“ஃபைன், நேரா விஷயத்துக்கே வர்றேன். அலெக்ஸ் இப்போ எங்க இருக்காரு? அவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்? ஐ மீன், உண்மையான ரிலேஷன் என்ன?”என கேட்டுவிட்டு, அமுதாவின் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் அமர்ந்திருந்தான்.
இனி:
“அலெக்ஸ் பத்தி ஏன் கேட்கறீங்க?”என நடுவில் வினவிய சுரபிக்கு மதிமாறன் பதிலளிக்கவில்லை. அமுதாவின் முகத்திலேயே கண்களை பதித்திருந்தவனுக்கு, அமுதாவின் கண்கள் இரண்டிற்கு பதிலாக நான்காக தெரியத்துவங்கியது. தலையே லேசாக சிலிப்பிக் கொண்டு மீண்டும் அமுதாவின் முகம் பார்க்க, இப்போது அமுதாவின் கண்கள் மட்டும் இன்றி, முகமே இரண்டாகத் தெரிய, மெல்ல சோஃபாவில் தலையை பின் நோக்கி சாய்த்துக் கொண்டான். மதிமாறனின் நிலையைக் கண்டு சுரபி எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றவள், அடுத்து கையில் பிடித்துக் கொண்டு வந்த வஸ்துவை மதிமாறன் கண்டிருந்தால் சத்தியமாக நம்பியிருக்க மாட்டான்.
சுரபி கைகளில் பிடித்திருந்தது, என்னவென்று மதிமாறன் முழு சுரனையுடன் இருக்கும் வேளையில் நிட்சயம் கண்டுபிடித்திருப்பான். கைகளில், மருத்து நிரம்பிய சிரஞ்சை கொண்டு வந்தவள், அதை மதிமாறனின் கைகளில் லாவகமாக செலித்திவிட்டு நிமிர்ந்தாள். அமுதா அதுவரையிலும் எதுவும் பேசாமல் சுரபியின் செய்கையை நோட்டம் விட்டபடிக்கு உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டு, வேகமாக எழுந்து அலமாறியைத் திறந்து அந்த கனமான நைலான் கயிற்றினைக் கொண்டு வந்தாள். அக்கா தங்கை இருவரும் மெல்ல மதிமாறனின் கைகளை பின்னுக்குத் தள்ளி முதுகுடன் சேர்த்து பிணைத்து, அதே போல் கால்களையும் இறுக்கமாக கட்டினர்.
கட்டிய முடிச்சுகளை இறுக்கமாக இருக்கிறதா என நன்றாக சரிபார்த்துவிட்டு, எழுந்த போது, சுரபியின் கண்கள் லேசாக கலங்கியிருப்பதை அமுதா கண்டாள்.
“ஸாரி சுபிம்மா…இப்படி நடக்கும்னு நாம எதிர்பார்க்கலை. நேத்தே உன் ஏ.சி.பி பெங்களூர் கிளம்பி வர்றேன்னு ஒரு வார்த்தை உனக்கு சொல்லியிருந்தார்ன்னு வை, நாம முன்னாடியே வேற ஏற்பாடு பண்ணியிருக்கலாம். டைம் இல்லாம போச்சு….ஐம் வெரி சாரி டியர்”என மொழிந்தபடிக்கு சுரபியின் தோளை சற்றே அழுத்திய அமுதா, “சரி, அடுத்த வேலைகளைப் பார்ப்போம். வீ டோண்ட் ஹேவ் மச் டைம்…அந்த பையன், அபினவ் என்ன பண்ணறான்னு பாரு…”என சுரபிக்கு சொல்ல, சுரபி மறுபேச்சின்றி, பூட்டியிருந்த அந்த மூன்றாம் அறையினை அடைந்தாள்.
அறையை திறக்கும் முன்னர், “சுபி, மாஸ்க் மறந்துட்டு போற”என பின்னால் அமுதாவின் குரல் குலுக்கியது. தன் தவறை உணர்ந்து சுபி, ஒரு பெருமூச்சு எடுத்துக் கொண்டு, அலமாறியின் மேல் டிராயரைத் திறந்து, அந்த பென்10 மாஸ்கினை எடுத்து தலையில் பொருத்திக் கொண்டு கதவுகளை தள்ளி உள்ளே சென்றாள். அந்த சிறுவன், சற்றே பயந்து போய் கட்டிலில் அமர்ந்திருந்தான். பென்10 உருவம் உள்ளே வரவும், சட்டென எழுந்து சுவற்றின் அருகில் நெருக்கமாக நின்று கொண்டான்.
“யார்….யார் நீங்க? என்னை ஏன் புடிச்சு வச்சிருக்கீங்க”என பயத்துடன் வினவியவனிடம் எதுவும் பேசாமல் நின்றிருந்த பென்10சுரபி, “பீட்சா சாப்பிடலையா?”என கேட்ட போது குரல் அச்சு அசல் ஆண் குரலாக இருந்தது. பயந்த முகத்தோடு நின்றிருந்த சிறுவன், பதில் சொல்லாமல், அந்த அறையின் மேஜையில் வைத்திருந்த பீட்சாவையும், பென்10 உருவத்தையும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
“உங்க அப்பா அம்மாட்ட போகணும்னா சீக்கரம் சாப்பிடு…இல்லை, நீ சாப்பிடற வரைக்கும் இங்கையே தான்.”என மொழிந்துவிட்டு, அவனது பதிலுக்காக காத்திராமல் அறையில் இருந்து வெளியேறினாள். வெளியே வந்ததும், முகமூடியினைக் கழற்றி, அதனிடத்தில் வைத்தவள். சாப்பாட்டு மேஜையின் மேல் மூடிவைத்திருந்த அமுதாவின் ஆப்பிள் கணிணியை உயிர்பித்து, உள்ளே ஒரு டெடிபியர் பொம்மையின் கண்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா மூலமாக அறையின் உள்ளே அந்தச் சிறுவன் என்ன செய்கிறான் என்பதை நோட்டம் விட்டாள்.
சற்றே தயக்கத்துடன் சுவர் அருகில் நின்றிருந்தவன், மெல்ல மெல்ல, பீட்சா வைத்திருந்த அட்டைப் பெட்டியில் இருந்து ஒரு துண்டினை எடுத்து, முதலில் முகர்ந்து பார்த்தபின்பு,ஒரு பெரிய துண்டினைக் கடித்தான். “சாப்பிடறானா?”என அமுதாவின் குரல் தோள் அருகில் கேட்டது. “ம்ம்ம்ம்ம்..”என திரும்பாமல் பதிலளித்த சுரபி, டைனிங் டேபிளின் அருகே கீழே கிடத்தப்பட்டிருந்த மதிமாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளது அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள்.
அமுதாவிற்கு சுரபியின் மனநிலை சற்றே கவலை அளித்தது. மதிமாறனிடம் நெருங்கிப் பழகி, மிதுனா கேஸ் எந்த மட்டில் உள்ளது என நான் தெரிந்து கொள்கிறேன் என்று யோசனை கூறியது சுரபி தான். “போலீஸ் சகவாசம் வேண்டாம் சுபி. ஆபத்து”என அமுதா பலமுறை எடுத்துக்கூறிய போதும், “டிபார்ட்மெண்டில எந்த அளவுக்கு இந்த கேஸ் இருக்கு? என்ன கண்டுபிடிக்கறாங்கன்னு நமக்கு தெரிஞ்சுக்க இது ஒரு நல்ல சான்ஸ் அமுதாக்கா..நான் சந்தேகம் வராதமாதிரி பார்த்துக்கறேன். நீ கவலைப்படாத”என தேறுதல் கூறியதும் அவளே தான். சில தினங்கள் கழித்து, “ஏ,சி.பி என்னை லவ் பண்ணறாராம் அமுதாக்கா…நம்ம வேலை ரொம்ப சுலபமாயிட்டே போகுதில்லை.”என மொழிந்தவள், அடுத்த சில தினங்களிலேயே, “சும்மா விளையாட்டு சொன்னாராம்…சீரியஸா இல்லையாம்”என சொல்லிய போது, அமுதாவிற்கு சுரபியின் பேச்சும் நடத்தையும் சற்றே வேற்றுமையாக இருந்தன.
“நிஜமாகவே மதிமாறனை விரும்பத் துவங்குகிறாளோ”என்ற சந்தேகம் வலுபெறவும் செய்தது. எத்தனை முறை அமுதா கேட்ட போதும், “அதெல்லாம் இல்லை… நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத”என மொழிந்துவிடுவாள். ஒருமுறை, “சுபி, இதெல்லாம் வேணா விட்டுட்டு, நீ நார்மலா அவனையே கல்யாணம் பண்ணிக்கோ. நல்ல பையனா தெரியறான். உன்னை நிஜமாவே லவ் பண்ணறான்…”என எடுத்துரைத்த போது,
“பைத்தியமா நீ?”என கலகலவென சிரித்துச் சென்றவள், இன்று, மதிமாறன் கை கால்கள் கட்டுண்டு கிடந்த போது, கண்களில் கண்ணீர் மல்க அவனைப் பார்த்த பார்வையில், சுரபியின் ஆழ்மனமும், அதன் அப்பழுகற்ற காதலும் ஒரு நொடி அமுதாவிற்கு புரிந்தது. ஆனாலும் இதையெல்லாம் தான் சொன்னால் கேட்டும் தங்கை அல்லவே சுரபி என நினைத்தவள், மேலே ஏதும் பேசாமல், அவளது அறையினுள் சென்று, முக்கியமான ஆவணங்களையும், இரண்டு செட் துணிகளையும் அந்த அமெரிக்கன் டூரிஸ்டர் பேக்கினுள் அடுக்கினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து, மதிமாறனுக்கு லேசாக விழிப்பு தட்டியது. தான் எங்கே இருக்கிறோம் என்ற நினைவு அரவே மறந்து போயிருக்க, கண்களின் மீது இரண்டு பெரிய கற்களை கட்டிவிட்டது போல் இமைகள் வலித்தன. இயல்பாக கண்களை திறக்க இயலாதவண்ணம் தலை விண்ணென்று இழுத்தது. நாக்கு எப்போதோ வரண்டு போயிவிட்டிருக்க, தன்னை தட்டி எழுப்பி அமரவைத்த முகத்தை கலங்கலாக நோக்கினான். முகம், சற்றே சற்றே தெளிவு பெற, அவன் முன்னே முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் சுரபி நின்றிருந்தாள். சற்றே தள்ளி நின்றிருந்த அமுதாவின் முகம், “பாவம்”என்ற உணர்ச்சியை லேசாக பூசியிருந்தது.
எந்த அளவிற்கு அமுதாவின் சாந்தமான முகத்தை நம்ப இயலவில்லையோ, அதைவிடவும் கல்லென மாறிப்போயிருந்த சுரபியின் முகபாவனைகளை காண மதிமாறனால் முடியவில்லை. எந்த கேள்வியும் கேட்காமல், எந்த வசவு பேச்சுகளும் பேசாது, “ஏன்?”என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க, மதிமாறன் சுரபியை ஏறிட்டபடிக்கு சுவற்றில் சாய்வாக அமர்ந்திருந்தான்.
