30
சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை.
“எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல?”
அவன் ஆழ்மனதிலிருந்து வெளிவந்த கேள்வி அது. எந்தளவு காயப்பட்டிருந்தால் அவன் அப்படி ஒரு கேள்வியை வினவியிருப்பான்.
குற்றவாளியாக அவன் முன்னே நிற்பதை தவிர அவளால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.
இந்துவின் மௌனமும் சரவணனின் கோபமும் ஒரே அளவில் நீடித்திருந்த சமயத்தில் இரண்டையும் உடைப்பது போல கதவு தட்டும் ஓசை கேட்டது.
இந்து பதறி போனாள்.
“ஐயோ! அத்தையாதான் இருக்கும்… நான் இங்க உங்க கூட இருக்கறதை பார்த்தா என்னை திட்டுவாங்க… பேசாம நான் எங்காச்சும் ஒளிஞ்சுக்கவா… அவங்க கேட்டா நான் இங்க இல்லன்னு சொல்லிடுங்க மாமா” என்று நடுக்கத்தோடு சொன்ன மனைவியை கோபமாக முறைத்தான்.
அஞ்ச வேண்டிய விஷயத்தை எல்லாம் மிக சாதாரணமாக செய்துவிட்டு உப்புக்கு பெறாத விஷயத்திற்கு போய் பயந்து நடுங்கும் அவளை என்னதான் செய்வது என்று அவனுக்கு புரியவில்லை.
அவளின் இந்த பயம் கூட அவளின் முதிர்ச்சியில்லா தன்மையைதான் காட்டுகிறது. கதவு தட்டும் ஓசை தொடர அவளையே சென்று கதவை திறக்கும்படி பணித்தான்.
“வேண்டாம் மாமா… அத்தை திட்டுவாங்க” என்ற நொடி அவன் பார்வை மேலும் கோபமாக மாறவும், வேறு வழியின்றி அவளே சென்று கதவை திறந்தாள். அவள் எண்ணத்திற்கு ஏற்றார் போல துர்காதான் உக்கிர கோலத்தில் நின்றிருந்தார்.
மருமகளை பார்த்த நொடி அவர் கண்கள் கனலாய் மாற, “உன்னை யாருடி இங்க வர சொன்னது… நான் என்ன வேலை சொல்லிட்டு வந்தேன்… நீ அதை செய்யாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்றவர் சத்தமாக வசைபாடி கொண்டிருக்கும் போதே சரவணன் அவள் பின்னோடு வந்து நின்றான்.
மகனை பார்த்ததும் அவரின் சுருதி இறங்கி போக, “இல்லடா சரவணா… நான் அவளை” என்று இழுக்கும் போதே அவன் செய்கையில் சொன்ன விஷயம் புரிந்து, அவரின் முகம் துவண்டு போனது.
“உனக்கு மருந்து போடத்தான் நான் தம்பியை அனுப்பினேனே” என்ற போது, ‘நான்தான் அவளை மருந்து போட கூப்பிட்டேன்’ என்று சமிஞ்சை மொழியில் அவன் தெரிவிக்க அவரால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
இந்துவை கோபமாக ஒரு முறை முறைத்துவிட்டு அவர் மௌனமாக சென்றுவிட சரவணன் அவளிடம் கதவை மூடிவிட்டு உள்ளே வர சொன்னான்.
அவன் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவளை பார்க்க, “சாரி மாமா… நான் உங்ககிட்ட எல்லாத்தையும் அப்பவேசொல்லி இருக்கணும்தான்… ஆனா அந்த சமயத்துல எனக்கு உங்களை” என்றவள் தடுமாறிவிட்டு பின்,
“நீங்க என்னை பிடிக்காமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நினைச்சேன்… அதுவும் முதல வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் சம்மதம் சொன்னீங்களா? ஒரு வேளை என் அம்மாவோட கட்டாயத்துனாலதான் இந்த கல்யாணத்தை பண்ணிகிட்டீங்கன்னு கூட தோணுச்சு… அதனாலதான் உங்ககிட்ட என் பிரச்சனையை சொன்னா புரிஞ்சிப்பீங்களோ இல்லை தப்பா நினைப்பீங்களோன்னு ஒரு பயம்” என்றவள் சந்தேகமாக இழுக்க,
அவள் பேசியதை கேட்ட அவன் கோபம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.
