மைக்கேலையும் தனலெட்சமியையும் பார்த்தவாறே, ரோமியோவும் அவனது ஸ்வீட் ஹார்ட்டும் உள்ளே வந்தனர்.
யாரிந்த தனலெட்சுமி? என்ற கேள்விக்கான விடையாக, இதோ தனத்தின் சுய விவரங்கள்.
பெயர் : தனலெட்சுமி.
வயது : காதலிக்க ஏற்ற வயது.
எடை : சிறு எடையிலும் ரோமியோவிற்கு சவால் விடும் அளவிற்கு தைரியம் நிறைந்திருந்தது.
விலாசம் : சிறு வயதிலிருந்தே அத்தை மகனான மைக்கேல் வீடுதான்.
குறிக்கோள் : பணம் சம்பாரிப்பது, எதற்காக என்று பிறகு சொல்லப்படும்.
தனத்திற்கு மைக்கேலால் தான் காதலிக்கப்படுகிறோம் என்று தெரியும். ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாதவள், அவனை மாலையிட மறுப்பவள். இருந்தாலும் அவனை வெறுப்பவள் அல்ல.
ரோமியோ செய்கின்ற கட்சிப் பணியைத்தான் மைக்கேலும் செய்து வருகின்றான். ரோமியோவிற்கும் மைக்கேலுக்கும் தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், மைக்கேலுக்கு உதவியாக தனம் வந்த பின்தான், சிறுசிறு போட்டிகள் வந்தன. அதிலும் கட்சித் தலைகளுக்கு உரை எழுதிக் கொடுப்பதில் ரோமியோவிற்கும் தனத்திற்கும் போட்டி வரும்.
நீயா? நானா? என்று ஒரு ‘ஈஹோ கிளாஸ்’ இருவருக்கும்!
யாரிந்த மைக்கேல்? என்ற கேள்விக்கான விடையாக, இதோ மைக்கேலின் சுய விவரங்கள்.
பெயர் : மைக்கேல்
வயது, எடை, குறிக்கோள், வேலை : நாயகனுக்கும் இரண்டாவது நாயகனுக்கும் வித்தியாசம் வேண்டுமென்பதால் இவைகள் தவிர்க்கப் படுகின்றன.
காதல் வாழ்க்கை பற்றியாவது?
காதல் என்ற வார்த்தை, மைக்கேல் காதிற்கு வந்த பின்பு, தனம் மட்டுமே அவனது கருத்தில், கற்பனையில், கவனத்தில் நிறைந்து நிற்கிறாள்.
தன் காதலால் தனலெட்சுமியின் மனதைக் கொள்ளை கொள்ள முடியவில்லை! இருந்தும், மாமா மகள் மீது கொள்ளைக் காதல் கொண்டவன்!!
போகக் போக மைக்கேலைப் பிடிக்கின்றதா என்று பார்க்கலாம்! தனலெட்சுமிக்காக சொல்லப்பட்ட வாக்கியம் இது!!
உள்ளே வந்தவர்கள், பெரியவர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த மேசையின் முன்னே வந்து நின்றனர்.
அந்தப் பெரியவர் முகத்தில் கொஞ்சம் கோபம் இருந்தது.
“நான் ரோமியோ” என்று தயக்கத்துடன் தனக்கு ஒரு அறிமுகம் கொடுத்துக் கொண்டான்.
“தெரியும். நான்தான கூப்பிட்டு விட்டேன்” – பெரியவர்.
“என்னைய கூப்பிட்டிங்கள? நான் வர்றததுக்குள்ளே, இவளை ஏன் வரச்சொன்னீங்க?” என்று தயக்கம் பறந்து, தடித்தக் குரலில் கேட்டான்.
“நான் மைக்கேலத்தான் கூப்பிட்டேன். அந்தப் பொண்ணு ஏன் வந்துச்சோ? தெரியலை” என்றார்.
“நான் தனியாத்தான் வந்துக்கிட்டு இருந்தேன். ஆனா வர்ற வழியில தனம் என்னைய பார்த்திட்டா. நானும் வருவேன்னு அவதான் என்கூட வந்துட்டா” என்று தன்னிலை விளக்கம் அளித்தான் மைக்கேல்.
தற்பொழுது அந்தப் பெரியவர் தனத்தைப் பார்த்தார். ஏன் மைக்கேலும் ரோமியோவும் கூட தனத்தைதான் பார்த்திருந்தனர்.
தான் இங்கு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும், கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள். பதில் எதுவும் பேசவில்லை.
“ஏதாவது பேசும்மா?” – பெரியவர்.
“ஏதாவது கேள்வி கேளுங்க? சும்மா பேசுனா என்ன பேச?” – தனம்.
“மைக்கேலத்தான கூப்பிட்டாரு நீயேன் வந்த? இதுக்கு பதில் சொல்லு” – ரோமியோ.
“ஏன் மைக்கேலு? நான் உன்கூட வரக்கூடாதா? அதுக்கு எனக்கு உரிமையில்லையா?” என்று அத்தை மகனிடம் அழிச்சாட்டியம் செய்தாள்.
