ponnoonjal16

ஊஞ்சல் – 16

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக…

என்ற தமிழ் பாடலை பாடிமுடித்த சகோதரிகள் தொடர்ச்சியாக,

அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு
பதிவேல சேஷுல படகல மயமு…

என்ற அன்னமாச்சார்யா தெலுகு கீர்த்தனையை பாடி, அனைவரையும் தங்கள் குரலால் வசியம் செய்து கொண்டிருந்தனர்.

தந்தையின் சிலம்பாட்டத்தை கற்றுத் தேர்ந்தவர்கள், தாயின் ஆசைக்கிணங்க சங்கீதத்தில் சற்றே தேர்ச்சி பெற்றிருக்க, அவர்களின் பாட்டு அரங்கேற்றம் தற்போது நடந்து கொண்டிருந்தது.

தங்களோடு பயின்ற மற்ற மாணவர்களையும் மேடையேற்றி பாட வைத்து, ஏககொண்டாட்டமாக அந்திப் பொழுதை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

“சின்னையா நீயும் பாடு!” என்று அழைத்தாள் பத்தொன்பது வயது பொம்மி. தான் சொன்னபடியே பள்ளி இறுதியாண்டினை நல்ல முறையில் முடித்து, வேளாண்மை இளம் அறிவியல்(பிஎஸ்சி அக்ரீ) இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கிறாள். நகரி மண்டல கிராமத்தை சேர்ந்த ஊருக்கு ஒதுக்குப்புறமான விவசாயகல்லூரி என்பதால் விடுதியில் தங்கி வார இறுதியில் வீட்டிற்கு வருகை தருகிறாள்.

“என்கூட பாடுதாவா(பாடுறியா) அண்ணயா? ஃபிரண்ட்ஸ் சாங் பாடுவோம்” எப்பொழுதும் போல் கொஞ்சி கொண்டு அண்ணனின் மடியில் அமர்ந்தாள் ஏழாம் வகுப்பு படிக்கும் பனிரெண்டு வயது அஜுகுட்டி. உடன்பிறந்தவர்களின் பிரிவு அவளை வாட்டி வதைக்க, அவர்கள் வரும் பொழுது நிமிடநேரமும் விட்டுப் பிரியாமல் இருப்பாள்.

“இல்லரா ரோஸ்குட்டி… அண்ணயா பாடினா அனகோண்டா வந்து ஆடும்! நான் லாஸ்ட்ல வந்து வோட் ஃஆப் தேங்க்ஸ் சொல்லிட்டு போறேன்” என்று சொன்னவன் இருபத்தைந்து வயது சின்னா. இனி சின்னாவை பத்ரி என்றே காண்போம்.

“கீழே இறங்குடி! இப்படியெல்லாம் உக்காரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?” என்று கண்டித்தவள் அசலாட்சி. பெரியவளை கண்டிக்கும் வேலையை இப்பொழுது சின்னவளுக்கு மாற்றியிருந்தாள். தாயின் கண்டிப்பில் முகம் சுருக்கிய மகளைப் பார்த்தவுடன் வாஞ்சையாக அவள் கன்னத்தை தட்டியபடியே,

“வெளியிடத்துல சத்தம் போடாதே சாலா!” – ரிஷபன்.

“ரோஸ்குட்டி ரொம்ப பாவம்மா… தனியா உன்கிட்ட மாட்டிகிட்டா!” சிரித்தபடியே பொம்மியும் அரவணைத்துக் கொள்ள,

“நா செல்லம்மா! எனக்கு எப்போவும் கை குழந்ததான்” என்று அன்பொழுக பாசமழையில் நனைய வைக்கும் பத்ரி, தனது பணியிடத்தில் காட்டும் முகமே வேறு!

ஐந்தரை வருட எம்பிபிஎஸ் படிப்பை சித்தூர் மருத்துவக் கல்லூரியில் முடித்த பத்ரி சீனிவாசன், எம்.எஸ் கார்டியாலஜியை படிக்கவென விஜயவாடா சென்றான்.

இரண்டு வருடங்கள் அந்த படிப்பையும் முடித்து விட்டு, மீண்டும் தான்படித்த சித்தூர் கல்லூரியை சேர்ந்த மருத்துவமனையில் தற்போது இதயநோய் அறுவை சிகிச்சை பயிற்சி நிபுணனாக பணியாற்றி வருகிறான்.

