மைக்கேல் சொன்னதன் பொருள் உணர்ந்து, ரோமியோவும் தனமும் கடுங் கோபத்தில் இருந்தார்கள்.
“தனம்” என்று அழைத்துக் கொண்டு, தனத்தின் அருகில் வர முயன்றவனை…
‘அங்கேயே நில்’ என்று கைகளால் சைகை செய்து நிறுத்தினாள்.
“ரோமியோ” என்று கூப்பிட்டவன், “ஸாரிடா” என்று மன்னிப்பு கேட்டுப் பார்த்தான்.
“ஏதாவது என்கிட்டே பேசின… அவ்ளோதான்” என்று தன் வாழ்நாளின் மொத்தக் கோபத்தையும், அந்த வாக்கியத்தில் காட்டினான்.
பொறுமையாக பேச நேரமில்லை. அங்கே நிற்க நிற்க, தப்பித்து செல்ல வழியில்லாமல் போகும்! எனவே துரிதமாக முடிவு எடுத்தான்.
சில நொடிகளுக்குப் பின், “தனம், உன் காயினைக் கொடுக்கிறீயா? ஆளுக்கு பாதிப் பாதி. உனக்கு ஓகேவா?” என்று தனத்திடம் கேட்டுப் பார்த்தான்.
“எனக்கு ஓகே. இரு தர்றேன்” என்று சம்மதம் சொல்லி, பைக்குள் இருந்த நாணயத்தை எடுத்து தந்தாள்.
ரோமியோ, அவளிடமிருந்து வாங்கிய நாணயத்தை, பொக்கிஷம் இருக்கும் பெட்டியில் வைத்தான்.
சற்று நேரம் ஏதும் மாற்றம் இல்லை.
காத்திருந்தனர்.
காத்திருப்பு நேரத்தில், மேலும் மேலும் மயில் பீலி வீழ்ந்து வீழ்ந்து எரிந்தன.
பேசாமல் புதையலை எடுக்காமல் இறங்கி விடலாமா? என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்…
புதையல் இருக்கும் பெட்டியின் பூட்டுகள் தங்கத் துகள்களாய் மாறி, பின் மாயமாய் மறைந்தன.
பொக்கிஷம் இருக்கும், பச்சை மற்றும் சிவப்பு நிறக் கற்களான பெட்டி மெது மெதுவாய் திறந்து கொண்டே வந்தது.
மைக்கேல் பற்றித் தெரிந்த உண்மைகளை மறந்து, மற்றவர்கள் ‘ஆவென’ வாய் பிளந்து பார்த்தனர்.
பேழை முழுவதும் அழகிய
முத்துக்கள்!
யானையின் தந்தத்தின் நிறத்தில்!
சின்னதும், பெரியதுமாய் ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு அளவில்!
சில முத்துக்கள் தங்க கம்பிகளில் கோர்த்து மாலையாக இருந்தது!
மிகவும் பளபளப்பாக இருந்தது.
ரோமியோ ‘தனம்’ என அழைத்து, ‘எடுத்துக்கலாம் வா’ என்றான்.
தனமும், ரோமியோவும் முத்துக்களை பைகளில் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் , தொன்னூறு சதவீத மயில் பீலி கீழே விழுந்திருந்தது.
“ரோமியோ போதும். இதுக்கு மேல எடுத்திக்கிட்டு இருந்தா, இங்கிருந்து போக முடியாது” என்று தனம் பதட்டமாக கூறினாள்.
“ம்ம்ம் சரி” என்று சொல்லியவன், “ஸ்வீட் ஹார்ட் வா” என்று சொல்லி கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
நான்கு பேரும், மீதி நின்று கொண்டிருந்த பீலியைப் பிடித்து இறங்கி வந்தனர். கீழே வந்தவுடன், அங்கிருந்த பாறைகளில் அமர்ந்து கொண்டனர்.
*****
களைப்புடன் உடல்கள்.
கடுங்கோபத்தில் உள்ளங்கள்.
கறை படிந்த ஆடைகள்.
