UUP–EPI 12

அத்தியாயம் 12

ஒக்சிதோசின்(oxytocin) எனும் ஹார்மோன் குழந்தைப் பிறப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் தான் பிள்ளைப் பிறக்க ஏற்படும் வலியை(contraction) வர வைக்கிறது. அதோடு பால் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த ஹார்மோனை லவ் ஹார்மோன் என கூட அழைக்கிறார்கள்.

அன்று

“அண்ணா!”

“அண்ணான்னு கூப்புடாதடா கண்ணா!”

“அப்பல இருந்தே இப்படித்தானே கூப்புடறேன்! பின்ன எப்படி கூப்படனும்?”  என கேட்டான் கண்ணன்.

அவனுக்கு தன் அம்மா, தமக்கை, கதிர் தவிர மற்றவர்களிடம் பேசும் போது சரளமாக பேச்சு வராது. இவ்வளவு நாள் கதிரிடம் பழகி கூட அவன் முன்னே உடற்பயிற்சிக்காக கூட சட்டையைக் கழட்ட மாட்டான். கதிரும் சண்முவுக்கு வாக்கு கொடுத்திருந்தப்படி அடிக்கடி இவனிடம் பேசி அவனது கூச்ச சுபாவத்தில் இருந்து வெளி கொண்டு வர முயன்று கொண்டு தான் இருந்தான். நோஞ்சானாக இருந்தவனை தன்னோடு உடற்பயிற்சிக்கு அழைத்துப் போவான். அவனும் ஆர்வமாக அதில் எல்லாம் சேர்ந்துக் கொள்வான். ஆனாலும் அமைதிதான்.

புத்தி மட்டுக் கற்பூர புத்தி கண்ணனுக்கு. பள்ளியில் சிறந்த மாணவன். ஆனால் குறிப்பிட்டவர்களிடம் மட்டும்தான் நட்பு. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பான். இவன் அமைதிக்காகவே பள்ளியில் பலர் வாண்டட்டாக வந்து வம்பிழுப்பதும் உண்டு. பின் கதிரால் நையப் புடைக்கப்பட்டு அவன் இருக்கும் திசைக்கே கும்பிடு போடுவதும் உண்டு.

“எப்படி கூப்புடறதுனா என்னன்னு சொல்ல! சரி அண்ணானே கூப்டு! வெறும் வாய் வார்த்தைதான் அண்ணா நொண்ணாலாம். மனசுக்குள்ள அண்ணான்னு நினைக்கக் கூடாது மாமா மாதிரி நினைக்கனும்” என சொன்னவனை நிமிர்ந்துப் புரியாமல் பார்த்தான் கண்ணன்.

“என்னப் பார்க்கற? அதெல்லாம் அப்படித்தான். இதெல்லாம் புரிஞ்சுக்க நீ இன்னும் வளரனும்!”

“அண்ணா!”

“என்னா?”

“எனக்கு ஏன் இன்னும் மீசை வரல?”

“வரும்டா டேய்! இப்போத்தானே பதினாலு வயசு. என்னை மாதிரி வளர்ந்ததும் மீசை வரும், தாடி வரும், குரலும் மாறி போகும்” என சொன்ன கதிர் தனது அரும்பு மீசையை நீவி விட்டுக் கொண்டான்.

தன் வீட்டில் இருக்கும் குட்டி உடற்பயிற்சி அறைக்கு எப்பொழுதும் போல கண்ணனை அழைத்து வந்திருந்தான் கதிர். பயிற்சி முடிந்து இருவரும் அங்கேயே அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தார்கள். பார்வதிக்கு கண்ணன் வருவதும் பிடிக்காது. அதனாலேயே அவர் இல்லாத பகல் சமயங்களில் அழைத்து வருவான் கதிர்.

“இல்லண்ணா, என் கிளாஸ்ல என்னை அழகி அழகின்னு கூப்டு கிண்டலடிக்கிறாங்க. மனசு கஸ்டமா இருக்கு”

கதிர் தன் முன்னே அமர்ந்திருப்பவனை ஊன்றிப் பார்த்தான். நல்ல அழகன்தான் கண்ணன். குழல் ஊதும் கண்ணனைப் போலவே பேரழகு கொட்டிக் கிடந்தது. பெண்ணாய் பிறந்திருந்தால் பல ஆண்களை வசீகரித்திருப்பான்.

