Mayuravalli15

வழக்கமான இடம் அந்த மொட்டை மாடி இருக்கையில் அமர்ந்திருந்தான். மயூரி விஷயத்தை திரும்பத்திரும்ப யோசித்து அவனுக்கு மூச்சு முட்டுவதை போலிருந்தது. காற்று வாங்க இங்கே வந்தால், வெறும் காற்றை மட்டும் தரமாட்டேன் நினைவுகளையும் சேர்த்து தருவேன் இந்தா வைத்துக் கொள் என்று அந்த இயற்கை வேறு அவனை இம்சித்தது. பழைய நினைவுகளே மறுபடியும் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டது.

 

‘உன் மேல் எனக்கு சந்தேகமெல்லாம் இல்லை மயூரி! சில நேரங்களில் சில வருத்தங்கள் மட்டுமே. ஆனா அதுக்காக ஏன் உன்கிட்ட அப்படியெல்லாம் நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியலை. நான் செய்துவிட்ட பிழையை எப்படி இப்ப அழிக்கணும்னும் தெரியலை! என் மனசு உனக்கு என்னைக்காவது புரியுமா?’

 

‘ஆஆஆஆ’

யோசனையின் தீவிரத்தை தாங்க முடியாதவனாய்

தன் தலைமுடியை இரு கைகளால் கலைத்து விட்டுக் கொண்டவன், எழுந்து அவர்கள் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஒரு கையில் வெள்ளை கோட்டையும் இன்னொரு கையில் தன் ஹேண்ட்பேகையும்  வைத்துக் கொண்டு தூரத்தில் மயூரி நடந்து வருவதை பார்த்தவன் அசையாமல் அங்கேயே நின்றான்.

 

இப்போதெல்லாம் அவள் அடிக்கடி புடவை கட்டி பார்க்கிறான். அந்த இருட்டில் தெரிந்த சின்ன வெளிச்சத்தில் கூட தன் முன்னால் காதலியை, முன்னால் ரசித்தது போலவே ரசித்தான் விவேக்.

 

இங்கே இவர்கள் வீட்டுக்கு தான் வருகிறாள் என்ற இவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, பக்கத்து வீட்டின் கேட்டின் வழியே போனாள். இவன் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் அவள் வீட்டு முதல் மாடிக்கு வர, அப்போது தான் அவனுக்கு அவளின் இந்த புது இடமாற்றம் தெரிய வந்தது. சொந்த வீட்டுக்கே குடி வந்து விட்ட மயூரியை பார்த்த திருப்தியில் நிம்மதியாய் அன்று உறங்க போனான்.

 

விவேக் இப்போதெல்லாம் வீட்டில் இருப்பதே அரிதான காரியம், அப்படி கிடைத்த ஒரு நாளில் தன் தந்தையிடம் தனியாக பேசினான்.

“சாரி பா, குடிச்சிட்டு வந்தது ரொம்ப பெரிய தப்புத்தான். அதுக்காக என் கிட்ட பேசாம எல்லாம் இருக்காதீங்க. இனி அப்படி எதுவும் நடக்காது.”

 

அவருக்கு இன்னமும் மகன் மீதிருந்த ஆத்திரம் குறையவில்லை. அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாதவர் போல் நின்றிருந்தார்.

“அப்பா…”

“குடிச்சிட்டு வந்ததே கேவலம், அதில் கூட பிறந்தவனுடன் இப்படித்தான் அடிச்சிப்பாங்களா! வீட்டுக்குள்ளே ஒற்றுமையில்லாதவன் வெளியே எப்படி டா சமாளிச்சு போவே! உங்க சண்டையில் அந்த வள்ளி பொண்ணு மனசை வேற நோகடிச்சியிருக்கே நீ”

தப்புசெய்தவன் போல் தலைகுனிந்து நின்றான் விவேக்.

