Ponnoonjal-6

ஊஞ்சல்- 6

நனவிலும் நில்லாத, கனவிலும் இல்லாத மோனநிலையில் அசலாட்சி தன் கடந்த காலத்தை சொல்லி முடித்திருந்தாள். ரிஷபனின் கைச்சந்தில் தன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள், தலையை கணவன் தோளில் சாய்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவளது உள்ளத்தின் வெளிப்பாடுகள் உணர்ச்சிக் குவியல்களாக முகத்தில் நன்றாக வெளிப்பட்டன.

பனிபொழியும் அந்த இரவிலும், அவள் முகத்தில் அரும்பிய முத்தான வியர்வைத்துளிகள் அவளது பதட்டத்தையும், தவிப்பையும் சொல்லாமல் சொல்லியது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வந்த ஆயாசம், அந்தச் சமயத்தில் மனதை ஆசுவாசப்படுத்தினாலும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை. மீண்டும் மீண்டும் நடந்தவைகளை அசைபோட்டுக் கொண்டே இருந்தன.

எல்லாவற்றையும் கேட்ட ரிஷபனுக்கும் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. போதை என்னும் மாயபிசாசு இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை சிதைக்கப் போகிறது? குடிப்பவன் தான்கெடுவதும் இல்லாமல், மற்றவர்களையும் சீரழிப்பது என்ன நியாயம்? இதற்கு விடிவு யார் கைகளில்? போன்ற கேள்விகள் மனதில் வரிசை கட்டி நின்றன.

குடும்ப நட்பின் முறையில்கூட கஷ்டகாலத்தில் தன்னை சந்தித்து, துன்பங்களை பகிர்ந்து கொள்ளாதது வேறு அவனுக்கு கோபத்தை வரவைத்தது.

“எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கோர்ட் வரைக்கும் போக விட்டுருக்க மாட்டேன் சாலா! அவன் குடும்பத்தையே சமாதி கட்டி இருப்பேனே? ஏன் என்கிட்டே சொல்லல?” சொல்லும் போதே கோபத்தில் அவன் கண்கள் சிவந்து விட்டன.

“நான் அசிங்கப்பட்ட விஷயத்தை எப்படி என்னால சொல்ல முடியும்? அந்த நேரம் எனக்கு என்ன செய்யணும்? யாரை பாக்கணும்னு தோணல! வக்கீல் என்ன சொன்னாங்களோ அத மட்டுமே செஞ்சேன்…” என்று தன் நிலையை எடுத்துக் கூறினாள்.

ஊரைக் கட்டிக் காக்கும் காவல்தலைவனுக்கு, மனைவியின் துன்பநேரத்தில் உதவ இயலாமல் போனது, மனதிற்கு மிகுந்த வேதனை அளித்தது. உயிர் நண்பனின் குடும்பத்தைப் பற்றி சிறிதும் நினைக்காமல், தான் சுயநலமாய் இருந்து விட்டோமோ? என்ற எண்ணமும் தலை தூக்கியது.

“பாப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு மாசகணக்கா பின்னி(சேதுவின் அன்னை) சென்னையில தங்கி இருக்கும் போதே நான் என்ன, ஏதுன்னு விசாரிச்சிருக்கனும். அந்த நேரத்துல நானும் அலட்சியமா இருந்துட்டேன்” – ரிஷபன்

“கிராமத்தில இருந்து மறுபடியும் நான் சென்னைக்கு போயிருக்கக் கூடாது பாவா! என்னோட அவசரபுத்தி, என் வாழ்க்கைய புரட்டி போட்டுடுச்சு…”

“தப்பு உன்மேல இல்ல சாலா! இப்படி எல்லோரும் நெனைச்சா, யாரும் எங்கேயும் வாழ முடியாது.”