இவனது ஜூனியர்களுக்கு எப்பொழுதும் கண்டிப்பு காட்டும் ஆசானாக, தயவு தாட்சண்யமின்றி தவறுகளை சுட்டிக் காட்டுபவன். மருத்துவத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதில் தேர்ந்தவன். கம்பீரத்தையும் கண்ணியத்தையும் ஒரே பார்வையில் காட்டும் நல்லவன்.
*******************************************

சித்தூர்… பிரபல ***** பல்நோக்கு மருத்துவமனையும் கல்லூரியும் சேர்ந்த தங்கும் விடுதியின் ஒருஅறை,

“மஹதி… மஹி… எழுந்திரிடி, கார்டியோக்கு ஆள் வந்தாச்சு, சீக்கிரம் ரெடியாகு” என்று தனது தோழியை எழுப்பிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

நேற்று இரவு ஒரு பிரசவகேஸ் முடித்து விட்டு வந்ததால் மஹதி தூங்கியதே விடிகாலையில்தான். அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிக்கு நினைவு திரும்பும்வரை அங்கேயே வேண்டியதை செய்து விட்டு வந்திருந்தாள்.

இவர்கள் தற்போது படிக்கும் கடைசி வருட படிப்பில் மருத்துவமனையில்தான் அதிக வேலை இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் மருத்துவத்தை மனதில் கொண்டு ஆரம்ப நாட்களில் வேலை செய்தால் மட்டுமே, தகுந்த அனுபவங்களை பாடங்களாக கற்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் அப்படித்தான் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து விட்டு வருவார்கள்.

மஹதி இருக்கும் குழுவின் இண்டர்ஷிப் காலத்தில் கார்டியோ அறுவை சிகிச்சை பற்றி அறிந்து கொள்வதற்காக காத்துக் கொண்டிருந்தனர். இரண்டு முறை தள்ளிப்போன வாய்ப்பு எதிர்பாராத விதமாக இன்று கிடைத்திருக்க, அரக்க பரக்க தோழிகள் இருவரும் ரெடியாகிச் சென்றனர்.

“நமக்கு வரவேண்டிய டாக்டர் எமர்ஜென்சியா வெளியூர் போயிட்டதால வேற ஒருத்தர் வந்திருக்காராம் மஹி! இவரும் புதுசுன்னு சொன்னாங்க” – சஞ்சனா.

“யாரா இருந்தா என்னடி? நமக்கு கிளாஸ் நடந்தா சரி” என்று மஹதி சொல்ல, வேகமாக மருத்துவமனையை அடைந்தார்கள்.

தங்களுக்குரிய மாஸ்க் மற்றும் ஸ்க்ரப்ஸ் அணிந்து கொண்டு மூச்சு வாங்கியபடியே அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் ஆஞ்சியோகிராம் செய்வதற்காக முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்க, நெடியவன் ஒருவன் இவர்களை மறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனை பின்புறமாக நின்று பார்த்த தோழிகளுக்கு அங்கே நடப்பது சரியாக தெரியாததால்,

“கொஞ்சம் முன்னாடி போய் பாப்போமா?” என்று பேசியபடியே முன்னேற,

“அவுட் மை ஓ டி(OT)” என்று மெதுவான குரலில் நெடியவன் பேசினாலும், அதில் அத்தனை கோபம் தெரிந்தது. அவனது கவனம் முழுவதும் நோயாளிடம் இருக்க, தோழிகள் இருவரும் அங்கே வேகமாக வந்து நின்றதும் அமைதியை குலைக்கும் விதமாக பேசியதும் சேர்ந்து அவனது காது உள்வாங்கியிருந்தது. அவனது உத்தரவை கேட்டதும் இருவரும் செய்வதறியாது நிற்க,

“லேட்கம்மர்ஸ், டோன்ட் ஸ்டாண்ட் ஹியர்” அதே தோனியில் கூற,

“சாரி டாக்டர்! லேட்நைட் கேஸ் இருந்தது” என்ற விளக்கத்தை கேட்கவும் அவன் தயாராக இல்லை.

“இப்போ வெளியே போகலைன்னா, அடுத்து என்கூட எந்த சர்ஜரியும் அட்டென்ட் பண்ண முடியாது, மைன்ட்இட்!” என்று அமைதியாக சீற, வேறு எந்த பேச்சும் இல்லாமல் வெளியேறி இருந்தனர்.

