Pokisha pezhai – 15

பொக்கிஷப் பேழை புத்தகம் காட்டிய வழியில் நடந்து வந்து, மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள்.

வழிகாட்டிய பின், புத்தகம் மாயமாக மறைந்து போய்விட்டது!

எத்தனை நாட்களுக்குப் பின்னர் என்று தெரியவில்லை? ஆனால் அவர்களின் கண்களில் வாழ்ந்த உலகம் தெரிந்த போது, அப்படியொரு ஆனந்தம்!!

ஏதோ புதிதாய் பார்ப்பது போல் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின் எப்படிக் கிளம்பி வந்தார்களோ, அதே போல் தங்களது ஊரைச் சென்று அடைந்தார்கள்.

ஸ்வீட் ஹார்ட்டும், ரோமியோவும் அவர்களது வீட்டிற்குச் சென்றனர். அதுபோல் தனமும் மைக்கேலும்!

போகும் முன்பு இரண்டு விடயங்கள் பற்றித் தெளிவாகப் பேசினார்கள். ஒன்று, புதையல் ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது!

மற்றொன்று, எப்படி முத்துக்களை விற்றுப் பணமாக்குவது என்று!

மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என பேசிக்கொண்டுதான் சென்றனர்.

மைக்கேல் வீடு

வீட்டிற்கு வரும் வழியிலும் சரி… வீட்டிற்கு வந்த பின்னும் சரி… தனம் மைக்கேலிடம் எதுவும் பேசவில்லை. முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே இருந்தாள்.

மைக்கேலும் அவளை அவள் போக்கிலே விட்டுவிட்டான்.

சற்று நேரத்தில் அவர்களது ஆயா வந்தார்.

உள்ளே இருவரும் இருப்பதைப் பார்த்து, “எப்படா வந்தீங்க?” என்று கேட்டார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்” – மைக்கேல்.

சுவரில் சாய்ந்து இருந்த தனத்தைப் பார்த்து, “இவை ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்கா?” என்றார்.

இருவரும் அமைதியாக இருந்தனர்.

“என்னடா கல்யாணதுக்கு சம்மதிக்கிறாளா? கட்சி வேளைக்கு போயிட்டு வந்து கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு சொன்ன?” – ஆயா.

சட்டென்று எழுந்தவள், “இனிமே இந்த வீட்ல யாராவது கல்யாணத்தைப் பத்திப் பேசினீங்க?? அவ்ளோதான்” என்று எச்சரித்து விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பின்…

கலக்கத்துடன் நின்று கொண்டிருந்த, தன் பேரனைப் பார்த்தார்.

“என்ன மைக்கேல்? இவ இப்படிப் பேசுறா?”

“கொஞ்சம் நாள்ல சரியாகிடுவா”

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காத்திருப்ப… பேசாம உனக்கு வேற பொண்ணு பார்க்கட்டா??”

“எத்தனை நாளானாலும், அவளுக்காகக் காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு, மைக்கேலும் வெளியே சென்று விட்டான்.

இரண்டு பேரும் ‘ஏன் இப்படி??’ இருக்கிறார்கள் என்று தெரியாமல், அந்த முதியவர் வருந்தினார்.

*****

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்…

அப்பகுதியின் அடையாளம் கொஞ்சம் மாறியிருந்தது. முதல் வேலையாக சாக்கடைகள் சுத்தம் செய்யப் பட்டு, சரியாக அதன் வழியில் சென்றன.

மங்கிய விளக்கொளி மாறி, சரியான இடைவெளியில் விளக்குக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

சாலையின் இரு ஓரங்களிலும், சல்லிகள், மணல்கள் குமிக்கப் பட்டிருந்தன. புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெறப் போகிறது. அதற்காகவே இவைகள்!

இந்த மூன்று மாதத்தில் என்ன பண்ண முடியுமோ, அதைத் திறம்படச் தனம் செய்திருந்தாள்.