“யார் என்ன சமாதானம் சொன்னாலும், என்னால அதுல இருந்து தப்பிச்சு வெளியே வர முடியல!!” அழுகையில் வற்றிய மனைவியின் கண்கள் மீண்டும் தன் ஊற்றேடுப்பை ஆரம்பிக்க, கணவன் தன் விரல்களால் அணை போட்டான்.

“வலிகளோட வாழ நினைக்கிறவன் வாழ்க்கை, எப்பொழுதும் முழுமை அடைஞ்சதில்ல… நம்ம வலிமையால அதை மாத்தி அமைச்சுக்க பழகனும் சாலா!” அவளது அழுகையை நிறுத்த, தன்னாலான ஆறுதலை தந்தான் ரிஷபன்.

இருவரின் மன நிலையும் இப்பொழுது ஒருவித புரிதலுடன் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

“வெளியே போய் இனியும் பலபேர் பேச்சுக்கு தலைகுனிய எனக்கு தெம்பில்ல… ஒரு கூண்டுக்குள்ள பத்திரமா இருக்க மட்டுமே நான் நினச்சேன். அதுக்குதான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டது” என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லி விட்டாள் அசலாட்சி.

இருவரின் இதயங்களும் சொல்ல முடியாத பாரமேறிய உணர்வில் தத்தளித்திட, நீண்ட பெருமூச்சுக்களோடு அந்த இரவைக் கழித்தனர்.

அடுத்தடுத்து வந்த நாட்களில், முன்னை விட இறுக்கமான மனநிலையில் நடமாடினாள் அசலாட்சி. தன்னை பற்றிய ரகசியத்தை தன்மூலமே சொல்ல வந்த கழிவிரக்க நிலை, அவளது கூண்டுக்குள் முன்னை விட அதிகமாய் அவளை ஒடுக்கித் தள்ளியது.

ரிஷபனும் உணர்ச்சிதுடைத்த முகத்துடன், எப்பொழுதும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, முன்னை போல் அவன் முன்பு சகஜமாக நடமாட முடியவில்லை அவளால். தன் நிலை அறிந்து தன்னை ஒதுக்கி வைக்கிறானோ என்று எண்ணும்பொழுதே இதயத்தின் ஓரத்தில் வலி பரவுவதை தவிர்க்க முடியவில்லை.

தன்னை அவன் மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லையோ என்ற நினைவே அசலாட்சிக்கு வேம்பாய் கசக்க, சொல்லாத கோபமும் கணவன் மேல் ஏற்பட்டது. இரு நாட்கள் பொறுத்தவள் தன் சந்தேகத்தை கேட்டு விட்டாள்.

“எங்க நிலைமை என்னன்னு தெரிஞ்சதும் எங்கள ஒத்துக்கி வைக்க பாக்கிறீங்களா?” குற்றம் சாட்டும் பார்வையுடன் கேள்வி கேட்க,

“உன்னோட முட்டாள்தனமான கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது சாலா!” என்று வெறித்த பார்வையை பரிசாக அளித்தான்.

“என்கூட சரியா முகங்குடுத்து பேசுறதில்ல நீங்க? என்னை விட்டு ஏன் ஒதுங்கிப் போறீங்க?”

“நீ உன் பிரச்சனைகளை இன்னும் சரியா சொல்லல சாலா! என்மேல உனக்கு முழு நம்பிக்கை வர்ற வரை, நான் அமைதியா இருக்க முடிவு பண்ணிட்டேன்.” தனது ஆதங்கத்தை வார்த்தைகளில் கொட்டி விட்டான் ரிஷபன்.

“நீங்களா ஏதோதோ கற்பனை பண்ணி, என்னை சங்கடப்படுத்தாதீங்க பாவா! எங்களோட நெலமைய உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டேன்… இனிமே உங்க இஷ்டம்…” பதில் உதிர்த்து, உள்ளே சென்ற முயன்றவளை கைபிடித்து நிறுத்தி வைத்தான்.

