக்கவும் அவளுக்காவே காத்திருந்தாற் போல கண்களைத் திறந்தான்.

“வா மாதவி… அதுக்குள்ள எங்கப் போயிட்டே?”

“காஃபி வாங்கத்தான்.”

“அதுக்கு நீ போகணுமா என்ன?”

“பரவாயில்லை… ரொம்ப டயர்டா இருக்கீங்க… குடிங்க.”

“ம்… எனக்கு நம்பிக்கையே இருக்கலை மாதவி, பேஷன்ட் பொழைப்பார்னு.”

“ஏனப்படி?” இருவரும் காஃபியைப் பருக ஆரம்பித்திருந்தார்கள்.

“ரொம்ப வயசானவர் இல்லையா?”

“ஆனா எனக்கு எந்தப் பயமும் இருக்கலை.”

“உண்மையாவா?” காஃபியை முடித்த செழியன் கப்பை மேசை மேல் வைத்தான்.

“ம்… ஏன்னா… ஆப்பரேஷன் பண்ணுறது டாக்டர் இளஞ்செழியன் இல்லையா? அதனாலதான்.”

“அது யாரு மாதவி ஆப்பரேஷன் பண்ணுறது?”

“டாக்டர் இளஞ்…” அப்போதுதான் அவன் பெயரைத் தான் பேச்சு வாக்கில் சொல்லியிருப்பது மாதவிக்கு உறைத்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஆனால் அத்தோடு விட்டுவிட்டால் அவன் இளஞ்செழியன் அல்லவே! மாதவி வசமாக மாட்டிக் கொண்டாள்.

“சொல்லு மாதவி… அந்த டாக்டர் பேர் என்ன?” பக்கத்தில் வந்தவன் அவள் தோள்களைப் பற்றிக் கொண்டான். ஆனால் இப்போது மாதவி தயங்கவில்லை. அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.

“டாக்டர் இளஞ்செழியன்.” அவள் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக வந்தது.

“ம்ஹூம்… இத்தனை கஷ்டப்பட்டு இளஞ்செழியன் ஒரு ஆப்பரேஷன் பண்ணி இருக்கானே, ஒரு பாராட்டுமே இல்லையா அவனுக்கு?” செழியனின் குரல் கொஞ்சலாக வந்தது.

“ஏனில்லை…” என்ற மாதவி அவன் சற்றும் எதிர்பாராத போது அவன் கன்னத்தில் எம்பி முத்தமிட்டாள். செழியன் திகைத்துப் போனான்.

“மாதவி!”

“எத்தனை பெருமையா இருந்துச்சுத் தெரியுமா? எவ்வளவு சந்தோஷம் அந்தக் குடும்பத்தோட முகத்துல. இவ்வளவு திறமையான, கைராசியான டாக்டர் அசால்ட்டா ஹாஸ்பிடல் வராம வீட்டுல உக்காரலாமா?”

“ஓஹோ!”

“இனிமே இப்படியெல்லாம் பண்ணாதீங்க. இவ்வளவு பொறுப்பான தொழில்ல இருந்துக்கிட்டு சின்னப்புள்ளைங்க ஸ்கூலுக்கு லீவு போடுற மாதிரி… நல்லாவா இருக்கு?” மாதவி அவனை உரிமையாகக் கோபிக்கவும் அவள் இடையில் கைகொடுத்து தன்னோடு இழுத்துக் கொண்டான் செழியன்.

“அதானே பார்த்தேன், என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு. கடைசியில பேர் சொன்னது, முத்தம் குடுத்தது எல்லாம் இதுக்குத்தானா?”

“எதுக்கு? எதுக்கு டாக்டர்?”

“நான் ஒழுங்கா என்னோட வேலையைப் பார்க்கணும், அதானே? இல்லைன்னா மேடம் இதெல்லாம் பண்ணுவீங்களா?”

“ஏன்? இல்லைன்னா நான் இதெல்லாம் பண்ண மாட்டேனா?”

“ஆஹாஹா! நீங்க பண்ணிட்டாலும்… ஆனாலும் மேடம்… உங்க வாயில இருந்து செழியன் எங்கிற பெயர் கிறக்கமா ஒரு நாளைக்கு வரும். வரவெக்காம இந்த செழியன் விடமாட்டான் பாருங்க.” முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு நாற்காலியில் போய் அமர்ந்தவனை ஒரு சிரிப்போடு பார்த்திருந்தாள் மாதவி.

‘நீங்க உங்க பொண்டாட்டி பிள்ளைங்களோட நீண்ட நாளைக்கு சந்தோஷமா இருக்கணும் டாக்டர்.’ அந்த நோயாளியின் மனைவி இளஞ்செழியனை வாய் நிறைய வாழ்த்தியதே மாதவியின் காதுகளில் அப்போதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

error: Content is protected !!