OVOV 39

OVOV 39

ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும்
திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என
வெடிக்கும்

என்று ராஜா சார் BGM இல்லாமல்,ராகவா லாரன்ஸ் பேய் பட செட் போலெ விளக்குகள் எரிந்து எரிந்து அணையாமல்,கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு உருவம் கிராஸ் செய்யாமலே ஒரு அமானுஸ்யத்தை அந்த பகல் வேளையில் வார்டு பாய்க்கு காட்டி கொண்டு இருந்தது அந்த சவ கிடங்கு.

அதீத குளிரா,இல்லை போர்மலின் மணமா,இல்லை அழுகி கொண்டு இருக்கும் பிணங்களின் உடல்களா இல்லை இவை எல்லாம் சேர்ந்தேவா என்று பிரித்து சொல்ல முடியாத வண்ணம் பயப்பந்தினை அடிவயிற்றில் உருட்டி கொண்டு இருந்தது.

இந்திய மருத்துவ ஆய்வுகளின் படி இப்படி சுத்தம்,சுகாதாரம் இல்லாத சவக்கிடங்குகளில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள்,லேப் டெக்னிசியன்கள்,மருத்துவர்களும் கூட   சிறு வயதிலேயே நோயால் இறக்கும் விகிதம் மிக அதிகம் என்று நியூஸ்பேப்பர்களில் வந்த செய்தியினை அவனும் தான் படித்து இருந்தான்.  

செய்தியில் படிக்கும் போதே ஒரு வித அவஸ்தையை உணர்ந்த அவனை அப்படிபட்ட இடத்திற்குள் நுழைய சொன்னதே அவனுக்கு அருவெறுப்பாக தான் இருந்தது.என்ன செய்வது கை நீட்டி காசு வாங்கிய பாவத்திற்கு இன்னும் பல பாவங்களை அவன் செய்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

தன் விதியை நொந்தவாறே பாம் என்று தெரியாமலேயே அதை வைத்து விட்டு திரும்பினால்,வெள்ளை துணியுடன் ஒரு பிணம்  எழுந்து அமர்ந்து இருப்பதை அவன் இதயம்  தாங்குமா?

வெள்ளை துணியுடன் எழுந்து அமர்ந்து இருந்த உருவத்தை பார்த்துட்டு சினிமாவில் வரும் ஹீரோயின் கத்துவது போல், “வீல்” என்று கத்தியவாறு மயங்கி விழுந்தான் வார்டுபாய்.

“பூத/பேய் ,சைத்தானா/டெவில்.”என்று அவன் உளறல் நிற்கவேயில்லை.

திடீர் என்று முகத்தில் தண்ணீர் மாதிரி ஏதோ பட,

’பேய் தான் உம்மா கொடுக்கிறதோ?செத்தும் இதுங்களுக்கு “கில்பான்சி கில்மா” செய்ய நாம தான் கிடைச்சோமா?’ என்று பயந்து போனவன் கண்ணை திறந்தால்,”ஹாய் ப்ரோ.”என்றவாறு நின்றது ரெண்டு பேய்.

மயக்கம் போட்டு எழுவதற்குள் ஒரு பேய், ரெண்டாய் மாறி இருந்தது.

மூக்கினை வேறு துணி கொண்டு மூடி இருக்க,அவர்கள் கண்,அதில் தெரிந்த கடுமை அவனை அலற வைத்தது.

‘பேய் இப்படி எல்லாம் ஸ்டைலிஷா இருக்குமா,பிண அறையின் நெடி தாங்க முடியாமல் மூக்கை மூடி இருக்குமா?’ என்பதை எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.பயம் அவனை பிடித்து இருந்தது. பயம் உள்ளே வந்து விட்டால் எல்லா லாஜிக்க்கும், சிந்திக்கும் திறனும் வெளியே போய் விடும் என்பதற்கு உதாரணமாய் அலறி கொண்டு இருந்தான் அவன்.

ரெண்டு உருவமும் பேய் தான்-சட்டத்தை மீறுபவர்களை கடித்து குதறும் காக்கி சட்டை போட்ட பேய்கள்.  

ஒரு பேய் ரஞ்சித் சாகர்,இன்னொரு பேய் சரண்பால் ரப்தார் பாட்டியா.

“சுப் கரோ …நாங்க பேய் இல்லை.”என்றான் சரண்.

அலறி கொண்டு இருந்தவன் கருத்தில் சரண் சொன்னது பதியாமல் அவன் தொடர்ந்து அலற,ஓங்கி ஒரு அறை கொடுத்து அவன் வாயை மூடினான் ரஞ்சித்.

அங்கே பாமில் டைமர் ஓடி கொண்டு இருக்க இவனை கொஞ்சி கொண்டா இருக்க முடியும்?

கொடுத்த அடி அங்கே வேலை செய்ய,கன்னத்தை பிடித்து கொண்டு அவர்களை பார்த்து விழித்தான்.அந்த அடி சொல்லாமல் சொல்லியது அது போலீஸ் அடி என்பதை.

“ஏம்பா பாம் வைக்க வரது தான் வரே கொஞ்சம் சீக்கிரமா வர கூடாதா?பாரு இத்தனை நேரம் இந்த பிரேதங்கள் கூட பேசிட்டு இருக்க முடியும்?நம்ம தோஸ்த்துக்குங்க வேற குளிக்கவே இல்லையா,நாற்றம் குடலை பிடுங்குது.”என்றான் ரஞ்சித்.

“ஆமா ப்ரோ.ஒரு தீவிரவாதினா punctuality வேண்டாம்?பத்து நாளைக்கு தேச்சி குளிச்சாலும் இந்த கப்பு போகாது போல் இருக்கு.பாம் வெக்கறது தான் வெக்கறீங்க,அதை ஒரு நல்ல இடமாய் பார்த்து வைக்க கூடாதா? லவர் வர காத்து இருக்கும் பெண்ணை போல் இவ்வளவு நேரம் எங்க ரெண்டு பேரையும் இப்படியா காக்க வைப்பது?”என்றான் சரண்.

ஆரம்ப திகைப்பு நீங்கி விட,அவர்கள் பேய் இல்லை போலீஸ் தான் என்பது புரிந்ததும் ஆசுவாச பெருமூச்சு விட்ட அவன்,அவர்கள் சொன்னது புரிய,”என்னது பாமா?”என்றான் பயத்துடன்.

“பின்னே என்ன உன் கையில் இருப்பது சாக்லேட் என்றா நினைச்சே? ‘பூமன்னு’ வெடிக்குமே அதே பாம் தான்.என்ன தான் வேலை செய்யும் இடத்தின் மீது கோபம் இருந்தாலும் அதற்காக ஒட்டுமொத்த மருத்துவமனையை தரைமட்ட மாக்க வருவது எல்லாம் டூ மச் ப்ரோ. எங்களுக்கும் தான் எங்க ஆஃபீஸ்ர் மேல் கடுப்பாய் இருக்கு.அதுக்குன்னு நாங்க என்ன பாம்மா எடுக்கிறோம். படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டே பா நீ.”என்றான் ரஞ்சித்.

