Nan Un Adimayadi–EPI 6

Nan Un Adimayadi–EPI 6

அத்தியாயம் 6

 

சற்று முன்பு பார்த்த

மேகம் மாறிப் போக

காலம் இன்று

காதல் நெஞ்சை கீறி போக (தவமங்கை)

 

பள்ளி முடிந்ததும் ஸ்டாப் ரூமில் புத்தகங்களை எல்லாம் தன் மேசையில் அடுக்கி வைத்தாள் தவமங்கை. நாளை என்ன பாடம் எடுக்கப் போகிறோம் என எழுதி முடித்தவள், ஆசுவாசமாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். தொண்டை வலிப்பது போல இருந்தது. இன்று அதிகமாகவே கத்திவிட்டாள்.

இவள் முன்னே பாடம் எடுக்க, பேக் பெஞ்சில் இருந்து அட்டகாசம் செய்தபடி இருந்தனர் மாணவர்கள். முதலில் நல்லபடி சொல்லிப் பார்த்தாள் தவமங்கை. சற்று நேரம் அமைதியாக இருப்பவர்கள் மீண்டும் ஆரம்பிக்க, அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தவவேங்கை முழித்துக் கொண்டது. வேங்கை உறுமிய ஒரு உறுமலில் மொத்த வகுப்பறையும் கப்சிப். மாணவர்களோடு சிரித்து விளையாடி பாடம் எடுப்பவள்தான் இவள். ஆனால் அவளுக்கு பொறுமை என்பது ஒரு எல்லைக்கோட்டில் தான் நிற்கும். அந்தக் கோட்டைத் தொட்டால் எல்லோருக்கும் ஷாக் அடிக்க வைத்து விடுவாள் மங்கை.

வகுப்பில் கத்திய கத்து, இப்பொழுது தொண்டை வலியாக உருமாறி இருந்தது. தண்ணீரை எடுத்து மடக் மடக்கென பருகினாள். அப்பொழுதும் வலி மட்டுப்படவில்லை.

இந்த லட்சணத்தில் மறைச்செல்வன் வேறு அவளது மேசை முன்னே வந்து அமர்ந்தான். அவன் வந்ததை கண்டுக் கொள்ளாமல் புத்தகத்தை எடுத்து வைத்து திருத்துவது போல பாவ்லா காட்ட ஆரம்பித்தாள் மங்கை.

“டீச்!(டீச்சருக்கு சுருக்கமாம்) இன்னைக்கு டின்னருக்குப் போகலாமா?”

“இந்த சுத்துப்பட்டு கிராமத்துல இருக்கறது ஒரே ஒரு பரோட்டா கடை! அங்க போய் உங்க ஸ்டாண்டர்ட்டுக்கு தகுந்த மாதிரி காண்டில் லிட் டின்னர் கேட்டா, கட்டை வெளக்கமாற தூக்குவான்! பரவாயில்லையா சார்?” என கேட்டவளுக்கு காளையுடன் சாப்பிட போனதும் அதன் பின் நடந்த சம்பவங்களும் ஞாபகம் வர தானாகவே முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.

திடீரென அவள் புன்னகை முகமாகவும் இவனுக்கு குஷியாகி விட்டது.

“யூ சீ டீச், கொஞ்சம் அழகா இருந்துட்டாலே ஓவர் தொல்லையாகி போகுது! நான் வேற அழகோ அழகா இருக்கேன்ல, தொல்லை வண்டி வண்டியா வருது! லாஸ்ட் கேர்ள்ப்ரேண்ட் என்னோட ரிஜேக்‌ஷன் தாங்க முடியாம ஒரே அழுகை! நீங்கதான் எனக்கு லைப், நான் தான் உங்களுக்கு வைப், நாம பேசரதுக்காகவே இருக்கு ஸ்கைப்னு வாட்சாப் முழுக்க ஒரே கவிதையா அனுப்பி வச்சு டார்ச்சர் பண்ணிட்டா! அவ தொல்லைத் தாங்காமத்தான் இப்படி ஒரு பாடாவதி கிராமத்துல வந்து ஒளிய வேண்டியதா போச்சு. இந்த ஊருல ஒவ்வொரு நாளையும் நெட்டித் தள்ளறது எவ்வளவு கஸ்டமா இருக்கு தெரியுமா? காஞ்சிக் கிடக்கற பாலைவனத்துல, பால் ஐஸ் மாதிரி குளிர்ச்சியா நீங்க ஒரு ஆளு இருக்கவும்தான் என்னால இப்பலாம் மூச்சே விட முடியுது டீச்! உங்களுக்காகவே இந்த ஊர பொறுத்துக்கிட்டுப் போறேன்!” என வழிந்து வைத்தான்.

