Ponnoonjal-1

பொன்னூஞ்சல்
ஊஞ்சல்-1

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா,
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
– நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி.

பொருள்:
அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், முனிவர்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!
**********************************

ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டம், திருப்பதி திருமலையில் ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து, ஐந்துகி.மீ தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரம் என்னும் திருச்சானூரில், பத்மாவதி தாயார் இருக்கிறார். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து, தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
கார்த்திகை மாதம், சுக்லபக்ஷம், துவிதியை திதியின் சுபயோக சுபதினமான, அன்றைய தினத்தின் அதிகாலை வேளையில், திருச்சானூர் கோவிலின் ‘தோலப்பா கார்டன்’ மண்டபத்தில், திருமணம் முடித்த புதுமண தம்பதிகள், தாயாரை தரிசித்துவிட்டு கோவிலின் வெளிப் பிரகாரத்தை வலம்வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் உறவுக் கூட்டங்களாய் சொற்ப மனிதர்களும் பின் தொடர்ந்தனர்..

சற்று முன்னர் திருமணம் முடிந்ததின் அடையாளமாக உச்சந்தலையில் தூவிய அட்சதைகளாக மஞ்சள் அரிசியும், தலையில் கட்டப்பட்ட மங்களபட்டையும் மாப்பிள்ளையை அலங்கரிக்க, வெண்பட்டில் பஞ்சகச்சம் சுற்றிக் கொண்டு, வெண்ணிறத் தலைப்பாகையுடன், செந்தூரத் திலமிட்டு கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் பட்டும்படாமல், மணமகன் கையை பிடித்துக் கொண்டாலும், சமயத்தில் தன்கரத்தை உருவிக் கொண்டும், அவனிடமிருந்து விலகிக்கொண்டும் நடந்து கொண்டிருந்தாள் மங்கையவள்.

திருமணச் சேலையான மஞ்சள்நிறப் பட்டில், இருபக்கமும் கோர்க்கப்பட்ட கருகுமணிகளுடன் கூடிய தங்ககாசுகளும், நடுவில் இணைக்கப்பட்ட சிறிய பொட்டுத்தாலியுடன், ஈரம்காயாத மஞ்சள்சரடு கழுத்தை அலங்கரிக்க, நெற்றியிலும், தலைவகிட்டிலும் தீட்டப்பட்ட தாழம்பூ குங்குமமும், கால்விரலில் புதியதொரு ஊரல் எடுக்கும் கால்மிஞ்சியும், மணப்பெண் என்று அவளை சொல்லாமல் சொல்லியது.

கணவனோடு சேர்ந்து நடந்தாலும், அவளின் பார்வை என்னவோ பின்புறம் திரும்பி, ஒரு சிறுமியை பார்த்த வண்ணமே, அவள் நடை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த ஆறுவயது சிறுபெண்ணும், சளைக்காமல் தன் பார்வையை, மணப்பெண்ணை விட்டு விலக்காமல் பார்த்து வைத்தாள். வெண்பட்டு சட்டையும், அடர்மெரூன் வண்ணப் பட்டுப்பாவடையும் அணிந்து, வரிசைப் பொன்னகைகள் அழகுக்கு அழகு சேர்க்க, வெட்டிவிட்ட பேபிகட்டிங் கூந்தலை, இங்கும் அங்கும் அசைய விட்டபடியே, முகத்தை ஏகத்திற்கும் சுருக்கிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
தன் கையை பாசத்துடன் பிடித்து நடந்த பெரியவரின் கைகளில் இருந்து, தன்னைப் பிரித்துக் கொண்டு, மணப்பெண்ணிடம் தாவிச் சென்றிட பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள் அந்தச் சின்னச்சிட்டு.

