தனம் மட்டும், “அப்பாடா அந்தப் பொண்ணு போயிடுச்சி” என்று நிம்மதியாகச் சொன்னாள்.
மூன்று பேரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர். தனமும், அவர்களது பார்வையைக் கவனித்தாள்.
‘என்ன சொல்லி, இவர்களைச் சமாளிக்க?’ என்று நினைத்தவள், “இல்லை… அந்தப் பொண்ணு இருந்தா… அதுக்கும் புதையல்ல பங்கு கொடுக்கணுமே? அதான் சந்தோஷப்பட்டேன்” என்றாள்.
“யாரு… ?? நீ… ? கொடுக்கிறேன்னு சொன்ன பெரியவருக்கே கொடுக்க மாட்டேன்னு சொன்னவ… நீ இந்தப் பொண்ணுக்கு கொடுக்கப் போறியாக்கும்? நம்புற மாதிரி சொல்லு?” – ரோமியோ.
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு?”
“பிரச்சனை எனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும்தான். நல்லா பாரு, படிக்கட்டு போயிருச்சு. இனிமே எப்படித் திரும்பிப் போக?”
தனத்திற்குப் புரிந்தது. எனினும், “ஏதாவது ஆபத்துன்னா, புக் ஹெல்ப் பண்ணும்னு அந்தப் பெரியவர் சொன்னாரில்லை?” என்றாள்.
“அதுக்கு காயினை எடுக்கணும்”
“அதெல்லாம் எடுக்கலாம்” என்று சொல்லி நடக்கத் துவங்கினாள்.
“தனம்… இருட்டில போகாத. வெளிச்சம் வந்தப்புறம் தேடலாம்” என்று மைக்கேல் அக்கறையாகச் சொன்னான்.
சலிப்புடன், “ம்ப்ச் சரி” என்று சொல்லி அமர்ந்துவிட்டாள்.
மற்றதெல்லாம் வெளிச்சம் வந்த பிறகே தெரியும்!
மிகவும் குளிர்ந்தது. இது இரவா? பகலா? என்று தெரியாத வேளை!! எங்கு பள்ளத்தாக்கு ஆரம்பிக்கிறது? எங்கு இந்தப் பரப்பு முடிகிறது? என்று தெரியவில்லை.
ஆதலால் அப்படியே அமர்ந்து விட்டார்கள். ஏதோ கற்கள் மேல் அமர்ந்த உணர்வு. நடந்து வந்த பாதையில் இருந்தது போன்ற கூழாங்கற்களோ??என்ற கேள்வி எழுந்தது.
குளிர் காற்று வீசியது.
தனம், தன் பைக்குள் இருந்த சிறு துண்டை எடுத்து தோள்களைச் சுற்றி மூடிக் கொண்டாள்.
“ஸாரி தனம்” என்றான் தனத்தின் அருகில் அமர்ந்திருந்த மைக்கேல்.
“விடு” என்று தன் உள்ளங்கைகளை அரக்கப் பரக்க தேய்த்து, குளிரைச் சமாளிக்க பார்த்தாள்.
ஸ்வீட் ஹார்ட் குளிர் தாங்காமல் வெலவெலத்துக் கொண்டிருந்தாள்.
ரோமியோ தன் மனைவியை இழுத்து, தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான். காதலாகி கசிந்து உருகும் கணவனின் கைவளைவு தந்த
கதகதப்பில் காதலி உறங்கும் நிலைக்குப் போயிருந்தாள்!!
இதைக் கண்ட தனம் என்ற கன்னியின் மனம், அன்பான அத்தை மகன் நெஞ்சத்தில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது.
சற்று நேரத்தில்…
ரோமியோவைத் தவிர மற்ற மூவரும் தூங்கிவிட்டனர்.
அவனது எண்ணமெல்லாம், ‘யாரந்த பெரியவர்?’ ,’ இப்பொழுது வந்து சென்ற பெண் யார்?’, ‘இவர்கள் இருவருக்கும் சம்பந்தம் இருக்குமோ?’
‘வேறேதும் அசம்பாவிதம் நடந்து விடுமோ?’ என்று கேள்விகள்.
மேலும் நாழிகைகள் கழிந்தன…
அந்தப் பெண் சொன்னது போல் வெளிச்சம் வந்தது. ஆனால் அதுதான் பகலா? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது.