கலங்கிய கண்கள்.
காதல் கலக்கங்கள்.
காட்டுக்குள் நால்வரும் இக்கணம் இப்படித்தான் இருந்தனர்.
“தனம்” என்று மைக்கேல் வருந்திய குரலில் கூப்பிட்டான்.
அவள் திரும்பிப் பார்க்கவில்லை. திரும்பிப் பார்க்க விரும்பவுமில்லை என்பதுதான் உண்மை!
ஸ்வீட் ஹார்ட் ரோமியோவையும் மைக்கேலையும் மாறி மாறிப் பார்த்திருந்தாள்.
தனத்தின் மன நிலையைத் தெரிந்த மைக்கேல், “ரோமியோ” என்று தயக்கத்துடன் அழைத்தான்.
மைக்கேல் பேர் சொல்லி முடிக்கும் போது, ரோமியோ கோபம் கொண்டு எழுந்து வந்து மைக்கேலை அடிக்கத் தொடங்கியிருந்தான்.
சரமாரியாக அடிகள் விழுந்தன.
அடிகள், உதைகளாய் தொடர்ந்தன. தான் ஏமாந்திருப்பதை எண்ணி எண்ணி அடித்தான்.
தன் மீது தவறு இல்லையெனில், நிச்சயம் மைக்கேல் ரோமியோவை அடித்திருப்பான். ஆனால் தவறு முழுவதும் தன் மேல் இருப்பதால், அடிகளை வாங்கிக் கொண்டான்.
ஒரு நேரத்திற்குப் பின், ரோமியோவின் கோபம் கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்து, ஸ்வீட் ஹார்ட் எழுந்து வந்து அவனைத் தடுத்தாள்.
ஆனால் அவளால், அவனது கோபத்திற்கு அணைகட்ட இயலவில்லை.
“போதும் ரோமியோ. விட்டுடு” என்று கேட்டுப் பார்த்தாள்.
“ஸ்வீட் ஹார்ட், அவன் என்ன பண்ணயிருக்கான்னு தெரியுதா? நம்மளை ஏமாத்திருக்கான்” என்று மீண்டும் அடிக்கத் துவங்கினான்.
“தெரியுது ரோமியோ. பேசிப் பாரு. ஏன் பண்ணாரு?; எதுக்குப் பண்ணாரு?- அப்படின்னு கேளு. அடிக்காத… ப்ளீஸ்” என்று கெஞ்சி, அவனைப் பிடித்து இழுத்து வந்தாள்.
ஆத்திரத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றவன், இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்தனர்.
“ரோமியோ நான் சொல்றதைக் கேளுடா” என்று மைக்கேல் கெஞ்சினான்.
“சொல்லு”
மைக்கேல் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்…
“எப்பவும் போல தனத்துக்காக பழைய புக் ஷாப் போய், புக் தேடுறப்போ… புதையல் பத்தின புக் கிடைச்சது”
“சிஸ்டருக்கு புக் எதுக்கு?” – ஸ்வீட் ஹார்ட்.
“அவ கட்சி மேடைல பேசுறதுக்கு எழுதி தருவா! அதுக்கு புக் கேட்பா சிஸ்டர். பழைய புத்தகக் கடைன்னா கம்மி விலையில கிடைக்கும்னு போவேன்”
“போதும். அடுத்து சொல்லு” – ரோமியோ.
“அந்தப் புக் வித்தியாசமா இருந்திச்சு. படிச்சுப் பார்த்தேன். புதையல் பத்திப் போட்டிருந்திச்சு. உடனே நீங்க ரெண்டு பேரும்தான் நியாபகத்தில வந்தீங்க”
“எதுக்கு? ஏமாத்திறத்துக்கா??” என்று ரோமியோ நக்கலாகக் கேட்டான்.
“இல்லைடா. எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்”
“போதும்!! அன்னைக்கு நீ இப்படி சொல்றப்போ… நீ ஒரு நல்ல பிரண்டுன்னு நினைச்சேன். இன்னைக்கு …ச்சே… கேட்கவே பிடிக்கலை” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, ரோமியோ தன் வெறுப்பைக் காட்டினான்.
