Pokisha pezhai-4

கம்பீரமாக எழுந்து நின்ற மலைகளின் முதுகில் ஏறியபடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

மலை முழுவதும் பசுமையான மரங்கள் இருந்தது. எனினும் உச்சி வெயில் வேளையாததால் வெக்கை தெரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தனர். சில இடங்களில் நடைபயணம் சுலபமாக இருந்தது. ஆனால் பல இடங்களில், வெளியே தெரிந்த பெரிய பெரிய மரங்கள் மற்றும் பெரிய செடிகளின் வேர்களால் நடப்பது எளிதாக இல்லை.

அருகிலிருந்த செடி கொடிகளையும், மரத்திலிருந்து தொங்கும் கிளைகளைப் பிடித்துக் கொண்டும் முன்னேறிச் சென்றனர்.

அந்தப் பெரியவர் வேடத்தில் இருந்த இளைஞன் வெறும் உயரம் என்று சொல்லிவிட்டான். ஆனால் உயரம் என்பது இங்கே உயிரின் எல்லை தொடும் தூரமாக நடப்பவர்களுக்குத் தெரிந்தது.

அவர்கள் நால்வரது உடல் முழுவதும் புழுக்கத்தின் காரணமாக, நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது. செடி கொடிகள், புதர்கள் என்று காட்டு வழிப் பாதையில் வந்ததால், அவர்களது உடைகள் அழுக்கை அள்ளிப் பூசிய மாதிரி இருந்தது.

சற்று நேரம் எதையும் யோசிக்காமல் நடந்தனர்.

திடீரெனத் தனம், “ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றாள் சுருண்டு வரண்டு போன குரலில்.

முன்னே சென்று கொண்டிருந்த ரோமியோவும், ஸ்வீட் ஹார்ட்டும் நின்று, திருப்பிப் பார்த்தனர்.

கூடவே நடந்து வந்த மைக்கேலும், அதிகக் களைப்பினால் நிற்க முடியாமல் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு, “என்ன தனம்?”
என்று மூச்சி வாங்கியபடிக் கேட்டான்.

“ஒரு விஷயம் கவனிச்சீங்களா?” என்றவளுக்கும் மூச்சிரைத்தது.

“என்ன?” – ரோமியோ.

“இதுவரைக்கும் நாம நடந்து வந்த பாதையில, எவ்வளவு மரம் இருந்திச்சு. இப்ப பாருங்க, எப்படி இருக்குன்னு?” என்றாள் கண்களை ஒருமுறை அந்த வழியில் அலையவிட்டபடி.

அதன் பின்னரே, மற்ற மூவரும் நூற்றி எண்பது டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பிப் பார்த்தனர்.

மலைகளுக்கு வரைவிலக்கணம் ஏதும் கிடையாதுதான். ஆனால் இந்த மலைகளோ இலக்கணங்களையும் தாண்டித் தெரிந்தது.

ஒரு சில நேரத்திற்கு முன்பே மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

ஆனால் இப்போது சுழலில் எந்த ஒரு ஜீவராசிகளும் இருப்பது போன்ற உணர்வே வரவில்லை. மனிதர்களின் மணம்தான் சுவாசிக்க முடியவில்லை என்றால், இயற்கையின் மணமும் அவர்களுக்குத் தெரிய மறுத்தது. காரணம் என்னவென்று புரிய முடியவில்லை.

“அதேமாதிரி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட திரும்பிப் பார்க்கிறப்ப ரொம்ப தூரத்தில ஊரெல்லாம் தெரிஞ்சது. ஆனா இப்போ எதுவுமே தெரியலை” – தனம்.

“நீ என்ன சொல்ல வர்ற?” – மைக்கேல்.

“அந்தப் பெரியவர் சொன்னாருல்ல, மலையில ஒரு ஹைய்ட்க்கு அப்புறம் வேறவொரு உலகம் இருக்கும்னு. அது ஆரம்பிச்சிடுச்சோ??”

“தனம், இதைப் பார்த்தா அப்படித் தெரியலை. சாதாரணமா இருக்கு” – மைக்கேல்.

தனத்தின் கேள்விக்குப் பின்னர், சிறிது நேரம் யோசிக்கலாம் என்ற பேர்வழியில், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்றனர்.

“ரோமியோ நீ என்னடா யோசிக்கிற?” – மைக்கேல்.