மதிமாறனின் முகமும் கண்களும் மயக்கம் குறைந்து, தெளிவு பெருவதை உணர்ந்த அக்கா தங்கை இருவரும், மதிமாறனை மெல்ல ஹாலின் சோஃபாவில் கொண்டு வந்து அமர்ந்தவாக்கில் வைத்தனர். கைகளும் கால்களும் இன்னமும் நைலான் கயிற்றினால் பின்னப்பட்டிருக்க, அதனை இழுத்துப் பார்க்கக்கூட தெம்பு இன்றி வெறுமனே அமர்ந்திருந்தான். மதிமாறனின் மனநிலை என்னவென்று அவனுக்கே புரிபடவில்லை.”காதலித்தவள் ஏமாற்றிவிட்டாள்”என வருந்துவதா, “காதலி தான் கடத்தல்காரி, அவளை கண்டுபிடித்துவிட்டேன்”என மகிழ்வதா என புரிபடவில்லை. ஆனால் அவனது கண்கள் ஒரு நொடி கூட அங்கும் இங்கும் எங்கும் பிளறாமல், சுரபியின் முகத்திலேயே நிலைத்திருந்தன.
சுரபிக்கு இவன் ஏதாவது திட்டானல் கூட பரவாயில்லையே எனத் தோன்றத் துவங்கிவிட்டது. “துரோகி, ஏமாற்றுகாரி, கடத்தல்காரி, “என வார்த்தைகளால் ஏசிவிட்டால் தேவலாம். அதைவிடுத்து, கண்களால் கேள்விகேட்பதை தாங்கிக் கொள்ளும் மனத்துணிவு சுரபிக்கு, இத்தனை கடத்தல்களை பயமின்றி, எவரும் அறியாமல் திறம்பட செய்த சுரபிக்கு இல்லாமல் போனது அதிசயம் தான். அமுதாவிற்கு சுரபியின் மனநிலையும், மதிமாறன் மேல் அவள் கொண்டுள்ள ஆள்மனதின் காதலும் புரிந்தபோதும், தங்கையை எதுவும் கேட்க இயலாமல் வெறுமனே நின்றிருந்தாள்.
மதிமாறன் எந்த கேள்வியும் கேட்காமல் அமர்ந்திருந்தது சுரபிக்கு ஏதோ செய்திருக்க வேண்டும். எந்த பதிலும் பேசாமல், “அக்கா நான் சீக்கரம் வந்திடறேன். மேக்ஸிமம் முக்கால் மணி நேரம். ரெடியா இரு”என அமுதாவை மட்டும் பார்த்துப் பேசியவள், நொடி நேரம் நிற்காமல், அலமாறியின் கார் சாவியினை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென கதவினை நோக்கி வேகமாக நடந்திருந்தாள்.
அவள் சென்ற வெகு நேரம் வரையிலும் மதிமாறன் சுரபி அடித்துச் சாத்திச் சென்ற கதவுகளையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனையும் அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கோடு வழிந்திருந்தது. அருகே நின்றிருந்த அமுதாவிற்கு மதிமாறனைக் காண பெரும் குற்றஉணர்ச்சி உண்டானது.
என்ன நினைத்தாலோ, மதிமாறன் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தவன் போல், “ஏன் அமுதா?”என இரண்டு வார்த்தைகளில் வினவியவனைக் காண அமுதா உண்மையிலேயே சங்கடப்பட்டாள்.
“எங்க இருந்து சொல்ல ஆரம்பிக்கறதுன்னு எனக்குத் தெரியலை மதிமாறன். ஏன்னா, உங்ககிட்ட ஆரம்பத்தில இருந்து சொன்னது பாதி பொய், பாதி நிஜம். சுரபி உங்ககிட்ட என்னல்லாம் சொல்லியிருக்கானு எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனா, இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல, விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை தான். ஆனா, இதுநாள் வரையில நாங்க எந்த ஒரு மனுஷனையும் எங்க தேவைக்காக உபயோகப்படுத்திக்கலை.”
“ நீங்க தான் முதல், அதுவும் நீங்க மட்டும் நேத்து ஒரு தடவை கால் பண்ணிட்டு வந்திருந்தீங்கன்னா, நாங்க சுதாரிச்சிருப்போம். இவ்வளவு தூரம் வந்திருக்காது.எனக்கு என்ன சொல்லரதுன்னே தெரியலை”என உணர்ச்சிகரமாக அமுதா பேசியதை நம்புவதா வேண்டாமா என்பது போல் மதிமாறன் அமர்ந்திருந்தான். அவனது புத்தி முன்னைக்கு இப்போது சற்றே தெளிந்திருந்தது.
அமுதா சொல்லவரும் விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் அளவிற்கு நினைவு வந்திருந்தது. அமுதாவிடம் எதுவும் கேட்கவேண்டும் என்று தோன்றாவிடினும், இதெல்லாம் எதற்காக ஏன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்களில் வெளிப்படுத்தினான். “ஏன்…?”என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன கேட்பது என்று தெரியவில்லை. இந்த ஒருவார்த்தையை கேட்பதற்கே மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
“நீங்க எதுவும் கேட்க வேண்டாம் மதிமாறன். நானே உங்களுக்கு விளக்கமா சொல்லறேன். எங்க இருந்து ஆரம்பிக்கட்டும்? ம்ம்ம்ம்…”என பேசத்துவங்கிய போது, அமுதாவின் குரலில் இருந்த பட்சாதாபம் விடை பெற்றுச் சென்றிருந்தது. அதற்கு பதில் வழமையான ஏளனமும், தன் பெருமைகளை செல்லத் துவங்கும் ஆர்வமும் அதிமாக பேச்சில் தொனித்தது. மதிமாறன் எதுவும் பேசாமல், குறுக்கிடாமல் கவனம் மூழுவதையும் ஒன்று திரட்டி, அமுதாவின் தற்பெருமைகளை தாங்கிக் கொள்ளத் தயாராக அமர்ந்திருந்தான்.
“எங்க பேர், ஊர்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா. அந்த கதை அன்னைக்கு ஹாஸ்பிடல்ல சொன்னேனே…நியாபகம் இருக்கும்னு நினைக்கறேன். அந்த கிளிநொச்சி, இலங்கை அகதிகள்ன்னு, அது முழுக்க முழுக்க எங்களோட கற்பனைக் கதை. நாங்க ஈழத்தமிழர்கள் இல்லை. முக்கியமா என் பேர் அமுதா இல்லை. உங்க சுரபி பேர் சுரபியும் இல்லை. என்னோட நிஜப் பேர்…., அதாவது என் அப்பா அம்மா வச்ச பேர்….சரி விடுங்க…அது எதுக்கு இப்போ….உங்களுக்கு நாங்க “அமுதசுரபி”யாவே இருந்துட்டு போய்கறோமே… இன்னும் ஒரு உண்மையை சொல்லட்டுமா மதிமாறன், நீங்க நினைச்ச மாதிரி, இந்த உலகம் நம்பின மாதிரி, நாங்க அக்கா தங்கை இல்லை…..”என்று நிறுத்தி மதிமாறனின் முகபாவனைகளை நோட்டம்விட்டாள் அமுதா. அவன் எதுவும் சொல்லப்போவதில்லை எனக் கண்டுகொண்ட பின் மீண்டும் மெல்லிய குரலில் பேசத் துவங்கினாள்.
“சுரபி என்னோட சொந்த தங்கை இல்லை. ஏன், ரத்த சொந்தம்கூட இல்லை. அப்போ நாங்க யாரு. உண்மையா எங்க இருந்து வந்தோம்? ஏன் இப்படி குழந்தைகளைக் கடத்தி பணம் சம்பாரிக்கறோம், இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு வரலாம். வரும். வரணும். மிஸ்டர். மதிமாறன், நாங்க யாருன்னு சொல்லறதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்கு தெளிவுபடுத்த நினைக்கறேன். இதெல்லாம் நாங்க ஏன் செய்யறோம்…இவ்வளோ ரிஸ்க் எதுக்கு…எங்களுக்காகவா?”
“ இல்ல…என் அம்மாவுக்காக, என் அப்பாவுக்காக, என் தம்பி தங்கைக்காக….என் அப்பாவுக்கு காசநோய், சாப்பாட்டுக்கே வழியில்லாம பல நாள் பட்டினி கிடந்திருக்கோம், தம்பிக்கு கைகால் வராது, கண்ணு தெரியாத அம்மா, அவங்களை கவனிக்க முடியாம தள்ளாடற அக்கா…இவ்வளவு கஷ்டமா எந்த 80இஸ் பட ஃப்ளாஷ் பேக்கும் எங்க கதையில எதிர்பார்க்காதீங்க”என்று உண்மைபோல பொய் சொல்லிக் கொண்டிருந்த அமுதாவின் பேச்சைக் கேட்டு தன்னையும் அறியாமல் மதிமாறனின் இதழ்கள் சற்றே விரிந்தன.
“ஓ, நான் சொல்லற ஸ்டோரி காமெடியா இருக்கா, நல்லது…மிச்சமும் கேளுங்க..”என மதிமாறனின் நொடி நேர புன்னகையை கவனித்த அமுதா, மேலே பேசினாள்.
“எங்க விட்டேன்…ம்ம்ம்ம்…ஃப்ளாஷ் பேக். ஜென்டில்மேன் பட ஸ்டைல்ல, நாங்க கொள்ளையடிச்சதையெல்லாம் ஹாஸ்பிடலா, ஸ்கூலா கட்டியிருக்கோம்னு சொன்னா நம்புவீங்களா?”என அமுதா வினவ, மதிமாறன் இல்லை என திடமாக தலையசைத்தான்.
“சரியான பதில். எங்க எங்களை இன்னமும் நல்லவங்கன்னு நினைக்கறீங்களோன்னு நினைச்சுட்டேன். குட், டிராங்குலைசர் இறங்க ஆரம்பிச்சிருச்சு….நான் என் கதையை வேகமா சொல்லி முடிச்சிடறேன். சரியா…ஏன்னா, இன்னும் கொஞ்ச நேரத்தில சுரபி வந்திருவா… சரி, நாங்க யாரா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க…எனி கெஸ்….எதுவும் இல்லையா?, நான் சுரபி, எங்களை மாதிரி இன்னும் இருக்கற பல்லாயிரம் பேர், எங்களை நீங்க தினம் தினம் பார்க்கறீங்களே….நியாபகம் வரலை?.ஐ மீன், நீங்கன்னா நீங்க இல்லை, இந்த சமுதாயம். சொசைட்டி. தினமும் ரோட்டில, பஸ்ஸ்டாப்ல, ரயில்வே ஸ்டேஷன்லன்னு எல்லா இடத்திலையும் நாங்க இருப்போம். நீங்க பார்ப்பீங்க, ஆனா உங்க கண்ணுக்கு நாங்க தெரியமாட்டோம்..”