இருவரும் அவனை வைத்து விளையாடி கொண்டு இருந்தனர். குரலில் அவ்வளவு நக்கல்,எகத்தாளம். 

அவர்கள் சொன்னதை கேட்டவன் அவர்கள் இருவரின் காலில் வந்து விழுந்தான்.

“ஐயோ சார்…இது பாம் என்று தெரியாது சார்.வழக்கம் போல் பொருளை கொண்டு வந்து தருவாங்க.அவங்க திரும்ப வந்து கேக்கும் வரை மறைத்து வைப்பது மட்டும் தான் என் வேலை.

போலீஸ் அதிகம் வந்து போகும் அரசாங்க ஹாஸ்பிடலில் ‘போதை மருந்தினை மறைத்து வைத்தால் தெரியாது’ என்று தான் சொன்னாங்க. இங்கே வரும் போலீஸ் கவனம் எந்த கேஸ்காக வருகிறார்களோ அதன் மீது தான் இருக்கும் என்று சொன்னாங்க சார்.சத்தியமா நான் தீவிரவாதி எல்லாம் இல்லை சார்.நம்புங்க சார்.”என்றவன் சிறு பிள்ளை போல் அழவே ஆரம்பித்து விட்டான்.

பின்னே நூறு,ஆயிரம் ரூபாய்க்கு அவன் பொருளை தான் மறைத்து வைத்தான்.அவனை உலக தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு பேசினால் நடுங்கவே ஆரம்பித்து விட்டான்.

“பார் ரா…நம்ம போலீஸ் கேரக்டரை எல்லாம் எப்படி புரிஞ்சு வச்சி இருக்கானுங்க.”என்றான் ரஞ்சித் . 

வார்டு பாயை கழுத்தை பிடித்து  வெளியே தள்ளி கொண்டு வந்தனர் ரஞ்சித்தும், சரணும்.

அவர்கள் மூக்கில் அந்த சவ கிடங்கு நாற்றம் புக கூடாது என்று விக்ஸ் தைலம் பூசி அதன் மேல் கைக்குட்டை வைத்து கட்டி இருந்தனர்.

“சொல்லு உனக்கும் காபோஸ்சுக்கும் எப்படி பழக்கம்?”என்றான் ரஞ்சித்.

“காபோஸ்ஸா அப்படி யாரையுமே எனக்கு தெரியாதே சார்.”என்றான் அவன்.

கடுப்பாகி போன சரண் தன் சர்விஸ் ரிவோல்வர் எடுத்து வார்டு பாய் வாய்க்குள் சொருகினான்.அந்த அளவிற்கு கொதி நிலையில் இருந்தான் அவன்.

“ஏண்டா நாயே…காசு வாங்கினா என்னத்தை வேண்டும் என்றாலும் செய்ய வருவே..காசு கொடுத்தவன் பேரு ‘காபோஸ்’ என்று தெரியாது என்று ரீல்லா விடுறே.?

உன்னை இங்கேயே ‘என்கவுண்டர்’ செய்தா கூட யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது.மொத்தம் ஐந்து பாம் இந்த ஹாஸ்பிடல் முழுக்க வைத்து இருக்கே.அதுவே போதும் ‘தீவிரவாத தடுப்பு சட்டத்தில்’ உன்னை போட்டு தள்ள.”என்று சரண் கர்ஜிக்க வார்டு பாய்க்கு இன்னொரு முறையும் மயக்கம் வந்து விடும் போல் இருந்தது.

“சார் …சார் …சார் “என்று அவன் தந்தி அடிக்க,”சரண் ஏதோ சொல்ல வரான்.”என்று ரஞ்சித் அவனை தடுத்தான்.

“துப்பாக்கி வாயில் இருந்து எடுக்க பட்டதும்,”சார் குரு மேல் ஆணையாய் சொல்றேன் சார்…எனக்கு பணம் கொடுப்பவன் பேர் என்ன என்று கூட தெரியாது.இது வரை போனில் தான் எல்லாமுமே.

ஒரு நாள் இந்த போன்,பத்தாயிரம் ரூபாய் வீட்டிற்கு யாரோ வந்து கொடுத்துட்டு போனதாக சொன்னாங்க சார்.அப்போ என் மனைவிக்கு பிரசவ நேரம்,என் அப்பா பயங்கர குடிகாரர் சார்.குடல் வெந்து, சிறுநீரகம் பாழாகி உயிருக்கு போராடிட்டு இருந்தார்.. ஹாஸ்பிடல் செலவுக்கு என்று அழைத்து சொன்னாங்க சார்.

‘திருப்பி கொடுக்க முடியாது’ என்று சொன்ன போது, ‘தேவை படும் போது உதவி செய்தால் போதும்’ என்று சொல்லிட்டாங்க.அன்று முதல் இவங்க ஏதாவது பாக் கொடுப்பாங்க.அதை ஹாஸ்பிடலில் ஒளித்து வைத்து அவங்க கொடுக்க சொல்லும் ஆள் வந்தால் கொடுத்துடுவேன் சார்.

நான் தீவிரவாதி எல்லாம் இல்லை சார்.அதற்குள் இருப்பது பாம் என்று சத்தியமாய் தெரியாது சார்.”என்று அவன் மீண்டும் அழ, அவன் ஏழ்மையை நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்பது மட்டும் விளங்கி போனது.

“பணம் கொடுத்தா என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்க,யார் உயிர் போனாலும் கவலை இல்லை.உங்க குடும்பம்,குழந்தை குட்டிங்க நல்லா இருந்தா போதும் அவ்வளவு தானே…இந்த பிழைப்பிற்கு நாலு முழம் தூக்கில் தொங்கிடலாம்.

இன்னைக்கு நீ வச்ச இந்த பாம் பற்றிய தகவல் மட்டும் எங்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர் போய் இருக்கும், எத்தனை குடும்பம் துடித்து இருக்கும்,எத்தனை பேர் கை,கால்,கண் இழந்து இருப்பாங்க.

அது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது அப்படி தானே?ஒருத்தன் எந்த காரணமும் இல்லாமல் காசை தூக்கி கொடுக்கிறான் என்றால் எதற்கு,இதனால் அவனுக்கு என்ன லாபம்,நேர்மையான வழியில் இந்த பணம் வந்து இருக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க மாட்டிங்க.” என்றான் சரண் கோபத்துடன்.

“இவங்களை சொல்லி பயன் இல்லை சரண்.இவங்க ஏழைமை, அறியாமையை, அவசர  நிலையை கரெக்ட்டா பயன்படுத்தி இருக்கான் பாரு. எங்கே,எதனால் அடிச்சால் யார் எப்படி விழுவாங்க என்று மிக நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கான்.