“எனக்கென்னமோ தனம் சொல்றது கரெக்ட்-தான்னு தோணுது”

“எப்படிச் சொல்ற?” – மைக்கேல்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஏதாவது சத்தம் கேட்டுகிட்டே இருந்திச்சு. இப்போ அந்த சத்தமே இல்லடா”

“என்ன சத்தம் ரோமியோ?” என்று பயந்து, கேட்டாள் ஸ்வீட் ஹார்ட்.

“ஸ்வீட் ஹார்ட், காடுன்னா ஏதாவது அனிமல்ஸ் இருக்கும், இல்லை பேட்ஸ் இருக்கும். அப்படியே இல்லைனாலும் சின்ன சின்ன பூச்சியாவது இருக்கும். அந்த சத்தம் கேட்கும். ஆனா இங்க இவ்ளோ அமைதியா இருக்கு”

காதுகளைத் தீட்டிக் கொண்டு, இயற்கையின் பேச்சைக் கேட்கப் பார்த்தார்கள். ஆனால் அது தன்னுள் ஒளிந்திருக்கும் மௌனப் பிரமாண்டத்தைக் காட்டியது. அவர்களுக்கு அமானுஸ்யத்தின் நிசப்தத்தை உணர்த்தியது.

இயற்கையின் அமைதி, அவர்களது இதயத்திற்கு இதமளிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஓட்டை போட்டு, ஊடுருவிச் சென்று, உயிரின் கடைசி அணு வரை உதறச் செய்தது.

“அப்போ நாம அந்த உலகத்துக்குள்ள நுழைஞ்சிட்டோமா?” – தனம்.

“இருக்கலாம்” – ரோமியோ.

“பேசாம புக்க தேட வேண்டியதுதான்” – தனம்.

“ஆங்! நுழைஞ்சவுடனே புக் வச்சிருக்காங்க. இன்னும் கொஞ்சம் தூரம் போனப்புறம் தேடலாம். நீ வா ஸ்வீட் ஹார்ட்” என்று மேடான இடத்தில நின்றவன், கீழே நின்ற காதலிக்கு கரம் கொடுத்து உதவி செய்தான்.

ரோமியோ சட்டென இழுத்ததில், ஸ்வீட் ஹார்ட் அவன் மீது சரிந்தாள். விச்சித்திரக் காட்டுப் பாதையில் ஒர் வீட்டுத் தோட்டப் பூக்கள் தன் மீது கொட்டுவது போன்ற உணர்வு ரோமியோவிற்கு.

காலம்கெட்டகாலத்தில் காதல் எட்டிப் பார்த்தது. எனினும் இருவரும் இலக்கு நோக்கி எட்டுக்கள் வைக்க ஆரம்பித்தனர்.

****
ஆனால் அங்கேயே நின்றனர் மைக்கேலும் தனமும்…

“நீ என்ன பண்ணப் போற? இங்கே தேடப் போறியா?” – மைக்கேல்.

தனம் அமைதியாக இருந்தாள்.

“இன்னும் கொஞ்ச தூரம் போகலாம். வா” என்று அவளது கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

ஏனென்றே தெரியாமல் பின்னே திரும்பிப் பார்த்தவாறே நடந்து சென்றாள் தனம்.

அவர்களுக்கான பயங்கிற நேரங்கள் ஆரம்பமாக ஆரம்பித்தன. இதுவரை வாழா உலகம், விந்தைகளைக் கைகளில் வைத்துக் கொண்டு வரவேற்றது. இக்கணத்திலிருந்து, மாயத்தின் மடிகளில் நடக்கத் தொடங்கினார்கள்.

மேலும் சிறிது தூரம் கடந்தார்கள். ஆனால் இப்பொழுது மலையில் ஏறுவது போன்ற உணர்வு எழவில்லை. சமதளத்தில் நடப்பது போன்ற இருந்தது.

சமதளம் முழுவதும் கரடுமுரடான மிகச் சிறிய கற் பாறைகள் தெரிந்தது. அவைகள் மஞ்சளும் பளுப்பும் கலந்த வர்ணத்தில் இருந்தன. அவற்றில் சிலது, முழுவதும் பூமிக்கு மேலே தெரிந்தன. ஆனால் பல கற் பாறைகள் பாதி அளவே தெரிந்தது. மீதி பூமிக்கடியில் மறைந்து இருந்தன.

அதுபோக, ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் தெரிந்தன.
குன்றுகள் பழுப்பு நிறத்தில் இருந்தது. மேற்புறத்தில் சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருந்தது. குன்றுகள் மீது பச்சை வர்ணத்தில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.

