Pokisha pezhai – 14B

ரோமியோ நிறைய யோசித்தான். மைக்கேல் சொன்னதை வைத்து, நிறைய விடயங்களை ஒத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

பின், தன்னைச் சமன் படுத்திக் கொண்டு, மைக்கேல் அருகில் வந்தான்.

அங்கே இருந்த பச்சை வர்ண பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டு, மைக்கேலைக் கூர்ந்து பார்த்தான்.

“எனக்கு சில விஷயம் தெரியணும்…” – ரோமியோ.

“கேளு ரோமியோ. நீ என்ன கேட்டாலும்…”

மைக்கேல் முடிக்கும் முன்பே, ‘போதும்’ என்பது போல் ரோமியோ கை காட்டினான்.

“நான் சில கேள்வி கேட்கப் போறேன்… ஆமாவா? இல்லையான்னு? மட்டும் சொல்லு” என்று பற்களைக் கடித்தபடியே பேசினான்.

“கேளுடா, சொல்றேன்”

“அன்னைக்கு லாட்ஜ்ல… நான் வர்றப்போ, நீயும் தனமும் வந்து உட்கார்ந்திருந்தீங்கள?”

“ஆ…ஆமா. அது.. அதுக்கென்ன?”

“என்னையக் கூப்பிட்ட அந்தப் பெரியவர்… ச்சே… அந்த மாறன்… எதுக்காக உன்னையும் தனத்தையும் கூப்பிடனும்?” என்று ஆதியிலிருந்து தன் சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினான்.

மைக்கேல் குற்ற உணர்வுடன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே… ரோமியோ குறுக்கிட்டான்.

“இரு… அன்னைக்கு இதே கேள்விய, நான் மாறன்கிட்ட கேட்டப்போ, ‘நான் மைக்கேலத்தான் கூப்பிட்டேன்னு’ சொன்னான்ல”

“ஆமாம் ரோமியோ”

“ஸோ, நான் வர்றதுக்கு லேட்டானவுடனே… அடுத்து என்ன செய்யலாம்னு? பிளான் பண்ணத்தான் உன்னையக் கூப்பிட்டிருப்பான். கரெக்டா?”

“ஆமாடா…” என்று மைக்கேல் குறுகிப் போய் பதில் சொன்னான்.

“இதுல தனம் என்னென்னே தெரியாம உன்கூட வந்திருக்கா??”

“ம்ம்ம்ம்”

“நான் வந்து, புதையல்னு சொன்னதுக்கு அப்புறம்தான், தனத்துக்கு அது பத்தி தெரிய வந்தது. அப்படின்னா, அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அவகிட்ட எதுவுமே சொல்லலை. அதாவது மறைச்சிருக்கீங்க”

“ம்ம்ம்” என்றவன் தலை கவிழ்ந்து கொண்டான்.

இக்கணம் தனத்திற்கு அன்று வீட்டிற்கு வந்த பின், மைக்கேல் அவளிடம் கேட்ட ‘இது நமக்கு தேவையா? ரோமியோவே போய் எடுக்கட்டுமே? ‘ என்ற கேள்வி நியாபகத்தில் வந்தது.

அன்றிலிருந்தே தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறானா? என்ற உண்மை அவளைச் சில்லு சில்லாய் உடைத்தது.

மைக்கேல் தனத்தைப் பார்த்தான். அவள் உடைந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. கைகள் பற்றி, மன்னிப்பு வார்த்தைகள் கூற, காதல் கொண்ட மனம் ஏங்கியது.

“இன்னொன்னு…” என்று ரோமியோ ஆரம்பித்த பின்னே, மைக்கேல் தனத்திடமிருந்து தன் பார்வையைப் பிரித்து எடுத்தான்.

“தனத்துக்கு புக் கிடைச்சதுக்கு அப்புறமா, என்னைய அவ திரும்பிப் போகச் சொன்னால??”

“ஆமா”

“அப்போ.. எனக்கும் தனத்துக்கும் இடையே சமாதானமா பேசினியே!! எதுக்கு??”

“ரோமியோ, உன் மேல நிறைய நம்பிக்கை இருந்திச்சு. உன்னால எல்லாம் முடியும்னு நினைச்சேன். அதான்… ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதில் உண்மை இருந்தது.

