Oviyam 3

ஓவியம் 03

சுமித்ரா நிலைகுலைந்து நின்றது இரண்டொரு நிமிடங்கள்தான். நடந்தது என்னவென்று அவள் உணர்ந்த போது அவள் வலது கை அவனது கன்னத்தை நோக்கி நீண்டிருந்தது.

“அடக்கம் வர்றதாவே இல்லையா?” அவள் கை தன் கன்னத்தில் இறங்கும் முன்பாக அதைத் தடுத்து நிறுத்தி இருந்தான் ரஞ்சன்.

“பொறுக்கித்தனம் பண்ணுறவனுக்கு அடங்கி வேற போகணுமோ?” ஆத்திரத்துடன் வெடித்துச் சிதறியது அவள் குரல். அவன் கையில் அகப்பட்டுக் கொண்டிருந்த தன் கரத்தை உருவிக்கொள்ள வெகுவாக முயன்றாள் சுமித்ரா. ஆனால் இயலவில்லை.

“பொறுக்கித் தனம்னு திரும்பத் திரும்பச் சொன்னா நானும் அதே பொறுக்கித் தனத்தைத் திரும்பத் திரும்பப் பண்ணுவேன், உனக்கு ஓகேவா பேபி?”

“ச்சீய்…” அவன் சரசத்தில் அவளுக்குக் குமட்டியது. அவள் சொன்ன வார்த்தை இளவலையும் கோபப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்குள் டிக்கெட் பரிசோதகர் வரவும் ரஞ்சன் நிதானித்தான்.

பெண்ணைக் கண்ட குஷியில் டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் ஏறி இருந்தான். இப்போது டிக்கெட்டுக்கு எங்கே போவது?

“டிக்கெட்…” சுமித்ராவிடம் அவர் கேட்க பையிலிருந்த டிக்கெட்டை எடுத்து நீட்டினாள். அடுத்து அவர் ரஞ்சனை நோக்க,

“அவசரத்துல டிக்கெட் எடுக்கலை சார், நான் ஃபைன் பே பண்ணிடுறேன்.” என்றான்.

“தெரிஞ்சவங்களா ம்மா?” அந்த மனிதர் சுமித்ராவிடம் கேட்க,

“இல்லை சார்.” சட்டென்று சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்து விட்டாள்.

“அப்பிடி என்ன அவசரம் சார், டிக்கெட் எடுக்காம ஏர்ற அளவுக்கு?”

“தெரிஞ்சவங்க ஒருத்தங்களைப் பார்த்தேன், அதான்…” சொல்லியபடியே அந்த மனிதர் நீட்டிய காகிதத்தில் இருந்த தொகையைக் கொடுத்தான் ரஞ்சன்.

“யாரு? அந்தப் பொண்ணா?” ஒரு குறுஞ்சிரிப்போடு கேட்டார் அந்த மனிதர். ரஞ்சனும் சிரித்துக் கொண்டான்.

ரயில் அடுத்த தரிப்பிடத்தில் நிற்க அவள் இறங்குவது தெரிந்தது. டிக்கெட் பரிசோதகரிடம் தலையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

அப்போதுதான் நேரம் காலை ஏழு முப்பது. இத்தனை அவசரமாக இந்தக் காலைப் பொழுதில் எங்கேப் போகிறாள்?! சிந்தனைச் செய்தபடி அவளைத் தொடர்ந்தான் ரஞ்சன்.

சந்தன நிறத்தில் சிவப்புப் பூக்களை அள்ளித் தெளித்தாற் போல ஒரு கவுன் அணிந்திருந்தாள். கணுக்கால் வரை நீண்டிருந்தது ஆடை.

அந்த செம்மண் பாதைக்கு ஏற்றமாதிரி மெல்லிய செருப்பு அணிந்திருந்தாள்.

கையில் நான்கைந்து மெல்லிய தங்க வளையல்கள். கழுத்தில் சின்னதாக ஒரு செயின். கூந்தலை ஒற்றைப் பின்னல் போட்டு சிவப்பு ரிப்பன் கட்டி இருந்தாள்.

