IM 19

19

“வள்ளி சீக்கிரம் நான் வேற வீடு பார்த்து போயிட போறேன், ஒரு அம்மாவா இருந்து இவன் அலம்பலை என்னால இப்பெல்லாம் தாங்கிக்க முடியறதில்லை!”

எப்போதும் அமுதா இவளிடம் புலம்புவது தான். என்ன இப்போது ராஜி இவர்களுடன் இருக்க ஆரம்பித்தபின் கொஞ்சம் அதிகமாகிவிட்டது.

“நீங்க எப்பவும் அவனை சும்மா ஏதாவது சொல்லிட்டே இருப்பீங்க அத்தை!”

“ஐயோ நிஜமா தான். நீ அவனுக்கு தானே சப்போர்ட், என்னை நம்ப மாட்டே! அடடா…கொஞ்சம் லைனில் இரு மா, பால்காரன் வந்திருக்கான்…இதோ வரேன்”

அந்த போனை அவர் வைத்துவிட்டு போக விஷ்ணுவின் குரல் அதன் வழியே கேட்டது மயூரிக்கும்.

“ராஜி செல்லம் சீக்கிரம் டி, உன்னை விட்டுட்டு வந்து நான் ஆபிஸ் வேற கிளம்பி  போகணும். அங்கே அத்தனை பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.!”

“சத்தமா பேசாதீங்க விஷ்ணு, வீட்டில் எல்லாரும் தூங்குறாங்க!”

குரல் அநியாயத்துக்கு குழைந்து போயிருந்தது.

“காபி போட்டு தரட்டா? ஏதாவது சாப்பிடுறியா? மெலிஞ்சிட்டே போறே பாரு ராஜி!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு எதுவும் வேணாம்!”

“புடவையே தான் கட்டணுமா! இந்த சுடிதார் எல்லாம் போட்டா ஆகாதா ராஜி!”

“விஷ்ணு நான் ஒழுங்கா தான் கட்டியிருக்கேன்! ஐயோ விடுங்க. லேட் ஆச்சு. கிளம்பலாம்… விஷ்ணு…!”

அவர்களின் அலப்பரை போன் வழியே கூட தாங்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டாள் மயூரி. போனில் மறுபடியும் வந்தார் அமுதா!

“வள்ளி, வள்ளி இருக்கியா!”

“ஆங்… சொல்லுங்க அத்தை.”

“என்ன நான் சொன்னது சரியா வரும் தானே!”

“சரியா வராது அத்தை. நீங்க ஏன் போகணும்? அதுங்க இரண்டையும் வேணா அனுப்பி வைங்க!”

“ஆமா அப்படித்தான் செய்யணும் போல. மூத்தவனுக்கும் இவனால் சங்கடம். இப்பெல்லாம் வீட்டிலேயே தங்க மாட்றான் தெரியுமா, ரொம்ப ஒதுங்கியே இருக்கான். பாவம் விவேக், அவன் வயசுக்கு அவன் மனசுலையும் ஆசை இருக்குமில்ல! நீ இதைப்பத்தி என்ன நினைக்கிற வள்ளி?”

இதற்கெல்லாம் என்ன சொல்ல என்றிருந்தாள் மயூரியும்.

“வள்ளி, அவன் உன் கிட்ட எதுவும் சொன்னானா! நீ உங்க விஷயத்தில் என்ன முடிவு எடுத்துருக்கே! இந்த அத்தை கிட்ட அதைபத்தி எதுவும் சொல்ல போறதில்லையா!”

அந்த அன்னையின் குரலில் பழைய ஏக்கம் மீண்டும் குடிகொண்டுவிட்டது.

“நேரம் வரும் போது எல்லாத்தையும் சொல்றேன் அத்தை. நான் என்ன முடிவெடுத்தாலும் நீங்க ஒத்துக்கணும்!”

என்றுதான் இவர்களின் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வருமோ என்றிருந்தது அமுதாவுக்கு.

