ponnunjal18

ஊஞ்சல் – 18

நிமிடத்திற்கு நிமிடம் பத்ரி சொன்ன மறுப்பில், மஹதியின் நெஞ்சம் முற்றிலும் நெகிழ்ந்தே போய்விட்டது. பொறுப்பு, கௌரவம் என்று எத்தனையோ பேசியவனா இவன்?

மனதில் தன்னை சுமந்து கொண்டு, பெற்றவர்களின் கண்டனத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறான் என்ற நினைவே அவளை வதைக்க, தன்னவனை ஆறுதல்படுத்தவே உள்ளம் அலைபாய்ந்தது. ஆனால் அந்த கொடுப்பினைக்கு தான்தகுதி இல்லையே என்று மனதோடு மேலும் மருகிக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தாள் மஹதி.

“அவ்வளவு பிடிவாதம் உனக்கிருந்தா, இந்த பட்டுகுட்டியோட நாணாக்கிட்ட உன்முடிவ சொல்லிட்டு கிளம்புரா” மஹதியை காட்டி பேசிய அன்னையின் பேச்சில், உடனே சரி என்று தலையசைத்தவன், மறுநொடியே தன்னை உலுக்கிக்கொண்டு சிந்தித்து,

“அம்மா… என்னம்மா சொல்றீங்க?” பேசிக்கொண்டே அசலாவின் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, உணர்ச்சிமிகுதியில் அவளின் முழங்காலை கட்டிக் கொண்டான்

“இந்த பட்டுக்குட்டியோட நாணாகிட்ட பெல்லிக்கு இஷ்டமில்லன்னு செப்புரா” என்று அசலா நிறுத்தி நிதானமாக விளக்க,

“அது… அது… வந்தும்மா” அசடுவழிய, தன் பெற்றோரை மாறிமாறிப் பார்க்க,

“சரி நாங்களே சொல்லிடுறோம்! நீ உன் வேலைய தலையிலே கட்டிக்கோ” சலித்துக் கொண்டவள்

“பாவா நீங்களே சொல்லிடுங்க! எந்த விதத்துலயும் அவர் மனசு கஷ்டபடக்கூடாது” நீட்டி முழக்க,

“அச்சோ… அம்மா கொஞ்சம் நிறுத்துங்க! நாணா அப்படியெல்லாம் சொல்ல வேணாம்” அவசரகுரலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் பத்ரி

“நீ சொன்னதுதானேரா சொல்லபோறேன்! இப்போ என்ன?” கடுப்பை முகத்தில் ஏற்றிக்கொண்டு ரிஷபன் பேசினான்,

“இல்ல நாணா…. எனக்கு… நான்… நான்”

“என்னடா மென்னு ழுழுங்குற?” ரிஷபன் மீண்டும் சத்தம் போட,

“பாவா! கொஞ்சம் இருங்க, நீ சொல்லு கண்ணா” என்று வாஞ்சையாக மகனின் தலையை வருட,

“நான்… நான்… மஹதிய விரும்புறேன்மா!”

“என்ன சொல்ற பாபு?”

“உங்க பக்கத்துல உக்காந்திருக்க பட்டுக்குட்டிய நான் விரும்புறேன், இவள தவிர வேறயாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று திடமாக கூறியவனின் பேச்சில் முற்றிலும் அவன் பக்கம் விழுந்து விட்டாள் மஹதி.

சந்தோஷ அதிர்ச்சி அவளையும் தாக்கியிருக்க, ஒன்றுமே புரியாத மோனநிலையில் பேச்சிழந்து நின்றாள்.

அவன் மனதில் உள்ளதை, அவன் மூலமாகவே சொல்ல வைத்த, அவனது பெற்றோரிடம் முன்னைவிட அபரிமிதமான அன்பும் உவகையும் பொங்கியது.

“நெஜமாவா பாபு! பொய் இல்லையே?”

“சத்தியம்ங்கா செப்தானுமா! சீஃப் கண்டிஷன், நம்ம குடும்ப சூழ்நிலை எல்லாம் மனசுல வச்சுட்டுதான் இதுவரைக்கும் வெளியே சொல்லாம இருந்தேன்”

“அப்ப அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்னு நினைக்கல? உன் போக்குல மட்டுமே நினைச்சு பார்த்திருக்க அப்படித்தானே?” – அசலா.