பத்து ரூபாய் கொடுக்கும் போது செய்ய முடியாது என்று சொல்லும் மனம் அதுவே கோடி ரூபாய் கொட்டி கொடுத்தால் ஊர் உலகில் இல்லாத சமாதானத்தை எல்லாம் அடுக்கி தள்ளும்.’எல்லோரும் தான் தவறு செய்கிறார்கள்’ என்று ஓசியில் கிடைத்தால் பினாயில் கூட நான்கு பாட்டில் குடிக்க தயங்க மாட்டாங்க.” என்றான் ரஞ்சித் கசப்புடன்.

“ஆமா அதை சொல்லு.இவங்க சுயநலம் பிடித்து செய்யும் ஒவ்வொரு செயலும் இன்னொருத்தர் வாழ்வை அல்லவா பொசுக்குகிறது. மனசாட்சியை வீட்டில் கூட புதைக்காமல் சாக்கடையில் புதைக்கும் புத்தி.

அந்த யாஷ்வி பொண்ணு ரத்த வெள்ளத்தில் உயிர்க்கு போராடியது இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது.

ராணுவத்தில் பணி புரிந்த அப்பா தீவிரவாதிகளால் சுட்டு கொல்ல பட்ட பின் அவர் உடலுக்கு,கண்களில் கண்ணீருடன் சலூட் அடிச்ச குழந்தைகளின்  கதறலுக்கு எந்த கடவுள் தான் பொறுப்பேற்க போகிறார்?

பிணம் தின்னும் கழுகுங்க  கூட  செத்த பிணத்தை தானேடா சாப்பிடுது? நீங்க எல்லாம் சாவடிச்சு அந்த பிணத்தை தானேடா தின்கிறீங்க? உங்களால் ஓடும் ரத்த ஆற்றில் தானேடா உங்க வீட்டின் அடித்தளமே இருக்குது.  நாடு முழுவதையும் சுடுகாடாகிட்டு எதைடா அப்படி சாதிக்க போகறீங்க?   

கோடி பேர் மனசாட்சிக்கு பயந்து ஒழுங்காய் தானேடா வாழ்ந்துட்டு இருக்காங்க.உங்களை மாதிரி விலை போகும் ஒரு சிலரால் அந்த கோடி பேரும் தானேடா பாதிக்க படறாங்க. “என்றான் சரண் மனம் நொந்தவனாய்.  .     

நீதி,நேர்மையை,அரக்க ஜென்மங்களின் பிடியில் இருந்து பொது மக்களை காக்க போராடும் ஒவ்வொரு அதிகாரியின் மன குமுறலாய் ஒலித்தது சரணின் குரல்.

‘இப்படி டயலாக் விடுவதால் இவனுங்க திருந்திட போவது இல்லை. நாடி,நரம்பு,ரத்தம்,சதை,அணு என்று எல்லாவற்றிலும் பணம் ஊறி போய் வெறி பிடிச்சி அலையும் கூட்டத்திடம் நியாயத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது’ என்பது  ரஞ்சித்துக்கு புரிந்தே இருந்தாலும்,இதனால் சரண் மன காயம் ஆறட்டுமே என்று அமைதியாய் நின்றான் ரஞ்சித்.         

தன் மாநிலத்தின் மீது,நாட்டின் மீது உயிரை வைத்து இருக்கும் உண்மையான காக்கி சட்டை போட்ட நிஜ ஆண்மகனின் குமுறல் அது. 

 மப்பிடியில்  ஐந்து பேர் வந்து நிற்க, இவர்கள் கவனம் வந்தவர்கள் மேல் திரும்பியது.

மற்ற அறைகளில் வார்டு பாய்  பாம் வைத்த பின், உள்ளே சென்று வந்தவர்கள் இவர்கள் தான்.இவர்கள் பிடித்து இருந்த பையில் இவன் வைத்த மற்ற நான்கு பாம் கள் டிஸ்போஸ் செய்யப்பட்டு உள்ளே இருந்தது.

சவகிடங்களில் வைக்கப்பட்ட பாம் எடுத்து இவர்கள் கையில் ரஞ்சித் கொடுக்க,அவர்கள் ஐந்தே நிமிடங்களில் அதை செயல் இழக்க வைத்தார்கள்.

“டேக் ஹிம் டு கஸ்டடி.இவன் போன்,இவன் அக்கௌன்ட் நம்பர் எல்லாம் ட்ரெஸ் செய்யுங்க.”என்றான் ரஞ்சித்.

பின்புறம் வந்து நின்ற கறுப்பு நிற ‘அமரர் ஊர்தியில்’ வார்டு பாயை ஏற்றி கொண்டு மற்றவர்கள் கிளம்ப,ரஞ்சித்தும்,சரணும் அங்கேயே நின்றார்கள்.

“இந்த இடத்தை எதுக்கு ரஞ்சித் வெடிக்க வைக்க பார்த்தார்கள்?” என்றான் சரண் ஒன்றும் புரியாதவனாய்.

வீரேந்தருக்கு உதவ சென்ற சரணை நடுவழியிலேயே திரும்ப அழைத்து இருந்தான் ரஞ்சித்.

“நம்ம ஆள் இருக்கான் இல்லை…அவன் தான் உங்க குடும்பத்தை போட்டு தள்ள “சைத்தான்/டெவில்”என்று அழைக்க படும் தீவிரவாதி ஒருவனின் கூட்டதின் உதவியை kapos நாடி இருப்பதாய் தகவல் கொடுத்தான்.

முதலமைச்சரின் நடவடிக்கைக்கு retaliation செய்து,”நாங்க பெரிய பருப்பு”என்று நிரூபிக்கணும் இல்லை. அதான் ஹாஸ்பிடல் மீது குறி. அவன் வைக்க சொன்னது ஹாஸ்பிடலுக்கு தான்.ஆனால் காபோஸ் இந்த ஹாஸ்பிடல் வெடித்தால் இங்கு அவன் செய்து வரும் கொடூரங்கள் வெளியே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும் என்று யோசித்து   ஐந்தாவது பாம் மட்டும் பிரேத கிடங்கிற்கு வைக்க சொல்லி இருக்கிறான்.

அவன் தான் குள்ளநரி ஆச்சே.கோணலாக தானே அந்த மூளை யோசிக்கும்?  இந்த சவ கிடங்கில் தான் காபோஸ் கூட்டம் “ஆர்கன் smuggling” செய்ய கொன்ற உடல்கள் டிஸ்போஸ் செய்யாமல் இருக்கிறது. இதை இவனுங்க சுடுகாடாகவே பயன்படுத்திட்டு இருந்து இருக்கானுங்க.

டாக்டர் யோஜித் தான் இந்த பக்கம் ரவுண்ட்ஸ் வந்து இதை எல்லாம் பார்த்து இருக்கார். கிட்டத்தட்ட 30 பிரேதங்கள் அடையாளமே தெரியலை. உடல் உறுப்புக்கள் எல்லாம் எடுத்துட்டு தான் குடும்பத்திற்கே autopsy செய்து கொடுத்து இருக்காங்க.” என்ற ரஞ்சித்  பேச்சை கேட்ட சரண் அவனே அறியாமல்,”வாட்.” என்று அலறி இருந்தான்.