“வரவர இந்த பத்ரி சீனிவாசன் என்னைக் கதற வைக்கணும்னே, நான் இருக்குற இடமா பார்த்து வர்றானோன்னு தோணுது சஞ்சு” – மஹி.

“ஏன்டி அப்படி சொல்ற?” – சஞ்சு.

“பின்ன என்ன? காலேஜ் சேர்மன் பொண்ணுன்னு கூட பார்க்காம, எப்படி விரட்டி விட்றான்! ஒருநாள் என்கிட்டே மாட்டாமலா போய்டுவான்… அடேய் பத்ரி! அன்னைக்கு இருக்குடா உனக்கு கச்சேரி…” என்று சூளுரைக்க,

“இப்போ எதுக்குடி டிஆர் அவதாரம் எடுக்குற?”

“வேற என்ன செய்ய சொல்ற? ஒரு ஃபிரண்ட்லி அப்ரோச் கூட வேண்டாம்னு சொல்றவன்கிட்ட, பிச்சை போடுன்னா கெஞ்ச முடியும்?” என்று சொன்னவளின் மனதில் முனுக்கென்று ஒருவலி நெருஞ்சி முள்ளாய் தைத்தது.

எப்படியும் அறுவைசிகிச்சை முடிந்து சிசியு(கிரிடிக்கல் கேர்யூனிட்) வந்து நோயாளியை பார்த்துவிட்டே செல்வான் என்பது நிச்சயம் தெரியுமாதலால், அங்கேயே தோழிகள் இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர். வந்தவன் கொஞ்சமும் இவர்களை கண்டுகொள்ளாமல் நோயாளியை பரிசோதித்து விட்டு முன்னேற,

“எக்ஸ்யூஸ்மி சார்! இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சாரி” என்று சஞ்சனா தானாகவே சென்றுபேச,

‘வணங்காதவன்கிட்ட, வாங்கிக் கட்டிக்க வாண்டடா போகனுமா?’ முனுமுனுத்தவாறே கடனே என்று தோழியின் அருகில் நின்றாள் மஹதி.

“கொஞ்சமும் மேனர்ஸ் இல்லையா? ஓ டி க்குள்ள இப்படிதான் ஓடி வந்து பேசுவாங்களா? அங்கே என்ன சர்க்கஸா நடக்குது? முண்டி அடிச்சிட்டு வந்து பாக்க?” காட்டமாக ஆரம்பித்தான் பத்ரி.

“டைம் ஆகிடுச்சுனு வேகமா வந்தோம் டாக்டர்!” – சஞ்சு.

“லேட்டா வந்தா சர்ஜரி வீடியோ இருக்கு, அது பார்த்து தெரிஞ்சுக்கலாமே? அங்கே நின்னு வேகமூச்சு விடகூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இத்தன கலாட்டா பண்ணி வேலை பாக்குறவங்க கவனத்தை சிதற வைக்கிறீங்க?” முகத்தில் கடுப்பை ஏகத்திற்கும் ஏற்றியிருக்க, கோபத்தை வார்த்தைகளால் அலங்காரப்படுத்தினான்.

“மஹதி! சேர்மன் பொண்ணா மட்டுமே இங்கே வரணும்ன்னா, அவர் ரூம்லயே இருந்துரலாம். சர்ஜரி அட்டென்ட் பண்ணனும்ங்கிற அவசியமில்ல. இத உங்க அப்பாவே உங்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கார், ஆம் ஐ ரைட்?” என்று அவளுக்கும் சேர்த்தே கொட்டு வைத்துச் சென்றான் பத்ரி.

“என்னடி மஹி… உனக்கு வில்லன் இவன் மட்டும்தான்னு நினைச்சா, உங்க அப்பாவுமா?” – சஞ்சு.

“அதை ஏன் கேக்குற? எங்கப்பா சத்தமில்லாம சட்டம் போட்டத, இவன் புத்தகமாவே எழுதுவான். பெரிய மிலிட்டரி பரம்பரை போல இவன் குடும்பம்” என்று மஹதி பொரிந்து தள்ள,

“ஏன் இவ்ளோ காண்டு? நம்மகிட்டதானே பேசிட்டு போறான்! அதுக்கு ஏன்டி அவன் குடும்பத்தையே இழுக்குற?” – சஞ்சு.