அவள் கையிலிருந்த புத்தகத்தை பறித்து மீண்டும் வேகமாக எதையோ எழுதி கொடுத்தான்.
‘நான் உன்னை கட்டாயத்தின் பேர்ல கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்னு உனக்கு யாரு சொன்னா? நான் உன்னை மனசார விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… நீ உன் நோட்ல எழுதி வைச்சிருந்த வரியெல்லாம் படிச்சு பார்த்து உனக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்… ஆனா அதுக்காக நான் இரக்கப்பட்டோ இல்ல பரிதாபப்பட்டோ உன்னை கல்யாணம் பண்ணிக்கட்டதான் நினைச்சிக்காதே…
எனக்கு உன் அழுகையில வலியை தாண்டி உன் குழந்தை மனசு தெரிஞ்சுது… உன்னை கல்யாணம் பண்ணி நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன்… உன் சந்தோஷம் துக்கம் எல்லாத்துலையும் நான் உன் கூட துணையா நிற்கணும்னு நினைச்சேன்… ஆனா நீ என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கல”
படித்து முடித்து அதிர்ச்சி பார்வையோடு அவன் முன்னே வந்து நின்றவள், “என் நோட்டை நீங்க படிச்சீங்களா மாமா” என்று கேட்க அவன் தலையை மட்டும் அசைத்தான். அப்போதும் அவன் அவள் முகம் பார்க்கவில்லை.
“என்கிட்ட முன்னாடியே இதெல்லாம் சொல்லி இருக்கலாமே” என்றவள் ஆதங்கத்தோடு வினவ, அவன் மீண்டும் அந்த நோட்டை பிடுங்கி கோபத்தோடு பதில் எழுதினான்.
“ஒரே ஒரு முறையாச்சும் நான் பேச வந்த விஷயத்தை பொறுமையா கேட்டு இருக்கியா நீ? இல்ல என் முகத்தையாச்சும் பார்த்திருக்கியா… பேச முடியாத என்னால நீ என் முகம் பார்க்காம என் மனசுல இருக்கிறதை எப்படி சொல்ல முடியும்… நீயே சொல்லு…
என்னால மட்டும் பேச முடிஞ்சி இருந்தா எப்பவோ என் மனசுல இருக்கிறதை எல்லாம் உன்கிட்ட சொல்லி இருப்பேன்”
அவன் எழுதியதை படித்த நொடி அவள் உள்ளுர நொறுங்கி போனாள். கண்ணீர் கரை புரள அந்த கடைசி வரிகள் அவளை ஆழமாக குத்தி கிழித்தன.
மன்னிப்பு என்ற வார்த்தைக்கு கூட தான் தகுதியற்று போய்விட்டோம் என்று தோன்றவே ஊமையாக அவள் அழுதிருந்தாள்.
அவள் அழுது முடிக்கும் வரை எந்தவித எதிரவினையும் ஆற்றாமல் அவன் மௌனம் காத்தான். அந்தளவு அவனுமே அவள் செய்கைகளிலும் நிராகரிப்புகளிலும் காயப்பட்டு இருந்தானே. அந்த சூழ்நிலை அவன் மனதிலிருந்த ஆதங்கங்களை கோபமாக வெளியிட்டுவட்டது.
ஆனால் இப்போது அவள் உடைந்து அழுவதை பார்க்க மனம் தாங்காமல் அவள் கரத்தை பிடித்து அமர செய்தவன் அவள் கண்ணீரை துடைத்துவிட எத்தனிக்கும் போது அவன் கரத்தை பற்றி கொண்டவள்,
“உங்க அன்புக்கும் காதலுக்கும் நான் கொஞ்சம் கூட தகுதியானவ இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க எழுதினதை எல்லாம படிச்ச பிறகு உங்க கூட நான் ரொம்ப வருஷம் வாழணும்னு ஆசை படுறேன் மாமா” என்ற நொடி அவன் எந்த மாதிரியான உணர்விற்கு ஆட்பட்டான் என்று அவனுக்கு புரியவில்லை. அவனுக்குமே அவளுடன் வாழ நிறைய ஆசைகளும் கனவுகளும் இருந்தது. ஆனால் அப்போதைய அந்த சூழ்நிலை அவர்கள் இருவரின் எண்ணங்களுக்கும் ஏதுவாக இல்லை.