“உன்னை நான் வற்புறுத்த போறதில்ல… அதே நேரம் உன்னோட பயமும் தயக்கமும், நம்ம குழந்தையோட எதிர்காலத்தை புரட்டி போடறத பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று உறுதியான குரலில் கூறியவன், அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தான்.
***************************

ரிஷபன் சீனிவாசனின் வீட்டுத்தோட்டத்தின் ஒரு பகுதியில் பத்து பேர் உட்கார்ந்து பேசும் வகையில் காற்றோட்டத்துடன் கூடிய திறந்த அறை. தன்னை சந்திக்க வருபவர்களை அங்கே வைத்து பேசி அனுப்பி வைப்பது ரிஷபனின் வழக்கம்.

அங்கே ஒரு பெண்ஆசிரியையின் துணையுடன் ஆறு சிறுமிகள் பாடம் படித்துக் கொண்டிருக்க, அவர்களின் அருகில் பொம்மியும், தன் தாயுடன் அமர்ந்திருந்தாள்.

மூன்று நாட்களாக இந்த புதிய பாடம் படிக்கும் வேலையை ரிஷபன் கொண்டு வந்திருந்தான். வெளியுலகம் காண மாட்டேன் என்று அடம் பிடிக்கும் தாயையும் மகளையும், வீட்டிற்குள் வரும் வெளி மனிதர்களிடம் பழக வைக்கும் சிறு முயற்சியாக இந்த முறையை தொடங்கினான்.

“குடிசை வீட்டுல பாடம் படிக்கிற பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுக்க இடம் வேணும்னு டீச்சர் கேட்டதால, நம்ம வீட்டுல வந்து படிக்க சொல்லி இருக்கேன். உனக்கு பிடிக்குதோ இல்லையோ, அவங்க படிப்புக்கு உன்னால எந்த இடைஞ்சலும் வரகூடாது. பொம்மியும் அவங்க கூட சேர்த்து படிக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.” என்று கறாராய் சொல்லிவிட தட்ட முடியவில்லை.

“இதையும் செய்ய மாட்டேன்னு முறுக்கிட்டு நிக்காதே சாலா! நடந்தத நினைச்சே அசைபோட்டுட்டு இருந்தா, காலமும் நேரமும் நம்மை சாப்பிட்டு, ஒன்னுமில்லாத ஜடமா மாத்தி வச்சிடும். அதை மனசுல வச்சு, புரிஞ்சு நடந்துக்க பாரு!” என்று கட்டளையிட்டு விட்டான்.

அசலாட்சிக்கும் கணவனின் சொல்பேச்சை தட்டிக் கழிப்பதில் இஷ்டம் இல்லை. தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை எப்பொழுதும் விரும்பாதவள், கணவன் பேச்சினை தட்டாமல் செய்ய ஆரம்பித்தாள்.

தினமும் அன்னையின் அருகில் மட்டும் அமர்ந்து பாடம் படிக்கும் பொம்மிக்கு, மற்ற பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு வந்து பாடம் படிப்பது புது அனுபவமாகவே பட்டது.

முதல் ஒரு வாரம் அசலாட்சியின் அருகில் மட்டுமே அமர்ந்து பாடம் படித்தவளின் கவனம், சற்றே பக்கத்தில் அமர்ந்திருக்கும் மற்ற சிறுமிகளின் மேல் படர ஆரம்பித்தது.

அன்றைய நாளில் அவளுடைய பாடங்களை சீக்கிரமே முடித்தவள், மற்றவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா! இந்த ஸ்வேதா தப்பா எழுதுறா! கரெக்டா எழுத சொல்லு!” அசலாவின் காதில் ரகசியமாய் சொல்ல,

“நீயே சொல்லுடா… அவளுக்கு தெரியலன்னா சொல்லி குடு பொம்மி!”

“ம்ஹும்… நான் யார்கூடவும் பேச மாட்டேன்! எனக்கு பயமா இருக்கு”

“நான் பக்கத்துல இருக்கேன் நீ போய் பேசு” மெதுவாக அசலாட்சி மகளை ஊக்குவிக்க, பொம்மிக்கும் தைரியம் வந்து அந்த சிறுமியின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.

