OVS9

OVS9

அவன் மனையாளோ மூச்சு விடாமல் வீரா… வீரா! என்று தான் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். மகன் கோபமாக செல்வதால் அன்னையும் அவன் பின்னோடு செல்ல எத்தனிக்க,
“குணா, புருஷன் பொண்டாட்டி விவகாரத்தில் அவங்க அழைக்காம நாம உள்ள போகக்கூடாது!” என்றதும் கணவரின் பேச்சை ஏற்று அங்கேயே நின்றுவிட்டார். கோபமாக வருகிறான் என்பது தெரியாமல்,
“வெளிச்சம் வேணும் வீரா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு, டார்ச் ஆன் பண்ணுங்க வீரா!” என கரம் பற்றிக் கொண்டு பிதற்ற,
“ஷட்டப்! அத்தான்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொன்னேன். எல்லோர் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்ட! இப்ப, சந்தோஷமா?” இருட்டுக்குளேயே அவளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, 
“இனி அத்தான் -னே கூப்பிடுறேன். ப்ளீஸ், லைட் ஆன் பண்ணுங்க! எனக்கு பயமா இருக்கு!”
“அப்படி என்ன பயம்? இருட்டில இருந்தா என்ன தான் ஆயிடும்ன்னு பார்க்கிறேன்!” என சினந்து அவளை உள்ளேவிட்டு கதவடைக்க, பயத்தில் உடல் நடுங்க உள்ளம் பதற,
“ப்ளீஸ், கதவைத் திறங்க… எனக்கு இருட்டுன்னா பயம்ன்னு தெரியும்ல…  ப்ளீஸ் வீரா… வெளிச்சம் வேணும் வீரா!” 
“மறுபடியும் வீரா…?! நீ திருந்தவே மாட்டடீ!” தன் அவமானம் ஒன்றே பெரிதாய் தெரிய அவள் பயமும், பதட்டமும் கருத்தில் பதியவில்லை அவனுக்கு.
“ஐயோ! சாரி… சாரி! அத்தான் கதவைத் திறங்க ப்ளீஸ்…!” அவளது அத்தானில் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது. 
“அத்தை! அத்தை… கதவை திறக்க சொல்லுங்க…” அவ்வளவு தான் அதற்கு மேல் நிற்க முடியாமல் அறைவாசலுக்கு வந்தவர்,
“ஐயா! பாண்டி… என் சாமி! பாவம் புள்ள, ரொம்ப பயந்துருச்சு. கதவை திறய்யா!” என மன்றாட சுத்தமாய் கோபம் காணாமல் போக கதவைத் திறக்க, கால் மடக்கி தரையில் அமர்ந்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.
“ஈஸ்வரி!” பதட்டத்துடன் தன் தோள்சாய்த்துக் கொண்டான்.   லைட்டை போடு என்று சொல்ல முடியாமல் குழல் விளக்கை நோக்கி கையை காட்டியவளுக்கு, உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆடை வியர்வையில் தொப்பலாய் நனைந்திருந்தது. தொண்டை வறண்டு மூச்சுத் திணறியது. லண்டியனை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் குணவதி. 
மேல் நோக்கி நிலைகுத்தத் தொடங்கிய பார்வையின் வட்டத்திற்குள் அந்த சிறு ஒளி பாய, மெல்ல மெல்ல மயக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவளுக்கு புதுத் தெம்பு வரத்  தொடங்கியது. கரங்கள் அவனது சட்டையை இறுக பற்றியிருக்க, கைபேசியின் டார்ச்சை உயிர்ப்பித்தான். கண்களை கூசச் செய்யும் ஒளி உயிர் கொடுக்க, நடுக்கம் குறைந்தது. மூச்சுத் திணறல் மட்டுப்பட்டது. 
“ஈஸ்வரி, என்னடா…?” அவள் பயம் தெளிய வேண்டும் என்பதற்காக முரட்டு வைத்தியம் செய்யப் போக, இப்படி ஆகிவிட்டதே என மிரண்டு போனவனாய் கேட்டான். 
இருட்டு பயம் போய், அறைக்குள் விட்டு கதைவடைத்த கணவனிடம் பயம் தோன்ற சட்டென அவனிடமிருந்து விலகி அத்தையிடம் ஒண்டிக் கொண்டாள். 
‘சும்மாவே இவனைப் பார்த்து பயப்படுவா, இந்த பயல் இப்படி முரட்டுத்தனமா வேற நடந்துக்கிட்டானே… இது எப்போ தெளியுமோ தெரியலையே!’ என்பது போல் தன் முந்தானை கொண்டு அவள் முகம் துடைத்து,
“ஒண்ணுமில்ல ஆத்தா, அத்தையோட வா… தோட்டத்தில் காத்தாட இருக்கலாம்” என எழுப்ப கால்கள் தொய்ந்து உடல் பலவீனமாய் இருக்க, அவளால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழப் போனவளை கைகளில் ஏந்திக் கொள்ள, கண்களை இறுக மூடி, உதடை பற்கள் கொண்டு அழுத்தி, ஒருவித விரைப்புத் தன்மையுடன் இருக்க, அப்பொழுது தான் இந்த பயம் தன்னை பார்த்து தான் என்பது விளங்கியது அவள் கணவனுக்கு. 