“என்னடா, மந்திரவாதி மாதிரி பேசறாளேன்னு யோசிக்கறீங்களா….மந்திரமும் இல்லை, மாயமும் இல்லை. உங்களுக்குகெல்லாம் எங்களை தெரியாது. நாங்க எதிர்ல நின்னாலும், உங்க கண்கள் எங்களை கவனிக்காது. இன்னும் நாங்க யார்ன்னு தெரியலைன்னா, சிம்பிளா ஒரு க்ளூ தர்றேன். இதுக்கு கண்டிப்பா ஆன்சர் உங்களுக்குத் தெரியும். உலகத்திலையே மொத மொதலா ஹேண்ட் பேக் போட்ட வம்சம் நாங்க…இன்னும் புரியலை, தெளிவா சொல்லனும்னா, குறத்தி. இன்னமும் லோக்கலா சொல்லனும்னா ஊசி பாசி விக்கறவங்க, நரிகுறவர்ங்க….பார்த்திருப்பீங்களே…”
“ரோட்ரோரத்தில, அழுக்கோட அழுக்கா, சாயம் மங்கி, போட்டிருக்கற டிரஸ் கலர் என்னன்னு தெரியாம, கையில குழந்தையோட, பத்து ரூபாய்க்கு கலரிங்க் புக்கும், பெரிய பலூனும் வித்துட்டு சிக்னலுக்கு சிக்னல் நிப்பமே….கண்டிப்பா பார்த்திருப்பீங்க…பெரிய மனசு பண்ணி ரெண்டு புக் வாங்குனாலும் வாங்கியிருப்பீங்க…ஆனா, எங்களைப் பத்தி, நாங்க எங்க தூங்கறோம், என்ன சாப்படறோம், எங்க வாழ்க்கை என்னன்னு ஒரு நிமிஷம் கூட யோசிச்சிருக்கமாட்டீங்க…ஏன்னா, உங்க கண்ணுக்குத் தான் நாங்க மனுஷங்களா தெரியமாட்டமே.” என நிறுத்திய அமுதாவின் கண்களில் இவ்வளவு நேரம் மெல்ல மெல்ல அதிகரித்திருந்த கோபம், வெறியாக மாறிவிட்டிருந்தது.
மதிமாறன் இமைக்க கூட மறந்து அமுதாவின் பேச்சை, மகுடிக்கு மயங்கிய நாகம் போல் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். சில நொடி அமைத்திக்குப் பின், அமுதா மீண்டும் பேசத் துவங்கினாள்.
“நானும் சுரபியும் ஒரே ஜாதி குறத்திங்க. பக்கத்து பக்கத்து டெண்ட் வீடு. எங்க அம்மாவும் ,அவ அம்மாவும் சேர்ந்து தான் சமைப்பாங்க. என் அப்பனும், அவ அப்பனும் சேர்ந்து தான் குடிப்பானுக, என்னையும் அவளையும் சேர்ந்து சிக்னல்ல பிச்சை எடுக்க வைப்பானுக. எல்லாமே நல்லவிதமா போயிட்டிருந்தப்ப, அதாவது நாங்க பாட்டுக்கு, சிக்னல், பிச்சை, பலூன் விக்கறது, டோரா கலரிங் புக்ன்னு என்னமாவது வித்து, வயித்தை நிறைச்சுகிட்டிருந்த ஒரு நாள் என் அப்பனுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிச்சுது. என் மூலமா. அதும் எப்படிபட்ட அதிர்ஷ்டம், 12 வயசு மகளை சிக்னல்கிட்ட தள்ளுவண்டி வச்சிருக்கற ஒரு 40 வயசுகாரனுக்கு கல்யாணம் செஞ்சு குடுக்கற அதிர்ஷ்டம். நானும் ஆன மட்டும் அழுது பார்த்தேன், என் அப்பாவும் அம்மாவும் கேட்கறதா இல்லை.
“விடிஞ்சா கல்யாணம், அந்த நாள் ராத்திரி, இவ அப்பா என் அப்பான்னு எல்லாரும் தண்ணியடிச்சிட்டு படுத்திருந்தப்ப, இவளும் நானும் ஊரைவிட்டு ஓடறதா திட்டம் போட்டிருந்தோம். இவ ஏன் எங்கூட வரணும்னு நினைச்சான்னா, நான் ஓடிட்டா, அடுத்து,பலிகடாவா இவளை ஆகிடுவாங்க…அதனால ரெண்டு பேருமே சேர்ந்து ஓடிரலாம்னு இருந்தோம். எங்க கெட்ட காலம், சரியா போறப்போ, எங்க கூட்டத்தில ஒருத்தன் எங்களை கவனிச்சுட்டான். எங்க கத்தி, மத்தவங்களை எழுப்பிடுவானோன்னு பயத்தில, அவனை கீழ தள்ள, அவன் கல்லுல விழுந்து மண்டை ஒடஞ்சு மயக்கமாயிட்டான். செத்துடானோ இல்லையோ தெரியலை. அப்போதைக்கு தப்பிச்சா போதும்னு டிரெயின் ஏறிட்டோம்.”
“டிக்கெட் எடுக்கலை.ஏதேதோ ஊர்லாம் சுத்தி அலைஞ்சு, கடைசியா சேர்ந்தது நாகபட்டினம். அங்க நிஜமாவே அந்த சர்ச் முன்னாடி சுரபி மயங்கி விழுந்துட்டா. அவளுக்காக சர்ச்குள்ள போய் உதவி கேட்டு, அப்பறம், எங்க கதையை சொல்லி, அங்கையே சேர்ந்துகிட்டோம். அன்னைக்கு ஆக்ஸிடெண்ட் ஆனப்போ சுரபி, அந்த குழந்தையோட அம்மாவை அடிச்சாளே, அது கூட அவ அம்மாவை நினைச்சுத்தான். பெத்துமட்டும் போட்டுட்டு எனக்கு என்னன்னு திரியற அவ அம்மாவோட நியாபகம் அதிகமாகித் தான் அன்னைக்கு அந்த அம்மாவை அடிச்சா.. நான் சொல்லற விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். நானோ, சுரபியோ உங்ககிட்ட முழுக்க பொய் சொல்லலை. அதே சமயம் முழுக்க உண்மையும் சொல்லலை.” என நிறுத்திக் கொண்டாள். இதற்குள் மதிமாறனின் மயக்கம் முழுவதுமாக நீங்கியிருந்தது.
“அலெக்ஸ் யாரு? அவனும் உங்க கூட கூட்டா? அவன் சொல்லித்தான் நீங்க கடத்தறீங்களா?”என நீண்ட நேர அமைதிக்குப் பின் மதிமாறன் வினவினான். அவனது கேள்வி, அமுதாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. “புத்தி கொஞ்சம் தெளிஞ்சதுக்கு அப்பறம் நிறைய கேள்வி கேட்கத் தோணுதில்லை. ம்ம்ம்ம்….”என சிரிப்புடன் மொழிந்தவள், மீண்டும் பேசத் துவங்கினாள்.
“அலெக்ஸ் பத்தி தெரியனுமா? என்ன தெரியனும்? அப்படி ஒரு ஆளே எங்க வாழ்க்கையில இல்லைன்னு சொன்னா நம்புவீகளா ஏ.சி.பி.சார்?”என நிறுத்த, மதிமாறன் அதிக கவனத்துடன் அமுதாவை ஏறிட்டான். “ஏ.சி.பி. சார், உண்மையில அலெக்ஸ்ன்னு ஒருத்தன் நாங்க ஆஸ்ரமத்தில இருந்தப்போ கூட இருந்தான். எங்ககூடவே இருப்பான், என்னையும் சுரபியையும் நல்லா கவனிச்சுக்குவான். ஏன்னா, அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம். அவனே நிறைய தடவை சொல்லியிருக்கான். என்னை விட மூனு வயசு பெரியவன், “நீ பெரியவளானதும், உன்னை நான் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பான். கிறுக்கன். ஆஸ்ரமம் முடிஞ்சு சென்னைக்கு வேலை தேடி போயிட்டான். அப்பறம் அவன் என்ன ஆனான், எங்க போனான்னு ஒரு தகவலும் இல்லை. ஆனா, அவன் கேரக்டரை நாங்க கொஞ்சம் யூஸ் பண்ணிகிட்டோம்னு சொல்லலாம்.”என பதிலளித்தான்.
“ஏன் பர்டிகுலரா அலெக்ஸ்?அவனை எதுலையாவது மாட்டிவிடனும்னு எண்ணமா?”என மதிமாறன் விடாமல் கேட்க, அமுதா சற்றே பரவசப்பட்டாள். “என்ன போலீஸ்ஸ்ஸ்ஸ்….எங்களை பார்த்தா கொஞ்சம் கூட நல்லவங்களா தெரியலையா? சம்மந்தமே இல்லாம ஒருத்தனை நாங்க ஏன் வம்பில மாட்டிவிடப்போறோம். சொல்லுங்க..அவனை நாங்க யூஸ்பண்ணிகிட்டோம்னா, அவனை இல்லை. அவனோட பர்சினாலிட்டியை. அதாவது, அவன் பேச்சு, நடக்கற விதம், பேசற ஸ்டைல் இதெல்லாத்தையும் நாங்க உபயோகப்படுத்திகிட்டோம்.”
“ ஏன் அலெக்ஸ்ன்னு கேட்கறதுக்கு இதுனாலதான்னு ஸ்பெசிஃபிக்கா சொல்ல எனக்கு பதில் தெரியலை போலீஸ். ம்ம்ம்ம்….சரி, உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கறேன், நீங்க இன்னொரு ஆள் மாதிரி இமிடேட் பண்ணனும்னு சொன்னா, ஒரு பொண்ணு மாதிரி பேசணும், நடக்கனும்னு சொன்னா, யார் மாதிரி இமிடேட் பண்ண ட்ரை பண்ணுவீங்க?”என கேட்டு ஆர்வமாக மதிமாறனின் முகம் பார்த்தாள். அமுதா பேசும் விதம் ஒரு கடத்தல்செய்தவள் போலீஸிடம் வாக்குமூலம் கொடுப்பது போல் சிரிதளவு கூட தோன்றவில்லை. நீண்ட நாள் பழகிய ஒருவருடம் தன்னைப் பற்றி மேலும் சிலதகவல்கள் சொல்பவள் போல் நடந்து கொண்டாள். கடத்தல் செய்து, தவறான வழியில் சம்பாரிக்கிறோமே என்ற குற்றவுணர்வு மருந்துக்கும் தென்படவில்லை.
“ம்ம்ம் சொல்லுங்க மதிமாறன்” என மதிமாறனின் எண்ணம் சென்ற திசையினைக் கலைத்து, கேட்க, அதுவரையிலும் எதுவும் பேசாமல் அமுதா சொல்வதை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த மதிமாறனின் மனதில் அந்த ஒரே சின்ன யோசனை தான் சுழன்றுகொண்டிருந்தது.
இந்த வீட்டினுள் நுழையும் முன்னர், சிறிய பட்டன் போன்ற ரெக்கார்டிங்க செய்யும் கருவியையும் உடன் பொருத்திக் கொண்டு வந்திருந்தான். ஒருவேளை, ஏதேனும் சாட்சியம் பேச்சுவாக்கில் கிடைத்தால், அதனை சேகரிக்கும் பொருட்டு தன் சட்டையின் பட்டனுடன் அந்தக் கருவியினைப் பொருத்தியிருந்தான். இத்தனை தூரம் அமுதா பேசுவது அதில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சரியாக பதிவு ஆகிக் கொண்டிருக்கிறதா என்ற பெரும் கவலை அவனது மனதை ஆக்கிரமித்திருந்தது.