“அது எப்படிம்மா? ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துவராத காரியத்தை பண்றது?” என்றவன், தான்தடைகளாக எண்ணியதையெல்லாம் மனம் திறந்து கொட்டினான்.

“ரொம்ப நல்லவனா இருக்க நினைச்சு, அவளையும் கஷ்டபடுத்தினது பெரியதப்பு சின்னா! மனசுல இருக்குறத வெளியே சொல்லிட்டு, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கனும். ஒரு முறை வாழப்போற வாழ்க்கைய நமக்கு பிடிச்சவங்களோட வாழ்றதுதான் புத்திசாலித்தனம்” மகனின் தடுமாற்றத்தை விலக்க எண்ணியே ரிஷபன் பேசினான்.

“நான் அப்படி நினைக்கல நாணா… கனவு கலைஞ்சு போகும்னு தெரிஞ்சே எதுக்கு வளர்த்துக்கனும்?”

“உன்னோட சீஃப் போனவாரம் வந்து எல்லா விவரத்தையும் சொல்லிட்டாருடா நல்லவனே!” என்ற அசலாட்சி, ராகவன் வந்து சென்ற விடயத்தை கூறி முடித்தாள்.

“அடுத்த மாசம் எம்எஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்காம். அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் அங்கேயே இருந்து படிக்கணும், அதனால சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிரலாம்னு முடிவெடுத்து இருக்கோம்” – அசலா.

“வேண்டாம்மா! எப்படியும் ரெண்டு வருஷம் தனியாதானே இருக்க போறாங்க… அதனாலே அப்பவே வச்சுக்கலாம், சரிதானே மஹதி?” இப்பொழுது பொம்மி இடைபுக, இருவரிடமும் பதிலில்லை.

“இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம்தானே பட்டூ?” என்று அசலாட்சி, மஹதியிடம் அன்போடு கேட்க,

“அவன் மேல என்ன கோபம் இருந்தாலும் அவன் கூடவே இருந்து பழிதீர்த்துக்கலாம் மஹதி, நல்ல சான்ஸ் விடாதே!” பொம்மியும் அவளை ஏற்றிவிட, பத்ரிக்கு உள்ளே சந்தோஷகிலி பரவியது.

‘உனக்கு கட்டம் கட்டியாச்சு பத்ரிவாசா! எங்கே சுத்தினாலும் என்கிட்டே வந்தே ஆகணும்’ அவன் மனதில், மஹதி வந்து மிரட்டினாள்.

“அம்மா ரெண்டும் பதில் சொல்லாம இருக்கு… நான் சொன்ன மாதிரி பெல்லி(கல்யாணம்) ரெண்டு வருஷம் கழிச்சுதான்” பொம்மி குட்டையை குழப்பிவிட, இருவரும் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

“ஏன் மஹதி? உன்கிட்ட கேக்காம முடிவெடுத்தோம்னு கோபமா?” அசலாட்சி கேட்க,

“அலகாது(அப்படியில்ல) சாலா! இ அம்மாயி மனசெல்லாம் பெத்த(பெரிய) பயம் வந்தாச்சு… இந்த அம்பிய எப்படி சமாளிக்கிறதுனு? சரிதானேம்மா மஹதி” தன்பங்கிற்கு ரிஷபனும் கேலியில் இறங்க,

“ஏற்கனவே என்னை நிராகரிக்க நிறைய காரணங்கள் சொன்னவர்கிட்ட ஒன்னுக்கு ரெண்டு தடவ சம்மதம் கேளுங்க ஆண்ட்டி… அடுத்து என் பதில சொல்றேன்” என்று அங்கிருந்தவர்களின் முகம் பார்க்காமல் தலை குனிந்தாள் மஹதி. தனது அன்பை உதாசீனப்படுத்தியத்தின் வலி அவள் பேச்சில் அப்பட்டமாய் தெரிந்தது.

அவள் பேச்சிற்கு பத்ரி பதில் சொல்லாமல் இருக்கவும் ஆற்றாமையில் உள்ளம் அலைபாய,

“உங்க மகனோட அமைதியே சொல்லுதே, அவரோட தடுமாற்றத்த… இது சரி வராது ஆண்ட்டி விட்ருங்க! எனக்காக அவர் இறங்கி வரவேணாம்” என்று சொல்லும்போது கண்களில் கண்ணீர் வந்தே விட்டது.