‘கடவுளே! இன்று ரொம்பவும் மோசமான நாள் போலும், அடுத்தடுத்து எத்தனை வலி தரும் நிகழ்வுகள்? இவள் அஞ்சி நடுங்குவதைப் பார்த்தால் அடியோடு வெறுத்து விடுவாள் போலவே!’ நிதர்சனத்தை ஏற்க முடியாமல் மனம் அல்லாட, 
“சாரிடா… சாரி… சாரி! தப்பு பண்ணிட்டேன். ரியலி சாரிம்மா இனி இது போல நடக்காது. நம்பும்மா! உன் பயம் போக்கனும்னு நினைச்சு செஞ்சேனே தவிர இந்தளவுக்கு ஆகும்னு நினைக்கலை… புரிஞ்சுக்கோம்மா! நான் மோசமானவன் இல்லடா… உன் அத்தான் நல்லவன் தான் டா! ஜில்லுக்குட்டி…  கண்ணைத் திறந்து பாருடா” முகமெங்கும் முத்தமிட்டான். இது அவள் பயத்தை கூட்டியதே அன்றி குறைக்கவில்லை. 
மகனின் மன்றாடல் தாயின் மனதை பிசைந்த போதும், 
“பாண்டி, புள்ளையை  இந்த திண்டுல உட்கார வைய்யா” அன்புக் கட்டளை இட, மறுக்க முடியாமல் அமர வைத்து, அவளைச் சுற்றி லண்டியன், எமெர்ஜென்சி லைட், டார்ச் என அனைத்தையும் ஒளிரவிட்டான். மருமகளின் அருகே அமர்ந்து தலை வருடி, தோள் சாய்த்துக் கொண்டவர்,
“ஏன் ஆத்தா, நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது இருள் அடிச்சிருச்சா?” வாஞ்சையுடன் கேட்டார் குணவதி.
“அப்படின்னா என்ன அத்தை?”
“இருட்டுன்னா உனக்கு ஏன் இவ்வளவு பயம்? சின்னதில உன்னை யாராச்சும் இப்படி இருட்டு அறைக்குள்ள விட்டு பூட்டியிருக்காங்களா? அப்பவும் இது போல நடந்துருக்கான்னு கேட்கறாங்க?” பெரிதாய் விளக்கம் வைத்து அவள் பதிலுக்காய் எதிரே நின்று முகம் பார்த்துக் கொண்டிருந்தான். 
“ம்… நான் சின்னதா இருக்கும் போது, அம்மா வேலைக்கு போயிடுவாங்க. என்னை மெய்டு தான் பார்த்துப்பாங்க. மதியம் நான் தூங்கினதும் என்னை தனியா விட்டு அவங்க வீட்டுக்கு போயிடுவாங்களாம். ஒரு நாள் அம்மா ஆஃபீஸ்ல் இருந்து வரும் போது பேச்சு மூச்சில்லாமல் இருந்தேனாம். ஹாஸ்பிடல் கொண்டு போனப்ப, இப்போ நடந்த மாதிரி நடந்திருக்கலாம்ன்னு சொன்னாங்களாம். இது nyctophobia. இதுக்கு எப்போதுமே வெளிச்சமான இடத்துல வச்சுக்கனும் மத்தபடி எந்த பிரச்னையும் இல்லைன்னு டாக்டர் சொன்னாங்களாம்.
பக்கத்துக்கு வீட்டுல விசாரிச்சப்ப, நிறைய நாள் நான் அழுகும் சத்தம் கேட்கும்ன்னும் மெயிட் இருக்காங்கன்னும் நினைச்சோம்னு சொன்னாங்களாம்! “
“இந்த பிரச்சனையில் இருந்து நீ மீளனும்னு நினைக்கிறியா, இல்ல பிரச்சனையே இல்லைன்னு நினைக்கிறியா ஈஸ்வரி?” ஆழ்ந்த அமைதியுடன் கேட்டான். 
முன்ன, இதை ஒரு பிரச்சனையா நினைச்சதில்லை. ஆனா இப்போ, எல்லோரையும் சங்கடப்பட வைக்கிற இதிலிருந்து மீண்டுட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுது!”
“நாளைக்கு விபூதி மந்திரிச்சுக்கிட்டு வருவோம், எல்லாம் சரியாயிடும். பேசிகிட்டு இருங்க, நான் சாப்பாடு பண்றேன்” மருமகள் இயல்புக்கு வந்துவிட்டதாய்  எண்ணிக்கொண்டு சமையல் கட்டை நோக்கிச் சென்றார் குணவதி. வீரபாண்டியன் மனைவியின் அருகில் அமர, அவளோ விலகி அமர்ந்து கொண்டாள். 
“ஜில்லு…!” 
‘கதவடைச்சு கதற விட்டுட்டு இப்போ என்ன ஜில்லுனு ஜொள்ள வேண்டியதிருக்கு?’