மைக்கேல் முடிக்கும் முன்பே ரோமியோ தொடங்கினான், “ஆனா எனக்கு உன் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை” என்றவனின் கண்கள் அழுகையையும் அதிருப்தியையும் சரிவிகிதத்தில் காட்டின.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்து, அவர்கள் இருவரும் தங்களைச் சமன்படுத்திக் கொண்டனர்.

“அடுத்து, செகண்ட் காயின் எடுக்கப் போற இடத்துல… நான் கேட்டேனே?? உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் போய் தேடுங்கன்னு”

“ஆங், ஆமா”

“நான் கேட்டதும், பெரிய நல்லவன் மாதிரி ஒத்துக்கிட்டியே?? ஆனா உண்மை அது இல்லை. உனக்கு குற்ற உணர்ச்சி. அதான் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க. கரெக்டா?”

“ம்ம்ம்… கரெக்ட்”

“அதேமாதிரி, அடுத்த காயின் எடுக்கிறதுக்கு முன்னாடி… தனம் உன்கிட்ட ‘ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம்னு’ ஹெல்ப் கேட்டா! நீயும் ஓகே சொன்ன!!”

“ஆமா”

“ஆனா… அந்தப் படிக்கட்டு பக்கத்தில வச்சி, நான் அந்தப் பெரியவர… அதாவது மாறனைப் பத்திப் பேசினதுக்கு அப்புறமாதான், நீ தனத்துக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்ன. அங்கேயும் ‘இவனை ஏமாத்திறோமேன்னு’ குற்ற உணர்ச்சி. கரெக்டா?” – ரோமியோ.

“ஆமாடா! தனம் ஹெல்ப் கேட்கிறப்போ எல்லாம் மறந்திடுச்சு. ஆனா நீ மாறனைப் பெரியவருன்னு நினைச்சிப் பேசினதும், எனக்கு உறுத்திச்சு… அதான் தனத்துக்கே ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்” என்று தான் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்ததைச் சொன்னான்.

இதைச் சொல்லிவிட்டு, மைக்கேல் தனத்தைப் பார்த்தான்.

தனத்திற்குப் புரிந்தது. எத்தனை முறை ‘நீ ஏன் அவனுக்கு சப்போர்ட் பண்ணற?’ என்று கேட்டிருப்பாள். அதற்கு பதில் இன்று கிடைத்தது. அவளது கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் உருண்டு வந்தன.

மைக்கேலுக்கு வலித்தது!

“ம்ம்ம்… பரவாயில்ல. கொஞ்சம் நியாயமா நடந்திருக்க” என்று பொய்யாக, ரோமியோ சிலாகித்துக் கொண்டான்.

“போதுமே ரோமியோ” – ஸ்வீட் ஹார்ட்.

“இரு ஸ்வீட் ஹார்ட்!!” என்றவன், “அந்தப் பள்ளத்தாக்குல உன்னை நான் காப்பாத்தினேனே! நியாபகம் இருக்கா?” என்று மைக்கேலிடம் கேட்டான்.

“ம்ம்ம்”

“அதனால எனக்கும் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் கூட லேசா சண்டை வந்தப்போ…”

“அது எதுக்கு ரோமியோ?” என்று ஸ்வீட் ஹார்ட் கேட்டாள்.

“நான் அதைப் பத்திக் கேட்கலை ஸ்வீட் ஹார்ட். இது வேற. முழுசா கேளு”

“விடுங்க சிஸ்டர், அவன் கேட்கட்டும். அவன் திருப்தியாகிற வரைக்கும் கேட்கட்டும்” – மைக்கேல்.

“போதும் நிறுத்து! என்கிட்ட வந்து நீ என்ன சொன்னன்னு நியாபகம் இருக்கா?” என்று எரிந்து விழுந்தான்.

“என்னாலதான… உ.. உனக்கு இவ்ளோ… பிர… பிரச்சனையும்னு… சொன்னேன்”

“அது… அதுக்கு என்ன அர்த்தம்? நீயே சொல்லிரு”

“எனக்கு தெரியாது ரோமியோ. உயிர் போற அளவுக்கு ஆபத்து இருக்கும்னு தெரியாது! நாமதான இவனை இதுல கோர்த்துவிட்டோம்…” என்று தயங்கிவன், ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னைச் சமாளித்தான்.