“இப்ப எதுக்கு பட்டு இந்த அழுகை?” அவளை ஆறுதல்படுத்திய அசலாட்சி,

“என்ன பதில் சொல்லபோற பாபு? இப்படி மத்தவங்க மனச புண்படுத்தி, வேடிக்கை பாக்குற கொடுமைகாரனாவா உன்னை வளத்தேன்?” என்று அவளும் தன்ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

“நம்ம மேல பாசமா இருக்குறவங்களுக்காக என்னோட ஆசைய மூடி மறைச்சதில தப்பில்லன்னு தோணுச்சும்மா… நாணா சொன்ன மாதிரி முயற்சி செஞ்சு பார்த்திருக்கலாம் ஆனா எங்கயோ சறுக்கிட்டேன்…” மஹதியை பார்த்தபடியே தன்செயலுக்கு நியாயம் கற்பித்தான் பத்ரி.

“இந்த ஒருதடவ இந்த பெரிய மனுஷன சும்மா விட்டுவோம் மஹதி… இவன, உன் கண்ட்ரோல்ல வச்சு செய்யதான் உன்கிட்ட பெர்மிஷன் கேக்குறோம்… சரின்னு சொல்லு” என்று சூழ்நிலையை சகஜமாக்கி பொம்மி எடுத்துகூற,

பத்ரியும் ‘சம்மதம் சொல்லிவிடு’ என்று பார்வையில் யாசித்தான்.

“உங்க சிடுமூஞ்சி அண்ணனவிட, இந்த குடும்பம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவும் என்னை பட்டுகுட்டினு எல்லோரும் கூப்பிட்டா மட்டுமே, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் ஆண்ட்டி” பத்ரியின் பார்வையை புரிந்து கொண்டு, அதே சமயத்தில் அவனுக்கு கொட்டும் வைத்து தன்சம்மதத்தை தெரிவித்து விட்டாள் மஹதி.

“எப்பவும் அப்படிதான் கூப்பிடுவாங்க மதி! வீட்டுல ரோஸ்குட்டி இருக்கா, அவகூட பட்டுக்குட்டியா நீயும் இருக்கலாம்” என்று அவசரகோலத்தில், அசடு வழிந்த பத்ரியிடம்,

‘அய்யோடா இவனோட அக்கறையில இப்ப நான் சக்கரையாதான் கரையனுமா?’ மஹதி மனதில் ஏகத்திற்கும் சிடுசிடுத்துக் கொண்டிருந்தாள்.

“சூடு சின்னையா! உன் ஆளபிடிச்சு கையில குடுத்தாச்சு… எங்கே கூட்டிட்டு போய் என்ன பண்ணுவியோ தெரியாது, ஈவினிங் ரெண்டுபேரும் சிரிச்ச முகமா இருக்கணும். கிளம்பு… கிளம்பு” என்று விரட்டினாள் பொம்மி.

“இல்ல… அப்புறமா பேசுறோம்” – பத்ரி.

“இங்கே பேசினா வைரஸ் இன்பெஃக்ஷன சமாளிக்கலாம், சித்தூர் போய் பேசினா கொரானா எஃபக்ட் வரும், யோசி சின்னையா!” – பொம்மி

“போதும் பொம்மி! டாக்டருக்கும் டாக்டருக்கும் இடையில ஆயிரம் இருக்கும்… என்ன இன்பெஃக்ஷன் வந்தாலும் நாங்க ரெகவர் பண்ணிக்குவோம். டோன்ட் வொர்ரி” என்ற மஹதியின் பேச்சில், சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆகியது.

“அப்போ வதனாக்கு(அண்ணிக்கு) அண்ணயா மேல கோபம் போச்சா?” – ரோஸ்குட்டி.

“ரோஸ்குட்டி, என்னை பட்டுக்குட்டினு மட்டுமே கூப்பிடனும். வதனம் சதனம் எல்லாம் வேணாம் சரியா?” என்ற மஹதியை மேலும் பேசவிடாமல் அசலாவிடம் சொல்லிக்கொண்டு தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு அழைத்து வந்தான் பத்ரி.

பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம், கதிரவனின் ஆதிக்க வேளையிலும் இளந்தென்றல் வந்து சாமரம் வீசியது.

“வாவ்… வொண்டர்புல் பத்ரி! இவ்ளோ ஃபிளவர்ஸ் ஒரே இடத்தில, எப்டி இதெல்லாம்?” – மஹதி.