மேலும், கட்சியில் இருப்பதால், இதெயெல்லாம் செய்ய கட்சி பணம் தருகிறது என்று சொல்லி, புதையல் ரகசியத்தை மறைக்க முடிந்தது.

தனத்தின் இச்செயல்களால், அப்பகுதி மக்களிடம் கட்சிக்கு நல்ல பெயர் பெருகுவதால், கட்சி நிர்வாகமும் அவளின் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடாமல் இருந்தது.

கட்சி நிர்வாகிகளும், இவளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்றெல்லாம் தோண்டித் துருவி கேள்வி கேட்காமல், மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கிறோம் என்று திருப்தி கொண்டார்கள்!

இவ்வளவும் தனம் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது, மைக்கேல்தான். ஆனால் அவனுடன் முகம் கொடுத்துப் பேச மாட்டாள்.

எனினும் அவள், ‘ம்ம்’ என்றால், அவன் ‘ம்கூம்’ என்று சொல்லாமல் வேலை செய்தான்.

தனத்தின் மனம் மாறும் வரை, மைக்கேல் காத்திருக்கத் தயாரானான்.

மற்றொரு புறம்…

ரோமியோ தன் காதலிக்காக அரண்மனை போல் வீடு கட்ட போராடிக் கொண்டிருந்தான். இவனது குறிக்கோள், தனத்தைப் போல் நடைமுறைக்கு எளிதாக இருக்கவில்லை.

எங்கு போனாலும், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி வந்து நின்றது.

ஆனாலும், அரண்மனை கட்டியே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றான், காதலன் ரோமியோ. அப்படி இல்லை என்றால், அவன் எப்படிக் காதல் நாயகன்!!

இன்னொன்றும் செய்தான்! அது தனத்திற்கு உதவுவது. அது பணமாகவோ, இல்லை… உழைப்பாகவோ இருந்தது. இது ஸ்வீட் ஹார்ட் செய்யச் சொன்னதால் செய்கிறான்.

ஆனால் மைக்கேலுடன் பேச மட்டும் மறுத்து விட்டான். ஸ்வீட் ஹார்ட் சொல்லியும் ‘முடியாது’ என்று கூறி விட்டான்.

மேலும், ரோமியோ தன்னுடன் இருந்த இரு இளைஞர்களுக்கும் ஒரு சிறிய தொழில் ஆரம்பிக்க உதவி செய்திருந்தான்.

அதுபோல, மாறனுக்கு உதவுவதை மைக்கேல் தன் பொறுப்பாக எடுத்துச் செய்தான்.

ஏனென்றால் புதையல் பற்றிய ரகசியம் வெளியே கசியக் கூடாது அல்லவா!

அப்படி மட்டும் வெளியே தெரிந்தால்,
அவர்கள் நிலையே மாறிப் போய்விடும்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

ரோமியோ, தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் ஒரு ஆட்டோ நின்றது.

“ஸ்வீட் ஹார்ட், எவ்வளவு நேரம்? சீக்கிரம் வா!” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

“இதோ இதோ…ரோமியோ” என்று பதில் சொல்லிக் கொண்டே, காதலிக்காக காதலன் கட்டிய வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள், சிரித்துக் கொண்டே அவன் முன்னால் வந்து நின்றாள்.

“என்ன ஸ்வீட் ஹார்ட்?”

“நான் எப்படி இருக்கேன்?”

“ஆட்டோல ஏறு ஸ்வீட் ஹார்ட்” என்றான், அவள் கேள்விக்கு பதில் செல்லாமல்.

அவளும் ஆட்டோவில் ஏறினாள். சற்றுத் தள்ளி டீக்கடையில் நின்ற ஆட்டோ ஓட்டுனரை அழைத்தான்.

அவரும் வந்தார்.

“ஏன் ரோமியோ காரெல்லாம் வச்சிருக்க… அதுல போகாம, இப்பவும் ஆட்டோதானா??” – பலத்த சந்தேகத்துடன் ஆட்டோகாரர்.

