Paadal thedal – 16(1)

Paadal thedal – 16(1)

16

இணக்கம்

விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன்.

ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே வலித்தது. அதை ஏற்க முடியாமல் அவன் ரொம்பவும் மனதளவில் அவதியுற்றான்.

இரு வாரங்கள் இப்படியே கடந்து சென்றுவிட்டன.

அப்போதும் செழியனுக்கு ஏனோ  அவள் முகம் பார்த்து பேச சஞ்சலமாக இருந்தது.

அவளின் நட்பை தான் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வா அல்லது அவளை மீண்டும் ஒரு தடவை அப்படி ஒரு  கோணத்தில் பார்த்துவிடுவோமா என்ற பயமா?

ஏதோ ஒன்று அவனிடமிருந்து அவளை விலகி நிற்க செய்தது. நேருக்கு நேராக முகம் பார்த்து  பேசாமல் முடிந்தவரை அவளை தவிர்த்தான்.

அதுவும் இரவு நேரங்களில் குழந்தைகளை அவர்களோடு உறங்க வைத்து கொள்வதில் கறாராக இருந்தான். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி மீனாவையும் அன்புவையும் அவர்களோடே படுக்க வைத்துகொண்டான்.

அவன் மீதே அவனுக்கு உண்டான அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது.

ஆனால் ஜானவி தான் சங்கடப்படுகிறோம் என்பதால் அவன் அப்படி செய்கிறான் போலும் என்று எண்ணி கொண்டாள்.

செழியனின் மனநிலை ஜானவிக்கு தெரியவில்லை. அவன் விலகி நிற்க முயன்றாலும் அவள் அவனிடம் எப்போதும் போலவே இயல்பாக நடந்து கொண்டாள். பேசினாள்.

இந்த இரண்டு வாரத்தில் ஜானவி செழியன் வீட்டில் ரொம்பவும் இயல்பாக பழகிவிட்டிருந்தாள். பாண்டியனும் சந்தானலட்சுமியும் அந்தளவுக்கு அவளிடம் நெருக்கமானதும் கூட ஒரு காரணம்.

அதேநேரம் அவள் அலுவலக வேலைகள் செய்ய எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டி, அவள் முன்பு குடியிருந்த எதிர்வீட்டில் சரவணனையும் ரேஷ்மாவையும் வைத்து தம் அலுவல்களை பார்த்து கொண்டாள்.

அன்று சனிக்கிழமை செழியன் பள்ளிக்கு போய்விட்டு திரும்ப, கதவு திறந்திருந்தது. வீட்டின் வாசல் கேட் மட்டும் பூட்டியிருந்தது.

அதுவும் வீட்டில் ஆள்அரவமே இல்லை.

“அன்புக்குட்டி…. மீனும்மா…” என்று அவன் அழைக்க பதில் குரலே இல்லை.

செழியன் புரியாமல், ‘என்ன? வந்ததும் இரண்டு பேரும் எகிறிட்டு ஓடி வருவாங்க… எங்கே போனாங்க? என்று யோசித்து கொண்டே அவன்,

“ம்மா” என்று அழைத்தான்.

ஜானவி சமையலறையிலிருந்து, “இதோ வரேன்” என்று குரல் கொடுத்துவிட்டு சாவியை எடுத்து வந்து பூட்டை திறக்க,

“எங்க? வீட்டில யாரையும் காணோம்” என்று வினவினான்.

“எல்லோரும் பக்கத்தில  பெருமாள் கோவில் போயிருக்காங்க… அவங்க தாத்தா பாட்டி கிளம்பினதை பார்த்ததும் இந்த வாலுங்களும் கூடவே கிளம்பிடுச்சு” என்று சொல்லி கதவை திறந்துவிட்டு அவள் உள்ளே செல்ல  பின்னோடு வந்தவன்,

“அப்போ வீட்டில யாருமே இல்லையா?” என்று அழுத்தமாக கேட்டான்.

