Pidikaadu23
Pidikaadu23
பிடி காடு – 23
கௌரி அழுதாளே தவிர பேசவில்லை. கண்ணீர் வற்றி கேவல்கள் கொஞ்சம் அடங்கிய பின் செந்திலின் தோளிலிருந்து விலகி அவன் கைகளுக்குள்ளிருந்த தன் கைகளை விடுவித்து புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடிச் சென்றுவிட்டாள்.
இப்போது என்னவென்று முடிவு செய்வது? அவளுக்கு சம்மதம் என்றா? இல்லை தன் மீது கோபம் என்றா? பிறகெதற்கு அழுதாள்? ‘எல்லோரையும் போல் நீயும்’ என்று முடிவு செய்துவிட்டாளா? போய் மறுபடியும் பேசுவதா? இல்லை யோசிக்கட்டுமென்று விடுவதா?
செந்திலின் மனதில் வரிசையாய் நிறையக் கேள்விகள். பதிலை நாளை தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வளவு நேரம் மிச்சமில்லை. வெள்ளிக்கிழமைத் திருமணமென்றால் நாளை எல்லா ஏற்பாடும் செய்தாக வேண்டும். வெளியே வந்து அவன் வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியுடன் கௌரி வீட்டிற்குச் சென்றான்.
கதவைத் தட்டினான். பதிலில்லை. தாழிடப்படாமலிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான். இருட்டாக இருந்தது. விளக்கைப் போட்டான். ராஜா பாயில் தூங்கிக் கொண்டிருக்கக் குளியலறையில் கௌரி அழும் சத்தம் கேட்டது.
“கௌரி வெளிய வா. இப்போ எதுக்கு அழற? இவ்வளோ நேரம் அழுதது பத்தாதா? அழுகைய நிறுத்த போறியா இல்லையா? ஏய்… உன்ன என்ன கொடுமப் பண்ணேன் நானு? எதுக்கு இப்போ இப்படி ஒப்பாரி வெக்குற?”
“என் தலையெழுத்து நா அழுவுறேன். ஒனக்கென்ன வந்துச்சு. போ இங்கேந்து”
“வெளிய வா முதல்ல”
“முடியாது. இங்கேந்துப் போ”
“ஒனக்கு அவ்வளோ இருக்குன்னா எனக்கும் இருக்கும். எவ்வளோ நேரம் உள்ள ஒக்காந்திருக்கன்னுப் பாக்குறேன்”
பெரிதாக வாய்விட்டு அழும் சத்தம், செருமும் சத்தம், வாலியில் தண்ணீர் பிடிக்கும் சத்தமென்று மாறி மாறிக் கேட்டது. செந்தில் தவறு செய்துவிட்டோமோ என்று கூட யோசித்தான். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது.
சில நிமிடங்களாக எந்த சத்தமும் கேட்கவில்லை. அழுகையை நிறுத்திவிட்டாள் என்று கொஞ்சம் நிம்மதியானது. கூடவே மயங்கிவிட்டாளோ என்ற சந்தேகமும். கதவைத் தட்டலாமா என்று அவன் யோசித்தபோது கௌரி வெளியே வந்தாள்.
ராஜாவின் அருகில் பாயில் அவன் உட்கார்ந்திருக்க மகனுக்கு மறுபக்கம் தரையில் அமர்ந்தாள்.
“இத்தன நாள் நீ ஒரு வீட்டுல நா ஒரு வீட்டுல நல்லாதான இருக்கோம். இப்போ எதுக்குக் கல்யாணத்தப் பத்தி பேசுற? எத்தனப் பேருக் கேட்டிருப்பாங்க? அப்போலாம் அவங்க வாய மூடுனல்ல? இப்போ…”
“ஒருத்தர் கேட்டப்போ கோபம் வந்துச்சு. திரும்பத் திரும்பக் கேட்டப்போ ஒருவேள அப்படி நடந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கத் தோணுச்சு. அதே எல்லாரும் கேட்டப்போ நடந்தா நல்லாருக்கும்னு ஆச வந்துது. அதான் இன்னைக்கு…”
“என்னாலக் கடைசி வரைக்கும் தனியா இருக்க முடியும்”
“முடியவே முடியாதுன்னு சொல்லல. இவன யோசிச்சுப் பாரு. அவனுக்கு நீ மட்டும்தான் இருப்ப. உனக்கு சொல்லிக்குற மாதிரி சொந்தம்னு யாருமில்ல. தெரிஞ்சவங்கன்னாவது யாராவது இருக்காங்களா? எப்படி வளருவான்?”