அவன் ஓவியப் பாவை அவனைச் சுண்டி இழுத்தாள். ரஞ்சன் அந்த கிராமத்துத் தோற்றத்தில் கொஞ்சம் சொக்கித்தான் போனான். அவள் பின்னோடே கால்கள் போக இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தான் இளவல்.

சந்தைப் போல இருந்தது அந்த இடம். கிராமத்துச் சந்தை. அப்போதுதான் தான் தனது காமெராவை எடுத்து வரவில்லை என்று உணர்ந்தான் ரஞ்சன்.

சின்னச் சின்ன மரக் குடில்கள் அமைக்கப்பட்டு புத்தம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ரஞ்சனுக்கு இந்த அனுபவம் மிகவும் புதுமையாக இருந்தது. இதுபோல இதுவரை அவன் பார்த்ததே இல்லை.

நீர் தெளித்துப் புதுப்பொலிவோடு இருந்த காய்கறிகள் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. இப்படியெல்லாம் மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்களா என்று வியந்து போனான்!

பெண்ணின் பின்னோடு நடந்து போனான். ஒன்றிரண்டு பேர் தமிழில் பேசினார்கள். மற்றைய அனைவரும் சிங்களத்திலேயே பேச அதைப் புரிந்து கொள்ள இவனால் முடியவில்லை.

தக்காளியைக் கையிலெடுத்த பெண் அப்போதுதான் இவனைக் கவனித்தது. ஆச்சரியம் மேலிட்டுப் போக ஒரு சூடான பார்வையை இவன் புறமாக வீசிவிட்டுத் தனது காரியத்தில் கண்ணானது.

அவள் போகும் இடமெல்லாம் பின்னோடே போனவன் அந்தச் சுற்றுவட்டாரத்தை மிகவும் ரசித்தான். பின்னணியில் பெரிய மலைகள் வரிசையாகத் தெரிந்தன.

ஆங்காங்கே பெரிதும் சிறிதுமாக வீடுகள். அடுத்தாற்போல புகையிரத நிலையம். இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு புகைவண்டி பெரும் சத்தத்தோடு போய்க் கொண்டிருந்தது.

லண்டனின் செயற்கை வாழ்க்கைக்கும் இங்கு மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கைக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது?! ரஞ்சனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏய் பொறுக்கி! இங்க என்னப் பண்ணுற?” அந்தக் குரலில் கோபம் தலைக்கேற சட்டென்று கவனம் கலைந்தான் ரஞ்சன். அவள்தான், அத்தனைத் தைரியமாக மீண்டும் அவனைப் பொறுக்கி என்று அழைத்திருந்தாள்.

“திருந்தவே மாட்டியா நீ?”

“ஏன்? நான் என்னத் தப்புப் பண்ணினேன்? தப்புப் பண்ணினது நீ?”

“மரியாதையாப் பேசு!”

“ஏன்? நீ மரியாதையாத்தான் நடந்தியோ? உனக்கு இந்த மரியாதை போதும்.” சொல்லிவிட்டு மடமடவென அவள் நடக்க அவளைப் பின்தொடர்ந்தான் ரஞ்சன்.

“இப்போ எதுக்கு எம் பின்னாடி வர்றே?”

“உம் பின்னாடி வராம வேற யாரு பின்னாடி போகச் சொல்றே?”

“எவ பின்னாடி வேணும்னாலும் போ! ஆனா எம் பின்னாடி வராதே!” அடக்கிய கோபம் வார்த்தைகளில்.

“திரும்பிப் போக வழி தெரியாதே…” இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் அடித்தது. எடுத்துப் பார்த்தான். லலித் அழைத்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க லலித்.”

“ரஞ்சன், எங்க இருக்கீங்க? தேவி தரிசனமா?” லலித் பெருங்குரலில் சிரிக்கவும் ரஞ்சனும் சிரித்தான்.

“ஆமா.”

“பிக்கப் பண்ண வரணுமா?”