“உண்மையாகவா சொல்றே ரஞ்சித்.”என்றான் அவன்.

“ஏன் நீங்க இதை எல்லாம் கேள்வி பட்டது இல்லையா என்ன?” என்றான் வியப்புடன் ரஞ்சித்.

“வெளிநாடுகளில் நடப்பதாக படித்து இருக்கேன்.படங்களில் பார்த்து இருக்கேன்.இந்த மாநிலத்தில் அந்த அளவிற்கு எல்லாம் நடப்பதாக தகவல் வந்தது இல்லை.போதை கடல் சுனாமியாய்  பொங்கும்.ஆனால் இப்படி என்று எதிர் பார்க்கவில்லை.”என்றான் சரண்.

“இங்கு மட்டும் இல்லை வெளியே தெரியாமல் எல்லா மாநிலத்திலும் ஹியூமன் ட்ராபிக்கின்,PROSTITUTION, ப்ரோனோக்ராபி,ஆர்கன் SMUGGLING எல்லாம் நடந்துட்டு தான் இருக்கு.இது எல்லாம் மிக பெரிய நெட்ஒர்க் சரண்.இதில் தெரியாமல் பாதி பொது மக்கள் மாட்டியிருப்பார்கள் என்றால் இந்த இன்னும் சிலர் யாஷ்வியை போல் சிக்க வைக்க படுவார்கள்.இவர்கள் டெபிட்கிரெடிட் கார்டு,பேங்க் பாஸ்வர்ட் ,ஆபாச புகைப்படம்,வீடியோ எடுத்து என்று சைபர் கிரைமில் அது தனி வருமானம் பார்ப்பார்கள்.

வெளியே தெரியாத மாதிரி இதை எல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. பாழ் அடைந்த கட்டிடத்தில் எல்லாம் நடத்துவதில்லை.மிக பெரிய அபார்ட்மெண்ட் வாடகை எடுத்து,யாரும் தெரியா வண்ணம் இதை எல்லாம் செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்காங்க.” என்றான் ரஞ்சித்.

“தமிழ்நாட்டில் 300 முதியோரை,-முதியோர் இல்லம் என்று நடத்தி, மொத்தமாய் உடல் உறுப்புகளுக்காக கொன்றார்கள் இல்லை? அந்த கேஸ் என்ன ஆனது?”என்றான் சரண்.

“உயிரோடு இருபவனுக்கே நியாயம் கிடைக்க பத்து இருபது வருடம் ஆகும்.இதில் செத்தவங்களுக்கு நீதி கேட்டு யார் போராட போறாங்க? வழக்கு விசாரணையில் இருக்கு,இருக்கும் …இருந்துட்டே இருக்கும்.

அதை திசை திருப்ப ஐந்து வருடமாய் உள் நாட்டு போர் சிரியாவில் நடந்துட்டு இருக்கு.ஐந்து வருடமாய் அதை கண்டு கொள்ள யாருமே இல்லை. அதற்கு ஐந்து வருடம் கழித்து இப்போ பொங்குனாங்க பாரு சரண். அதில் அப்படியே சொந்த மண்ணில் இறந்த அத்தனை தாய் தந்தையரின்  மரணம் அமுங்கி விட்டது.

எத்தினிக் CLEANSING/இன படுகொலை செய்யப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டு மக்களிடமே, ‘உங்களுக்கு அப்படி எல்லாம் நடக்கவில்லை,அதனால் இதை எல்லாம் ஏற்று கொள்ள மாட்டோம்.’என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறோம் எல்லா மக்களும்,மக்களுக்கான துறைகளும்,தலைவர்கள் என்று பெயர் செய்து கொண்டு சுற்றி கொண்டு இருப்பவர்களும்.

அதில் இதை எல்லாம் எவன் கவனிக்க போகிறான்?வீரேந்தர் அங்கிள்,உங்களை மாதிரி,டாக்டர் யோஜித் மாதிரி இது கடமை அல்ல,’இது தான் சுவாசம்,இந்த பணி தான் இதய துடிப்பு’ என்று இறங்கி வேலை செய்து கொண்டு  இருப்பவர்களால் தான் நீதி,நேர்மை எல்லாம் கொஞ்சமாவது காப்பாற்ற படுகிறது.”என்றான் ரஞ்சித் வேதனையுடன்.

“மருத்துவ துறை தரம் படி இப்படி எடுக்க படும் உறுப்புக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வாய்ப்பு எப்படி ரஞ்சித்?”என்றான் சரண். 

“சாதாரண,ஆக்ஸிடென்ட்  மரணங்களில் நிறைய ஆர்கன் 3-6 மணி நேரம் வரை ‘VIABLE’ தான். நோயால் இறந்து இருந்தால் தான் பிரச்சனை.அதுவும் தொற்று நோய்,வைரல்,ரத்த நோயால் இறந்தவர்களின் உறுப்புகளை இன்னொருத்தருக்கு பொறுத்தவே கூடாது.ஆனால் அது எல்லாம் இங்கே கடைபிடிக்க படுவதில்லை.கள்ள மார்க்கெட்டில் இப்படி வாங்கி பொறுத்தப்படும் உடல் உறுப்புக்கள் உயிருக்கே எமனாய் மாறிய கேஸ் எல்லாம் இருக்கு. ‘சாரிங்க எங்களால் முடிந்ததை செய்தோம்.போய்ட்டார்’ என்று கூல்லாக தான் சொல்வார்கள்.”என்றான் ரஞ்சித்

“இப்படி கள்ள மார்க்கெட்டில் உறுப்புகளை வாங்கியவர்கள் கூட இதற்கு எதையும் செய்ய முடியாது தான்.”என்றான் சரண்.

“எஸ் .உண்மை தான் இங்கு  வாங்கியவர்களும் குற்றவாளிகள் தான்.  எதையும் செய்ய முடியாது.’கள்ள மார்க்கெட்டில் வாங்கினோம்.உயிர் போய்டுச்சு’ என்றா கம்பளைண்ட் கொடுக்க முடியும்?

இது அமேசான்,பிளிப்கார்ட் இல்லையே,பொருளின் தரம் இல்லைன்னா தரமான இன்னொரு பொருள் கொடுங்க என்று கஸ்டமர் கேர்ருக்கு அழைக்க. லம்பா 30-40 லட்சம் கொடுத்துட்டு திரும்பியும் அதே அளவிற்கு செலவும் செய்யவும் முடியாது,தரம் இல்லாத உறுப்புக்கள் வைத்து,உடல் நலம் மோசமாகி ரேகேவர் ஆகாமல் உயிர் இழந்தாலும் யாரையும் குறை சொல்ல வும் முடியாது.              