“சாரிடா… நீ பஸ்ட் நைட்ல லைட் ஆப் பண்ண விடலன்னதுமே யோசிச்சிருக்கனும். தப்பு தான். நடந்து முடிஞ்ச விஷயத்தை எதுவும் செய்ய முடியாது பட் இனி எல்லாமே நல்லதா நடக்கும்னு உத்தரவாதம் தர முடியும். நாளைக்கே இன்வெர்ட்டர் வச்சிடலாம். பவர் கட்டானதும், தானே பவர் சப்ளை பண்ணிடும். கொஞ்சம் பொறுத்துக்க. சோலார் பேனல் வச்சுடுவோம். அப்புறம் நிரந்தரமாவே பவர்கட் பிரச்சனை இருக்காது. இப்போ எனக்கும் வெளிச்சம் பழகிடுச்சு ஜில்லு. 
நீயா தனியா படுக்கும் போது விடிய, விடிய லைட் போட்டுப்பேன்னு சொன்னியே, இங்க நீ தூங்குற வரை தான் போடுறோம். திடீர்னு முழிப்பு வந்தா கூட, இறுக்கி கட்டிபிடிச்சுட்டு தூங்கிடுறியே தவிர லைட்டை ஆன் பண்ண சொல்றது இல்லை. 
கொஞ்சம் கொஞ்சமா உன் மூளையும் இருட்டுக்கு பழகிட்டு இருக்கு. அத்தானோட ஒத்துழைச்சன்னா இதுல இருந்து மொத்தமா வெளிய வந்திடலாம். இன்னைக்கு மாதிரி திடீர்ன்னு இல்லாம ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம்ன்னு நல்லா பிளான் பண்ணி மைன்ட் செட் பண்ணி அத்தான் பக்கத்தில் இருக்கும் போது லைட்டை அணைச்சுட்டு இருந்து பழகலாம். “
‘ஐயோ, இவன் திரும்பவும் நம்மை கதறடிக்கத் தான் வழி பார்க்கிறான்’ என மிரண்டவளாய்,
“அத்தை…!” என கத்த,
“அத்தையை வேணும்னாலும் கூட வச்சுப்போம் ஜில்லு” என சமாதானம் செய்ய முயல,
“அத்தை, நான் உங்க கூடவே இருக்கேன். இவங்க திரும்ப என்னை பயப்பட வைக்க பிளான் பன்றாங்க!” என சட்னி தாளித்து கொண்டிருந்தவரின் அருகே உரசிக் கொண்டு நிற்க, அவருக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. மனைவியிடம் சொன்னதை தாயிடம் விளக்கம் வைக்க, 
“இப்போ வேண்டாம் பாண்டி! புள்ளையை அது போக்கிலே விடு… மெல்ல பாத்துக்கலாம்!” என மாமனார் வக்காலத்து வாங்க, அவர் மீது மரியாதையோடு பாசமும் வந்து ஒட்டிக்கொண்டது ஈஸ்வரிக்கு.
படுக்கும் நேரம். தலையணையை தூக்கிக் கொண்டு கிளம்பியவளை அறை வாசலில் எதிர்கொண்டவன், 
“எங்கே கிளம்புற?” என கதவில் கை வைக்க, ஒரே ஜம்ப்பில் அவனைத் தாண்டி அறையை விட்டு வெளியே நின்று கொண்டு,
“அத்தை கூட படுக்கப் போறேன், உங்க கூட இருக்க பயமா… இருக்கு” 
“கிழிஞ்சுது, இந்தா… இது தான் இந்த அறையோட சாவி. வழக்கம் போல லைட்டை போட்டுவிட்டு ரெண்டு கதவையும் விஸ்தாரமா திறந்து வச்சுக்கலாம். நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே படு. 
உனக்கு nyctophobia ன்னு தெரியாததால் சின்ன புள்ளைத்தனமா பயப்படுறன்னு நினைச்சு தான் அப்படி செஞ்சேன். இனி உன்னை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன். என்னை நம்பு டீ!” ஆற்றாமை விரவி இருந்தது அவன் பேச்சில்.
உள்ளே போவோமா, வேண்டாமா?’ ஷாட் பூட் த்ரீ போட்டுப் பார்த்து அறைக்குள் வந்துவிட்டாள். 
“என்னை நம்பினதுக்கு தேங்க்ஸ் ஜில்லுக்குட்டி!” மார்போடு அணைத்துக் கொள்ள,
“விடுங்க, சாயங்காலத்தில் இருந்து என்னை ரொம்ப திட்டிட்டீங்க, நிறைய அழ வச்சுட்டீங்க… எனக்கு நீங்க வேண்டாம்!” விளக்க முயற்சிக்க,
“எனக்கு நீ வேணுமே! உன்னை கஷ்டப்படுத்தினதை ஈடுகட்டுற மாதிரி இப்போ சந்தோஷமா வச்சுக்கப் போறேன்!” மூக்கோடு மூக்கை உரசி கொஞ்ச, அவ்வளவு தான் செல்ல பொம்மை மொத்தமாய் வசமிழந்து சரணாகதி அடைந்துவிட்டது.  