“இங்க பாருங்க சார்!”

“பார்த்துக்கிட்டேத்தான் இருக்கேன் டீச்சர்!”

திருத்திக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள் தவமங்கை. அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தப்படி இருந்தான் மிஸ்டர் மறை. இவளுக்கு முகம் சட்டென கடுத்தது. அவனுக்கு சுட சுட நோஸ்கட் கொடுக்க கூட அவளுக்கு மூட் இல்லை. களைப்போடு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ள, செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே மூடி வைத்து விட்டு கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“என்ன டீச் பேசிட்டு இருக்கறப்பவே கிளம்பறீங்க?”

“நீங்க பேசறத கேட்டுகிட்டே இருந்தா நான் மயங்கி விழுந்துடுவேன் சார்! அதான் கிளம்பறேன்! சீ யூ டூமோரோ!” என சொன்னவள், விடுவிடுவென நடந்துவிட்டாள்.

“இவ சொன்னது எந்த மயக்கமா இருக்கும்? என் அழகுல மயங்கி விழறதா இல்ல நெஜத்துல மயங்கி விழறதா? இப்படி குழப்பிட்டுப் போறாளே! என்னவா இருந்தாலும் நான் நெஜமாவே உன் கிட்ட மயங்கி கிடக்கேன்! என்னோட நம்பர் தேர்ட்டீன் சத்தியமா நீதான் தவமங்கை டியர்” என முனகிக் கொண்டான்.

ஸ்கூட்டி வைத்திருக்கும் இடத்திற்கு வந்தவளை,

“டீச்சர்!’ எனும் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

“என்ன?” மறைச்செல்வன் மேல் இருந்த கடுப்பு குரலில் லேசாக வெளிப்பட்டு விட்டது.

பேச வந்த அவள் மாணவி கலா தயக்கமாக அவளை ஏறிட்டாள்.

“என்ன கலா, என்ன விஷயம்?”

“அது வந்து டீச்சர்..” இன்னும் தயங்கினாள்.

ஆழ மூச்செடுத்து கோபத்தையும் கடுப்பையும் கட்டுக்குள் கொண்டு வந்த மங்கை மெல்லிய குரலில்,

“சொல்லு கலா! டீச்சர் கிட்ட என்ன தயக்கம்?” என மென்மையாக கேட்டாள்.

“நம்ம கிளாஸ் பேக் பெஞ்ச் சூரி இருக்கானே, எப்போதும் எதாவது கிறுக்குத்தனமா என் கிட்ட பேசுவான். நான் தெரியாத மாதிரி போய்டுவேன் டீச்சர். இன்னிக்கு கேண்டீன்ல வச்சு பின்னால தட்டிட்டான்!” சொல்லும் போதே கண்ணில் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

இவளுக்கு சுருசுருவென கோபம் தலைக்கு ஏறியது! கிளாசில் எப்பொழுதும் ஒரே கத்தலும் கூச்சலுமாக இருப்பவனுக்கு பாடம் என்றால் மட்டும் எட்டிக்காய். இவளும் அவனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவனோடு அடிபொடி இரண்டு பேர். விளையாட்டுத்தனம் குறும்பு எல்லாம் இந்த வயதில் சகஜம்தான். ஆனாலும் அதற்கொரு எல்லை இருக்கிறது அல்லவா!

“வீட்டுக்குப் போயிட்டானா அவன்?”