“அய்யோ தனம்… யார் அப்படி சொன்னா அப்பட? உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தனம். சொல்லப்போனா உனக்கு மட்டும்தான்… ” என்று மைக்கேல் தலைகீழாய் கவிழ்ந்தான்.
தனமோ, ‘போதும், நிறுத்து உன் காதல் பேச்சுக்களை’ என்பது போல் கைகளால் சைகை செய்தாள். மைக்கேலும் நிறுத்தி விட்டான்.
பெரியவர் மைக்கேலை பார்த்தார். அவன் எதுவும் சொல்லவில்லை. அதன் பின்னர் தலையைத் திருப்பும் போதுதான் தெரிந்தது, அறையின் கதவு திறந்து கிடந்தது என்று!
‘ச்சே’ என நினைத்தவர், வந்ததிலிருந்து சும்மாகவே நின்றிருக்கும் ஸ்வீட் ஹார்ட்டைப் பார்த்து, “ஏம்மா, நாம பேசுறது ரொம்ப ரகசியமா இருக்கணும். நீ போயி, அந்தக் கதவை அடைச்சிட்டு வாம்மா” என்றார்.
“யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க?” என்று ரோமியோ கொதித்துப் போய் நின்று கொண்டிருந்தான்
“ஏன் ரோமியோ?” – பெரியவர்.
“இந்த மாதிரி வேலையெல்லாம் அவ செய்ய மாட்டா”
உண்மையிலே பெரியவருக்குப் புரியவில்லை, ‘அப்படியென்ன வேலை சொல்லிட்டோம்?’ என்று!
“ஷீ இஸ் மை ஸ்வீட் ஹார்ட். ராணி மாதிரி வாழப் போறவ”
“எந்த அரண்மனைக்கு?” என்று நய்யாண்டி செய்யும் குரலில் கேட்டாள் தனலெட்சுமி.
“கட்டுவோம்ல?” என்று நம்பிக்கையுடன் கூறினான் ரோமியோ.
“ரோமியோ! கட்சிக்குத் தோரணம் கட்டறதும், காதலிக்கு அரண்மனை கட்டறதும் ஒண்ணில்லை. முதல சொன்னதுக்கு, கை இருந்தா போதும். ரெண்டாவது சொன்னதுக்கு கை நிறைய காசு வேணும்” – தனம்.
“இனிமே வரும்ல?”
“எப்படி வரும்?”
“புதையல் எடுக்கபோறேன்ல! அதுல இருந்து பணம் வரும்”
“ஓ! அப்போ புதையல் பத்திப் பேசத்தான் ரோமியோவையும் மைக்கேலையும் கூப்பிட்டிங்களா? அதான் நான் கேட்டதுக்கு, பதிலே சொல்லலயா?? இன்டெரெஸ்ட்டிங்” என்று சொல்லி, தனம் மெத்தையில் நன்றாக அமர்ந்து கொண்டாள்.
‘அப்போ இவளுக்குப் புதையலைப் பற்றி ஒன்றுமே தெரியாதா? நானாகத்தான் வாய் விட்டேனா?’ என ரோமியோ நொந்து கொண்டிருந்தான்.
அதே சமயம் அந்தப் பெரியவர், ‘உனக்கு மட்டும் சொல்லணும்னு நினைச்சேன். நீ எத்தனை பேருக்கு தெரிய வைக்கிற?’ என்று கோபமாக ரோமியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்கு பிறகு…
“இங்கபாரும்மா…” என்று பெரியவர் ஆரம்பித்ததார்.
“நீங்களும் பாருங்க பெரியவரே! என் பேரு தனலெட்சுமி. என்னைய எல்லாரும் தனம்-னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க” என்று சொல்லி, அந்தப் பெரியவரைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.
“சரி. இங்கபாரு தனம்… ”
“நிறுத்துங்க… நிறுத்துங்க…”
“என்ன? ”
“எங்க பேரெல்லாம் தெரியுது. உங்க பேரென்ன? ”
“என் பேரு நெடுமாறன்”
“ம்ம்ம், சரி சொல்லுங்க”
“தனம், நல்லா கேட்டுக்கோ! புதையல் எடுக்க ரோமியோவதான் அனுப்பணும்னு நினைச்சேன். ஆனா இடையில நீ வந்துட்ட” என்று பொறுமையாகச் சொல்லி, சிறிது இடைவெளி விட்டார்.
“மிச்சத்தையும் சொல்லி முடிங்க” – தனம்.
“ரோமியோ போய் புதையலை எடுத்திட்டு வரட்டும். நீ பேசாம போயிடும்மா” என்று எளிதாகச் சொன்னார்.
“இவ்ளோதானா?? இதோ போய்டுறேன்” என்று எழுந்தாள்.
‘இவ இவ்வளவு நல்லவளா?’ என ரோமியோவும், ‘இவ இப்படிப் பேசமாட்டாளே!!’ என மைக்கேலும் நினைத்தனர்.
எழுந்து நின்ற தனமோ, “போறேன்னு சொன்னேன். எங்க போறேன்னு கேட்க மாட்டிங்களா?” என்று பெரியவரைப் பார்த்துக் கேட்டாள்.
“சரி! எங்க போற தனம்? வீட்டுக்குத்தான?” என்று கேட்டார் பெரியவர்.
“இல்லை பெரியவரே! இந்தப் புதையல் ரகசியத்தை யார்கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட போய் சொல்லுவேன்”
அனைவரும் அதிர்ந்தனர்.
“என்னால அது முடியலைன்னா, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுவேன். அதுவும் இல்லையா? எங்க கட்சி ஆபீஸ்ல சொல்லுவேன்”
அதிர்ச்சி விலகாமல், அவளையே பார்த்திருந்தனர் அனைவரும்.
வயதில் மூத்தவர் என்பதால், பெரியவர் அதிர்ச்சியிலிருந்து விலகி, ரோமியோவைப் பார்த்தார். பின் திறந்திருக்கும் கதவைப் பார்த்தார்.
ரோமியோவிற்குப் புரிந்ததால், திரும்பிச் சென்று கதவை அடைத்துவிட்டு வந்தான்.
தனலெட்சுமியப் பார்த்து, “நீ உட்காரும்மா” என்றார் பெரியவர்.
தனம் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
திரும்பி வந்த ரோமியோவைப் பார்த்து, “நீயும் உட்காரு ரோமியோ” என்றார்.
அறையைச் சுற்றிப் பார்த்த ரோமியோ, ஓரத்தில் கிடந்த ஒரே ஒரு முக்காலியை எடுத்து வந்து போட்டு, “ஸ்வீட் ஹார்ட் நீ உட்காரு” என்றான் காதல் கணவன் ரோமியோ.
“உன்கிட்டதான் பேசணும் ரோமியோ, நீயே உட்காரு” – பெரியவர்.
“ஆமா ரோமியோ, நீ உட்காரு” – ஸ்வீட் ஹார்ட்.
உடல்மொழி முழுவதும் உயிர்க் காதல் பறைசாற்ற, “ஸ்வீட் ஹார்ட், நீ நின்னா எனக்கு கால் வலிக்கும்” என்றான் காதலன் ரோமியோ.
“இது என்ன லாஜிக்?” என்று சந்தேகமாய் தனம் கேட்டாள்.
“இது லாஜிக் இல்லை. லவ்… மை ப்ரஷ் லவ்” என்றான் ரோமியோ.
காதலுக்கு ஏது இடம், பொருள், ஏவல்? இதயம் மட்டும்தான் போல!!
“லவ்வா!?!?” – தனம்.
“ஆமா அது லவ்வுதான். எனக்குத் தெரியும்” – இது மைக்கேல். ஒரு காதலனுக்குத்தான் இன்னொரு காதலனின் காதல் கிறுக்குத்தனம் புரியும் போல!
“மைக்கேலு, அப்போ அது எனக்குத் தெரியாமலே இருக்கட்டும்” என்றாள் கிஞ்சித்தும் காதல் இல்லாத தனம்.
“போதும்! யாராவது ஒருத்தர் உட்காருங்க. நான் கொஞ்சம் பேசணும்” என்றார் எரிச்சலுடன் பெரியவர்.
“ஸ்வீட் ஹார்ட்” என்று கொஞ்சும் கண் பார்வையில் கெஞ்சினான்.
அவ்வளவுதான் பாகாய் உருகிய பார்வையில், பாவை உட்கார்ந்தாள்.
“இப்போ நான் உங்ககிட்ட புதையல் பத்தி…” என்று பெரியவர் ஆரம்பிக்கும் போதே…
“ஒரு நிமிஷம்” என்றாள் தனலெட்சுமி.
“என்ன சொல்லு?”
“உங்களுக்கு எப்படிப் புதையல் பத்தி தெரிஞ்சது? அப்படியே தெரிஞ்சாலும் நீங்க போய் எடுக்காம, ஏன் எங்ககிட்ட சொல்றீங்க? அதுலயும் பர்டிக்குலரா ரோமியோவையும் மைக்கேலையும் ஏன் கூப்பிட்டிங்க? இதைப் பத்தி ஏன் ஒண்ணுமே சொல்ல மாட்டிக்கீங்க?” என்று தனம் கேள்விகளை அடுக்கி வைத்தாள்.
“அதைப் பத்தி சொல்லணும்னா, அவரு பேசணும். அதுக்கு நீ பேசாம இருக்கணும்” – ரோமியோ.
‘ச்சீ போ’ என்பது போல் பார்வை பார்த்து, அமைதியானாள் தனம்.
“சரி, பர்ஸ்ட் கேள்வி என்ன கேட்ட? இந்தப் புதையல் பத்தி எப்படித் தெரிஞ்சதுனா?” – பெரியவர்.