அதே சாம்பல் நிறப் புல்வெளிகள். அதிலிருந்த மினுங்கும் ஆரஞ்சு வர்ண பூக்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது தெரிந்த ஒளி, இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள்.
சராசரி மனிதனின் உயரத்தில் இருக்கும் மரங்கள். அதுவும் வெள்ளை நிறத்திலான அடிமரம் மற்றும் கிளைகள். அதில் மிகச் சிறிய குடை வடிவமுடைய இலைகள். அதுவும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வர்ணத்தில் இருந்தது.
எங்கிருந்தோ வந்த சாம்பல் நிற ஒளிக்கற்றை, தேடுவதற்கு ஏதுவான ஒளியை உமிழ்ந்தன. அப்படி உமிழப்பட்ட ஒளியானது, பெரிய வட்டவடிவமான அந்தப் பகுதியின் எல்லைகளிலிருந்து வழிந்து, பள்ளத்தாக்கில் விழுந்து மடிந்தன.
இன்னொன்று, தரை முழுவதும் இருந்தது கூலாங்கற்கள் அல்ல! அவையாவும், ‘வெள்ளைக் கல் நாணயத்தைப்’ போன்ற அமைப்புடைய கற்கள்.
அதே விட்டம்!
அதே வட்டம்!
அதே வடிவம்!
அதே வர்ணம்!
இதில்தான் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நாணயம் இருக்கிறது என்று தெரிந்தது. என்ன ஒன்று? தேட வேண்டிய பரப்பு அதிகமாக இருந்தது.
மற்றும் தூரத்தில் பெரிய வெள்ளைத் திரை ஒன்று ஆடிக்கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டு, தேட ஆரம்பித்தார்கள். எடுத்து திருப்பிப் பார்த்தக் கல்லை, அதே இடத்தில் வைத்து விட்டு, அடுத்த கல்லிற்குச் சென்றார்கள்.
தனமும் ரோமியோவும் தான் தேடினார்கள். சிறிது நேரம் தேடி இருப்பார்கள்.
அக்கணம், ஒரு சிறு ஆட்டம் கண்டது அந்தப் புல்வெளி நிலப்பரப்பு! அடுத்த நொடி கற்கள் எல்லாம் இடமாறின.
தூரத்தில் இருந்தன பக்கத்தில்.
பக்கத்தில் இருந்தவை தூரத்தில்.
வடக்கில் இருந்தது தெற்கில்.
தெற்கில் இருந்தவை வடக்கில்.
கிழக்கில் இருந்தது மேற்கில்.
மேற்கில் இருந்தவை கிழக்கில்.
வலப்புறம் இருந்தது இடப்புறத்தில்.
இடப்புறம் இருந்தவை வலப்புறத்தில்.
‘என்னடா இது வேறயா?’ என்பது போல் ரோமியோ, மைக்கேலைப் பார்த்தான்.
“சரி விடு விடு… தேடுங்க” என்று மைக்கேல் ஊக்கப்படுத்தினான்.
ரோமியோ தேட ஆரம்பித்துவிட்டான். தனம், நின்ற இடத்திலே நின்றாள். ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று நினைத்து மைக்கேல் எழுந்து வந்தான்.
“என்னாச்சு தனம்?”
“எரிச்சலா இருக்கு மைக்கேலு”
“சரி வா, நானும் தேடுறேன்” என்று அவள் கைப் பிடித்து இழுத்தான்.
“நீதான் நியாயம் பார்ப்பேல” என்றாள், அவனின் கையை உதறிவிட்டு.
“அதெல்லாம் பார்க்கல. வா” என்று இருவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர்.
ரோமியோ கண்டுகொள்ளவில்லை.
தேடினார்கள். ஒரு கால அளவிற்குப் பின் கற்கள் இடமாறிக் கொண்டே இருந்தன. திரும்பவும் தேடினார்கள். மீண்டும் இடமாற்றம். மீண்டும் தேடல்!
கணுக்காலின் வலி, முதுகெலும்பின் முணங்கல், கழுத்தின் கதறல் என அனைத்தும் சேர்ந்து கண்கள் கலங்கின மூவருக்குமே!
இதெயெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வீட் ஹார்ட் எழுந்து வந்தாள்.
“ரோமியோ நானும் தேடவா?”
“வேண்டாம் ஸ்வீட் ஹார்ட், குனிஞ்சி உட்கார்ந்து தேடறதில வலி உயிர் போகுது. நீ பேசாம இரு”
“இல்லை. நானும் தேடுவேன்” என்று கொஞ்சம் தூரம் தள்ளி குனிந்து அமர்ந்து தேடினாள்.
ஒரு இரண்டு நிமிடம் சென்றிருக்குமா?? தெரியவில்லை காலா அளவு!
ஸ்வீட் ஹார்ட், “நான் காயின் எடுத்திட்டேன்” என்று கையில் ஒரு வெள்ளைக் கல் நாணயத்துடன் எழுந்து நின்றாள்.
மற்ற மூவருமே, வெடுக்கென்று எழுந்து நின்று விந்தையாக அவளைப் பார்த்தனர்.
அவர்கள் பார்வையின் பொருள் இதுதான். பள்ளிக்கூடம் போக மாட்டேன், பரிட்சை எழுத மாட்டேன் என்று சொன்ன பிள்ளை, ‘நான்தான் கிளாஸ் பர்ஸ்ட்’ என்று சொன்னாள் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது!
“ரோமியோ” என்று அழைத்தாள்.
வெற்றிப் புன்னகை ஒன்று அவன் முகத்தில் தழுவியது.
ஸ்வீட் ஹார்ட்டைத் தாண்டி நின்று தேடிக் கொண்டிருந்த தனமும், மைக்கேலும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
“ரோமியோ” என்ற காதலியின் குரலில், காதலன் வெற்றிக்கு, தான் உதவியிருக்கிறோம் என்ற பெருமை தெரிந்தது.
இன்னும் இன்னும் புன்னகை விரிந்து கொண்டே சென்று, ரோமியோ இரு கைகளையும் விரித்து வைத்துக்கொண்டு காதலியை அழைத்தான். அவளும் ஓடி வந்தாள்.
அவள் ஓடி வர வர…
அவன் பார்வை அவளின் மேல் இல்லை.
பின்புறம் இருந்த திரையின் மேல் இருந்தது.
அவனின் புன்னகை மாறியது. புன்னகை சுருங்கியது.
பின் முற்றிலும் மறைந்தது.
“ஸ்வீட் ஹார்ட் சீக்கிரம் வா” என்று அலறினான். அவன் அலறலைக் கண்ட மைக்கேலும் தனமும் ‘இவனுக்கு என்னாச்சு?’ என்பது போல், பின்புறம் திரும்பிப் பார்த்தனர்.
ஆடிக்கொண்டிருந்த வெள்ளைத் திரையில், அந்த பெண்ணின் முகம் தெரிந்தது. மேலும் வாய் திறந்து வைத்துக் கொண்டு, அந்தத் திரை நகர்ந்து வந்து கொண்டிருந்தது.
“ஸ்வீட் ஹார்ட் ஓடி வா” என்று அவள் கைகோர்த்து ஓடுவதற்காகக் காத்து நின்றான்.
அவள் வந்தவுடன், அவளிடமிருந்து நாணயத்தை வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டு, முதுகில் மாட்டிக் கொண்டான். பின் அவள் கையைப் பிடித்து, “மைக்கேல், தனம் சீக்கிரம் வாங்க” என்று சொல்லி, ஓட ஆரம்பித்தான்.
ஓடி வந்த தனமும் தனது பையை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டு, திரும்பவும் ஓட ஆரம்பித்தாள்.
அதன் பின்னே மைக்கேல்.
இவர்களைத் துரத்திக் கொண்டே அந்த வெள்ளைத் திரை. அதில் அங்கங்கே சிவப்பு வர்ண பூக்கள். அந்தப் பெண்ணின் ஆடையில் இருந்ததே அதே பூக்கள்! கண் மூக்கு வாய் என்று எல்லாம் அப்பெண்ணின் சாயலில்!!
ஓடினார்கள். உயிரைக் காப்பற்றிக் கொள்ள எடுக்கும் ஓட்டம். ஓடும்போதுதான் ரோமியோவிற்குத் தோன்றியது… அங்குதான் படிக்கட்டுகளே இல்லையே… என்ன செய்ய? எப்படி இங்கிருந்து தப்பிக்க? இருந்தும் ஓடினான்!!
அந்த புல்வெளி நிலத்தின் எல்லைக்கு வந்து விட்டான். ஓடிவந்த வேகத்தின் அதிர்வில், முன்னே சாயப்போகும் உடலை… கால்களை அழுத்தி ஊன்றி நிறுத்தினான்.
அடுத்த எட்டு எடுத்து வைத்தால், பள்ளத்தாக்கு! மேலும் புல்வெளி நிலத்திலிருந்து வரும் வெளிச்சம் மட்டுமே! பள்ளத்தாக்கு பகுதியில் இருள் சூழ்ந்தே இருந்தது.
ஸ்வீட் ஹார்டின் கையை விட்டுவிட்டு, தன் காலை எடுத்து வைக்கப் போனான்.
“ரோமியோ என்ன பண்ற?” என்று தடுத்தாள்.
“வேறு வழியில்லை. பேசாம இரு” என்று சொல்லி, தன் ஒரு காலை எடுத்து வைத்துவிட்டான்.
ஒருவித நம்பிக்கை!
அவன் கீழே விழவில்லை. காலுக்கடியில், அதே குறுகலான படிக்கட்டு முளைத்துவிட்டது. அதுவும் சுற்றிலும் சிவப்பு நிறத்தில் மின்னிடும் நட்சத்திரங்கள் தோன்றி படிக்கட்டு வந்தது. துணிந்து அடுத்த காலையும் எடுத்து வைத்தான். மற்றொரு படிக்கட்டு வந்தது.
ஆனால் தடுப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் அளவில்லாத சந்தோசம்!
“ஸ்வீட் ஹார்ட்… நீயும் பாஸ்டா வா”
“முடியாது ரோமியோ. என்னால கண்டிப்பா முடியாது” என்று அழுதாள்.
“ஸ்வீட் ஹார்ட் சொன்னா கேளு” என்று கெஞ்சினான். பின் அதட்டினான்.
இரண்டுக்கும் கட்டுப்பட்டு, கண்களை மூடிக் கொண்டு காலை எடுத்து வைக்கப் போனவள் முகத்தில் உயிர் பயம் தெரிந்தது. இறுக மூடிக்கொண்டிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அவள் காலை எடுத்து வைக்கப் போன நொடி, ரோமியோ அவளைத் தன் இரு கைகளில் ஏந்திக் கொண்டான்.
அப்பொழுதும் கண் திறக்கவில்லை.
“கண்ண திற ஸ்வீட் ஹார்ட்”
“வேண்டாம்” என்று அழுதாள்.
மேலும், “இப்படியே கூட்டிட்டுப் போயிடு ரோமியோ” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
“சரி அழாத” என்று அவளை ஆறுதல் சொல்லி, அடுத்தடுத்த எட்டுக்கள் எடுத்து வைத்தான்.
ரோமியோவைப் பார்த்துக் கொண்டே வந்த தனமும், துணிந்து படியின் வழியில் இறங்கினாள்.
அதன் பின்னே வந்த மைக்கேலும் இறங்கப் பார்த்தான். கால் வைக்கப் போன நொடி, சட்டென்று முதல் படிக்கட்டு மறைந்தது. ‘கீழே விழுந்திருப்போம்’ என்ற அதிர்ச்சியில் பின்னே சென்று விட்டான்.
சரி, நேரடியாக இரண்டாவது படியில் கால் வைப்போம் என்று பார்த்தான். அதுவும் மறைந்தது. கீழே இருள் சூழ்ந்த பள்ளத்தில் விழுந்து விடுமோ என்ற பயம் வந்தது. இருந்தும், மூன்றாவது படியில் கால் வைக்க முயற்சி செய்தான். அதுவும் மறைந்து போனது.
இது அந்தப் பெண்ணின் வேலையோ என நினைத்து, மைக்கேல் நடுங்கி விட்டான்.
அதற்குள் தனமும், ரோமியோவும் ஏழெட்டு படிகள் கடந்து சென்று கொண்டிருந்தனர்.
“ரோமியோ. எனக்கு படிக்கட்டு வரலைடா” என்று மைக்கேல் கத்தினான்.
நின்ற இடத்தில் இருந்து, தனம், ரோமியோ திரும்பினர். முதல் மூன்று படிக்கட்டுகள் மறைந்திருந்தன.
“ஏதாவது செய்டா?” – மைக்கேல்.
புரியவில்லை. என்ன செய்யவென்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் விளங்கவில்லை?
“சீக்கிரம்டா” என்றான் மைக்கேல், பின்னே வாய் பிளந்து ஓடி வரும் திரையைக் கண்டு பயந்து.
“நான் வர்றேன். நான் வந்து பார்க்கிறேன்” என்றாள் பதற்றத்துடன் தனம்.
“தனம் நில்லு” – ரோமியோ.
“ஏன்?”