“அதெல்லாம் சீக்கிரம் போகமாட்டான் டீச்சர்! பொட்டிக் கடை கிட்ட நின்னு கதை அடிச்சிட்டு இருப்பானுங்க”

“சரி, வா என் கூட!” என கலாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு அருகே இருக்கும் பொட்டிக் கடைக்குப் போனாள் தவமங்கை.

அங்கேதான் அவனும் அவன் அடிபொடியும் நின்றிருந்தார்கள். கலாவுடன் இவளைப் பார்த்ததும் பம்மினார்கள் மூவரும். அவர்கள் அருகே போனவள்,

“சூரி” என அழைத்தாள்.

பயந்தப்படி அருகே வந்தான் சூரி.

“தட்டுனியா?” என ஒற்றை வார்த்தைதான் கேட்டாள் மங்கை.

“வேணும்னே செய்யல டீச்சர்! தெரியாம கைப்பட்டுருச்சு” என அவன் சொல்லி முடிப்பதற்குள், பளீரேன விட்டிருந்தாள் ஒரு அறை. ஒரு அறை அதன்பின் பல அறைகளாக நீண்டது.

கடைக்காரரில் இருந்து, கடைக்கு வந்திருந்த அனைவரும் அப்படியே ஜெர்க் ஆகி நின்றனர். அதில் நம்மாள் காளையும் அடக்கம். மங்கை பள்ளி முடிந்து போகும் சமயம் அந்தப் பெட்டிக்கடையில் நின்றுதான் அவளுக்குத் தெரியாமல் சைட் விடுவான். அவள் கடையை நோக்கி வருவதைப் பார்த்து விட்டு அவசரமாக பின்னால் திரும்பி ஒரு ஓரமாக நின்றிருந்தவன், மங்கை வைத்த அறை தனக்கே கிடைத்த மாதிரி கன்னத்தில் ஒரு கையை வைத்தப்படி விழித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்த செவல,

“அறை சத்தம் பறை சத்தம் மாதிரி பளிச்சு பளிச்சுன்னு கேக்குதுடா காளை டோய்! இந்த எலிசுபெத்தேதான் ஒனக்கு வேணுமா மச்சி? இவள கட்டனா தெனம் ஒனக்கு எலிசுகுத்து, எலிசுமொத்துன்னு வித விதமா கிடைக்குமே. அப்புறம் ஆத்தா நெதம் ஒனக்கு எலிசுபத்து(பத்து போடுவது) போடற நெலமை வந்துடும்! சூதனமா இருந்துக்கோடா! அம்புட்டுத்தான் சொல்லுவேன், பாத்துக்கோ!!”

தவமங்கையோ தொண்டையை செறுமி சின்னவனை இன்னும் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

“இப்ப என் கையும் தெரியாம பட்டுருச்சு சூரி! இனிமே இப்படி எதாச்சும் கேள்விப்பட்டேன், அப்புறம் தெரிஞ்சே படும். புரியுதா?”

விழுந்த அறையில் காது ங்கொய்யென கேட்க, கண்ணில் நீர் வழிய குத்துமதிப்பாகத் தலையை ஆட்டி வைத்தான் அவன்.

“போ!” என சொல்லி உறுத்து விழிக்க, ஓடியே போய்விட்டான் அவன்.

“அவன் கை வச்சிட்டான்னு அழுதுட்டு வந்து நிக்காம, ரெண்டு குடுத்துட்டு வந்திருந்தினா என் ஸ்டூடெண்ட்னு பெருமைப்பட்டுருப்பேன்! பொம்பள புள்ளைங்களுக்கு தைரியம் வேணும் கலா! இவனுக்கே பயந்து ஒடுங்கிப் போனா காலேஜ்ல, வேலை இடத்துலன்னு இன்னும் நூறு பேரு இவன மாதிரி இருப்பானுங்க! எப்படி சமாளிப்ப நீ? இந்த வாரத்துல இருந்து டீச்சர் கராத்தே சொல்லித் தரேன், வந்து கத்துக்கோ! தற்காப்பு கலை தெரிஞ்சா தைரியம் தானா வந்துடும்! எங்க, எப்போன்னு நாளைக்கு சொல்லறேன்!” என அவளை அனுப்பி வைத்தவள் ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

அவள் திரும்பிப் பார்க்காமல் போவதையேப் பார்த்திருந்த காளை மெல்லிய குரலில்,

“நீ பார்த்துட்டுப் போனாலும்

பார்க்காம போனாலும்

பார்த்துகிட்டேதான் இருப்பேன்” என பாடினான்.