 பிரேத பரிசோதனை என்று உள்ளே நம் உறவினரின் உடலை எடுத்து போகிறார்கள் என்றால், எதை எடுக்க முடியுமோ எடுத்துட்டு,இதை ‘ஹார்வெஸ்ட்’ என்று சொல்வார்கள். விவசாயத்தில் அறுவடை மாதிரி உடல் உறுப்புகளும் மனிதனிடம் இருந்து அறுவடை செய்துட்டு  வெள்ளை துணியில் உடலை சுற்றி நம்மிடம் கொடுக்கிறாங்க என்பதை எல்லாம் அந்த துக்க நேரத்தில் நாம் என்ன ஆராய்ந்து கொண்டா இருக்க போகிறோம்? கிட்னி எல்லாம் இறந்த 24 மணி நேரத்திற்கு கூட VIABLE ஆக இருக்குமாம்.செம்ம பணம் புழங்கும் தொழில்.           

உயிரோடு இருப்பவர்களை கடத்தி வந்து கசாப்பு கடைக்காரன் ‘butchering/சிதைப்பது’  போல் ,உயிர் இருக்கும் போதே துண்டு போடுவது எல்லாம் வெளிநாடுகளில் பார்த்து இருக்கேன் சரண்.அதே தான் இங்கே நடந்துட்டு இருக்கு.”என்ற ரஞ்சித் பேச்சை கேட்டு சரண் அதிர்ந்து நின்றான்.

“இது இதுவரை எங்க கவனத்திற்கு வரவேயில்லையே ரஞ்சித். இது போதை மருந்து மட்டும் தான் என்று பார்த்தால் நீ என்னென்னவோ சொல்லிட்டு இருக்கே.”என்றான் சரண் கேட்டதை ஜீரணிக்க முடியாதவனாய்

“அதற்கு தான் இவர்கள் தேர்ந்து எடுப்பது அனாதைகளை. ‘low ரிஸ்க் individual’ என்று இவர்களை சொல்வோம்.அதாவது இவர்கள் காணாமல் போனால் கூட அதை பற்றி கவலை பட யாருமே இருக்க மாட்டார்கள்.

அறுத்துட்டு இது போல் பிண வரைகளில் போட்டு இருப்பார்கள். செய்த குற்றங்களுக்கு சாட்சியாய் இருந்த தடயங்களை அழிக்க போய்,நமக்கு அவனே எல்லாத்தையும் கையில் தூக்கி கொடுத்துட்டான். போதை மருந்து மட்டும் அல்ல,ஆர்கன் smuggling மூலமாகவும் அவனுக்கு பணம் கொட்டி கொண்டு இருக்கிறது. “என்றான் ரஞ்சித்.

“காபோஸ் பற்றி எதாவது நியூஸ் தெரியுமா?அவன் யார் என்ன என்று? இங்கே விசாரித்தால் அவன் பெயர் மட்டும் தான் தெரியுது. எங்கேயுமே அவன் போட்டோ வேறு தகவல் கிடைக்கலை. மெக்ஸிகோவில் இருந்து வந்தவன் என்று மட்டும் தெரியுது.” என்றான் சரண்.

“ஓஹ் வீரேந்தர் அங்கிள் கிட்டே ரிப்போர்ட் கொடுத்து இருக்கோமே அதை அவர் உங்களுக்கு கொடுக்கவில்லை போல் இருக்கு.இட்ஸ் ஒகே.உங்களுக்கும் தெரிந்து இருப்பது நல்லது தான்.”என்றான் ரஞ்சித்.                     

“உங்க ஆன்ட்டி தன்வியோட அப்பா மேஜர் அர்ஜான் தான் மெக்ஸிகோவில் இந்த கும்பலை பிடிச்சுட்டு இருக்கார் என்று போட்டு கொடுத்தவன் அவன். இதற்கும் வயசு அப்போ அவனுக்கு  17-20குள்  என்று  தகவல்.அந்த இளம் வயதில் ரெண்டு,மூன்று அதிகாரிகள் குடும்பம் முழுதாய் கருவறுக்க காரணமாய் இருந்தவன்,இத்தனை வருடத்தில்   இன்னும் அட்வான்ஸ் ஆகி இருக்கான்.

அவன் தன்னை எங்கேயுமே வெளி படுத்தி கொள்வதில்லை. அவனின் முக்கிய அடியாள் ஒருவனை பிடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட மெக்ஸிகோவில் இருந்தே அவனுடன் இருப்பவன். ஆனால் அவனுக்கே அவன் யார் என்று தெரியவில்லை என்றால் பார்த்துக்கோ”என்றான் ரஞ்சித்.

“ஹௌ திஸ் இஸ் possible?”என்றான் சரண்.

‘இத்தனை வருடம் யாருக்குமே தெரியாமல் ஒருவனால் எப்படி மறைந்திருக்க முடிகிறது?’ என்ற பூதாகரமான கேள்வி சரணை குழப்பி அடித்தது.

“அவன் ஏன் மறைந்து இருக்கான் என்று நினைக்கறீங்க?அப்படி யோசிப்பது தான் தவறே.he is hiding in plain sight.நம்ம கண் முன்னரே, நம்முடனே,நம்மில் ஒருவனாய் நடமாடிட்டு இருக்கான்.இவன் நமக்கு காட்டும் போலி முகம்,அதாவது அவன் நடவடிக்கை ஒன்றாய் இருக்கும்,காபோஸ் என்ற தலைவனாய் மாறும் போது வேறு விதமான  கேரக்டர் வெளிப்படும்.”என்றான் ரஞ்சித்.

“டாக்டர் jekkyil அண்ட் hyde மாதிரியா?”என்றான் சரண்.

“அப்படியும் சொல்லலாம்.எல்லா சாதாரண மனிதர்களையும் கூட இதற்கு உதாரணமாய் சொல்லலாம். வீட்டிற்குள் ஒரு விதம்,வெளியே பழகும் விதம்,நண்பர்களிடம் ஒரு விதம்,அலுவலகத்தில் ஒரு விதம் என்று எல்லா மனிதர்களும் தங்களை தாங்களே இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டு தான் இருப்பார்கள்.இவனும் அதை தான் செய்து கொண்டிருக்கிறான். இவன் தான் காபோஸ் என்று சத்தியமே செய்தலும் கூட யாரும் நம்ப முடியாத போலி முகத்திரையுடன் இந்த சமூகத்தில் உலவி கொண்டு இருக்கிறான்.

இன்னும் சொல்ல போனால் “ஓங்கோல் கித்தா” என்ற தெலுங்கு படம். அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் கேரக்டர் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுமோ அதே தான் இங்கு.”என்றான் ரஞ்சித்   

“ஹ்ம்ம்… “ஹரோல்ட் ஷிஃப்மன்/HAROLD SHIPMAN” இங்கிலாந்து நாட்டு டாக்டர் ஒருவர்,’God complex /தான் தான் கடவுள்’ என்று வெறி பிடித்து 300 நபர்களை கொன்ற மாதிரி போல் இருக்கு இவன்.அவனை  அர்ரெஸ்ட் செய்த போது,அவன் தான் இத்தனை கொலைகளை செய்து இருப்பான் என்று யாராலும் நம்பவே முடியவில்லை.