“என்னை பார்த்தா ஆளா தெரியலயா உங்களுக்கு?” என்று ஜானவி திரும்பி நின்று புருவத்தை உயர்த்த,

அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தபடி, “சேச்சே…. அப்படி இல்ல…. பசங்க இல்லையான்னுதான்… அவங்க இல்லாம வீடே அமைதியா இருக்கே” என்று சமாளித்தான்.

“அதென்னவோ உண்மைதான்… அவங்க இரண்டு பேரும் கிளம்பனதும்… எனக்கே இது நம்ம வீடான்னு சந்தேகம் வந்திருச்சு” என்று அவள் முறுவலித்து சொல்ல,

செழியன் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“டீதான் போட்டுட்டு இருக்கேன்… உங்களுக்கும் போட்டு எடுத்துட்டு வரேன்… இரண்டு பேரும் ஒண்ணா குடிக்கலாம்” என்று சொல்லி கொண்டே அவள் உள்ளே சென்றுவிட செழியனுக்குதான் உள்ளூர தடுமாற்றம்!

என்னதான் அவளை விட்டு விலகி நிற்க அவன் நினைத்தாலும் அவளின் இயல்புத்தன்மையும் அவள் அந்த வீட்டையும் அவனையும் ஒரு குடும்பமாக பாவித்து பேசும் விதமும் நாளுக்கு நாள் அவளை மனதளவில் அவனிடம் நெருக்கமாக்கி கொண்டே இருந்தது.

ஜானவி இரண்டு கோப்பையில் தேநீரை நிரப்பி கொண்டு அறை வாசலில் வந்து, “செழியன்” என்று அழைக்கவும்,

“வாங்க ஜானவி” என்று அழைத்தவன் ஃபார்மல்ஸிலிருந்து டிரேக்ஸுக்கும்  டீஷர்ட்டுக்கும் மாறியிருந்தான்.

அதோடு மேஜையில் அமர்ந்து கொண்டு தேர்வு தாள்களை திருத்த அவன் கையிலெடுத்து கொள்ள,

“வந்ததும் வேலையா? இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா டீ குடிக்கலாம்னுதானே சொன்னேன்” என்று ஜானவி முகத்தை சுருக்கினாள்.

“இல்ல ஜானவி… பேப்பர் கரெக்ஷன்ஸ்… நாளைக்கே முடிக்கணும்… பசங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள கொஞ்சமாச்சும் முடிக்கலாம்” என்று அவன் காரணங்கள் சொல்ல,

ஜானவி தேநீர் கோப்பையை அவன் அருகில் வைத்தபடி, “முன்ன மாதிரி நீங்க என்கிட்ட பேசறது இல்ல செழியன்… ஏதோ மாதிரி நடந்துக்கிறீங்க… முகத்தை கூட பார்த்து பேச மாட்டிறீங்க… உங்களுக்கு என்னதான் ஆச்சு…  நான் ஒருவேளை ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டேனா? இல்ல உங்க ப்ரைவஸிக்குள்ள நான் அத்துமீறி நுழையறேனா” என்று
அவள் வருத்தத்தோடு பொரிந்து தள்ளினாள்.

“சேச்சே அப்படி எல்லாம் இல்ல ஜானவி” என்று அவன் பதறி கொண்டு மறுக்க,

“நீங்க பொய் சொல்றீங்க” என்று சொல்லி அவனுக்கான தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவள் திரும்ப,

“ஜானவி ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று செழியன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து ஸ்டிக்கை ஊன்றி எழுந்து கொள்ளும் போது அது தடுமாறி கீழே விழுந்தது.

ஜானவி அந்த சத்தத்தில் பட்டென திரும்பியவள் அவன் நிற்க தடுமாறுவதை பார்த்து

வேகமாக தன் கையிலிருந்து ட்ரேயை கீழே வைத்துவிட்டு, “பார்த்து செழியன்” என்று பதறியபடி அவனிடம் நெருங்கி வந்து பிடித்து கொள்ள,

அவனும் தடுமாற்றத்தில் அவள் தோள் மீது தன் வலது கரத்தை தாங்கி கொண்டு நின்றான்.

