Pokisha pezhai – 12

அதிர்ச்சியிலிருந்து மீண்ட மைக்கேல் தனத்தைப் பார்த்து, “என்ன தனம் இங்கே நிக்கிற? போகலையா?” என்று கேட்டான்.

“போனேன். ஆனா இந்தப் புக்-க கொடுக்கலாம்னு வந்தேன்” என்று பொக்கிஷப் பேழை புத்தகத்தைக் காட்டினாள்.

“ஓ! சரி கொடுத்திட்டு வா” என்று நழுவி நகரப் போனவனை…

“நில்லு மைக்கேலு” என்றாள்.

நின்றான்!

“நான் வந்தது நல்லதுதான். நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை செய்றீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்” என்று ஒருமாதிரி குரலில் இருவரையும் குற்றம் சாட்டினாள்.

“தனம்… என்னை எதுக்கு இதுல சேர்க்கிற?” என்று ரோமியோ கோபப்பட்டான்.

மைக்கேலுக்குப் புரிந்து விட்டது, தானும் ரோமியோவும் பேசுவதை தனம் கேட்டுவிட்டாள் என்று! எனவே, “தனம், அவனுக்கு எதுவும் தெரியாது” என்றான்.

“சரி, அவனை விடு. நீ ஏன் மைக்கேலு இப்படிப் பண்ண?”

“தனம் நான் சொல்றதைக் கேளு” என்று, மைக்கேல் அவள் அருகில் போய் நின்றான்.

அக்கணம் ஸ்வீட் ஹார்ட்டும்,
“என்னாச்சு ரோமியோ?” என்று கேட்டுக் கொண்டே ரோமியோ அருகில் வந்தாள்.

“நீ பேசாம இரு. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை”

இதைக் கேட்ட தனம், “பிரச்சனைக்கு காரணமே நீதான்” என்று ரோமியோவை நோக்கிப் போனாள்.

“வேண்டாம் தனம். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – ரோமியோ.

“தனம் நீ என்கிட்ட பேசு” என்று மைக்கேல் தனத்தின் கை பிடித்து நிறுத்தினான்.

“நானா போயிருந்தாலும் காயின எடுத்திருப்பேன். உன்னையே நம்பி… ச்ச்சே” என்று அவனது கைகளைத் தட்டி விட்டாள்.

“தனம்… அவன் என்னோட உயிரை காப்பாத்திருக்கான். அதனால… ”

“அதுக்கு நீ ஏதாவது பண்ணு. ஏன் என்னோட ஆசையில் விளையாடுற?”

“…. ”

“உனக்கு என்னோட ஆசை என்னன்னு தெரியும்ல மைக்கேலு. அப்புறம் ஏன் இப்படிப் பண்ண?” என்றவள் குரல் கரகரத்தது.

“புரிஞ்சுக்கோ தனம்”

நால்வரும் அமைதியாக இருந்தனர்.

“உங்க ஆசை என்ன சிஸ்டர்?” என்று ஸ்வீட் ஹார்ட் வாய் திறந்து கேட்டாள்.

“இதோ நிக்கிறானே! இவனுக்குத் தெரியும். கேளு சொல்லுவான்” என்று தனம் மைக்கேலைக் கை காட்டினாள்.

“சொல்லுங்க ப்ரோ”

“சிஸ்டர் அவளோட ஆசை… ம்ம் நம்ம ஏரியா எப்படி இருக்கும்னு தெரியும்ல?”

“ம்ம்ம் தெரியும்”

“சரியில்லாத ரோடு… தண்ணிக்கு வரிசை… நிறைய குடிசை வீடு… கம்மி சம்பளத்தில மில்லுல வேல… நம்மள மாதிரி படிக்க முடியாத பிள்ளைங்க… இதெல்லாம் மாத்தணும்னு நினைக்கிறா!”

“ஓ!”

“அதுக்குத்தான் கட்சியில இருந்தா முடியும்னு நினைச்சு, கட்சியில சேர்ந்து வேலை பார்த்தா. ஆனா பெருசா எதுவும் செய்ய முடியலை. அதான் இந்தப் புதையல் கிடைச்சாலாவது… அதை வச்சு… இதெல்லாம் சரி பண்ணலாம்னு நினைக்கிறா” என்று தனத்தின் குறிக்கோளைச் சொன்னான்.