“இந்த பதில் எழுது ஸ்வேதா! அதுதான் கரெக்ட்” என்று அந்த சிறிய கணக்கிற்கான விடையை காதில் சென்று கிசுகிசுக்க, அந்த சிறுமியும் விழி விரித்து “நெஜமாவா?!” என்று ரகசிய குரலில் தெளிவுபடுத்திக் கொண்டு, விடையை எழுதி ஆசிரியரிடம் சென்று நீட்டி விட்டாள்.

“இன்னொரு தடவ இப்படி செய்யகூடாது! இந்த பதில் எப்படி வரும்னு கேட்டுத் தெரிஞ்சுட்டு செய்யனும் ஸ்வேதா! உனக்கு தெரியாத பாடத்தை பொம்மிகிட்ட கேட்டு பழகிக்கோ!” திட்டாமல் வாஞ்சையாய் ஆசிரியர் கூறிய அறிவுரை மற்ற சிறுமிகளுக்கும் பிடித்து விட, பொம்மியை அந்த நொடியே அவர்களுடைய நண்பியாக ஏற்றுக் கொண்டார்கள்.

“பொம்மி! எங்களுக்கு கத்துக் குடுக்கிறியா?”

“மீரு தெலுசா(உனக்கு தெரியுமா?)”

“மாக்கு செப்பு(எங்களுக்கு சொல்லு)”

தமிழிலும், தெலுங்கிலும் வரிசையாக கேள்விகள் அவளை கேட்டிட, சற்றே கலவரப்பட்டு தாயின் அருகில் மீண்டும் சென்று அமர்ந்து கொண்டாள்.

“அவங்களுக்கு பதில் சொல்லணும் பொம்மி! உன்னோட ஃபிரண்ட்ஸ் அவங்க… உனக்கு தெரிஞ்சத அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் செல்லம்!” என்று பாசமாக கூறியவள்

“இனிமே அவ சொல்லி குடுப்பா எல்லோரும் சேர்ந்தே ஒன்னா பாடம் படிக்கலாம்” என்று அனைவரையும் பார்த்து சொல்லிட, அந்த மழலை பட்டாளம் தங்களுக்கு ஒரு புதுத்துணை கிடைத்த மகிழ்வுடன் அவளுடன் பேச தொடங்கி விட்டனர்.

பொம்மியும் அவர்களின் கேள்விகளுக்கு தயங்கி பதில் அளிக்க, மெதுமெதுவாக தன்னுடைய கூண்டை விட்டு அந்த சிறிய பறவை வெளியே எட்டி பார்க்க ஆரம்பித்தது.

அடுத்து வந்த நாட்களில் தன் நண்பிகளுடன் பேசிப்பழகும் பொழுதுகளை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் பொம்மி. அசலாட்சிக்கும் மகளின் புதிய மனோபாவம் மகிழ்ச்சியை தந்திட, தனது அழுத்த நிலையில் இருந்து சற்றே வெளிவந்தாள்.

மகளின் குதூகலிப்பை நேரில் பார்க்கும் சமயங்களில் எல்லாம் கண்டும் காணாதவன் போல் இருக்கும் ரிஷபன், மறைவில் நின்று ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான். இதற்குத்தானே அவன் இத்தனை ஏற்பாடுகளை செய்தது. தனது முயற்சி வெற்றியடைந்த சந்தோசம் அவனுக்கு. மனைவியிடமும், மகளிடமும் வலியச் சென்று பேசுவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்தான்.

இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தள்ளி இருந்தவன் சின்னா என்னும் பத்ரி சீனிவாசன் மட்டுமே! தனக்கு ஒரு துணை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பறந்தவன், அதற்கு மாறாக பொம்மி தன்னை ஒதுக்கி வைத்ததில், அந்த சிறுவனின் மனம் வெகுவாகக் காயம்பட்டது.