ஒவ்வொரு குன்றைச் சுற்றியும், சாம்பல் வர்ண புற்கள் இருந்தன. ஓயாமல் ஓலமிட்டு வீசியபடி காற்று இருந்தும், புற்களில் எவ்வித அசைவும் இல்லை.

அடர்ந்த வனப் பகுதி மறைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே மரங்கள் இருந்தன. அந்த மரங்களும் சாதாரணமாக இல்லை. ராட்சத உயர, அகலங்களைக் கொண்டிருந்தது.

சிறிது ஓய்வு எடுக்கலாம் என எண்ணி, அவ்விடத்தில் அனைவரும் நின்று விட்டனர். தனம் ஓடிச்சென்று ஒவ்வொரு குன்றிலும் ஏறிப் பார்த்தாள்.

“என்ன தனம் பார்க்கிற?” – மைக்கேல்.

“எங்க ஏறிப் பார்த்தாலும் வேற எதுவுமே தெரியவில்லை” என்றாள் குன்றின் மீதேறி வாழ்ந்த உலகத்தை பார்த்து விடலாம் என்ற ஏக்கத்தில்.

மற்ற மூவரும் தனம் செய்ததைச் செய்து பார்த்தனர். அவர்கள் கண்களும் அதே சொன்னது. எந்த உயரத்தில் நின்று பார்த்தாலும், இதுவரை வாழ்ந்த உலகு தெரியவில்லை. வரைபடத்தில் இல்லாத ஒரு உலகத்துக்குள் வந்துவிட்டோம் என்று புரிந்தது.

இன்னும் சற்று தூரம் செல்லலாம் என்று முடிவெடுத்து நடந்தனர். ரோமியோவும் ஸ்வீட் கார்டும் முன்னே செல்ல ஆரம்பித்தனர்.

தனம் அதே இடத்திலே நின்றாள். அவளைக் கண்ட மைக்கேல், “நீ வரலையா?” என்று கேட்டான்.

“இங்கேயே தேடிப் பார்க்கலாம்னு தோணுது”

“தனம், அவ்வளவு ஈஸியால்லாம் கிடைக்காது. வா” என்று அழைத்துச் சென்றான்.

திரும்பவும், திரும்பிப் பார்த்தபடியே, தனம் நடந்து சென்றாள்.

கற் பாறைகளுக்கு இடையேயான நடைப்பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. ஏற்கனவே நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததால், இக்கணம் குதிங்கால்கள் எல்லாம் வலிக்கத் தொடங்கியது.

முன்னே சென்றுகொண்டிருந்த ஸ்வீட் ஹார்ட், அப்படியே அருகில் இருக்கும் குன்று ஒன்றில் அமர்ந்துவிட்டாள்.

“என்னாச்சு ஸ்வீட் ஹார்ட்?”

“முடியலை ரோமியோ. ரொம்ப கால் வலிக்குது”

“சரி, சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”

அவளது, முகம் கழுத்துகளில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்து விட்டான். பின், தரையில் அமர்ந்து, அவளது பாதங்களை பிடித்து விட ஆரம்பித்தான் காதலன் ரோமியோ.

“வீட்டுக்குப் போகலாம் ரோமியோ. இந்த இடம் பிடிக்கவே இல்லை” என்று சிணுங்க ஆரம்பித்தாள்.

அவளது கால் விரல்களுக்கு சொடுக்கு எடுத்து விட்டபடியே,
“ஸ்வீட் ஹார்ட், எந்த இடம்னா என்ன? நான் உன் கூடவே இருக்கேன்ல” என்று காதல் கொட்டினான்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த மைக்கேலும் தனமும், அவர்கள் இருக்கும் இடம் வந்தவுடன், நின்றனர்.

“ரோமியோ என்னாச்சுடா?” – மைக்கேல்.

“டயர்டா இருக்குன்னு சொன்னா. அதான்” – ரோமியோ.

“இதுக்கேவா?” என்று வாயை மூடிக் கொண்டு தனம் சிரித்தாள்.

காதல் பேசிடும் கணவன், மனைவியின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்து, தனத்தை முறைத்தான்.

“இருக்கும். ராணிமாதிரி வாழ வேண்டியவங்கள, இப்படிக் கொண்டுவந்து கஷ்டப்படுத்தினா??” என்றாள் அவனது முறைப்பு மூட்டிய கோபத்தில்.

“மைக்கேல்! அவளைச் சும்மா இருக்கச் சொல்லுடா” என்று கோபம் கொண்டான்.