இவர்களுடன் முன்பு நடந்த பிரச்சனையில் கோபமாய் சென்றிருந்த  ராஜியின் அண்ணன் திடுதிப்பென்று அந்த ஞாயிறில் இவர்கள் இருப்பிடம் தேடி வந்துவிட்டான், ராஜிக்கும் ஆச்சரியம்! விஷ்ணுவின் கைகளை பற்றி,

“மன்னிச்சிடுங்க மச்சான்” என்று ஆரம்பித்தவன்,

தான் பெண் எடுக்கும் வீட்டில் அந்த பெண்ணின் சகோதரனுக்கு ராஜியை மணமுடிக்க எண்ணியிருந்ததை சொன்னான்.

“இவ எதையும் யோசிக்காம இங்க இப்படி ஒரு முடிவெடுக்க, அங்க என் வாழ்க்கையில் ரொம்ப குழப்பமா ஆகிட்டு! இப்பதான் ஒரு வழியா எல்லாம் சரி செஞ்சியிருக்கு!”

அவன் முகத்தில் ஒரு தெளிவு!

“நிறைய சிந்தனைகள் எனக்கும்! ஏன் இந்த வீட்டு மூத்த மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை? அவருக்கு முன்னே ஏன் சின்னவருக்கு செய்யணும்! ஏன் விஷ்ணு ராஜி கல்யாணத்தை இப்படி சிம்பிளா செய்யணும்னு ஏகப்பட்ட சந்தேகங்கள். இதுக்கெல்லாம் அம்மா கிட்டயிருந்து வந்த விளக்கங்கள் ஏத்துக்கிற மாதிரியும் இல்லை.

மயூரவள்ளி போன் செஞ்சி எல்லாத்தையும் விளக்கமா சொன்னாப்ல. அதை கேட்ட பிறகு சரி எத்தனை நாளைக்கு தான் இந்த பிரச்சனையை இழுக்க, நானே முடிச்சு வச்சிரலாம்னு இன்னிக்கு வந்துட்டேன்! எங்க அம்மா முகத்தில் இன்னிக்கு தான் சிரிப்பையே பார்க்குறேன்”

அங்கிருந்து கிளம்பும் முன்,

“தங்கச்சிக்காக நாங்க வாங்கின ப்ளாட் இப்ப வேலை முடியுற நிலையில் இருக்கு! நீங்க பார்த்திட்டு உங்களுக்கு ஏத்தாப்புல இண்டீரியர் செஞ்சுக்கோங்க விஷ்ணு மச்சான். இந்தாங்க வீட்டு சாவி”

ராஜியின் தமையன் வந்து போனபின் அந்த வீட்டில் அனைவர் முகத்திலும் ஒரு நிம்மதி. விவேக் மாத்திரம் அதற்கு மாறாய் மயூரியை குற்றம் சாட்டுவதை போல் பார்த்துக் கொண்டு நின்றான். சற்று நேரம் அதனை அவள் ஒதுக்கியிருந்தாலும், நீண்ட நேரம் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

கடற்கரையை ஒட்டியிருந்த அந்த இடம் பிரிந்து போனவர்களை கூட திரும்ப சேர்த்து வைக்கும் அளவுக்கு வல்லமையை தனக்குள் அடக்கியிருந்தது. இதை தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணு அவ்விடத்தை விவேக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறான்!

“என்ன விஷ்ணு திடீர்னு இப்படி ஒரு கொண்டாட்டமெல்லாம்! அதுவும் அண்ணனுக்கு? நம்பமுடியலையே!”

அவன் அவளை போனில் அழைத்ததற்கு இப்படித்தான் கேள்வியாய் கேட்டாள் மயூரி!

“என்ன குரலில் நக்கல் பஞ்சமில்லாம இருக்கு வள்ளி!”

“ஏய் சும்மா நக்கல் விக்கல்னு பேச்சை மாத்தாம பதிலை சொல்றா!”

“ராஜி அண்ணன் கொடுத்தானே  தர்ம அடி, அதுக்கு கூட அவனை மன்னிச்சிட்டேன். இது நம்ம விவேக் தானே! போயிட்டு போறான்னு விட்டுட்டேன்”

“அடடடா என்ன ஒரு நல்லெண்ணை, சீ வெண்ணை… ஐயோ எண்ணம். ஆனா பாரு எனக்கு என்னவோ உன்னை நம்பவே தோணலை!”