“இந்த ஜென்மத்துல அத மட்டும்தான் உன்னால செய்யமுடியும்டா டேய்! ஏன் மச்சி, கராத்தேன்னா ஜாக்கி சான் போடுவாறே அந்த சண்டைதானே?”

அவள் கிளம்பியதும், காளையிடம் சந்தேகம் கேட்டான் செவல.

“கராத்தே தெரியல நீயெல்லாம் ஊருக்குள்ள ஆம்பளைன்னு சொல்லிட்டுத் திரியற! நம்ம அண்டேர்டேக்கர் போடுவாறே அதுதான்டா கராத்தே”

“அண்டர்டேக்கர் கராத்தே போட்டாரோ இல்லையோ, டீச்சர் மேல நீ ஒரு இதுவா சுத்திட்டு இருக்கேன்னு தெரிஞ்சா டீச்சர் உன்னை கட்டையில போட்டுருவாங்க!”

“உன் ஊத்த வாயில இருந்து நல்லதா நாலு வார்த்தை வரவே வராதாடா பரதேசி! கட்டையில போனாலும் என் எலிசுக்கு கணவனாதான்டா போவேன்!”

“கடவுள் உனக்கு சாந்தியைக் கொடுக்கனும்னு வேண்டிக்கறேன்டா! ஓம் சாந்தி டிஸ்கோ சாந்தி!” என வானத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டான் செவல.

கடையில் ஒற்றை பீடியை வாங்கி ஒரு இழுப்பு இழுத்தவன், காளையிடம் நீட்டினான்.

“பீடிலாம் வேணான்டா இனிமே”

“ஏன் வேணாம்? இல்ல ஏன் வேணாங்கறேன்?”

“இது குடிச்சா நாறி தொலையும்டா! டீச்சர் கிட்ட ஒன்னு ரெண்டு வார்த்தை நின்னுப் பேசுவேன்! அப்போ வாய் வாசமா இருந்தாத்தானே டீச்சருக்கு மத்த மத்த நெனப்பெல்லாம் வரும்!”

“பேசரதுக்கே பீடியை விட்டுட்டியாடா! அடங்கொக்கமக்கா! டீச்சருக்கு மத்த நெனப்பு வராதுடா டோய், மொத்தற நெனைப்பு தான் வரும்! இவன் பண்ணற அநியாயத்த கேக்க இந்த ஊருல யாருமே இல்லையா!”

“இந்த காளைய ஒரு வார்த்தை கேக்க எவனுக்குடா தில்லு இருக்கு! வகுந்துருவேன் வகுந்து” என மீசையை முறுக்கியவன் வேட்டியின் நுணியைப் பிடித்துக் கொண்டு,

“என் டீச்சர கடுப்பாக்கிட்டுப் போனானே அவன் மாரிமுத்து பையன் தானேடா செவல? இந்த வயசுல பொட்டப்புள்ளய தட்டிப் பார்த்துருக்கானே, எம்புட்டு தெனாவெட்டு இருக்கும்! வாடா, போய் நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு வருவோம்” என அழைத்தான்.

“இந்தக் காலத்துப் பயலுங்க அடங்கமாட்டறானுங்கடா மச்சி! அவன் வயசுலலாம் நாம ஆத்துல எப்படிடா யாருக்கும் தெரியாம அம்மணக்கட்டையா குளிக்கறதுன்னு பிளான்னு போட்டோம்! இதுங்க என்னான்னா இந்த வயசுலயே அப்பன் ஆத்தா ஆவறதுக்கு பிளான்னு போடுதுங்க! எல்லாம் காலக் கொடுமை” என பேசிக் கொண்டே நகர்ந்தார்கள் இருவரும்.