“சரி சரி இனியாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ. வீட்டில் கல்யாணம் வச்சியிருக்கோம். சொந்தகாரங்க வந்து போயிட்டு இருப்பாங்க. இந்த வீட்டு மானத்தை காப்பாத்துற மூத்த மகனா நடந்துக்கோ”

 

“எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்னு ஏற்கனவே சொல்லிட்டேனே பா”

அப்படி சொன்னவனை மேலும் கிழும் பார்த்தவர்,

“கல்யாணம் உனக்கில்லை! நீ தான் நிச்சயித்த பொண்ணையே வேண்டாம்னு சொல்லிட்டியே! இனி உனக்கு யார் பொண்ணு கொடுப்பா” 

 

அவனின் தயங்கிய பார்வையை சந்தித்தவர்,

“நீ மட்டும் தான் எங்களுக்கு ஒரே பிள்ளையா, உனக்கு பின்னாடி எங்களுக்கு ஒருத்தன் இல்லை? நாங்க எங்க கடமையை முடிக்கணும், அவனுக்கும் வயசாகுதுல”

 

அவன் பதில் சொல்லவில்லை.

“அம்மாவும் அவளுக்கு வள்ளி மாத்திரம் தான் மருமகளா வரணும்னு என் கிட்ட திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கா” முழுதாக அந்த வாக்கியத்தை முடிக்காமல்,

“சரி சரி இப்ப அதைப் பத்தி எல்லாம் பேச எனக்கு நேரமில்லை. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ, அவ்வளவுதான்!”

 

அவனை இன்னமும் பெரிய குழப்பத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். கேட்டிருந்த தகவலில் அதிர்ந்து போயிருந்தான் விவேக். அவன் மூளை எல்லா செயல்பாட்டையும் கொஞ்ச நேரம் நிறுத்தியிருந்தது.

 

‘என்ன நடக்கிறது இங்கே!’

நிஜமாகவே அவர்கள் இருவருக்கும் திருமணமா? தன் உயிர் நண்பன் என்றாளே, அதற்கு என்ன அர்த்தம்! ஆண் பெண் நட்பு என்றுமே சாத்தியமில்லையா? இல்லை, இல்லை இப்படியெல்லாம் நடக்க கூடாது! 

 

‘உனக்கு தான் இந்த திருமணம் வேண்டாம் என்றுவிட்டாயா! இனி அவள் யாரை திருமணம் செய்தாலும் உனக்கென்ன’

மனசாட்சி வேறு நல்லவனாய் அவனுக்கு புத்தி கூறியது!

 

ஆனால் அவனுக்கோ,

‘நிச்சயமாய் அப்படியெல்லாம் எதுவும் இருக்காது! தந்தை தன்னிடம் எதையோ மறைக்கிறார்’ என்ற திசையிலேயே சிந்தனை போனது. விவேக்கின் மனம் அவ்விஷயத்தை எத்தனை முடியுமோ அத்தனை சிக்கலாக்கி, அதை விட்டு வெளியே வர மறுத்தது!

 

அடுத்து வந்த நாட்களில் அவனின் இந்த மனப் பிரச்சனை பெரிதானதே ஒழிய தீருவதற்கு வழியில்லை. அதற்கு அந்த வீட்டில் யாரும் விடவுமில்லை!

 

விஷயம் உண்மையா என்பதை அறிந்து கொள்ள முயன்றான். விஷ்ணுவை திருமணம் செய்யப் போவது மயூரவள்ளியா?

அன்னையிடம் கேட்கலாம் என்றால் இப்போதெல்லாம் அவர் இவன் முகத்தை எறிட்டும் பார்ப்பதில்லை. விஷ்ணு சகல நேரமும் இவனை முறைத்துக் கொண்டே இருந்தான். அவனிடம் பேசும் எண்ணம் கூட மூத்தவனுக்கு வரவில்லை.

 

வழக்கமாய் தாமதமாய் வீடு வருகிறவன் இப்போதெல்லாம் மயூரியின் வருகை பொருட்டு அந்த மொட்டை மாடி ‘வாக்கிங்கை’ தினமும் தொடர்ந்தான். மாடியில் மின்விளக்கு ஏதும் எரியவிடாமல் அங்கே நின்றிருப்பவனை அவளும் இதுவரை கவனித்ததே இல்லை.