“எங்க இருக்கேன்னேத் தெரியலையே லலித்.”

“ஐயையோ! உங்க தேவிக்கிட்டக் கேளுங்களேன்.”

“தேவின்னு சொல்றதை விட காளின்னு சொன்னாச் சரியா இருக்கும்.” முன்னே நடந்து கொண்டிருந்த பெண்ணிற்கு இவன் பேசியது கேட்டிருக்கும் போலும். திரும்பிப் பார்த்து முறைத்தது.

“அப்போ நீங்க ஏதோ வம்பு பண்ணி இருக்கீங்க ரஞ்சன்.”

“கண்டிப்பா.” இவன் சுலபமாக ஒப்புக்கொள்ள லலித் மீண்டும் சிரித்தான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே புகையிரத நிலையம் வந்துவிட்டது. சுமித்ரா உள்ளே போக இவனும் உள்ளே நுழைந்தான்.

“லலித், ஸ்டேஷன் வந்திடுச்சு, நான் அப்புறமா உங்களைக் கூப்பிடுறேன்.”

“ஓகே ஓகே.” லலித் அவசரமாக அழைப்பைத் துண்டிக்க ரஞ்சன் அவள் பின்னோடு போனான். அவள் ஊர் பெயரைச் சொல்லி டிக்கெட் எடுக்க இவனும் அதே இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டான். கையில் காய்கறிகள் அடங்கிய பையோடு பெண் ரயிலுக்காகக் காத்து நின்றது.

ஊரில் இருக்கும் நாட்களில் இப்படிக் காலைப்பொழுதில் ரயிலேறி சந்தைக்குப் போவது அவள் வழக்கம். பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வீட்டிலும் யாரும் எதுவும் சொல்வதில்லை.

அந்த இளங்காலைப் பொழுதைப் பெண் வெகுவாக ரசிப்பாள். ஆனால் இன்றைக்கு அந்த இன்பம் தொலைந்து போனது.

பாடிகார்ட் போல ரயிலேறியதிலிருந்து தன்னைத் தொடர்ந்து வரும் அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்போது மட்டுமல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பாக நான்கைந்து மைக்கோடு இரண்டு டீவி சேனல்கள் அவளிடம் கேள்வி கேட்டது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.

சூடாக பதில் சொல்லிவிட்டு முதல் வேலையாக ஹாஸ்டல் போய் அந்தத் திமிர் பிடித்த ஓவியனைத்தான் வலைதளத்தில் தேடினாள்.

“பார்க்க சூப்பரா இருக்கான் சுமி, உண்மையைச் சொல்லு, உன்னோட லவ்வர்தானே அது?” கூடி நின்ற அவள் நண்பிகள் கூட்டம் அப்படிக் கேட்ட அந்த நொடி அவனைப் பிடிக்காமல் போனது சுமிக்கு.

“ஆனாலும் உங்க அந்தரங்கத்தை இப்பிடி வரைஞ்சு வெச்சிருக்க வேணாம்.” இன்னொருத்தி கேலி பேச சுமிக்கு ஆத்திரம் பொங்கியது.

“ஷட் அப்!” தோழி மேல் பாய்ந்த கையோடு வீட்டுக்கு ஃபோனை போட்டாள் சுமித்ரா.

“அண்ணா!” தொலைபேசியை எடுத்தது சுமித்ராவின் இளைய அண்ணன் சுரேஷ்.

“சொல்லுடா சுமி.”

“நான் வீட்டுக்கு வரணும், இன்னைக்கே வந்து கூட்டிக்கிட்டுப் போறீங்களா?”

“என்னாச்சுடா? உடம்புக்கு முடியலையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, நீங்க வாங்கண்ணா நான் சொல்றேன்.”

“பசங்க ஏதாவது பிரச்சினை பண்ணுறாங்களா? சொல்லு… கண்ணை நோண்டிர்றேன்!”