‘அந்த டாக்டர் கடவுள் மாதிரிங்க எங்களுக்கு.நீங்க தப்பான ஆளை பிடித்து இருக்கீங்க’ என்று பல வருடம் மக்கள் சொல்லும் அளவிற்கு அவர்களை நம்ப வைத்து இருக்கிறான்.ஆனா இதுக்கெல்லாம் தனி மெண்டாலிட்டி வேண்டும் இல்லை.”என்றான் சரண்.     

யாரை பற்றி இவர்கள் பேசி கொண்டு இருந்தார்களோ அந்த காபோஸ் அந்த நொடி திகைத்து போய் இருந்தான்.கை பிடித்து இருந்த ரெஸிவேரை தவற விட,  கடைசி நொடியில் பாய்ந்து பிடித்தான்.

“என்ன சொன்னே கம் அகைன்.”என்றான் தன் காதால் கேட்டதை இன்னும் நம்ப முடியாதவனாய்.

“சார்….அர்ஜுன் குடும்பம் எங்கே போனாங்கனே தெரிலை சார்.”என்றது எதிர் பக்கம்.

“என்னடா சொல்றே?அந்த கிழவியை கூட்டிட்டு பதிண்டா ஹாஸ்பிடலுக்கு  தானேடா வந்துட்டு இருந்தாங்க. நீயும் பின்னால் பாலோவ் பண்ணிட்டு தானே இருந்தே?”என்றான் காபோஸ்.

“அமாம் சார் அவங்க கிராமத்தை விட்டு வெளியே வரும் வரை பாலோவ் செய்துட்டு தான் சார் இருந்தேன்.ஹைவெயில் டோல் பூத் இருக்குல்ல சார்,அங்கே என் வண்டி ட்ராபிக்கில் சிக்கிடுச்சு.எனக்கு முன்னால் இருந்த வண்டி ஸ்டார்ட் ஆகவேயில்லை.

 டோல் தாண்டிய உடன் நான்கு புறம் போகும் பாதை சார்.கிளம்பிய  மூன்று வண்டிகளும் ஒவ்வொரு திசையில் பிரிந்து போய்டுச்சு சார்.”என்றான் பின் தொடர்ந்து சென்றவன்.

 “அஞ்சாதே” படத்தில் வரும் கிளைமாக்ஸ் ஸீன் போல் தான் அங்கு நடந்தது.எப்படி சிறுமிகளுக்கு காவல் இருக்கும் கறுப்பு சட்டை போட்ட மொட்டை,ஒரு சிறுமி  இப்படி ஓடியதும் அவள் பின்னால் ஓடி , ரெண்டாவது சிறுமியையும் கோட்டை விட்டு நின்று,  அந்த பக்கம் இருந்த சிறுமியையும்  கோட்டை  விட்ட கதை தான் நடந்தது.

அந்த ஸீன்  அப்படியே இங்கே டோல் பூத்திருக்கும் பொருந்தும்.

டோல் பூத் அருகே மூன்று இடத்திலும் இவனுக்கு முன் கார் ஏதாவது ஒரு பிரச்சனையில் நின்றது. ஒரு  லேன் காரை பைக்காரன் இடித்தான் என்று அங்கேயே சண்டை,அந்த வழியில் போக முடியவில்லை.இவன் நின்ற லேன் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.இன்னொரு லேன் கார்காரன் பூத்காரனுடன் சண்டையில் இருந்தான்.

அர்ஜுன் வீட்டு மூன்று கார்களும் டோல் தாண்டி சென்று விட,இவன் கார் பின் தொடர்ந்து போக வழியே இல்லாத நிலை.வி’டுவோமா’ என்று இறங்கி பின்னால் ஓட ஆரம்பித்தான்.வழியில் வரும் எந்த காரையாவது துப்பாக்கி முனையில் திருடலாம் என்ற எண்ணம்.

அங்கே தான் அது நடந்தது.இவன் பின்னால் ஓட அர்ஜுன் வீட்டு மூன்று கார்களும் வேகம் எடுத்து மூன்று திசைகளில் பிரிந்து சென்றது.எந்த காரின் பின் செல்வது என்று புரியாமல் நடு ரோட்டில் அந்த மொட்டை கோட்டை விட்டது போல் கோட்டை விட்டு தலையில் கை வைத்து நின்றான் காபோஸ் அடியாள்.

நடந்ததை கேள்வி பட்டு ,பொத்தென்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் காபோஸ்.ஆக மொத்தம் திட்டம் போட்டு அழகாய் அவனிடம் இருந்து தப்பித்து இருக்கிறது அர்ஜுன் குடும்பம்.

ராஷ்மிக்கு massive ஹார்ட் அட்டாக்,பிழைக்க முடியாது,ஹாஸ்பிடல் போவது என்ற எல்லாமே பக்கா ஸ்கிரிப்ட்.

Deceiver got deceived.  

காபோஸ் அர்ஜுன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து இது நாள் வரை அவர்களை ஏமாற்றி கொண்டு இருந்தால்,இன்று அவனுக்கு செம்ம ஆப்பு வைக்க பட்டு இருந்தது. 

இவர்கள் அர்ஜுன் குடும்பத்தை டார்கெட் செய்து விட்டார்கள் என்ற விஷயமும் தெரிந்து விட்டது.

‘எந்த தாக்குதலிலும் “element ஆப் surprise”என்று சொல்வார்கள். முதலில் தாக்குபவர்களுக்கு  கிடைக்கும் பலன் அது.

தாக்கப்படும் எதிராளி சமாளிப்பதற்குள் தேவையான உயிர்களை பறித்து விடுவது.இதை தான் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ இந்தியாவின் மீது பிரயோகிப்பவர்கள் பயன்படுத்தும் யுக்தி.

“strike the opponent where least expected” என்று 2500முன் சீனாவின் ஜெனரல் Sun Tzu எழுதிய “art of war””என்ற புத்தகத்தில் போர் தந்திரமாய் கொடுத்து உள்ளார்.

‘புல்வாமா’, ‘யூரி’ போன்ற இடத்தில் நடந்தது இது தான்.ராணுவ வீரர்கள் காவல் காக்கும் இடங்களை தாக்காமல்,எதிர்பாராத இடங்களை தாக்கி அழிப்பது, மிகுந்த உயிர் சேதம்,பொருள் சேதம் விளைவிப்பது இதன் நோக்கம்’ என்று தீவிரவாத குழு தலைவன் ‘டெவில்’ சொன்னதை வைத்து தான் காபோஸ் அர்ஜுன் குடும்பத்திற்கு நேரம் குறித்தது. 

அதே ஸ்கிரிப்ட் பயன்படுத்த துணிந்த கபோஸிற்கு கிடைத்தது அர்ஜுன் குடும்பம் ஸ்பெஷலாய் கிண்டி கொடுத்த ஹல்வா.  அதை இனி மேல் அர்ஜுன் குடும்பத்திடம் செய்ய முடியாது. ஒட்டுமொத்த குடும்பமும் தலைமறைவு. அர்ஜுன்,வீரேந்தர்,சரண் இருந்த இடத்தில் இருந்தே தங்கள் குடும்பத்தை பாதுகாத்து விட்டார்கள்.