“சும்மா இருக்கவா இங்கே வந்திருக்கோம் மைக்கேலு” என்று சொல்லி, முன்னேறி நடக்கப் போனாள் தனம்.

“நீ வரலையாடா?” – மைக்கேல்.

“அவன், ராணிக்கு சேவகம் செஞ்சிட்டு வருவான்” என்று நின்று, திரும்பிப் பார்த்துச் சொன்னாள்.

“ஏய்!” என்று சொல்லி, கோபமாக எழுந்து வந்தவனை மைக்கேல்,” விடுடா” என்று சொல்லித் தடுத்து நிறுத்தினான்.

“மைக்கேல், அவளை எதுவும் பேச வேண்டாம்னு சொல்லு” என்று ரோமியோ எச்சரித்தான்.

“சரி விடுடா” என்று மைக்கேல், ரோமியோவைச் சமாதானம் செய்தான்.

அதற்குள், “ரோமியோ, நீ இங்க வா” என்று ஸ்வீட் ஹார்ட்டும் அழைத்து விட்டாள். அந்த அழைப்பைக் கேட்டவன், மீண்டும் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

இன்னும் ரோமியோவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தனத்தை, “தனம், நீ வா” என்று சொல்லி, மைக்கேல் இழுத்துக் கொண்டே சென்றான்.

அவர்கள் சென்றவுடன்…

“கோபப்படாத ரோமியோ”

“என்னைக்கும் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாத ஸ்வீட் ஹார்ட். எனக்கு அது பிடிக்காது” என்று கேட்டுக் கொண்டே, மீண்டும் கால்களைப் பிடிக்க ஆரம்பித்தான்.

“சரி, சரி” என்று அவனது கேசத்தைக் கலைத்தபடிச் சொன்னாள்.

நாளைக்கு என்று மிச்சமில்லாமல் காதலிக்கும் காதலர்கள், இவர்கள்!

******

தனமும் மைக்கேலும் மேலும் நடந்தனர்,

சற்று தூரம் வந்தபின், குன்றுகள் நிறைந்தப் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையின் வழியில் சென்று தேட என்று குழப்பம் வந்தது? வலப்புற வழி நோக்கிச் செல்லவா? இல்லை, இடப்புற இடத்தின் வழிச் செல்லவா? என்று மனம் மூளையிடம் தலையா? பூவா? என்பது போல் கேட்டது.

“என்ன யோசிக்கிற?” – மைக்கேல்.

“எப்படிப் போகன்னு?” – தனம்.

“ம்ம்ம்”

“மைக்கேலு நீ சொல்லேன்”

“லெப்ட்ல போலாம் தனம், ஏன்னா? .. ” என்று முடிக்கும் முன்னே தனம் வலப்பக்கமாக நடக்கத் தொடங்கினாள்.

‘நான் சொன்னத, என்னைக்குத்தான் கேட்டிருக்கா?’ என எண்ணம் கொண்டபடி தனத்தின் பின் சென்றான்.

வலப்பக்கம் நெடுந்தூரம் சென்றவர்களுக்கு, அந்த அதிசய உலகத்தின் ஆரம்பம் ஒரு விசேட அதிர்ச்சியைத் தந்தது.

முழுவதும் வெற்றிடம்! இதில் எங்கே போய் புத்தகத்தைத் தேட? மறைத்து வைத்திருக்க வாய்ப்பு உள்ளது போல் அறிகுறிகள் கொண்ட இடங்களே இல்லாமல் இருந்தது.

மைக்கேல் சொன்னதுபோல இடப்பக்கம் போயிருக்க வேண்டுமோ? என்று தனம் நினைக்கத் தொடங்கினாள்.

அதே சமயத்தில்,

ரோமியோவும், ஸ்வீட் ஹார்ட்டும் தேடலைத் தொடர ஆரம்பித்தனர். இரு பிரிவாகச் சென்ற பாதையில் ரோமியோ இடப்பக்கத்தைத் தேர்ந்தெடுத்தான்.

பாதைகளின் நீளத்தைப் பாதங்களால் அளந்தபடி நடந்தார்கள். அவர்கள் நடக்கும் போதே, ஏதோ ஒரு ஒளி வெள்ளம், தாங்கள் செல்லும் திசையில் இருப்பது தெரிந்தது.

மிகச் சற்று நேரத்திற்குப் பிறகு, இருவரும் வந்து அடைந்த
இடம் அவர்களுக்கு வியப்புடன் பயத்தையும் தந்தது. அள்ளி அள்ளி வாரி இறைத்துக் காட்டிய விச்சித்திரம் கண்டு, ஸ்வீட் ஹார்டின் விழிகள் அல்லி மலர் போல் விரிந்தது.