“மொழு மொழுன்னு இருக்கடா! அதான் அப்படி சொல்றானுங்க! ஓவரா பேசுனா, எவன்னு கைக்காட்டு! தட்டி தூக்கிருறேன். நீ கவலைய விடுடா! இன்னும் ரெண்டே வருஷம் பொறுத்துக்கோ! முகம், உடம்புன்னு முடி முளைச்சு கரடி மாதிரி ஆகிருவே! சரியா?” என பதினான்கு வயது கண்ணனை சமாதானப்படுத்திய கதிருக்கு கீச் கீச் குரல் போய் முரட்டு ஆண் குரல் வந்து இரு வருடம் ஆகி இருந்தன.

“நெசமா மீசை வந்துருமாண்ணா?”

“ஆமாடா!”

“நெசமா மென்மையான இந்தக் குரல் போய் கரகரன்னு உங்க குரலு மாதிரி வந்துருமாண்ணா?”

“ஏன்டா என் குரலு அவ்ளோ கரகரன்னா இருக்கு?” என கேட்டவன் ஓவென கத்தி தானே தன் குரலை கேட்டு, அவ்வளவு மோசமில்லை என சமாதானமடைந்தான். இவன் செய்த சேட்டையைப் பார்த்து கண்ணனுக்கு குபீரென சிரிப்பு வந்தது.

“சொல்லுங்கண்ணா!” சிணுங்கினான்.

“ஆமாடா ஆமா! ஆஷா போஸ்லே குரலு போயி அண்டங்காக்கா குரலு வந்துரும். சந்தோஷமா?”

ஆமென தலையாட்டிய கண்ணன் மலர்ந்து சிரித்தான்.

பின் இருவரும் அவன் வீட்டுக்குக் கிளம்பினார்கள். பார்வதி கதிருக்காக பைக் வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த பைக் வீட்டுக்கு வந்து இப்பொழுதுதான் இரு வாரம் ஆகி இருந்தது. பைக் வந்ததும் பரமு செய்த அலப்பறை இருக்கிறதே!!!

“எம் மவேன் பைக்கு ஓழ்ட்ட போலான்! நான் பின்னால ஒக்காந்துக்கினு

“போவோமா ஊழ்கோலம்

ப்பூலோகம் எங்கேங்கோம்”

அப்டினு பாட போலேன்” என்றவர் பார்வதி அங்கு வந்து நிற்க ஈயென இளித்து வைத்தார்.

“பாழு ஒன்ன டபுல்ஸ்சு ஏத்திக்குவா ஜொல்லு? ஓன் லவுண்டு போலாமா?”

“உனக்கு தண்ணியப் போட்டாலே எல்லாம் டபுள் டபுள்ளா தான் டெரியும். சை! தெரியும்! இந்த லட்சணத்துல என்னை டபுள்ஸ் ஏத்தனுமா? போயா போய் கவுந்தடிச்சுப் படு போ!” என பார்வதி காய

“ஜொன்னது நீதானா ஜொல் ஜொல் ஜொல் என்னுயிழே!” என பாடியபடியே படுக்கையை விரித்தார் பரமு.

சின்ராசுவின் அப்பா கதிருக்கு அருமையாக பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். இரண்டு நாட்களிலேயே அழகாய் ஓட்டக் கற்றுக் கொண்டான் கதிர். தானே ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் அவன் செய்த முதல் காரியம் தனது உள் மன பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சண்முவை டபுள்ஸ் ஏற்றிக் கொண்டதுதான்.

சண்மு கோயிலுக்குப் போய் வரும் சமயம், ஆலமரத்தடியில் காத்திருந்து ஹாரன் அடித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் சண்மு. ஓடி அவன் அருகில் வந்தவள்,

“டேய் கதிரு, பைக் ஓட்ட ஆரம்பிச்சிட்டியாடா? கண்ணா சொல்லி நீ பைக் வாங்கியிருக்கன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு” என ஆரம்பத்தில் குதூகலித்தவள் பின்பு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.    