“ம்ம்ம்”
“எனக்கு, இந்தப் புதையல் பத்தி எப்படித்…”
“ஒரு நிமிஷம்” – மீண்டும் தனம்.
“இப்போ என்னம்மா?”
“இந்த ஸ்கூல் பசங்க மாதிரி பாதிக் கேள்வியையே பதிலா எழுதாம, பட்டுன்னு பதில் சொல்லுங்களேன். ப்ளீஸ்”
பெரியவரால் தனத்தைப் சமாளிக்க முடியவில்லையோ! அவர் பார்வை அப்படித்தான் சொல்லியது!!
“தனம் சும்மா இரு. அவர் பேசட்டும்” என்று காதல் கொண்டவனாய் கெஞ்சினான் மைக்கேல்.
“மைக்கேலு நீ சொல்லி, நான் ஏதாவது கேட்டிருக்கேனா?”
“இல்லை”
“அப்ப என்கிட்ட எதுவும் சொல்லாத” என்று அவன் காதலைக் கொன்றவளாய் பேசினாள் தனம்.
மைக்கேல், தனத்தின் அந்தப் பதிலில் அமைதியாகிவிட்டான்.
“தம்பி மைக்கேல்” என்று பெரியவர் அழைத்தார்.
“சொல்லுங்க”
“நீ இந்தப் பொண்ணைத்தான் காதலிக்கிறீயா??”
“ஆமா, ஏன் கேட்கிறீங்க?”
“கொஞ்சம் யோசிச்சுக்கோப்பா. என்னமோ சொல்லணும்னு தோணிச்சு” என்றார் பெரியவர்.
“மைக்கேல்! அதேதான்டா நானும் சொல்றேன். நல்லா யோசிடா” – ரோமியோ.
“பாருங்களேன்! இதேதான் நானும் இவன்கிட்ட சொல்றேன். யோசி மைக்கேலு” என்று மைக்கேலின் தோள்களில் அடித்துச் சொன்னாள்.
‘புதையலைப் தேடிப் போய் எடுக்கிறதுக்குள்ள… என் காதலைக் குழி தோண்டி புதைச்சிடுவாங்க போல?!’ என்பது போல் இருந்தான் மைக்கேல்.
மேலும், “போதும், நீங்க புதையலைப் பத்திச் சொல்லுங்க” என்று பெரியவரிடம் கேட்டுக் கொண்டான் மைக்கேல.
“சொல்றேன், ஆனா யாரும் கொஞ்ச நேரம் எந்தக் கேள்வியும் கேட்காம, நான் சொல்றதைக் கேட்கணும்” என்று பொதுவாகச் சொன்னவர், “முக்கியமா நீ” என்று தனத்தைப் பார்த்துச் சொன்னார்.
மற்றவர்கள் அமைதியாக ஆமோதித்தாலும், தனம் மட்டும் “ம்ம் ஓகே. இனிமே நான் எதுவும் பேசலை” என்று சொல்லிவிட்டுதான் ஆமோதித்தாள்.
அந்தப் பெரியவர் மேசையின் ஓரத்திலிருந்த புத்தகத்தை எடுத்து, மேசையின் நடுவில் வைத்தார். மிகவும் பழைய புத்தகமாகத் தெரிந்தது. மேலும் அதன் மீது அழுக்குகளும், ஆங்காங்கே கரையான் அரிப்புகளும் இருந்தன.
நால்வரின் பார்வையும் அப்புத்தகம் மீதே பதிந்திருந்தன!
“நான் நிறைய புத்தகம் படிக்கிற ஆளு. வாங்கிப் படிக்க மாட்டேன், கிடைக்கிறதைப் படிப்பேன்”
கதை கேட்பது போல நால்வரின் உடல்மொழியும், கருவிழியும் இருந்தது!!
“அப்படிக் கிடைச்சதுதான் இந்தப் புத்தகமும். ஒரு பழைய புத்தகக் கடையில கிடைச்சது. ஆனா என்ன? இது சாதாரணப் புத்தகம் இல்லை” என்றவரின் குரல் அதிசியத்தின் உச்சத்தை எட்டியது.
சட்டென, தனத்தின் கைகள் புத்தகத்தை எடுத்துப் பார்க்க முயற்சித்ததால், அந்தப் பெரியவர் அவளது கைகளைத் தட்டிவிட்டார்.
“ஏன் பெரியவரே? அதுல என்ன இருக்குன்னு பார்க்க நினைச்சேன்” என்றாள் கைகளைத் தடவி விட்டபடி!
“நான்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்ல” – பெரியவர்.
‘நல்லா வேணும்’ என்பது போல் ரோமியோ சிரித்தான். சிரித்தவனிடம் ஒரு முறைப்பைப் பரிசாகத் தந்தாள்.
“அதை, நான் எப்படி நம்புறது?” – தனம்.
“பேசி முடிச்சப்புறம் புத்தகத்தைத் தாரேன். படிச்சி உண்மையா? பொய்யா?-னு தெரிஞ்சுக்கோ”
“ஓ! சரி, இப்போ புத்தகத்தைப் பத்தி சொல்லுங்க” – தனம்.