செவல பைக்கை ஓட்ட,

“வீட்டுக்கு ஒரு எட்டு விடுடா செவல! ஆத்தாவ பார்த்து ஓன் நிமிட் பேசிட்டுப் போயிடலாம்” என சொல்லியவன் களைந்திருந்த முடியைக் கோதி இன்னும் களைத்து விட்டுக் கொண்டான்.

இவன் வீட்டுக்குள் நுழையும் போது, காலைக் கழுவி விட்டு ரூமுக்குள் நுழைந்திருந்தாள் மங்கை. அவள் கண்ணில் படாமல் போக,

“ஆத்தா” என மெல்லிய குரலில் அழைத்துக் கொண்டே சமையல் கட்டுக்குள் நுழைந்தான் காளை.

காமாட்சி அங்குதான் பலகாரம் செய்துக் கொண்டிருந்தார். ஆனால் நிமிர்ந்துப் பார்த்து அவனிடம் ஒரு வார்த்தைப் பேசவில்லை. போன வெள்ளியில் இருந்து இப்படித்தான் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார் அவர். இவனும் கொஞ்சி, கெஞ்சி என்னன்னவோ செய்து விட்டான். அவரை மலை இறக்க மட்டும் முடியவில்லை. மகனுக்காக பரிந்துக் கொண்டு வந்த மச்சக்காளையும் இப்பொழுது சுவற்றோடுதான் பேசிக் கொண்டிருக்கிறார். மங்கையிடம் மட்டும்தான் பேச்சு வார்த்தை வைத்திருக்கிறார் காமாட்சி.

போன வெள்ளிக்கிழமை மப்பில் வந்து மங்கையின் ரூம் கதவைத் தட்டியவன் பாடியது மட்டுமில்லாது,

“எலிசு! நீ கீறி விட்ட காதல் காயம் ஆறிப்போச்சு எலிசு! இப்போ வந்து இன்னொரு பக்கம் ஆழமா கீறிவிடு! தெனம் அதத் தடவி தடவி நான் லவ்வு ஃபீலு ஆகனும்! வா எலிசு” என கெஞ்ச ஆரம்பித்தான்.

வெளியே போய் நான்கு அப்பு அப்பலாமா என யோசித்தவள்,

‘முத்துக்காளையாச்சும் ஒரு முறை முறைச்சா பம்மிட்டுப் போவான். இந்த மொரட்டுக்காளை காட்டுப்பையன்! மொத சந்திப்புல கட்டிப்புடிச்சான், ரெண்டாவதுல முத்தம் குடுத்தான்! மூனாவதுல என்ன செய்ய காத்திருக்கானோ! ரூமுக்குள்ளேயே இருக்கறதுதான் புத்திசாலித்தனம்! இப்போ வேகம் முக்கியமில்ல, விவேகம் தான் முக்கியம்’ என முடிவெடுத்தவள் கதவின் மேல் சாய்ந்து அமைதியாக நின்றுக் கொண்டாள்.

தன் தலையாலே கதவை டொங்கு டொங்கென தட்டிக் கொண்டிருந்தவன்,

“எங்காத்தாக்கு அறிவே இல்ல எலிசு! வீட்டுக்கு வந்த மகாலெட்சுமிய கொண்டு வந்து ஒரு மூலையில ஒக்காத்தி வச்சிருக்கு! நீ என் தேவதை எலிசு! இந்த வீடே ஒன்னுதுதான்! தோட்டம் தொரவு அம்புட்டும் ஒன்னதுதான்! எனக்கு ஒரே ஒரு எடம் மட்டும் குடு எலிசு! எங்கன்னு கேக்க மாட்டியா? நீ கேக்கலைனாலும் நான் சொல்லுவேன்! ஒன் நெஞ்சோரமா தம்மாத்தூண்டு எடம் குடு எலிசு! பாய் போட்டு அக்கடான்னு படுத்துக்குவேன்! குடுப்பியா எலிசு?” என புலம்பியவன்,

“தத்தோம் தத்தோம் தைய தக்கத்தையா” என சுதியை ஏற்றினான்.