ஊட்டியில் இருந்து வந்ததில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக சண்முவிடம் இருந்து விலக ஆரம்பித்திருந்தான் கதிர். பள்ளி முடிந்துக் கூட அவளுடன் வீட்டுக்குப் போகாமல் போக்கு காட்டினான். என்னவென்று அவள் கேட்ட, எக்ஸ்ட்ரா கிளாஸ், பந்து விளையாட்டு, வாலிபால் என கதை கதையாய் விட்டான்.

அவனுக்கோ தன் மேலேயே நம்பிக்கை இல்லை. சண்முவைப் பார்க்கும் போதெல்லாம் உடலில் என்னென்னவோ மாற்றங்கள். அவள் கைப்பிடிக்க வேண்டும், கட்டிக் கொள்ள வேண்டும், சிரிக்க வேண்டும், பேச வேண்டும், அவளுடன் தனித்திருக்க வேண்டும் இப்படி எண்ணங்கள் பேயாய் அவனைத் துரத்தின. வெளியே சொல்ல வெட்கமாய் இருந்தாலும், சண்முவின் கன்னத்தில் ஆக்சிட்டென்டாகவாவது தன் உதடு படாதா என ஏங்க வேறு ஆரம்பித்து விட்டான் கதிர். அதுவே அவனுக்குப் பெரிய இம்சையாய் இருக்க, அவளிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தான். நட்பாய் அவள் கைப்பிடிக்க, இவன் ஏடாகூடாமாய் எதையாவது செய்து நட்பை இழந்து விடக்கூடாதே என பயம் வேறு. நட்பு, காதல், அன்பு, ஆசை, இன்பமான அவஸ்தை என தத்தளித்துக் கொண்டிருந்தான் அந்த விடலைப்பையன்.

ஆனாலும் முதன் முதலாக சண்முவைத் தான் பைக்கில் ஏற்ற வேண்டும் எனும் பிடிவாதத்துடன் வந்திருந்தான். காதல் வந்தால் பைக் வாங்கிக் கொடுத்த தாய் கூட பின்னால் போய் விடுகிறாரே! என்ன விந்தை!

“கோவிச்சுக்காதே சம்மு! அதான் ரொம்ப பிசின்னு சொல்றேன்ல!”

“ஒன்னும் வேணா போ”

“பழகனதும் உன்னைத்தான் முதன் முதலா ஏத்திக்கனும்னு ஓடி வந்தேன். இப்ப பார்த்து மூஞ்ச திருப்பற பாத்தியா! போடி”

“சரி, சரி! உடனே பீலீங்ஸ்ச கொட்டாதே! வரேன்”

அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் சண்மு.

“இங்கயே சுத்தி சுத்தி ஓட்டுடா! ஊருக்குள்ள போகாதே! எங்கம்மா உன் முன்னுக்கு ஒன்னும் சொல்லலைனாலும், நீ போனதும் என்னைப் பிடிச்சு காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுவாங்க. ஆம்பளைப் புள்ளைக்குத்தான் அறிவில்ல வயசுக்கு வந்த பொண்ணுக்கூட பழக கூடாதுன்னு! உனக்கு எங்கடி போச்சு புத்தின்னு திட்டு விழும்”

“அவங்க சொல்றதும் சரிதான் சம்மு! ஆம்பளைப் புள்ள எனக்கு நெஜமா அறிவே இல்லைடி!” பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன் மெல்ல முணுமுணுத்தான்.

அவன் அறிவோ,

‘அடேய் நான் சொல்ல சொல்ல கேக்காம, இப்ப அறிவு இல்லைன்னு என்னையே குத்தம் சொல்லறியா!’ என ஏகத்துக்கும் கடுப்பாகியது.

“என்னடா மொனகற?” என கேட்டவள் அவன் தோளில் இரு கைகளையும் போட்டுக் கொண்டாள்.

“ரைட், ரைட்” என சந்தோஷ கூச்சலிட்டவள் பைக்கை ஸ்டார்ட் செய்ய ஊக்கினாள். அவள் சிரிப்பு இவனையும் தொத்திக் கொண்டது. மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சமாக வேகம் பிடித்தான் கதிர். ஆலமரத்தடியை சுற்றியும், ஒதுக்குப்புறமாகவும் பயணித்தார்கள். இந்தக் குதூகலம் எல்லாம் சண்மு ஒரு கையை அவன் இடுப்பில் வைக்கும் வரை தான்.