“எனக்கு வேண்டுதல், இவன நினைக்கிறப்ப எல்லாம் இவன் குடும்பத்தயும் நினைக்க வேண்டியிருக்கு” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட்டு தன் இருப்பிடம் சென்று விட்டாள் மஹதி.

பத்ரியை இன்று நேற்றல்ல, கடந்த ஐந்து வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் மஹதி. மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டில் நுழைந்ததும் தனது தந்தை ராகவனே, பத்ரியை அறிமுகம் செய்து வைத்து தேவையான சந்தேகங்களை கேட்டுக் கொள்ளுமாறு அனுமதி கொடுத்திருக்க, மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த பத்ரியும் அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான்.

அவனது கண்ணியமான பார்வை, பொறுமையான விளக்கங்கள், அக்கறையான பேச்சுகள் என அனைத்தும் மஹதியை சலனப்படுத்தினாலும், தன்படிப்பில் கவனம் செலுத்தி அதனை மறக்கடித்திருந்தாள்.

பெற்றோர் மற்றும் அண்ணன் என்ற சின்னக் குடும்பத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் வளர்ந்த பெண்ணிற்கு பத்ரியின் தங்கைகள் புராணமும், பெற்றோரின் அக்கறையும் கேட்டு மனதை பூரிக்கசெய்ய, அவர்கள் குடும்ப கதையை கேட்பதற்காகவே ஆவல் கொண்டு அவனுடன் பழக்கத்தை தொடர்ந்தாள்.

பொதுவாக சந்தேகம் என்பது ஒருமுறை, இரண்டு முறை என்றால் தீர்த்து வைத்து விடலாம். ஆனால் மஹதியோ பத்ரியுடன் பேச வேண்டுமென்றே ஓயாமல் சந்தேகங்களைக் கேட்க, சூட்சும புத்தி உள்ளவன் சரியாக புரிந்து கொண்டு விலக ஆரம்பித்தான்.

அவனது விலகல் ஏன் என்று புரியாமல் மீண்டும் அவனை தேடிப்போக, பட்டுக் கத்தரித்தார்போல் பேசி அவளை விலக்கி வைத்தான்.

“மஹதி… உன்னோட ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ல என்னை சேர்க்காதே! உன்னோட டைம்பாஸ்க்கு இங்கே வர்றதா இருந்தா ஸ்டாப் பண்ணிக்கோ! எனக்கு நிறைய படிக்கணும்” பத்ரியின் நேரடியான பேச்சு, செல்லமாக வளர்ந்தவளுக்கு கோபத்தை வரவைத்தது.

“ஒஹ்… என்னை வெட்டியா ஊர் சுத்துறவனு சொல்றீங்களா சீனியர்?” பதிலுக்கு இவளும் திமிரோடு எகிற,

“லிசன் மஹி! உன்னப் போல ஹைசொசைட்டி பசங்களுக்கு இந்த மாதிரி பழக்கம் ஈஸி. பட் எனக்கு அப்படியில்ல… எனக்கான பொறுப்புகள் நிறைய இருக்கு. சோ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்” என தன்நிலையை விளக்கினான்.

“அப்போ நான் சரியில்லன்னு சொல்ல வர்றீங்களா பத்ரி?” அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல், ரோசத்துடன் பேச,

“நான் அந்த அர்த்ததுல சொல்லல மஹி!”

“போதும் பத்ரி, உங்ககூட பேசினா மனசு கொஞ்சம் ரிலாக்ஸான ஃபீல் வந்ததாலதான், அடிக்கடி உங்கள வந்து பார்த்தேன். ஆனா அதுவே என்மேல உங்களுக்கு தப்பான அபிப்பிராயத்தை வரவச்சுடுச்சு! இனிமே உங்கள தேடி வரமாட்டேன் குட்பை!” தன்னை ஒருவன் நிராகரித்து விட்டான் என்ற மனப்பொருமலில், அவன் மீது அடங்காத கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

அவள் நினைத்தைப்போல், அவனை அத்தனை எளிதாய் கடக்க முடியவில்லை. தன்னை இவன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபம், ஆதங்கமாக மாறி மனதை எந்நேரமும் சஞ்சலப்படுத்திக் கொண்டே இருந்தது.

பத்ரி எம்‌எஸ் படிக்க விஜயவாடா சென்றபோது சற்று அடங்கியிருந்த அவள் மனம், அவன் மருத்துவனாக இங்கே பணிபுரிய வந்த பொழுது மீண்டும் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது.