“அந்தப் பொண்ணு சொன்னது நியாபகம் இல்லையா? வர்றப்ப போறப்ப பின்னாடி போகக் கூடாது”
“அதுக்காக” என்று அலறினாள்.
“வெயிட் பண்ணு யோசிக்கலாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான்.
“அய்யோ ஏன் இப்படி?” என்றவளுக்கு, ஏனோ அத்தை மகனின் நிலையை நினைத்து கண்ணீர் வந்தது. நிலைகொள்ளாமல் தவித்தாள்.
“தனம், அவன் சொல்றதைக் கொஞ்சம் கேளு” என்று மைக்கேல் கெஞ்சிக் கேட்ட பின்னரே, தனம் ஒரு நிலைக்கு வந்தாள்.
ரோமியோ யோசித்தான். அந்தப் பெண்ணின் வேலையோ? என எண்ணிக் கலங்கினான்.
“நீ யோசிச்சுக்கிட்டே இரு, நான் போறேன்” – தனம்.
“தனம் ஒரு நிமிஷம்… ப்ளீஸ்” என்று தனத்திடம் சொன்னவன், “ஸ்வீட் ஹார்ட் கொஞ்சம் இறங்கு” என்றான் தன் கைகளில் ஏந்தி இருக்கும் காதலியைப் பார்த்து!
“பயமாருக்கு ரோமியோ. என்னால முடியாது” என்று அவள் பங்கிற்கு, அவள் ஆரம்பித்தாள்.
“ஸ்வீட் ஹார்ட் புரிஞ்சுக்கோ. அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்” என்று, காதலியை ஏந்தி கொண்டிருக்கும் வலக் கரத்தை எடுத்து விட்டான்.
“வேண்டாம் ரோமியோ… இறக்கி விடாத” என்று இன்னும் இறங்க மறுத்து அடம்பிடித்தாள்.
இவர்கள் உரையாடலைப் பார்த்த தனம், “நான் போறேன் ரோமியோ” என்று செல்லப் போனாள்.
சட்டென்று தன் வலக் கரம் கொண்டு, தனத்தின் கைப்பிடித்து நிறுத்தினான். அவனின் பிடியை மீறிக் கொண்டு போக முடியாமல் தனம் தவித்தாள்.
இடக் கரத்தால் காதலியின் இடையை மட்டும் பிடித்துக் கொண்டு, “இப்போ நில்லு” என்று சொன்னான்.
வேறு வழியில்லாமல், ஸ்வீட் ஹார்ட் காலை கீழே ஊன்றி நிற்கப்பார்த்தாள். ஆனால் அவளுக்கு படிக்கட்டே வரவில்லை.
“என்ன இது ரோமியோ?” என்று அரண்டு போய் அழத் தொடங்கினாள்.
ரோமியோவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. தன்னுடன் சேர்த்து நிறுத்திக் கொள்ளாமா? என்று நினைத்தான். ஆனால் இதற்கும் இரண்டு விடயங்கள் தடுத்தன.
ஒன்று மிகக் குறுகலான படிக்கட்டு, மற்றொன்று தனக்கும் படிக்கட்டு மறைந்து விட்டால் என்ன செய்வது?
யாரையும் காப்பாற்ற முடியாதே என்று கலங்கி நின்றான்.
தனக்காகவும் தனத்திற்காவும் தோன்றிய படிக்கட்டுகள், ஏன் மைக்கேலுக்கும், ஸ்வீட் ஹார்ட்டிற்கும் வரவில்லை என்று குழம்பி நின்றான்.
ஒருபுறம்…
“விட்றாத ரோமியோ பயமாருக்கு” என்று கண்களில் காதலையும் கண்ணீரையும் சிந்திக் கொண்டு, அவனது ஒரு கைப் பிடியில் அந்தரத்தில் தொங்கும் காதலி…
மறுபுறம்…
“என்னை விட்டிடு ரோமியோ. நான் மைக்கேலுகிட்ட போறேன்” என்று முரண்டு பிடித்து கதறும் தனம்…
எதிரே…
பின்புறம் தன்னை விழுங்க வரும் வெண் திரையைப் பயத்துடன் பார்த்தவாறு, “ஏதாவது செஞ்சி, என்னைக் காப்பாத்துடா” என்று நடுங்கும் குரலில் மைக்கேல்…
இவர்களில் யாரைக் காப்பாற்றப் போகிறான் கதாநாயகன் ரோமியோ?