ஆம்! இதுதான் பிறகு சொல்லப்படுவதாக சொல்லப்பட்ட  தனத்தின் குறிக்கோள். தான் வாழ்ந்த சூழலின் நிலையை மாற்ற நினைக்கிறாள்.

“இனி எங்க சரி பண்ண முடியும்?” என்று நொந்து போய், தனம் கேள்வி கேட்டாள்.

“கவலைப்படாத தனம். கண்டிப்பா சாவி உனக்கு கிடைக்கும்” – மைக்கேல்.

“ஆமா சிஸ்டர்… உங்க ஆசை கிரேட். ஸோ கண்டிப்பா சாவி உங்களுக்கு கிடைக்கும்” என்று ஸ்வீட் ஹார்ட்டும் நம்பிக்கை கொடுத்தாள்.

“தேங்க்ஸ்” என்றாள் தனம் பொதுவாக.

“நீ என்ன சொல்ல வர்ற ஸ்வீட் ஹார்ட்? ” என்றான் அதுவரை அமைதியாக அனைவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த ரோமியோ.

“ம்ம்ம், அவங்களோட ஆசை நியாயமானது இல்லையா ரோமியோ? கூரை வீடெல்லாம் மாறினா நல்லா இருக்கும்ல”

“சரி… அப்போ சாவி எனக்கு கிடைக்க வேண்டாமா?”

“அது… அது..  உன்னோட ஆசையை கம்பேர் பண்றப்போ… அவங்களோடது கிரேட்ன்னு சொன்னேன்”

“அப்போ என்னோட ஆசை…”

“அது…”

“சொல்லு ஸ்வீட் ஹார்ட்”

“ரோமியோ! அவங்க ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்காங்க. அர்த்தமுள்ளதா இருக்கு. நீ பண்ணப் போறது… எப்படிச் சொல்ல?? லவ்வருக்கு அரண்மனை கட்டறது… அது… அது வந்து”

“பரவால்ல சொல்லு”

“அது கொஞ்சம் அர்த்தமில்லாம தெரியுது”

“ஓ! உனக்கு என்னோட லவ் அர்த்தமில்லாம தெரியுதா?”

“நான் உன்னோட லவ்வ சொல்லலை ரோமியோ” என்று திருத்தினாள்.

“வேற எதைச் சொல்ற தன்யா??”

ரோமியோவின் ‘தன்யா’ என்ற அழைப்பு, தனத்திற்கும் மைக்கேலுக்கும் வித்தியாசமாகப்பட்டது.

“என்ன ரோமியோ பேர் சொல்லிக் கூப்பிடற?” என்று கேட்ட, தன்யாவின் கண்கள் கலங்கின, உதடுகள் துடித்தன.

“அதான உன் பேரு” என்று அவனும் கலங்கிப் போய் பேசினான்.

“இனி எப்பவும் ஸ்வீட் ஹார்ட்டுன்னுதான் உன்னை கூப்பிடுவேன்னு சொன்ன. இப்போ… ” என்றவளால் வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறினாள்.

“இப்பெல்லாம் நீ ஒருமாதிரி பேசற”

“நான் உன்னோட லவ்வ சொல்லலை ரோமியோ. சரியா புரி… ”

“உனக்காக நான் பண்ற எல்லா விஷயமும், எனக்கு லவ்தான் தன்யா” என்று அவனும் அவள் சொன்ன சொல்லிற்காக வருத்தப்பட்டான்.

தன்யா அழ ஆரம்பித்திருந்தாள்.

அவள் அழுகிறாள் என்று தெரிந்தும், “மைக்கேல் வாடா கொஞ்ச தூரம் நடந்து பார்க்கலாம்” என்றான்.

மைக்கேல் தனத்தைப் பார்த்தான். அவளும் முகத்தை திருப்பிக் கொண்டாள். வேறு வழியில்லாமல் ரோமியோவுடன் சென்றான்.

ஸ்வீட் ஹார்ட், “ரோமியோ… ஸாரி ரோமியோ. நான் உன் லவ்வ சொல்லலை” என்று சொல்லிக் கொண்டே, அவன் பின்னே நடந்தாள்.

*****
ரோமியோவும் மைக்கேலும் முன்னே சென்றனர்.

தன்யாவும் தனமும் பின்னே வந்தனர். மைக்கேலைத் தவிர யாரும் சகஜ நிலையில் இல்லை.