“எங்கம்மாவோட பராமரிப்பு… பாதிக்கும் மேல காலியா இருந்த இடத்தையெல்லாம் வளைச்சு ஃபிளவர் கார்டனா மாத்திட்டாங்க. காய்கறிக்கும் பழத்துக்கும் தனியிடம் இருக்கு” சொன்ன பத்ரியின் பேச்சில் அத்தனை கர்வமும் பாசமும் தெரிந்தது.

“நீங்க ரியல்லி லக்கி பத்ரி! இப்படி ஒரு லவ்வபிள் பாமிலியில இருக்குற உங்களைப் பார்த்து நெஜமாவே பொறாமைப்படறேன்”

“நீயும் எங்கள்ள ஒருத்திதான் மதி! நானும் பொறாமைபட போறேன். உன்னோட புகுந்த வீட்டு சொந்தங்களை பார்த்து” என்று பேசியபடியே தோட்டஅறைக்கு வந்திருக்க, அங்கே சற்றுநேரம் அமர்ந்து ஏகாந்தத்தை ரசித்தவன்,

“நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா மதி?” ஆழ்ந்த குரலில் பத்ரி கேட்க,

“என்ன டாக்டர்? சீரியஸா பேச ஆரம்பிச்சிட்டீங்க?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டாள்.

“உன்கூட கொஞ்சம் பேசலாமா?” என்று அவளை நெருங்கியவனின் கண்களில் தெரிந்தது மன்னிப்பா? தவிப்பா? என்று தெரியவில்லை அவளுக்கு.

“என்ன வேணும் டாக்டர்?” மஹதி, அவனை விட்டு விலக முயற்சி செய்ய, அவளை இழுத்து, தன்மடியில் அமர்த்திக் கொண்டான் பத்ரி.

“சாரி சில்க்கி, உன்னோட மனச ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்… சாரிரா!”

“இது என்ன புதுசா? சில்க்கி…”

“நீதானே பட்டுகுட்டின்னு கூப்பிடச் சொன்ன? சோ சில்க்கி!”

“அது மத்தவங்களுக்கு… உனக்கு இல்லரா படவா!” முறுக்கிக்கொள்ள ஆரம்பித்தாள்.

“பொண்டாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்குற நல்லவனுக்கு ஆயுசு கூடுமாம்… சந்தோசமா இருப்பானாம்… எனக்கும் அந்த கொடுப்பினை வேணும். எவ்ளோனாலும் திட்டு! உனக்கில்லாத உரிமையா பட்டூ?” என்று அவள் கைகளை எடுத்து, தன்னுள் இணைத்துக் கொண்டான்,

“எனக்குன்னு ஒருத்தின்னா, அது நீ மட்டுந்தான் மதி! டு கன்சோல் மீ; டு ஹக் மீ; டு டேக் கேர் ஃஆப் மீ; அது நீதான்ரா… உன் இடத்துல வேற யாரையும் வச்சு பாக்கமுடியாது. டூ யூ ஸ்டில் லவ் மீ மதி?” உள்ளத்தை உருக்கும் மென்குரலில் பளிச்சென்று பத்ரி பேசிய வார்த்தைகள் மஹதியின் இதயத்தை பிசையவைக்க, விழியோரம் துளிர்த்த நீரை சுண்டி விட்டாள்.

“ரைட் ஃப்ரம் தி பிகினிங் பத்ரி… என்னோட மனசு எப்போவும் உங்களுக்குதான்! மை ஹார்ட் ரிசர்வ் இஸ் ஒன்லி ஃபார் யூ” அதே மென்மையில் அவளும்கூற,

“தேங்க்ஸ்ரா ஸ்வீட் ஹார்ட்! யூ அண்ட் மீ ஃபோர் எவர்!” என்றவனின் வலிமையான தோள்களில் சாய்ந்துகொண்ட மதியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“என்னாச்சு சில்க்கி? கண்ணை துடை, யாராவது பார்த்த தப்பா நினைக்க போறாங்க! சும்மாவே என்னை வாரிவிட இங்கே நிறைய பேர் இருக்காங்க”

“அதெல்லாம் உன்ன மாதிரி அரைலூசுங்கதான் நினைப்பாங்க… இது ஆனந்தக்கண்ணீர் சின்னு” என்று சொன்னவளின் உள்ளம் அலையில்லாத கடலின் அமைதியாய் சாந்தமாகி இருந்தது.