இருவரும் மோனநிலையில் அமர்ந்திருக்க, தன் மனதில் எண்ணியவற்றை அவளிடம் வார்த்தைகளாக வடிக்க எண்ணி அருகிலிருந்த நோட்டை அவன் கையிலெடுக்க போகும் போது அதனை பறித்து தூர எறிந்தவள் அவனிடம் மிக நெருக்கமாக வந்து அமர்ந்தாள்.
வாஞ்சையாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “நீங்க இனிமே எது சொல்றதா இருந்தாலும் என் கண்ணை பார்த்து சொல்லுங்க மாமா…. நான் புரிஞ்சிக்கிறேன்… எழுதி எல்லாம் காட்ட வேண்டாம்” என்றாள்.
கூர்மையாக அவன் விழிகளின் வழியே அவன் இதயத்திற்குள் நுழைய முற்படும் அவளின் கூரிய பார்வைகள் அவனை அந்த நொடி என்னவெல்லாமோ செய்தது.
அவள் மேலும், “உங்களை நான் எவ்வளவு எல்லாம் கஷ்டப்படுத்தி இருக்கேன்… அப்போ கூட நீங்க எனக்காக போலிஸ் ஸ்டேஷன் வந்ததும் இல்லாம என்னை தப்பா ஒரு வார்த்தை சொன்னதுக்காக அந்த போலீஸ்காரனை அடிச்சு… நீங்க உங்க உடம்பெல்லாம் காயப்பட்டு இருக்கீங்களே… உங்களோட இந்த அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்” என்று சொல்லி குற்றவுணர்வில் தவித்தவளை சமாதானம் செய்தவன், அந்த பேச்சை மாற்ற எண்ணி மேலே நடந்தவற்றை சொல்ல சொன்னான்.
அவன் கரத்தை அழுந்த பற்றி கொண்டவள் ஒருவித அச்சவுணர்வோடே சொல்ல துவங்கினாள்.
“சீதா கிட்ட நகையை பத்தி கேட்கணும் நினைச்சேன்தான்… இருந்தாலும் அவன்கிட்ட அது பத்தி கேட்க எனக்கு தைரியம் வரல… அந்த சமயத்துலதான் அருணுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாத போச்சு… அப்போன்னு பார்த்து அனன்யா மும்பை போயிருந்தாங்க… அந்த சூழ்நிலையில நான்தான் அருணை பார்த்துக்கிட்டேன்… அப்போ மறுபடியும் சீதா என்கிட்ட பேசுனான்”
சுரேஷின் அறையில் அருணிடம் நயமாக பேசி இந்து அவனுக்கு மருந்து கொடுத்தாள். சுரேஷ் பின்னோடு நின்று அவள் செய்கைளை பார்த்திருந்தான்.
மருந்து கொடுத்த பின் அருணுக்கு உடை மாற்றி மடியில் படுக்க வைத்து தாலாட்டினாள். அடங்கி ஒடுங்கி அவளிடம் அமைதியாக படுத்திருந்த அருணை பார்க்க சுரேஷுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இரண்டு நாட்களாக தூங்காமல் சரியாக உணவு உட்கொள்ளாமல் அவனை ராஜிமாவை என்று எல்லோரையும் பெரும்பாடுபடுத்திவிட்டான். மதுவால் கூட அவனை சமாளிக்க இயலவில்லை!
ஆனால் அருணை சமாளிக்க இந்துவால் எப்படி முடிந்தது என்பது மிகுந்த ஆச்சரியம்தான் அவனுக்கு. ஆனால் எப்படியோ அருணை சமாளித்து மருந்தும் கொடுத்து உறங்கவும் வைத்திருந்தாள்.
அவனை படுக்க வைத்துவிட்டு அவள் வெளியேற செல்லும் போது, “தேங்க்ஸ் இந்து” என்று அவன் சொல்ல,
“உன் தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்… நான் அருண் குட்டிக்காக மட்டும்தான் இதெல்லாம் செஞ்சேன்… உனக்காக ஒன்னும் கிடையாது” என்றாள்.