சற்றே சற்று தூரம் நடந்தார்கள்…

பாதைகள் மாறின. அங்கங்கே மிகச் சிறிய கற்பாறைகள் இருந்தன. அவை அனைத்தும், அந்த மாயப் பெண்ணின் ஆடை வண்ணத்தில், அதாவது பச்சை நிறத்தில் இருந்தது. மேலும் ஒவ்வொரு கற்பாறையில் சிறு சிறு சிவப்பு நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தன. இடையிடையே மஞ்சள் வர்ண முற் செடிகள்.

மேலும் ராட்சத வேர்கள், அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது. இவ்வளவு வேர்கள், ஆனால் மரம் எங்கே எனத் தெரியவில்லை.

முட்கள் உடலில் படாமலும், மினுங்கும் நட்சத்திரத்தை மிதிக்காமலும் கவனமாக நடந்தார்கள்.

அவர்களது இலக்கு சில அடி தூரத்தில் உள்ள ராட்சத மயில் பீலி. இதைப் புத்தகத்தில் ஏற்கனவே ரோமியோ பார்த்திருந்தான்.

வியர்வை வழிய, வேர்களின் ஊடே நடந்து செல்லும் போது, ஒரு இடத்தில் நின்றார்கள்!

ஏனெனில் அவர்கள் நின்ற பகுதியின் இடப்புறம்தான், அவர்களது இலக்கான ராட்சத மயில் பீலி இருந்தது.

பிரமாண்ட மயிலின் கழுத்துப் பகுதி. அதன் தலையில், அகன்று விரிந்த நிலம் இருப்பது தெரிந்தது. அதில் என்னென்ன இருக்கிறது என்று கீழிருந்து பார்க்கத் தெரியவில்லை.

தடித்து இருந்த மயிலின் கழுத்துப் பகுதியில் நிறைய ஓவியங்கள் தங்க கம்பிகளால் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்கள் அனைத்தும், இதுவரை கடந்து வந்த பாதையின் வரைபடங்களாக இருந்தன.

மயிலின் கழுத்தின் ஊடேயும் பழுப்பு நிற வேர்கள் சுருண்டு, வளைந்து, வளர்ந்திருந்தன.

மேலும் மேற்புறம் இருந்த நிலப்பரப்பின் விளிம்புகளின் இருந்து ராட்சத மயில் பீலிகள் தொங்கிக் கொண்டிருந்தன.

தடித்த வெள்ளிக் கம்பி, தங்க நிறத்தில் கண் பகுதி. இதுதான் ஒவ்வொரு பீலியின் வடிவமைப்பு.

காற்றினால் அவைகள், அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தன.
அதைப் பற்றிக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும் என நினைத்தனர்.

எல்லோரும் மயிலின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது, ரோமியோவின் கண்களில் ஒரு ஆண் பொம்மை ஒன்று தெரிந்தது. அவன் இடுப்பு உயரத்திற்கு இருந்தது. மற்றும் அது பலவண்ண கூலாங்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்காமல், ரோமியோ ஏறுவதற்கு தயாரானான்.

“மைக்கேல், இந்த பீலியை பிடிச்சுதான் ஏறனும். நான் ஏறப் போறேன்டா. நீ வர்றீயா?”

“நீ போ ரோமியோ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்”

“ரோமியோ என்னையும் கூட்டிட்டுப் போ. எனக்குத் தனியா வரத் தெரியாது” என்று தன்யா கண்கள் கலங்க கேட்டுப் பார்த்தாள்.

அவன் பதில் பேசவில்லை.

“ரோமியோ சிஸ்டர் கூட பேசுடா” என்று மைக்கேலும் கெஞ்சினான்.

யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் ரோமியோ இல்லை.

காற்றின் திசையை எதிர்த்து, மயில் பீலியைப் பிடித்து, மிகுந்த பிரயத்தனம் செய்தே மேலே ஏறிப் போனான்.

*****

தன்யா அழுது கொண்டே இருந்தாள். கரடுமுரடான வேர்களின் மேல் அமர்ந்து கொண்டாள். அவளது அருகில்தான் அந்தப் பொம்மை கிடந்தது. அதை அவள் கண்டுகொள்ளவில்லை.