அந்தப் பகுதி முழுவதும், அதாவது திரும்பிய திசையாவும் இளம் பச்சை வர்ண ஒளிக்கற்றைகள் வீசுவது போன்று இருந்தது. ஒளிக்கற்றைகள் எங்கிருந்து வருகின்றது எனத் தெரியவில்லை.

ஆகாயத்திலிருந்து வருகிறதோ என நினைத்து, அன்னாந்து பார்த்தனர். ஆனால் எப்படித் தலை நிமிர்த்திப் பார்த்தாலும் வானம் தெரிய மறுத்தது. எது அதை மறைக்கின்றது என்று புரியவில்லை?

அடர் பழுப்பு வர்ண மரங்கள். ஆனால் பச்சை ஒளியின் தொடுகையில், அது வெளிறிய பழுப்பு நிறமாகத் தோன்றியது. மரங்கள் அனைத்தும் பெரிய உயரங்கள், அகலங்கள் கொண்டவைகளாக இருந்தது. அடிமரத்தின் பட்டைகள் அத்தனை கரடுமுரடாகக் காட்சியளித்தது. சில பல மரங்களில் மரப்பட்டைகள் பிளந்து தொங்கின.

மரங்களை நிமிர்ந்து பார்த்தால், வெறும் கிளைகள் மட்டுமே இருந்தன. எந்தவொரு மரத்திலும் இலைகளே இல்லை. ஆனால் என்ன ஓர் ஆச்சரியம்? தரையில் இலைகளின் நிழல் பிம்பம் தெரிந்தது.

இன்னொன்று, எந்த இடத்திலும் சூரியனின் வெப்பத்தை உணர முடியவில்லை. முதலில் சூரியன் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை. ஆனால் எப்படி நிழல் மட்டும்?

எந்த வானிலையின் கீழ் நிற்கிறோம் எனத் தெரியாமல் குழம்பினார்கள்.

வானத்திலிருந்துதான் என்று அறிதிட்டு சொல்ல முடியாததால், உயரத்தில் எங்கோ இருந்து பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒளிக்கற்றைகள், அங்கே நின்ற இருவர்களையும் உரசிக் கொண்டே சென்று தரையில் விழுந்தது.

தரைப்பகுதியும் இளம் பச்சை நிறக் கம்பளத்தை விரித்தது போல் இருந்தது. பச்சை வர்ணமோ இல்லை அது போன்ற நிறத்தில் உள்ள ஒருவகைத் தாவரமோ என்று சந்தேகம் கொண்டு தொட்டுப்பார்த்தனர். அது புல், பாசிகளைப் போன்ற தாவரம் அல்ல!

பச்சைக் கம்பளத்தில் மேலே போடப்பட்ட தலையணைகள் போல, பெரிய கற் பாறைகள் இருந்தது. பெரிது என்றால், சராசரி மனிதன் முழங்கால் வரை மட்டுமே அப்பாறைகளின் உயரம். எல்லா பாறைகளும் வெளிப்புறம் கரடு முரடான பரப்பைக் கொண்டிருந்தன. உட்புறம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு பாறையிலும் எளிதில் கைகள் நுழைய வாய்ப்பில்லாத அளவிற்கு ஓட்டை இருந்தது. இந்தத் தூவாரம், சில பாறைகளில் பக்கவாட்டிலும், சில பாறைகளில் மேற்புறத்திலும் இருந்தது.

மற்றும், ஏதோ ஒரு குரல்… எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமல் வந்து காதிற்குள் மோதிக்கொண்டே இருந்தது.

ரோமியோ திரும்பி தன் காதலியைப் பார்த்தான். அவள் உடலின் தலை முதல் கணுக்கால் வரை ஒவ்வொரு உடல் செல்களாலும், அச்சமடைந்த உடல் மொழியால் பேசினாள்.

“ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.

“என்ன ரோமியோ இதெ…?” என்றவள் தொண்டைக்குழியில், அதன் பின்னே வரவேண்டிய வார்த்தைகள் எல்லாம் புதைந்து மடிந்தன.

“தெரியலையே! ஆனா இதுல ஏதோ ஒரு பாறைக்குள்ளதான் அந்த புக் இருக்கும்”

“இதுக்குள்ள எப்படித் தேட முடியும்?” என்று அவன் புஜங்களை தன் கைகளால் கட்டிக்கொண்டு கேட்டாள்.