“எனக்கு தெரியும் இந்து”
“உனக்கு எதுவும் தெரியாது… என் பிரச்சனை என் வலி இது எதுவும் உனக்கு தெரியாது” என்றவள் அவனை முறைத்து பார்த்து, “ஆமா என் நகைங்க எல்லாம் எங்கே?” என்று கேட்டாள்.
அந்த கேள்வியில் அவன் அதிர, “என்ன வித்துட்டியா? வித்திருப்ப… இத்தனை நாளா அந்த நகையை நீ பாதுக்காத்து வைச்சிருக்க போறியா என்ன?” என்றவள் எகத்தாளமாக கேட்ட நொடி அவன் பதில் பேச வர,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… அந்த நகையை நீ என்ன பண்ணங்கிற கதையெல்லாம் எனக்கு வேண்டவும் வேண்டாம்… ஆனா அந்த நகைக்கான பணம் எனக்கு வேணும்… உன்கிட்ட அந்த பணத்தை கேட்க கூட எனக்கு விருப்பமில்லைதான்… ஆனாலும் அந்த பணத்தோட தேவை எனக்கு இப்ப இருக்கு… எங்க அப்பா எனக்காக எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டு அந்த நகைகளை வாங்கி சேர்த்திருப்பாரு… ஆனா அப்போ நான் அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம உன்கிட்ட போய் அந்த நகையெல்லாம் கொடுத்து தொலைச்சிட்டேன்…
ஆனா இப்போ யோசிச்சா அந்த நகையெல்லாம் ஏன் நான் உனக்காக விட்டு கொடுக்கணும்… அதெல்லாம் என்னோடது… அதை நீ எனக்கு திருப்பி தந்துதான் ஆகணும்… நீ நகையா தருவியோ? இல்ல பணமா தருவியோ எனக்கு தெரியாது… ஆனா தரணும்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு விறுவிறுவென அந்த அறையை விட்டு அவள் அகன்றிருந்தாள்.
அவன் மௌனமாக நின்றுவிட அவளுக்கோ அவனிடம் தான் நினைத்ததை கேட்டுவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவளிடம் வலிய வந்து அவன் பேசவே இல்லை.
மறுபடியும் அவனிடம் தானாக அந்த நகையை பற்றி பேச தயக்கமாக இருந்த காரணத்தால் அவளும் எதுவும் கேட்கவில்லை.
நாட்கள் நகர்ந்து செல்ல அன்று ஒரு நாள்.
சூரியன் மெல்ல மேற்கு திசையில் மறைந்து கொண்டிருக்க இந்து தம் வேலைகளை முடித்து வெளியே வந்திருந்தாள். அவள் தோட்டத்தின் வழியாக நடந்து செல்லும் போது சுரேஷ் அவள் கரத்தை பற்றி கொண்டு கார் ஷெட் பக்கமாக இழுத்து சென்றான்.
அவள் பதறி போனாள். “என்ன பண்ற நீ? என் கையை விடு” என்றவள் கத்த அவளை காரின் மறைவில் நிறுத்தியவன், “ஐயோ! கத்தாதே இந்து” என்றான்.
“நீ முதல என் கையைவிடு”
“கொஞ்ச நேரம் அமைதியா இரு… நான் உன்கிட்ட பேசணும்…” என்றவன் கெஞ்சலாக சொல்ல அவனை உக்கிரமாக முறைத்து பார்த்தவள்,
“இப்போ நீ என் கையை விடல நான் சத்தம் போட்டு போட்டு கத்தி எல்லோரையும் கூப்புடுவேன்” என்று மிரட்டினாள்.
“ப்ளீஸ் இந்து” என்று இறங்கிய குரலில் பேசியவன்,
“நீ இன்னும் இரண்டு நாள்தான் வருவியாம்… அப்புறம் வேற ஒரு நர்ஸ் வருவாங்கன்னு மாமா சொன்னாரு… அதனாலதான் உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்” என்க,
“ஆமா இனிமே நான் இங்க வர மாட்டேன்… எனக்கு உன் முகத்தை பார்க்க கூட பிடிக்காமதான் இங்க வரவே கூடாதுன்னு முடிவு பண்ணீட்டேன்… ஒழுங்கா இப்போ என் கையை விடு… நான் போகணும்” என்று அவன் கரத்திலிருந்து அவள் தன் கரத்தை உருவி கொள்ள போராட,
“அப்போ உனக்கு உன் நகை வேண்டாமா?” என்று கேட்டான். அவள் அந்த கணமே ஆர்வமாக அவனை ஏறிட்டு,
“எங்கே என் நகை? இப்போ வைச்சிருக்கியா?” என்றாள்.
“ஆமா உன் நகையை நான் அப்படியே வைச்சிருக்கேன்… எவ்வளவோ கஷ்டம்… பசி பட்டினியெல்லாம் வந்த போதும் கூட உன் நகைல ஒன்னே ஒன்னை கூட நான் எடுத்து விற்கணும்னு யோசிச்சதே இல்ல?” என்ற போது அவளுக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது.
அத்தனை நேரம் அவனிடம் வெறுப்பும் கோபமாக பேசி கொண்டிருந்தவள் விக்கித்து போய் நிற்க, “உன் நகை எல்லாம் உன்கிட்ட நான் கொடுத்திடுறேன் இந்து… ஆனா அது உடனே முடியாது… அருண் பிறந்த நாள் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் தர முடியும்” என்றான்.
அவன் சொன்னதை கேட்டு நகைகள் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கை துளிர்விட, “எப்போ அருணோட பிறந்த நாள்” என்று கேட்டாள்.
“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு… அருண் பிறந்த நாள் முடிஞ்சதுக்கு அப்புறம் நானே உனக்கு கால் பண்றேன்… நீ வந்து வாங்கிட்டு போ” என்றான். அவனிடத்தில் இன்னும் ஏதோ ஒரு நம்பகத்தன்மை ஒட்டி கொண்டிருந்த காரணத்தால் அவளும் மறுபேச்சின்றி அவனிடம் சரியென்று தலையசைத்துவிட்டாள்.
இந்த காட்சியை மேலிருந்து பார்த்த மதுவிற்கு இருவரும் கை பிடித்து ஏதோ ரகசியம் பேசுவது போலத்தான் தெரிந்தது. அப்படியும் கூட அவர்களை தவறாக நினைக்க தோன்றவில்லை.
சரியான சமயம் பார்த்து சுரேஷிடம் இது பற்றி கேட்க வேண்டுமென்று மது யோசித்திருக்கும் போது இந்துவிற்கு பதிலாக வேறொரு செவிலியர் பெண்மணி வேலைக்கு சேர்ந்திருந்தாள். அதன் பின் இது அத்தனை முக்கியமான விஷயமாக மது கருதவில்லை.
இந்து இனி வரபோவதில்லை என்ற காரணத்தால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தாள். ஆனால் அருண் பிறந்த நாளுக்காக தன் பெற்றோரை அழைக்க போன இடத்தில் தன் நண்பனை பார்த்து பேசிய மதுவிற்கு அவன் காட்டிய தன் மனைவியின் புகைப்படம்தான் ஆகபெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் அது குறித்து விரிவாக பேசவிடாமல் அஜய் அவளை உடனடியாக அழைத்து சென்றுவிட்டான். மனதிற்குள் ஆழமாக உருத்தி கொண்டிருந்த விஷயம் அருண் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கொஞ்சம் மறந்து போனது.
********
இந்து சொன்னவற்றையும் மது மருத்துவமனையில் சொன்னவற்றையும் சரவணன் கோரத்து பார்த்து இப்படிதான் மது இந்துவை தவறாக நினைத்திருக்க கூடும் என்பதாக ஓரளவு தெளிந்திருந்தான்.
ஆனால் நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் உச்சம் வைத்தார் போல் அடுத்து வரும் சம்பவங்கள் அரங்கேறின.
சுரேஷ் சொன்ன வார்த்தையை நம்பி நகைகளை வாங்க அவன் அழைத்த இடத்திற்கு போனதுதான் இந்து அவள் வாழ்வில் செய்த தவறுகளுக்கு எல்லாம் மிக பெரிய தவறாகி போனது.
யாருடைய துணையுமின்றி அவன் சொன்ன இடத்திற்கு சென்றது அவளின் அஜாக்கிரதை என்று சொல்வதா இல்லை அறியாமை என்று கருதுவதா?
இன்று அவளை இத்தகைய பெரிய சிக்கலில் சிக்க வைக்க காரணகாரியங்களை தேடி தந்தது சுரேஷுடனான அந்த கடைசி சந்திப்புதான்.