“சொல்லுடா”

“நம்மளாலதான இப்படி ஒரு ஆபத்தான இடத்தில சிக்கிக் கிட்டாங்கன்னு கஷ்டமா இருந்திச்சு. அதான் ஸாரி கேட்டேன்! போதுமா??” என்று தழுதழுக்கும் குரலில், கழுத்து நரம்புகள் வெளியே தெரியும்படி கூறினான்.

தனம், ஸ்வீட் ஹார்ட், ரோமியோ மூவருக்கும் நிறைய புரிந்தது.

“அடுத்த ரெண்டு ஸ்டேஜ்லயும்… நீ எனக்காக காயினை விட்டுக் கொடுக்க ரெடியா இருந்த! காரணம்?? காயின் தனத்துக்கு கிடைச்சா, எனக்கு புதையல்ல பங்கே இல்லாம போயிடும்… நான்… நான் ஏமாந்திருவேன்னு… ” என்றவன் குரல் கரகரத்து, இடைவெளி விட்டான்.

ஸ்வீட் ஹார்ட், “ரோமியோ” என அழைத்து, அவனது தோள்களில் அழுத்தம் கொடுத்தாள்.

“ஸ்வீட் ஹார்ட், இப்பவும் நான் ஏமாந்துதான் நிக்கிறேன்.ஏன்.. ” என்றவனுக்கு தொண்டைக்குள் வார்த்தை சிக்கியது.

“ரோமியோ விடு. வீட்டுக்கு கிளம்பலாம்”

“ஓகே. இது மட்டும்தான்” என்று தன்னைச் சமாளித்தவன், “எனக்கு காயின் கிடைச்சாலும்… தனத்துக்குப் புதையல் வரும்னு உனக்குத் தெரியும். அதான்… விட்டுக் கொடுத்திருக்க. கரெக்டா?” என்று தன் நிலையை நினைத்து, ரோமியோ நொந்து கொண்டான்.

“ஆமாடா கரெக்ட். நீ ஏமாறக் கூடாதுன்னுதான், அப்படிப் பண்ணேன். எனக்கு வேற வழி தெரியலை ரோமியோ” என்று அந்த இடமே அதிரும்படி மைக்கேல் கத்தினான்.

மைக்கேலின் கத்தல், அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது! அந்தளவிற்கு கத்தி இருந்தான்.

“இதுக்கு எங்ககிட்ட சொல்லிருக்கலாமே…” என்று ரோமியோ மீண்டும் மைக்கேலைக் குற்றம் சாட்டினான்.

திரும்பத் திரும்ப குற்றம் சாட்டும் கேள்விகள், மைக்கேலுக்கு எரிச்சலை வரவழைத்தது.

“சொல்லியிருந்தா??? ஒத்துக்கிட்டு இருப்பீங்களா?? சொல்லுங்க??? லாட்ஜ்லயே எவ்வளவு பிரச்சனை பண்ணீங்க?? இதுல ஆளாளுக்கு போலீஸ் கிட்ட போவேன்னு வேற சொன்னீங்கள??” என்று இருவரின் குணங்கள் தெரிந்து கேள்வி கேட்டான்.

மைக்கேலின் இத்தனை கேள்விகளுக்கும் ரோமியோவிடம் பதிலில்லை.

“என்கிட்ட சொல்லியிருக்கலாமே?? இங்கே வந்த பிறகாவது… ” என்று முதன்முறையாக வாய் திறந்து, தனம் கேள்வி கேட்டாள்.

“சொன்னா?? உடனே நீ என்ன பண்ணுவ?? சரின்னு சொல்லி, பாதிப் புதையலை ரோமியோவுக்கு தருவியா?? புக் அவனோடதுன்னு தெரிஞ்சுமே… ஒரு காயினைக் கூட கொடுக்க மாட்டேன்னு சொன்னவதான நீ!” என்று கேள்விகளையே பதிலாகத் தந்தான்.

“சரி… நான் லவ் சொன்னேன்ல… அப்பவாவது உண்மையை சொல்லிருக்கலாமே”

இக்கணம், ரோமியோவிற்கும் ஸ்வீட் ஹார்ட்டிற்கும் அதிர்ச்சி… இருவரும் காதலைப் பகிர்ந்து கொண்டார்களா? என்று!