பொம்மியின் முன்பு சின்னா சென்று அமர்ந்தாலே ஏகத்துக்கும் பொறாமை தண்டவமாடியது அவளுக்கு. மறந்திருந்த விளையாட்டு தனமும், பிறரை அருகில் சேர்க்காத சிறுபிள்ளைத் தனமும் மெல்ல மெல்ல வெளியில் வந்திட, முன்னிலும் அதிகமாக சின்னாவை ஒதுக்க ஆரம்பித்தாள் பொம்மி.

தங்கையினால் ஒதுக்கப்பட்டவன், தாயினால் அரவணைக்கப்பட்டான். எப்பொழுதும் சின்னா தந்தையின் பாசத்தை நினைத்து ஏங்கியதில்லை. ஆனால் தாயின் அன்பு அப்படி அல்லவே! எதிர்பாராத பரிசு ஒன்று, கையில் கிடைத்தவனுக்கு அதைக் கொண்டாடிக் களிக்க நேரம் போதவில்லை.

குடும்பத்தின் நிலை இப்படியாக சென்று கொண்டிருக்க திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் கடந்திருந்தது. கணவனுடன் தன் துயரத்தை பகிர்ந்து கொண்டவள், தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல், மகளுடன் வீட்டிற்குள்ளேயே வளைய வந்தாள். வீட்டு நிர்வாகம் இப்பொழுது பழக்கமாகி இருக்க, பொறுப்பாக அனைத்தையும் பார்த்துக் கொண்டாள் அசலாட்சி.

மாமியாரை பார்த்துகொள்ளவென தனியாக ஒரு பெண் இருந்தாலும், தன் கவனிப்பை கொடுக்க மறக்கவில்லை. ஒய்வு நேரங்களில் எல்லாம் கோகிலம்மாவின் அருகிலேயே தாயும், மகளும் பேசிக்கொண்டு இருக்க, அந்த அனுசரனையான அக்கறையில் அவருக்கும் உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டது.

வீட்டில் இருந்தவாறே பாடம் படிக்க மகளுடன் அமர்வதில் தவறுவதில்லை அசலாட்சி. மாலை வேளைகளில் அவர்களுடன் சின்னாவும் சேர்ந்து பாடம் படிப்பான். தன் கூட்டில் இருந்து வெளியே வந்த பொம்மி, தன் சுபாவத்தை காட்ட ஆரம்பித்தாள்.

முக்கியமாக அவனுக்குப் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் போது, அசலாவை தடுத்து தனக்கு மட்டுமே தன் தாய் சொந்தம் என்னும் ரீதியில் நடந்து கொண்டாள்.

“அவனுக்கு சொல்லிக் கொடுக்காதே அச்சும்மா!” பொம்மி சாதாரணமாக தாயை அப்படி அழைத்து வழக்கம். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் விடுபட்ட இந்த அழைப்பு, இப்பொழுது சில நாட்களாய் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

“அப்படி சொல்லக் கூடாது பொம்மி! அண்ணனுக்கு நாம தானே சொல்லிகொடுக்கனும்” – அசலா

“என்னை அண்ணயானு கூப்பிட சொல்லுங்கம்மா!!” சின்னா அவன் பங்கிற்கு பேசினான்.

“நீ ஒன்னும் எனக்கு அண்ணயா இல்ல… உன்ன சின்னையான்னு கூப்பிடவா? அச்சும்மா… எனக்கு மட்டுமே அம்மா! உனக்கு இல்ல!” மிரட்டல் தோனியில் தன் அண்ணனிடம் பேசினாள் பொம்மி.

தங்கையின் பேச்சில் முகம் சுணங்கியவன், வீட்டின் உள்ளே சென்றிட, அவனை சமாதனபடுத்தவென அசலா வர, பின்னோடு பொம்மியும் தொற்றிக் கொண்டாள்.