“அது என்னமோ, இதுல போனாதான்…போன மாதிரி இருக்கு” என்று ஆட்டோக்குள் ஏறினான்.

“சரி எங்க போகணும்?” என்று அவரும் ஏறி அமர்ந்தார்.

“கவுன்சிலர் கல்யாணத்துக்கு”

“அப்படியா!… ” என்று தாடையைத் தடவியவர், “ரோமியோ” என்று அழைத்தார்.

“சொல்லுங்கண்ணா”

“அங்கே போய் இறங்கிட்டு… எனக்கு கவுன்சிலரைத் தெரியும். அதனால பணம் தரமாட்டேன்ன்னு சொல்லக் கூடாது” என்றார் கறாராக!

உடனே தன் சட்டைப் பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டி, “போதுமா??” என்றான்.

“சரி சரி” என்று ஆட்டோவை இயக்க முயற்சித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் கிளம்பும் முன், ரோமியோ, “அண்ணா… ஏதாவது பாட்டு போடுங்க” என்று நேயர் விருப்பம் கேட்டான்.

“கல்யாணம் முடிஞ்சி இத்தனை வருஷமாச்சு! இன்னும் நீ மாறலைய்யா??” – ஆட்டோ ஓட்டுநர்.

“வருஷம் எத்தனை ஆனா என்ன? இந்த வாழ்கை காதலுக்குத்தான்” என்று, காதல் அலப்பறைகள் செய்தான்.

“ம்ம் அது சரி” என்று பாட்டுப் போடப் போனவரை,

“அண்ணா” என்று அழைத்தான்.

“என்ன ரோமியோ? லவ் சாங்கா??”

“ஆமாண்ணா”

“என்ன ரோமியோ? ஒரு பிள்ளை வந்ததுக்கு அப்புறமும் இப்படியா?”

“அது… அப்படித்தான்… நீங்க பாட்ட போடுங்க” என்றான்.

அவனது காதல் வெளிப்பாடுகள் காலத்தினால் மாறப்போவது இல்லை!

என்றுமே, காதலும் காதல் சார்ந்த இடமும் ரோமியோ!!

ஆனால் பிள்ளை??

ஆம்!! ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ரோமியோ, ஸ்வீட் ஹார்ட் காதல் ஜோடிக்கு பெண் பிள்ளை பிறந்தது.

அதற்கு ரோஸ் என்று செல்லப் பெயர்
வைத்திருந்தான். அதாவது தன் பெயரின் முதல் எழுத்தும், ஸ்வீட் ஹார்ட் பெயரின் முதல் எழுத்தும் சேர்த்து!!

காதல் பாடல்கள் ஆட்டோவிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது.

காதலர்கள் இருவரும், ஸ்வீட்சர்லாந்து சென்று ஸ்னோவில் ஸ்லொவ் மோஷனலில் ஒரு ‘டூயட் சாங்’ பாடிவிட்டு வந்தனர்.

கனவு உலகப் பாடல் முடிவதற்கும், ஆட்டோ கவுன்சிலர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

ரோமியோ, ஸ்வீட் ஹார்ட் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.

கவுன்சிலர் அளவிற்கு ரோமியோவுக்கு பழக்கமா?? இல்லை!!

அவனது நெருங்கிய தோழிதான் கவுன்சிலர்! யார் அது? வேறு யாருமில்லை தனம்தான்!

இந்த இரண்டு வருடங்களில், தனம் செய்த நல்ல விடயங்களுக்காக, அப்பகுதி மக்கள் அவளைக் கவுன்சிலராக்கி அழகு பார்த்தனர்.

அவளுக்குத்தான் இன்று திருமணம்!

ஆட்டோக்காரரிடம், பணத்தை எடுத்து நீட்டி, மீதிச் சில்லறைக்காக காத்திருந்தான்.