“நீ எப்படி நினைச்சாலும் பரவால்ல ரோமியோ. ஆனா நான் சொல்றது உண்மைதான்”
“விஷயத்தை சொல்லு” – ரோமியோ.
“இந்தப் புதையல் உங்க ரெண்டு பேருக்கும் யூஸாகட்டும்னு சொல்லி, எனக்கு நம்பிக்கையான ஒருத்தனை புடிச்சேன்”
“அவன்தான் மாறனா?”
“ஆமா, அந்த மாறனைப் பெரியவர் மாதிரி நடிக்கச் சொன்னேன். அப்பத்தான் நீ நம்புவன்னு நினைச்சேன்”
“அதான் நம்பி ஏமாந்திட்டேன்ல! பிளான் என்னன்னு சொல்லு?” என்று இறுகிப் போன குரலில் ரோமியோ கேட்டான்.
“பிளான் என்னனா? ஆளுக்கு பாதி பாதின்னு சொல்லி, மாறன் உன்னைய புதையல் எடுக்கப் போகச் சொல்லுவான். ஒத்துக்கிட்டு, நீ போயி, புதையல் எடுத்திட்டு வருவ. அதுல பாதியை மாறன்கிட்ட கொடுப்ப… அப்புறம்…” என்றவனுக்கு, அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.
“மிச்சத்தை நான் சொல்லவா?? மாறன்கிட்ட இருந்து வாங்கி, நீ தனத்துக்கு கொடுப்ப. கரெக்டா?”
“ம்ம்ம்”
“அப்போ… ரோமியோவுக்கு எதுவும் நடந்தா பரவால்லையா ப்ரோ??” என்று ஸ்வீட் ஹார்ட் சரியாகக் கேட்டாள்.
“சிஸ்டர் எனக்குத் தெரியாது! இங்கே இவ்வளவு ஆபத்து இருக்கும்ன்னு. தெரிஞ்சா, நான் ஏன் இப்படி பண்ணப் போறேன்??” என்று சங்கடத்துடன் பதில் சொன்னான்.
ஆனால் அந்தப் பதிலை யாரும் சட்டை செய்யவில்லை! சமாதானமும் ஆகவில்லை!!
சில வினாடிகள், அமைதிகள் அடங்கியதாய் நகர்ந்தன.
ரோமியோ இருக்கும் நிலை பார்த்து, “ரோமியோ… ஸாரிடா” என்று மைக்கேல் மீண்டும் மன்னிப்பு கேட்டான்.
“நான் கொஞ்சம் யோசிக்கணும், ஸ்வீட் ஹார்ட். அவனைக் கொஞ்ச நேரம் சும்மா இருக்கச் சொல்லு” என்று ஸ்வீட் ஹார்ட் விழி பார்த்து, மைக்கேலை எச்சரித்தான்.
“மைக்கேல் ப்ரோ நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ப்ளீஸ்” என்றாள்.
“சரி சிஸ்டர்” என்றவனின் வாய் ஓரங்களில் இருந்து ரத்தம் கசிந்தது. கைகளில் ஆழமான, லேசான காயங்கள். கழுத்துப் பகுதியிலும், முன் நெற்றியிலும் வீக்கம் தெரிந்தது.
அவர்கள் நடந்தது போய், அமைதி நடந்து கொண்டிருந்தது.
மைக்கேலுக்கு, தனம் ‘என்ன நினைக்கிறாள்?’ என்றே புரியவில்லை. அவள் காதல் சொல்லிய அடுத்த கணமே, அவளைக் காயப் படுத்தியாயிற்று என்று மட்டும் தெரிந்தது.
கண்கள் கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள். தனம் அழுதெல்லாம் அவன் பார்த்ததே இல்லை! அன்று தன் உயிருக்கு ஆபத்து என்று வரும் போது கலங்கி நின்றாள். அடுத்தது இன்று!
தனத்தை தவிர மைக்கேலின் கண்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை.