Pokisha pezhai – 8

Pokisha pezhai – 8

மைக்கேலுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை நோக்கி மூன்று பேரும் நடந்தனர். அருகில் செல்லச் செல்ல, அப்பெண்ணின் தோற்றத்தில் விழி விரித்தனர்.

சுருள் சுருளாய் பழுப்பு நிறக் கூந்தல். அதில் பச்சை வர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கீரிடம். அந்த மலரின் வண்ணத்திலேயே முழு அங்கி போன்ற ஆடை. உடையெங்கும் சிவப்பு நிறத்தில் சிறிய சிறிய மலரின் அச்சுகள். அவைகளும் மின்னி மின்னி மறைந்தன. கண்களின் இமைப் பட்டைகள் சிவப்பு நிற ஜிகினாவால் நிரப்பப்பட்டிருந்தது. மேலும் உதடுகளிலும் சிவப்பு நிறத்திலாலான சாயம்.

வேறு எந்த ஒப்பனைகளும் இல்லை. ஆனால் இதுவே போதுமானதாக இருந்தது, அப்பெண்ணின் அழகை எடுத்துக் காட்ட!

“யாருடா இந்தப் பொண்ணு?” – ரோமியோ.

“தெரியலைடா” என்றான் மைக்கேல் பரிதவித்துக் கொண்டு.

“காதலனே! என்ன தெரியவில்லை என்று கூருங்கள். நான் விளக்கங்கள் அளிக்கிறேன்” என்று உதடுகளுக்கு வலிக்காமல், மைக்கேலை ஊடுருவும் பார்வைகள் கொண்டு பேசினாள், அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் ‘காதலனே’ என்ற அழைப்பில், தனம் அவஸ்த்தையை உணர்ந்தாள்.

“அப்போ இருந்து, இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டு இருக்குதுடா” என்று மைக்கேல் அப்பாவியாகச் சொன்னான்.

“காதலனே! யாரிடம் பேசுகிறீர்கள்?” என்று அந்தப் பெண் கனிவுடன் கேட்டது.

மூன்று பேருக்கும் ஆச்சர்யம் – நாம் இப்பெண்ணில் கண்களுக்குத் தெரியவில்லையே, நாம் பேசுவது இப்பெண்ணிற்கு கேட்கவில்லையே என்று!!

ஆனால் அப்பெண் பேசுவது, இவர்களின் காதினில் தெளிவாக விழுந்தது.

“ஆமா! உங்களுக்கு இவங்க மூணு பேரு நிக்கிறது தெரியலையா?” – மைக்கேல்.

“காதலனே! என் கண்களின் எல்லை உங்கள் வரை மட்டுமே!!”

“என் பேரு மைக்கேல். பேர் சொல்லியே கூப்பிடுங்களேன்” என்று அப்பெண்ணிடம் கோரிக்கை வைத்துப் பார்த்தான்.

“காதலனே! அது, இந்த இதயத்திற்கு இயலாத காரியம்” என்று அந்தப் பெண் கோரிக்கையை நிராகரித்தாள்.

‘ஆ’ என்று சொல்லி, வாய் மூடிக் கொண்டாள், தனம்.

‘நல்லா வேணும்’ என்பது போல் ரோமியோ, தனத்தைப் பார்த்தான்.

“தனம் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நீ புரிஞ்சுக்கணும்” என்று மைக்கேல் கெஞ்சினான்.

“காதலனே! யாரிடம் யாசிக்கிறீர்கள்? நான் உங்களைப் புரிந்து கொண்டேன். ஐயம் வேண்டாம்”

“இது உனக்கில்லமா…” என்று மைக்கேல் நொந்து கொண்டான்.

“காதலி என்று முறையாக அழையுங்கள்” என்று ஏக்கத்துடன் கூறினாள், அந்தப் பெண்.

‘இது வேறயா?’ என்பது போல் மைக்கேல் திணறினான்.

எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்த தனம், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “ரோமியோ, அவன்கிட்ட இதெல்லாம் என்னன்னு கேளு?” என்றாள்.

“தனம்…” என்று அழைத்து, தன் கையைப் பிடித்திருக்கும் பெண்ணின் கரங்களை உதறி விடப்பார்த்தான், மைக்கேல். ஆனால் இயலவில்லை.

“காதலனே! நீங்கள் என்னை விட்டுச் செல்லாதீர்கள்” என்று மைக்கேல் கரத்தை வலியப் பற்றிக் கொண்டாள்.

“ச்சே! ரோமியோ, நீயே கேட்டுச் சொல்லு?” என்றாள் உள்ளக் கொதிப்பில் இருந்த தனம்.

“சரி சரி” என்ற ரோமியோ, “என்னடா இதெல்லாம்?” என்றான் மைக்கேலைப் பார்த்து.

“தனம், நடந்து வந்துக்கிட்டே இருந்தேனா!! திடீர்னு எதிர்ல வந்து நின்னு, என் கையைப் பிடிச்சுக்கிட்டு. அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை”

அப்பெண் சிரித்துக் கொண்டாள்.

“ஓ!” – ரோமியோ.

“எதுக்கு வந்திருக்குன்னு கேட்டு சொல்லச் சொல்லு ரோமியோ” – தனம்.

“தனம், சத்தியமா எனக்குத் தெரியாது” என்று அப்பாவியாகச் சொன்னான்.

“காதலனே என்ன தெரியாது?” என்று அந்தப் பெண் குறுக்கே வந்தாள்.

“மைக்கேல், எதுக்காகன்னு அந்தப் பொண்ணுகிட்ட, நீ கேளுடா?” – ரோமியோ.

“ஆமா, நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க?”

“ஓ! அதுவா, உங்களை காதலிக்க”

‘டேய்! வேற ஏதாவது கேள்வி கேளுடா??… கேட்டுச் சொல்றேன்’ என்பது போல் மைக்கேல் ரோமியோவைப் பார்த்தான்.

“ம்ம்ம், காயின் எங்க தேடணும்னு கேளு?” என்று ரோமியோ காரியத்தில் இறங்கத் தொடங்கினான்.

“ஏங்க…” என்று மைக்கேல் ஆரம்பிக்கும் முன்னே…

“இல்லை… காதலி என்று விளியுங்கள்” என்றாள் அந்தப் பெண்.

“அய்யோ அதெல்லாம் வேண்டாம்”

“அப்படியென்றால் நான் பேச மாட்டேன்”

“மைக்கேல் சும்மாதான… அப்படியே கூப்பிட்டுக் கேளுடா” – ரோமியோ.

“ஏன்டா? உனக்கு என் லவ் பத்தி தெரியும்ல? அப்புறமும் ஏன் இப்படிப் பேசற?”

அந்தப் பெண் புரியாமல் விழித்தாள்.

“அது தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியணும்” என்று தனத்தைப் பார்த்துக் கூறிவிட்டு,” நீ கேளு” என்று மைக்கேலை தூண்டினான்.

மெதுவாகிப் போன குரலில், “தனம்… ஸாரி தனம்” என்றான். பின் பெரிய இடைவெளிவிட்டு… தயங்கித் தயங்கி, “காதலியே…” என்று ஆரம்பித்தான்.

“சொல்லுங்கள்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“காயின்… ச்சே நாணயத்தை எங்க தேடணும்?”

‘அங்கே’ என்பது போல் தூரத்தில் தெரிந்த ஆரஞ்சு நிற மின்மினி போன்ற மின்னிடும் பகுதியைக் காட்டியது, அந்தப் பெண்.

“வேற ஏதாவது கேட்கவா?” என்று ரோமியோவிடம் மைக்கேல் கேட்டான்.

“கேளுங்கள் காதலனே!”

“அட இரும்மா. நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன்” – மைக்கேல்.

“இங்க இருந்து அங்கே எப்படிப் போகணும்னு கேளு. அப்புறம்… ?” என்று நிறுத்தியவன், தனத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “அப்புறம்… அவங்க கூப்பிடச் சொன்ன மாதிரி கூப்பிட்டுக் கேளு” என்று சேர்த்துச் சொன்னான்.

‘இவன் வேற?’ என்று நினைத்துக் கொண்டே, “காதலியே! இங்கிருந்து அங்க எப்படிப் போகணும்?” என்று மைக்கேல் கேட்டான்.

“நான் அழைத்துச் செல்கிறேன்”

“ஆனா அங்க இருட்டா இருக்கே? எப்படித் தேட முடியும்?” – தனம்.