“நல்லா யோசி தனம்… நாம பேசி முடிக்கிறதுக்குள்ளயே… ரோமியோ வந்து கூப்பிட்டான். அதனால்தான் நம்ம பாதியிலே வந்தோம்”

“என்ன விளக்கம் சொன்னாலும்… நீ பண்ணது தப்புதான்”

“நான் இல்லைன்னு சொல்லலையே. தப்புதான். மன்னிச்சுடுங்கன்னு கேட்கிறேன்”

“தெரியாம பண்ணா மன்னிக்கலாம். ஆனா நீ பிளான் பண்ணி ஏமாத்திருக்க” – ரோமியோ.

“அப்படிச் சொல்லாதடா ரோமியோ. மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாது… இவ்வளவு கஷ்டப்படுறீங்களே புதையல் இல்லாம போயிடக்கூடாது. இப்படி நிறைய… ”

“என்னமோ நாங்கதான் கஷ்டப்பட வச்சமாதிரி பேசுற? உன்னாலதான் நாங்க கஷ்டப்பட்டோம். என்ன சொன்னாலும் நீ பண்ணது தப்புதான்”

ரோமியோ வார்த்தைகள், மைக்கேலைத் துடிதுடிக்க வைத்து, தூள் தூளாய் ஆக்கியது.

மீண்டும் கேள்விகளும் பதில்களும் அமைதியாக இருந்தன!

“எனக்கு இந்தப் புதையலை யூஸ் பண்ணவே அசிங்கமா இருக்கு, ரோமியோ” – தனம்.

“நீயேன் அப்படி நினைக்கிற. இது நம்ம ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு எடுத்தது. நாம ஒண்ணும் யாரையும் ஏமாத்தலை”

இதற்கு மேல் என்ன விளக்கம் தர என்று தெரியாததால், மைக்கேல் வாய் திறக்கவில்லை!

இருந்தும், “ஸாரி ரோமியோ” என்று சொல்லிப் பார்த்தான்.

“நீ என்ன சொன்னாலும்… என்னால மன்னிக்கவே முடியாது” என்று ரோமியோ எழுந்து கொண்டான்.

“நானும் மன்னிக்க போறதில்லை” என்று தனமும் எழுந்து கொண்டாள்.

“ஸ்வீட் ஹார்ட்… வா போகலாம்” என்று ரோமியோ அழைத்தான்.

“நீ போ ரோமியோ, நான் வர்றேன்” என்று சொல்லி, ரோமியோ பைக்குள் இருந்து ஒரு துண்டை எடுத்துக் கொண்டாள்.

ஸ்வீட் ஹார்ட், மைக்கேலை தனியாக விட்டுவிட்டு வரமாட்டாள் என்று ரோமியோவுக்குத் தெரியும். எனவே அவளை வர்புறுத்தாமல், அவன் நடக்க ஆரம்பித்தான்.

தனமும் நடக்கத் தொடங்கினாள்.

நினைத்தது போல புதையல் கிடைத்திருக்கிறது, குறிக்கோள்கள் நிறைவேறப் போகிறது என்ற சந்தோசம், இருவர் முகத்திலும் கடுகளவும் இல்லை.

*****
தனமும் ரோமியோவும் சென்றவுடன்…

“ப்ரோ பிளட்ட துடைச்சிக்கோங்க” என்று துண்டை மழையினால் தேங்கிய நீரில் நனைத்து, அவனிடம் நீட்டினாள்.

மைக்கேலும் வாங்கித் துடைத்துக் கொண்டான்.

“ப்ரோ, வாங்க போகலாம்”

“ஏன் சிஸ்டர்? இவங்க ரெண்டு பேரும் இப்படிப் பண்றாங்க?? இவங்களுக்காகத்தான இதெல்லாம் பண்ணேன்”

“அதை நீங்க சொல்லிட்டே செஞ்சிருக்கலாம்”

“ம்ப்ச், அதான் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டேனே”

“ஆனா, எப்ப சொன்னீங்கன்னு இருக்கில்லையா?? புதையல் கிடைக்கும்னு தெரிஞ்சப்புறம் சொன்னீங்க”

“நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் உண்மையாத்தான் பேசினேன் சிஸ்டர்”

“இல்லை ப்ரோ! நீங்க, ரோமியோகிட்ட பேசுறப்பெல்லாம் குற்ற உணர்ச்சியோட பேசியிருக்கீங்க. அதே சமயம் சிஸ்டர்கிட்ட பேசுறப்போ குற்ற உணர்ச்சியே இல்லாம பேசிருக்கீங்க”

ஸ்வீட் ஹார்ட் கூறுவது சரியென மைக்கேலுக்குத் தோன்றியது!