“தாத்தயாகூட சமத்தா நடந்துவா பொம்மி! எதுக்கு கையை எடுக்குற?” பாசமாய் அந்த சிறுபெண்ணைக் கேட்டவர் மணப்பெண்ணின் தந்தை சுந்தரராஜுலு. பதில் பேசவில்லை பொம்மி.
“எத்தன பேர் இங்கே நடந்து வர்றாங்க பாரு! என்னென்ன இருக்கு? நல்லா கவனிச்சு சொல்லிட்டு வா… தாத்தயாக்கு சரியாத் தெரியலடா அம்மு!”
“—–“
“இன்னைக்கு நல்ல பொண்ணா என்கூடவே இருப்பியாம் தங்கம்!” கொஞ்சிக் கொஞ்சி அவர் பேசினாலும், அவளது பதிலோ, வெறித்து வைக்கும் பார்வையாக மட்டுமே இருந்தது.
“—–“
“தாத்தயா தூக்கிக்கவா பட்டுக்குட்டி…” கையை நீட்டி அழைக்க, அந்தக் குழந்தையோ முன்னே நடந்து சென்று கொண்டிருந்த மணப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“செல்லிக்கு(தங்கை) பேசவராதா தாத்தயா?” சிறுமியைப் பார்த்துக் கொண்டே, அருகில் இன்னொரு பெரியவருடன் வந்து கொண்டிருந்த பன்னிரண்டு வயது சிறுவன் கேட்டு வைக்க,
“புது இடம், சின்னக் குழந்தைக்கு பயமா இருக்கும் சின்னா!” பதில் சொன்னார், மாப்பிள்ளையின் தந்தை வேங்கடராமைய்யா.
“அண்ணயா கூட வர்றியா? பொம்மி!” சின்னா அவள் கையை பிடித்து தன்னிடம் வர வைக்க முயல, பயத்தில் அரண்டவள் அந்த இடத்திலேயே கத்தி, அழ ஆரம்பித்து விட்டாள்.

சிறுமியின் அழுகை சத்தத்தைக் கேட்ட மணப்பெண்ணிற்கு அந்த இடம், சூழ்நிலை எதுவும் கவனத்தில் நில்லாமல், ஒருவித பரபரப்புடனே வேகமாய் ஓடிச்சென்று, அவளை அணைத்து ஆறுதல்படுத்தியும், சிறுமியின் விசும்பலும், அழுகையும் ஒய்ந்த பாடில்லை.

‘இதற்குதான் இவளை, எப்பொழுதும் என்னிடமே நிறுத்தி வைத்துக் கொள்கிறேன்’ தன்தந்தை சுந்தரத்தை பார்த்து கண்டன பார்வையில் சொல்லாமல் சொல்லிட, அந்த பெரியவரும் சற்று சங்கடத்துடனேயே அவள் பார்வையை தவிர்த்தார்.

சிறுமியை ஆறுதல்படுத்தவென, அதே இடத்திலேயே மணப்பெண் நின்றிருக்க
“சாலா! இப்போ வரப்போறியா இல்லையா? பிரகாரத்தை சுத்தும்போது இடையில நிக்ககூடாது… இதுகூடவா தெரியாது உனக்கு?” தன் புதுமனைவியை அதட்டலுடனேயே, மாப்பிள்ளை அழைத்திட,

“பொம்மி அழறா நாணா(அப்பா)… நான் கூப்பிட்டும் வரல…” சின்னாவும் தன் பங்கிற்கு விளக்கமளிக்க, மாப்பிள்ளை மேலும் சிடுசிடுக்க அதுவே போதுமானதாய் இருந்தது.

“இப்போ என்ன? அவள சமாதானபடுத்தி உன்கிட்ட பேச சொல்லனுமா சின்னா! இருக்கிற வேலையில இதுதான் இப்போ முக்கியமா?” சின்னப் பையனிடம் எரிந்து விழ

“புது மனுசங்கள பார்த்ததும் பயந்துட்டா அல்லுடு(மாப்ளே)!, அசலா… நீ பொம்மிய கூட்டிட்டு போ!” சுந்தர ராஜுலு பெண்ணை பார்த்து சொன்னார்.

“அம்முவ கையில வாங்கிக்கோ வாசு!” வேங்கடராமைய்யா மாப்பிள்ளைக்கு உத்தரவிட்டவுடன், தட்டாத தனயனாய் சிறுமியை தூக்கிக் கொள்ள கையை நீட்ட, விருட்டென அவன் கையை தட்டி விட்டாள் குட்டிப்பெண். இவள் செய்கையை கண்டு “பெரியவங்க கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்க கூடாது பொம்மி!” செல்லமாய் மணப்பெண்ணும் அதட்டி வைக்க

“ஏன்?? நான் அவ நாணான்னு(அப்பா) சொல்லி, என்கிட்டே அனுப்ப மாட்டியா நீ?” மீண்டும் தன் அதட்டலைக் கையில் எடுத்தான் மாப்பிள்ளை.