யோசித்தான்.

“என்ன யோசிக்கிற?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“ஸ்வீட் ஹார்ட்” என்று அவள் கைப் பிடித்துக் கூட்டி வந்து, ஒரு பழுப்பு நிறச் சிறு பாறையின் மேல் அமர வைத்தான்.

“என்ன செய்யப் போற ரோமியோ?” என்று அவன் இரு கைகளின் மணிக்கட்டையும், இரு கரத்தால் இறுக்கப் பற்றிக்கொண்டு கேட்டாள்.

“ஒவ்வொரு ஓட்டையிலயும் செக் பண்ணப் போறேன்”

“ஐயோ வேண்டாம். உள்ளே என்ன இருக்குன்னு தெரியுமா? வேண்டாம் ரோமியோ” என்று மன்றாடினாள்.

“அப்புறம் எப்படிப் புக் கிடைக்கும்? ”

“வேண்டாம் ரோமியோ. பயமா இருக்கு”

“என்ன பயம்?”

“ஏதோ ஒரு சத்தம்… உனக்… உனக்கு கேட்கிதா? ”

அவள் சொல்வது போல், அவனின் செவிப்பறைக்குள்ளும் ஒரு சத்தம் கேட்டது. அதைச் சத்தம் என்று சொல்வதை விட, புழக்கத்தில் இல்லாத இசைக் கருவியை, வாசிக்கத் தெரியாதவர்கள் வாசித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஓலம்!

“நம்ம, வீட்டுக்குப் போகலாம்” என்று கண்கள் கலங்க ஆரம்பித்தாள்.

காதலி இதயம் பயந்து துடித்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அதைப் பார்த்தக் காதலன்,
அவள் கண்களில் தெரிந்த பயத்தை போக்க, இதழ்களில் பாதுகாப்பு பணி புரிந்தான்.

சிற்சில நொடிகளுக்குப் பின்,
காதலனையும் காதலையும் தள்ளி நிறுத்தியவள் கண்களில் பயம் ஓரளவிற்கு குறைந்திருந்தது. காதலன் கண்களில் ஒரு சிறு நிம்மதி.

குரல் நடுங்க, “ரோமியோ தேடு. ஆனா பார்த்துப் போ..” என்று அரை மனதாகச் சம்மதம் தந்தாள்.

“ஸ்வீட் ஹார்ட், ப்ளீஸ் பயப்படாம இரு. நீ பயந்தா என்னால எதுவும் பண்ண முடியாது. சரியா?”

“ம்ம்ம்” என்று தலை மட்டும் ஆட்டினாள்.

ரோமியோ, பொக்கிஷப் பேழைப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினான்.

பாறையின் ஓட்டைக்குள் கைகளை விட ஆயத்தமானான். பெரிய விட்டம் கொண்ட ஓட்டைகளெல்லாம் இல்லை. சிறு சிறு ஓட்டைகள்.

கையை நுழைத்தாலே, கண்டிப்பாக ஓட்டையின் கூரான ஓரங்கள் கைகளைக் கிழித்துவிடும். ஆதலால், மிகக் கவனமாகத் தேட ஆரம்பித்தான்.

“பார்த்து ரோமியோ” என்றாள் அவனின் மேல் ஒட்டுமொத்தப் பாசத்தையும் கொட்டியபடி!

அவளுக்கு பயம், உள்ளே ஏதும் சிறு விஷப் பூச்சிகள் இருந்தால் என்ன செய்வது என்று!

“ம்ம்ம்” – ரோமியோவின் பாதிக்க்கவனம் தேடலிலும், மீதிக் கவனம் அவன் தேவதை மீதும் இருந்தது.

காதல் அருமையானது. தன்னுயிர்க்காக ஒரு பெண் தவிக்கிறாள் என்ற எண்ணம் ஒரு ஆணை தடுமாற்றம் கொள்ளச் செய்யும்.
ரோமியோவும் தடுமாறினான்.

அதே நேரத்தில் மற்றொரு புறம்…

வெற்றிடத்தில் சிறிய நேரங்கள் நடந்தார்கள்.

இப்பகுதி முழுதும் கூட பச்சை நிற ஒளியால் குளித்துக் கொண்டிருந்தது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், அதைத் தவிர வேறு எதுவுமில்லை! வெற்றிடம்!!

வெற்றிடம் தந்த ஏமாற்றத்தை உணர்ந்தனர் இருவரும்.