“இந்தப் புத்தகத்தில, ஒரு இடத்தில இருக்கிற புதையல் பத்தின தகவல் இருக்கு”
“எந்த இடத்தில இருக்கு?” – தனம்.
“அதப் பத்தி எதுவும் சொல்லலை”
“வேற என்ன சொல்லிருக்கு?” – ரோமியோ.
“புதையல் தேடிப்போக, அதாவது எங்க இருந்து ஆரம்பிக்கணும்ங்கிற தகவல் இருக்கு”
“அது எந்த இடம்?”
அந்தப் பெரியவர் ஒரு மலையின் பெயரைச் சொல்லி, அங்கிருந்துதான் புதையல் தேடும் பயணத்தை தொடங்க வேண்டும் என்றார்.
“அந்த மலையிலதான் புதையல் இருக்கா?” – ரோமியோ.
“இல்லை. அந்த மலையில ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு அப்புறமா ஒரு விசித்திரமான உலகம் இருக்கு. மனிதர்கள் யாரும் இல்லாத உலகம். பல அதிசயங்கள் கொண்ட உலகம். இது இந்தப் புத்தகத்தில போட்டிருக்கு”
கேட்டுக் கொண்டிருந்த நால்வருக்கும் ஆச்சரியமாக இருந்தது! விசித்திரமான என்ற வார்த்தையில் விழிகள் விரிந்தன!!
“அந்த மலையில புதையல் இல்லைன்னா? எதுக்கு அங்க போகணும்?” – தனம்.
“ஏன்னா? அங்கதான் ‘பொக்கிஷப் பேழை’ அப்படிங்கிற புத்தகம் மறைச்சி வைக்கப்பட்டிருக்கு”
“இன்னொரு புத்தகமா?” – ரோமியோ.
“அது சாதாரணப் புத்தகமில்லை. அந்தப் புத்தகம்தான் உங்களை புதையல் இருக்கிற இடத்திற்கு கூட்டிட்டுப் போகும்” என்று
“புத்தகம் எப்படிக் கூட்டிட்டுப் போகும்?” – தனம்.
“கண்டிப்பா முடியும். ஏன்னா? அது மாய மந்திரங்கள் நிறைஞ்ச புத்தகம்” – பெரியவர்.
நால்வரும் ‘ஓ!’ என்பது போல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்!!
“அந்த மலைதான், புதையல் தேடிப் போறதோட முதல் கட்டம்”
“ஓ! அப்போ அந்தப் புத்தகத்தை எடுத்தாதான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியுமா?” – ரோமியோ.
“கரெக்ட். ஆனா அந்தப் புத்தகம் மட்டும் போதாது”
“வேற என்ன வேணும்?” – தனம்.
“அந்தப் புத்தகத்தோட சேர்த்து ஒரு கல் நாணயமும் ஒரு மயில் பீலிகையும் இருக்கும். அதையும் நீங்க எடுக்கணும்”
நால்வரும் அமைதியாகக் கேட்டனர்!
“முதல் கட்டத்தில மட்டும்தான் இந்தப் புத்தகத்தையும், மயில் பீலிகையும் எடுக்க வேண்டியதிருக்கும். புதையலை நோக்கி முன்னேற ஒவ்வொரு கட்டத்திலயும் ஒரு கல் நாணயம் மட்டும்தான் கிடைக்கும்”
நால்வரும் உன்னிப்பாகக் கவனித்தனர்.
“அந்தக் கல் நாணயத்தை நீங்க எடுக்கலைன்னா, அடுத்த கட்டத்துக்குப் போக முடியாது”
“ஏன்? ஏன் போக முடியாது? நம்மகிட்டத்தான் புக் இருக்குமில்லையா?” – தனம்.
“ஆங்! அதானே??” – ரோமியோ.
“புத்தகம் இருக்கும். ஆனா புத்தகத்தில் எந்தக் குறிப்புகளும் இருக்காது”
நால்வரும் ‘இது என்ன சிக்கல்?’ என்பது போல் விழித்து வினவினர்.
“ஆமா! நீங்க கல் நாணயம் எடுத்தப்புறம், அதைக் கையில வச்சிக்கிட்டு, அந்த மயில்பீலிகை இருக்கில்லையா, அதை அந்தப் புத்தகத்தோடு பக்கங்கள வைச்சீங்கனா அது உங்களுக்கு குறிப்புகளை எழுதிக்காட்டும், ம்ம்ம்… அடுத்து எங்க போகணும்? எப்படி போகணும்னு? என்ன செய்யணும்?”
“அப்போ அந்த ஸ்டோன் காயின் எடுக்கலைன்னா?” – ரோமியோ.
“கண்டிப்பா உங்களால அடுத்த கட்டத்துக்குப் போக முடியாது. அங்கேயேதான் நிக்கணும்”
“ஐயோ, அப்போ காயின் இல்லைன்னா, வீட்டுக்கு ரிட்டனா?” – தனம்.