தன்மேல் சாய்ந்தவளின் கன்னத்தில் அழுத்தமாய் தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான். உடலின் அத்தனை செல்களும் ஒருவித தாள லயத்தோடு அவளை சுருட்டிக் கொள்ள, கண்கள் தாமாக மூடிக்கொண்டது. பாவையின் கண்கள் மீதும் அவன் இதழ்கள் விளையாட, தன்னையும் அறியாமல் இறுகப் பற்றிக் கொண்டாள்.

தன்மேல் படர்ந்த கொடியை கவனமாக தாங்கியவன், தன்இதழ் நிச்சயத்தை அவள் இதழுடன் நடத்திட, ஆண்மையின் உறுதியான கரங்களில் தோய்ந்தவள், சடுதியில் தன்னை மீட்டுக் கொண்டாள்.

“பெரிய ரோமியோன்னு நினைப்பா? இத்தன நாளா கண்ணுல பூச்சி பறக்க என்னை அலைய விட்டுட்டு, இப்போ ஒட்டி உரசிறியா? தள்ளிப்போரா!” என்று அதட்டியவளை, தன்னுடன் மேலும் இறுக்கிக்கொண்டான் பத்ரி.

“நானும்தானே சில்க்கி, உன் பின்னாடி அலைஞ்சுட்டு இருந்தேன், நீ தெரிஞ்சு செஞ்சே, நான் தெரியாம வந்தேன், அவ்ளோதான்” என்று கண்ணடித்து, மீண்டும் இதழ் ஒத்தடம் கொடுத்தான். தன்னவளின் வேண்டாம் என்ற அகராதியை நன்றாக படித்தவன், அவள் தடுக்க தடுக்க வாரிவழங்கிக் கொண்டிருந்தான்.

“போதும் சின்னு! இத்தனை ஆசைய வச்சுட்டு எதுக்கு அவ்ளோ திட்டு திட்டின? ரொம்ப கல்நெஞ்சக்காரன்ரா நீ!”

“என்னோட பேசண்ட்க்கு நான்தானே பொறுப்பெடுத்துக்கனும்! ஒ டில வர்ற எந்த ஒருசத்தமும் ட்ரீட்மென்ட் பண்றவங்களோட கவனத்தை சிதறடிக்கும். இதுக்குதான் ப்ராசஸ் ஆரம்பிச்ச பிறகு வர்றவங்களை வெளியே போகச் சொல்றது. எந்தவொரு சலுகையும் எதிர்பார்க்காம, மெடிசன் பிராக்டிஸ் பண்ணினா மட்டுமே ஜெயிக்க முடியும் சில்க்கி”

“இப்படியே நல்லா பாடம் நடத்து சின்னு! என்ன இருந்தாலும் என்னை ரொம்பவே ஏங்க வச்சுட்ட… உன்மேல எனக்கு கோபம்தான்!” வீம்பாய் முறுக்கிக்கொள்ள,

“உன்னோட ஏக்கத்துக்கு காம்பன்சேட் பண்ணத்தான் இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். பெண்டிங் வைக்காம இப்போ தியரி போர்ஷன் முடிச்சா, ரெண்டுவாரம் கழிச்சு பிராக்டிகல் ஸ்டார்ட் பண்ண சரியா இருக்கும்” என்று ஆசானாக அவன் பேச,

“அடேய்! கையில மாவுகட்டு போட்டுட்டுதான் நீ எனக்கு தாலிகட்ட போற! ஜாக்கிரதை” என்றவளின் அடியை மகிழ்ச்சியாக வாங்கிகொண்டவன், அதற்கு சளைக்காமல் இருமடங்கு எண்ணிக்கையில் இதழ் அச்சாரம் கொடுத்தே விடுவித்தான்.

அதற்கடுத்த நேரங்கள் சந்தோஷ நிமிடங்களாய் வேகமாய் கரைய, அன்று மாலை ராகவன்-புவனா தம்பதி வருகை தந்து எளிமையான முறையில் நிச்சயதார்த்த விழாவை முடித்துக் கொண்டனர்.

