கனவு – 28 எபிலாக்
ஆறு வருடங்களுக்கு பிறகு,
பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை வேளையில் பறந்துக்கொண்டிருக்கும் வாகனங்களோடு வாகனமாய் வந்த வெள்ளை நிற டேக்சி ஒன்று டாக்டர் ரிச்சர்ட் –ன் வீட்டின் முன்னே நின்றது. அதில் இருந்து திமுக் என குதித்தாள் குட்டி தேவதை ஜஸ்வந்திகா.
காலை கதிரவன் தன் வேலையை முடித்து வீட்டிற்கு செல்லும் பொழுது இதமாய் பரப்பும் அந்த ரம்மியமான இருள் சூழும் நிறத்தை தன் மேனியில் அடர்த்தியாய் கொண்ட அந்த ஐந்து வயது தேவதைக்கு தங்க நிறத்தில் பட்டுப்பாவாடை உடுத்தியிருந்ததில் கோவில் கருவறையில் இருக்கும் தெய்வ சிலையை ஒத்திருந்தாள்.
“ஜஸ்வா குட்டி. மெதுவா இறங்கு டா!” என சொல்லிக்கொண்டே பின்னால் இறங்கினார் அவளது அப்பா.
தன் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டவர், வண்டியில் அம்ர்ந்திருந்த தன் மனைவியை மெதுவாக இறங்குமாறு கூறி கையை நீட்டினார். நிறைமாத கர்ப்பிணியான அப்பெண் தனது கணவனது கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டே இறங்கிட, மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.
“ஹலோ மிஸ்டர் துருவன். வெல்கம் வெல்கம். உங்களுக்காக தான் வெயிட்டிங்” என வரவேற்றார் டாக்டர் ரச்சர்ட்.
“சாரி சார். வைஃப் கிளம்ப கொஞ்சம் லேட் ஆகிருச்சு” – துருவன் மன்னிப்பு வேண்ட,
“ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ்டர் துருவன். தங்கச்சி நீங்க உட்காருங்க. இதோ இந்த டிவி –ல உங்களுக்கு எல்லாமே தெரியும் சரிங்களா?” என்று அவளை அங்கிருந்த சோஃபாவில் அமரவைத்தவன் துருவனையும் அவளோடு அமர வைத்துவிட்டு,
“வாங்க ஜஸ்வா குட்டி!” என குட்டி பெண்ணை பார்த்து அழைத்தார்.
அவளோ,
“நான் வரமாட்டேன் போங்க! எனக்கு ஹாய் சொல்லவே இல்ல” என்று தன் மழலை மொழியில் அழகாய் சினந்துக்கொண்டாள்.
“அடடே… என் பட்டுக்குட்டிக்கு கோவமா? அங்கிள் சாரி! ப்ளீஸ்!” என தன் இருகாதுகளையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார் டாக்டர் ரிச்சர்ட்.
“அவங்க அப்பா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டதால உங்கள அவகிட்ட மன்னிப்பு கேட்க வச்சிட்டாளே சுட்டி!” என ரிச்சர்ட் –ன் மனைவி ப்ளெஸ்ஸியும் அவர்களோடு இணைந்துக்கொண்டார்.
கோபித்துக்கொண்ட ஜஸ்வந்திகாவை சமாதானப்படுத்த ஒரு சாக்லேட்டும் முத்தமும் பரிசளித்த டாக்டர் ரிச்சர்ட், அவளை அழைத்துக்கொண்டு அந்த தனியறைக்கு சென்றார்.
அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் வெளியறையில் இருந்த தொலைக்காட்சி செயலானது. அதில் வரும் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ஜஸ்வந்திகாவின் பெற்றோரும், ரிச்சர்ட் -ன் மனைவியும்.
“இப்ப உங்க மனசு ரொம்ப அமைதியா இருக்கு. ரிலக்ஸ். ரிலக்ஸ். இப்ப நீங்க என்ன பார்க்குறீங்க? அப்படியே சொல்லிட்டு வாங்க பார்ப்போம்” என ரிச்சர்ட் கேட்க, அவனுக்கு எதிரே அந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஐந்து வயது குழந்தையோ அவனுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தது.