காலை வேளையில் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனின் செவிகளில் மனையாளின் குமட்டல் ஒலி கேட்க, கிணற்றடியை நோக்கி விரைந்தான். ஈஸ்வரியோ முட்டை ஓடை கையில் பிடித்தபடி மறுகையால் வாயை மூடிக் கொண்டு நின்றாள். பச்சை முட்டை வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் படம் காட்டிக் கொண்டிருந்தது. 
“என்னாச்சு?” என பதறி வந்தவனுக்கு அவள் செய்த வேலையை கையில் இருக்கும் முட்டை ஓடு அம்பலப்படுத்த,
“என்ன பண்ற ஈஸ்வரி…?” என முறைக்க 
“பச்சைமுட்டை குடிச்சா சீக்கிரம் வளரலாம்னு படிச்சேன். அதான் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லன்னு விழுங்கினேனா குமட்டிருச்சு…” பரிதாபமாய் சொல்ல (அதெல்லாம் பதினெட்டு வயசுக்குள்ள பக்கி! இது புரியாம, என்ன இது சின்னப்புள்ளத்தனமா
“லூசாடி நீ? பிடிக்காததெல்லாம் ஏன் செஞ்சு தொலைக்கிற?” சிடுச்சிடுக்க 
“நீங்க தானே நான் ரொம்ப குட்டியா சின்னதா இருக்கேன்னு ஃபீல் பண்ணீங்க…” (உன் அத்தான் பனைமரத்துல பாதி வளர்ந்து நிக்குறான், அவன் பக்கத்துல யாரா இருந்தாலும் சின்ன புள்ள தான்…) தயங்கித் தயங்கி சொன்னதும் பாவமாகிப் போனது அவனுக்கு. 
“லூசு, லூசு… ஏன்டி இப்படி வதைச்சுக்கிற…?” என துணி துவைக்கும் கல்லில் தூக்கி அமர வைத்து, கரங்கள் கொண்டு கன்னம் தாங்கி,
‘உன் உயரமெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல ஈஸ்வரி! இதோ இந்த பால் வடியிற முகம் தான். சட்டுன்னு பார்க்கும் போது நம்ம பொருத்தம் உறுத்தும். குட்டி பாப்பா மாதிரி இருக்க, கல்யாணம் ஆன பொண்ணுன்னு சத்தியம் பண்ணாலும் நம்பமாட்டாங்க அதைத் தான் சொன்னேன்.” அவன் மனம் திறக்க அவளோ, 
‘ஓ… முகத்தை முதிர்வா காட்ட என்ன பண்ணனும்?’ என சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளது என்ன ஓட்டம் புரிந்தவனாய், 
“மறுபடியும் கிறுக்குத்தனமா மெச்சூர்டா காட்ட என்ன பண்ணனும்னு யோசிக்காத. நீ இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. புரியுதா?” என கன்னத்தில் முத்தமிட வந்தவன், 
“தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு லூசு வேலையெல்லாம் பார்க்கும் உனக்கு முத்தமெல்லாம் கிடையாது போ!” என அப்படியே விட்டு போய் விட்டான். (இல்லைன்னா மட்டும் இவர் பெரிய வள்ளலு!)
“நானா தப்பா புரிஞ்சுக்கிட்டேன்? குட்டியா சின்னதான்னா என்ன நினைப்பாங்களாம்? போடா விருமாண்டி!” சிலிர்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.  
காலையில் சிடுசிடுத்துவிட்டு போனதால் மாலை சீக்கிரமே வர, அந்த நிகழ்வையே மறந்தவளாய், 
“அத்தான்…” என்னும் கூவலுடன் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். அவளது அணைப்பை எதிர்பார்த்தே வந்தாலும் கண்டுகொள்ளாதவன் போல் 
“ஹாய் ஜில்லு! தலைவலிக்குது டா… சீக்கிரம் ஓடிப்போய் அம்மாகிட்ட காபி வாங்கிட்டு வா” என தன் இடை சுற்றியிருந்த  அவளது கரங்களை விலக்கிவிட்டான். (கெத்து…?!)
‘விருமாண்டி! இவனை போய் கொஞ்சுறேனே என்னைச் சொல்லணும். லவ் பண்ணத்தான் தெரியாது அதை ஃபீல் பண்ணக் கூடவா தெரியாது. ஆங்கிரி பேர்ட்!’ உதட்டு சுழிப்பும், முறைப்புமாய் சமையல் கட்டை நோக்கிச் செல்ல, இவளுக்காகவே காத்திருந்தது போல் தட்டில் பலகாரத்தையும், காபியையும் வைத்து கொடுத்தார் குணவதி. 