“ஏன் தெரிஞ்சவங்க இல்ல?”
“யாரு இருக்கா சொல்லு”
“இந்த ஊரு எனக்குப் புதுசு. கொஞ்ச நாள் இருந்தா…”
“சும்மா கத சொல்லாத. நீ இந்த வீட்டுக்கு வந்தே எத்தன மாசமாச்சு? பக்கத்து வீட்டுல இருக்கவங்க… கடப் போடுற எடத்துல… யாராவது ஒருத்தர்?”
“தப்புதான். பழகி வெச்சுக்குறேன். அதுக்கு கல்யாணம் பண்ணணும்னு அவசியமில்ல”
“என்ன பத்தி யோசிச்சுப் பாரு. யாரும் எம்பக்கத்துல இருக்கணும்னு இத்தன வருஷம் நெனச்சதில்ல. நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு ஆசையா இருக்கு”
“ஒனக்குக் குடும்பம்தான் வேணும்னா வேற நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோயா. என்னைய எதுக்கு…”
“குடும்பம்னு யோசிச்சாலே ஒம்மூஞ்சி மட்டும்தான் நெனப்பு வருது. என்னால மாத்தியெல்லாம் யோசிக்க முடியாது கௌரி”
“இத்தன நாள் இல்லாம இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசுற? ஊரு ஒலகத்த விடு. உன் மாமா வீட்டுல என்ன பேசுவாங்க?”
“எல்லாருக்கும் சம்மதம். யாரும் வேண்டாம்னு சொல்லல”
“சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டியா?”
“இதுக்கு மேல வேற எப்படி சொல்லி உனக்குப் புரிய வெக்குறதுன்னு எனக்குத் தெரில. என்ன கால்ல விழுந்துக் கெஞ்சணும்னு நெனைக்குறியா? நானும் பாத்துட்டே இருக்கேன்…”
“ஏன் இப்படியெல்லாம் பேசுற? நீ மொதல்ல வெளிலப் போ”
“ஒரு முடிவுத் தெரியாம நா போ மாட்டேன்”
“ஒக்காந்திரு இங்கயே. நா போய் உன் வீட்டுலப் படுத்துக்குறேன்”
“எங்கப் போற? வீடு பூட்டியிருக்கு”
“தெருவுலப் படுத்துத் தூங்குறேன்”
“போய் படுப் போ. புத்தி வருதாப் பாப்போம். போடி”
வேகமாக எழுந்து கௌரியின் கை பிடித்து இழுத்துச் சென்று வீட்டின் வெளியே விட்டு கதவை மூடித் தாழிட்டான். சில நொடிகள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டின் வெளியே நிற்பது உரைத்தபோது கதவைத் தட்டினாள்.
“என்னய்யாப் பண்ணுற? கதவத் தொற. தொறன்னு சொல்லுறேன்ல… நடு ராத்திரில என்ன பஞ்சாயத்துப் பண்ணிக்கிட்டு இருக்க நீ? என்னால இங்க நின்னுக் கத்த முடியாது. யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க? கதவத் தொறன்னா…”
“சும்மா கதவத் தட்டாத. தொறக்க மாட்டேன்”
கதவினருகே இருந்த ஜன்னலிலிருந்து குரல் கேட்கவும் ஜன்னலருகே வந்தாள்.
“எதுக்கு வெளிலத் தள்ளி கதவ சாத்துன? இப்போ…”
“ஒரு முடிவுக்கு வா. அப்பறம் கதவத் தட்டு. அதுவரைக்கும் ஒரு சின்ன சத்தம் வரக் கூடாது”
“எங்கப் போற? இந்தாயா…”
“தூங்கப் போறேன். சத்தம் வரக் கூடாதுன்னு சொன்னேன்”
“சொல்லுறத… ச்ச…”
விளக்கை அணைத்தான். ராஜாவின் அருகில் படுத்து அவனை அணைத்தபடி கண் மூடினான்.