“நான்… நான் அம்மா கையில இருக்கேன்” – ஜஸ்வந்திகா.
“வெரி குட். உங்க பேரு என்ன மா? என்ன சொல்லி கூப்பிடுறாங்க?” – ரிச்சர்ட்.
“ஜஸ்வந்திகா”
“வெரி குட். இப்ப நீங்க ஜஸ்வந்திகா –வா இருக்கீங்க. அம்மா கையில குட்டி குழந்தையா இருக்கீங்க. இதுக்கு முன்னாடி என்னவா இருந்தீங்க? அது தெரியுதா உங்களுக்கு? எங்க என்கிட்ட சொல்லுங்க பார்ப்போம்” – ரிச்சர்ட்.
“உடம்பு கிடைக்கல எனக்கு!” – ஜஸ்வந்திகா.
“அப்படியா? அப்ப உடல் இல்லாம சுத்திட்டு இருக்கீங்களா? உங்களால் எல்லாரையும் பார்க்க முடியுதா?” – ரிச்சர்ட்.
“ம்ம்ம்… முடியுது. எனக்கு என்னோட அக்கா –வ ரொம்ப பிடிக்கும். அவ அடுத்த பிறவி எடுத்துட்டா. என்னால பிறக்க முடியல” – ஜஸ்வந்திகா.
“ஓ… அக்கா –னா ரொம்ப பிடிக்குமா? ஏன் மா உங்களால பிறக்க முடியல?” – ரிச்சர்ட்.
“நான் விஷம் குடிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டேன்” – ஜஸ்வந்திகா.
“சரி சரி… அதனால பிறக்க முடியாம இருந்தீங்களா?” – ரிச்சர்ட்.
“ஆமா!” – ஜஸ்வந்திகா.
“அப்ப உங்க பெயர் என்ன?” – ரிச்சர்ட்.
“அர்ஜுன்” – ஜஸ்வந்திகா.
“வெரி குட். அர்ஜுன் –ஆ உடம்பு இல்லாம அலைஞ்ச பிறகு எப்படி மா ஜஸ்வந்திகா –வா பிறந்தீங்க” – ரிச்சர்ட்.
“எனக்கு கட்டளை வந்துச்சு” – ஜஸ்வந்திகா.
“என்ன கட்டளை மா?” – ரிச்சர்ட்.
“என்னால என் அக்காவும் அவ கட்டிக்கப்போறவரும் இறந்துட்டாங்க. நான் செஞ்ச தப்ப புரிஞ்சிக்கிட்டேன். அதனால அவங்களோட கட்டளைய ஏற்றுதான் என் பிறப்பு இருக்கணும்னு நினைச்சிருந்தேன். செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செய்ய நினைச்சேன்” – ஜஸ்வந்திகா.
“வெரி குட். கட்டளை கிடைச்சிதா மா?” – ரிச்சர்ட்.
“ஆமா. என்னால பிரிஞ்ச என் அக்காவும் மாமாவும் என்னோட அடுத்த பிறவில என்னாலையே சேருவாங்க. அதுக்கான கட்டளை தான் அது” – ஜஸ்வந்திகா.
“என்ன கட்டளை மா? கட்டளை யாரு கொடுத்தாங்க?” – ரிச்சர்ட்.
“என் அக்காவுக்கு பதிலா நான் போய் பிறக்கணும். அதுதான் அனேகனோட கட்டளை” – ஜஸ்வந்திகா.
“அனேகன் யாரு மா? அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?” – ரிச்சர்ட்.
“அனேகன் தான் ஷ்யாம். என் அக்கா சகிய கட்டிக்க இருந்தவர்” – ஜஸ்வந்திகா.