“சரியாக பதிவாக வேண்டுமே”எனமட்டும் நினைத்துக் கொண்டவன், அமுதாவின் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு, “என் அம்மா, தங்கை, சுரபி, இப்படி யாராவது ஒருத்தரை எக்ஸாம்பிள் எடுத்துக்குவேன்”என பதிலளித்தான். மதிமாறனின் பதிலைக் கேட்டதும் அமுதாவிற்கு முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிரம்பியது.
“சோ ஸ்வீட் மதி நீங்க. உங்க அம்மா, தங்கச்சி கூட சுபியையும் ஈகுவலா வச்சு பார்க்கறீங்க….ரியல் ஜென்டில்மேன் நீங்க….பட்,தப்பு பண்ணீட்டீங்க மதி. நேத்து ஒரு சின்ன ஃபோன் பண்ணி, நீங்க வர்றீங்கன்னு இன்ஃபார்ம் பண்ணியிருந்தா, இந்த பிசினஸை நாங்க நேத்து நைட்டே முடிச்சிருப்போம். இப்போ சுரபியும் உங்களை கல்யாணம் கட்டிகிட்டு, நிம்மதியா செட்டில் ஆகியிருப்பா. எல்லாமே உங்ககளால கெட்டுப் போச்சு பாருங்க.” என்றவள், தன் போக்கில் மேலே பேசிக் கொண்டிருந்தாள்.
“அலெக்ஸை ஏன் உபயோகிச்சோம்கறதுக்கான பதில் நீங்க சொன்னதுலையே இருக்கு மதிமாறன். ஒருத்தரை இமிடேட் பண்ணனும்னு சொன்ன உடனே உங்க மனசுக்குத் தோணினது, நீங்க க்ளோஸா பழகினவங்க இல்லையா. அதே மாதிரி தான், எங்களுக்கு ஒரு ஆம்பிள்ளை மாதிரி இமிடேட் பண்ணனும்னு வந்தப்போ தோணினது அலெக்ஸ். ஏன்னா, அவனை சின்ன வயசில இருந்து பார்த்ததுனால அவன் எப்படி சிரிப்பான், எப்படி நடப்பான், எந்த ஆங்கிள்ல தலைசாய்ச்சு பேசுவான்னு எல்லாமே எங்களுக்கு தெரியும். “
“அதனால அலெக்ஸை யூஸ் பண்ணிகிட்டோம். பட், அவன் பாவம், இன்னேரம் எங்க எப்படி இருக்கானோ யாருக்கு தெரியும்”என்று உச்சு கொட்டினாள். மதிமாறனுக்கு இப்போது அமுதாவிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. அதைவிடவும் அமுதாவை பேசவிட்டு, அதனை முழுவதுமாக ரெக்கார்ட் செய்யவேண்டிய அவசியமும் இருந்தது. அதனால் அமுதா தேற்ந்தெடுத்த தற்பெருமை வழியை தானும் பின்பற்றிக் கொண்டான். அவ்வப்போது சில கேள்விகள் கேட்டவண்ணம் இருந்ததால், அமுதாவும் மதிமாறனை சந்தேகிக்கா வண்ணம் ஆர்வமாக மதிமாறனது கேள்விகளுக்கு பதிலளித்தாள்.
“இதெல்லாம் ஏன் பண்ணறீங்க அமுதா? நீங்களும் நல்லா படிச்சு, நல்ல நிலைமையில தானே இருக்கீங்க? பின்ன எதுக்கு இதெல்லாம்?” என கேட்டுவிட்டு நிறுத்தினான்.
ஆழமாக மதிமாறனைப் பார்வையிட்ட அமுதா, ஏதோ சின்ன குழந்தைக்கு பாடம் நடத்துபவள் போல் அமைதியாக குரலில் பதிலளித்தாள். “எதுக்குனா? பணம் சம்பாரிக்க, வேற எதுக்கு? பின்னால ஏதாவது ஜெண்டில்மேன் பட ஸ்டேரியோ, வில்லன் படம் மாதிரி கொள்ளையடிகறதை அனாதை ஆஸ்ரமத்துக்கு குடுக்கறேன்னோ நான் சொல்லலியே. அப்படியெல்லாம் சினிமாத்தனமா நாங்க எதுவும் பண்ணலை ஏ.சி.பி. நாங்க சம்பாரிச்ச காசு எங்களுக்கே எங்களுக்கு மட்டும் தான். தோ, வீடு வாங்கியிருக்கோம், கார் வாங்கியிருக்கோம், கொஞ்சம் நகை சேர்த்தியிருக்கோம்….நாங்களும் கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து தான் சம்பாரிக்கறோம் தெரியுமா? மாட்டுனா சங்குன்னு தெரியாதா எங்களுக்கு?” என்றாள் சற்றே சிரிப்புடன்.
“சரி….சில கேள்விகள் இருக்கு…எவ்வளவு நாளா கடத்தறீங்க? இதுவரைக்கு எவ்வளோ பேர கடத்தியிருப்பீங்க? தோராயமா எவ்வளோ சொத்து சேர்த்தி வச்சிருக்கீங்க?”என்றான் அமுதாவின் கண்களை நேரே சந்தித்தபடிக்கு வினவினான்.
“என்ன ஏசிபி சார். சொத்து டீடெயில்ஸ்லாம் கேட்கறீங்க. சரி ஆசைப்பட்டு கேட்கறீங்க, அதனால சொல்லறேன்…என்ன இருந்தாலும் என் சுபியை கல்யாணம் கட்டிக்க இருந்த மாப்பிள்ளை இல்லையா…நாங்க காலேஜ் முடிச்சதுல இருந்து இந்த பிசினஸ் பண்ணறோம். நல்ல கேளுங்க, எங்களைப் பொருத்த வரைக்கும் இது ஒரு டைப் ஆஃப் பிசினஸ். ஒரு பொருளை சில நாள் வச்சிருந்து, கைமாத்தி விடறது. பொருளும் சேஃப், எங்களுக்கு பணமும் வந்திடும். பொருள் நல்லா இருக்கறவரைக்கும் தானே எங்களுக்கு நல்லது, அதனால பொருளை எங்களால முடிஞ்ச அளவு பத்திரமா, சந்தோஷமா பார்த்துக்கறோம். ம்ம்ம் சரியா…சொத்துன்னு பார்த்தா, இந்த அப்பார்ட்மெண்ட் 80லட்சம், கார் ஒரு 6 லட்சம், கொஞ்சம் ஃபாரின் ட்ரிப்ஸ் போயிருக்கோம், அதில சில பல லட்சம் செலவாகியிருக்கு…மத்ததெல்லாம் பணமா பத்திரமா இருக்கு.”என்றாள் முத்தாய்ப்பாக.
“பாரின் டிரிப்ஸா…சுரபி தனக்கு பாஸ்போர்டே இல்லைன்னு சொன்னாளே…”என்றான் மதிமாறன் சந்தேகமாக. அமுதா சொல்வதை நம்புவதா வேண்டாமா என குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
“மதிமாறன் சார், என்ன போலீஸ் நீங்க. இப்படி அப்பாவித்தனமா கேள்விகேட்கறீங்க. சுரபிங்கற பேருக்கு தான் பாஸ்போர்ட் இல்லை. ஆனா எங்க உண்மையான பேர்ல பாஸ்போர்ட் இருக்கு சார். இதுக்கே ஷாக்கானா எப்படி? எங்ககிட்ட ரெண்டு பாஸ்போர்ட் இருக்கு. நிஜப்பேர்ல ஒன்னு, நிழல்பேர்ல ஒன்னு…காசு இருந்தா செத்தவனுக்கு கூட பாஸ்போர்ட் எடுத்து குடுக்கமுடியும் மதிமாறன் சார். அப்படிபட்ட ஊர் நம்மளோடது. இங்க சின்ன சின்னதா செய்யற தப்பு, திருட்டு எல்லாம் தான் பெருசா பேசப்படும்.”
“ கோடி கோடியா கொள்ளையடிச்சா, கவர்மெண்ட் கண்டுபிடிக்க ரொம்ப நாளாகும். அதுவுமில்லாம, சரியா ப்ளான் பண்ணாம, என்ன செய்யறோம், எப்போ செய்யறோம்னு தெரியாம செய்யற தப்புகள் தான் கண்டுபிடிக்கப்படுது. தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பிச்சுக்கலாம். இது ரூல் இல்லை, வாழ்க்கை தத்துவம். செய்யறதை திறமையா செய்யனும். யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி…தோ, நீங்க கூட தான் காபி குடிக்க அவ்வளோ தயங்கினீங்க….ஆனா, நீங்களே உங்க கைப்பட ஃபில்டர்ல இருந்து பிடிச்ச தண்ணிய குடிக்கவும் தானே மயங்கினீங்க….உண்மைய சொல்லனும்னா அந்த காபில எதுவுமே இல்லை. தைரியமா அப்போவே குடிச்சிருக்கலாம். சந்தேகப்பட்டு தண்ணி குடிச்சு இப்போ இப்படி ஆகிட்டீங்களே ஏசிபி….”என்று நக்கலாக அமுதா மொழிய, மதிமாறன் முகத்தில் அவ்வளவாக உணர்ச்சிகளைக் காட்டாது அமைதிகாத்தான்.
“அந்த ஃபில்டர் தண்ணீல ஏதாவது கலந்திருக்கீங்களா? ஆனா, அதே ஃபில்டர்ல இருந்து தண்ணியை நீங்களும் குடிச்சதைப் பார்த்தேனே..அதனால தான் நான் தைரியமா குடிச்சேன்”என எப்படி தனக்கு மயக்கு மருந்து குடுத்தனர் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிகுதியில் வினவினான் மதிமாறன்.
“ஓ, அதுவா, ஃபில்டர்ல எதுவும் கலக்கலைன்னு உங்களை நம்பவைக்க, அதாவது உங்க மனசை நம்ப வைக்க தான் நான் உங்க கண்முன்னால அதுல இருந்து தண்ணி குடிச்சேன். ஆனா உண்மையில் நீங்க குடிச்ச கண்ணாடி டம்பளர்ல ஏற்கனவே கலர்லெஸ் டிராங்குலைசர் ஓரத்தில் பூசியிருக்கு. அதனால தான் குடிச்சதும் லேசான மயக்கம். டிராங்குலைசர்னா, இந்த குதிரைக்கு, யானைக்குலாம் ஆப்பரேஷன் பண்ணறப்போ குடுப்பாங்க. கீடோமைன்னு பேர். வெட்னரி ஹாஸ்பிடல்ஸ்ல கிடைக்கும். பிரிஸ்கிரிப்ஷன் டிரக் தான், சோ, கொஞ்சம் சேஃபா வாங்கணும்.”