வேறென்ன செய்வது! இவன் தூக்கிக் கொள்ள வருகிறான் என்றால், மனைவியும் குழந்தையை கொடுக்க முன் வரவேண்டுமே? அவளோ முன்னிலும் பத்திரமாய் குழந்தையை அணைத்துக் கொள்ள, சின்னவளும், பெரியவளின் தோள்களில் தன்முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“ம்ப்ச்… இதென்ன பழக்கம் வாசு? கோவிலுக்கு வந்து அதட்டல் போடக்கூடாது, அம்மு அவகிட்டயே இருக்கட்டும், வாங்க போகலாம்” வேங்கடராமைய்யா சொல்லவுமே, மேலும் பேச்சை வளர்க்காமல் பிரகாரத்தை சுற்றி முடித்து மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அதுவரையிலும் பெரியவளை விட்டு இம்மியளவும் அகலாமல், அவளை ஒட்டி உரசியபடியே பொம்மி நடந்தும், அவள் தோளில் சவாரி செய்தும் வந்தாள்.

மண்டபத்தை அடைந்தவர்கள் மீண்டும் தம்பதி சமேதராய் மனையில் அமர, சாஸ்திர முறைப்படி
குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் வைபவங்கள் நடக்க ஆரம்பித்தன.

சின்னா மற்றும் பொம்மிக்கு, தாங்கள்தான் பெற்றோர்கள் என்று எல்லோருக்கும் முறைப்படி அறிவித்திட, அன்றைய தினமே இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர் வீட்டுப் பெரியவர்கள். சட்டப்படி பதிவு செய்யவென சார்பதிவாளரும் அந்த நேரத்தில் அங்கே வரவழைக்கப் பட்டிருந்தார்.

அந்த நேரத்திலும் அசலாவின் மடியை விட்டு அகலாமல் அவளிடமே அமர்ந்திருந்தாள் பொம்மி. அனைத்து சாங்கியங்களும், முறைமைகளும் முடிந்திட, இப்பொழுது கிண்ணத்தில் உள்ள பாயசத்தை பிள்ளைகளுக்கு ஊட்டி விடவேண்டும். கணவன் மனைவி, இருவரும் ஆளுக்கொரு கிண்ணத்தை கைகளில் எடுத்து கொள்ள, சிறுமியை மடியில் அமர்த்திக் கொண்டே சின்னாவிற்கு பாயசத்தை ஊட்டி முடித்து,

“பத்ரி சீனிவாசன்…”

“பத்ரி சீனிவாசன்…”

“பத்ரி சீனிவாசன்…” என்று மூன்று முறை உற்சாகமாய் அழைத்து, நெற்றியில் முத்தமிட்டு, தன் மகனாக மனப்பூரவமாக ஏற்றுக் கொண்டாள் மணப்பெண்ணான ‘அசலாட்சி என்னும் அசலா…’ சற்று நேரத்திற்கு முன் ‘சாலா’ என்று கணவனால் அதட்டப்பட்டவள்.

இவர்கள் முறை முடிந்திட, பெண்பிள்ளையை வாங்கிக் கொள்ள மாப்பிள்ளை முன் வர, அசலாவும் அவனிடம் தூக்கிக் கொடுக்க முயற்சி செய்ய, அப்பொழுதும் அவனிடம் செல்லமாட்டேன் என்று போக்குக் காட்டினாள் அந்த சின்னக்குட்டி.

பிள்ளையின் செய்கையில், கணவன் மீண்டும் தன்னை அதட்ட ஆரம்பித்து விடுவானோ என்ற நினைப்பில்,

“இவர் உன்னோட நாணா… அப்பாடா… பொம்மி!” மெதுவான குரலில் சொன்னாலும், ‘தந்தையிடம் செல்’ என மனைவி சொல்லாதது, கணவனின் கோபத்திற்கு தூபம் போட்டது.

“அம்மாகிட்ட இருந்தது போதும்… நாணாகிட்ட வா பங்காரம்(தங்கம்)…”

“நாணா செப்பு!(சொல்லு)…” கெஞ்சிக் கொண்டிருந்தான் மாப்பிள்ளையான ‘ரிஷபன் சீனிவாசன்’ சற்று முன் தந்தையால் ‘வாசு’ என்றும், சின்னவால் ‘நாணா’ என்றும் அழைக்கபட்டவன்.

விபரம் அறியாத கைக்குழந்தை என்றால் விளையாட்டுப் பொருட்களை காண்பித்து, தன்னிடம் இழுத்து வைத்துக் கொள்ளலாம். இவளோ வளர்ந்த பிடிவாதக்காரக் குழந்தை. இவளை எப்படி தன் வசப்படுத்திக் கொள்வது என்ற பெரிய சிந்தனையே, அந்த நேரத்தில் மனதில் ஓடி, அவனை ஆயாசப்படுத்தியது.

“உங்க பொண்டாட்டி மடியில தானே இருக்கா… அப்டியே ஊட்டி விடலாம், செய்ங்க மாப்ள…” சுற்றி இருப்பவர்கள் ஊக்கம் கொடுக்க, அவனும் முன்னேற, பாயசக் கரண்டியை தட்டிவிட்டது அவனின் பெண்பிள்ளை. அந்த செய்கையில் “பத்மாக்ஷினி!!!” ரிஷபன் சீனிவாசனும் சத்தம் போட, அந்த அதட்டலை கேட்டதும், இடைவேளை விட்டிருந்த விசும்பல் மீண்டும் ஆரம்பிக்க, அரற்றலுடன் கூடிய அழுகையில் அந்த மண்டபத்தையே அதிரவைத்தாள் ‘பத்மாக்ஷினி என்ற பொம்மி’.

“அடடா… இங்கே வந்து எல்லோரும் கையெழுத்து போட்டா என்னோட வேலை முடிஞ்சிடும்… நானும் ஆபீசுக்கு போக சரியா இருக்கும்” அனைவரையும் தன்னிடம் அழைத்து திசைதிருப்பினார் சார்பதிவாளர்.

அன்றைய தினம் நடந்த திருமணமும், குழந்தை தத்தெடுப்புகளும் முறையாய் பதிவு செய்யப்பட, உறுதிப் செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன. சாட்சிகளாக மாப்பிள்ளையின் தந்தை வேங்கடராமைய்யாவும், பெண்ணின் தந்தை சுந்தரராஜுலுவும், அவர்களுடன் நெருங்கிய உறவினர்களாக இருந்த நால்வரும் கையெழுத்திட, ஒரு அழகிய குடும்பம் சாஸ்திரத்தாலும், சட்டத்தாலும் அங்கே கோவில் கொண்டுள்ள பத்மாவதி தாயாரின் முன்னிலையில், புனிதமான பந்தமாக சாஸ்வதமானது.

முப்பத்தியேழு வயதான ரிஷபன் சீனிவாசனுக்கும் – முப்பத்திரெண்டு வயதான அசலாட்சிக்கும் நடந்த திருமணப் பதிவு…

ரிஷபன் சீனிவாசன் தனது மகளாக ஆறு வயது பத்மாக்ஷினியை தத்தெடுத்துக் கொண்ட பதிவு…
அசலாட்சி தன்னுடைய மகனாக பன்னிரண்டு வயது பத்ரி சீனிவாசனை தத்தெடுத்துக் கொண்ட பதிவு…
ஆக மூன்று பதிவின் பத்திரங்களை, வரும் வாரத்தில் சித்தூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அங்கிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு, தன்வேலையை நிறைவாய் செய்துவிட்டு சென்றார் பதிவாளர்.

மதியம் வரை அங்கே இருந்து, மேற்கொண்டு வந்தவர்களை உபசரித்து, அன்றைய எல்லா வேலைகளையும் முடித்தவர்கள், ரிஷபன் சீனிவாசனின் சொந்த ஊரான ‘ஏகாம்பரகுப்பம்’ வந்தடைந்தனர்.