“என்கிட்ட நியாயமா இருக்க பிடிக்கும்னு சொன்னீங்கள? ஆனா நீங்க பண்ணது நியாயமே இல்லை ப்ரோ”

“நான் நியாயம்னு சொல்லலை சிஸ்டர், மன்னிச்சுடுங்கன்னு கேட்கிறேன்”

“அதெல்லாம் விடுங்க. அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க. மன்னிப்பாங்க”

‘மன்னித்து விடுவார்களா?’ என்ற ஏக்கத்துடன், மைக்கேல் மனம் துவண்டு போய் துடித்தது.

“இப்போ வாங்க ப்ரோ” என்று சிரித்தாள்.

“சிஸ்டர், நான் ஒண்ணு கேட்கலாமா?”

“ம்ம்ம்”

“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா??”

“இருக்கு! ரோமியோவ ஏமாத்தினதை நினைச்சா… ஆனா எங்கிட்ட நீங்க பேசின எல்லா நேரமும் உண்மையாத்தான் இருந்தீங்க”

ஸ்வீட் ஹார்ட் பேசினது, மைக்கேல் மனதிற்கு இதமாக இருந்தது.

“அவங்க ரெண்டு பேரும் தேடுறப்போ, நீங்க என்னைய பயப்படாம இருன்னு சொன்னது…”

மைக்கேல் மனம் சிறிதளவு தெளிந்தது!

“என்னைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம்… ஆறுதல் சொன்னது”

மைக்கேல் முகத்தில் மெல்லிய முறுவல் வந்து போனது!

“அது உங்ககிட்ட எனக்குப் பிடிச்சது. நான் அதை மட்டும்தான்
நியாபகம் வச்சிப்பேன்”

இந்தப் பெண்ணை ரோமியோவிற்கு ஏன் பிடிக்கிறது?
எதற்காக இவ்வளவு பாசத்தைக் கொட்டுகிறான்? என்று மைக்கேலுக்குப் புரிந்தது!

“எதையும் யோசிக்காதீங்க. முதல எந்திரிங்க” என்று அவனைக் கைபிடித்து எழுப்பிவிட்டாள்.

இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

‘தான் எப்படிப்பட்டவன்?’ என்ற கேள்வி மைக்கேலுக்குள் எழுந்து கொண்டே இருந்தது.

மைக்கேல் எப்படிப்பட்டவன்?

கதையின் தொடக்கப்புள்ளி இவன்தான்!

கதாநாயகன் ரோமியோவைக் கதைப் புள்ளிக்குள் இழுத்துக் கொண்டு வந்து விட்டவன் இவன்தான்!

மாமன் மகளான தனலெட்சுமியை, காதல் புள்ளி வைத்து கோலம் போட வைத்தவன் இவன்தான்!

புதையல் தேடுதலில் முற்றுப்புள்ளியாய் ரோமியோ, தனம் தேங்கி நின்ற போதெல்லாம், தன்
வார்த்தைகளால், அவர்களது தேடலைக் காற்புள்ளி போட்டுத் தொடர வைத்தவன் இவன்தான்!

ரோமியோ, தனத்தின் குறிக்கோள்கள் வெற்றுப் புள்ளியாய் போகாமல்… வெற்றிப் புள்ளியாய் மாறக் காரணமானவன் இவன்தான்!

இந்தக் காரணங்களால், இவன் கதையின் நாயகன் என்று அறியப்படுகிறான்!!

*****
Out of story

கதையின் நாயகன், கதாநாயகன் இரண்டுமே ஒன்றுதான்!

சிறு வித்தியாசம்…

கதாநாயகன் – கதை ஆரம்பம் முதலே எல்லா நல்ல குணங்கள், தனித்துவமான செயல்கள் கொண்டவனாக வெளிப்படையாகக் காட்டப் பட்டிருக்கும்.

கதையின் நாயகன் – கதையின் போக்கிலே வந்து, அவன் என்னவெல்லாம் செய்தான்? எதற்காக செய்தான்? என்பதை ஏதாவுது ஒரு தருணத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். அவனது சாதாரண செயல்கள், முக்கிய விடயங்களுடன் தொடர்பு படுத்தப்படும்.

எ.கா : இன்றைய பதிவில், இத்தனை நாள் மைக்கேலின் செயல்கள்!