“ ஆனா, நாங்க அங்க வாங்கணும்னு அவசியம் இல்லை. சுரபி அந்த ஏற்பாடெல்லாம் கச்சிதமா செஞ்சிருவா. அவ வேலை செஞ்ச சிருஷ்டி ஸ்கூல்ல குதிரை ஏற்றம் இருக்கில்ல, சின்ன சின்ன குழந்தைக ஏற்றதுனால, குதிரைகளை மைல்டா வச்சுக்க, ரொம்ப கொஞ்சமா இந்த ட்ரக்கை யூஸ் பண்ணறாங்க. சுரபி அங்க இருந்து எடுத்துட்டு வருவா. எப்படி யாருக்கும் தெரியாம எடுக்கறான்னு யோசிக்காதீங்க. சுபி, நல்ல அத்லெட். நீங்க கூட அவ டிடி விளையாடறதைப் பார்த்திருப்பீங்களே. சூப்பரா ஓடுவா, ஹை ஜம்ப்லாம் அசால்டா பண்ணுவா.”
“எங்க ரெண்டு பேர்த்தை பார்த்தா நான் ரொம்ப ரஃப் அண்ட் டஃபாவும், அவ ரொம்ப சாஃப்டான பர்சன் மாதிரியும் தோணும். ஆனா நிஜத்தில நான் ரொம்ப அமைதி, அவதான் எல்லாமே. ப்ளானிங், என்ஸிகியூஷன், கரெக்ட் டார்கெட்ன்னு எல்லாமே பர்ஃபெக்டா செய்வா. சின்ன சொதப்பல் கூட இதுவரைக்கும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போறதில்லை..சரி, இவ்வளோ நேரம் என்னையே கேள்வியா கேட்கறீங்களே, நான் உங்ககிட்ட கொஞ்சம் கேள்வி கேட்கலாமா? எப்படி எங்க மேல, முக்கியமா என் மேலையும் ,அலெக்ஸ் மேலையும் உங்களுக்கு சந்தேகம் வந்துச்சு? ”என சுரபியின் பெருமைகளை அடுக்கிய அமுதாவிற்கு முகமெல்லாம் புன்னகை பூத்திருந்தது. வார்த்தைகளின் சந்தோஷம் முகத்தில் சுடர்விட்ட படிக்கு மதிமாறனிடம் தன் கேள்விகளைத் தொடுத்தாள்.
“அது ..அதுவந்து, குழந்தைகளை கடத்தின மூனு விடியோவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. தனித்தனியா பார்த்தப்போ அது தெரியலை. ஆனா மூனையும் சேர்த்திவச்சு பார்த்தப்போ, புரிஞ்சது. மூனுலையும், குழந்தைய கடத்தினவங்க, அதாவது நீங்க அந்த குழந்தையை தூக்கிட்டு நடந்த விதம். அன்னைக்கு உங்க வீட்டில, ஒரு சின்ன பையன், உங்க கீழ்வீட்டு பையன்னு சொல்லி என்னை ஏமாத்தினீங்களே அந்த பையனை நீங்க தூக்கி பிடிச்சிருந்தவிதம். கைகுறுக்கல், அதுமட்டுமில்லாம, வலது காலை லேசா சாய்ச்ச மாதிரி நீங்க நடக்கற ஸ்டைல் இதெல்லாமே அப்போ பளீர்ன்னு தெரிஞ்சது.” என சொல்லி மதிமாறன் நிறுத்த. அமுதா நிஜமாகவே மெல்லமாக கைதட்டினால்.
“சூப்பர் ஏசிபி. ஒரு தடவை பார்த்த ஒரு பிக்சரை, மனசில ரெஃபரென்ஸா வச்சுகிட்டு, மத்த மூனு வீடியோவையும் லிங்க பண்ணியிருக்கீங்க. யு ஆர் அப்சலியூட்லி கரெக்ட், எனக்கு வலது கால், இடது காலைவிட கொஞ்சமே கொஞ்சம் குள்ளமா இருக்கும். அதை பேலன்ஸ் பண்ணற மாதிர் பெரிய ஹீல்ஸ் செருப்பு போட்டு கவர் பண்ணிடுவேன். ரொம்ப நேரம் உத்து பார்த்தா மட்டும் தான் அந்த சின்ன டிஃபரென்ஸ் தெரியும். இல்லைனா கண்டுபிடிக்கறது கஷ்டம்…பட், இந்த விஷயத்தில உங்களை பாராட்டியே ஆகணும். நல்ல அப்சர்ஃபிங்க மைண்ட்” என நிஜமாக அமுதா புகழ்ந்து பேசிய போது, மதிமாறனுக்கு விசித்திரமாக இருந்தது.
என்ன புத்திசாலித்தனமாக இருந்து என்ன, என் கைகள் கட்டுபெற்ற நிலையில் அல்லவா உன்னுடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நியாயப்படி பார்த்தால், உங்கைகளை கட்டிப்போட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இந்த விசாரனையை மேற்கொண்டிருக்க வேண்டும்”என மதிமாறன் நினைத்தது அமுதாவிற்கு புரிந்திருக்க வேண்டும். முகத்தில் ஒரு நமுட்டுச்சிரிப்பு வந்துஒட்டிக் கொண்டது.
“நீங்க கடத்தற குழந்தைகளை ரெண்டு நாள் இந்த வீட்டில தான் தங்க வைப்பீங்களா?”என தன் அடுத்த கேள்வியை வினவினான். இத்தனையும் பேசும் போதும், கைகளில் கட்டுக்களை சிறிதேனும் அவிழ்க்க முடிகிறதா என முயற்சித்துக் கொண்டும் இருந்தான். எவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி, ஆறடி உயர, 75 கிலோ எடை கொண்ட ஆண்மகனை, குருவி போன்ற இரு பெண்கள் கட்டிப் போட்டு பேசிக் கொண்டிருப்பது நினைத்தால் மதிமாறனுக்கு அவமானமாக இருந்தது. இந்த நிலைமையில் எவரேனும் பார்க்க நேர்ந்தால் அது எத்தனை பெரிய அவமானம் என்பதும் புரிந்தது. எதுவும் செய்ய இயலாத நிலையில் அமைதியாக எதிராளி சொல்வதைக் கேட்பது தவிர வேறு வழியில்லை என உணர்ந்து பொறுமையுடன் இருந்தான்.
அமுதா அவனது கேள்விக்கான பதிலை சொல்லத் துவங்கினாள். “குழந்தைகளை எங்க வச்சிருப்போம்னு…இங்க தான்…அதான் தனியா ஃபுல் செட்டப்போட ரூம் இருக்கே. நல்ல நல்ல சாப்பாடு, டிவி, விடியோ கேம், புக்ஸ்ன்னு எல்லா வசதியும் இருக்கே. யாரைக் கடத்தனும், நிஜமாவே பணமிருக்கற பார்டியான்னு நல்ல அனலைஸ் பண்ணி தான் செய்வோம் ஏசிபி. இது, இன்னைக்கு முடிவெடுத்து, நாளைக்கே கடத்தற சமாச்சாரம் இல்லை. நான் முன்னாலையே சொன்னேனே, ரிசர்ச், ப்ளானிங். அவ்வளவும் ஹார்ட் வர்க்.”
“ஒரு குழந்தை வீட்டை விட்டு வெளிய வர்றதில இருந்து, அவ திரும்பி வீட்டுக்கு போற வரைக்கும் என்ன பண்ணறா, யார்கிட்ட பேசறா, யார்லாம் ஃப்ரெண்ட்ஸ், என்ன பிடிக்கும் பிடிக்காது. அவ அப்பா அம்மா எப்படிபட்டவங்க. துணிஞ்சு போலீஸ் வரை போவாங்களாண்னு சகலமும் யோசிப்போம். இது டீம்வர்க்..யாரும் சந்தேகம் வராத பப்ளிக் ப்ளேஸ்ல தான் செய்யனும். கூட்டதில நாலு பேர்முன்னாடி சாமர்த்தியமா எந்த தப்பு வேணா செய்யலாம். தெரியுமா. சைக்காலஜி தெரியனும். யார் என்ன நேரத்தில எப்படி என்ன விஷயத்தை நோட் பண்ணுவாங்கன்னு அனலைஸ் பண்ணனும். ஏன்னா, கடத்தல் செய்யறப்போ சுத்தி கண்டிப்பா ஆளுங்க இருப்பாங்க. அவங்களை நம்பவைக்கனும்”
“எப்படி நம்பவைப்பீங்க…”
“ம்ம்ம்ம் நல்ல கேள்வி… பதில் உங்களுக்கு புரியற விதத்தில சொல்லனும்னா, சைல்ட் சைக்காலஜி நிறைய தெரியனும். ஒரு குழந்தை புதுசா பார்க்கற ஒருத்தர்கிட்ட எப்போ பயமில்லாம பேசும், அப்போ அவங்க குடுக்கறதை நம்பி வாங்கி சாப்பிடும் தெரியுமா?” எனக்கேட்டு அமுதா நிறுத்த, மதிமாறன் மிகவும் ஆர்வமாக அமுதாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அமுதா மேலே பேசத் துவங்கினாள்.
“ஒரு குழந்தை சாதாரணமா புது மனுஷங்க கிட்ட பேசாது, பழகாது. ஆனா அதுவே அந்த குழந்தையோட க்யூரியாஸிட்டியை தூண்டற விஷயா இருக்கறப்போ தானாவே பக்கத்தில வரும். அப்பறம் ரெண்டாவது முக்கியமான விஷயம், அந்த குழந்தைக்கு தெரிஞ்ச, பழக்கமானவங்க யாரோ ஒருத்தர் பேரை நாம பேச்சு வழக்கில உபயோகிக்கனும். உதாரணத்துக்கு, மிதுனாவை அந்த கப்கேக் சாப்பிட வச்சப்போ, அந்த கேக்கை அவளுக்காக கொண்டு போன மாதிரி நான் பேசலை.”
“அவ டான்ஸ் கிளாஸ் ஃப்ரெண்ட் மோனிஷாவோட அம்மா நான்னும், அவ ஈவினிங்க ஸ்னாக்ஸ் சாப்பிடாம டான்ஸ் பிராக்டிஸ்க்கு வந்துட்டான்னும் சொல்லி, அவகிட்ட இந்த கப்கேக்கை மோனிக்கிட்ட குடுக்க முடியுமான்னு கேட்டேன். மிதுனாக்கு சாக்லேட் கப்கேக்னா ரொம்ப இஷ்டம். அதனால அவன் கண்ணுல இயல்பா ஒரு ஆர்வம் வந்திருச்சு. கேக்கை ஆசையா அவ பார்க்கறப்போ, “நீ வேணும்னா ஒன்னு சாப்பிடேன்னு” இயல்பா சொன்னேன். அவளும் நம்பி சாப்பிட்டா. சோ, ஒரு குழந்தையை கடத்த, மொதல்ல அந்த குழந்தையோட நம்பிக்கையை சம்பாதிக்கனும்.”