“அதுவும் முடியாது”
“ஏன்? ஏன் முடியாது?” என்று தனம் பதறினாள். மற்றவர்கள் கொஞ்சம் பயந்தனர்.
“ஏன்னா? நீங்க புதையலைத் தேடிப் போக ஆரம்பிச்சிட்டா, முன்னோக்கி போகத்தான் முடியும். பின்னாடி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது”
“அப்போ திரும்பி வீட்டுக்கு வரவே முடியாதா?” – ரோமியோ.
“வரலாம். ஆனா கடைசி கட்டம் வரைக்கும் போகணும். அப்படிப் போகாம, பாதியிலே திரும்பினா உங்க உயிரிருக்கு ஆபத்து”
“உயிருக்கு ஆபத்தா?” – தனம். ஆனால் மற்ற மூவரும் ‘உயிருக்கு ஆபத்து’ என்ற வார்த்தையில் உறைந்து போயினர்.
“ஆமா! அது மட்டுமில்லை. ஒவ்வொரு கட்டத்திலயும் கல் நாணயத்தை எடுக்கிறதும் அவ்வளவு சுலபமில்லை. நிறைய ஆபத்துகள் உண்டு. நிறைய சவால்களும் இருக்கும்”
“என்னென்னு ஆபத்துன்னு சொல்ல முடியுமா?” – ரோமியோ.
“அது இந்தப் புத்தகத்தில போடலை. ஆனா எந்தக் கட்டதிலயாவது ஏதாவது ஆபத்தில மாட்டிக்கிட்டீங்கனா, அதுலேயிருந்து வெளி வர்றதுக்கு பொக்கிஷப் பேழை புத்தகம் உதவும். ஆனா அப்பவும் நீங்க அந்தக் கட்டத்திலே எடுக்க வேண்டிய கல் நாணயத்தை எடுத்திருக்கணும்”
“எடுக்காம இருந்தா?” – தனம்.
“அந்த ஆபத்தில சிக்கி, உங்க ஆயுள் முழுசும் அதே கட்டத்திலதான் நீங்க இருக்கணும். இந்த உலக வாழ்க்கைக்கு வர முடியாது”
“காயின் எடுக்கலைன்னாதான? எடுதிறலாம்” என்று சொல்லி, ரோமியோ தனத்தைப் பார்த்தான்.
“ம்ம்ம், எடுத்திறலாம். ஆனா! ஏன் பின்னாடி வர முடியாது?” என்று தனம் கேட்டாள்.
“ஏன்னா? ஒவ்வொரு கட்டத்திலயும் கல் நாணயத்தை எடுத்தப்புறம், பொக்கிஷப் பேழை புத்தகத்தோட அந்தக் கட்டடத்திற்கான குறிப்புகள் உள்ள பக்கம் எரிஞ்சிடும். அதனால இருக்கலாம்”
நால்வரும் பயத்துடன் கேட்டனர்!
“அது மாதிரி கடைசிக் கட்டத்தில உங்களுக்கு கிடைக்கப் போறது கல் நாணயம் கிடையாது. ஒரு பெரிய சாவி”
நால்வரும் வாய் பிளந்து கேட்டனர்!
“அந்தச் சாவியும், அப்புறம் கல் நாணயங்களும்… அந்தப் புதையலிருக்கிற பெட்டியைத் திறக்கிறதுக்கு உதவும்”
நால்வருக்கும் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில், இதுவரை இருந்த பயம், வியப்பு, பதற்றம் மறைந்தது!
“இவ்வளவுதான் இந்தப் புத்தகத்தில போட்டிருக்கு. இதுக்கு மேல இருக்கிற விஷயங்கள நீங்க போய் தான் தெரிஞ்சிக்கணும். ஏன்னா? சில பக்கங்கள கரையான் அரிச்சிருக்கிறதால, சரியா வார்த்தைகள் தெரியலை” என்று சொல்லி, அவர்களிடம் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.
“எனக்கு ஒரு டவுட்?” – தனம்.
“கேளு”
“இது உங்களுக்குப் புத்தக கடையில கிடைச்சதுன்னு சொன்னீங்கள? ” – தனம்.
“ஆமா”
“சப்போஸ், உங்களை மாதிரியே வேற யாராவது இந்த புத்தகத்தை படிச்சிருந்தா?” – தனம்.
“அவங்க புதையல் எடுக்கப் போயிருக்கலாம். போகாமலும் இருக்கலாம். ஆனா அப்படி யாராவது போயிருந்தா, உங்களுக்குப் ‘பொக்கிஷப் பேழை’ புத்தகம் கிடைக்காது”
“ஸோ, அதிர்ஷ்டம் இருந்தாதான் புக் கிடைக்கும்” – ரோமியோ.
“அதை அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். துரதிர்ஷ்டம்னு சொல்லலாம்”
நால்வரும் புரியாமல் பார்த்தனர்!