பத்ரியும் அவளை பார்க்கும் பார்வையில் சிறிதும் மாற்றம் கொள்ளாமல் முன்னைப் போலவே அவளை தள்ளி வைத்தே பேச்சில் வதைத்துக் கொண்டேயிருக்க, அவளும் தன்உள்ளக் குமுறல்களை அடக்கி வைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

தான் யதார்த்தமாக பழகிய பழக்கத்தைக் கூட அவன் வேறு ஒரு பார்வையில் கண்டது பேதையவளை தவிக்க வைத்து, ‘அப்படி இருந்தால் என்ன குறைந்து போய்விடுமாம்’ என்ற இடக்குமடக்கான கேள்வியும் கேட்டு, ஏறக்குறைய அவனது அன்பான பார்வைக்கு ஏங்கிப் போனாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைசி வருட படிப்பு முடிய இன்னும் மூன்று மாதங்களே இருந்தது. மேற்படிப்புக்கு வேறு இடத்தில் மாற்றம் செய்து கொண்டால், தனது மனநிலை மாறக்கூடும் என்று மஹதி தன்னைத்தானே சமாதானப்படுத்தி வந்தாள்.

ஆனால் அவள் தந்தை ராகவன், மகளுக்கு மணம் முடித்து வைத்தே மேற்படிப்பை தொடர செய்யலாம் என்ற யோசனையில் மகள் மற்றும் மகனின் திருமண பேச்சை ஆரம்பித்திருந்தார்.

தனது அயராத உழைப்பால் சிறிய மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவம் பார்க்கும் வகையில் உயர்த்தி மருத்துவ சாம்ராம்ஜயத்தின் உச்சியை தொட்டிருக்கிறார் ராகவன்.

மருத்துவம் பழக ஏதுவான இடம் கல்லூரி விடுதிதான் என்று தெரிந்து மகளை அங்கேயே தங்கவைத்து, அவரும் மருத்துவமனையிலேயே தங்கிக் கொண்டிருக்கிறார்.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு விஜயம் செய்து மனைவியை சந்திப்பவர், வெளிநாட்டு தொழில் அனுபவத்தை கற்கவென மகனை கனடாவில் வேலை செய்ய அனுப்பி வைத்திருக்கிறார். எக்காரணம் கொண்டும் தனது தொழில் பிள்ளைகளினால் சிதறடிக்கப் படாமல் இருக்க, இப்போதில் இருந்தே காரியங்களை செய்து வருகிறார்.

பத்ரியின் அணுகுமுறையும் ரிஷபனின் மகன் என்ற கூடுதல் அடையாளம் அவரைக் கவர, தனது நம்பிக்கைக்கு உரியவனாக அவனை அருகிலேயே வைத்துக் கொண்டார். தொழில் சார்ந்த விசயங்களோடு குடும்ப நடப்புகளையும் தயங்காமல் பகிர்ந்து கொள்பவர்.

“நவ் பேஷண்ட் ஸ்டேபிள் ஷீப்… டூ டேய்ஸ் அப்சர்வேஷன்ல சுகர், பீபி லெவல் நார்மலா கண்டினியு ஆனா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று ராகவன் அறையில், அவருடன் பேசிக் கொண்டிருந்தான் பத்ரி.

“குட் பத்ரி! இவ்ளோ சேஞ்சஸ் நான் அந்த பெரிய மனிதர்கிட்ட எதிர்பார்க்கல…” என்று பேசும்போதே, மஹதி அங்கே வர, அவளை பார்த்து மெல்லிய புன்னகை சிந்திவிட்டு பேச்சை தொடர்ந்தான் பத்ரி.

அவனது சிரிப்பை கண்டவளுக்கு ‘பாருடா வேதாளம் இளிக்குது, இப்போ என்னை சேர்மன் பொண்ணா பார்க்குது போல!’ என்று மனதோடு பொருமிக் கொண்டே தந்தையின் அருகில் அமர்ந்து அவரது அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவள், அதிலுள்ள இருவர் நின்றிருந்த போட்டோவைக் காண்பித்து,

“யார் டாட் இவங்க ரெண்டுபேரும் ரிலேட்டிவா?”