 அறைக்குள் காபியுடன் வர, பிரஷப்பாகி வந்தவன், காபி கோப்பையை வாங்கி மேசையில் வைக்க விலகி சென்றவளின் கரம் பிடித்து நிறுத்தி பின்னிருந்து அணைத்து  
தோள் வளைவில் தாடை அழுத்தி, மல்லிகையின் மணம் முழுவதையும் தன்னுள் நிரப்பிக் கொண்டு, 
“சாரிடா ஜில்லுக்குட்டி! காலையில முத்தம் கிடையாதுன்னு சொல்லிட்டேன்ல இப்போ நிறைய தரேன்…” என வசியக் குரலில் முணுமுணுத்தபடி, கன்னத்தோடு கன்னம் உரச 
‘அடக்கடவுளே! அதை எப்படி மறந்தேன்? இவனுக்காக பிடிக்காத முட்டையை கஷ்டப்பட்டு குடிச்சா லூஸுன்னு திட்டிட்டு போனான் இப்போ என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு…? மனம் முரண்ட… இவனைப் பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துடறேன். நான் இப்படி மயங்கி நிக்கிறதால தான் இவனும் ஓவரா போறான்..’ என சிலிர்த்து கோபம் போலும் முகத்தை வைத்துக் கொண்டு, 
“ஒன்னும் வேண்டாம் போங்க…” என வயிற்றில் பதிந்திருந்த கரங்களை விலக்க முயற்சிக்க, 
“தயவு செஞ்சு கோபமா இருக்க மாதிரி நடிக்காதடி பொம்மை! எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.” என கேலிச் சிரிப்பை உதிர்க்க 
‘கண்டுகொண்டானே…’ வெட்கம் வந்துவிட,  
“அத்தான்…” என்னும் சிணுங்கலுடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.                            
“ஆபீஸ் டென்க்ஷன் டா குட்டி. அது தான் நேற்றைய சொதப்பலுக்குக் காரணம். என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம்… ஏதாவது ஒரு பிரச்சனை உருவானா அதுக்கு தீர்வு காணுற வரைக்கும் மனசு அதிலேயே நிக்கும். மாத்திக்கணும்ன்னு தான் முயற்சி பண்றேன் ஆனா முடியல. 
ஆசைப்பட்டு சேர்ந்த வேலை. இப்போ எனக்கே வெறுப்பா மாறிட்டு இருக்கு. சில நேரங்கள்ல வேலையை விட்டு நின்னுடலாம்ன்னு கூடத் தோணுது!” ஆயாசமாகச் சொன்னவனை மடி ஏந்தி இருந்தாள். 
வேலை பளு அதிகமா அத்தான்?” புருவம் நீவி விட, அத்தான் என்னும் ஒற்றை அழைப்பும், சிறு தீண்டலும் மனதில் அமைதியை உண்டாக்குவது கண்டு அசந்து போனவனாய்,
“வேலையே பார்க்க மாட்டேங்கிறாங்கங்கிறது தான் டென்ஷன்! சில நிமிடங்களில் முடிக்க வேண்டிய வேலையை நாள் கணக்குறாங்க. சில விஷயங்கள் என் பார்வைக்கே வராம, குப்பைக்கு போயிடுது. பாவம், IT படிச்ச, கை நிறைய சம்பாதிச்ச பையன் அதை விட்டு ஆர்வமா விவசாயம் பண்ண வந்திருக்கான். அவனை உற்சாகப்படுத்தாம, அவன் ஆர்வத்தையே குழி தோண்டி புதைக்கப் பார்க்கிறாங்க. 
இப்போ இருக்கிற பசங்களுக்கு செய்யணும்ங்கிற ஆர்வமும், உற்சாகமும் இருக்கு. சரியான முறையில் ஊக்கப்படுத்தி, வழிகாட்டாம நாம எல்லாத்தையும் கெடுத்துகிட்டு இருக்கோமோன்னு கில்ட்டியா இருக்கு ஜில்லு! இவனைப் போல இன்னும் எத்தனை பேர் விவசாயம்ன்னா வெறுத்துப் போய் ஓடினார்களோ? இதே நிலை தொடர்ந்தால் புழு, பூச்சியை சாப்பிட்டு உயிர் வாழ வேண்டியது தான்.!” அயற்சியாய் தன் கண்களை மூடிக் கொண்டான்.
“அப்போ விஷயம் பகிரப்படாதது தான் பிரச்சனையா அத்தான்?”
“அடிப்படை அது தான் ஜில்லு, இந்த லட்சணத்தில் அதுக்காகவே தனியா ஒரு பிரிவு இருக்கு” பிரச்சனை புரிந்தாலும் சரி செய்யும் மார்க்கம் மட்டுப்படாமல் சிந்தனை வயப்பட்டிருந்தவனிடம்,
“ஒன்னு செய்யலாமா அத்தான், அடிப்படையில் இருந்து ஆரம்பிச்சு, அதாவது விவசாய நிலம் வாங்கும் போது பார்க்க வேண்டிய விஷயங்கள், அதுக்கப்புறம் வாங்க வேண்டிய ஆவணங்கள், செய்ய வேண்டிய சோதனைகள், நிலம் கைக்கு வந்த பிறகு மண் மற்றும் தண்ணீரை டெஸ்ட் செய்ய வேண்டியதின் அவசியம், 
எங்கே பண்ணனும், அதிகபட்சம் எத்தனை நாள் ஆகும், அடிப்படையில் விவசாயத்துக்கு முன்ன நிலத்தை எப்படி தயார் பண்ணனும், வெவ்வேறு வகையான விவசாய முறைகள், இயற்கை உரம், இயற்கையான பூச்சிக்கொல்லி, மற்றும் தடுப்பு மருந்து, அரசு கொடுக்கும் மானியம், அதை வாங்க என்ன செய்யணும் இப்படி எல்லாத்தையும் தொகுத்து ஒரு ஆப் கிரியேட் பண்ணினா என்ன?” அக்கறையாய் சொன்னாள். 