“அதிர்ஷ்டம்னு சொன்னது புதையல் எடுக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு. துரதிஷ்டம்னு சொன்னது ஒவ்வொரு கடத்திலயும் புதையலைக் காப்பாத்திறத்துக்கு இருக்கிற வழிமுறைகள். அது கண்டிப்பா உங்களுக்குச் சவாலா இருக்கும்”
“ஒரு டவுட். சப்போஸ் எங்களுக்கு முன்னாடி புதையலைப் தேடிப் போனவங்க, ஏதாவது ஒரு கட்டத்தில ஸட்ரக்-ஆகி நின்னுட்டா, எங்களுக்கு பொக்கிஷப் பேழை புக் கிடைக்காதா? ” – ரோமியோ.
“நீங்க… இல்லை யாரா இருந்தாலும் எந்தக் கட்டத்திலயாவது தடைப்பட்டு நின்னா, பொக்கிஷப் பேழை புத்தகம், மயில் பீலிகை, கல் நாணயங்கள்… இதெல்லாம் அதுவாவே அததது எடத்துல வந்து இருந்துக்கும்”
“அதெப்படி?” – தனம்.
“நான்தான் சொன்னேனே! அது மாய மந்திரங்கள் நிறைஞ்ச உலகம்னு”
அவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்தார். இருவரும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தார்கள். பெரியவர் சொன்ன விவரங்கள்தான் புத்தகத்தில் போடப்பட்டிருந்தது.
சற்று நேரம் கடந்த பின், “திரும்பவும் கேட்கிறேன். யார் போகப் போறீங்க?” என்று நிதானமாகக் கேட்டார் பெரியவர்.
“நான்தான்” என்று இரு குரல்கள் வந்தன! ஒன்று ரோமியோ! ஒன்று தனம்!!
“ஓ!” என்று சொல்லி யோசித்தவர், “நான் ஒண்ணு சொல்றேன். கேட்கிறீங்களா?” என்றார்.
“சொல்லுங்க”
“ரெண்டு பெரும் போங்க. யாருக்கு பொக்கிஷப் பேழை புத்தகம் கிடைக்குதோ, அவங்க முன்னேறி போங்க. அடுத்தவுங்க திரும்பி வந்திடனும்”
“நீங்க திரும்பி வர முடியாதுன்னு சொன்னீங்க” – தனம்.
“அது அடுத்தடுத்த கட்டத்தில. முதல் கட்டத்திலேயிருந்து திரும்ப வரலாம்”
“ஓ!”
“என்ன ஒத்துக்கிறீங்களா?”
ரோமியோவும் தனமும் ஒருவரை ஒருவர் பார்த்தனர், பின் “ம்ம்ம் சரி” என்று இருவரும் ஆமோதித்தனர்.
இடையில் மைக்கேல் ‘வேண்டாம் தனம்’ என்று சொன்னதை, தனம் கண்டு கொள்ளவேயில்லை!
“அப்புறம் இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியும்ல?”
“ம்ம்ம்” – தனம் மற்றும் ரோமியோ.
“புரிஞ்சி நடந்துக்கோங்க”
“ம்ம்ம்” – தனம் மற்றும் ரோமியோ.
“இன்னொரு முக்கியமான விஷயம். புதையலை எடுத்ததும், நீங்க இங்கதான் வரணும். வேற எங்கயும் போகக் கூடாது. ஏன்னா? என்னோட பங்கு எனக்கு கொடுக்கணும். அதையும் மீறிப் போனீங்கன்னா??”
“விஷயத்தை வெளியில சொல்லி, எங்களை மாட்டிவிட்ருவீங்க. கரெக்டா?” – தனம்.
“ம்ம்ம்”
“உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்?” – ரோமியோ.
“புதையல் கிடைச்சா, ஆளுக்குப் பாதிப் பாதி”
“பாதியா? இது அதிகம். நாங்க கஷ்டப்பட்டு எடுத்திட்டு வந்து, பாதிய உங்ககிட்ட கொடுக்கனுமா?” – தனம்.
“வேண்டாம்னா, இப்பவே போயிடு. ரோமியோ எடுத்துத் தருவான். சரிதான ரோமியோ?”
“ம்ம்ம் சரி பெரியவரே!” – ரோமியோ.
“எனக்கும் ஓகேதான்” என்று தனமும் ஒத்துக் கொண்டாள்.
“சரி நீங்க நாலு பேரும் சேர்ந்து போய் புதையல் எடுக்கப் போறீங்களா?”
“இல்லை ரெண்டு பேர் போறோம்” – ரோமியோ.
“யாரெல்லாம்?”
“நானும் ஸ்வீட் ஹார்ட்டும், மைக்கேலும் தனமும். ஸோ ரெண்டு பேர். ஐ மென்ட் ரெண்டு ஜோடி”
“ஓ! ரெண்டு ஜோடியா போகப் போகறீங்களா?”
“இல்லை” – இது, ஜோடி என்ற வார்த்தையை ஜாலியாக எடுத்துக் கொள்ள முடியாத தனம்.
“ஏன் இல்லை? நீ போகலையா?” – பெரியவர்.