மறு நிமிடம் இருவரும் கீழே விழுந்து கிடந்தார்கள். பைக் இன்னொரு பக்கம் கிடந்தது. சட்டென துள்ளி எழுந்துக் கொண்டவன், சண்முவையும் தூக்கி விட்டான். அவள் மேல் இருந்த மண்ணைத் தட்டி விட்டவன்,

“சாரிடி சம்மு! சாரி! ரொம்ப சாரி! பேலன்ஸ் இல்லாம போச்சு! தடுமாறிட்டேன். அடி எதாச்சும் பட்டுச்சாடி?” என பதறிவிட்டான்.

அவனை முறைத்தவள்,

“முதல்ல உன்னைத்தான் ஏத்தறேன்னு நீ சொன்னப்பவே நான் உஷாராயிருக்கனும்டா! என்னை சோதனை எலியாக்கிட்டல்ல! எத்தனை நாளு இப்படி என்னைக் கீழ தள்ளி கொலை பண்ண திட்டம் போட்டிருந்த?” என கேட்டப்படியே கையில் சிராய்த்திருந்த இடங்களை சோதனையிட்டாள். கல்லும் மண்ணும் குத்தி சிவந்திருந்தது கை இரண்டும்.

‘நீ கைய வச்சிட்டு சும்மா இருந்துருக்கனும்! எதுக்கு இடுப்ப பிடிச்ச? அடுப்பு மாதிரி உடம்பெல்லாம் தீ பத்திக்குச்சு! நான் என்ன செய்ய!’ மனதிலேயே புலம்பிக் கொண்டான்.

அவள் கையை இழுத்து செக் செய்தவன், தன்னுடைய கைக்குட்டையால் நடுக்கத்துடன் மென்மையாக கை முட்டி வரை துடைத்துவிட்டான். பின் கைக்குட்டையை அவளிடமே கொடுத்து,

“நீயே துடைச்சிக்கடி” என நகர்ந்து நின்றுக் கொண்டான்.

இவள் துடைத்து நிமிர்ந்த போதுதான் அவன் கை முட்டியில் இருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்தாள்.

“அடேய் கதிரு! ரத்தம்டா கையில! பரதேசி, முதல்ல உன்ன கவனிக்க மாட்ட!” என பதறியவள் அவன் கையை பிடித்து ஆராய்ந்தாள்.

“பரவாயில்ல விடுடி! நான் வீட்டுக்குப் போய் பார்த்துக்கறேன்!” என கையை இழுத்துக் கொண்டான் கதிர்.

படீரென அவன் முதுகில் ஒன்று போட்டவள்,

“வாய மூடிட்டு சும்மா இரு” என மிரட்டினாள். பின் போட்டு குத்தி இருந்த துப்பாட்டாவை கழட்டப் போனவள் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான் கதிர்.

“விடுடா! துப்பட்டா வச்சு கட்டுப் போடறேன்”

“தேவையில்ல சம்மு! துப்பட்டாவக் கழட்டுன, ஒரே அறை! மூஞ்சி வீங்கிக்கும்! என் கையில ரத்தம் வந்தா வந்துட்டுப் போகுது! அதுக்குன்னு நீ துப்பட்டா இல்லாம வீடு வரைக்கும் போவியா? ஒழுங்கா கழட்டன துப்பட்டாவ மறுபடி போடு” என தன் சண்முவிடம் இதுவரை பேசியிராத கடுமையான குரலில் சொன்னான் கதிர்.

திகைத்துப் போய் அவனைப் பார்த்தவள், துப்பட்டாவை மறுபடி ஒழுங்காய் போட்டுக் கொண்டாள். அவன் அழுத்தமாகப் பற்றிய கையைத் தேய்த்து விட்டுக் கொண்டவள்,

“வர வர முரட்டுப்பயலா ஆகிட்டு வரடா கதிரு! என்னை குரலை உயர்த்தி ஏசற, கையை நெறிக்கற! எனக்கு ஒன்னும் பிடிக்கல போடா”

அவளின் ஆதங்கத்தில் பட்டென கோபம் வடிந்தது இவனுக்கு.