“அதெல்லாம் இல்லைண்ணா, நீங்க முதல்ல இங்க வாங்க.” சுமித்ரா அழைத்து அவர்கள் வீட்டில் வராமல் போய் விடுவார்களா என்ன?! அன்று பிற்பகலே இளைய அண்ணன் வந்து தங்கையை ஊருக்கு அழைத்து வந்துவிட்டான்.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சுமித்ரா அனைவரையும் உட்கார வைத்து நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டாள். அனைவரும் என்றால் இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், இரண்டு குழந்தைகள்.

வீட்டிலிருந்த அனைவரும் சுமித்ரா சொன்ன கதையைக் கேட்டு மலைத்துப் போனார்கள். தங்கள் வீட்டுப் பெண் மேல் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை என்பதால் இது எப்படிச் சாத்தியம் என்றுதான் யோசித்தார்கள்.

“இது சாத்தியமா சுரேஷ்?” பெரியவர் ஜெயராம் தன் தம்பியிடம் கேட்டார்.

“அவனுக்கு நம்ம சுமியோட ஃபோட்டோ எங்கேயோ கிடைச்சிருக்கு, பிடிச்சுப்போய் வரைஞ்சிருப்பான் ண்ணே.”

“எப்பிடிப்பா? உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல இருக்கிற பயலுக்கு நம்ம சுமி ஃபோட்டோ எப்பிடிக் கிடைச்சிருக்கும்.”

“அதான் எனக்கும் ஒன்னும் புரியலை ண்ணே.” யாரென்றேத் தெரியாத அந்த ரஞ்சன் மேல் கோபப்படவும் அவர்களால் முடியவில்லை. அதேநேரம் தங்கள் வீட்டுப் பெண்ணை இந்தக் கோலத்தில் வரைந்தவனை மன்னிக்கவும் அவர்களால் இயலவில்லை.

எது எப்படி இருந்த போதும் சுமித்ராவிற்கு ரஞ்சன் என்ற அந்தப் பெயர் மேல் வெறுப்பு ஏற்பட்டுப் போனது. ஒவ்வொரு தடவையும் ஊருக்கு வரும்போதும் எத்தனை ஆசையாக வருவாள்! இன்றைக்கு அனைத்தும் தொலைந்து போகக் காரணமாக இருந்த அந்த ரஞ்சன் மேல் கொலை வெறி வந்தது. மதம் கொண்ட அத்தினியாக மாறிப்போனது மங்கை!

ரயில் இன்னும் வரவில்லை. பத்து நிமிடங்கள் தாமதமாகும் என்ற அறிவிப்பு ஒலிக்க அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தாள் பெண். காலைப்பொழுது என்பதால் சிறிது சிறிதாகக் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் தள்ளி அந்தப் பொறுக்கி நின்றிருப்பது தெரிந்தது. அவனைப் பார்த்த மாத்திரத்தில் உடம்பெல்லாம் தீப்பிடித்து எரிவது போல ஒரு வெப்பம் தோன்றியது.

எத்தனைத் திண்ணக்கம் இருந்தால் இன்றைக்கு அப்படி நடந்திருப்பான். நேற்று நடந்த அனைத்தையும் தூக்கித் தூர வைத்துவிட்டுக் கொஞ்சம் மன அமைதியைத் தேடித்தான் பையோடு சந்தைக்குக் கிளம்பினாள் சுமித்ரா.

ஆனால் அங்கேயும் அவன் வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. முதலில் அவனை அவள் அடையாளம் கண்டு கொள்ளவேயில்லை. யாரோ சக பயணி என்றுதான் நினைத்திருந்தாள்.

ஆனால் மூளை சில நொடிகளில் அவனை இனங்கண்டு அறிவுறுத்தி விட்டது. அவன் யாரென்று புரிந்த போது சுமித்ரா வெகுண்டு போனாள். என்னவோ சொல்லத் தெரியாத கோபம் உடலெங்கும் பரவியது.

அதற்கு மேல் நடந்ததை நினைக்கத் தைரியம் இல்லாமல் அவனைத் திரும்பிப் பார்த்தாள். இவளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெடுக்கென்று திரும்பியவள் அதன் பிறகு அவன் பக்கமேத் திரும்பவில்லை. ரயில் வந்ததும் ஏறிப் புறப்பட்டு விட்டாள். பின்னோடே அவன் வந்ததை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவள் வீடுவரை ரஞ்சன் வந்தான்.