“மாமா பொண்ண கல்யாணம் பண்ண இவ்வளவு கஷ்டப்பட்டது இவனாதான் இருக்கும்” என்றார் ஆட்டோகாரர் மீதிச் சில்லறை கொடுத்துக் கொண்டே!

ஆம்! மைக்கேல்தான் மணமகன்!!

இரண்டு வருடங்களாக சம்மதிக்காமல் இருந்தவளுக்கு, அதற்கு மேல் மைக்கேலின் அன்பை ஒதுக்கி வைக்க முடியவில்லை. ஆதலாலே இந்தத் திருமண ஏற்பாடு!!

ரோமியோவும் ஸ்வீட் கார்டும் திருமணம் நடக்கும் இடத்தின் நுழைவாயிலுக்குச் சென்றனர்.

“ஸ்வீட் ஹார்ட், நீ மட்டும் போயேன். நான் வரலை” என்று தயங்கினான்.

ஆம்! ரோமியோ இன்னும் மைக்கேலை மன்னிக்கவில்லை. இன்னும் காலம் வேண்டும் போல!!

கல்யாணத்திற்கு வர மறுத்தவனை, ஸ்வீட் ஹார்ட்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறாள்.

“பேசாம உள்ளே வா” என்று இழுத்துக் கொண்டு சென்றவள், முன் வரிசையில் ஒரு நாற்காலியில் அவனை அமர வைத்தாள்.

பின்னர், ரோஸை அவனிடம் கொடுத்துவிட்டு, “ரோஸ் முழிச்சிட்டா. பார்த்துக்க ரோமியோ. கல்யாணம் முடியர வரைக்கும் எங்கேயும் போகக் கூடாது” என்று கட்டளையிட்டாள்.

அவனது முகபாவம் சொன்ன பதிலில் திருப்தி இல்லாததால், “ரோமியோ” என்று மனைவி அழுத்தமாகச் சொன்னாள்.

“சரிம்மா, எங்கேயும் போகலை. போதுமா?” என்று கணவன் கட்டுப்பட்டான்.

அந்தப் பதிலிலும், அவன் சொன்ன விதத்திலும்… அவன் மீது நம்பிக்கை கொண்டு, ஸ்வீட் ஹார்ட் நகர்ந்தாள்.

அவள் சென்றவுடன்…

விழித்திருந்த மகளை, ரோமியோ பார்த்தான். அவளை இரு கைகளாலும் தூக்கி உயரே பிடித்துக் கொண்டு, “என்ன ரோஸ்? இந்த அப்பா… அம்மா சொல்றதை இப்படிக் கேட்கிறேன்” என்று மகளுடன் பேச ஆரம்பித்தான்.

ரோமியோவின் மகள், அப்பாவின் பேச்சைக் கேட்டுப் பால்சிரிப்பு சிரித்தாள்.

ரோமியோவின் அந்தப் பேச்சில்,
ஒரு அப்பாவிற்குரிய பொறுப்பு… மனைவியை காதலிக்கும் கணவனின் சிறப்பு… என்று இரு வேறு பரிமாணங்கள் தெரிந்தது!

அக்கணத்தில், ரோமியோ அவ்வளவு அழகாகத் தெரிந்தான்!!

இனி கல்யாணம் பற்றி…

கவுன்சிலர் கல்யாணத்திற்கு, அப்பகுதி மக்கள் அனைவரும் வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது.

தன் பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் என்ற மகிழ்ச்சியில், ஆயா தலைகால் புரியாமல் ஓடிக் கொண்டிருந்தார்.

மேடையில் தனமும் மைக்கேலும் அமர்ந்திருந்தனர். ஸ்வீட் ஹார்ட் மைக்கேல் புறம் வந்து நின்று கொண்டாள்.

மைக்கேல் மேடையில் இருந்து, ரோமியோவைப் பார்த்தான். பின் தன் அருகில் இருந்த ஸ்வீட் ஹார்டிடம், “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று மகிழ்ந்தான்.

“இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க ப்ரோ. பேச வச்சிடலாம்” என்று சொல்லி, அவனின் மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கினாள்.