ஆனால் அடுத்த நொடியே அவன் கரத்தை விலக்கி கொள்ள பார்த்த போது, அவள் கரம் அவன் இடையை வளைத்து பிடித்து கொண்டு அவனுக்கு துணையாக அவள் தாங்கி நின்றதை!

மனம் நெகிழ்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

தனக்காக பதறிய அவள் விழிகளிலிருந்த தவிப்பு அவனுக்கு பிடித்திருந்தது.

துணைவியாக அவள் உடன் நின்று விதத்தில் இப்படியும் அப்படியுமாக ஊசலாடி கொண்டிருந்த அவன் மனது அவளிடம் மொத்தமாக சாய்ந்திருந்தது.

“செழியன்” என்றவள் அழைப்பை அவன் செவிகள் கேட்டறிந்தாலும்  அவன் மனமும் விழிகளும் அவளை விட்டு நகர்ந்தபாடில்லை.

“செழியன்” என்றவன் அழுத்தம் கொடுத்த அழைக்க அவன் தன்னிலை மீட்டு கொண்டு அவள் தோள் மீதிருந்த கரத்தை மேஜை மீது ஊன்றி கொள்ள,

ஜானவியும் தன் கரத்தை விலக்கி கொண்டு குனிந்து அவன் ஸ்டிக்கை எடுத்து கொடுத்தாள்.

அதனை அவன் பெற்று கொண்டு மௌனமாக அவள் முகத்தை பார்த்தான்.

இத்தனை நாளாக தனக்கென்று ஒரு துணை தேவையென்று அவன் மனம் கருதியதேயில்லை.

ஆனால் மனம் இன்று அவள் துணையை விரும்பியது. அவள் தனக்காக பதறி நின்றது பிடித்திருந்தது. அவள் மீது அவன் கொண்ட நட்புணர்வு தகர்ந்திருந்தது.

“பார்த்து எழுந்திருக்க கூடாதா?” என்று அக்கறையாக கேட்டாள் அவள்!

“நீங்க கோபப்பட்டு போகாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது” என்று அவன் அவளை பார்த்து சொல்லவும்,

“என் கூட நீங்க ஒரு டீ குடிச்சிருந்தா… இப்படி எல்லாம் நடந்திருக்காது” என்று சொல்லி அவனை பதில் பார்வை பார்த்தாள்.

அவன் சிரித்துவிட்டு, “சரி குடிப்போம்” என்று சொல்ல இருவரும் பால்கனி கதவை திறந்து கொண்டு தேநீர் அருந்த,

“நீங்களும் அவங்க கூட கோவிலுக்கு போயிருக்கலாமே” என்று இயல்பாக கேட்டான் செழியன்.

“நீங்க வீட்டுக்கு வர நேரமாச்சா…  அதான் போகல” என்றவள் சொல்ல,

அவன் பார்வை என்னவோ இம்முறை அவளையே பார்த்து கொண்டிருந்தது. இவளுக்கு தன் மீது இருப்பது வெறும் நட்புணர்வு மட்டும்தானா என்ற கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்குமா என்ற எதிர்பார்ப்புதான்.

“செழியன்” என்றவள் அழைக்க, “ஹ்ம்ம்” என்றான்.

“உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் என் மேல வருத்தம் இல்லையே?” என்றவள் வருத்தமாக கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல ஜானவி” என்று அவன் ரொம்பவும் சாதாரணமாக கூற,

“நிஜமா?” என்றவள் அழுத்தி கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவர்கள் இருவருமே அறியாத வண்ணம் அவர்கள் இருவருக்குமிடையில் ஓர் இணக்கம் உருவாகியிருந்தது.

தேநீரை பருகி முடித்த பின்பும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க,

வெளியே மீனா, அன்புக்குட்டியின் குரல் ஒலித்தது.

“வந்துட்டாங்க போல… சரி நீங்க கப்பை கொடுங்க” என்று அவன் கரத்திலிருந்த தேநீர் கோப்பையையும் வாங்கி கொண்டு வெளியேறினாள்.