“இப்ப உன்னை யாரு என்னை நம்பு நம்புன்னு சொன்னா! அப்படி யாராவது சொன்னாத்தான் நீ நம்பி அவங்களை ஏத்துக்க போறியா என்ன!”

“என்ன டா நீ இந்த விஷயத்தை தவிர வேற எதை பத்தியோ பேசுற மாதிரியிருக்கு!”

“என்ன டாக்டர் மேடம், நார்மலா தானே இருக்கீங்க? ராஜி கூட சொன்னா இப்பெல்லாம் தனியாவே பேசிக்கிறீங்களாம், சிரிச்சிக்கிறீங்களாம்! ஆர் யு ஓகே பேபி!”

“கிர்ர்ர்…மரியாதையா போனை வை. அவளும் நீயும் என்னை டென்ஷன் செய்யவே இருக்கீங்க!”

“சரி சரி நோ டென்ஷன். சொன்னது நியாபகமிருக்கட்டும் டைமுக்கு வீட்டுக்கு வந்திடு.”

அவன் சொன்ன படி போன அந்த இடம் ‘சொர்க்கம்’ என்றால் மிகையில்லை. கடற்கறை ஒட்டி அமைந்திருந்த அந்த ரிசார்ட்டில் விவேக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தான் விஷ்ணு.

நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர்கள் இருவரும் லகுவான மனநிலையில் இருந்ததாக தோன்றியது மயூரிக்கு. முகம் கொள்ளா புன்னகையில் இருந்த விவேக்கின் முகத்திலிருந்து தன் பார்வையை எடுக்க முடியவில்லை அவளால். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை அவனும் சில முறை கண்டிருந்தான்.

கேக் வெட்டிய கையோடு முதல் துண்டை ஊட்ட இவள் பக்கம் வந்தவனிடம் மறுக்க தோன்றவில்லை. என்னதான் இங்கு நடப்பதெல்லாம் தனக்கு பிடித்தமில்லை என்பது போல் அவள் காட்டிக் கொள்ள முயன்றாலும், விஷ்ணு ராஜியின் கேலியில் முகம் சிவந்து காட்டிக் கொடுத்துவிட்டது.

அதன் பின் இவர்களுக்கான உணவு மேஜையில் எல்லாம் வேறு பேச்சு எதுவுமில்லாமல் அந்த ருசியான உணவை உண்டு முடித்தனர். அதன்பின் மயூரியின் மொபைலுக்கு சில புகைப்படங்களை அனுப்பியிருந்தான் விஷ்ணு.

‘தி பெஸ்ட் கிஃப்ட்’ என்ற தலைப்பில், அவர்களுக்குள் நடந்த அந்த கேக் ஊட்டும் வைபவம் அவன் கேமராவில் ஏகத்துக்கும் அழகாய் வந்திருந்தது.

விவேக் ஒவ்வொன்றிலும் அவளை பார்த்த பார்வையை மயூரியால் எளிதில் தள்ளிவிட முடியவில்லை. அதில் தெரிந்த அத்தனை காதல் ஏக்கம் எதிர்பார்ப்பு எல்லாமும் அவளை கட்டிப் போட்டது.

“எப்படி” மறுபடியும் விஷ்ணு தான்.

“நல்லாயிருக்கு… தேன்க்ஸ்”

என்ற அவளின் பதிலில் அந்த உரையாடல் முடியவில்லை.

“அண்ணன் பாவம், இதோட எல்லாத்தையும் மூட்டை கட்டிடேன். எனக்கும் ராஜிக்கும் சீக்கிரம் உங்க கல்யாணத்தை பார்க்க ஆசையா இருக்கு!”

வழக்கம் போலவே…

“ஆஹாங்… யோசிக்கிறேன்…இப்ப நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்றீங்களா!”

அதன்பின் அங்கே விஷ்ணு தன் ஜோடியுடன் ஜோதியில் ச்சே அரட்டையில் ஐக்கியமாகிவிட, எஞ்சியிருந்த கனகவேலும் அமுதாவும் பூங்காவில் வலம் வர தொடங்கிவிட்டனர்.