இன்னும் பல சந்தோஷமான திருமண நிகழ்வுகள் நிகழ்ந்தன.

சற்று நேரத்திற்கு பிறகு…
மைக்கேல், தனலெட்சுமி திருமணம் நடந்து முடிந்தது!!

கடைசியில் ஸ்வீட் ஹார்ட் ரோமியோவை மேடைக்கு அழைத்தாள். அவனும் வந்து நின்றான்.

மைக்கேல், தனம்… ரோமியோ, ஸ்வீட் ஹார்ட், ரோஸ்… மேடையில் ஒன்று சேர்ந்து நின்ற நிகழ்வை, நிழல் படமாக்கி, நிறைவாக உணர்ந்தனர்.

மைக்கேல் வீடு

சிறு வயதிலிருந்தே மைக்கேலுடன் ஒரே வீட்டில் வளர்ந்தவள்தான் என்றாலும்,

புதிய உறவு வந்ததிற்குப் பின்னான முதல் நாளின் இரவு என்ற ஒரு கூச்சம்…

மைக்கேல் தன் கணவன், தான் அவன் மனைவி என்ற ஒரு பதட்டம்…

மைக்கேலின் காதலை முழு மனதோடு ஏற்றதால் ஒரு வெட்கம்…

இந்த மாதிரி உணர்வுகள் எதுவும் இல்லாமல், எப்போதும் போல மைக்கேலின் தோளில் சாய்ந்து, தனம் அமர்ந்திருந்தாள்.

“தனம்”

“சொல்லு”

“ஸாரி தனம்”

“இதையே இன்னும் எத்தனை தடவை சொல்லுவ?” என்று கேட்டு, அவனது தோள்களில் அடித்தாள்.

பின் மீண்டும் அவன் தோள்களில் சந்தோஷமாகச் சாய்ந்து கொண்டாள்.

எத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின், மைக்கேலுக்கு காதல் கைகூடியிருக்கிறது!
சந்தோஷத்தில் காதல் காற்றில் மிதந்து கொண்டிருந்தான்!

மேலும், அவன் அவளது நிறை குறை தெரிந்தே காதலிக்கிறான். ஆதலால், அவனுக்கு அவள் அடித்தாலும் திருப்தியே!

“தனம்”

“ம்ம்ம்”

“எனக்கு ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்?”

“கேளு”

“அன்னைக்கு ரோமியோ என்னைய அடிச்சான்ல?”

“ஆமா, அதுக்கென்ன??”

“இல்லை தனம்… அன்னைக்கு தன்யா சிஸ்டர் கூட வந்து தடுத்தாங்க. ஆனா நீ தடுக்கவேயில்லையே?? ஏன்?”

“இதுக்கு பதில் சொன்னா, நீ வருத்தப் படுவ”

“தனம், இதுக்கு முன்ன நீ சொன்ன பதில்-ல எல்லாம் நான் சந்தோசமா இருந்தேன்னு நினைக்கிறியா?” என்று மனதில் இருப்பதை, உண்மையைச் சொன்னான்.

திரும்பவும் அத்தை மகன் தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.

“போதும்” என்று சொல்லி, அவளது கைகள் பிடித்து நிறுத்தியவன், “பதில் சொல்லு” என்றான்.

“நானும் சேர்ந்து அடிக்காம இருந்தேன்னு, சந்தோசப்பட்டுக்கோ” என்றாள் பட்டென்று!

“அதுவும் சரிதான்” என்று தலையைத் தலையை ஆட்டிக் கொண்டான்.

மீண்டும் அவனது தோள்களில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“மைக்கேலு” என்று தனம் அழைத்தாள். தன்னால் முடிந்த அளவு, அதில் காதலைக் காண்பிக்கப் பார்த்தாள்.

“சொல்லு” என்றான், அதைக் கண்டு கொள்ளாமல்!

“கூப்பிடேன்”

‘இது என்ன புதுசா கேட்கிறா?’ என்று நினைத்தவன், “புரியலை” என்றான்.

