PNV-30

PNV-30

இதழ்-30

வசுமித்ராவை மென்மையாக அவனிடமிருந்து பிரித்தவன், அவளை ஆராய, அவளது உதடு கிழிந்திருப்பதைப் பார்த்து கோபத்தில் அவன் உடல் இறுகியது.

முகம் உணர்ச்சி துடைத்திருக்க, அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை அவளால்.

அவளது இதழ் ஓரம் உலர்ந்திருந்த ரத்தத்தை மென்மையாகத் துடைத்தவன், அவளை வருமாறு ஜாடை செய்துவிட்டு முன்னே செல்ல, அவனை பின் தொடர்ந்தாள் மித்ரா!

மாடிப்படிகளில் ‘லாண்டிங்’ பகுதியில் ஒருவன் அடிபட்டுச் சரிந்துகிடக்க, காலால் அவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு கீழே இறங்கினான் தீபன்.

கீழே வந்ததும், அங்கே இருந்த பெரிய வரவேற்பறையில் திவாகருடைய அடியாட்கள் மூலைக்கு ஒருவராகச் சுருண்டு கிடக்க, தீபனின் ஆட்கள் அவனை வந்து சூழ்ந்துகொண்டார்கள்!

அதில் தலைவன் போல் இருந்தவன் உரிமையுடன், “இவங்கதான் நீங்க கட்டிக்க போற பொண்ணா தம்பி! ரொம்ப அழகா இருகாங்க!” எனச்சொல்ல,  வெட்கம் கலந்த லேசான புன்னகை அவனது முகத்தில் எட்டிப்பார்க்க,”அண்ணா! சும்மா இருங்க!” என்றான் தீபன் சற்று நெகிழ்வாக!

மற்றவர்கள் எல்லோரும் ‘ஓ’ வென குதூகலிக்க, வெட்கம் மேலோங்க அவனுக்குப் பின்னல் ஒன்றிக்கொண்டாள் மித்ரா!

“நேரம் ஆச்சு போகலாம்!” எனச் சொல்லிக்கொண்டே அருகில் இருந்த அறையின் கதவை தீபன் திறக்க, அடி பட்ட வலியில் முனகிக்கொண்டிருந்தான் ஜவஹர்!

வெளியில் நின்றுகொண்டே, “செத்த பாம்பை அடிக்க வேணாம்னு நானே ஒதுங்கி போனா கூட ஏண்டா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தேடி தேடி ஆப்பு மேல வந்து உட்கார்ந்துக்கறீங்க!

ஒருவேளை நீ செத்த பாம்பு இல்லையோ! விஷம் இன்னும் இருக்கு போல இருக்கே! மொத்தமா காலி பண்ணிடலாமா!” என எகத்தாளமாகக் கேட்டவன், “உன் அண்ணன் கிட்ட சொல்லு; உங்க டைம் முடிய போகுதுன்னு!” என்று கர்ஜித்துவிட்டு மித்ராவின் கையை பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன்!

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவனது வாகனத்தின் முன் பக்க கதவை தீபன் திறந்துவிட, மித்ரா உட்காரவும், சுற்றிவந்து உள்ளே உட்கார்ந்தவன் அதைக் கிளப்பினான்.

அவனது ஆட்கள் வந்த வாகனம் அவர்களை பின் தொடர்வது அவளுக்குப் புரிந்தது.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, “எதுக்காக உன்னை கடத்தினானுங்க?” என உணர்வற்ற குரலில் அவன் கேட்க, காரின் முன் பக்க கண்ணாடியில் தெறித்த மழைத் துளிகளை நடனமாடித் துடைத்துக்கொண்டிருந்த வைப்பரை பார்த்துக்கொண்டே, சற்று தயக்கத்துடன், “வசந்தை பத்தி கேட்டாங்க!” என அவள் சொல்லவும், அவனுடைய கோபத்தில் அந்த வாகனம் ஒரு குலுங்கு குலுங்கியது!

“மேடம் என்ன சொன்னீங்க!” என அவன் கடுமையுடன் கேட்க, “உங்க கிட்ட என்ன சொன்னேனோ அதையேதான்; அதாவது தெரியாதுன்னு சொன்னேன்!” என்றாள் அவள் அலட்சியமாக.

“ப்பா! என்ன தெனாவெட்டுடீ உனக்கு!” என்றவன், “அவனுங்க என்னை மாதிரி நல்லவனுங்க இல்ல! தெரியுமா! ரொம்ப ரொம்ப மோசமானவனுங்க!” என்றவாறே சர்ரென வாகனத்தை ஓரமாக நிறுத்தியவன், அவனுடைய ஆட்களின் வாகனம் அவர்களைக் கடந்துசெல்லும் வரை மவுனமாக இருந்துவிட்டு, “உன்னை கடத்தினானுங்க இல்ல; அதே மாதிரித்தான் என்னையும் அப்ப கடத்தினானுங்க! என்ன சித்ரவதை அனுபவிச்சேன் தெரியுமா!