தனத்திற்கும் மைக்கேலுக்கும் அவளைத் தனியே விட்டுச் செல்ல மனசு வரவில்லை. எனவே அவளது அருகில் அமர்ந்தனர்.

மேலே…

கஷ்டப்பட்டு மேலே சென்றவன், அங்கே என்ன இருக்கிறது? என்று பார்க்காமல், கீழே பார்த்தான்.

தன்யாவுடன் மைக்கேலும் தனமும் இருப்பது தெரிந்தது. அதையும் தாண்டி, தன்யாவின் அருகில் இருந்த, அந்தப் பொம்மை அவன் கண்களில் விழுந்தது.

அந்தப் பொம்மையைப் பார்த்தால், விடுதியில் பார்த்தப் பெரியவரின் இளைய பருவத்தின் தோற்றம் போல இருக்கிறதோ என்று நினைத்தான்.

பின், ‘ச்சே, அவர் எப்படி? இது தன் வீணான கற்பனை’ என்று நினைத்துக் கொண்டான்.

கீழே…

தன்யா அழ ஆரம்பித்திருந்தாள்.

“சிஸ்டர் அழாதீங்க” – மைக்கேல்.

“ரோமியோ இப்படிப் பண்ணவே மாட்டான் ப்ரோ”

“நீங்க ஏன் இவளுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினீங்க?” – மைக்கேல்.

“ஏன்? அவ ஒருத்தியாவது எனக்கு சப்போர்ட் பண்ணட்டுமே” என்று தனத்திடமிருந்து பட்டென்று பதில் வந்தது.

மைக்கேல், “ம்ப்ச்” என்று எரிச்சல் கொண்டான்.

“ப்ரோ, எனக்கு சிஸ்டரோட ஆசை பிடிச்சிருக்கு. அதுக்கு காரணமும் இருக்கு. அதனலாதான்”

“என்ன காரணம்?” – தனம்.

“எனக்கு அம்மா மட்டும்தான்” என்று தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

“ஓ! அப்பா இல்லையா?”

“ம்கும். வீட்ல கொஞ்சக் கஷ்டம்தான். அதனால ரெண்டு பேருமே மில்லு வேலைக்கு போவோம். எங்க வீடும் கூரை வீடுதான்”

“….. ”

“ஒரு தடவை… நம்ம ஏரியால… நடந்த தீ விபத்தில, எங்க வீடு புல்லா எரிஞ்சிடுச்சு… அதுல அம்மா இறந்திட்டாங்க… எனக்கும் தீக்காயம்” என்று கேவல்களுடன் சொன்னாள்.

“அழாதீங்க சிஸ்டர்” என்று மைக்கேல் சமாதானப் படுத்தினான்.

“ஓ! அதான் புக் எரியறப்ப ரொம்ப பயப்படுறியா?”

“ம்ம்ம்”

“சரி சொல்லு”

“நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தேன். அப்போ உங்க கட்சி ஆளுங்க வந்து பார்த்தாங்க. அப்போ ரோமியோவும் வந்திருந்தான்” என்று மீண்டும் கண்ணீர் வடித்தாள்.

“அழாம சொல்லு”

“ஆனா ரோமியோ அடுத்த நாளும் வந்தான். என்னைய யாரும் கவனிக்க இல்லைன்னு தெரிஞ்சதும், என்கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டான்”

“சரி”

“கடைசி, டிஸ்சார்ஜ் ஆகிறப்போ… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான். எனக்கும் ரோமியோவ ரொம்ப பிடிச்சிருந்தது”

“அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. கரெக்டா?”

“ம்ம்ம், அவங்க அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்”

“நான் ஏதோ பெருசா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பான்னு நினைச்சேன். இவ்வளவுதானா? ”

“என்ன சிஸ்டர் இப்படிச் சொல்றீங்க?” என்று ஏற்கனவே குழம்பி இருந்தவள், மேலும் குழம்பினாள்.

“தெரியலை. யாருமே இல்லைன்னு உன் மேல பரிதாபப் பட்டிருப்பானோன்னு… எனக்குத் தோணுது” என்று தனம் எழுந்தாள்.

‘ஒருவேளை தனம் சிஸ்டர் சொல்வது போல இருக்குமோ?’ என்று தன்யா வருத்தப்பட ஆரம்பித்தாள்.