“என்னைய கூப்பிடேன்”

“தனம்” என்று கூப்பிட்டான்.

“இப்படி இல்லை… அப்படி” என்றவள் கண்களும், தலையும் ஒருபுறம் இழுத்துக் கொண்டு சென்றது.

“ம்ம்ம்” என்று யோசித்தவன், “ஓ! செல்லம். கரெக்டா??” என்று கேட்டுப் பார்த்தான்.

“இல்லை மைக்கேலு”

“வேறெப்படி தனம்? எனக்குத் தெரியலையே” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குமேல் அவளின் பொறுமை காற்றில் பறக்க, பொறாமை காதல் பிறக்க, “அந்தப் பொண்ண மட்டும் அப்படிக் கூப்பிட்ட… என்னைய கூப்பிட மாட்டியா?” என்று கடிந்து கொண்டாள்.

‘ஓ! காதலியே என்ற அழைப்பிற்காக ஏங்குகிறாள்’ என்று நினைத்தவன், “அந்தப் பொண்ணு உண்மையோ… பொய்யோ… அதனால அதெல்லாம் மறந்திடு” என்று அலட்சியமாகச் சொன்னான்.

“உண்மையோ, பொய்யோ கூப்பிட்டேல… என்னையும் கூப்பிடு” என்று அடம் பிடித்தாள்.

‘இவ்வளவு ஆசையை மனசுக்குள்ளயே வச்சிருந்தியா?’ என்ற எண்ணம் வந்தவுடன், “காதலியே” என்று அழகாக அழைத்தான்.

அன்றைய அழைப்பில் இல்லாதது!
இன்றைய அழைப்பில் இருந்தது!!

அது,
எதிரில் இருப்பவளை உன்மத்தமாக காதலித்தாள் மட்டுமே, குரலில் அப்படி ஒரு காதல் குழைவை கொண்டு வர முடியும்.

“இன்னொரு தடவை” என்று அவனை விரும்பியதால், அவன் விளிப்பைக் கேட்டாள்.

“காதலியே”

“இன்னொரு…. ” என்று தனம் கேட்கும் முன்பே…

“நீயும் சொல்லிக்கோ தனம்”

“அதெல்லாம் முடியாது” என்று மில்லி மீட்டர் அளவிற்கு சின்னதாக வெட்கப்பட்டு, அவனது தோள்களில் தன் தலையை புதைத்துக் கொண்டாள்.

தனம் குணத்திற்கு, மில்லி மீட்டர் அளவு வெட்கம் மிகையே!!

சற்று நொடிகளில்,
சென்டிமீட்டர் அளவிற்கு வெட்கம் அதிகமாகி, மெல்ல தலை நிமிர்ந்து, “காதலனே” என்று அத்தை மகன் காதிற்குள் சென்று காதல் சொன்னாள்.

மாமா மகளின் அந்தச் சொல்லைக் கேட்டு, “தனம்” என்று ஆசையாகப் பார்த்தான்.

கண் சிமிட்டிச் சிரித்தாள்.
பின் காதல் காட்டிப் பார்த்தாள்.

இருவரின் கண்களிலும் கல்யாண இரவிற்கான ஆவல் வந்தது!!

அப்பகுதியின் சேவல் கூவும் வரை, தம்பதியினரின் ஆவல் தொடரும்!!!

ஸ்வீட் ஹார்ட் மாளிகை

காதலன் ரோமியோ, தன் வீட்டின் பால்கனியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

“ரோமியோ” என்று அழைத்துக் கொண்டே, காதலி ஸ்வீட் ஹார்ட் வந்து நின்றாள்.

“சொல்லு ஸ்வீட் ஹார்ட்”

அந்த ஊஞ்சலின் மறுபுறம் அமர்ந்து கொண்டாள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ரோமியோ”

“அது உன் முகத்திலயே தெரியுது ஸ்வீட் ஹார்ட்” என்றான் அவள் முகத்தைப் பார்த்து! மீண்டும் கண்கள் புத்தகத்தின் மீது சென்றுவிட்டன!!