மீதி இருந்தது விவேக் மாத்திரம் தான். ஒரு மரத்தடியில், பெஞ்சில் போனும் யோசனையுமாய் ஆழ்ந்திருந்த மயூரியிடம் வந்தானவன்.

“பீச் சைடில் ஒரு வாக் போலாம் வரியா மயூரி?”

அந்த ஏகாந்த சூழ்நிலையில், அவளிருந்த மனநிலையில் அவளுக்கும் போகத் தான் தோன்றியது. அவனுடன் நடக்கலானாள்!

சுற்றியும் இப்போது இருள் கவ்வியிருந்தது. ரிசார்ட்டில் ஆங்காங்கே எரிய விட்டிருந்த சிறிய விளக்கு அந்த கடற்கறையை இன்னமும் அழகாக்கியது. நட்சத்திரம் ஏதுமில்லா வானம் அமைதியாய் அங்கே நடந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாய் இருக்க, இருவரும் தோள் உரச பேச்சுக்கள் எதுவுமில்லாமல்

வெகு தூரம் மெதுவாய் நடந்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை இடையிட்டது விஷ்ணுவின் போன் கால்…

“விவேக் போலாமா!”

“அதுக்குள்ளையா, என்ன அவசரம்? இன்னும் கிளோசிங் டைம் இருக்கே”

“ராஜிக்கு மார்னிங் ஷிப்ட், இங்கேயிருந்து வீட்டுக்கு போக  இன்னும் இரண்டு மணி நேரம் எடுக்கும்!”

“ஓகே இப்ப வரேன்” என்றவன் திரும்பி வந்த வழியை பார்க்க

நீண்ட தூரம் நடந்திருந்தார்கள் என்பது அப்போது தான் தெரிந்தது.

அந்த கடற்கறையில் இவர்களை தவிர யாருமில்லை.

“போலாமா மயூரி.விஷ்ணு கூப்பிடுறான்”

சத்தியமாய் அங்கிருந்து செல்ல மனமில்லை அவளுக்கு!

“வேண்டாம்”

‘இங்கேயே இப்படியே இருக்கலாம்’ என கூற வேண்டியதை மனதில் அடக்கிக் கொண்டாள்.

“வேண்டாம்ன” குனிந்திருந்தவளின் முகத்தை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.

“வேண்டாம்ன வேண்டாம்னு அர்த்தம்!”

நகைத்துக் கொண்டான்.

“அவங்களை எல்லாம் முதலில் போக சொல்லட்டா?”

அவன் அவளை பார்த்த பார்வையில் தலை குனிந்து கொண்டாள். எங்கிருந்து வந்தது இந்த புது வெட்கம் எனத் தெரியவில்லை.

“என்ன ஆச்சு திடீர்னு” அவள் கைகளை பற்றிக் கொண்டான்.

“எனக்கா? அதை நீங்க சொல்றீங்களா!”

இத்தனை நேரமும் பிடித்திருந்த அவள் கையை விட்டவன் அவள் பேச்சு தந்த தைரியத்தில் அவளை அணைத்துக் கொண்டான்.

“என்னை கட்டிக்கிறியா டாக்டர்.மயூரவள்ளி?”

பதில் இல்லை.

“பத்திரமா உன்னை பார்த்துக்குறேன். உன் மனசு நோகாம நடந்துக்குறேன். உனக்கு ஒரு நல்ல புருஷனா, நல்ல ஃபிரண்டா காலம் முழுக்க இருக்குறேன்!”

நெஞ்சு தடதடத்தது அவளுக்கும்!

“கேட்குறேனில்ல!” பொறுமை அறவே இல்லை அவனிடத்தில்.

நெற்றியில் முத்தமிட்டபடி மறுபடியும் கேட்டவனை காக்க வைக்க அவளுக்கும் மனம் வரவில்லை.

“ஐ வாண்ட் டு லிவ் வித் யூ!”

என்றவள் மறுபடியும் அவன் நெஞ்சத்தில் தலைசாய்க்க, இறுகக் கட்டிக் கொண்டான் தன்னவளை!