pm2

ஃபீனிக்ஸ் – 2

கடந்துபோன நினைவுகளில் ஆழ்ந்து போனவளின் நனவுகள் பருவத்திற்கு வலு சேர்த்ததோ அன்றி, வலு இழந்ததோ!

குழந்தை உள்ளத்தின் அறியாமையை தொலைத்து, இயல்புகளை உயர்த்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள வரும்(வந்த) வசந்தமானதொரு வாய்ப்பு வாகாய் அமைந்தது!

வாய்ப்பு!, முத்தாய்ப்பாய் எனக்கும் வந்தது!

முற்றிலும் எதிர்பாரா நாளில், எதிர்பாரா வேளையில்!

வருமென எதிர்நோக்கா உள்ளம், வந்ததும் திகைத்து, உழன்றது என்னவோ உண்மை!

என்ன செய்ய வேண்டும்!

உண்மையில் தெரியவில்லை!

‘முன்னப்பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்’,ங்கற வார்த்தைக்கு அப்பத்தான் அர்த்தம் புரிந்தது!’

புரியவில்லை! தலை, கால் புரியாமல்.. தெரியாமல் அப்படியும் சில நாள்கள்!

தரிசாக இருந்த உள்ளத்தில்.. பருவத்தின் பரிசாக இதய சிம்மாசனத்தில் ஜம்மென இடம் பிடித்துக் கொண்டான்.

எதிர்பாலின உருவத்தின் ஈர்ப்பு!

இனிமை, எங்கெங்கோ என்னை இட்டுச் சென்றது!

காதலின் இலக்கணம் அறியாமலேயே என்னால் காதலென்று உறுதி செய்யப்பட்டது!

பரிமாறிக் கொள்ளாமலேயே பதவிசாய் வளர்ந்தது!

ஒற்றைப் பெண்ணாக இருந்தாலும், கண்டிப்பும், கட்டுக்கோப்பும் தளர்த்தாத தந்தை! 

கணவனைத் தவிர வேறு எதையும் பெரியதாக எண்ணாத தாய்!

கணவன் வார்த்தையால் கூறுவதை, வழிமொழிவதையும், மாறாது அச்சுபிசாகாமல் வாழ்ந்து காட்டுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டவர்!

நடுத்தரக் குடும்பத்தின் நம்பிக்கை நாயகி நான்!

நான் ஜனனி!

ரொம்பப் பேரழகின்னு சொல்ல ஆசைதான். ஆனா அப்டியில்லை.  அதுக்காக ரொம்ப மோசமும் இல்லை.

கல்வியிலும் நடுத்தரம்!

கல்வி கசந்தாலும், கல்லூரிக்குச் செல்கிறேன்!

பட்டமோ, பட்டயமோ நோக்கமா? நானறியேன்!

பெற்றோரின் பகட்டிற்கான பக்கவாத்தியமாக பட்டக்கல்வி சாத்தியமானது!

கல்லூரிக் கல்வி, பெற்றோரின் அரிய முயற்சியால் சாத்தியமானது.

நியூக்ளியர் குடும்ப வாரிசாக வளர்ந்த எனக்கு கல்வியைத் தவிரவும் பலனுள்ள பலதையும் கற்றுத் தரும் இடமாக கல்லூரி அமைந்தது!

கல்வியை ஊறுகாயாக வைத்துக் கொண்டு, மெயின் டிஷ்ஷாக பலதரப்பட்டவைகளையும் கற்றறியும் வாய்ப்பைப் பெற்றேன்.

கவரப்பட்டவைகளை காட்சிப் பொருளாக்காமல், களவிட இயலாதவாறு, கப்பென பிடித்துக் கொண்டேன்!

உணர்வுகளின் உந்துதல் மற்றும் ஊக்கத்தாலும், கல்லூரித் தோழமைகளின் மயக்கத்திலும், தயங்காது கல்லூரிக்குச் செல்வதை மகிழ்வோடு செய்கிறேன்.

தோழமை வட்டம் பெரிது!

பருவத்தின் பலதரப்பட்ட உணர்வுகளை பந்தாடாமல், பாந்தமாக தாங்கிக் கொண்ட தோழமைகள்!

ஆனாலும், மனதிற்குள் உள்ளதை யாரிடமும் மூச்சுவிடவில்லை!

வம்பை விலை கொடுத்து யாராவது வாங்குவாங்களா? இல்லைதான! அதான்…

வகுப்புகளில் வறண்டிருக்கும், பேச்சும், சிரிப்பும், மகிழ்ச்சியும், ஓய்வு நேரங்களில் வளாகத்திற்குள் வானளவு கொட்டிக் கிடக்கும்!

ஆம், கண்டிப்பிற்கும், படிப்பிற்கும் பெயர் போன கல்லூரி அது!

வகுப்பறையில் பாடவேளைகளுக்கிடையே, திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இதர நடிகர்கள் செய்வதாகக் காட்டும் கோமாளித்தனங்களை அறவே அனுமதிக்கவே மாட்டார்கள். 