“கண்டிப்பா போறேன்! ஆனா ஜோடி இல்லை குரூப்”
“ஓ! ரெண்டு குரூப்பா போகப் போறீங்களா?”
“நோ!! நெவர்” – இது, குரூப் என்ற வார்த்தையில் கொலைவெறி கொண்ட காதல் நாயகன் ரோமியோ.
“ஏன்? என்னாச்சி?”
“நானும் ஸ்வீட் ஹார்டும் குரூப்பில்ல! வீ ஆர் லவ் பேர்ட்ஸ்” – ரோமியோ
“பட் நாங்க குரூப்தான்” – தனம்.
“ஏன் தனம்? நம்மளும்… ” என்று ஆசையாக் கேட்ட மைக்கேலை, ஒற்றைப் பார்வையால் தனம் அமைதியாக்கினாள்.
“போதும். ஒரு குரூப், ஒரு ஜோடி சரியா?” என்று கேட்டார் பெரியவர்.
தனலெட்சுமி எழுந்தாள். அந்தப் பெரியவரை நோக்கி கை நீட்டினாள். ஆனால் அவரோ ‘எதற்காக?’ என்பது போல் முழித்தார்.
“கை கொடுங்க” என்று அவர் கையை எடுத்து, தானே தன் கையோடு சேர்த்துக் குலுக்கிக் கொண்டாள்.
“இப்போ ஆல் தே பெஸ்ட் சொல்லுங்க”
“எதுக்கு?”
“அட சொல்லுங்க!”
“ஆல் தே பெஸ்ட்”
“ரோமியோ, நீயும் ஆல் தி பெஸ்ட் சொல்லு” – தனம்.
“நான் எதுக்கு உனக்கு சொல்லணும்? ” – ரோமியோ.
“சொல்லு ரோமியோ! அவங்க விஷ்-தான கேட்கிறாங்க” என்று ஸ்வீட் ஹார்ட் சொன்னாள்.
“அதான் ராணியே உத்தரவு கொடுத்திட்டாங்கள!! சொல்லு ரோமியோ” – தனம்.
காதலி சொன்னதால் வேறு வழியில்லாமல், “ஆல் தே பெஸ்ட் தனம்” என்றான் காதலன் ரோமியோ.
“தேங்க்ஸ் ரோமியோ” என்றவள், பெரியவரைப் பார்த்து, “நான் போய் புதையல் எடுத்திட்டு வருவேனாம். உங்களுக்குப் பாதி எனக்கு பாதியாம். ஓகேவா?” என்று கேட்டாள்.
பெரியவருக்கு முழுமனதாகச் சம்மதமில்லை என்பதை, அவரது முகத்தோற்றமே சொல்லியது. ஆனால் அதையெல்லாம் தனம் கண்டு கொள்ளவேயில்லை.
“உங்களுக்கு ஓகேதான். நான் வரேன். மைக்கேலு வா போகலாம்” என்றவள், ரோமியோவைத் திரும்பி, ஒரு போட்டிப் பார்வைப் பார்த்துக்கொண்டே சென்றாள்.
மைக்கேலும் தனமும் சென்றதும்…
“நானும் கிளம்புறேன்” என்று, தன் ஸ்வீட் ஹார்ட்டுடன் கைகள் கோர்த்துக் கொண்டு கிளம்பத் தயாரானான்.
“ரோமியோ, நான் உன்னைத்தான் நம்புறேன். உன்னாலதான் இது முடியும். அந்தப் பொண்ணு இடையில வந்திடுச்சு”
“பரவால்ல பெரியவரே!”
“எப்படியாவது பொக்கிஷப் பேழை புத்தகம் உனக்கு கிடைக்கணும்”
‘இவர் யார்? எதற்காக தன்னையும் மைக்கேலையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்?’ என்ற கேள்விகளெல்லாம் மறைந்து, மறந்து… தனத்திற்குச் சவால் விடும் எண்ணத்தில் “கண்டிப்பா” என்றான்.
“ஆல் தே பெஸ்ட் ரோமியோ” என்று அவன் தோள்களில் தட்டிக்கொடுத்தார்.
ரோமியோவும் ஸ்வீட் ஹார்ட்டும் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர்.
அதன் பின் அந்தப் பெரியவர் எழுந்து சென்று, அறைக் கதவை அடைத்து விட்டு வந்தார்.
வந்தவர் கட்டிலில் அமர்ந்தார். கொஞ்சம் கசகசவென இருப்பது போல் உணர்ந்தார்.
உடனே, ஒட்டி வைக்கப்பட்ட வெள்ளைத் தாடியையும், தலை முடியையும் கழட்டி வைத்தார். முகத்தில் போடப்பட்ட ஒப்பனைகளைத் துடைத்து எடுத்தார்.
நல்ல கருகருவென இருந்த கேசத்தைக் கைகளால் கோதிக் கொண்டு, காற்றாடிக்கு நேரே முகத்தைக் காட்டினான், அந்தப் பெரியவர் வேடத்தில் இருந்த இளைஞன்!