இந்த மாஸ்டர் பிளான் யாருடையது?

இந்த திகைப்பில் இருந்தே அவனால் வெளிவர முடியாமல் அடி மேல் அடி எப்படி விழுகிறது என்று தலையை அவன் பிய்த்து கொண்டு இருக்க,அடுத்த ஷாக் வந்து சேர்ந்தது.

“நாங்க வைத்து பாம் இன்னேரம் வெடித்து இருக்க வேண்டும்.ஏன் வெடிக்கவில்லை?’என்றான் தீவிரவாத குழு தலைவன் கேள்வியோடு.

“ஒன்றல்ல,ரெண்டல்ல,மொத்தம் ஐந்து பாம். ஒன்று செயல் இழந்து விட்டது என்று எடுத்து கொண்டாலும் ஐந்துமா வெடிக்காமல் இருக்கும்?என்ன ஆச்சு.?”என்று அவன் அந்த பக்கம் உறுமி கொண்டு இருந்தான்.    

“பார்த்து சொல்றேன்”என்று இவன் இன்னொரு ஆளை அனுப்பி வைக்க,சென்றவனிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லை.

“என்ன ஆச்சு?”என்றான் தீவிரவாத தளபதி.

“விசாரிக்க ஆள் அனுப்பினேன்.அவனிடமிருந்து தகவல் இல்லை.என்ன என்று புரியவில்லை.”என்றான் காபோஸ்.

“எப்படி தகவல் வரும்?RAW,ஸ்பெஷல் கமாண்டோஸ் உள்ளே இறங்கி இருக்கும் போது தகவல் எப்படி வரும்?உன் ஆட்கள் அவர்களிடம் மாட்டி சிறையில் கம்பி களை 1,2,3 என்று எண்ணிட்டு இருக்காங்க.

ஏற்கனவே வார்னிங் கொடுத்தோம் தானே? உன் ஆட்களில் ஒருவன் போலீஸ் இன்பார்மெர் என்று….இனி எதுக்கும் எங்களை கூப்பிடாதே.நீ எல்லாம் தெருவை கிளீன் செய்ய கூட லாயக்கு இல்லாதவன்.”என்று எதிர் முனை துண்டிக்க பட வாழ்க்கையில் முதன் முறையாக பயந்து போய் அமர்ந்து இருந்தான் காபோஸ்.

‘பிஞ்சு போன செருப்பால் அடித்த மொமெண்ட்’ என்று இதை சொல்லலாமா இல்லை ‘வல்லவனுக்கு வல்லவன்’ இவையகத்தில் உண்டு என்று சொல்லலாமா? 

 ஏதோ நினைவிற்கு வர, அலறி அடித்து எழுந்த காபோஸ் மற்றவர்களை மானிட்டர் செய்யும் அறைக்கு பேய் ஓட்டம் ஓடினான்.

“தன்வி எங்கே இருக்கா?’என்று அவன் இன்னொரு அறையில் இருந்து இன்டெர்காம் வழியாக காபோஸ் அலற, மானிட்டர் பார்த்து கொண்டு இருந்த அவன் ஆட்கள் திகைத்தார்கள்.

தன்வியை வேவு பார்த்து கொண்டு இருந்த ஒருவன்,”சார் மேடம் இப்போ தான் வெளியே போனாங்க.பின் தொடர்ந்து நம் ஆள் போய்ட்டு இருக்கான் சார்.”என்றான்.

“அவனுக்கு கால் செய்து விசாரி.”என்றான் காபோஸ் செம கோபத்துடன்.

வேவு பார்க்க பின்னால் சென்ற ஆளுக்கு கால் அடிக்க,”சார் மேடம் கார் இப்போ அம்ரிஸ்டர் நோக்கி போய்ட்டு இருக்கு சார்.நாங்க பின்னால் போய்ட்டு தான் இருக்கோம்.”என்றான் அவன்.

“பினிஷ் ஹேர்/Finish her.”என்று காபோஸ் இங்கிருந்து கத்த,அடுத்த நொடி முன்னால் சென்ற காரை வேகமெடுத்து துரத்தியது இவன் ஆட்கள் கார்.

ரெண்டு கார்களும் சமமாய் செல்லும் போது ஒரு துப்பாக்கி நீண்டது தன்வி உயிர் குடிக்க.

“டேய் சரியான வியூ தெரியலை.முன்னால் போ.”என்று காரின் பின் சீட்டில் இருந்து துப்பாக்கியை தன்வியை நோக்கி நீட்டியவன் சொல்ல கார் இன்னும் வேகம் எடுக்க,ட்ரிக்கரில் விரல் வைத்தான் தன்வியின் உடலை துப்பாக்கி குண்டுகளால் சல்லடை ஆக்க.

தன்வியின் வாழ்வில் கடைசி நொடி.துப்பாக்கி ட்ரிக்கரை விரல் அழுத்தும் கடைசி நொடியில் அலறினான் துப்பாக்கியை நீட்டியவன்.

இவன் சுடுவதற்குள் இவனை சுட்டு இருந்தார் காரில் இருந்த தன்வி –போலி தன்வி.

ரஞ்சித் கமாண்டோஸ் குழுவின் பெண் அதிகாரி.

அடுத்த குண்டு காரினை ஒட்டி கொண்டு இருந்தவன் மேல் பாய,உயிர் விட்டவனின் கண்ட்ரோல்லில் இருந்து எகிறிய கார்,கார்கள் என்றால் பறக்கவும் கூடும் என்று நிரூபித்து,அருகே இருந்த டிவைடரில் மோதி அப்பளமாய் நொறுங்கியது.      

ஆக மொத்தத்தில் தன்வி வீட்டில் இருந்து கிளம்பிய காரில் தன்வியே இல்லை. அவர் அந்த காரில் ஏறவே இல்லையா இல்லை டோல் பூத்தில் ஆடப்பட்ட கண்ணாமூச்சி போல் இங்கேயுமா?

அதற்குள் ஹாஸ்பிடலில் பேட்டி முடிந்து இருக்க,ஹாஸ்பிடலில் தாயை காண கார் ஏற விரைந்த அர்ஜுன், ப்ரீத்தி,அமன், ஜெஸ்ஸி,தீப், அமர்நாத்தை தடுத்தான் ரஞ்சித்.

“ஹாய் ப்ரோ.இப்போ நீங்க இருக்கும் பதட்டத்தில் வண்டி ஓட்ட கூடாது.நான் ஓட்டுகிறேன்.”என்றவன் கை நீட்ட அவன் சொன்னதில் இருக்கும் உண்மை உணர்ந்த அர்ஜுன் கார் சாவியினை ரஞ்சித் இடம் கொடுத்தான்.

தன் தாய் ராஷ்மிக்கு ‘ஹார்ட் அட்டாக்’ என்று கேள்வி படத்தில் இருந்தே அவன் மனம் நிலையாய் இல்லை.போன வாரம் தானே மாஸ்டர் ஹெல்த் செக் அப் குடும்பத்தில் அனைவருக்கும் செய்த போது கூட “உடல் நலத்தோடு இருக்கிறார்’என்ற மருத்துவ அறிக்கை தானே வந்தது.