கௌரிக்கு அலுப்பாய் இருந்தது. வெளியே சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாமா என்று யோசித்தாள். திருச்சி வந்த முதல் நாள் மகனைத் தூக்கிக் கொண்டு சத்திரம் பேருந்து நிலையத் தெருக்களில் இரவு முழுவதும் நடந்தது நினைவு வந்தது. படியில் அமர்ந்து கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டாள்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்து ஜன்னல் வழியே பார்த்தாள். செந்தில் கொஞ்சம் கூட அசைந்திருக்கவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கண்ணைத் திறந்துப் பார்த்தான் செந்தில். இருட்டில் எங்கிருக்கிறோம் என்று புரிய சில வினாடிகள் ஆயின. மீண்டும் கதவு தட்டப்பட்டது. ராஜாவிடமிருந்து விலகினான். லேசாக சினுங்கியவனுக்குத் தட்டிக் கொடுத்தான். மறுபடியும் கதவைத் தட்டும் சத்தம். எழுந்துச் சென்று திறந்தான்.
“வழிய விடு”
“எதுக்கு?”
“இங்க பாரு… சும்மா எம்மேல இரக்கப்பட்டு…”
“ம்ம்ச்ச்… நீ முழுசா யோசி. அப்பறம் கதவத் தட்டு. தூக்கத்தக் கெடுத்துகிட்டு”
“இருய்யா… கதவத் தொற”
“முடியாது”
“சரி கட்டிக்குறேன்”
கதவைத் திறந்த செந்தில் தெருவிளக்கின் ஒளியில் அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.
“கட்டிக்குறேன்”
“காலைலத் திரும்ப ஏன் எதுக்குன்னு ஆரம்பிக்க மாட்டியே”
“ம்ம்ஹும்”
“வந்து படு”
“எங்க? நில்லுய்யா… எங்கப் போற? உன் வீட்டுலப் போய்ப் படுய்யா”
பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்தான்.
“மணி நாலாகுது. தூக்கம் கண்ணக் கட்டுது. ஆறு மணிக்கு எழுப்பு”
“சரி அதுக்கு எதுக்கு இங்க படுக்குற? உன்…”
“போய் வீட்டத் தொறந்து படுக்கைய விரிச்சு… ரெண்டு மணி நேரத்துக்காக இவ்வளோ பண்ண முடியாது”
“நா வேணா எல்லாம் பண்ணித் தரேன். வாய்யா”
செந்தில் பழைய நிலையில் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். விளக்கைப் போடலாமென்றால் அவன் தூங்குவதைப் பார்த்தபோது மனம் வரவில்லை. அவன் வீட்டுச் சாவி எங்கிருக்கிறதென்று அந்த இருட்டில் தெரியவில்லை. மீண்டும் வெளியே சென்று உட்காரலாமா என்று யோசித்தவளுக்கு தூக்கம் வந்தது. கதவை மூடுவதா அப்படியே திறந்து வைத்திருப்பதா என்று சில நிமிடங்கள் யோசித்தவள் கதவை மூடித் தாழிட்டாள். மகனுக்கு மறுபக்கம் கொஞ்சம் இடைவெளிவிட்டு கையை மடக்கி தலைக்கடியில் வைத்துத் தரையில் படுத்தாள்.
இத்தனை நாட்கள் தனக்கென்று ஒரு வீடு இருப்பதாய் நினைத்தாள். அந்த வீடு தனது மட்டுமில்லையோ என்று இப்போது புதியதாய் ஒரு எண்ணம். ராஜா செந்திலின் புறம் திரும்பிப் படுத்திருந்தான். அவனை அணைத்தபடி செந்தில் தூங்கிக் கொண்டிருந்தான். மகன் கூடத் தனக்கு தூரமாகிவிட்டானோ? தனித்தாகிவிட்டோமோ என்ற பயம். செந்திலின் முகம் பார்த்தாள். மனம் அமைதியுற்றது. கண்களை மூடினாள்.
மொபைல் அடிக்கும் சத்தத்தில் இருவரும் பதறி எழுந்தனர். ராஜா புரண்டுப் படுத்தான். அவனைத் தூக்க கௌரி முன்னால் நகர செந்தில் தட்டிக் கொடுத்தான். ராஜா விழித்துவிட்டான். எழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கினான். அடித்துக் கொண்டிருந்த மொபைலை எடுத்து பேசினான் செந்தில்.
“சொல்லுங்கண்ணே”
“இன்னும் எந்திரிக்கலையாப்பா?”
“மணி என்ன?”
“ஆறரை ஆகுது. அடுத்து என்ன பண்ணுறதா இருக்க? நா இன்னைக்கு சவாரிக்குப் போறதா இல்ல எதுவும் வேல இருக்கா?”