‘ஏகாம்பரகுப்பம்’ ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய ஊர், நகரி மண்டலத்திற்கு உட்பட்டது. தமிழகத்தை ஒட்டி அமைந்துள்ளது. நகரி, திருப்பதி, திருத்தணி, நாகலாபுரம் என அனைத்து இடங்களும் மிகஅருகே அமையப்பெற்ற, நாகரீக வளர்ச்சியை மெதுமெதுவாய் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் கிராமங்களில் இதுவும் ஒன்று.
இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டு, அங்குள்ள உழவர் பெருமக்களை ஏமாற்றாமல் இன்றளவும் வாழவைக்கும் நன்செய்வளம் கொழிக்கும் பூமி. இரு மாநிலங்களின் வெயிலும், மழையிலும் போட்டிபோட்டுக் கொண்டு பசுமையை அள்ளிக் கொடுத்து, உழவர்களின் உள்ளம் நிறைக்கும் அதே வேளையில், அதீத வறட்சியையும், நீர் பற்றாக்குறையையும் கொடுத்து பஞ்சத்தை உண்டுபண்ணும் காலகட்டங்களும் உண்டு.

இங்கு வாழும் மக்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளையும் சரளமாகப் பேசுகின்றனர். அரிசி, புகையிலை, பருத்தி. மிளகு, மிளகாய் இவைகளை பெருமளவில் பயிரிடுவதே இந்த ஊரின் சிறப்பு. மேலும் இங்குள்ள நூற்பாலைகள் இங்கே வாழும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்வாதாரத்தை மேன்மை படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பள்ளிகல்வித் துறையின் மூலம் இங்கு தொடக்கக் கல்வி, உயர் நிலைக்கல்வி, மேல் நிலைக்கல்வி படிப்புகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. தமிழக -ஆந்திரா எல்லையில் உள்ள நகரி தொகுதியில் ஏரி, ஆறுகளில் இருந்து மணல் கடத்தப்படுவதும், அங்குள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து செம்மரங்கள் கடத்தப்படுவதும், இந்த ஊரின் பெரிய தலைவலிகளில் ஒன்று. இதன் காரணமாகவே சிறிது காலமாய் குறைந்து வந்த கிராமத்து காவலர்களின் பணிச்சுமை மீண்டும் தலைதூக்கியது.

நகரி மண்டலத்திற்கு உட்பட்ட மொத்தம் 29 கிராமங்களும் காவல்பணியை மேற்கொள்ள, கிராமகாவலர்கள் ‘தலையாரி’ என்றும் ‘கார்டூ’ என்றும் அழைக்கப்படும் காவல்தலைவரின் ஆணையில், தங்கள் காவல்பணியினை மேற்கொண்டு வந்தனர். அந்த தலைமைப் பொறுப்பை சிரமேற்கொண்டு, காவல்பணியினை சற்றும் தொய்வில்லாமல் செய்து வருபவன் ரிஷபன் சீனிவாசன்.

பரம்பரை பரம்பரையாக ‘கார்டூ’ பொறுப்பை ஏற்று, கிராமங்களை காவல்காக்கும் வேலைகளை, சிரமம் பார்க்காமல் செய்துவரும் குடும்பம் அவனுடையது. அதன்படி அவனும் தலைமைப் பதவியை ஏற்க, அவனது மிரட்டலில், கடத்தல்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் சற்றே அடங்கச் செய்தது.
தலைமைப் பண்புகள் அனைத்தும் நிறைந்த அக்மார்க் நல்லவன். ஆறடி உயரத்திற்கேற்ப முறுக்கேறிய தசைகளைக் கொண்ட தோள்புஜங்களும், திண்ணிய மார்பும் அவனது பராக்கிரமத்தைக் சொல்லும். மாநிறத்தை தாண்டிய கருப்பு நிறம், எப்பொழுதும் விறைப்பாய், அதட்டலாய் எல்லோரிடத்திலும் பேசும் குணம். தீர்க்கமான, கண்டிப்பான பார்வை… மேலெழுந்த வாரியாக அடக்கப்பட்ட சீரான சிகை… முறுக்கிய பட்டையான மீசையும், அகலமான நெற்றியில் நீளமாய் இழுக்கப்பட்ட செந்தூரத் திலகமும், அவனுடைய தோற்றத்தை இன்னும் முரட்டுத் தனமாய் காட்டும்.
எதிரிகளிடம் தன் பலத்தை ஒன்று திரட்டி துவம்சம் செய்வதில் காட்டான். மொத்தத்தில் ஆஜானுபாகுவான, கரடு முரடான தோற்றம். எப்பொழுதும் அடர்நிற சட்டையும், வெள்ளை வேட்டியும் ரிஷபனின் உடையாக இருக்கும். ஒட்டிப்பிறந்த கவசமான ராயல்என்ஃபில்ட் வாகனத்தில், எப்பொழுதும் வலம் வருபவன்.