“இல்லடி சம்மு! உன் நல்லதுக்குத்தானே சொல்லறேன்! வயசு பொண்ணு துப்பட்டா இல்லாம ஊருக்குள்ள போலாமா? உங்கம்மா பார்த்தா அடி பின்னிருவாங்கத்தானே! அதுக்குத்தான்டி சொன்னேன்!”

“சரி விடுடா” என சொன்னவள் அவன் எதிர்ப்பார்க்காத சமயத்தில் துப்பட்டா ஓரத்தால் அவன் கை ரத்தத்தைத் துடைத்து விட்டாள். அவன் அருகே நெருங்கி, கை தூக்கி கதிரின் தலையில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டாள். சண்முவின் நெருக்கமும், அவளின் வாசனையும் இவனை மாய உலகத்துக்கு அழைத்துப் போனது. அந்தி வெயில் அவள் முகத்தில் மோத மஞ்சள் நிலவாய் ஜொலித்தவளைப் பார்த்து மனம்,

“ஒளியிலே தெரிவது தேவதையா…..

உயிரிலே கலந்தது நீ இல்லையா!!!” என மெல்லிசையாய் இசைத்தது.

அப்படியே அவளைக் கட்டிக் கொள்ள முயன்றவனை திடுமென அவள் கேட்ட கேள்வி நினைவுலகுக்குக் கொண்டு வந்தது. சட்டென விலகிக் கொண்டான் கதிர். தான் செய்ய துணிந்த முட்டாள்தனத்தை எண்ணி மறுகியவனிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் சண்மு.

“குளிச்சியா இல்லையாடா இன்னிக்கு? கிட்ட வந்தா கப்புன்னு அடிக்குது வேர்வை நாத்தம்! ஷப்பா!”

அவள் கேள்வியில் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவனுக்கு.

“சொறிஞ்சுட்டு திரிஞ்சவங்க, எங்கள கப்புன்னு சொல்றதெல்லாம் கால கொடுமைடா சாமி!” என இவன் பதிலடி கொடுக்க,

“சொறி வேற டிபார்ண்ட்மேன்ட் கப்பு வேற டிபார்ட்மேண்ட்” என இவள் கிளாஸ் எடுக்க, பழையபடி பேசி சிரித்தப்படியே பைக்கை உருட்டிக் கொண்டு நடந்தனர் இருவரும். 

இன்று

சென்னைக்கு ஓடி வந்திருந்தாள் சண்மு. வந்து இருபத்து நான்கு மணி நேரம் ஆகியிருந்தது. நல்ல தரமான ஹோட்டலைத் தான் தேர்ந்தெடுத்திருந்தாள் மூன்று நாள் தங்குவதற்காக. முன்பதிவு ஏதும் இல்லாமல் நேரிடையாக பணம் கட்டி ரூம் எடுத்திருந்தாள். கதிர் கண்டுப்பிடித்து விடாமல் இருக்கத்தான் இத்தனை பில்டப்.

மீனாட்சியிடம் புது விதமான விதை வாங்க சென்னை போக வேண்டும் என கதை விட்டவள் நர்சரியை வேலை செய்யும் பெண்கள் பொறுப்பில் விட்டிருந்தாள். கடம்பூவனம் இன்னும் செயல்பட ஆரம்பிக்காததால் சண்முவால் இப்படி இடையில் ஓடி வர முடிந்தது. அவளுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. கதிரின் முகம் பார்க்காமல், அவன் குரல் கேட்காமல் தனியாக யோசிக்க வேண்டி இருந்தது.

உணவை அறைக்கே வரவழைத்து உண்டவள், மியூசிக் செனலை திறந்து வைத்துக் கொண்டு இலக்கில்லாமல் வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். மீண்டும் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது தப்போ என தோன்றியது அவளுக்கு.

‘வேற நான் எங்க போவேன்! என் தாய்நாட்ட விட்டா எனக்கு வேற போக்கிடம் ஏது? மானம் கெட்டு, மரியாதை விட்டு அங்கயே இருந்திருக்க முடியுமா? இந்த சம்மு செத்திருவாளே!’ மனம் ஊமையாய் அழுதது.