‘வரவங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வர கூடாதா?’  செழியனுக்கு அவளுடன் இன்னும் சில நிமிடங்கள் தனிமையில் பேசி கொண்டிருக்க கூடாதா என்ற எண்ணத்தின் எதிரொலி!

ஜானவி வேகமாய் சென்று வாசல் கேட்டை திறந்துவிட்டு கொண்டே, “சாமியெல்லாம் கும்பிட்டாச்சா?” என்று குழந்தைகளிடம் கேட்டாள்.

அப்போது பாண்டியன் சந்தானலட்சுமியை முந்தி கொண்டு மீனா உள்ளே வந்து, “ம்மா… தாத்தா” என்க,

“தாத்தாவுக்கு என்னடி ?” என்று கேட்டு கொண்டே ஜானவி பாண்டியனை பார்த்தாள். அப்போது அவர்கள் பின்னோடு சங்கரன் நுழைந்தார்.

அவரை பார்த்ததும் ஜானவிக்கு சீற்றம் உண்டாக அவள் அவரை பார்த்த கணமே விறுவிறுவென படுக்கையறைக்குள் சென்றுவிட்டாள்.

உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்த செழியன் அவள் கோபத்தையும் வேகத்தையும் புரியாமல் பார்த்தான்.

அவன் வெளியே வந்த போது சங்கரன் முகப்பறையில் நிற்க,

“ஜானவியோட அப்பா” என்று அவரை அறிமுகப்படுத்தினார் பாண்டியன்.

ஜானவியின் கோபம் இப்போது புரிந்தது செழியனுக்கு!

அவன் புன்னகையான முகத்தோடு, “உட்காருங்க ப்பா” என்று சங்கரனிடம் சொல்ல பாண்டியனும் அவரை அமர சொன்னார்.

சந்தானலட்சுமி, “நான் போய் காபி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே செல்ல சங்கரன் ரொம்பவும் சங்கடமான நிலையில் நின்றிருந்தார்.

சங்கரன் கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு தனியே ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த சமயத்தில் பாண்டியன் சந்தானலட்சுமியோடு வந்த மீனா அவரை கண்டறிந்து, “தாத்தா” என்று அவரிடம் ஓடி செல்ல,

பேத்தியை பார்த்து அவருக்கு அத்தனை ஆனந்தம்.

பாண்டியனுக்கும் சந்தானலட்சுமிக்கும் அப்போதுதான் அவர் ஜானவியின் அப்பா என்றே தெரியும்.

சங்கரன் மீனாவை தூக்கி கொண்டு அவர்களை புரியாமல் பார்க்கும் போது பாண்டியன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அதேநேரம் செழியனுக்கும் ஜானவிக்கும் நடந்த திருமணத்தை பற்றி சொல்லி அனைத்து விஷயங்களை விவரமாக விளக்கினார்.

அப்போதுதான் சங்கரனுக்கு மகளின் மீது அவதூறாக அவர்கள் பழிப்போட்ட விஷயமே தெரியவந்தது. மனமுடைந்து குற்றவுணர்வோடு மகளை பார்த்து மன்னிப்பு கேட்கவே அவர் அங்கே வந்திருந்தார். ஆனால் ஜானவி அவரை பார்க்க கூட விருப்பமின்றி அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ம்மா தாத்தா வந்திருக்காரு” என்று மீனா அழைக்க,

“அவரு உனக்கு தாத்தா… அவ்வளவுதான்” என்று ஜானவி கோபித்து கொண்டு முகத்தை திருப்பி கொள்ள, “ம்மா” என்று அழைத்தாள்.

“போடி” என்று ஜானவி மீனாவிடம் கோபம் மாறாமல் சொல்ல, அங்கே செழியன் வந்து நின்றான்.

மீனா அவனிடம், “அம்மா திட்டிறாங்க” என்க,

“கோபத்தில இருக்காங்கடா… நான் பார்த்துக்கிறேன்… நீங்க போங்க” என்றான்.

error: Content is protected !!