‘ஐயய்யோ பாட போறான் போலிருக்கே!’

“இடம் தருவாயா மனசுக்குள்ளே

மை எலிசு

இடம் தருவாயா மனசுக்குள்ளே” என கத்திப்பாட காமாட்சியும் மச்சக்காளையும் எழுந்து வந்திருந்தார்கள்.

“கடவுளே! இவன் அடங்கமாட்டறானே நான் எங்க போயி சொல்ல! அடேய் காளை! வீட்டுக்குள்ளற வந்து தொலைடா பாவி பயலே”

“ஆத்தா, ஆத்தா! சத்தம் போடாதே! மை எலிசு தூங்குது”

“நீ போட்ட சத்தத்துல நம்ம மாடுங்க கூட முழிச்சிருக்கும்! அந்தப்புள்ள இந்நேரம் முழிக்காமலா இருக்கும்! எந்த சனியன் உன்னைப் புடிச்சு ஆட்டுதோ தெரியலையே! ஏன்டா இப்படிலாம் பண்ணுற” என கத்தியபடியே அவனை மச்சக்காளையுடன் சேர்ந்து பிடித்து இழுத்தார்.

வரமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்தவன், அப்படியே மங்கையின் ரூம் அருகே சப்பளங்காலிட்டு அமர்ந்தான். காமாட்சிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது! அமர்ந்திருந்தவன் முதுகிலேயே படீர் படீரென நான்கு அடி அடித்தார்.

“அடிக்காதத்தா! ஒனக்கு கையி வலிக்கப் போகுது”

“எடேய் காளை! குடுச்சுப்புட்டு நான் எம்புட்டு ஸ்டேடியா நிக்கிறேன்! நீ ஏன்டா இப்படி அலும்பு பண்ணற? வந்து படுடா!” என சத்தம் போட்டார் மச்சக்காளை.

“டாடி எனக்கு ஒரு டவுட்டு!” ஆதித்யா சேனல் போல சொன்னவன்,

“மச்சக்காளையில இருந்து இந்த முத்துக்காளை வந்தேனே! அதே மாதிரி இந்த முத்துக்காளையில இருந்து மயிலைக்காளை எப்போ வருவான்? சொல்லுங்க டாடி சொல்லுங்க” என ராகம் போட்டு கேட்டான்.

“காமு! பேரப்பையனுக்கு பேருலாம் பார்த்து வச்சிட்டான்டி உன் புள்ள! ஒனக்கு வேலை மிச்சம்”

“இவன இழுத்துட்டுப் போய் உள்ள படுக்க வையிய்யான்னா, எடக்கு பேசிட்டு இருக்க! இப்படி குடிச்சுட்டு வந்து அட்டகாசம் பண்ணுறானே, அந்தப் புள்ள மனசு என்ன பாடு படும்னு நெனைப்பு வேணா? ஒசந்த படிப்பு படிச்ச டீச்சருய்யா அது! நம்மள பத்தி என்ன நெனைக்கும்?” குரல் கம்மியது அவருக்கு.

உள்ளே கேட்டு கொண்டிருந்தவளுக்கு மனது தாளவில்லை. கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். படக்கென எழுந்து நின்றான் காளை.

“எலிசு!” முகமெல்லாம் சிரிப்பு.

அவன் கண்களை நேராகப் பார்த்து,

“போய் படுங்க” என சொன்னாள் தவமங்கை.

தலையை எல்லாப் பக்கமும் உருட்டியவன்,

“தோ, போயிட்டேன் எலிசு!” என அவளைத் திரும்பி திரும்பி பார்த்தப்படியே உள்ளே போனான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இவளைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் காமாட்சி. ஓடி வந்து அவரின் கையைப் பற்றிக் கொண்டாள் மங்கை.

“என்னாத்தா என்னைப் போய் கும்புடுறீங்க!” இவளுக்கு கண் கலங்கி விட்டது.