எழுந்து போய் தனது கைப்பையை எடுத்து வந்தாள். அதில் இருந்து போட்டோவை வெளியே எடுத்தவள்,

“ஏன்டா கதிரு! ஏன்டா என்னை இந்தப் பாடு படுத்தற! நான் உனக்கு வேணாண்டா ப்ளீஸ்” என பாரதியாக போட்டோவில் இருந்தவனைப் பார்த்து புலம்பினாள்.

மனம் கல்யாணம் நடக்காது என கதிர் சொன்னதையே மறுபடி மறுபடி அசைப்போட்டது.
“இந்தக் கல்யாணம் இனி நடக்காது!”
“என்ன உளருற கதிரு!”
“மனுஷன் சீரியசா பேசிட்டு இருக்கறது உனக்கு உளறலா இருக்கா சம்மு?”
“இதெல்லாம் சரியில்லடா! உன் தவா உன் மேல ரொம்ப ஆசை வச்சிருக்காடா! அவள ஏமாத்திராதடா கதிரு! பெண் பாவம் பொல்லாததுடா!”
“அவ என் மேல ஆசை வச்சிருக்கலாம், ஒத்துக்கறேன். ஆனா நான் ஒருத்தி மேல உசுரையே வச்சிருக்கேனே! அதுக்கு நீ என்ன சொல்லுற? ஆசை பெருசா உசுரு பெருசா சம்மு?” எனும் கேள்வியை  கேட்டவன் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

இவள் பேவேன பார்க்க,

“அதென்ன எதுக்கெடுத்தாலும் பெண் பாவம் பொல்லாததுன்னு டயலாக்! அப்போ ஆண்கள் எங்களுக்கு எந்தப் பவரும் இல்லையா? நாங்க மட்டும் எந்த வகையில கொறஞ்சி போயிட்டோம்! எங்களோட பாவமும் தான் பொல்லாததுடி! அதுக்கு சாம்பிளா நீயே இருக்க!”

அவனுடைய பாவத்தைக் கொட்டிக் கொண்டதால் தான் வாழாமல் வந்து நிற்கிறாள் என மறைமுகமாக அவன் சொல்ல பொங்கி விட்டாள் சண்மு. அவன் அமர்ந்திருக்க இப்பொழுது இவள் எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள்.

“இந்த மாதிரி குத்திப் பேசுனா அறைஞ்சி வச்சிருவேன் ஏசிபி சார்! என்ன உங்க பாவத்தை கொட்டிக்கிட்டோம் நாங்க? என்னைப் பேச வைக்காதீங்க சார், சீனாகி போயிருவீங்க!” என சத்தம் போட்டவள்,

“இப்போ ஒழுங்கு மரியாதையா சொல்லுடா, தவாவ கட்டிக்கிட்டு நாலு பிள்ளைங்களப் பெத்துக்கிட்டு சந்தோஷமா இருப்பேன்னு சொல்லுடா” என அவனை நெருங்கி அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுக்கியபடியே கேட்டாள் சண்மு.

அருகில் ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தவளைப் பிடித்து மடியில் அமர்த்தியவன், அவள் காதோரமாக,

“தவா கிட்ட சொல்லிட்டேன். நேத்து நைட்டே சொல்லிட்டேன்!” என கிசுகிசுத்தான்.

“எ..என்ன சொன்ன?” நடுங்கிய குரலை சமாளித்து மெல்லக் கேட்டாள் சண்மு.

“கல்யாணத்த நிறுத்திரலாம்னு சொல்லிட்டேன்டி! மனசுல ஒருத்திய வச்சிக்கிட்டு பொய்யா இன்னொருத்தி கூட வாழ முடியாதுன்னு சொல்லிட்டேன்டி”

“ஏன்டா ஏன் அப்படி சொன்ன? உனக்கு பைத்தியமாடா கதிரு! ஏன் அப்படி சொன்ன?” காட்டுக் கத்தலாய் ஆரம்பித்தவள் முடிக்கும் போது தேம்ப ஆரம்பித்தாள்.

“ஏன்னா உன்ன மனசுல நினைச்சிக்கிட்டு அவ கூட என்னால பிள்ளைப் பெத்துக்க முடியாது! புரியுதாடி?”