ஏகம்பரகுப்பம் அழகிய பெரிய கிராமம். அந்த கிராமத்திற்கு ஊர்க்காவலனாய் இருந்தாலும், குடும்பத் தேவைகளுக்கு தன்னுடைய வருமானத்தையே நம்பி இருப்பவன் ரிஷபன் சீனிவாசன். ஊர் மக்களிடம் இருந்து வரும் படித்தொகைகளும், நெல் மற்றும் தானியங்களும் தனக்கு கீழ் பணிபுரியும் காவலர் குடும்பங்களுக்கு நிறைவாய் பிரித்துக் கொடுத்து விடுவான். முன்பெல்லாம் மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்தது போக, மீதம் இருப்பதை தங்களுக்கென வைத்துக் கொள்ளும் இவர்களது குடும்பம். இந்த காலத்தில் அப்படி மிஞ்சுவதில்லை. அதனால் தொழிலில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
கிராமத்துப் பள்ளியில் உயர்நிலை கல்வி வரையில் படித்தவனுக்கு, அதற்கு மேல் வெளியூர் சென்று கல்விகற்க பெரியவர்கள் அனுமதிக்கவில்லை. ஏக்கர் கணக்கில் முன்னோர்கள் சேர்த்து வைத்த நிலபுலன்கள் இருக்க, தனது முயற்சியில் இரண்டு அரிசி ஆலைகள் அமைத்து, பெரிய அளவில் அரிசிச்சந்தையில் விற்பனை செய்து கொண்டிருக்கிறான். அதுபோக குளிர்பதன முறையில் மிளகாய் பதப்படுத்தும் சேமிப்பு கிடங்கு ஒன்றினை, ஆந்திர விவசாய துறையின் உதவியுடன் ஆரம்பித்து, நல்ல முறையில் நடத்திக் கொண்டும் வருகிறான்.

அவனுக்கு இன்று நடைபெற்றது இரண்டாவது திருமணம். தன்பேரனுக்கு ஒருதாய் வந்தே ஆக வேண்டுமென வீம்பாய் இருந்த தந்தை வேங்கடராமைய்யாவின் உத்தரவும், வீட்டில் தனக்கு பிறகு பெண்ணரசி இருக்க வேண்டுமென அன்பாய் கேட்டுக் கொண்ட தாயின் வேண்டுதலும், அவனை அசைத்து வைக்க, பலவருட தவவாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து, இன்று தன்அண்மையில், தன்னுடைய சரிபாதியாய் வரித்துக் கொண்ட அசலாட்சியின் அருகில் அமர்ந்திருக்கிறான்.
அசலாட்சி… அசலா… ‘இவள் இனி என்னுடைய மனைவி என்பதை விட, இவளது வாழ்வும், தாழ்வும் இன்று முதல் என் பொறுப்பு’ என்று எண்ணும்போதே, கணவனாய் ஏதோ புதியதொரு உணர்வு அவனை தழுவிக்கொண்டது.

முதல் மனைவியிடம் இந்த உணர்வு ஏற்பட்டதா? அவனுக்கு தெரியவில்லை என்று சொல்வதை விட, அந்தளவிற்கு அவளைப் புரிந்து கொள்ள ரிஷபன் முயன்றிருக்கவில்லை என்பதே உண்மை. குடும்ப பாரம்பரியத்தை காட்டி இருபது வயதில் திருமணம் முடித்தவனுக்கு, பெரியவர்கள் சொல்வதே வேதவாக்காக கொண்டு குடும்பத்தை நடத்திட, இவன் முகம் பார்த்தே தன்வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்ந்தவள் முதல் மனைவி கங்காலட்சுமி.