மைக்கேல் தரையில் அமர்ந்துவிட்ட்டான். அவனுக்கு நம்பிக்கை போய்விட்டது. இதில் தேட என்ன இருக்கிறது?? என்ற மனநிலை வந்துவிட்டது.

“போ தனம்! அந்தப் பக்கமே போயிருக்கலாம்” என்று சலித்துக் கொண்டான்.

“விடு! நான் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரேன்” என்று சொல்லிக் கால் போன போக்கில் நடந்தாள்.

சற்று நேரத்தில்,

“மைக்கேல், இங்கே வா” என்று ஒரு சத்தம் தனத்திடமிருந்து.

சட்டென எழுந்தவன், பதறி அடித்துக் கொண்டு ஓடினான்.

“என்னாச்சு? என்னாச்சு தனம்?” என்று சத்தம் போட்டுப் பதறிய படிக் கேட்டான்.

“இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத ரியாக்ஷன்?”

“கூப்பிட்டியே அதான்… என்னாச்சுன்னு கேட்டேன்?” என்று சாதாரணக் குரலில் கேட்டான்.

“ஆங்! இவ்வளவு பீல் போதும்”

“சரி என்ன சொல்லு?”

“ம்ம்ம்” என்று யோசித்தவள், “மைக்கேலு என்னைக் கொஞ்சம் தூக்கேன்” என்று சட்டென்று கேட்டாள்.

“ம்குன்” என்று பேந்தப் பேந்த முழித்தான்.

“என்னைத் தூக்குன்னு சொன்னேன்” என்று ஒவ்வொரு வார்த்தையையும் தனித் தனியாகத் தெளிவாக உச்சரித்தாள்.

“ம்ம் சரி” என்றவன் மனதில், தனிமையும், தன் காதலின் அருகாமையும் சேர்ந்து முதல் நாளே தனத்தின் மனதை மாற்றிவிட்டது என்று நினைத்து சந்தோசம் கொண்டான்.

தன் காதலுக்குச் சொந்தமானவளை, மனதில் சுமந்து கொண்டிருப்பவளை, இடையைப் பற்றி, இரு கைகளாலும் அள்ளி எடுக்கப் பார்த்தான்.

அதற்குள் தோள்களில் சுள்ளென்று ஒரு அடி வைத்து, “ச்சீ வீடு. இப்படி இல்லை” என்றாள்.

“அடிக்காம சொல்லு தனம். வேற எப்படித் தூக்க?”

“இந்த… மரத்தில ஏறி மாங்கா பறிப்பாங்கள?”

“ம்ம்”

“அந்தமாதிரி தூக்கு”

மரத்தில் ஏறி மாங்காய் பறிப்பது போன்று அவள் மனதினைப் பறித்திட வேண்டும் என எண்ணியவாறே தூக்கினான்.

எதையோ எட்டிப் பிடிக்கப் பார்த்தவள், “இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்” என்று கேட்கக் கேட்க, அவனும் உயரே தூக்கினான்.

தனத்தின் இந்த நடவடிக்கை எதற்கு என்றால்? அவள் நின்ற இடத்தில அடர் பழுப்பு வர்ணத்தில் ஒரே ஒரு மரம் இருந்தது. அதுவும் சொர சொரப்பான பட்டைகள் கொண்டதாகவே இருந்தது. இதன் அடிமரம் கொஞ்சம் பெரிய அகலங்கள் கொண்டவையாக இருந்தது.

அந்த மரத்தின் உயரத்தில், ஒரு பொந்து இருப்பது தெரிந்தது. அதற்குள் தேடிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.

பறவைகள் ஏதும் இல்லாததால், இது பறவைக் கூடாக இருக்காது எனத் தோன்றியது.

வேறு என்னவாக இருக்கும் என்று தெரியாததால், ஒரு சிறு அச்சம் உடலெங்கும் பரவி ஓய்ந்து போனபின், கைகளை மரத்தின் பொந்துகளில் விட்டுத் தேடினாள்.

சற்று நேரத் தேடலுக்குப் பின்,

“இறக்கி விடு” என்றாள் குரலில் பெரிய பெரிய மகிழ்ச்சியைப் பூசிக் கொண்டு.

அவன் இருக்கும் நிலை கண்டு, “மைக்கேலு இறக்கி விடு” என்று தோள்களில் அடித்தாள்.

கிடைத்த அடியின் வலியில், சட்டென அவளை விட்டுவிட்டான். அவளும் கீழே குதித்து விட்டாள்.