உடனே கிளம்பி விட தான் அவன் முயன்றது.ஆனால் அவர்கள் குடும்ப நண்பரை,அவனுக்கு தந்தை,குரு ஸ்தானத்தில் இருப்பவரை அல்லவா விஷயம் அறியாத ஊடகமும்,பொது மக்களும் தாளித்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த நொடி மாநில மக்களை தன குழந்தையாய் பாவிக்கும் அந்த தந்தை முக்கியமாய் போனார்.’For the greater good’ என்பார்கள் அதற்காக, அவன் அங்கேயே நிற்க வேண்டியதாகி விட்டது.வீரேந்தரின் மகன்கள் அனைத்தையும் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அர்ஜுன் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பாமல் இருந்தது.

பேட்டி முன்பும் அது முடிந்த பிறகும் கூட அவனும்,அவனோடு இருந்த மற்றவர்களும்   வீட்டினர் அனைவரின் மொபைல் எண்ணிற்கு விடாமல் ட்ரை செய்து கொண்டே இருந்தார்கள்.எடுத்து பேசி இருந்தாலாவது இவர்கள் மன பதைப்பு நின்று இருக்கும்.ஆனால் இவர்கள் கார் ஏற செல்லும் வரை யாரின் மொபைல் எண்ணும் அழைப்பை ஏற்கவேயில்லை என்றதும் இவர்களுக்கு டென்ஷன் எக்குத்தப்பாய் ஏறியது.

அந்த நிலையில் கார் ஓட்ட அர்ஜூனே தயங்கி கொண்டு தான் இருந்தான்.கடவுள் அனுப்பியது போல் ரஞ்சித் கார் ஓட்ட முன் வர அவனுக்கு நிம்மதியாய் இருந்தது.

அனைவரும் காரில் ஏறி விட, ரஞ்சித் காரை கிளப்பினான்.கார் ஓட ஆரம்பித்தது ஹாஸ்பிடலை நோக்கி இல்லை,பதிண்டா ஊருக்குள் அர்ஜுனின் “tulip inn “ஹோட்டலை நோக்கி.

ஹாஸ்பிடலுக்கு போங்க ரஞ்சித்.எங்கே போறீங்க?அம்மாவை பார்க்க ஹாஸ்பிடல் போகணும்.”என்றான் அர்ஜுன் வழி மாறி போய் கொண்டு இருப்பதை கண்டு.

பதிண்டா அரசாங்க மருத்துவமனையை தாண்டி தான் தனியார் மருத்துவமனை ஒன்று இருக்கிறது. ஒருவேளை ராஷ்மி அங்கே அனுமதிக்கபட்டு இருப்பார் என்று நினைத்து கொண்டு இருந்தனர், இவர்கள் குடும்பம் ராஷ்மியோடு அரசாங்க ஹாஸ்பிடலுக்கு அது வரை  வரவில்லை என்றதும். 

“அவங்களை பார்க்க தான் அர்ஜுன் போகிறோம்.”என்றான் ரஞ்சித் அலட்டி கொள்ளாமல்.

“இந்த பக்கம் போனால் எந்த ஹாஸ்பிடலும் வராது ரஞ்சித்.உங்களுக்கு வழி தெரியவில்லை என்று நினைக்கிறன்.அந்த பிரைவேட் ஹாஸ்பிடல் இந்த பக்கம் இல்லை.”என்றான் தீப்.

“சரியான வழியில் தான் போய் கொண்டு இருக்கிறோம்.உங்க அம்மா ராஷ்மி கிட்டே உங்களை சேர்ப்பது என் பொறுப்பு.”என்ற ரஞ்சித்,”உங்க மொபைல் எல்லாம் இந்த கவரில் போடுங்க.”என்று பாலீதீன் பை ஒன்றை நீட்ட,அங்கு இருந்தவர்கள் எதற்கு இது என்று புரியாமல் திகைத்தாலும் அவன் வேலையின் மீது இருந்த நம்பிக்கையில் மறு கேள்வி கேட்காமல் பையில் தங்கள் மொபைல்கள் போட்டு அவனிடம் கொடுத்தார்கள்.

ஒரு கணம் ஓரம் கட்டி ஒட்டி வந்த காரை நிறுத்திய ரஞ்சித்,கார் விண்டோ திறந்து அந்த பையினை நீட்டி பிடிக்க,பின்னால் வந்த இன்னொரு காரில் இருந்து அதை பெற்று கொண்டான் சரண்.ரஞ்சித் தலையாட்ட சரணும் தன் தலையை  அசைத்து விட்டு தன் காரினை யு டர்ன் எடுத்து போலீஸ் தலைமையகம் நோக்கி விரைந்தான்.

“வீர்ஜி …வீர்ஜி …”என்று உடல் நல குறைவுடன் இருக்கும் தங்கள் அன்னையை கூட பார்க்காமல் எங்கோ போய் கொண்டு இருக்கும் சரணை தடுத்து நிறுத்த முயன்றான் அர்ஜுன்.

“என்ன நடக்குது ரஞ்சித் இங்கே?அண்ணாவை எங்கே அனுப்பறீங்க? எங்க அம்மா அங்கே சீரியஸ்ஸா இருக்காங்க.இப்போ அண்ணா அவங்க கூட இருக்கணும்.”என்றான் அர்ஜுன்                                                                    

“கொடுத்து இருக்கும் வேலை முடிந்ததும் அவர் வருவார்.”என்றான் ரஞ்சித் பட்டும் படாமலும்.

“இப்போ எங்கே போறோம் தம்பி.”என்றார் அமர்நாத்.

“ஹாஸ்பிடலுக்கு தான் அங்கிள்.”என்றான் ரஞ்சித் .

எத்தனை முறை,எத்தனை பேர் மாற்றி மாற்றி கேட்ட போதும் அவன் பதில் “ஹாஸ்பிடலுக்கு ” என்பது மாறவே இல்லை.

இவனிடம் விஷயத்தை வாங்குவதற்கு பதில் பாறையில் போய் தலையை ‘நங்கு நங்கென்று ‘ முட்டி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டனர்.

இவர்கள் டென்ஷன்னில் இருக்க,அந்த காரில் கூல்லாக இருந்தது ரஞ்சித்தும்,ப்ரீத்தியும் மட்டுமே.

ரஞ்சித் வந்து கார் சாவியை கேட்டதும் ஒருமுறை சுருங்கிய அவள் புருவம் அவள் தீவிர யோசனை செய்ய ஆரம்பித்து விட்டாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

வெகு நேரமாய் அவள் வாய் மூடி விட அவள் கண்களும்,மூளையும்’ ‘சிட்டி’  ரோபோட்டை விட வெகு வேகமாய் வேலை செய்து கொண்டிருந்தது.  

பயணம் தொடரும்…

error: Content is protected !!