இரண்டு வாரத்திற்கு பிறகு வந்த முகூர்த்தநாளில் திருச்சானூரில் ரிஷபனின் குடும்ப வழக்கப்படி திருமணத்தை நடத்த திட்டமிட, வரவேற்பை சித்தூரில் உள்ள தனது மருத்துவமனை வளாகத்திலேயே நடத்திட முடிவெடுத்தார் ராகவன்.

சில்க்கியும் சின்னுவும் மேலும் ஒட்டி உரசிட காதலின் கதகளி ஆட்டத்தில் லயித்துக் கிடந்தனர். பத்ரி பொத்திவைத்த காதலை தன்னவளிடத்தில் கொட்டிக் கவிழ்க்க, அவளும் தாங்கமுடியாமல் விரட்டி அடிக்கும் நிலைக்கே வந்துவிட்டாள்

கல்யாண வேலைகளில் முழுமூச்சாய் இருகுடும்பங்களும் இறங்க, அத்தனை ஆர்ப்பாட்டம், கோலாகலத்துடன் திருமணவிழா களைகாட்டியது.

ரிஷபனிடம் வெளிப்படாமல் இருந்த செல்வசெழிப்பு மகனின் திருமணத்தில் வெளிப்பட, ராகவனின் நிலைமைக்கு சற்றும் குறையாமல் திருமணத்தை ஆடம்பரமாக அமர்களப்படுத்தினான்.

மணப்பெண்ணிற்கு என மாப்பிள்ளை வீட்டார் செய்த சீர்வரிசையில் கிராமமே ஆச்சரியப்பட்டுப் போனது. மருமகளை, மகளாய் கொண்டாடிக் கொண்ட அசலாட்சியை பெண்வீட்டார் அனைவருக்கும் பிடித்துப் போனது.

வெண்பட்டும் அரக்குப் பட்டும் மணமக்களை அலங்கரிக்க, தேவலோகத்தை தோற்கடிக்கும் வண்ணம் பிரம்மாண்ட மணமேடை அமைக்கப்பட்டு, ஊரே மெச்சும்படியான திருமணம் நடைபெற்றது.

மந்திர உச்சாடனங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியம் முழங்க, மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தம்பதி சமேதராக கூடியிருந்தவர்களின் ஆசிகளை வெகுமதியாக வாங்கிக் கொண்டனர் மணமக்கள்.

முதன்முதலாக புடவை கட்டிய அனுபவம் பொம்மியை அன்று மிகவும் தடுமாற வைக்க, மிக மெதுவாகவே நடைபயின்று கொண்டிருந்தாள்.

தலைநிறைய குண்டு மல்லி வைத்து, காதில் ஜிமிக்கியை அணிந்து கொண்டு நடப்பவளை நிமிடத்திற்கொருமுறை கள்ளத்தனமாய் பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வேந்தர். தன்பெற்றோருடன் திருமணத்திற்கு வருகை தந்திருந்தவனின் பார்வை, பாவையவளை விட்டு நொடிநேரமும் விலகவில்லை.

கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரம்… பிறைநெற்றி… சிவந்த ஈரமான இதழ்கள்… வட்டமுகம், காதோர ஜிமிக்கியுடன் கதை பேசவேண்டும் என்றே ஒட்டி உறவாடும் கற்றை கூந்தல்…

பட்டுப்புடவையில் தங்கத்தோடு தங்கமாய் அவளது மேனி நிறமும் போட்டிபோட, குழந்தைதனத்தையும் குறும்பும்பார்வையும் மொத்தமாய் குத்தகை எடுத்தவளின் குவளைக் கண்கள் என ஒட்டுமொத்தமும் விஸ்வேந்தரை, பொம்மியிடம் விழச்செய்து கொண்டிருந்தன.

பலநாள் பழகிய தோழியை புடவையில் பார்த்ததும் பாந்தமான அழகில் வீழ்ந்தேவிட்டான். இத்தனை நாட்கள் ஓயாமல் அவனை அலைகழிக்கும் பொம்மியின் நினைவுகளை எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்திருந்தவன், இன்று அவளது மொத்த அழகில் தன்னை தொலைத்து நின்றான்.

தன்னையறியாமல் தோன்றிய புதுவித பரபரப்பை அடக்க வழிதெரியாமல் அவள் பின்னாலேயே பார்வையை தொடரவிட்டவன், அவள் எதற்கோ மண்டபத்தின் ஓய்வறைக்கு தனியே செல்ல அவளைப் பின்தொடர்ந்தான்.