ஒரு விழி அவளுக்கான காதலைச் சொன்னது, மற்றொரு விழி அவளிடம் காதலை யாசித்தது. இப்படித்தான் மைக்கேல் நின்றான்.

அவன் நிலை கண்டவள், “என்ன ரொமான்ஸா?” என்று கேட்டாள்.

“ம்ன்” என்றவன் இரு வழிகளிலும் காதல் போய், கலக்கம் வந்தது.

“என்ன ரொமான்டிக் மொமென்ட்டா??” என்று திரும்பவும் கேட்டாள்.

“ம்ம்ம், சிம்ப்டம்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்லுது”

“அது சிம்ப்டம்ஸ் இல்லை… உன் சிலாகிப்பு”

மைக்கேல் ‘ஙே’ என்று நின்று கொண்டிருந்தான். தனம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“தனம்”

“என்ன?”

“எங்கிட்ட என்ன குறை இருக்குன்னு என்னைய லவ் பண்ண மாட்டிக்க?”

“குறை இருந்தா லவ் பண்ணகூடாதா??”

கேள்விக்கு ஒரு சிலர் பதில் செல்லாமல் இருப்பார்கள், ஒரு சிலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். இவர்களைக் கூட சமாளித்துவிடலாம். ஆனால் ஒரு கேள்விக்கு மற்றொரு கேள்வியே பதிலாகத் தருபவர்களைச் சமாளிப்பது கடினம். தனம் இந்தப் பிரிவின் கீழ் வருபவள்!!

“அப்படியில்லை… ஏன் லவ் வரலை?”

“மைக்கேலு லவ் எப்போ? யார்மேல? எதுக்காக? வருதுன்னே சொல்ல முடியாது”

“ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதா தனம்”

“நான் அறிவாளிதான்”

“அதை நீயே சொல்லிக்கிட்டா எப்படி?” என்று வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.

“என்ன சொன்ன?”

“ஒண்ணுமில்லை”

“நீ சொன்னது கேட்டிச்சு. நான் உன்னைய முட்டாள்னு சொன்னா, நீ ஒத்துக்குவியா?”

“மாட்டேன்”

“அப்போ இன்னோன்னு சொல்றேன் கேட்டுக்கோ”

“சொல்லு”

“ஒரு அறிவாளி, நான் முட்டாளில்லைனு சொல்றதைக் கூட நம்பிடலாம். ஆனா ஒரு முட்டாள், நான் அறிவாளிதான் சொல்றதை நம்பக்கூடாது” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தாள்.

‘நான் அப்படி என்ன கேட்டேன். இப்படி இவ பேசுறதுக்கு?’ ஒரு கொப்பரை இடியாப்பத்தை ஒட்டுமொத்தமாக கைகளில் கொடுத்தது போன்ற உணர்வு மைக்கேலுக்கு.

“தனம், தனம்” என்று கூப்பிட்டுக் கொண்டே, அவள் பின்னே சென்றான் மைக்கேல்.

நின்று திரும்பியவள், “இன்னும் என்ன விளக்கம் வேணும்?” என்று கேட்டாள்.

“கொடுத்த வரைக்கும் போதும். இது என்ன கையில??”

ஆம்! தனத்தின் கைகளில் ஒரு சிறு பெட்டி. நல்ல தங்க நிறத்தில் பளபளப்புடன் இருந்தது. அதன் மேல் பச்சை வர்ண நிறங்களால் தீட்டப்பட்ட விதவிதமான சிறிய ஓவியங்கள் வரைந்திருந்தது.

சுற்றிலும் வீசிக் கொண்டிருந்த பச்சை வர்ண ஒளியினால், அந்தப் பெட்டி ஜொலித்தது.

“நானும் இனிமேதான் பார்க்கனும்” என்று திறந்தாள்.

உள்ளே ஒரு புத்தகம். அதன் மேல் ‘பொக்கிஷப் பேழை’ என்ற எழுத்துக்கள். சட்டென்று சந்தோஷத்தில் பெட்டியை மூடி விட்டாள்.

“தனம், புக் உனக்கு கிடைச்சிருச்சா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ம்ம்ம்”

“இன்னொரு தடவை காட்டேன். நான் நல்லா பார்க்கலை”

“அதெல்லாம் முடியாது” என்ற நடக்க ஆரம்பித்தாள்.

“இப்போ என்ன செய்யப்போற தனம் ?” என்றான், அவளுடன் நடந்தபடியே.

“அந்த ரோமியோவ வீட்டுக்கு அனுப்பப் போறேன்” என்று ரோமியோவைத் தேடிச் சென்றாள்.