சரிகா பட்ட துன்பம் அதைவிட அதிகம்!

பராதிம்மா போன் பண்ணி உன்னை காணும்னு சொன்னதும் என் உயிரே போயிடுச்சுடீ!

அதுவும் ட்ரேஸ் பண்ணவே வழி இல்லாம செஞ்சிருக்கானுங்க!

இருந்தாலும் ஜவஹரோட போன் ஹிஸ்டரியை எடுத்து, அவனோட காண்டாக்ட்டையெல்லாம் தேடி பிடிச்சு; அவனோட ட்ரக் சப்ளையர் குமார்னு ஒருத்தனை பிடிச்சோம்!

அவனை விட்டு போன் பண்ண வெச்சு இடத்தை கண்டு பிடிச்சேன்! உஃப்.. உன்னை நேரில் பார்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!

உனக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாம காப்பாத்தணும்னு நினைச்சேன்!

ப்ச்! முடியல!” என வருந்தியவன், விரல்களால் அவளது காயத்தை மென்மையாக வருடி,  இதமாக அதன் மேல் முத்தமிட்டான், ‘சாரி!” என்று சொல்லிக்கொண்டே!

அவனது பேச்சில், செயலில் அவள் உறைந்துபோயிருக்க, “உன்னோட இந்த பிரச்சினைக்கு நான்தான் காரணம்!” எனத் தொடர்ந்தவன், “நேத்து பார்ட்டிக்கு அந்த திவாகர் வருவான்னு நான் சாத்தியமா எதிர்ப்பார்க்கல!

உன்னை அவனுங்க அடையாளம் கண்டுபிடிப்பாங்கனு நான் யோசிக்கல!

இன்னைக்கு காலையில இருந்து டிவில நம்ம வீடியோ வந்துட்டு இருக்கு; அது உனக்கு தெரியுமா?” என அவன் கேட்க, “ஐயோ!” என அதிர்ந்த மித்ரா, “உங்க வீட்டுல பிரச்சினை ஆகி இருக்குமே!” எனப் பதட்டத்துடன் அவள் கேட்க, “அது எப்படி ஆகாமல் இருக்கும்! ஆனா அதை பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்ல!” என்றவன், “அந்த சொசைட்டி கில்லர்ஸ் ரெண்டு பேர் இருக்கானுங்களே; அவனுங்களால உனக்கு எதாவது ஆபத்து வந்துடுமோன்னுதான் பயமா இருக்கு!” என முடித்தான் தீபன்.

அவன் சொன்னதற்குப் பற்கள் தெரிய பளீர் என சிரித்தவள், “எனக்கு அந்த பயமெல்லாம் இல்ல! அதான் நீங்க இருக்கீங்களே! எனக்கு ஒரு பெரிய ஷீல்டு மாதிரி என்னை பாதுகாக்க!” என அவள் சொல்லவும், “என் மேல அவ்வளவு நம்பிக்கையா உனக்கு!” என அவன் வியப்புடன் கேட்க, “ம்” என்றவள், “உங்களுக்கு ஒண்ணு தெரியுமா! அங்க; அந்த ரூம்ல அவங்க அத்தனை பேர் சேர்ந்து என்னை மிரட்டினாங்க; அப்ப கூட எனக்கு பயம் வரல!

சொல்ல போனா நீங்க அங்க வரும்பது நான் தூங்கிட்டு இருந்தேன்!

நீங்க வருவீங்கன்னு தெரியும்!” என அவள் சொல்ல, “இதெல்லாம் நல்லா பேசு! அன்னைக்கு ‘தயவு செஞ்சு என்னை ஸ்பை பண்ணாதீங்க’ன்னு லூசு மாதிரி சொல்லிட்டு போனியே!

உன் பேச்சை கேட்டுட்டு நானும் அப்படியே விட்டுட்டேன்!

அதனால வந்த வினைதான் இது!” என்று சொல்லவிட்டு அவள் பக்கம் சரிந்து கார் க்ளோவ் பாக்ஸிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து, அதிலிருந்த ஒரு கை கடிகாரத்தை அவளது கையில் அணிவித்தான் தீபன், “இனிமேல் நம்ம கல்யாணம் முடியற வரைக்கும் வெளியில எங்க போனாலும் இது இல்லாம நீ போக கூடாது!” என்று சொல்லிக்கொண்டே!