“பொம்மிக்கு எப்படி பேசணும்னு தெரியாதுரா பாபு!. உன்னோட அம்மா நான்தான்ரா” – அசலாட்சி

“இல்ல… இல்ல… போ! எனக்கு மட்டுமே நீ அம்மா” என்று பொம்மி பேசிட, அதைக் கேட்க சின்னவனுக்கு மீண்டும் முகம் கூம்பிப் போனது.

சின்னப் பிள்ளைகளின் உரிமைப் பேச்சு தீவிரமடையும் நேரத்தில் ரிஷபனும் வந்துவிட,

“பொம்மி சொல்றது உண்மையா நாணா?” சின்னா அப்பாவியாக கேட்கும் நேரத்தில், பொம்மியை அறைந்திருந்தாள் அசலாட்சி.

எந்நேரமும் அழுபவளுக்கு, காரணமும் கிடைக்க கச்சேரியை ஆரம்பித்து விட்டாள். “சின்ன பிள்ளைக்கு சொல்லிப் புரிய வைக்கத் தெரியல! யோசிக்காம அடிக்க மட்டும் வருது உனக்கு” என்று மனைவியை கடிந்தவன், மகளை அணைத்துக் கொள்ள முற்பட்டான்.

தந்தையிடம் இருந்து சட்டென்று விலகிய பொம்மி, “நீ எனக்கு மட்டுந்தான் அம்மா! சின்னாக்கு இல்ல!” அழுகையில் தேம்பியபடியே வீராப்பாக பேசிட,

“நீயும் எனக்கு மட்டுந்தானே நாணா? பொம்மிக்கு இல்லல்ல!” சின்னாவும் தன் பங்கிற்கு ரிஷபனை உரிமை கொண்டாடி, தன் பலத்தை காட்டி விட்டான். சின்னாவின் இந்த பேச்சு பொம்மியின் மனதை ரணப்படுத்த சாதகமாய் இருந்தது.

“யார் இப்படியெல்லாம் பேச சொல்லி கொடுக்குறது சின்னா? செல்லி(தங்கை) தெரியாம சொன்னா, அப்படியெல்லாம் இல்லனு எடுத்து சொல்லணும்… நீ அவனுக்கு அண்ணன்ரா!” என்று ரிஷபன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக பேசிட, பொம்மிக்கோ பொறமை உணர்வோடு தனக்கு தந்தை இல்லையா என்ற ஆதங்கமும் சேர்ந்து வந்திருந்தது.

நான்கு வயது வரை ‘சேப்பா’ என்று தன் சேதுப்பாவை அழைத்தவளுக்கு அந்த நேரத்தில் தந்தையின் ஞாபகம் வந்துவிட, மனதில் புதைந்த ‘அப்பா’ என்ற உறவும் நினைவில் நிழலாடியது.

“என் சேதுப்பா எங்கே அச்சும்மா?” என அசலாவைப் பார்த்து, பாவமாய் கேட்டு வைத்தாள் பொம்மி.

இந்த கேள்வியை மறக்க வைக்கவென அசலாட்சி பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல… மீண்டும் அதே கேள்வியை மகள் கேட்டு வைக்க என்னவென்று பதில் சொல்வாள்? தான் அனுபவித்த அனைத்து இன்னல்களும் மீண்டும் அவள் மனதில் வலம் வர தொடங்கிட, அதே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

“இவர் சேதுப்பா இல்ல பொம்மி! சீனிப்பா… எங்க நாணா பேர் ரிஷபன் சீனிவாசன்!” சின்னா உரிமையாக தந்தையின் இடுப்பை கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

பிள்ளைகளின் பேச்சு சண்டையில் முடிந்து விடுமோ என்று அஞ்சியவன், எப்படியாவது மகளை தன்னிடம் பேச வைக்கவென,

“நான்தான் உன்னோட அப்பா! என்கிட்டே ராரா(வாடா) பங்காரம்!” கைகளை நீட்டியே மகளை அழைக்க,

“இல்ல… நீ என்னோட நாணா… அவளுக்கு நாணா இல்ல…” தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் சின்னா பேசிக் கொண்டிருக்க, இப்பொழுது அடி விழுந்தது சின்னாவிற்கு. ‘சப்’ என்று அவன் கன்னத்தில் அடித்தது பொம்மி, அவனது செல்லத் தங்கை. பொம்மியின் இந்த செயலை யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.