விவசாயத்தைப் பற்றி மனைவிக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியுமா என வியந்து நோக்கி,
“இதெல்லாம் எப்படித் தெரியும் ஜில்லுக் குட்டி?” தாடை பற்றிக் கொஞ்ச,
“சைனால எங்களுக்கு ஒரு பார்ம் இருக்கு அத்தான். ஆக்ஷுவலி அது ஒரு ஸீரோ பட்ஜெட் பார்மிங். ஆடு, மாடு, கோழி, மீன்னு எல்லாம் வளர்க்கிறோம். பணத்துக்கு பணமும் ஆச்சு, உரமும் கிடைக்கும், அதோட பார்ம் வச்சிருக்கிறது நம்ம கவுரவத்தை உயர்த்திக் காட்டும் விஷயமும் கூட அத்தான் !”
மடியில் சயனித்திருக்கும் கணவனின் தலை கோதியபடி சொன்னாள். 
“ஜில்லு, உன் அப்பா பெரிய ஆள் தான்! நாடு விட்டு நாடு போனாலும் நம் அடிப்படை தொழிலை சிறப்பாவே செய்யுறார். அங்கு விவசாயம் கவுரவச் சின்னமா பார்க்கப்படுது. நம்ம நாட்டுல சோறு போடுற விவசாயியை மனுஷனாவே மதிக்க மாட்டேங்குறாங்க. குழந்தைகளை டாக்டராவோ, என்ஜினீயராவோ ஆக்கத் தான் நினைக்கிறாங்களே தவிர விவசாயி ஆக்கனும்னு யோசிக்கிறதில்லை. “
“அப்போ நீங்க ஏன் பாஸ் கலப்பையை பிடிக்காம, கவன்மெண்ட் வேலை phd என்று போனீங்க?” என புருவம் உயர்த்த,
“அடிங்க… நான் விவசாயி டீ! என் அடிப்படை தொழில் பயிர் பண்றது தான். நாங்களும் ஸீரோ பட்ஜெட் பார்மிங் தான் பண்றோம். கூடவே தண்ணியை சேமிக்க சொட்டு நீர் பாசனம், கரண்ட்டை சேமிக்க சோலார் பேனல்ன்னு இயற்கையை பாதுகாக்கிறோம். இந்த படிப்பும் வேலையும் பயிர்த் தொழிலை உயிர்த் தொழிலா இன்னும் சிறப்பா பண்றதுக்கும் மத்தவங்களுக்கு கொண்டு சேர்க்கிறதுக்கும் தான். நான் கிராமத்தான்னு பெருமையா சொல்லிப்பேன். அதுலயும் உழவன்னு காலரைத் தூக்கி விட்டு கெத்து காட்டுவேன்! 
நாளைக்கு உன்னையும் வயலுக்கு கூட்டிப் போய் நடவுக்கு விட்டு உழவன் பொண்டாட்டின்னு பேஸ்புக்ல ஏத்துறேன்! அப்போ தெரியும் இந்த அத்தான் பெருமை” என மீசையை முறுக்கி விட்டுக்கொண்டவனுக்கு பெரிய பிரச்சனைக்கு எளிதாய் தீர்வு சொன்ன மனைவியிடம் மனம் உருகியது.
உன் ஐடியா ஓகே, பட் இது பெரிய வேலை!” என முகம் பார்க்க, இன்போ மட்டும் கலெக்ட் பண்ணிக் கொடுங்க, ஆப்பை (app) நான் ரெடி பண்றேன்!” என தோள் கொடுக்க முன் வந்தவளிடம் தன் அன்பையும், நன்றியையும் தெரியப்படுத்த எண்ணியவன், 
பின்னங்கழுத்தை வளைத்து தன்னருகே இழுத்து இதழோடு இதழ் பதித்து வன் முத்தம் கொடுக்க, திகைப்பும், வலியும் போட்டி போட வருடிக் கொண்டிருந்த கேசம் பற்றி வலிக்க இழுத்து தன் இதழ்களை விடுவித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் ஜில்லு!” கொஞ்சினான் கள்ளன். 
“ரௌடி! இப்படியா தேங்க்ஸ் சொல்லுவாங்க? இன்னும் வலிக்குது…!”
முகம் தூக்கியவளுக்கு தெரியவில்லை. ஆண்களின் கோபமோ, காமமோ, காதலோ, அன்போ வார்த்தைகளாக இல்லாமல் செயல்களாகத் தான் வெளிப்படும். உணர்வின் வீரியத்தை பொறுத்தே செயல் தன்மையும் இருக்கும் என்பது.