“ஓ… சரி மா. இப்ப அப்படியே மறுபடியும் ஜஸ்வந்திகா –வா நீங்க வர்றீங்க. இப்ப உள்ள நினைவுகள் எல்லாம் வந்துக்கிட்டே இருக்கட்டும். அர்ஜுன் நினைவுகள் எல்லாம் அப்படியே மறந்துருச்சு. ஜஸ்வந்திகா வாங்க. வாங்க. வெரி குட்” என கூறி ஹிப்னாட்டிசத்தில் இருந்து அவளை விழிக்க வைத்தார் டாக்டர் ரிச்சர்ட்.
இதை தொலைக்காட்சி திரையில் பார்த்துக்கொண்டிருந்த துருவனும் அவனது மனைவி சீதாவும் கண்கள் விரிந்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களது ஆச்சரியத்திற்கு சிறிதும் குறைவின்றி தனது கண்களும் விரிய அந்த கல்யாண மண்டபத்தின் மணமகன் அறையில் அமர்ந்திருந்தான் திரவியம்.
அப்பொழுது மடிகணினியை அணைத்த அனேகன், “என்ன திரு? ரகசியம் தெரிஞ்சதா?” என கேட்டான்.
“என்ன ப்ரோ பண்ணி வச்சிருக்கீங்க? நிஜமாவே நீங்க மனுஷன் தானா?” – திரவியம்.
“ஹாஹாஹா” – அனேகன்.
“அட சிரிக்காதீங்க ப்ரோ. மரியாதையா தெளிவா சொல்லுங்க சொல்லிட்டேன். அவன் அவன் பீதியில இருக்கான். சிரிச்சு சிரிச்சு கடுப்பேத்திக்கிட்டு” – திரவியம்.
“க்கூல் மேன். சில ஆத்மாக்களுக்கு பிறக்க விருப்பம் இல்லைனாலும் கட்டளையின் பெயருல பூமியில ஜனனம் ஆகும். அந்த ஃபார்முலா யூஸ் பண்ணிதான் அர்ஜுன்கிட்ட ரெக்வஸ்ட் கொடுத்தேன். அர்ஜுன் தன்னோட ஜனன விவரத்தை, அதாவது எந்த மாதம் சீதாவோட கருவுக்குள்ள அவன் வரப்போறான்னு தான் ஒய்ஜா போர்ட் ப்ராக்டீஸ் பண்ண அன்னைக்கு என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு போனான்.” – அனேகன்.
“ஏதோ ஃபேஸ் புக் –ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த மாதிரில சொல்லுறீங்க! இது பேய் லுக்கு ப்ரோ!!” – என விழிகளை உருட்டினான் திரவியம்.
மீண்டும் வயிறு குழுங்க சிரித்தான் அனேகன். அப்பொழுது கதவு உடையும்படி திறந்துக்கொண்டு வந்த அம்ரிதா,
“ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க? இன்னும் நீ வேஷ்டி மாத்தலையா அனேகா!” என கேட்டாள்.
“ஹேய் அம்மு. நீ கல்யாண பொண்ணு. இப்படியெல்லாம் அங்கேயும் இங்கேயும் ஓடக்கூடாது” – திரவியம்.
“என்ன ஓட வைக்க கூடாதுனு மாப்பிள்ளை சார்கிட்ட சொல்லுங்க” – அம்ரிதா.
“சாரி பேபி. நான் மறந்தே போய்ட்டேன். உன்னோட ப்ரெண்ட்ஸ் –க்கு இண்ட்ரோ கொடுக்கறதா சொல்லியிருந்தே இல்லயா?! இரு இரு வேஷ்டி மாத்திட்டு வர்றேன்” – அனேகன்.
“ம்ம்ம்… வெயிட் பண்ணுறேன். சீக்கிரம்” என தன் கைகளை கட்டிக்கொண்டு அங்கேயே நின்றாள் அம்ரிதா.
“சரி பேபி! நீ போ. நான் மாத்திட்டு வர்றேன்!” – அனேகன்.
“இல்ல இல்ல. நான் போனா மறுபடியும் தோஸ்த் ரெண்டுபேரும் டாக்டைம் –அ ஸ்டார்ட் பண்ணிடுவீங்க! கையோட உன்ன கூட்டிட்டுதான் போவேன். வா” – அம்ரிதா.
“அம்மு!” – அதிர்ந்தான் திரவியம்.
“என்ன திரு? பயப்படாத உன்ன மாத்த சொல்லமாட்டேன். ம்ம்.. சீக்கிரம் அனேகா! எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க!” – அவசரித்தாள் அம்ரிதா.
“ஹேய் என்ன டி! அடெம் டீசிங் –ஆ?! நீ இங்க நின்னா நான் எப்படி மாத்துவேன். நீ போ நான் உடனே வர்றேன்” – அனேகன்.
“அதெல்லாம் முடியாது. நீ மாத்து” – பற்கள் தெரியாமல் அடக்கி சிரித்தாள் அம்ரிதா. அவளது சிரிப்பில் திரவியமும் இணைந்துக்கொள்ள,
“திரு! நீங்க ஏன் சிரிக்கிறீங்க?” – பாவமாய் கேட்டான் அனேகன்.
“இல்ல ப்ரோ… நீங்கதான் எங்க எல்லாரையும் மண்டைய பிச்சிக்க வைப்பீங்க. உங்களையும் மண்டைய பிச்சிக்க வைக்க ஒரு ஆளு இருக்குனு நினைக்கறப்ப,அந்த கண்கொள்ளா காட்சியை என் கண்ணு முன்ன பாக்குறப்ப….. அப்பப்பா… பேரானந்தமா இருக்கு ப்ரோ!” – வாய்விட்டு சிரித்து ஹய் ஃபை அடித்துக்கொண்டனர் திரவியமும் அம்ரிதாவும்.
“படுபாவிகளா?! பலி வாங்குற நேரமா இது?” – அனேகன்.
“அட சீக்கிரம் ப்ரோ! அம்மு எம்புட்டு நேரமா காத்திருக்கு?!” என திரவியம் கூற,
“திரு! இங்கதான் இருக்கீங்களா! இந்தாங்க உங்க பையன். கொஞ்சம் நேரம் சமாளிங்க. என்ன வேலை செய்யவே விடமாட்டேங்கறான்” என அழுதுக்கொண்டிருக்கும் குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றாள் ஆஷ்ரிதா.
தத்துப்பிள்ளையாயினும் பெற்றப்பிள்ளையாகவே பாராட்டி சீராட்டி வளர்க்கும் தன் மகனிற்கு அர்ஜுன் என பெயரிட்டிருந்தனர் திரவியம் தம்பதியினர். அவனது அழுகையை அடக்கி சமாதானப்படுத்திக் கொண்டே வெளியே வந்தான் திரவியம். திரவியத்தின் தந்தையுள்ளத்தை ரசித்தபடியே நின்றிருந்த அம்ரிதாவிடம்,
“அடுத்த வருஷம் நானும் இப்படிதானே நம்ம குழந்தைய சமாதானப்படுத்திட்டு இருப்பேன்?” என கேட்டான் அனேகன்.
இதை கேட்டு புதுப்பெண் அவளுக்கு வெட்கம் பூத்திட, சிவந்துபோய் நின்றிருந்தாள் அம்ரிதா.
“அதோ! அச்சு உன்ன கூப்பிடுறா பாரு!” என அனேகன் கூற,
“அப்படியா?” என அறையின் வெளியே வந்து பார்த்துவிட்டு “இல்லையே அனேகா” என்றாள் பெண்.
வேகமாக ஓடிவந்த அனேகன், தன் அறைகதைவை பூட்டி உள்ளே தாழிட்டுக் கொண்டவன், “இதோ ஐந்து நிமிஷத்துல வேஷ்டி மாத்திட்டு வந்திடுறேன் பேபி” என உள்ளிருந்து கூவினான்.
அவன் கதவை மூடுகையில் “டேய் டேய்…” என கதவை தட்டிய அம்ரிதா, “கிள்ளாடி டா நீ!” என சிரித்துக்கொண்டு வாசலிலேயே அவனுக்காக காத்திருந்தாள்.
கதவை மூடியவன் டாக்டர் முதல் வேலையாக டாக்டர் ரிச்சட் –க்கு அழைப்பு கொடுத்தான்.
“ஹலோ அனேகன். நாங்க கிளம்பிட்டோம். அங்க தான் வந்துட்டு இருக்கோம்” – ரிச்சர்ட்.
“சீக்கிரம் வாங்க ரிச்சர்ட். துருவன் ஃபேமிலி ஓகே தானே?” – அனேகன்.
“தே ஆர் ரியலிங் ஃபீலிங் தேங்க்ஃபுல் ஃபார் யூ! உங்க சுயநலத்துக்காக மட்டும் யோசிக்காம, சீதாவுக்கு கிடைக்க இருக்கற குழந்தை பாக்கியம் இல்லாம போய்டக்கூடாதுனு நீங்க யோசிச்ச அந்த ஒரு நொடிக்காகவே உங்களுக்கு கோடானு கோடி நன்றி சொல்லணும்னு துருவன் சொன்னாரு. அவங்க ஃபேமிலியும் என்னோடதான் உங்க கல்யாணத்துக்கு வர்றாங்க. ரொம்ப சந்தோஷமா வர்றாங்க!” – ரிச்சர்ட்.
முறுவலித்த அனேகன், “தேங்கஸ் ரிச்சர்ட். என் கல்யாணத்துக்காக அமெரிக்காவுல இருந்து வந்த உங்களுக்கு வேலை கொடுத்துட்டேன்” – அனேகன்.
“ஹே மேன்! இதுல என்ன இருக்கு. இருங்க ப்ளெஸ்ஸி உங்ககிட்ட பேசணுமாம்” என அலைபேசியை தன் மனைவியிடம் கொடுத்தார் ரிச்சர்ட்.
“ட்யூட்… உங்கள பார்க்க வந்துட்டே இருக்கோம். நேர்ல விடிய விடிய பேசலாம். இப்ப போய் ரெடி ஆகுங்க. ஏற்கனவே அம்முவோட ஆப்ரேஷன் காரணமா கல்யாணம் ஒரு வருஷம் தள்ளி போச்சு. அடுத்து அச்சுவுக்குதான் முதல்ல கல்யாணம் பண்ணணும்னு ரெண்டு வருஷம் போச்சு. அப்பறம் கொஞ்சம் நாள் ஜாலியா லவ் பண்ணி லவ்வர்ஸ் எக்ஸ்பீரியஸ் –அ அனுபவிச்சிக்கிறோம்னு மூனு வருஷத்த கடத்தி அம்மு மேடம் எக்ஸ்ட்ரா ஒரு டிகிரியும் வாங்கிட்டாங்க. இப்படியே ஆறு வருஷம் கடந்து இன்னைக்கு கல்யாணத்துல வந்து நிக்குறீங்க. இப்பவும் இப்படி ஃபோன் பேசிட்டே இருந்தீங்க அம்மு கடுப்பாகிறப்போறா” – ப்ளெஸ்ஸி.
“அய்யய்யோ! ஆமா ட்யூட். அவ வெளியில தான் நிக்கறா. ஐந்து நிமிஷத்துல வர்றேன் –னு சொன்னேன். நீங்க வாங்க. நேர்ல பேசிக்கலாம்” என வேகமாய் அழைப்பை துண்டித்த அனேகன் தான் கூறியதுபோல ஐந்து நிமிடத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை தோரணையில் வெளியே வந்தான். அவனை பார்த்து,
“செமயா இருக்க அனேகா!” என்ற அம்ரிதா, அவனது கைக்குள் தன் கையை வளைத்து பிடித்துக்கொண்டு தனது நண்பர்களிடத்தில் அழைத்துச் சென்றாள்.
இருவரும் ஜோடியாக வருவதைக் கண்ட ஸ்ரீதேவி (Sri Navee),
“அடடே! அருமையான ஜோடி பொருத்தம்” என கூறி தூரத்தில் இருந்தே சொடுக்கிட்டு திருஷ்டி கழித்தார்.
அவர்களது அருகில் வந்ததும், “என்ன ஸ்ரீ அக்கா, என் அனேகன் எப்படி இருக்கான்?” என கேட்டாள் அம்ரிதா.
“வாண்டு… புருஷன பேரு சொல்லுற” என அம்ரிதாவின் தலையில் கொட்டு வைக்க செல்வதுபோல அவளது தலையை வருடிவிட்டு “சந்தோஷமா இரு செல்லம்” என்றார் ஸ்ரீதேவி.
அதற்கு சிரித்துக்கொண்டே “ஹேப்பி ஸ்ரீ அக்கா” என்று கூறிய அம்ரிதா, அனேகனை நோக்கி,
“அனேகா! இதுதான் ஸ்ரீ அக்கா. உன்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கேனே?” என கூற அனேகனோ அவருக்கு தன் வணக்கத்தை புன்னகையோடு தெரிவித்தான்.
“இது பானுமதி அம்மா (Banumathi Jeyaraman). எப்பவும் என்னை டியர்னு தான் கூப்பிடுவாங்க” என்று அம்ரிதா கூற அவருக்கும் இன்முகமாய் வணக்கம் கூறினான் அனேகன்.
“இது கலை விஷ்வா ப்ரோ! (Kalai Vishwa) என்னோட காலேஜ் டேஸ் –ல எனக்கு ரொம்ப சப்போர்ட் –ஆ இருந்த என்னோட சீனியர்” என அவரை அறிமுகப்படுத்தினாள் அம்ரிதா.
“கங்ராட்ஸ் ப்ரோ! என் தங்கச்சிய நல்லா பார்த்துக்கோங்க!” என அனேகனுக்கு கைக்கொடுத்தான் கலை விஷ்வா.
“கண்டிப்பா ப்ரோ!” என்ற அனேகன், அவருக்கு அடுத்து நிற்கும் ஷக்தியை பார்த்து,
“இவங்க ஷக்தி (Shakthi) தானே?!” என யூகிக்க
“அட என்ன உங்களுக்கு தெரியுமா அண்ணா?” என தன்னை ஊர்ஜிதப்படுத்தினாள் ஷக்தி.
“ஓ… நல்லா தெரியுமே! அம்முவோட மொபைல் –ல உங்க போட்டோ பார்த்தேன்! அச்சுவோட பெஸ்ட் ப்ரெண்டாமே நீங்க. அச்சு திருவ கல்யாணம் பண்ண மாட்டேங்கறனு சொல்லவும் அவளுக்கு மிரட்டல் எல்லாம் கொடுத்ததா கேள்வி பட்டேன்!?” என கண்ணடித்தான் அனேகன்.
“இப்ப என்னை பார்த்து நீங்க கண் அடிக்கறத கூட அம்முகிட்ட போட்டுக் கொடுப்பேன் ப்ரோ” என கூறி கல கலவென சிரித்தாள் ஷக்தி.
“ஆஹா!!! ஒன்னுகூடிட்டாங்கயா!!” என அனேகன் இழுக்க,
“ஹாய் டாக்டர், நான் ஷானிஃப் (shaniff). ஹேப்பி மேரிட் லைஃப்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஷானிஃபிடம் கைக்குழுக்கி”பேர் சொல்லியே கூப்பிடுங்க. வீ ஆர் ப்ரெண்ட்ஸ் க்னோ” என்றான் அனேகன்.
“இதுதான் அனேகன்! எந்த ஈகோவும் கிடையாது. எப்படி நம்மாளு?” என்ற அம்ரிதா, தன் தோழி சசியை (Sasi) நோக்கி,
“சசி… சப்பைர் (Sapphire) எங்கே?” என கேட்டகவும்,
“இதோ வந்துட்டேன் –ல” என்று கூறி ஒரு பூங்கொத்தை அனேகனது கையில் கொடுத்துவிட்டு “இதுதான நம்ம ஹீரோ சார்? யூ ஆர் க்ரேட்டு –ங்க… அம்மு உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கா” என்றார்.