ஏதோ ஒரு அவசரத்தில் பொம்மி வேகமாக நடக்க, புதிதாக கட்டிய புடவை அவளை தடுமாறி கீழே விழவைத்தது. அதைக் கண்டதும் பதறிப் போனான் அவளின் விச்சுகண்ணா.

விழுந்ததுகூட பெரிதாகப்படவில்லை, தன்னை யாரும் கவனித்து இருக்கக்கூடாதே எனப் பதற்றம் கொண்டாள் பொம்மி. யாரும் பார்த்திருந்தால் அவர்கள் செய்யும் கிண்டலையல்லவா தாங்கிக் கொள்ள வேண்டும்?

அவளையே பார்த்துக் கொண்டே வந்த விச்சு, அவளது சுற்றும் பார்வையை பார்த்ததும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு,

“உன்னை யாரும் பார்க்கல பத்மி” சிரிப்போடு சொல்ல, பொம்மி அதிர்ந்து விழித்தாள்.

“என்ன மேடம்க்கு மனசல ஹீரோயின்னு நினைப்பா? விழுந்தா ஹீரோ வந்து தூக்கிவிட? பராக்கு பார்க்கமா எந்திரி மொதல்ல…” சீண்டியபடியே அவள் எழுவதற்காக கையை நீட்டினான்.

“உனக்கு ஹீரோனு நினைப்பா விச்சுகண்ணா? டக்குனு கையை நீட்டுற!” என்று வெட்டிகொண்டே பேசியவள், தன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.

“நீ ஆமாம்னு சொன்னா நான் ஹீரோதான்… இதுக்கே உன்கிட்ட அனல் அடிக்குதே? எப்படி நான் நினைக்கிறது சொல்ல?” என்று முனுமுனுத்துக் கொள்ள,

“என்ன விச்சு சொன்ன?”

“ஒண்ணுமில்ல… கீழே விழுந்தியே எங்கேயாவது அடிபட்டதா? எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?”

“உன்வேல என்னவோ அதைப்பாரு விச்சு! என்னை நான் பார்த்துக்கிறேன்”

“இனிமே உன்னை பாக்குறது மட்டுமே என்வேலை” என்று மீண்டும் முணுமுணுக்க, அது நன்றாக பொம்மியின் காதில் விழுந்து விட்டது.

“என்ன? என்ன சொன்ன விஸ்வா?” முறைத்தாள் பொம்மி.

“ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு?”

“சொல்ல நல்ல ஆளாத்தான் பார்த்தே! நகரு விச்சு… நந்தி மாதிரி வழிய மறச்சிட்டு, எனக்கு நேரமாகுது” என ஜிமிக்கிகள் தாளம்போட படபடவென்று பேசியவளை, கைகளை கட்டிக்கொண்டு ரசித்தான்.

“நெஜமா சொல்றேன் பத்மி! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… உன்னோட பதில் என்ன?” தனக்கு உண்டான பரபரப்பில் பொறுமையின்றி, தனது விருப்பத்தை சொல்லிவிட்டான். அவனது கேள்வியில் அசையாது நின்றவள், நொடிநேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு,

“சொல்லமுடியாது என்ன பண்ணுவ விஸ்வா?” இப்பொழுது கோபமும் எட்டிப் பார்த்தது பொம்மியின் குரலில்.

“எப்படியும் ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பதானே? அது நானா இருந்துட்டு போறேனே? ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம், இப்போவே நம்ம மனசுல இருக்குறத சொல்லிடுவோம். ரெண்டுபேர் படிப்பு முடிச்சதும் மேரேஜ் பண்ணிக்கலாம்” தனது திட்டமிடல்களை கூற, பொம்மிக்கு தர்மசங்கடமாகிப் போனது. தனியே வந்து மாட்டிகொண்ட உணர்வு வேறு சஞ்சலப்படுத்த, அவனை சலிப்புடன் பார்த்தாள்.

“ஏன்டா எல்லா பசங்களும் இப்படி இருக்கீங்க? ஒரு பொண்ணு ஃப்ரண்டா பழகினா அப்படியே கண்டினியு பண்ண வேண்டியதுதானே? அத விட்டுட்டு காதல் கருமாந்திரம்னு சொல்லி ஏன் எங்களை கோபப்பட வைக்கிறீங்க? ரிடிகுலஸ்!”

“நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேனே பத்மி?”