“காதலியே…” என்று மைக்கேல் ஆரம்பிக்கும் போது…

“ஒவ்வொரு கேள்விக்கும் இப்படித்தான் ஆரம்பிக்கனுமா?” என்று தனம் பொறுமினாள்.

“அந்தப் பொண்ணு கூப்பிடச் சொல்லுது. அவன் கூப்பிடறான். இதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று தனத்திடம் சொல்லிய ரோமியோ, “நீ கேளுடா” என்றான் மைக்கேலைப் பார்த்து.

“அங்க இருட்டா இருக்கே? எப்படித் தேட??” என்ற மைக்கேல், ‘காதலியே’ என்ற அழைப்பைத் தவிர்த்தான்.

“காதலனே! இன்னும் சற்று நேரத்தில் ஒளிவெள்ளம் வரும். அந்நேரத்தில் நாம் இருவரும் தேடலாம்” என்று மைக்கேலிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

சிரித்தான் ரோமியோ.

“இப்போ எதுக்கு சிரிக்கிற??” – தனம்.

“இல்லை, நீ அன்னைக்கு ‘நாங்க குரூப்புன்னு’ சொன்னேல்ல”

“ஆமா! அதுக்கென்ன இப்போ?”

“நீ சொன்னது கரெக்ட். மூணு பேரு இருந்தா அது குரூப்தான். பேர்(pair) கிடையாது”

ஏனைய பொழுதில் பதில் பேசிய தனம், இக்கணம் பதுங்கினாள்.

அப்பெண் மைக்கேலுடன் பேசிக் கொண்டிருந்தாள். தனம் பொறாமையுடனும், ஸ்வீட் ஹார்ட் பயத்துடனும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரோமியோ யோசிக்க ஆரம்பித்தான்.

நிற்கும் இடத்தின் நிலை புரிந்தது. சாம்பல் நிற புற்கள், ஆரஞ்சு மலர்கள் என்று! ஆனால் தூரத்தில் தெரியும் இடத்தின் ஆரஞ்சு வெளிச்சத்தை தவிர, அங்கு வேறேதும் இருக்குமா?? தெரியவில்லை.

ஆதுபோல இங்கிருந்து அங்கே செல்ல பாதைகள் இல்லை என்றே தோன்றியது. இடைப்பட்ட தூரம் எதனால் நிரம்பி இருக்கின்றது?? அதுவும் கூற இயலவில்லை.

“மைக்கேல், பாதையே இல்லையே, எப்படிக் கூட்டிட்டுப் போகும்னு கேளு”

“இங்க பாதையே தெரியலையே? நீங்க எப்படிக் கூட்டிட்டுப் போவீங்க?”

“காதலனே! அதற்குச் சில வழிமுறைகள் விதிமுறைகள் உண்டு”

“சொல்லுங்க”

“தாங்கள் சொல்லியது போல் பாதைகள் ஏதும் இல்லை. இடையில் இருப்பது பள்ளத்தாக்கு. ஆனால், நான் நடக்க நடக்க, படிக்கட்டுகள் உருவாகும். என் பின்னேயே நடந்து வாருங்கள். ஆனால் இதற்கு இரு நிபந்தனைகள் உண்டு”

“என்ன அது?”

“நீங்கள் என் கரத்தை விட்டுவிட்டால், படிக்கட்டுகள் மறைந்து விடும். கீழே விழ நேரிடும். கீழே விழுந்தால், உயிர் உதிரும். உடல் சிதறும்”

“சரி, இன்னொன்னு”

“படிக்கட்டுகளில் வரும்போதும், போகும்போதும் பின்னோக்கிச் செல்லக் கூடாது. மீறினால் உயிர் பிரியும்”

விதிமுறைகளைக் கேட்ட பின், யாரென்று தெரியாத இப் பெண்ணை எப்படி நம்பிச் செல்வது? என்று
நால்வரும் நடுக்குற்றனர்.

‘ஆச்சர்யம் காத்திருக்கிறது’ என்ற வார்த்தை மேல் நம்பிக்கை கொண்டு “மைக்கேல் போலாம்டா” என்று ரோமியோ முன்னெடுத்துப் பேசினான்.

“சரி ரோமியோ” என்றவன்… அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஏங்க! கூட்டிட்டுப் போங்க” என்றான்.

“வாருங்கள் காதலனே!” என்று அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தாள்.