“பின்ன? சிஸ்டர், மைக்கேல் ப்ரோவ கல்யாணம் பண்ண மாட்டாங்களோன் பயந்தேன்”

“…”

“சரியான முடிவு எடுத்திருக்காங்க”

ரோமியோவிடமிருந்து ஒரு தலையாட்டல், ஒரு ‘ம்ம்’ கொட்டல் மட்டுமே. கவனமெல்லாம் புத்தகம் மீதே!

“ரோமியோ” என்று ஒரு தினுசாக அழைத்தாள் மனைவி.

“ம்ம்ம்”

“இப்பெல்லாம் நீ ரொம்ப மாறிட்ட” என்று நகர்ந்து, அவனை ஒட்டி ஊஞ்சலில் அமர்ந்தாள்

“ஏன் இப்படிச் சொல்ற ஸ்வீட் ஹார்ட் ?” என்றவன் புத்தகத்தை மூடி வைத்தான்.

“இவ்வளவு நேரம் புக்லதான உன் கவனம் இருந்திச்சு. நான் பேசறதில இல்லை”

“நீ இப்பதான் நம்மளைப் பத்திப் பேசுற ஸ்வீட் ஹார்ட்” என்று தன் செயலுக்கான விளக்கத்தைத் தந்தான்.

“தெரியலை… ஆனாலும் நீ மாறிட்ட” என்று காதலனை வம்பிழுக்கத் தயாரானாள்.

‘என்ன திடீர்னு பேச்சு வேறு மாதிரி இருக்கே?’ என்று யோசித்தான்.

“காலைல ‘எப்படி இருக்கேன்?’ கேட்டா… எதுவுமே சொல்லலை”

‘தான் எப்பொழுதுமே, இதுமாதிரி கேள்விகளுக்குப் பதில் சொன்னதில்லையே!’ என நினைத்தான்.

“ஏன் ரோமியோ? உன் லவ் பழசாயிருச்சோ??”

‘என் லவ்வுக்கு எக்ஸ்பியரி டேட்டே கிடையாதே!’ என மனக்குரலில் வாதம் செய்தான்.

“இப்பவே பழசுன்னா?? அறுபது வயசுல என்னாகும்?”

‘இவள் வேறு எதற்கோ, அடிபோடுகிறாள்’ என உணர்ந்தான்.

“செலிப்ரேஷனே இருக்காதோ?”

அவனுக்குப் புரிந்து போயிற்று! காதலி தன்னிடம் வேண்டுவது என்னவென்று!!

“உனக்கு கிஸ் வேணும்னா டேரைக்டா கேட்டு வாங்கிக்கோ. அதை விட்டுட்டு என்னோட ப்ரெஸ் லவ்வ குறை சொல்லாத” என்றான், சகியே நீயின்றி சந்தோஷம் எனக்கேது என்பது போல!!

“ச்சே ச்சே!! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்று ஊஞ்சலில் இருந்து எழுந்து போகப் போனவளின் கைப்பிடித்து இழுத்து, தன் மடியில் உட்கார வைத்தான்.

“ஸ்வீட் ஹார்ட்! உண்மையா சொல்லு? வேண்டாமா??” என்றான், காதலி விறல்களுக்குச் சொடுக்கு எடுத்துக் கொண்டே!

“நிஜமா! கிஸ்ஸெல்லாம் வேண்டாம் ரோமியோ” என்றாள். காதல் அகராதியில் ‘வேண்டாம்’ என்பதன் பொருளோடு!!

“பட் எனக்கு வேணுமே”

“எனக்கு வேண்டாமே” என்று தன் கிறக்கும் பேச்சால், இரக்கமேயின்றி அவனை கிறங்கடித்தாள்.