“ஒரு நாள் டான்ஸ்கிளாஸ் போயிட்டு, குழந்தையை தூக்கிட்டு வர்ற சமாச்சாரம் இல்லை இது. மிதுனாவுக்காக கிட்டதட்ட ஒருமாசமா அந்த டான்ஸ்கிளாஸ் போனேன். இன்னொரு குழந்தையோட அம்மாவா இருந்து, மிதுனா எந்த நேரம் ரெஸ்ட் ரூம் வர்றா. அவ ஃப்ரெண்ட்ஸ் யாரு. யார் கிட்ட அவ அதிகமா பேசறா..இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி, அந்த கார் டிரைவர் யாரு,அவன் ஃபேமிலி பேக்கிரவுண்ட் என்ன, முதலாளி மேல எந்த அளவு விசுவாசம் இதெல்லாமும் தெரிஞ்சுக்கனும். இந்த ஹார்ட் வர்க் ரொம்ப முக்கியம்.”என பள்ளிப்பாடம் நடத்திக் கொண்டிருந்தாள் அமுதா.
மதிமாறனுக்கு ஆச்சர்யர்மாக இருந்த அதே நேரம், அமுதாவின் பேச்சு கோபத்தையும் தூண்டியது. “பண்ணறது தப்பு. இதுல எதிக்ஸ் வேற…”என நினைத்தவன், தன் அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.
“மிதுனா கேஸ் ஒ.கே, என்னால புரிஞ்சுக்க முடியுது. பெங்களூர் கமிஷனர் கேஸ்ல பணம் எப்படி கைமாறிச்சு..என்ன பண்ணீங்க?”என இயல்பான ஆர்வத்துடன் வினவினான். அமுதாவிற்கும் பேச பிடித்திருந்தது. அதிலும் தற்பெருமை விஷயம் வேறா. சொல்லவே வேண்டாம். மதிமாறன் கேட்டு முடிக்கும் முன்னரே பதிலுரைக்க ஆர்வமாக இருந்தாள்.
“ஓ, கமிஷ்னர் பேரன்…. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீனா…அது ஒண்ணுமில்ல, சின்ன டைவர்ஷன் கிரியேட் பண்ணனும். எப்படி, நம்ம அரசியல்வாதிக, பெரிய பெரிய விஷயத்தில இருந்து மக்களை திசைதிருப்ப, “ஜிம்மி கம்மல்”, ப்ரியா வாரியார்ன்னு டிரெண்டியா இறங்கி செய்யறாங்க. அதுமாதிரி தான். உண்மையா அந்த பேக்கை அந்த போலீஸ் கான்ஸ்டபுல்ஸ் முன்னாடி தான் மாத்தினோம். லாக்கர் ரூம்ல சிசிடிவி கிடையாது. இந்த பொட்டி உள்ள வைக்கறப்போ வாட்ச் பண்ணிகிட்டு இருந்து, அதே மாதிரி ஒரு பேக்கை வாங்கி அதில நார்மலான திங்கஸ் வச்சு அந்த லக்கேஜ் ரூம்ல வச்சோம். எடுக்கறப்போ, எங்க பெட்டிய தான் நான் எடுத்தேன். என்னை பின் தொடர்ந்து போலீஸ் வந்து விசாரிச்சது. என் பொட்டியில தான் வெறும் துணிகளும், சில ஸ்கூல் புக்ஸும் மட்டும் இருந்துதே அதனால நானும் பயமில்லாம கேஸுவலா பேசினேன். போலீஸ் எங்கிட்ட விசாரிச்சுகிட்டு இருந்த நேரம், சுரபி லக்கேஜ் ரூம்ல இருந்த இன்னொரு பேக்கை கலெக்ட் பண்ணிகிட்டா…சிம்பிள்…”
“ஆனா லக்கேஜ் ரூம்ல டோக்கன் கேட்டிருப்பாங்களே…அதுக்கு என்ன செஞ்சீங்க…”
“ஹ ஹ ஹ…மதிமாறன் இந்த இடத்தில நீங்க முக்கியமான ஒரு விஷயம் பத்தி தெரிஞ்சுக்கனும். அதாவது மனுஷங்க சைக்காலஜி. ஒரு ஆணோ பெண்ணோ ரொம்ப நீட்டா டிரெஸ் பண்ணி, கொஞ்சம் ஸ்டைலிஷ்ஷான ஆட்டிடியூடோட இருந்தா அவங்களை இந்த சொசைட்டி சந்தேகப்படாது. ஏன்னா, “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்னு” படத்தில ஒரு டைலாக் வருமே. அது 100க்கு 100 உண்மை. டீசண்டா டிரஸ், அதுலையும் கொஞ்சம் ரிச்சா போட்டிருக்கீங்கன்னு வைங்க, உலகம் உங்களை ஒரு தனி மரியாதை குடுத்து பார்க்கும்.”
“அந்த சைக்காலஜியைத் தான் நாங்க யூஸ் பண்ணிகிட்டோம். அழகா ஸ்டைலிஷ்ஷா டிரஸ் பண்ண சுரபி, அவளோட மத்த லக்கேஜை கலெக்ட் பண்ணறப்போ, “அதோ அந்த பிங்க பேக்…பிரின்சஸ் பிக்சர் போட்டிருக்கே…அதுவும் தான்”என டோக்கன் போட்ட மத்த பேக்கோட அந்த பண பேக்கையும் அவளோடதுன்னு சொல்லி கேட்டப்போ, மறுபேச்சே பேசாம லக்கேஜை எடுத்து அவகிட்ட குடுத்துடாங்க….அதுலையும் வேற, அவங்க சந்தேகப்படற பணப்பையைத் தேடி கூட நின்ன போலீஸ் வேற போயிருச்சே. அவங்களுக்கு பேக் எடுத்து தற்றதுல என்ன பிரச்சனை இருக்கப்போகுது சொல்லுங்க…”
“இங்க மட்டும்னு இல்லை, நாங்க கடத்தின நிறைய இடத்தில இந்த லாஜிக் யூஸ் ஆகும். நீட்டா டீசண்டா இருக்கறவங்களை சுத்தியிருக்கறவங்க சட்டுனு சந்தேகப்பட மாட்டாங்க. இப்போ எக்ஸாம்பிள்க்கு, நான் ஒரு 7 வயசு பையனை தூக்கிட்டு நடக்கறப்போ “இந்த பையன் யாருன்னு” போலீஸ் தடுத்து கேட்கமாட்டாங்க, அப்படியே கேட்டாலும், “என் பையன்னு”நான் சொல்லறப்போ நம்புவாங்க. ஏன், நீங்களே நம்புவீங்க.”
“ ஏன்னா நிறைய காலமா நம்ம மனசில ஊறிப்போன விஷயம் இது. கடத்தவறங்க, தப்பு பண்ணறவங்க அழகா இருக்க மாட்டாங்க. நல்லா டிரெஸ் பண்ண மாட்டாங்கன்னு பழைய 80ஸ் சினிமா சொன்னதை நாம இன்னமும் நம்பறோம்.” என்று பேசி நிறுத்திய அமுதா, சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். சுரபி வெளியே சென்று கிட்டதட்ட அரைமணிக்கு மேல் ஆகியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் வந்துவிடக்கூடும்.
அமுதா நேரம் பார்ப்பதை மதிமாறனும் கண்டுகொண்டான். “சுரபி எங்க போயிருக்கா?” என வினவினான். உண்மை சொல்வதா பொய் சொல்வதா என்ற குழப்பமெல்லாம் அமுதாவிற்கு இருக்கவில்லை. தலைக்கு மேல் போகின்ற வெள்ளம் ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்ற நிலைமை தான். அதனால் தயங்காமல், “டிராவல் அரேஞ்ச் மெண்ட்ஸ்…அப்பறம் பேக்கேஜ் டெலிவரி சார்ஜ்…என்ன புரியலையா? உங்க அபினவ் குட்டிய பத்திரமா நாங்க ரெண்டு நாள் பார்த்துகிட்டதுக்கான சார்ஜ்…அதை கலெக்ட் பண்ண போயிருக்கா”என்றாள் அசராமல்.
மதிமாறனுக்கு சற்றே குழப்பமாக இருந்தது. காலையில் கீழ்வீட்டு அங்கிள் மகனுடன் பேசிக் கொண்டிருந்த போது, கடத்தல்காரர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறினரே, இங்கானால் கடத்தல் தொகையை பெறுவதற்காக சென்றுள்ளதாக அமுதா கூறுவது எப்படி சாத்தியம். அப்படியானால் குழந்தையின் வீட்டினர் தன்னிடம் தகவல் கூறாமல் மறைத்துவிட்டனரா? அதனால் தான் காலையில் கிட்சனில் நின்று அனைவரும் ரகசியம் பேசிக் கொண்டனரா? என பல கேள்விகள் மண்டையைக் குடைந்தது.
மதிமாறனின் குழப்பமான முகத்தைக் கண்டு அமுதா தானாகவே அவன் கேள்விகளுக்கு பதிலளித்தாள். “ஏ.சி.பி சார், ரொம்ப யோசிக்காதீங்க. அந்த பையனை கடத்தினப்போவே அவன் பேக்ல இன்ஃபர்மேஷன் குடுத்து, பணம் எங்க, எப்படி குடுக்கணும்னு டீடெயில்லா சொல்லியிருக்கு. நேத்து போலீஸ்கிட்ட போகற அவசரத்தில அவங்க கவனிக்கலை. ஆனா நைட் வீட்டுக்குப் போனதும் கவனிச்சிருக்காங்க. அதனால காலையில சொன்ன இடத்துக்கு, பணத்தோட கண்டிப்பா காத்திருப்பாங்க. எங்க ஸ்பெஷாலிட்டியே அதுதான். பெரிய அமெளண்டா கேட்டு, அலைய வைக்க மாட்டோம். அவங்ககிட்ட இருக்கற, அல்லது, ரெண்டு மணி நேரத்தில பிரட்டக்கூடிய தொகை தான் கேட்போம். அதுவும் அனாலிசஸ் தான். “
“யாரைக் கடத்தனும்னு எப்படி ஃபிக்ஸ் பண்ணுவீங்க? எல்லாருமே உங்க அக்கவுண்ட்ஸ் கிளைண்டா?” என தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு வினவினான்.
“சே, சே…அவ்வளோ கூட யோசிக்க மாட்டமா சார். எல்லாரும் என் கம்பெனி கிளையண்ட்ஸ்னா என்னைக்கோ நாங்க மாட்டியிருப்போமே. எங்க செலக்ஷன் ரொம்ப ரேண்டம். ஸ்கூல் மூலமா, என் கம்பெனி மூலமா, வேற ஃப்ரெண்ட்ஸ் மூலமா, காதுல கேட்கற விஷயங்கள், பார்க்கற விஷயங்கள்ன்னு விஸ்தீரமா யோசிப்போம். ஒரே இடத்தில திரும்ப திரும்ப செஞ்சா மாட்டிக்குவோம் சார். இதோ, உங்க வீட்டில ஸ்டே பண்ணியிருந்த மூனு நாள்ள, கீழ்வீட்டு பங்கஜம் மாமிக்கு உதவி செய்ய போவேன்ல.”