பின்னேயே நடக்க ஆரம்பித்தார்கள்…

பள்ளத்தாக்கு என்று தெரியும். கீழே என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் வீழ்ந்தால் உயிர் போய்விடும் என்றும் தெரியும். இருந்தும் அப்பெண்ணை நம்பினார்கள்.

அந்தப் பெண், தன் காலை எடுத்து வைத்தாள். முதல் படிக்கட்டு வந்தது. இளம் பச்சை நிற ஒளியை பாய்ச்சிடும் படிக்கட்டு, அதன் இருபக்கங்களிலும் அணைவாக ஆரஞ்சு நிற ஒளியை பரப்பும் குட்டியானத் தடுப்புகள்.

இரண்டாவது படிக்கட்டுக்கு, அப்பெண் முன்னேறியதும், மைக்கேல் தன் நடுங்கும் கால்களை, முதல் படிக்கட்டில் வைத்தான்.

திரும்பி தனத்தை தன் கையினைப் பிடித்துக் கொள்ளும்படி கேட்டான். முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘நான் வர்றேன்டா” என்று மைக்கேலின் கையினை ரோமியோ பற்றிக்கொண்டான். ரோமியோவின் மற்றொரு கரத்தை ஸ்வீட் ஹார்ட் பற்றினாள். அதுவும் ‘ரோமியோ நான் கண்ண மூடிக்குவேன், நீதான் கூட்டிட்டு போகணும்’ என்று சிலபல கண்ணீர் துளிகளுக்குப் பின்தான்!

ஸ்வீட் ஹார்டின் கையினை தனம் பிடித்துக் கொண்டாள்.

மொத்தத்தில் ஒரு மனிதச் சங்கிலி போன்ற முறையில், அந்தத் தூரத்தைக் கடந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக படிக்கட்டுகளின் நீளம் அதிகமாகியது. நடக்கும் போது தடுப்புகளில் இடை உரசும் அளவிற்கு, மிகக் குறுகலான படிக்கட்டுகள்.

எனவே பக்கவாட்டில் நடந்தவாறே சென்றனர். ஆனால் படிகள் நல்ல கடினத் தன்மை கொண்டிருந்தது.

இருள் சூழ்ந்த இடங்கள், அச்சத்தைக் கூட்டியது. அடிக்கொருமுறை ரோமியோ மைக்கேலிடம், ‘அந்தப் பொண்ணோட கைய விட்றாதடா’ என்றான்.

ஒருவழியாக எதிர் முனைக்கு வந்து விட்டார்கள். முதலில் அந்தப் பெண்ணும், மைக்கேலும் படிக்கட்டிலிருந்து இறங்கினார்கள்.
அதன் பின் ரோமியோ, ஸ்வீட் ஹார்ட்.

கடைசியில் தனம் இறங்க முயற்சித்தாள். ஆனால் கால் எடுத்து வைக்கும் பொழுது, இருளின் காரணமாக கால்களைத் தவறாக வைத்து, இடறி விழப் பார்த்தாள்.

சட்டென மைக்கேல், தன் கைகளைப் பிடித்திருந்த பெண்ணின் கரத்தை பலம் கொண்டு உதறித் தள்ளிவிட்டான். பின், ‘தனம்’ என அழைத்து, அவள் கைப்பிடித்து உதவி செய்தான்.

தப்பித்து வந்தவளுக்கும் காப்பாற்றியவனுக்கும் நெஞ்சில் படபடப்பு இருந்தது.

“ஏன்டா இப்படிப் பண்ண? நான் ஹெல்ப் பண்ணிருக்க மாட்டேனா?” என்று ரோமியோ கத்தினான்.

‘ஏன்?’ என்று மைக்கேலுக்குப் புரியவில்லை.

அதன்பின்னர் நான்கு பேரும் பார்த்தது, காற்றில் எரிந்து மறையும் கற்பூரம் போல, தங்களுடன் நின்ற அந்தப் பெண்ணும், வந்து சேர உதவிய படிக்கட்டுகளும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தன.

இப்பொழுதுதான் மைக்கேலிற்கு ‘ஏன்?’ என்று புரிந்தது. தனத்தை தவிர மற்ற மூவருக்கும், ‘எப்படித் திரும்பிப் போக?’ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

error: Content is protected !!