இதன் காரணமோ என்னோவோ, அவளது இழப்பு துக்கத்தை ஏற்படுத்தினாலும், சிறிது நாட்களில் தன்னை மீட்டுக் கொண்டான். தன்மகனைப் பார்க்கவென வீட்டில் பெற்றோர் இருக்க, மனைவியின் இழப்பு அவனை வெகுவாய் பாதிக்கவில்லை. ஆனாலும் தனது மறுமண வாழ்க்கைக்கு தொடர்ந்து தடை விதித்துக் கொண்டே வந்தவன், அசலாட்சியையும், அவளது ஆறுவயது சின்னப் பெண்ணையும் பார்த்ததும், தந்தையின் திருமணப் பேச்சிற்கு தானாய் தலையாட்டி வைத்தான்.

தன்னை ஈர்த்தது தாயா? மகளா? என்று இப்பொழுது வரை மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறான். விடை என்னமோ இன்னமும் தெரிந்த பாடில்லை. அவளுக்கும் இது இரண்டாவது திருமணமே…

அசரவைக்கும் அழகி அல்ல அசலாட்சி… மாநிறத்தை தொட்டுக் கொண்டிருக்கும் கோதுமை நிறம்… ஐந்தேகால் அடி உயரம்… இடைவரை நீண்டகூந்தல் என குடும்பப்பாங்கான பெண்ணின் தோற்றம். கழுத்தெலும்புகளும், கன்னக் கதுப்புகளும் லேசாக துருத்திக்கொண்டு, அவளது உடல் மெலிவை பறைசாற்றிக் கொண்டிருந்தது. ஒடிசலான தேகமும், கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்களும் அவளின் முகப்பொழிவை குறைத்துக் காட்டிட, அவளது பெரிய கண்கள் பேசாமலேயே பலகதைகள் பேசிவிட்டு செல்லும். அதிர்ந்து பேசாத குணம், அமைதியின் சிகரம் என்று அவளை சொன்னால் மிகையில்லை.

தாயின் கண்களைக் கொண்டே பிறப்பெடுத்த மகளும், செல்வச்சீமாட்டியாய் கண்ணிற்கு தெரியவில்லை என்றாலும் வயதிற்குரிய அடமும், வீம்பும் மட்டுமே பிரதானமாய்க் கொண்டு, தாயை மட்டுமே ஒட்டிக் கொண்டு வந்தாள். மறந்தும் கூட மற்றவர்களின் பக்கம் தன் பார்வையை செலுத்தவில்லை அந்த சின்னச்சிட்டு. அன்றைய சுபநிகழ்ச்சிகள் முடிந்து, வேனில் கிராமத்திற்கு வரும் வேளையிலும், வேடிக்கைப் பார்க்காமல் கைகுழந்தையைப் போல் தாயின் மார்போடு ஒண்டிக்கொண்டே வந்தாள். சின்னவள் ஒரு கூட்டுக்குள் இருப்பவளைப் போல் தன்னைச் சுருக்கிக்கொள்ள, தன் தாயையும் சுதந்திரமாக செயல்பட விடாமல், அருகிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தாள் பத்மாக்ஷினி என்ற பொம்மி.

இனி இவர்கள் தங்கள் கூட்டிலிருந்து வெளியே வந்து, புதிய வாழ்க்கையை மனமார ஏற்றுக் கொள்வார்களா? ரிஷபன் தனக்குத் தோன்றும் உணர்வினை அவர்களுக்கு தெரிய வைத்து, தன்அன்பைப் புரிய வைப்பானா? பத்ரி தன் தங்கையை, தன்னோடு இருத்தி கொண்டு, வெளியுலகம் பார்க்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்வானா?

மனதில் ஊசலாடும் அனைவரின் எண்ணங்களும், ஆனந்த வடிவம் பெற்று பொன்னூஞ்சல் ஆடிடுமா?! வரும் பதிவுகளில் காண்போம்!!!