“இல்லடா… உனக்கும் அண்ணனனுக்கும் பார்த்திருக்குற அலையன்ஸ்” என்று மகளிடம் கூறியவர் பத்ரியிடம் திரும்பி,

“இந்த போட்டோ, டீடேயில்ஸ் உனக்கு ஷேர் பண்ணறேன் பத்ரி. இவங்க பாமிலி கனடால இருக்கு…. நம்மள மாதிரி மெடிக்கல் சோர்ஸ் உள்ளவங்க! அதான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கற முடிவுல பேச்சுவார்த்தை ஆரம்பமாகியிருக்கு… டிடெக்டிவ்ல இருந்து ரிப்போர்ட் வந்ததும் அடுத்தவேலை ஸ்டார்ட் பண்ணனும், உனக்கு தெரிந்த ஃப்ரண்ட்ஸ் கிட்டயும் விசாரிச்சு சொல்லுப்பா” என்ற ராகவன் பேச்சில் பத்ரியின் மேல்கொண்ட நம்பிக்கை நன்றாக விளங்கியது.

“டாட்… நான் ரூம்க்கு போறேன், என்னோட டுயூட்டி ஓவர்” தந்தையின் பேச்சை சற்றும் விரும்பாத மஹதி அங்கே அமராமல் கிளம்ப முயன்றாள்.

பெண்ணின் முகத்திருப்பலையும் உடல்மொழியையும் வைத்தே அவளது விருப்பமின்மையை தெரிந்து கொண்டான் பத்ரி.

“வெயிட் பண்ணு பேபி, என்கூட லஞ்ச் சாப்பிடலாம் – ராகவன்.

“இன்னைக்கு ஃபிரண்ட்ஸ்கூட வெளியே போறேன் டாட்” என்று அவரசகதியில் வெளியேறினாள்.

பத்ரியும் இரண்டொரு நொடிகளில் பேசிவிட்டு வெளியில் வர, அங்கே சஞ்சுவுடன் மெதுவாக போய் கொண்டிருந்தாள் மஹதி.

“மஹி.. ஜஸ்ட் மினிட்” பத்ரியின் அழைப்பு அவளை நிறுத்திட,

“டாடி ரூம்ல பெர்மிஷன் கேக்காம ஏன் வந்தேன்னு திட்டப் போறானோ?” மஹதி, தோழியின் காதில் முனுமுனுக்க,

“ஹாஸ்பிடல் காரிடார்ல மானம் போகப் போகுதாடி?” என்று சஞ்சுவும் தன்பங்கிற்கு மஹிக்கு ஏற்றிவைக்க, அவளை முறைத்து பேசும் பொழுது பத்ரி, மஹியின் அருகில் வந்திருந்தான்.

“வாட் ஹாப்பெண்ட் மஹி? ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க!”

“நத்திங் டாக்டர்… ஐயாம் ஃபைன்”

“இல்ல… சம்திங் டிஸ்டர்பிங் யூ! உன்னோட நடையிலேயே அது தெரியுது” என்று மருத்துவனாய் அவளது இரண்டு கண்களின் இமைகளை கீழிறக்கி, கைகளின் நாடித் துடிப்பை பார்க்க,

“டாக்டர்… என்னோட ஹெல்த் கண்டிஷன் எனக்கு தெரியும், பப்ளிக் பிளேஸ்… ப்ளீஸ் தள்ளி நில்லுங்க” என்று அவனை தூர நிறுத்தினாள்.

“ஒஹ், சாரி…” என்றவன், “அந்த அலையன்ஸ் உனக்கு பிடிக்கலையா? அதான் ரொம்ப அப்செட்டா இருக்கியா?” என மேலும் கேட்க,

“டாக்டர் ப்ளீஸ்…” அவளது முகபாவத்தில் ‘என்னை விட்டுவிடேன்’ என்ற கெஞ்சல் தெரிந்தது.

“யூ ஆர் நாட்வெல் மஹி… உன்கூட பேசணும், சரியா நைட் எட்டு மணிக்கு ஹோட்டல் கருடா வா! டேபிள் புக் பண்றேன், ஓகே” தன் போக்கில் இவளுக்கு கட்டளை போல் சொல்ல,

“எனக்கு டுயூட்டி இருக்கு பத்ரி, அண்ட் ஐயாம் ஃபைன்” தன்னையும் அறியாமல் அவனை பேர் சொல்லி அழைக்க, அதை அவனும் கண்டுகொள்ளாமல்,

“வாட் இஸ் திஸ்? உன்னோட நல்லதுக்கு சொன்னா கேக்க பழகு” என்று கடிந்து கொண்டவன், அவளை வந்தே ஆகவேண்டுமென்று வலியுறுத்தி விட்டுச் சென்றான்.