“அப்போ அவங்க பேச்சில இருந்து அபினவ் பத்தி தெரிஞ்சுகிட்டேன். நானா எதுவும் கேட்கலைன்னாலும், அவங்க தன் பையனோட பெருமை, தன் பேரனோட மகத்துவம்னு வாலண்டியரா நிறைய சொன்னாங்க. யுஸ்ல வேலை செஞ்ச தன் பையன், பெங்களூர்ல வீடு வாங்க பார்த்துட்டு இருக்கறதாவும், 70-80 லைச ரூபாய்க்கு நல்ல அப்பார்ட்மெண்ட் இருந்தா சொல்லுன்னு எங்கிட்டையே சொன்னாங்க…அதும் நான் கேட்காமலேயே…சோ, கைல காசு வச்சுகிட்டு வீடு தேடற பார்ட்டின்னு தெரிஞ்சுகிட்டோம். சிம்பிள்…. தவளை தன் வாயாலையே கெடும்கற மாதிரி, இந்த உங்க பங்கஜம் மாமி கேஸ்….”என சொல்லி, சற்றே இதழ்பிரியச் சிரித்தாள் அமுதா.
“காசு மட்டும் வாங்கிட்டு பையனை எப்படி டெலிவரி பண்ணுவீங்க?”
“ஓ, அந்த விஷயத்தை சொல்லலையே. பையனை நாங்க டெலிவரி பண்ணப் போறதில்லை….டெலிவரி செய்யப் போறது நீங்க.”
“நானா? என்ன சொல்லற?”
“நீங்களே தான் ஏ.சி,பி சார். அப்பறம் இவ்வளோ தூரம் விலாவரியா படம் பார்க்கற மாதிரி கதை சொல்லிகிட்டு இருக்கேனே…எதுக்காம்? நீங்க தான் பையனை டெலிவரி பண்ணனும்…” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாயில் மணி ஒலித்தது. “சுரபி வந்தாச்சு”என கொஞ்சம் கூட குற்றவுணர்வு இன்றி, கதவை திறக்க அமுதா ஓடிச் சென்றாள். இப்போது இவர்கள் இருவரையும் பார்க்கும் போது, மதிமாறனுக்கு மலைப்பாக இருந்தது.
ராட்சசி என்று தான் கருதிய, வெளியே தன்னை அவ்வாறு காட்டிக் கொண்ட அமுதா மென்மையானவளாகவும், அனிச்சம் பூ போன்று வலையவந்த சுரபி ஏமாத்துகாரியாகவும் மாறிப்போனது போல் மதிமாறன் எண்ணினான்.
கதவைத் திறந்து உள்ளே வந்த சுரபி, தெளிவாக அமர்ந்திருந்த மதிமாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நேராக அக்கா தயாராக வைத்திருந்த பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டினாள். கைபாட்டில் வேலை செய்து கொண்டிருக்க, “என்ன எல்லா எக்ஸ்பளனேஷனும் முடிச்சாச்சா? இல்லை நான் சொல்ல ஏதாவது பாக்கி இருக்கா?”என அமுதாவிடம் வினவினாள். மதிமாறனின் கண்கள் சுரபியையே படம்பிடித்துக் கொண்டிருந்தன. முன்னர் பள்ளியில் பார்த்தவளது நடையும், உடையும், பேச்சும் அவ்வளவு மென்மையாக இருக்கும். இங்கே கண்முன்னால் தெரியும் ரூபமோ மென்மை என்பதற்கு எதிர்பதம் போல் இருந்தது.
இறுக்கமான அடர் கருப்பு லெதர் பேண்டும், மெல்லிய சிவப்பு,நீலம் கோடுகள் இட்ட சட்டையும், சட்டையின் கைகள் முட்டியில் மடித்துவிட்டிருந்த விதமும், தலைமுடி அலையாமல், தூக்கி போனிடைல் போட்டிருந்த பாணியும், அசட்டையாக பார்க்கும் கண்களும் என, அனைத்திலுமே ஒரு திமிர் மிளிர்ந்தது. “இவளையா நான் காதலித்தேன்”என்ற வியப்பே மதிமாறனுக்கு மிஞ்சியது.
தன் மனதில் கேள்வியை வார்த்தைகளால் வடிக்க இயலாமல் போனது மட்டுமன்றி, இத்தனை தூரம் காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியவள் என்ற எண்ணம் மதிமாறனுக்கு சற்றும் வராமல் போனது ஆச்சர்யமே. எதனால் ஏமாற்றப்பட்ட உணர்வு வரவில்லை என கண்டுகொள்ள இயலவில்லை. சொல்லப்போனால், சுரபியை பார்க்கும் போது ஆத்திரமும், கோபமும் அளவிற்கதிகமாக வந்திருக்க வேண்டும்.
ஒரு ஆண்மகனை, அதிலும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியை, காதல் என்ற போர்வையில் ஏமாற்றி, தன் கடத்தல் திட்டங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டு, இப்போது எவ்வளவு சர்வ சாதாரணமாக நடமாடுகிறாளே என்ற எரிச்சல் இருந்த போதும், “காதலித்து ஏமாற்றிவிட்டாளே”என்ற வருத்தம் மதிமாறனுக்கு தோன்றவேயில்லை.
தன் வேலைகளை செய்து கொண்டே அமுதாவிடம் பேசியவண்ணம் இருந்தாள் சுரபி. சற்று நேரத்தில அமுதா தன் அறைக்குள் சென்றுவிட, மதிமாறனின் எதிரில் சாவதனமாக அமர்ந்தாள். “என்ன பார்த்துட்டே இருக்கீங்க மதி?திட்டனும்னு தோணுதா? என்ன கோபம்னாலும், திட்டனும்னாலும் நான் இருக்கறப்போவே திட்டிடுங்களேன்…ஏன்னா உங்க கூட நான் இருக்கப்போற கடைசி அரை மணி நேரம் இது மட்டும் தான்” என்று சிறிய புன்னகையுடன் மொழிந்தாள்.
எதிரில் மதிமாறன் கைகளும் கால்களும் கட்டுண்டு கிடக்கிறான் என்ற விஷயமே நடவாதது போலவும், இரண்டு பேரும் ஏதோ ஒரு பூங்காவில் சாவதானமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போலவும் சுரபி நடந்து கொண்டது எல்லாமே மதிமாறனுக்கு வியப்பாக இருந்த போதிலும், ஏனோ சுரபி எதிர்பார்த்தது போல் திட்டவோ, சபிக்கவோ தோன்றவில்லை.
“கடத்தல் பண்ணறன்னு உன்னை கைது பண்ண தோணுது. ஆனா, என்னை காதலிச்சு ஏமாத்திட்டன்னு உன்ன திட்டணும்னு தோணலை சுபி..ஏன்னா நீ என்னை காதலிச்சது நிஜம்…என் காதலும் நிஜம்”என்று சொல்லும் போது மதிமாறனின் கண்கள் அவனையும் அறியாமல் கலங்கியது. நல்லவேளையாக கண்ணீர் முத்துகள் நெஞ்சில் இருந்து கிளம்பி, கண்களை அடையும் முன்னர், தன்னை சுதாரித்துக் கொண்டான். மதிமாறனின் இந்த பதில் சுரபிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கண்ட வார்த்தைகளால் ஏசுவான், ஏமாற்றிவிட்டாயே என சாபம் இடுவான், கடைசிக்கு “ஏன் இப்படி என்னை உபயோகித்தாய்”என கோபமாக கத்துவான் என்றெல்லாம் எண்ணி, அதற்கு தகுந்த பதில்களை முன்னரே யோசித்து வைத்திருந்தவளுக்கு, மதிமாறனின் இந்த கூரிய கண்களின் வழியே இந்த நிலையிலும் வெளிப்பட்ட காதல் விந்தையாக இருந்தது.
இதழ் பிரியா சிரிப்பு ஒன்றை வெளியிட்டவள், எதிரில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, மதிமாறன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள். கட்டுண்டு கிடந்த அவனது கைகளின் மேல் தனது விரல்களை வைத்து மெல்ல தடவினாள். “ஐம் சாரி மதி. உங்கிட்ட மன்னிப்பு கேட்கற உரிமை கூட எனக்கு இல்லைன்னு தெரியும். ஏன்னா, என்னோட இந்த முகமும், இந்த வாழ்க்கையும் நான் இப்படிபட்டவளான்னு உன்னால கற்பனை கூட பண்ணி பார்த்திருக்க முடியாது. அமுதாக்கா உங்கிட்ட வேணுங்கற மட்டும் பேசியிருப்பாங்க. என்னால அந்த பேச்சை, அந்த கொக்கரிப்பை, நாங்க ஜெயிச்சுட்டோம்கற அகந்தையை காட்டிக்க முடியாதுங்கறதுனால தான் நான் அக்காவை விட்டு பேச சொன்னேன்.” என்று கூறி நிறுத்தியவள், மதிமாறனின் கண்களை நீண்ட நேரம் கழித்து சந்தித்து பேசத் துவங்கினாள்.
“ என்னோட இந்த வாழ்க்கை முறையை எந்த காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. அதை நான் விரும்பவும் இல்லை. ஐம் த பேட் கை ஹியர். நான் திருந்துவேன்னோ, மன்னிப்பு கேட்பேன்னோ, சினிமால மாதிரி, கெட்டவங்க திருந்திட்டா மன்னிச்சு விடற போலீஸ் இருப்பாங்கன்னும் நான் நினைக்கலை…”
“முக்கியமா நீங்க அப்படி மன்னிக்கற விதம் இல்லைன்னு எனக்குத் தெரியும். இது ஒன் வே ரோடு மாதிரி. ஒருவேளை இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா, இதெல்லாம் ஏறகட்டி முடிஞ்ச அளவு நல்லவளா உங்ககிட்ட திரும்பியிருப்பேன். ஏன்னா, எனக்கும் இந்த கடத்தல், அது தர்ற உயிர்பான கிக் இதெல்லாமே கொஞ்சம் போரடிச்சு போயிருச்சு. உங்களை கல்யாணம் பண்ணிகிட்டு, அழகா, அமைதியா வாழனும்னு நான் ஒரு கட்டத்தில முடிவெடுத்திருந்தேன்.”
“ஆனா, விதி ரொம்ப வலியது பாருங்க.. சரி, இதுவும் ஒருவிதத்தில நல்லது தான். உங்களுக்கு நல்ல எதிர்காலமும், அதைவிட நல்ல, அன்பான, அமைதியான வாழ்க்கைத் துணையும் கிடைக்குமா இருக்கும். அதனால தான் நாம சேர முடியாம போச்சோ என்னவோ…” என்று சொல்லிக் கொண்டிருந்த சுரபியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வழிந்து மதிமாறனின் கைகளின் மேல் விழுந்தது.