 

அன்றும் அதே போல் திட்டத்தில் வீட்டினுள் பிரவேசமாக, மயூரி அவன் கண்ணில் பட்டாள். அமுதா, விஷ்ணு, மயூரி அவர்கள் வாங்கி வந்திருந்த நகைகளையும் புடவைகளையும் பரப்பி வைத்து அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 

“என் காசையெல்லாம் இப்படி நகையும் புடவையுமா மாத்திட்டியே மா. இது உனக்கே நல்லாயிருக்கா!”

“பாரு வள்ளி எப்படி பேசுறான்னு. அவன் கட்டிக்க போறவளுக்கு இதை கூட செய்ய மாட்டானாமா!”

“வாயை வச்சிகிட்டு சும்மா இரேன் டா விஷ்ணு! அவன் ஏதோ உளறுவான், நீங்க கண்டுகாதீங்க அத்தை! நீ முதலில் இந்த இடத்தை விட்டு கிளம்பு விஷ்ணு” 

அவன் எழுந்து போகவே அங்கே நின்றிருந்த விவேக்கை கண்டாள் மயூரி. இருவர் கண்களும் ஒரு நில நொடிகள் சந்தித்துக் கொண்டது.

 

“இது என் ரூம், இங்க உள்ளே வர வேலையெல்லாம் இனி  வச்சிக்காதே”

இது நடந்து பல வருடங்கள் இருக்கும். சொன்னவன் விவேக்! சொன்னதோடில்லாமல் மயூரவள்ளியின் கையை பிடித்து இழுத்து வந்து முரட்டுத் தனமாய் வெளியில் தள்ளிவிட்டிருந்தான். 

 

அன்று வீட்டு வேலை செய்யும் பெண்மணி வரவில்லை என்று இவள் அமுதா அத்தைக்கு உதவியாய் அந்த வீட்டை சுத்தம் செய்து கொடுத்தாள்.

அதன் ஒரு பகுதியாக அவன் அறைக்குள் சென்றவளை இப்படி செய்திருக்கிறான் அவன். அதுதான் முதல் அனுபவம், அவனிடம் ஏச்சு வாங்கியதில்! முதல் காதல் போல் முதல் அவமானம் முதல் வெறுப்பு எதுவும் எளிதில் மறந்துவிடாது. 

 

ஆனால் மயூரி மறந்திருக்கிறாள் இதையெல்லாம்! விவேக்கின் அன்பில் திளைத்திருந்த காலத்தில். 

 

பலமுறை விஷ்ணுவுடன் சரிக்கு சமமாய் சண்டையிடுகையில் ஓட்ட பந்தயம், சைக்கில் பந்தயம் என்று அதே தெருவில் இளவயதில், ஆண் பெண் என்று சரிநிகர் சமமாக விளையாடிவிட்டு வந்திருக்கையில், 

“ஏய் நீ ஒரு பொண்ணு தானே! இப்படியா இருப்பாங்க. எங்க அம்மா எங்கையாவது சத்தமா பேசி பார்த்திருக்கியா நீ. கொஞ்சம் அடக்கமா இருந்து பழகு”

ஏன் இப்படியெல்லாம் தன்னை திட்டுகிறான் என்பதே அவனை விட இளையவளான மயூரிக்கு அப்போதெல்லாம் புரியவில்லை.

அதை யாரிடமும் சொல்லத் தோன்றவில்லை. அமுதா அத்தை வீட்டை விட்டால் தன்னால் வேறு எங்கையும் போக முடியாது. இதை சொல்லப் போய் அப்படி எதுவும் நடந்து விடுமோ என்ற அச்சம்.

அதன் காரணமாய் அவனிடமிருந்து விலகி நிற்க கற்றுக் கொண்டாள். அவன் கண் பார்வையில் இவள் படுவதே அரிது. படிப்பில் தன் முழு கவனத்தையும் செலுத்தியிருந்த பயனாக பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்தாள்.

 

ஏனோ விவேக்கின் அந்த ஒரே ஒரு பார்வை பழைய விஷயங்களை எல்லாம் கிளறி விட்டிருந்தது. எப்போது உணவை முடித்து எப்படி வீடு வந்தாள் தெரியாது.