“நீ, அவன் நாய்குட்டியா மாறினத சொல்லவே இல்லையேடி” சஞ்சு கேலிபேச, அவளை வெட்டவா குத்தவா என்றே முறைத்தாள் மஹதி.

பத்ரியும் தன்செயலை தன்னாலேயே நம்ப முடியாத பெரும் குழப்பத்தில் இருந்தான். மஹதியை கண்டித்திருக்கிறான். அவளை தன்னிடம் இருந்து விலக்கிவைக்க நிறையவே மெனக்கெட்டு, தன்மனதை கட்டுபடுத்தி அவளை துரத்தியும் விட்டிருக்கிறான்.

ஆனால், இன்று படபடப்புடன் வெளியேறியவளைக் பார்த்தவனின் உள்ளம் நிலைகொள்ளாமல் தவித்துவிட, தன்னையும் மீறி அவளிடம் பேசி தானாகவே அவர்களின் சந்திப்பையும் குறித்து விட்டிருந்தான். இன்றைய மாற்றம் அவனுக்கே பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

“என்ன டாக்டர்? வந்தே ஆகணும்னு மிரட்டுனீங்க! நான் வந்தும், என்னை கவனிக்காம மொபைல்ல டாம்கூட பேசிட்டு இருக்கீங்க… ஆர் யூ ஓகே?” கருடாவில் பத்ரியை பார்த்து, மகதி நக்கலடிக்க,

“உன்கிட்ட எப்போவும் உட்கார்ந்து பேசணும்னு நினைச்சதில்ல மஹி… இன்னைக்கு உங்கப்பா பேச்சுல, உன் முகம் மாறினதை பார்த்ததும் எனக்கே மனசு கேக்கல! அதான் உன்னை வரச்சொல்லி கம்பெல் பண்ணேன், சாரி போர் தட்” என்று மென்குரலில் பேசினான்.

“எதுக்கு இத்தனை விளக்கம் டாக்டர்? சாரி சொல்லாதீங்க!”

“டாக்டர் வேண்டாமே மஹி, ஒரு ஃப்ரண்டா உன்கூட பேசலாம்னு வரச்சொன்னேன்” என்று சொன்னவனை பார்த்து, ‘பக்’கென்று சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற?”

“பார்த்து, பழகி, அஞ்சு வருஷம் முடிஞ்ச பிறகு ஃப்ரண்ட்ஸ் ரெக்வஸ்ட் குடுக்குற அம்மாஞ்சியா இருக்கீங்களேன்னு நினைச்சேன், சிரிச்சேன்!” என்று விளக்கம் சொல்ல, அவனுக்கும் சிரிப்பு வந்தது.

“என்நேரம் உன்கிட்ட இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கேன்”

“என்ன பண்றது டாக்டர்? நான் உங்ககிட்ட வாங்கின காம்ப்ளிமென்ட்ஸ் அப்படி! நீங்க குடுத்ததவிட நான் கொடுத்தது காரம் கம்மிதான்” என்றவளின் பேச்சில் அனல் அடிக்க,

“ஆஹான்… ஆந்திரா காரம் எவ்ளோ குடுத்தாலும் தாங்குவேன், நிறையவே குடு”

“கமான் டாக்டர்… எதுக்கு கூப்பிட்டீங்க?”

“இந்த கல்யாணத்தில உனக்கு இஷ்டம் இல்லையா? என்ன ப்ராப்ளம் உனக்கு? உங்கப்பா மனச கஷ்டப்பட வைக்காதே மஹி”

“எனக்கு பிடிக்காதத, பிடிக்க வச்சு பழக்கமில்ல பத்ரி! எனக்கு இஷ்டம் இல்லன்னு அப்பாகிட்ட சொல்லிட்டா, என்னோட ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஆகிடும். என்மேல அக்கறை பட்டத்துக்கு தேங்க்ஸ்” என்றவளின் வெட்டிவிட்ட பேச்சில் புருவம் உயர்த்தியவன்,

“கல்யாணம் இப்போ செஞ்சுக்குற ஐடியா இல்லையா? இல்ல இந்த அலையன்ஸ் பிடிக்கலையா?”