நேற்றிரவு அரை வெளிச்சத்தில் அவன் பார்த்த வீடு. கொஞ்சம் கம்பீரமாகத்தான் காட்சியளித்தது. வீட்டின் முன்பாகச் செய்குளம், அதில் தாமரை பூத்துக் கிடந்தது.

காலிங் பெல்லை அழுத்தினான் ரஞ்சன். உள்ளிருந்து யாரோ வரும் அரவம் கேட்டது. தான் யாரென்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியுமா என்பது அவனுக்குச் சந்தேகமே.

எதுவாக இருந்தாலும் இன்றைக்குப் பார்க்கலாம் என்று அமைதியாகக் காத்திருந்தான். ஒரு நடுத்தர வயது மாது வெளியே வந்தார்.

“யாரு வேணும்?” கேள்வியைக் கேட்ட பின்பு அவர் கண்கள் லேசாகச் சுருங்கியது. முகம் சிந்தனையைக் காட்ட ரஞ்சனுக்கு புரிந்து போனது. இவருக்குத் தான் யாரென்று தெரியும்.

“சுமித்ராவோட அண்ணாவைப் பார்க்கணும்.” தெளிவாகச் சொன்னான் இளையவன். அந்தத் தைரியமான பேச்சில் அவர் முகம் சட்டென்று ஆச்சரியப்பட்டது.

“எதுக்கு?” காரணமே இல்லாமல் கேள்வி கேட்டவர் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டார்.

“உட்காருங்க.” அந்தப் பெண்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அண்ணீ… யாரது?” உள்ளிருந்து கேட்டபடி ஒரு குரல் வெளியே வந்தது. வந்த குரல் ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்தில் நல்ல ஜம்மென்று இருந்தது.

“ஏய்!” இவனைப் பார்த்ததும் அது உறுமிய சத்தத்தில் சோஃபாவில் உட்கார இருந்த தன் எண்ணத்தைக் கைவிட்டான் ரஞ்சன்.

“தம்பீ… இது…” அந்தப் பெண் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஆஜானுபாகு‌ இவனருகில் வந்து சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்தது.

“ஐயையோ! தம்பீ! என்னப் பண்ணுறீங்க? என்னங்க! சீக்கிரமா இங்க வாங்க!” அந்தப் பெண் போட்ட சத்தத்தில் ஒட்டு மொத்த வீடும் அடுத்த நொடி ஹாலில் ஆஜரானது.

“டேய் சுரேஷ்! என்னடாப் பண்ணுறே? கையை எடு!” உள்ளேயிருந்து வந்த அடுத்த ஆஜானுபாகு தன் தம்பியை ரஞ்சனிடமிருந்து விலக்கியது.

‘ஓஹோ! ரெண்டு அண்ணன்மாரா?!’ அப்போதும் ரஞ்சனின் மனது இப்படித்தான் யோசித்தது. கிஞ்சித்தும் ஒருவன் தன் மேல் கை வைத்ததை அவன் கண்டு கொள்ளவேயில்லை.

வீட்டிற்குள் இப்போது ஒரு அசாத்திய அமைதி நிலவியது. ரஞ்சன் தனது ஷர்ட் காலரை சரி பண்ணிக்கொண்டான். அந்த அசாத்திய அமைதியைக் கிழித்துக்கொண்டு இவனின் அலைபேசி அலறியது.

“சொல்லுங்க லலித்.” ரஞ்சன் அழைப்பை ஏற்றிருந்தான்.

“எங்க இருக்கீங்க ரஞ்சன்?”

“சுமித்ராவோட வீட்டுல.” அந்த உரிமையான பதிலில் அங்கிருந்த அத்தனைப் பேரும் அதிர்ந்து போனார்கள். ஆனால் இவனோ இயல்பாகப் பேச்சைத் தொடர்ந்தான்.