அவன் சொன்னதைக் கேட்டு விழி விரிய அவள் அவனைப் பார்க்கவும், “முண்டகண்ணி! நிஜமாத்தான் சொல்றேன்!”  என்றவன், “அநேகமா திலீப் கல்யாணத்துக்கு முன்னாலேயே நம்ம கல்யாணம் முடிஞ்சிடும்னு நினைக்கறேன்! ம்ம்.. பார்க்கலாம்!” என்றவாறு அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன் வாகனத்தை உயிர்பித்தான்.

சில நிமிட பயணத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டவன், “உன்னோட பாரதிம்மா இங்கதான் இருகாங்க!

பாவம் எல்லாரும் ரொம்பவே பயந்துபோய் இருக்காங்க! போய் எல்லாரையும் பாரு!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினான் தீபன்.

அந்த வீதியின் திருப்பத்தில் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து அவன் திரும்ப, ஹெட் லைட் வெளிச்சத்தில் அவளுடைய ஸ்கூட்டி எறிந்ததற்கான தடம் தெரிந்தது!

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவேண்டாம் என பாரதியிடம் சொல்லிவிட்டான் தீபன்! எனவே அந்த சம்பவம் யாருடைய கவனத்தையும் கவரவில்லை!

எதிரில் வந்த அவனுடைய ஆட்களின் வாகனம் அவனுக்கு அருகில் வந்து நிற்க, “மணி அண்ணா! எதுக்கும் இங்கேயே நாலு பேர் இருக்கட்டும்! ஜாக்கிரதை!” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் அவன்.

***

அவர்கள் வீட்டின் வாகன நிறுத்தத்தில் நின்றிருந்த கார்களை பார்த்ததுமே வேலூர் சென்றவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள் என்பது தீபனுக்கு தெரிந்து போனது.

நேரம் இரவு பத்தை கடந்து சில நிமிடங்கள் ஆகியிருக்க, இறுகிய முகத்துடன் அவன் வீட்டிற்குள் நுழையவும், வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தார் அருணா! அருகில் அரங்கநாதன்! எதிர் புறமாக சரிகா!”

“மா! பாப்பா தூங்கிட்டாளா? சாப்பிட எதாவது இருக்கா! செம்ம பசி! செம்ம டயர்ட்! ரெப்பிரேஷ் பண்ணிட்டு வந்துடறேன்!” எனச் சொல்லிக்கொண்டே ஏதும் நடக்காதது போல் அவன் மாடிப் படிகளில் ஏறிச் சென்றுவிட, ஒரு அசாத்திய அமைதி நிலவியது அங்கே!

சில நிமிடங்களில், குளித்து லுங்கி டிஷர்ட் அணிந்து கீழே வந்தவன் நேரே உணவு மேசை நோக்கி போக, “என்ன கொழுப்பு பாரு உன் அண்ணனுக்கு! எதுவுமே நடக்காதது மாதிரி போறான்” என சத்தமாகப் புலம்பியவாறு அவனுக்கு தட்டை எடுத்துவைத்தார் அருணா.

சரிகாவும் அவனுக்கு அருகில் வந்து உட்கார,  “இப்ப என்னம்மா பிரச்சினை!” எனச் சலிப்புடன் அவன் கேட்க, “டிவில போட்டு போட்டு காமிச்சிட்டு இருக்கான்! என்னவோ தெரியாத மாதிரி கேக்கற!

அந்த வசந்த் தங்கையும் நீயும்  லவ் போர்ட்ஸ் மாதிரி கையை கோர்த்துக்கிட்டு ஜோடியா அந்த ஹோட்டலுக்கு உள்ள போனீங்களே! அதுதான்” என அவர் சொல்ல, சரிகா ஆவலுடன் அவனது முகத்தைப் பார்க்கவும், “ம்மா! அதெல்லாம் நீங்க நினைக்கற மாதிரி ஒண்ணும் இல்ல! விடுங்க!” என்றான் அவன்.

“என்ன ஒண்ணும் இல்ல! நீ எங்களுக்கு ஒரே பிள்ளை! நீ போய் இப்படி ஒரு கேவலமான பொண்ணை லவ் பண்ணலாமா!

அவ யாருன்னே சொல்லாம உன்னை ஏமாத்திட்டாளா!” என அவர் பொரிய,

“ம்மா! அவ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்!

அந்த வசந்த் செஞ்சதுக்கு நான் பழி வாங்கவேண்டாம்! அதுக்குதான் அந்த பொண்ண காதலிக்கற மாதிரி நடிக்கறேன்!

அவளை ஒரு வழி பண்ணல! நான் சரிகாவோட அண்ணன் இல்ல!

ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கற வசந்த் கதறி துடிச்சு என் காலில் வந்து விழணும்!” என அவன் ஆக்ரோஷமாகச் சொல்ல, அவனுடைய முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் மிரண்டே போனார்கள் பெண்கள் இருவரும்!

மகனைப் புரியாத ஒரு பார்வை பார்த்தார் அரங்கநாதன்!

 

error: Content is protected !!