“வேணும் ஸ்வீட் ஹார்ட்”

“சரி, இப்போ என்ன செய்ய ரோமியோ?” என்று விழி மொழியில் காதல் மயக்கம் காட்டி, பேசு மொழியில் காதலனை மயக்கினாள்.

“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஸ்வீட் ஹார்ட்”

“சொல்லு சொல்லு” என்றாள், காதலன் மடியில் துள்ளி விளையாடும் மீனாக!

“நான் வேணா இப்ப கொடுக்கிறேன். நீ வேணா அப்புறமா கொடுத்துக்கிறீயா?”

“ஐ! சூப்பர் ஐடியா” என்றாள், விரும்பியே காதல் வலைக்குள் சிக்கும் காதல் மீனாக!

பிள்ளை பெற்றெடுத்த பின்னும், காதலின் சிறுபிள்ளைத்தனங்கள்!

காதல் நிலை முற்றிப் போய், காதலர்கள் காதலாய் சிரித்தார்கள்!!

ரோமியோ தரையில் காலூன்றி அழுத்தி ஊஞ்சலை ஆடச் செய்தான்.

காதலர்களைச் சுமந்து கொண்டு ஊஞ்சல் ஆடியது.

இங்கு, அந்த ஊஞ்சலின் வடிவமைப்பைப் பற்றிச் சொல்லயே ஆக வேண்டும்!

இரண்டு இருதய வடிவ காதல் சின்னங்கள்… ஒன்றின் மேல் ஒன்று ஒட்டிக் கொண்டது போல்… அதன் ஓரங்களில் இருந்து, அதே இதய வடிவ சங்கிலிகள் கொண்டு தாங்கிப் பிடிக்கப்பட்டிருந்தது.

முழுவதும் காதலின் வண்ணமான சிவப்பு நிறத்தில் இருந்தது.

மேலும் சிறிய இரண்டு வெள்ளை நிறத் தலையணைகள்! அதில் பளபளக்கும் சிவப்பு வர்ண ஜிகினாவால் ‘ரோமியோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று பெயர் எழுதப்பட்டிருந்தது!!

ஆங்காங்கே பந்துகள் போன்ற பாணியில் தொங்க விடப்பட்ட விளக்கிலிருந்து, மெல்லிய வெள்ளை நிற ஒளி பாய்ந்து கொண்டிருந்தது!

இரு புறச் சுவர்களில், அவர்களது காதல் வாழ்க்கையைப் பறைசாற்றும் புகைப்படங்கள்!

தூரத்தில் வெண்ணிலா!
அருகாமையில் வெள்ளை உள்ளம் கொண்ட காதலி!
வேறென்ன வேண்டும் காதலன் ரோமியோவிற்கு!!

ரோமியோ, “ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.

காதலனின் அத்தகைய அழைப்பில்,

வெம்மையான வாணலியில் விழுந்த வெண்ணையின் உருக்கம்…
மலரை வருடும் மாருதத்தின் மென்மை…
சீனிப்பாகில் விழுந்த சில்லுக் கருப்பட்டியின் தித்திப்பு…

– இவையனைத்தும் காதலி உணர்ந்தாள்.

“கம் ஆன்! லெட்ஸ் செலிப்ரேட் அவர் பிரெஷ் லவ்” என்றான், ஆடும் ஊஞ்சலில் இரு கைகளையும் காற்றில் விரித்தபடியே!

வானில் உலா வருகின்ற வெண்ணிலாவிற்கு வண்ணம் பூசும் அளவிற்கு வெட்கப்பட்டாள்!!

காதலியின் இதழ் ரேகைகைளை ஆராய்ந்து, எதிர்கால காதல் முத்தங்கள் எப்படி இருக்கும் என்று காதலன் கணிக்க ஆரம்பித்தான்.

இந்த ரோமியோ ஒரு இதழ் ஜோசியக்காரன்!

ஆக மொத்தத்தில், இந்தக் காதல் நாயகன் ரோமியோ ஒரு இதழ் ரசனைக்காரன்!!

error: Content is protected !!