“நான் இங்க வந்தது ரொம்ப தப்பு! தப்பு! தப்பு! நான் போறேன்! திரும்ப போறேன்! ஆஸ்திரேலியாவுக்கே போறேன்! இல்ல, இல்ல, இந்த உலகத்த விட்டே போறேன். அப்பவாவது நீ அவள கட்டிட்டு நிம்மதியா இருப்ப! நான் வரவும் தானே இப்படிலாம் நடந்துக்கற! இல்லைன்னா இந்நேரம் அவள கட்டியிருப்பல்ல!” என மனதில் தோன்றியதையெல்லம் பிதற்றி அழ ஆரம்பித்தாள் சண்மு.

மடியில் இருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் கதிர்.

“இனி எங்கயும் போக வேணாண்டி சம்மு! என் கூடவே இருந்துரு! ஒரு தடவை உன்னை மிஸ் பண்ணிட்டேன்! இனி விடமாட்டேன்டி”

“நான் செகேண்ட் ஹேண்டா மட்டி!”

“என் சம்முவ பத்தி எனக்குத் தெரியும்! எல்லாத்துலயும் அவளோட பெஸ்ட்ட குடுப்பா! அன்பு, பாசம், பந்தம் இதெல்லாம் அவளுக்கு ரொம்ப முக்கியம். எப்போ அவனோட உறவு வேணான்னு வெட்டிட்டு வந்துட்டியோ, அப்பவே அவன் சரியில்லன்னு எனக்குப் புரிஞ்சிருச்சுடி! இப்போ கையில ஒரு புள்ளயோட வந்துருந்தா கூட நான் உன்னை விட்டிர மாட்டேன்டி சம்மு! பழச மறந்திரு! என் கூட வந்திருடி”

“வந்திரு வந்திருன்னா எப்படி வரது? கீப்பாவா?” வேண்டும் என்றே அவனைக் கோபப்படுத்தினாள் சண்மு.

மடியில் இருந்தவளை அப்படியே கீழே தள்ளிவிட்டான் கதிர்.

“வச்சிக்கிறது, கீப்பு, இன்னும் என்னென்ன வார்த்தைடி வரும் உன் அசிட் வாயில இருந்து? ஒவ்வொரு வார்த்தையும் பொசுக்குதுடி என் நெஞ்சை!”

கீழே விழுந்துக் கிடந்தவளை மீண்டும் அள்ளி மடியில் வைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டான் அந்தப் பைத்தியக்கார காதலன்.

“அப்போவே வேணாம், வந்துருன்னு எப்படி கெஞ்சனேன்! அசையலயேடி நீ! இப்போ வந்து செகண்ட் ஹேண்ட், கீப்பு, செருப்புன்னு மனுஷன கொல்லறடி சம்மு. ஒருத்தனுக்கு இருதயக் கோளாறுன்னு வை! மாற்று இருதயம் பொருத்தி அறுவை சிகிச்சை பண்ணறது இல்லயா? கிடைக்கற அந்த இருதயமும் செகண்ட் ஹேண்ட் தானே! அதனால அதை வேணான்னு சொல்லிருவானா? அவன் உசுரு பொழைக்க இருதயம் வேணாமா? அது மாதிரிதான் இதுவும். பொணமா சுத்திட்டு இருக்கற நான் உசுரோட வரணும்னா இந்த செகண்ட் ஹேண்ட் சம்மு எனக்கு வேணும்டி. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ சம்மு!”

பட்பட்டென அவனைப் போட்டு அடித்தாள் சண்மு.

“என்னலாம் பேசறடா! லூசு, பைத்தியம்” மறுபடி மறுபடி சொல்லி சொல்லி அடித்தாள் சண்மு. கை வலிக்கும் வரை அடித்தாள். அவளின் ஒவ்வொரு அடியையும் அப்படியே தாங்கிக் கொண்டு அணைப்பை மட்டும் விலக்காது அமர்ந்திருந்தான் கதிர்.

கோபம் மெல்ல அடங்க, அவனை விட்டு எழுந்துக் கொண்டாள் சண்மு.