“அந்த மாதிரி பெரிய முடிவெல்லாம் எடுக்க, உனக்கோ எனக்கோ இன்னும் பக்குவம் வரல! அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு விஸ்வா. ஃபர்ஸ்ட் உன்னோட ஆம்பிஷன் என்னவோ அத முடிக்கபாரு”

“முடிச்சுட்டு வருவேன். அப்போ ஓகே சொல்வியா?” விடாக்கண்டனாக கேட்க,

“எங்க வீட்டுல சொல்றவங்களுக்குதான் நான் ஓகே சொல்வேன்” அசராமல் பதில் சொன்னாள்.

“என்னை பிடிச்சிருக்குனு சொல்லு! நான் உங்க வீட்டுல பேசறேன்”

“எந்த காலத்திலயும் அந்த வார்த்தை வராது விஸ்வா! அப்படி நான் சொன்னா, மிளகாய்க்கு பதிலா, ஃப்ரீஜர்பாக்ஸ்ல என்னை வச்சு அடைச்சுருவாங்க எங்கம்மா… வெட்டிப்பேச்சு பேசாமா படிக்கிற வேலைய பாரு” என்று அவனை தாண்டிச் செல்ல முயல, அவள் கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக நிறுத்தியவன்,

“பிடிச்சிருக்குனு சொல்லமாட்டே அப்படித்தானே?” ஏனோ அவளை விடுவதாய் இல்லை.

“பிடித்தம்ங்கிறது, பார்த்ததும் மனசு ஒன்றிப் போகணும். காரணத்தை தேடாம அன்பால நம்மை கட்டிப் போடணும்… எக்ஸாம் குவஸ்டின் பேப்பர்ல, சாய்ஸ் பார்த்து ஆன்சர் எழுதற சாமாசாரம் இல்ல இது… அப்படிப்பட்ட எந்த பிடித்தமும் எதுவும் இதுவரைக்கும் எனக்கில்ல…” தன் மறுப்பை பளிச்சென்று எடுத்துரைத்தாள் பொம்மி.

“உங்கவீட்டுல நான்தான், உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்வியா?”

“எதுக்கு வேண்டாம்னு சொல்லணும் விஸ்வா? வீட்டுல பார்த்து வைக்கிறதுங்கிறது எனக்கு கிடைச்ச புக் மாதிரி… அத நான் படிக்கவும் செய்வேன், தலையில வச்சு படுக்கவும் செய்வேன், எக்காரணம் கொண்டும் ஒதுக்கி வைக்க மாட்டேன்”

“குழப்புற பத்மி! இத்தன விளக்கம் எனக்கு தேவையில்ல… உன்னோட விருப்பம்தான் எனக்கு முக்கியம். அதுக்கு உன்னோட பதில் என்ன?”

“என்னோட பதில் எப்போவும் ஒன்னுதான்… என் வாழ்க்கைய நல்லவிதமா அமைச்சுதர, என்னை பெத்தவங்க இருக்காங்க… அவங்கள மீறி முடிவேடுக்குற தைரியம் எனக்கில்ல” தெளிவாக தன்நிலையை விளக்கி விட்டாள்.

“ரொம்ப தெளிவா பேசுறதா நினைப்பா பத்மி? பிடித்தமில்லாத ஒருத்தன்கூட உன்னால வாழமுடியுமா? அதையெல்லாம் யோசிக்கமாட்டியா?”

“எனக்கு பிடிக்கிற மாதிரியான நல்லவனைதான் எனக்கு தேடிக் குடுப்பாங்க… அதுல எனக்கு நம்பிக்கையிருக்கு விஸ்வா” என்றவள் தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள்.

‘என்ன தெனாவெட்டா பதில் சொல்லிட்டு போறா? எப்படியெல்லாம் குழப்பலாம்னு இவகிட்டதான் டியூஷன் போகனும் போல! உனக்கு டஃப் குடுத்தே, வழிக்கு கொண்டு வர்றேன்… இப்பவே கண்ணகட்டுதே! எப்படி எல்லோரும் விழுந்து விழுந்து காதலிக்குறாங்க தெரியலையே?’ என்று மனதிற்குள் புலம்பியவன், தன்எதிர்காலத்தை நினைத்து இப்பொழுதில் இருந்தே புலம்பத் தொடங்கி இருந்தான் விஸ்வேந்தர்