“இவன் பண்ணறது ரொம்ப தப்புத்தா! என்ன கிறுக்கு திடீர்னு புடிச்சு ஆட்டுதுன்னு தெரியல. இவ்வளவு நாளு சரக்கடிச்சுட்டு சத்தமில்லாம படுத்துக்குவான். வாரம் முழுக்க நாயா பேயா உழைக்கறானே, ஒரு நாள் தானே உடம்பு வலிக்கு குடிக்கிறான்னு நானும் விட்டுப்புட்டேன். என் புள்ளயா இருந்தாலும் அவன் குடிச்சுப்புட்டு உன் கிட்ட ரோதனை பண்ணறது தப்புத்தான். இங்க நீ இருக்க வேணாம்! உனக்கு நானே வேற இடம் பார்த்து தரேன்த்தா தங்கறதுக்கு! அது வரைக்கும் பொறுத்துக்க” என சொல்லியவர் உள்ளே சென்று விட்டார்.

மகனுக்குத் தெரியாமல் பெரிய தனக்காரரிடம் மங்கைக்கு வேறு நல்ல இடமாக பார்க்க சொல்லி விட்டிருந்தார் காமாட்சி. இன்னும் எதுவும் சரிவர அமையவில்லை.

“ஆத்தா! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாம இருப்ப? நான் தான் அப்பாரு மேல சத்தியம் வச்சிட்டேன்ல, இனிமே குடிச்சா செவல வீட்டுலயே தங்கிக்கிடறேன்னு! என்னை நம்புத்தா”

அவரிடம் அதற்கும் பதில் இல்லை.

“ஆத்தா!” என அவர் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டான் காளை. அம்மா மகன் பேசும் போதே அங்கு வந்திருந்தாள் மங்கை. அவர்களை டிஸ்டர்ப் செய்யாமல் வெளியேயே ஒதுங்கி ஓரமாக நின்றிருந்தாள்.

“தொண்டை வலிக்கு கஷாயம் போட்டுக் குடுத்தா”

மகனுக்கு வலி எனும் வார்த்தையிலேயே கோபத்தைக் கை விட்டவர்,

“என்னடா ஆச்சு? ஏன் திடீர்னு தொண்டை வலிக்கிது? வீணாப்போன சரக்க குடிச்சுப்புட்டியா?” என கேட்டவர் கஷாயம் வைக்க ஆயத்தம் செய்தார்.

அவர் கஷாயம் வைத்து முடிக்கும் வரை காத்திருந்தவன்,

“இன்னிக்கு டீச்சர் குரலே சரியில்லத்தா! பேசறப்போ தொண்டைய செறுமி செறுமி பேசனாங்க! வலிக்குது போல, கைய வேற தொண்டையில வச்சு தடவி விட்டுக்கிட்டே இருந்தாங்க. அதுக்குத்தான் போட சொன்னேன். அவங்களுக்கு குடுத்து குடிக்க சொல்லுத்தா! எனக்கு வேலை கெடக்குது” என சொல்லியவன் விடு விடுவென வெளியே நடந்து விட்டான். அங்கேயே நின்றிருந்தால் ஆத்தாவிடம் வாங்கி கட்டுவது நிச்சயம் என அவசர வெளிநடப்பு செய்தான் காளை.

அவன் பேசியதை கேட்ட மங்கை என்ன மாதிரியாக உணர்ந்தாள் என அவளுக்கேப் புரியவில்லை.

“அட கெரகம் புடிச்சவனே! இதுக்குத்தா இந்த பம்மு பம்முனியா! அவங்களுக்கு கஷாயம் போட்ட கையோட உனக்கு பாயாசத்த போட்டுருக்கனும்டா” என முனகியபடி திரும்பியவர் பார்த்தது, அடுப்பு மேடையில் தான் வைத்திருந்த கஷாயத்தை குடித்துக் கொண்டிருந்த மங்கையைத்தான்.

கஷாயம் காதல் மாயம் செய்யுமா காதல் காயம் செய்யுமா?????

 

(அடிபணிவான்)

error: Content is protected !!