“நீ என்ன காரணம் சொன்னாலும் இது நடக்காது கதிரு! இந்தக் கல்யாணம் நடக்காது. நான் தவா கிட்ட பேசறேன்! நீ மன உளைச்சல்ல இருக்க, அதான் இப்படி நடந்துகிட்டன்னு எடுத்து சொல்லுறேன்! என்னைக் கட்டிக்கற பைத்தியக்கார எண்ணத்தை விட்டுட்டு ஜோலிய பாரு. நான் வராம இருந்திருந்தா, என் புருஷன் கூட சந்தோஷமா புள்ள குட்டின்னு வாழ்ந்திருந்தா என்ன செஞ்சிருப்பியோ அத செய் கதிரு!”

“நிச்சயத்துக்கு முன்னயே தவா கிட்ட என் நிலமையை சொல்லியிருக்கேன் சம்மு! நீ தான் நான் காதலிச்சவன்னு கோடிட்டு காட்டாம, எனக்கு ஒரு காதல் தோல்வி இருக்குன்னு சொல்லியிருக்கேன்! என்னால மனசு ஒன்றி வாழ முடியுமா தெரியலைன்னு வெளிப்படையா சொல்லியிருக்கேன்! அம்மாவின் கண்ணீருக்காக, அப்பாவோட கெஞ்சலுக்காக நான் கல்யாணத்துக்கு சரி சொன்னது ரொம்ப தப்புடி! உன்ன நிச்சயத்துல பார்த்ததுமே எனக்குப் புரிஞ்சு போச்சு, என்னால இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு!”

“நிச்சயத்துக்கு நான் புள்ள குட்டியோட வந்திருந்தா என்னடா செஞ்சிருப்ப?”

“அப்பவும் கல்யாணத்த நிறுத்திருப்பேன்! இப்படியே கட்டைப் பிரம்மச்சாரியாவே இருந்துருப்பேன். தவாக்கு ஓகே சொன்னேன் தான். ஆனாலும் நீ வரலைனா கூட கல்யாணம் வரைக்கும் போயிருப்பனா தெரியலடி! கால் சிகிச்சைய காரணம் காட்டி என்னால முடிஞ்ச அளவுக்கு கல்யாணத்த தள்ளிப் போட்டேன்! அவள ஏத்துக்க முடியுதான்னு எனக்கு நானே சோதனை வச்சிக்கிட்டேன். என்னால முடியலடி. மனசளவுல நெருங்க முடியலடி! அவள மட்டும் இல்ல வேற எந்தப் பொண்ணையும் கூட மனசால தொட முடியாதுடி என்னால. வெறும் உடம்பால தொட்டுக்க மட்டும் கல்யாணம் செஞ்சுக்கவா? அது துரோகம் இல்லையா? தவாவுக்கு நான் செய்யற துரோகம் இல்லையா? என்னைய துரோகியா மாத்தாதடி! ப்ளீஸ் சம்மு!”

“அப்போ நீ சொன்ன மாதிரி கட்ட பிரமச்சாரியாவே இருந்துட்டுப் போ! நீ எனக்கு வேணா! எவனும் என் வாழ்க்கைக்கு வேணா! இந்த சம்மு தனியாவே வாழ்ந்து காட்டுவா” என சபதம் போட்டவள் மறுநாளே சென்னைக்கு ஓடி வந்திருந்தாள்.

கதிர் கண்டிப்பாக தன்னை இப்படி தனியாக வாழ விடமாட்டான் என புரிந்தது சண்முவுக்கு. அவனை எப்படி தள்ளி வைப்பது, தவாவுடன் எப்படி கோர்த்து விடுவது என ஒரு நாள் முழுக்க யோசித்தாள். எந்த வழியும் புலப்படவில்லை. மண்டை சூடாகிப் போனதுதான் மிச்சம். தலையைப் பிடித்தப்படி அமர்ந்திருந்தவளை ரூமின் அழைப்பு மணி அழைத்தது.

“யார்டா இது! ரூம் சர்விஸ்கு கூட சொல்லலியே நான்” என முனகிக் கொண்டெ எழுந்து போய் பீப் ஹோலில் பார்த்தாள். மனம் தடதடக்க கதவைத் திறந்து விட்டாள் சண்மு.

கதவு மூடிய கணம் பளீரென ஓர் அறை விழுந்தது சண்முவுக்கு.

(உயிர் போகும்…)