“சரி நான் மேல போகப் போறேன். நீ வர்றீயா? ”

“இல்லை சிஸ்டர்”

மறுமுறை கூட தனம் கேட்கவில்லை. மேலே ஏறிச் செல்லக் கிளம்பினாள்.

அவள் சென்றதும்…

கலக்கம், கண்ணீர், குழப்பம் என ஒரு சேர உணர்வுகளுடன் தன்யா இருந்தாள்.

“சிஸ்டர்… எனக்கு ரோமியோ பத்தி நல்லா தெரியும். தனம் சொல்ற மாதிரியெல்லாம் கிடையாது” என்று மைக்கேல், அவளைத் தேற்ற நினைத்தான்.

“ம்ம்ம்” என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே…

“நீங்க எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க”

“சரி ப்ரோ”

“வாங்க என்கூட… நான் மேல கூட்டிட்டுப் போறேன்”

“இல்லை இங்கேயே இருக்கேன்”

“இங்க பாருங்க சிஸ்டர்… அப்படியெல்லாம் தனியா விட்டுட்டுப் போக முடியாது”

“…”

“நமக்கு இந்த இடத்தைப் பத்தி என்ன தெரியும் சொல்லுங்க?? எப்போ என்ன ஆபத்து வருமோ?”

“எனக்கு இதுல ஏறவே பயமா இருக்கு”

“அதான் சொல்றேன் நான் ஹெல்ப் பண்றேன்னு”

“வேண்டாம் ப்ரோ… நான் இங்கயே இருக்கேன். ரோமியோ வந்து என்னைய கூட்டிட்டுப் போவான்”

“அடம்பிடிக்கிறீங்க. நானும் உங்க கூட இருந்திடுவேன். ஆனா தனத்தை சமாதானப் படுத்தணும். அதான்… ”

“நீங்க போங்க ப்ரோ. எனக்கு ஒன்னும் பயமில்லை”

“நிஜமா”

“ம்ம்ம்”

மிகுந்த யோசனைக்குப் பின், “சரி. நாங்க திரும்பி வர்ற வரைக்கும் இங்கேயே இருக்கணும். வேற எங்கேயும் போகக் கூடாது” என்று கேட்டுக் கொண்டான்.

“ம்ம்ம் சரி ப்ரோ”

கடைசியில் மைக்கேலும் அவளைத் தனியாக விட்டுச் சென்றான்.

*****

கீழே…

தன்யா தனியாக அமர்ந்திருந்தாள். அனைவரும் சென்ற பின்னரே, அந்த இடத்தில் பயத்தை உணர்ந்தாள்.

சற்று நேரத்தில், அங்கு மழை பெய்ய ஆரம்பித்தது. அது இன்னும் சூழலை பயங்கொள்ளச் செய்தது. அருகில் கிடந்த மண் பொம்மை… ராட்சச வேர்கள்… மழையினால் அதன் இடுக்குகளிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீர்… கத்திரி நிற ஒளிக்கற்றை…மஞ்சள் நிற முற்செடிகள்…காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலீ…

தன்யா பயந்து நடுங்கினாள்.

மேலே…

ரோமியோவுக்கு இருப்பு கொள்ளவில்லை. அதிலும் தனமும், மைக்கேலும் மேலே வந்த பின் அவனால் நிம்மதியாக இருக்க இயலவில்லை. ஸ்வீட் ஹார்ட் எப்படித் தனியாக இருப்பாள்? என்ற எண்ணம் வந்த அடுத்த நொடியே மேலேயிருந்து கீழே பார்த்தான்.

பார்த்தவனுக்கு அதிர்ச்சி!
ஸ்வீட் ஹார்ட் அங்கே இல்லை. அதுமட்டுமில்லை, அவளருகில் கிடந்த அந்தப் பொம்மையும் இல்லை. பதறியது அவனது நெஞ்சம்!

‘வருத்தப்படப் போற என்று அவளிடம் சொன்ன நான்தான் வருத்தப்பட போகிறேனா?’

‘அந்தப் பொம்மை, ஏதேனும் மாயப் பொம்மையா? அதைச் சரியாகக் கவனித்திருக்க வேண்டுமோ?’

‘என்னவாயிருக்கும் ஸ்வீட் ஹார்ட்டுக்கு?’

இப்படி நினைக்கையில் ரோமியோவுக்கு உயிரே போனது?

ஸ்வீட் ஹார்ட்டுக்கு??

error: Content is protected !!