“இத்தனை நாள் மென்மையிலும் மென்மையாய் கையாளும் படித்த, நாகரீகமான கவர்மென்ட் ஆபீசரை தானே பார்த்திருக்க, இன்னைக்கு உன் மேல எக்கச்சக்க ஆசை வச்சிருக்கும் கிராமத்திய உழவன் மகனை பார்ப்படி!” என கிசுகிசுத்தவன் தன் தேடலைத் தொடங்க,
“ரௌடி… காட்டான்…!” எனும் முணுமுணுப்பெல்லாம் ஆள் மயக்கியில் வந்து முற்று பெற்றது. தொடர் கதையாய் மீண்டும், மீண்டும் நாட, துவண்டு போனவளாய்,
“என்ன?” என கேசம் கலைக்க,
“தெரியல, இன்னும் தேவைப்படுது!” எனும் கள்ளச்சிரிப்புடன் கரத்தோடு கரம் பிணைத்து அழுத்த,
“அம்மா!” அலறியேவிட்டாள்.
“என்னடா?” கரம் பற்றி பார்வையிட உள்ளங்கையில் வெடிப்புகளும், சிவந்த காய்ப்புகளும், நீர் கோர்த்த கொப்புளங்கள் அழுத்தம் தாங்காமல் நீர் வடிந்த நிலையில் இருந்தன.
“என்னடி இது?” பதட்டத்துடன் கேட்டவன், 
“தண்ணீர் இறைச்சதாலயா? ஏன் சொல்லலை லூசு!?” கடிந்து கொள்ள, 
“சொல்லியிருந்தா என்ன செஞ்சுருப்பீங்க…போகப் போக பழகிடும்ன்னு சொல்லியிருப்பீங்க…விடுங்க பாஸ்! துவைக்கும் சோப்பும் ஒத்துக்க மாட்டேங்குது போல, சரியாயிடும்!” என வெகு இயல்பாய் சொல்ல,
“நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரனாடி? அதிகப்பிரசங்கி!” சிடுசிடுத்தபடி அறையை விட்டு வெளியேற,
“எங்க போறீங்க?”
“இருடி வரேன்…” கூறிச் சென்றான். திரும்பி வந்தவனின் கையில் குட்டிக் கிண்ணமும் அதில் மஞ்சளும், எண்ணையும் சேர்ந்த கலவையும் இருந்தன.அவள் கரம் பற்றி மெல்ல மருந்தைத் தடவ,
“ஸ்… ஆ…” எனத் துடித்தாள். 
“கொஞ்சம் பொறுத்துக்கோ. காலையில் சரியாயிடும். இல்லைன்னா ஹாஸ்பிடல் போலாம்… சாரிடா! எங்களுக்கு இதெல்லாம் எக்சசைஸ் மாதிரி, அது தான்  பைப் போட நினைக்கல, இந்த பிஞ்சு கைக்கு தாங்கலை. சீக்கிரம் மாத்திடுறேன் என புறங்கையில் முத்தமிட்டவனின் மீது காதல் பெருக, விழியோடு விழி பார்த்து,
“வோ ஐ நி (wo ai ni) சோங் அர் (chong er)” என கன்னத்தில் முத்தமிட்டாள். 
“இதுக்கு என்ன அர்த்தம் ஜில்லு?” சிறு சிரிப்புடன், புருவம் உயர்த்த,
“ம்… ரொம்ப தாங்க்ஸ்ன்னு அர்த்தம்” உதடு கடித்து சிரிப்பை கட்டுப்படுத்தினாலும், கண்கள் சிரிப்பதை கண்டுகொண்டவன், அவள் கன்னம் தாங்கி,
“அப்போ ஷிய ஷிய (xie -xie ) ன்னா ஐ லவ் யூ டார்லிங்ன்னு அர்த்தமா உங்க ஊர்ல?” என அவள் நெற்றி முட்டி கேட்க,
கடவுளே, மாத்தி சொன்னதை கண்டு கொண்டது மட்டுமில்ல சரியான அர்த்தத்தையும் சொல்றானே!” என்று திகைப்பும், விழிப்புமாய்,  
“உங்களுக்கு எப்படி தெரியும்?” எனச் சிணுங்க,
“இப்படியெல்லாம் சிணுங்கி என்னை டெம்ப்ட் பண்ணாத, அப்புறம் கஷ்டம் உனக்குத் தான்!” கேலியாய் சொன்னவன், மனைவியை மடி மீது அமர்த்திக் கொண்டு,
“தெரியும், எங்க… சைனீஸ்ல ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்ன்னு சிலிர்த்துக்கிட்டு நின்னியே அப்போவே வேணும்னே மாத்தி சொல்லி என்னை காமெடி பீசாக்க பிளான் பண்ணுவன்னு தெரியும். அதான் அன்னைக்கே படிக்க ஆரம்பிச்சுட்டேன். 