“வாட்! அங்க என்னப் பண்ணுறீங்க ரஞ்சன்?!”

“எனக்கு சுமியோட வீட்டு மெம்பர்ஸை பார்க்கணும்னு தோணிச்சு, அதான் வந்துட்டேன்.”

“மை கார்ட்! ஏதாவது பிரச்சினை ஆகிடப் போகுது ரஞ்சன்.” லலித் சொல்ல ரஞ்சனின் கண்கள் தன் காலரை கொத்தாகப் பிடித்தவனைப் பார்த்தது. அப்போதும் ஒரு போருக்கு ஆயத்தமாகவே நின்றிருந்தான் அவன். பார்வை வெட்டவா, குத்தவா என்று கேள்வி கேட்டது.

“நான் அப்புறமாக் கூப்பிடுறேன் லலித்.” அழைப்பைத் துண்டித்து விட்டு கொஞ்சம் அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரைப் பார்த்தான் ரஞ்சன்.

வீட்டுக்கு அவர்தான் பெரியவர் போலும். இவரிடம் பேசினால் சரியாக இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்ல ரஞ்சன் எந்தத் தயக்கமும் இன்றி பேச்சை ஆரம்பித்தான்.

“எம் பேரு ரஞ்சன், யூகே ல இருந்து வர்றேன்.” இயல்பாக ரஞ்சன் கையை நீட்டினான். ஆனால் அந்தக் கையைப் பற்றிக் கொள்ள அங்கே யாரும் தயாராக இல்லை.

“உட்காருங்க.” ஒற்றை வார்த்தையை உதிர்த்தார் அந்த மனிதர். ஐம்பது வயதிருக்கும். பேச்சு, செயல் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் இருந்தது.

ரஞ்சனும் எதுவும் பேசாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அந்த வீடே இப்போது அவனைப் பார்த்தபடி இருந்தது. ஆனால் அவள் மட்டும் அங்கேயில்லை.

“சொல்லுங்க.” மீண்டும் ஒரே ஒரு வார்த்தை.

“அம்மா, அப்பாவோட சொந்த இடம் இதுதான்.”

“இதுன்னா? எது?” இப்போது இரண்டு வார்த்தை. அதற்குப் பதில் சொல்ல ரஞ்சனுக்கு தெரியவில்லை.

“ஸ்ரீ லங்கா…”

“ஓ… இப்போ அவங்க எங்க?”

“யூகே ல.”

“ம்… நீங்க இப்போ இங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

கத்தரித்தாற் போல வந்தது பேச்சு.

“எனக்கு சுமித்ராவை கல்யாணம் பண்ணிக்கணும், அதுக்கு உங்க பர்மிஷன் வேணும், அதுக்குத்தான் வந்திருக்கேன்.” ஏதோ கடையில் காசு கொடுத்து சாக்லேட் வாங்குவது போல பேசிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.

“அண்ணே! இவன் தப்பாவேப் பேசிக்கிட்டு இருக்கான்.” மீண்டும் ஒருமையில் பாய்ந்தான் இளையவன்.

“கொஞ்சம் பொறு சுரேஷ், எதுக்கு அவசரப்படுறே?” தன் தம்பியை அடக்கிய பெரியவர் இப்போது ரஞ்சனிடம் திரும்பினார்.

“எங்க வீட்டுப் பொண்ணை உங்களுக்கு எப்பிடித் தெரியும்? யூகே எங்கிறீங்க…” சந்தேகத்தோடு பேச்சை நிறுத்தினார் ஜெயராம்.

ரஞ்சன் இப்போது லேசாகத் திணறினான். இவர்களுக்கு இப்போது என்னவென்று பதில் சொல்வது?! நான் கனவில் பார்த்த கற்பனைப் பெண்ணவள் என்றா சொல்ல முடியும்?!

சொன்னாலும்தான் இவர்கள் தான் சொல்லுவதை நம்புவார்களா? என்னப் பேசுவது என்று புரியாமல் தடுமாறினான் ரஞ்சன்.