ஏனோ தனக்கு அங்கே உரிமை இல்லை என்னும் ரீதியில் சின்னா பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் தன்னை ஒதுக்கி விட்டதைப் போன்ற மனநிலையில், வந்த கோபத்தில் பொம்மி அடித்து விட்டாள்.

பல குழந்தைகள் தங்களின் கோபத்தை, அழுகை அல்லது அதற்கு காரணமானவர்களை தாக்கி வெளிப்படுத்துவர். இங்கும் அதே நிலையே!.

தன் தாயை விட்டுக் கொடுக்க மனம் வராதவள், தன்னை தனித்து விட்டு, சின்னா மட்டும் ரிஷபனை தந்தை என்று உரிமை கொண்டாடியதும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் அதட்டினால் எங்கே தன்னை வெறுத்து விடுவாளோ என்று ரிஷபனும் அமைதி காக்க, அசலா மீண்டும் மகளை அடிக்க கை ஓங்கிய போது,

“இது எங்க வீடு பொம்மி! எங்க நாணாவ உங்க அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான், நீயும் அம்மாவும் இங்கே இருக்கீங்க!!” என்று நொடி நேரத்தில் அவர்களை பிரித்து வைத்தான் சின்னா.

அவனும் நல்ல விவரங்கள் தெரிந்த பெரிய பையன்தான். ஆனால் அடி வாங்கிய கோபத்தில், தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசிக்கொண்டே போனான்.

இந்த பேச்சில் அசலாட்சி மனதளவில் பெருத்த அடி வாங்கினாள். இந்த வீட்டில் தனக்கான இடம் இன்னும் அமையவில்லையோ என்ற சந்தேகம் வந்து அவளைக் கொன்று போட்டது.

ஒன்றரை மாதமே ஆனாலும், இங்கே தன் சகலத்தையும் பிணைத்துக் கொண்டு வாழும் இந்த வாழ்க்கையை, எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

மகளுக்கான தந்தையின் தேடலும் அந்த நேரத்தில் சேர்ந்து கொள்ள, எப்பொழுதும் தாங்கள் தனித்தீவு போல்தான் வாழ வேண்டுமோ என்று மனம் பரிதவித்தது.

“இவ்வளவு நாள் இந்த வீட்டு மனுஷியா இருந்ததுக்கு அர்த்தமே இல்லையா? இந்த மாதிரி பேச்ச கேட்கவா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?” என்று அசலாவின் வார்த்தைகள் சூடாக வந்தாலும், கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை.

ஏற்கனவே மனைவி மீது அதிருப்தி கொண்டிருந்தவனுக்கு, அந்த பேச்சு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

“எனக்கும் அதே நிலைமை தான். இத்தன நாள் ஆகியும் தள்ளி வச்சே பார்த்தா எப்படி எடுத்துக்க? உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அப்பா சொன்னாதால மட்டுமே நான் ஒத்துகிட்டேன்!” ரிஷபனும் வீம்புக்காக, மனைவிக்கு கேட்கும் படி மட்டும் பேசினான்.

இத்தனை நாட்களில் தன்னிடம் சிறிதும் ஒட்டாமல் இருக்கும் தாய், மகளின் மேல் இருந்த ஏக்கங்கள் எல்லாம் ரிஷபனின் கோபங்களாக அந்த நேரத்தில் வெளிப்பட்டன. தங்களின் மணவாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று விளங்காத பாவனையில் இருவரும் ஒருவரையொருவர் அந்த நேரத்தில் முறைத்துக் கொண்டு நின்றனர்.