“வள்ளி ஏய் வள்ளி, லூசே இத்தனை நேரமா நான் பேசினது எதையும் கேட்கலையா நீ!”

விஷ்ணு அவள் தோள் தட்டி அவளை இந்த காலத்துக்கு இழுத்து வந்தான்!

“உன் ‘மாஜியை’ பார்த்ததும் பேசாமடந்தை ஆகிட்டியா வள்ளி!”

 

அவனுக்கு அவளின் நிலைமை விளையாட்டாய் தெரிந்தது!

“ஷட்டப் விஷ்ணு”

அவன் சொன்னதில் உண்மையிருந்ததால் அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.

 

“எனக்கு தெரியாதா உன்னை பத்தி. சரி அதை விடு! ராஜி கிட்ட மார்னிங் ஷிப்ட் மாத்தி விட்டிறு. ஷாப்பிங் செஞ்ச சோர்வு போகனும்ன நல்லா தூங்கு டி. கதவை பூட்டிக்கோ!”

 

முதலில் அவன் அந்த வீட்டினுள் சென்று எல்லா இடங்களையும் ஒரு பார்வை பார்த்து வந்தான். அவள் கதவடைத்த பின்னரே அவ்விடத்திலிருந்து அகன்றான் விஷ்ணு.

 

“அத்தை ரெடி ஆகிட்டீங்களா?”

பட்டுப்புடவையில் அத்தனை அம்சமாயிருந்தாள் மயூரவள்ளி. அது ஒரு வெள்ளிகிழமை காலை வேளை. பேப்பர் படிப்பது போல் பாவலா காட்டிய விவேக் அங்கே வந்தவளை ஒரு வரி விடாமல் படித்துக் கொண்டிருந்தான்.

 

‘கையில் கிடைத்த பொக்கிஷத்தை தூக்கி போட்டுட்டு நீ செய்ற அட்டூழியம் இருக்கே, ஐய்யய்யோ’

அவன் மனசாட்சியே அவனை கேள்வி கேட்டு தாக்கியது.

“வள்ளி மா இன்னிக்கு அம்சமா இருக்கே! சீக்கிரம் தயாராகிட்டியே, பரவாயில்லை. வாங்கின அந்த புது நெக்லஸை எடுத்து தரவா! மாடியில் உன் ரூம் பீரோவில் வச்சியிருக்கேன்! இந்த விஷ்ணு பயலை வேற எழுப்பணும்”

“நானே போய் இரண்டையும் பார்த்துக்குறேன் அத்தை”

முதலில் ஒரு செம்பு நிறைய தண்ணீரோடு விஷ்ணு அறைகுள் போனாள். சற்று நேரத்தில் உள்ளிருந்து ஒரே சத்தம்.

“ராட்சசி இப்படியா தண்ணி ஊத்துவே. மெத்தையெல்லாம் ஈரம் பாருடி. வள்ளி வள்ளி நிறுத்துறி போதும்”

“எந்திரிச்சி கிளம்பு. மணி இப்பவே ஏழு, தெரியுமா!”

ஒரு பூன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளி வந்தவள், மேலே தன் அறைக்கு போக அதற்கு மேல் பொறுமையில்லாதவனாய் யாருமறியாமல் அவளை பின் தொடர்ந்தான் விவேக்.

“மயூரி!”

இத்தனை நாளில் முதல் முறையாய் பேச முயல்கிறான் அவளிடம். கைவிட்டு போன பின்பு வந்த ஞானோதயம். அறைக்குள் நுழைந்தவன் தன் பின்னே கதவடைத்துக் கொண்டான்.

அவனை கிட்டத்தில் பார்த்தவளுக்கு திகைப்பில்லை. 

 

“என்ன விவேக் அத்தான்!”

அவளின் அந்த புதிய அழைப்பில் கலவரமானான் விவேக்.

“ஏன் இப்படி கூப்பிடுறே மயூரி”

“இனி அதுதானே முறை விவேக் அத்தான்”

பேச நினைத்ததை மறந்து போனான் விவேக்.