பூங்கொத்தை வாங்கிக்கொண்ட அனேகன், “தேங்க் யூ சோ மச் யா” என்றான்.
“ப்ரோ! நாம எல்லாரும் உட்கார்ந்து பேசலாமா? மத்த ப்ரெண்ட்ஸ் வர்றதுக்கு எப்படியும் ஒரு பதினைந்து நிமிஷம் ஆகும்” என்றான் கலை விஷ்வா.
“அடேங்கப்பா! பேபி இன்னும் உன் லிஸ்ட் முடியலையா? குட்டி குட்டி வாண்டுகள் –ல ஆரம்பிச்சு, உன் வயசு பசங்க, அம்மா வயசுல இருக்கறவங்கனு தொடர்ந்து வயசுல மூத்த பாட்டிவரை ப்ரெண்ட்ஸ் பிடிச்சிருக்க?!” என அம்ரிதாவை ஆச்சரியமாய் பார்த்தான் அனேகன்.
“இந்த தேவதைய பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா?” என கேட்டவாறு அங்கு வந்த சுகா அம்மா (Suga Librarian) அங்கு இருந்த அனைவருக்கும் பழரசம் கொடுத்தார்.
“இது சுகா அம்மா. நாங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் –காக ஃப்ரீ லைப்பர்ரி ஒன்னு எங்க வீட்டு காம்ப்பவுண்ட்லையே வச்சிருக்கோம். அதுல சுகா அம்மா தான் லைப்ரரியன்” என அனேகன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான்.
அவருக்கு அருகே இருந்த சித்ரா (Chitra Balaji), நான் சித்ரா. அனேகன் எனக்கு தம்பி மாதிரி. குழந்தைகளோட குழந்தைகளா நானும் தினமும் லைப்ரரில புக்ஸ் படிப்பேன். புக்ஸ் இல்லைனா என் உலகமே நின்னுடும்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது அங்கே வந்த கவிதா (கவிதா சுப்பரமணி) “கண்ணுகளா, அய்யர் இப்ப வந்திடுவாரு. தயாராகுங்க பா. அப்பறமா உட்கார்ந்து பேசலாம். சரியா” என கல்யாண தம்பதிகளான அனேகனிடமும் அச்சுவிடமும் கூறிவிட்டு செல்பேசியில் பேசியவாரே அடுத்த வேலையை கவனிக்க சென்றுக்கொண்டிருந்தார்.
அவரது வார்த்தைக்கு பணிந்த அனேகனும் அம்ரிதாவும் தன் நண்பர்களிடம் சிறு புன்னகையை சிந்திவிட்டு, மங்கல சடங்குகளுக்கு தயாராக புறப்பட்டனர்.
அந்த நட்பு கூட்டத்தில் இருந்து அலைபேசியில் பேசியவாரே வெளியே வந்துக்கொண்டிருந்த கவிதா, அவருக்கு எதிரே வந்துக்கொண்டிருந்த பத்மா மோகன்(Padma Mohan) மற்றும் செல்வி ஈசன்(Selviesan) ஆகியோரோடு நேருக்கு நேர் மோதிக்கொண்டார். அதில் பத்மாவின் கையில் இருந்த பூங்கொத்து காற்றில் பறந்து சென்று தம்பதிகளின் மீது விழுந்து அவர்களை ஆசிர்வதித்தது.
எதிரே வந்தவரை முட்டிக்கொண்ட கவிதா பதறிப்போய் “அடடே! சாரி மா. சாரி மா. வலிக்குதா. பூங்கொத்த தட்டிவிட்டுடேனா?” என கேட்க, அவரது முதுகில் கைவைத்த கலை (Art Pearl) “அது சரியான இடத்துக்கு தான் போய் சேர்ந்திருக்கு கவிதா அம்மா. கொஞ்சம் அங்க பாருங்க” என பூக்களின் அபிஷேகத்தில் மூழ்கி நிற்கும் அனேகனையும் அம்ரிதாவையும் காட்டி சிரித்தாள்.
இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் புன்னகை வண்ணமையாய் உணர்வுகளின் சின்னமாய் காட்சியளித்தது அந்த திருமண மண்டபம்.
நல்ல நேரத்தோடு அய்யரும் வந்துவிட, திருமணத்திற்கு முன்பான சடங்குகள் அனைத்தும் நடந்தேறியதும், அக்னிக்கு முன்பாக அம்ர்ந்திருக்கும் அனேகனுக்கு அருகே அம்ரிதாவை அமர வைத்தாள் ஆஷ்ரிதா.
“அச்சு. இந்திரா எங்கே?” – அம்ரிதா.
“இங்க தானே இருந்தா??” என தேடிய ஆஷ்ரிதா, முன்வரிசையில் அவளைக் கண்டுக்கொண்டு “ஆங்… அதோ அங்க இருக்கா பாரு!” என கூறினாள்.
மணமேடையில் இருந்த அம்ரிதா கை சைகை காட்டி இந்திராவை மேடைக்கு அழைக்க, அனேகனது அம்மாவோ “ அச்சு. யாரு மா அந்த பொண்ணு?” என கேட்டார்.
“அவங்க எங்க ஸ்கூல் –ல வர்க் பண்ணுறாங்க மா. நானும் அச்சுவும் ப்ரொஃபெஷ்னலா எந்த ஒரு விஷயத்தையும் அவங்கிட்ட டிஸ்கஸ் பண்ணிதான் செய்வோம். ரொம்ப நல்ல கேரக்டர். எங்களுக்கு க்ளோஸ் டு ஹார்ட் –னு சொல்லலாம்” என்றாள் ஆஷ்ரிதா.
தன் இன்முகம் காட்டி மேடையேறிய இந்திராவை தன் அக்காவிற்கு அருகேயே நிற்கவேண்டுமென பணித்தாள் அம்ரிதா. அவளின் அன்பை மெய்ச்சும் பார்வை ஒன்றை பரிமாறிய இந்திராவின் முன் ஒரு தாம்புலம் நீட்டப்பட்டது.
அதில் மஞ்சள் பூசிய முழு தேங்காயின் மேல் மங்களாமாய் வீற்றிருந்த்து தங்க மாங்கள்யம். அதன் அருகே இருந்த பூவிதழ்களை எடுத்துக்கொண்டவள் அய்யரின் “கெட்டி மேளம் கெட்டி மேளம்” எனும் சத்ததிற்காக காத்திருக்க, அந்த ஒளியும் கிடைக்கப்பெற்றது.
அந்நேரம் சரியாக உள்ளே நுழைந்த ரிச்சர்ட் மற்றும் துருவனின் குடும்பத்தினர் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து தங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் அந்த அர்ச்சதை பூதவிதழ்கள் மூலம் மணமக்களிடம் அனுப்பி வைக்க, முன்ஜென்மத்தில் தவறவிட்ட பந்தத்தை அந்த மஞ்சள் கயிற்றினால் இறுக பிணைத்துக் கட்டினான் அனேகன்.
தனது கழுத்தில் தன்னவனுக்கான பெண் எனும் சாட்சியை கண்டு பூரித்து கண்ணீர் சிந்திய அம்ரிதா, நிமிர்ந்து அனேகனை காண, அவனோ அவளை கண்களாலே காதல் புறட்டியடிக்க அணைத்துக் கொண்டான்.
ஜென்மங்கள் கடந்து இன்னல்கள் களைந்து வென்ற அவர்களது புன்னிய காதலால் தங்கள் பிறவிப்பயனை அடைந்தனர் அனேகனும் அம்ரிதாவும். இனி அவர்களது வாழ்வில் எல்லாம் சுவர்க்கமே!
***சுபம்***