சைனீஸ்ல எழுத, படிக்க, பேசத் தெரியலைன்னாலும் நீ சொல்றதையாவது புரிஞ்சுக்கனுமே இல்லைன்னா இப்படித் தான் ஐ லவ் யு டார்லிங்ன்னு சொல்லிட்டு தேங்க்ஸ் சொன்னேன்னு கலாய்ப்ப, அத்தான் கிட்ட உன் தில்லாலங்கடித் தனமெல்லாம் செல்லாது ஜில்லுக்குட்டி!” என கன்னம் கிள்ளி சிரித்தான். மார்பில் கன்னம் அழுத்தி மீண்டும்,
“வோ ஐ நி சோங் அர்!” என உதடு குவித்து முத்தமிட்டாள்.
“வோ ஷி குவான் நி” (wo xi huan ni ) என நெற்றியில் முத்தமிட்டு இதமாய் அணைத்துக் கொண்டான்.
“என்னத்தான்… இன்னும் பிடிச்சிருக்குன்னு தான் சொல்றீங்க! என் மேல லவ் வரலையா?” முகம் வாட கேட்டாள். 
“சாரி ஜில்லு, ஈர்ப்பா இருந்தது பிடித்தமா மாறியிருக்கு அவ்வளவு தான். கூடிய சீக்கிரம் பிடித்தம் காதலா மலரனும்னு தான் நானும் ஆசைப்படுறேன்டா!” 
“அன்பா நடந்துக்கிறது, கேரிங்கா பார்த்துக்கிறது, தப்பு செஞ்சா கண்டிக்கிறது இதெல்லாம் காதல் இல்லாம வேற என்னவாம்? ” முகம் தூக்கினாள். 
“உன்னை பொறுத்தவரை இது தான் காதல்! ஆனால் எனக்கு காதல்ன்னா சுயம் தொலைக்கிறது!” அழுத்தமாய் சொன்னான்.
“புரியல…” சிறு எரிச்சல் வந்து ஒட்டிக்கொண்டது அவளிடம். காதலர்க்கிடையில் நான் நீங்கிற கான்சப்டே கிடையாது. என்னில் உன்னையும் உன்னில் என்னையும் பார்க்கிறது தான் காதல்!” அதாவது தன்மானம், ஈகோ, வீம்பு, வைராக்கியம், சுயமரியாதை இதுக்கெல்லாம் இடமே கிடையாது. முழு சரணாகதி தான் காதல். எளிமையா சொல்லனும்ன்னா என் ஜில்லு என் தன்மானத்தை உரசிப்பார்க்கிற மாதிரி என்ன சொன்னாலும், செஞ்சாலும் எனக்கு கோபமோ, வருத்தமோ வரக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் மனசு முழுக்க காதல் தான் நிரம்பி இருக்கனும்! அன்பை கொட்டனும்! நான் என்ன சொல்றேன்னு புரியுதா ஜில்லு?”
“ம்… ஏதோ பெருசா, ரொம்ப பெருசா, உயர்வா சொல்றீங்க புரியுது. கூடவே உங்ககிட்ட காதலை மலர வைக்கிறது கஷ்டம்ன்னு தோணுது. பட் நீங்க மட்டும் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுடீங்க… இந்த உலகத்திலேயே நான் தான் லக்கியஸ்ட்டுன்னும் தோணுது! நீங்க அப்படி என்ன பெரிய அப்பாடக்கர்? ஜில்லுக்குட்டி, வோ ஐ நி ன்னு ஊரறிய சொல்ல வைக்கனும்னு வெறியாகுது!” (கத்த விடுவோமா இல்ல கதற விடுவோமா பேபி?! சாய்ஸ் ஐஸ் யுவர்ஸ்) என்றவளின்  குறுகுறு பார்வையை ரசித்தவன், 
“ஆல் தி பெஸ்ட்!” என நெற்றியில் முத்தமிட்டு கையணைப்பில் இறுத்தியபடி சயனித்துவிட்டான். (பீ கேர்புல்… நாங்க உன்னை சொன்னோம்!)
“காதல் இல்லாம இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? கணவன், மனைவிங்கிற பிணைப்புக்காக இவ்வளவு இணக்கமா குடும்பம் நடத்துறவன், காதலோடு வாழ்ந்தா எப்படி இருக்கும்? வேணும்! எனக்கு அந்த வாழ்க்கை தான் வேணும்! அதுக்கு இந்த வில்லேஜ் விருமாண்டியை இம்ப்ரஸ் பண்ணியே ஆகனும். 
சுயம் தொலைச்சு கிறுக்கனா என் பின்னாடி சுத்த விடனும். ஆசையா பேர் சொல்லி கூப்பிட விடமாட்டேங்கிறல்ல அவ்வளவு சுயகவுரவம் பார்க்கிற… இரு எல்லாத்தையும் ஒழிச்சு கட்டுறேன்.’ கங்கணம் கட்டிக்கொண்டவளாய் எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற திட்டமிடலுடன் கண்ணயர்ந்து விட்டாள். 
மீதம் நாளை சொல்லுவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!