அவ்வாறு தப்பித்தவறி யாரேனும் இமிடேட் செய்யும் முயற்சியில் இறங்கினால், உடனே பெற்றவர்களை அழைத்து தாம்பூலத்தட்டில் மாற்றுச் சான்றிதழைக் வைத்து, “உங்க பிள்ளைக்கு ஏற்ற கல்லூரியில சேத்து படிக்க வைங்க, இங்க அறுந்தவால்களுக்கு இடமில்லை!”, என நடந்ததை அப்படியே கூறி மொத்தமாக வெளியில் அனுப்பிவிடுவர்.

திரும்பும் இடங்களிலெல்லாம் பழக்கம், வழக்கம், பண்பாடு, படிப்பு, உழைப்பு, இறைவழிபாடு மற்றும் ஒழுக்கம் இதனைப்பற்றிய போதனைகள் வளாகமெங்கும் கொட்டிக்கிடக்கும்.

அதற்கிடையே கண்ணாமூச்சி ஆட்டமாக மனதிற்குள், காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்…!

அதுவந்த முறைமையைச் சொன்னால் முறைக்கக்கூடாது…!

சிட்டாக சிறகில்லாமல் பறந்து திரியும் சில்வண்டாக வளைய வந்தவளின் மனதில், சிறு கீரலை உண்டாக்கியது ஒரு நாள்!

அந்நாள் பிறகு பொன்னாளாக எனதிதயத்தில் பொறிக்கப்பட்டது!

அதனால் உண்டான கீரல், அதுவரை கடைபிடித்த மாரலை தள்ளி நிறுத்தியது!

ஆரம்பத்தில் அதிர்ச்சியையும், அதன்பின் வசந்தத்தையும் அள்ளித் தரப்போகும் நாளாகிப் போனதென்னவோ உண்மை!

எதிர்பாராமல் எதிர்பாரா வேளையில் கூட்ட நெரிசலில் முகம் காணாமல், பேருந்தில் முதல் சந்திப்பு!

கூட்ட நெரிசலில், ஒரு காலை ஊன்றவே இயலாமல், மூச்சிற்கு திணரும் வண்ணம் பேருந்தில் பயணம்!

என்றுமே எங்களின் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வழித்தடம், கூட்ட நெரிசலோடுதான்! அதேபோன்று அன்றும் களை கட்டியது!

சந்தை வேறு அன்று!

சொல்லவா வேண்டும்!

நிரம்பி வழியும் வெள்ளத்தைப் போன்றதொரு கூட்டத்திற்கான காரணத்தை!

வளைவுகளிலெல்லாம் சமாளிக்க முடியாமல், பேருந்தையே மேடையாக்கி முறையாகக் கற்றுக் கொள்ளாமலேயே, ஃபோக், வெஸ்டர்ன் எனக் கலந்து, புதுவித நடனத்தை அரங்கேற்றினேன்!

சில நேரங்களில் நடனமாக அறியப்பட்டது, சில நேரங்களில் கோவிலில் சாமி வந்து நிதர்சனமற்று ஆடும் சாமியாட்டத்தைப் போன்றும் அமைந்து போனது!

பார்வையாளர்கள் பலர் இருக்க, சந்தோசமில்லை! அங்கு அவர்கள் பார்வையாளர்களாக இல்லை, உடன் பயணிக்கும் சகபயணியாக! ஆகையால் சங்கோஜமாக இருந்தது.  வழக்கமானதுதான், ஆனாலும் அன்று மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.

நிதானித்து நிற்க இயலாமல் மதுவினால் நிதானம் தொலைத்தவனைப் போன்று தள்ளாடிய வேளையில், ஒரு கரம் அணைவாக தாங்கிக் கொண்டது.

அணைத்த கரமே, ஆயிரம் மடங்கு உறுதி சொன்னது! தான் ஆணென்று!

மென்மையைத் தொலைத்திருந்த கடினமான தோலைக் கொண்ட கைகள் இதம் தரவில்லை!

இம்மியளவும் இடமில்லாத பேருந்தில் திரும்பிப் பார்க்கவோ, மறுப்பைக் காட்டவோ இயலவில்லை.

உடம்பு அந்தத் தீண்டலை எதிர்த்து, விரைத்து என் எதிர்ப்பை அவனுக்குக் காட்டியது.

தன்மீது பெண் விழுந்து விடாமல் இருக்க எண்ணி, தள்ளி நிறுத்தப் பிடித்தவன், எனது எதிர்ப்பை உடல்மொழியில் உணர்ந்து கொண்டான் போலும்!

பெண் தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டி, கத்தினால்… என மனம் ஒரு பக்கம் நினைக்க சுதாரித்தவன் பெண்ணிடம் கூட்டத்தின் சலசலப்பிற்கிடையில் கேட்கும் அளவிற்கான குரலில் கூறத் தலைப்பட்டான்.

‘ஷ்.. பாத்து! பக்கத்துல உள்ள கம்பியப் புடிச்சு பேலன்ஸ் பண்ணி நில்லு! இல்லைனா அப்டியே என் மேல வந்து விழுவ!’, எனும் அதட்டலான  குரல்.