“எங்கப்பாவுக்கு பிஆர்ஒ வேலை பாக்க எப்போ ஸ்டார்ட் பண்ணீங்க? எனக்கு என்ன தேவையோ அதநானே அவர்கிட்ட சொல்லிடுவேன், நீங்க தலையிட வேண்டாம்” என்று அவனை ஒதுக்கியே வைத்தாள்.

இத்தனை நாட்கள் அவன் தனக்கு செய்ததை அப்படியே அவளும் திருப்பி செய்ய, பத்ரி அரண்டு போனான். இப்படிப்பட்ட பேச்சுக்களை என்றும் அவன் எதிர் கொண்டதில்லை.

ஒழுக்கமான வளர்ப்பும் பாசமான அரவணைப்பும் அவனை சீர்படுத்தி இருக்க, இப்பொழுது தன்னை மதிக்காதவளின் பேச்சு மனதை நெருட வைத்தாலும், அமைதியாகவே பேசினான்.

“சில் மஹி! எதுக்கு இப்படி எடுத்தெறிஞ்சு பேசற? உன்னோட நல்லதுக்குதான் உங்க வீட்டுல செய்வாங்கனு சொல்ல கூப்பிட்டேன். என்னை விரோதியா நினைச்சு ஆர்கியூ பண்றதுகில்ல”

“என்னை கேக்கமா எடுக்குற முடிவுக்கு இன்னும் எத்தன நாள்தான் தலையாட்ட முடியும் பத்ரி!”

“வீட்டுல உள்ள எல்லோர்கிட்டயும் மனசு விட்டு பேசுமா, ப்ராப்ளம் சால்வ் ஆகிடும்”

“அப்பா ஹாஸ்பிடல், அண்ணா எப்பவும் தனித்தீவு, அம்மா கிளப், கோவில்னு போய்டுவாங்க… இத்தனை வருஷமா வீட்டுல தனியாதான் இருந்திருக்கேன். எனக்கு என்ன தேவைன்னு நினச்சு முடிக்கிறதுக்குள்ள அது எனக்கு வந்து சேர்றத, நான் அறவே வெறுத்துட்டேன்.”

“அது அதிர்ஷ்டம் தானே மஹி”

“பட் எனக்கு பிடிக்கல! எனக்கே எனக்காக, நான் விரும்பினதும் கிடைக்காம போய் மனசும் நொந்து போயிட்டேன். இந்த நிலையில அப்பா பேச்சை கேட்டு ஆட்டுக்குட்டியா கசாப்பு கடைக்குபோக நான் தயாரா இல்ல பத்ரி”

மஹதியின் உஷ்ணப்பேச்சு அவனை அசைத்து வைத்தது. எந்த முறையில் சமாதானம் பேசினாலும் தன்நிலையில் நிற்பவளை எப்படி சாந்தப்படுத்துவது என்று அவனுக்கு தெரியவில்லை.

“உன்னோட விருப்பத்த, உங்க வீட்டுல சொல்லியிருந்தா நிச்சயம் உனக்கு கிடைச்சிருக்கும். கேட்காதது உன் தப்பு மஹி”

“நான் விரும்புறது, எனக்கே சொந்தாமாகும்ங்கிற நம்பிக்கை வந்தாதானே நானும் கேக்க முடியும்”

“அப்படி எது உன் கைய விட்டுப் போச்சு?”

“ஒருத்தர் ஆரம்பத்துல என்னை மதினு கூப்பிட்டுட்டு இருந்தார். அவரோட அழகான குடும்பத்தோட பழக ஆசைப்பட்டேன். அதை சொல்றதுக்குள்ள என்னை தப்பா நினைச்சு கத்தரிச்சு விட்டுட்டார். இப்படி என்னை புரிஞ்சுக்காதவங்க மேல நான் வச்ச ஆசை, அவருக்கே தெரியாம இருக்கும்போது எப்படி நான், என் பேரண்ட்ஸ்கிட்ட இவர்தான்னு கைகாட்ட முடியும் பத்ரி” என்று தன் உள்ளக்குமுறல்களை எல்லாம் அவனிடம் கொட்டி விட்டாள்.

எது ஒன்று தன்னை நோக்கி வரக்கூடாதென்று அவளை தடுத்து நிறுத்தி இருந்தானோ, அது அபாயகரமான அம்பாக அவனை நோக்கி பாய, செய்வதறியாது திகைத்தான் பத்ரி சீனிவாசன்.