சுரபி மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெங்குரலில் பேச்சைத் தொடர்ந்தாள். “பொய்யை மட்டுமே அடித்தளமா வச்சுகிட்டு, ஒரு உறவையும் குடும்பத்தையும் அமைச்சிருக்க முடியாது இல்லையா மதி. இருந்தாலும், எனக்கும் கல்யாணம் ஆகி, ஒரு வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனைகள் ஏற்பட்டதுக்கு காரணம் நீங்க மட்டும் தான் மதி. என் வாழ்க்கை, என் உருவம், என் நடை, என் சுருள் முடி ஏன் என் பேர் கூட பொய் தான். ஆனா, என் ஆழ்மனசில உங்க மேல நான் வச்சிருந்த அன்பும் காதலும் நிஜம். அதை என்னால மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
“சோ, உங்க கூட வாழ்றதா இருந்த வாழ்க்கையை நான் கற்பனையில வாழ்ந்து பார்த்துக்குவேன்.”என கண்களைத் துடைத்துக் கொண்டவள், மதிமாறன் சற்றும் எதிர்பாராத வண்ணம், மதிமாறனின் முகத்தை அவளது உள்ளங்கையில் ஏந்திக் கொண்டாள். கூர்மையாக தன்னை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்த கண்களை சில நொடி உற்று நோக்கியவள், மெல்ல குனிந்து காய்ந்து போயிருந்த மதிமாறனின் உதடுகளை தன் அதரங்கள் கொண்டு ஈரமாக்கினாள். இதழ்கள் சேர்ந்திருக்க, சுரபியின் கண்களின் வழியே வெளிப்பட்ட நீர் இருவரது கன்னங்களையும் நனைத்திருந்தது.
கொஞ்சம் தன்னை சமாளித்து நிமிர்ந்தவள், திடுமென எழுந்து அலமாரியில் இருந்து சில ஃபைல்களைக் கொண்டு வந்து மதிமாறன் அமர்ந்திருந்த சோஃபாவின் எதிரில் அடுக்கினாள். முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து மனதை ஒருநிலைப்படுத்திய பின்பு மீண்டும் சோஃபாவின் எதிரில் அமர்ந்து கொண்டாள். அவளது முகம் நொடிபொழுதில் மாறிவிட்டிருந்தது. குரலிலும் கடினத்தன்மை கூடிவிட்டிருந்தது. “இந்த ஃபைல்ல உங்க கேஸ் சம்பந்தமான எல்லா ஆதரங்களும், எப்படி கடத்தினோம், யார் யாரை எப்படி சமாளிச்சோம்னு கொஞ்சம் டீடெயில்ஸும் இருக்கு. இது எதுக்குன்னா, இந்த கேஸ் மூலமா உங்களுக்கு ஒன்னுமே கிடைக்கலைன்னு நீங்க நினைக்கக்கூடாது.” என்றவள்,
மேஜையின் மேலிருந்த கோப்புகளை தட்டியவாறு, “இதெல்லாம் நீங்க சப்மிட் பண்ணாலே, உங்களுக்கு பிரமோஷன் கியாரண்டி. அப்பறம், உங்க சட்டை பாக்கெட்டுல இருக்கற ரெக்கார்டர் வேலை செய்யாது. ஏன்னா, இந்த ரூம்ல ஜம்மர் பொருத்தியிருக்கு. எந்த எலக்டிரானிக் சாதனமும் வர்க் ஆகாது. அதனால தான் இந்த சின்ன சின்ன எவிடென்ஸ் உங்களுக்காக விட்டுட்டுப் போறேன். இதைவச்சு, இந்த கடத்தலுக்கு சொந்தமான அமுதா, சுரபிங்கற ரெண்டு பேர்த்தையும் நீங்க தேட ஆரம்பிக்கலாம்.”
“கடத்தல்காரர்களைத் தேடி போலீஸ் வலை வீச்சுன்னு”பேப்பர்ல போட்டுக்கலாம். எங்க ஃபோட்டோ கூட யூஸ் பண்ணிக்கலாம். நோ அப்ஜெக்ஷன். ஏன்னா, இதெல்லாம் பார்க்கவோ, கேட்கவோ நாங்க இங்க இருக்க மாட்டோம். இந்தியாவை விட்டே போறோம். எப்படி தப்பிப்போம், எங்க போய் எப்படி வாழத் துவங்குவோம்னு யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அதெல்லாம் எங்க கவலை. இவ்வளோ யோசிச்சு வேலை செஞ்சவங்களுக்கு எப்படி தப்பிக்கணும்னு தெரியாம இருக்காதில்லையா. வேணுங்கற பணம் சேர்த்தாச்சு. அதனால, இனிமே நேர்மையான வழியில தான் வாழப்போறோம். சோ, அடுத்த தடவை தப்பு பண்ணி மாட்டிப்போம், அப்போ பிடிச்சுக்கலாம்னு யோசிக்காதீங்க.” என்று தலையை ஒருபக்கம் சாய்த்து பேசி முடித்தாள். அதே நேரம், அமுதாவும் பக்கத்து அறையில் இருந்து சிறிய சூட்கேஸ் ஒன்றுடன் வெளிப்பட்டாள்.
“முடிஞ்சதா? டைம் ஆச்சு” என சுரபியைப் பார்த்து பொதுவாக உரைக்க, சுரபி, “ஐஞ்சு நிமிஷம்”என சைகை செய்தாள். அமுதா வேறு பேச்சின்றி, கையில் சூட்கேஸுடன் கதவின் அருகே சென்றவள், மெல்ல திரும்பி, “நான் கீழ வெயிட் பண்ணறேன். சீக்கரமா வந்திரு.”என்று சுரபியிடமும், “பை மிஸ்டர் மதிமாறன். நைஸ் நோயிங் யூ.” என்று கூறி, விடைபெற்றுச் சென்றாள். மதிமாறனுக்கு அமுதாவை தான் கண்ணாறக் காண்பது அதுவே கடைசி தடவை என மனதினுள் தோன்றியது
மீண்டும் மதிமாறனுடன் தனித்து விடப்பட்ட சுரபி, அடுத்து செய்யவேண்டிய காரியங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள். “இந்த வீட்டை நீங்க எப்படி தேடினாலும் எங்களைப் பத்தி எந்த உபயோகமாக தகவலும் கிடைக்காது. அமுதா சுரபியோட கை ரேகைகள் வேணும்னா கிடைக்கும். ஆனா அதை வச்சு எவ்வளவு தூரம் எங்களை தேட முடியுமோ தெரியலை. ஏன்னா, நாங்க போகப்போற இடத்தில, புது பேர், புது அடையாளம், புது கைரேகைன்னு எல்லாமே ஃப்ரெஷ்ஷான தொடக்கமா தான் ஆரம்பிக்க போறோம்.”
“ சோ, வீடு முழுக்க இருக்கற கைரேகைகள், இறந்து போகப்போற, “அமுதா””சுரபி”யோடது. இந்த வீடும், காரும் எதுவுமே எங்க பேர்ல இல்லை. இதெல்லாம் பினாமி பேர்ல வாங்கி, அதை திரும்பவும் காசாக்கியாச்சு. சோ, அந்த ஆங்கிள்லையும் யோசிக்காதீங்க. டைம் வேஸ்ட். இப்போ உங்க கீழ்வீட்டு அங்கிள் குடுத்த 70 லட்ச ரூபாய் பணத்தைக் கூட, ஃபாரினுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ண வச்சு, திரும்ப அங்க எங்க அக்கவுண்டல் போடற மாதிரி செஞ்சாச்சு….நான் சொன்ன டிரான்ஸாக்ஷன் புரியலைன்னா, “சிவாஜி த பாஸ்”படம் இன்னொரு தடவை பாருங்க. கருப்பை எப்படி வெள்ளையா மாத்தறதுன்னு அழகா சொல்லியிருப்பாங்க” என்று நிறுத்தியவள், வீட்டையும் அதன் பொருட்களையும் அளவெடுப்பது போல் பார்வையை செலுத்தினாள்.
நினைவு வந்தவளாக,“அப்பறம், அந்த ரூம்ல அபினவ் இருக்கான். அவனுக்கு இன்னும் அஞ்சு அல்லது ஆறு மணி நேரத்தில முழுப்பு வந்திடும். அந்த கதவை லாக் பண்ணலை, சோ, அவன் எந்திரிச்சு, அந்த கதவைத் திறந்து வந்தா, உங்களை காப்பாத்தி கட்டுகளை அவுத்துவிடுவான். சோ, அதுவரைக்கும் நீங்க இங்க சோஃபாவில ரிலாக்ஸ்டா உட்கார்ந்திருங்க. முடிஞ்சா அந்த பையனுக்கு சீக்கரம் முழிப்பு வரணும்னும், கதைவை திறந்து பார்க்கனும்னு வேண்டிக்கோங்க…அவன் பாட்டில கதவு பூட்டியிருக்கும்னு நினைச்சு உள்ளையே இருந்துக்க போறான்..”என சின்ன குரலில் கூறியவள் மதிமாறனைப் பார்த்து இதழ்பிரிக்காமல் சிரித்தாள்.
கதவின் அருகே சென்று, வீடு முழுவதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் மதிமாறனை ஒரு பார்வை பார்த்தவள், கதவின் அருகே வாயிற்படி அருகில் வைத்திருந்த அந்த செரி ப்ளாசம் போன்சாய் செடியில் இருந்து அழகாக மலர்ந்திருந்த ஒரு பிங்க் நிற மலரை மட்டும் கொய்து கையில் எடுத்துக் கொண்டாள். “முழு போன்சாயும் எடுத்துப் போகனும்னு தான் தோணுது மதி…ஆனா முடியாது. உன் நினைவா எனக்கு இது போதும்..”என்று தழுதழுத்த குரலில் மொழிந்தவள், கதவின் அருகே இருந்த வேகமாக திரும்பி வந்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவனை இறுக்கமாக ஒரு முறை கட்டிக் கொண்டவள், அவன் காதருகில் குனிந்து, “ஐம் சாரி…உன் மனசு எனக்கு புரியாம இல்லை. உனக்கு எந்த விதத்திலையும் என்னால ஆறுதல் சொல்லமுடியாது. உனக்கு தகுந்த மாதிரி என் வாழ்க்கையை நான் மாத்திக்கணும்னு நினைச்சாலும், என்னோட பாஸ்ட் எங்கூட சுமையா வரும். அந்த சுமையோட உன்னால என்னை மனைவியா ஏத்துக்க முடியாது.நான் உங்ககிட்ட ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்லை. எதிர்பார்த்ததும் இல்லை. இப்போ கேட்கறேன்.”
“ நீ தட்டாம செய்வன்னு நம்பிக்கையில கேட்கறேன். என்னை நினைச்சு வருத்தப்படாம, உனக்கான ஒரு வாழ்க்கையை நீ அமைச்சுக்கனும். அதுதான் என் காதலுக்கு நீ குடுக்கற பரிசு…..” என்று நிறுத்தியவள், குனிந்து அவனது அதரங்களில் மீண்டும் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தாள். “ஐ லவ் யு ஃபாரெவர் மதி ” என்று மெல்ல முனுமுனுத்தவள்,
சில நொடிகளுக்குப் பிறகு மதிமாறனை அணைத்துக் கொண்டிருந்த தன் கைகளை விடுவித்துக் கொண்டு, நொடி நேரம் கூட தாமத்திக்காமல், ஏன் திரும்பிக் கூட பாராமல், அந்த போன்சாய் மலருடன் மறைந்துவிட்டிருந்தாள். மதிமாறன் செய்வதறியாது, தன்னை பிரித்து செல்லும் தன் காதலியை கண்களில் நீர் மல்க, இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.