அதிர்ச்சியைத் தந்தது!

பயத்தையும் தந்தது!

எனது மனதின் நடுக்கம், தோலை மீறி வந்ததோ! ஆதரவாக தோளைப் பிடித்து அமுக்கினான்.

அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் நான் இல்லை.  பயம் தொடர்ந்தது.

வரம்பு மீறவில்லை!

அதுவே, ‘அப்பாடா’ எனும் நிம்மதியைத் தந்தது!

கண்ணியமாக நடந்து கொண்டது!

காணத் தூண்டியது!

கண்டதும், ஏதோ மரியாதையுடனான இதம் மனதில்!

உள்ளுணர்வு அடுத்தடுத்து, நோக்கச் சொன்னது. ஆராயச் சொன்னது.

உள்ளுணர்வின் கட்டளைகளை ஏற்று, ரோபோ போல செயல்பட்டேன். நெரிசல் குறைந்ததும், இடைவெளி கூட்டி அகன்றிருந்தான்.

நன்றியுரைக்க வேண்டுமா? வேண்டாமா? எனக்குள் கேள்விகள்…! அதற்கு இடங்கொடாமலேயே அகன்றதோடு, இறங்குமிடம் வந்ததும் எதையும் எதிர்பாராமல் இறங்கிச் சென்றிருந்தான்.

திரும்பிப் பார்க்காமல் செல்கிறானே என நம்பிக்கையோடு செல்பவனையே பார்வையால் தொடர்ந்தேன்.

எனது ஆராய்ச்சியைக் கண்டும், கண்டு கொள்ளவில்லை!

வாடிப்போனது இதயகமலம்!

என் கவனம் அவனிடம் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது அவன் அகன்றது மனதில் புதுவிதமான அவதியைத் தந்தது.

என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பானோ என்று!

பெண்ணாகவே சென்று ஆணின்மீது விழுந்தால், என்ன நினைப்பார்கள்?

அதையும் மீறி, அன்றைய பயணத்தின் தாக்கம் அவனைக் கவனத்தில் கொண்டு வரச் சொன்னது.

நிறைய பயணங்கள், நிறைய நபர்கள், நிறைய சந்திப்புகள், நிறைய கூட்டங்கள்…

யாரும் ஏற்படுத்திடாத தாக்கத்தை தனித்துவமாக அவன் மட்டுமே என்னிடம் விதைத்திருந்தான்.

கந்தர்வன் வம்சமோ! காந்தமாக இழுத்திருந்தான்.

அவன் கண்டுகொள்ளாததோ, தவிர்த்ததோ. எனது மாறுபட்ட செயலுக்கு காரணமாகிப் போனதோ?

ஏமாற்றங்கள் தொடர்ந்ததோடு, எனது பார்வையும் அவனையே தொடர்ந்தது!

அடுத்தடுத்த பயணங்களில் கவனிப்பு மேலும் தொடர்ந்தது.

தொடர்ச்சியான பயணங்களில் முகம் பரிட்சயமானது!

கண்டும் காணாது, அலட்சியமாகக் கடந்த வேளைகள் சில!

துளைத்த பார்வைகள் பல!

அனைத்தையும் துவளாமல் எதிர்கொண்டேன்!

அலையிற கேஸாக இல்லாமல், அலைய வைக்கும் கேஸாக இருப்பதாகத் தோன்றியது!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக!

மூன்று மாதங்கள் பார்வையாலேயே தொடர்ந்தோம்!

கண்ணாமூச்சி ஆட்டம் அரங்கேறுவதும், கண்டு களிப்பதுமாக மாறி, மாறி!

கனிவான பார்வை, இதயக்காயை கனியச் செய்தது!

ஊமையாகவே தொடர்ந்தது!

அருகே வர, முந்தைய, பிந்தைய அருகாமை சீட்டில் அமர என முன்னேற்றம் கண்டது!

பேச நாணமோ? அது பெண்ணுக்குத்தானே! அவனுக்கென்ன?

அவன் வந்து பேசினாலும், நான் பேசுவேனா? எனக்கே என்னைத் தெரியவில்லை!

அதில் அவனைப் புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறினேன்.

கூட்டங்களில் நின்றிருந்தாலும், முதல் முறையைப் போன்று அருகில் நெருங்க முற்படவில்லை.

நெருக்கமாக நின்றிருந்தாலும், அன்றைய தினத்தைப் போன்று, அதட்டலோ, பேச்சோ இல்லாமல் இருந்தான்.

சாந்தமாக, தாங்கிக் கொள்வதும், சத்தியமா உன்னை யாருனே தெரியலங்கற மாதிரி, வீம்பாக கண்டு கொள்ளாததும்…

மாறி மாறிப்போன செயல்கள்! ஏன்?

குழப்பங்கள் தொடர்ந்தது!

எனது கேள்விகள், குழப்பங்களோடு நீண்டது!

குழப்பம் தீர்ப்பானா?

————————