ராஜா முட்டியிட்டுச் சென்று செந்திலின் மடியில் அமர்ந்து அவன் மீது சாய்ந்து கொண்டான்.
“நீங்க போங்கண்ணே. எதாவது தேவைப்பட்டாக் கூப்பிடுறேன். இதுக்காக ஏன் ஒரு நாள் ஓட்டத்த விடப் போறீங்க?”
“அப்போ நீ?”
“இன்னைக்கும் நாளைக்கும் லீவு சொல்லிடுறேன். கடைக்குப் போகணும். துணி எடுக்கணும். தாலி வாங்கணும். மாலை…”
“கௌரிகிட்ட சொல்லிட்டியா? அது என்ன சொல்லுச்சு? மொதல்ல அத சொல்லாம…”
“சொல்லிட்டேன். ஒத்துக்கிட்டா. நீங்க கெளம்புங்கண்ணே. நா அப்பறமாக் கூப்பிடுறேன்”
கௌரி மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள். செந்தில் பேசிய எதுவும் காதில் விழவில்லை.
“என்ன செல மாதிரி உக்காந்திருக்க? கௌரி… உன்னதான்”
“ம்ம்… என்ன?”
“ஆறு மணிக்கு எழுப்ப சொன்னேன். மணியப் பாரு”
“நல்லாத் தூங்கிட்டேன்…”
“இப்பயும் நான் இருக்கேன், எல்லாம் பாத்துக்குவேன்னு நெனச்சுதான் தூங்கியிருப்ப… ஏன் அப்படி நெனச்சன்னு மட்டும் யோசிச்சுறாத என்ன…”
“ஏன் காலங்காத்தால இப்படிப் பேசுற?”
செந்தில் அமைதியாக எழுந்துச் சென்றுவிட்டான். கௌரி அப்படியே அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்தவள் மகனைக் காணாதுப் பதறினாள். ஓடிச் சென்று செந்திலின் வீட்டினுள் நுழைந்தாள். அறைக்குள் அமர்ந்து பெட்டியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
“என்ன? எதுக்கு இப்படி ஓடி வர?”
“புள்ள…”
“அமைதியாதான மடில உக்காந்திருக்கான்? நா பாத்க்குறேன்”
“புள்ளையக் குடுய்யா”
ராஜாவைத் தூக்க அவள் குனிய அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
“போய் காபி போடு போ”
“எதுக்கு புள்ளையக் குடுக்க மாட்டேங்குற? பல்லுக் கூட விளக்கல… காபியா?”
“எல்லாம் வெளக்கிக்கலாம். நீ போய் காபி போடு”
“பால் இருக்கா?”
“இல்ல. போய் வாங்கிட்டு வா”
“நானா?”
“ஏன்? நீ போய் வாங்கக் கூடாதா?”
“நானே போறேன். எந்த கடையில வாங்கணும்”
“அப்படியே தெருவுல எறங்கி தேடிட்டே நட. எதாவது கட கண்ணுலப் படும். தெனம் காலையில பால் எங்கேந்து வாங்கிட்டு வருதுன்னு கூடத் தெரியாது. எல்லாம் வாங்கிட்டு வந்து கையில குடுத்தா மகாராணி மாதிரி வீட்டுள்ள உக்காந்துக்கிட்டு என்னைய கெஞ்ச விடுற நீ? இன்னும் இருபது நிமிஷத்துல காபி வேணும். டேபிள் மேல என் பர்ஸ் இருக்குப் பாரு… காசு எடுத்துட்டுப் போ”
“இப்டி…”
“நிக்காத கெளம்பு”
அவன் பெட்டியிலிருந்து எடுத்த நோட்டை புரட்ட பர்ஸிலிருந்து காசை எடுத்து அறை வாசல் வரை சென்றாள்.
“முடிய ஒதுக்கிட்டுப் போ. இப்படியே பிச்சைக்காரி மாதிரிப் போகாத”
அவசரமாக விரல்களால் கலைந்திருந்த முடியை ஒதுக்கி சரி செய்தாள்.
“புடவைய சரி பண்ணு. வீட்ட விட்டு வெளிலப் போகும்போது எப்படிப் போகணும்னுத் தெரியாது?”
செந்தில் கையிலிருந்த நோட்டிலிருந்து பார்வையைத் திருப்பாமல் பேசிக் கொண்டிருந்தான். கௌரி அறையை விட்டு வெளியே சென்றாள்.