Uyir kadhal 11

உயிர் காதலே உனக்காகவே…

நினைவலைகள்…

இனம் புரியாத ஓர் உணர்வு
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !
பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !

சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் எழுதிய‌ உண‌ர்வு !

பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !

கொடும் பாலை மணலில் உள்ளம் வெதும்பி உயிர் கரைய இலக்கற்று நடக்கும் ஒருவனின் கண்ணுக்கு முன் சோலை தென்பட்டால் எப்படி ஒரு மகிழ்ச்சி அடைவானோ அப்படி ஒரு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது என் உள்ளம்.

என்னையே கிள்ளிக் கிள்ளிப் பார்த்து கைகள்கூட சிவந்து விட்டன. நடந்ததை நம்பதான் முடியவில்லை.

பூரணியை இதே பெங்களூருவில் பார்ப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை நான்.

வார இறுதியில் வழக்கம் போல லைப்ரரிக்குச் சென்றவன், வைரமுத்துவின் காதலித்துப் பார் கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் என்னருகே யாரோ அமரும் அரவம். இவ்வளவு நெருக்கமாக யார் என்று நிமிர்ந்து பார்த்தவன் உறைந்தே போனேன்.
கள்ளமில்லா பால் சிரிப்பை தலை சாய்த்துச் சிந்தியபடி என்னருகே என்னவள். உலகில் உள்ள ஒட்டு மொத்த சந்தோஷமும் மொத்தமாய் வந்து இதயத்தைத் தாக்க மூச்சடைக்கும் உணர்வு எனக்குள்.

‘அவள்தானா?’ ஆழ்ந்த சந்தேகம் எனக்குள் தோன்ற, அவளையே நினைத்து நினைத்து பித்து முத்திப் போய் காண்பதெல்லாம் காட்சிப்பிழையாய் அவளுருவாய் தெரிகிறதோ? விரிந்த விழிகளோடு மெல்ல கை நீட்டி அவள் கன்னம் தொட முயன்றேன்.

என் கைகளைத் தடுத்துப் பிடித்துக் கொண்டு புன்னகை சிந்தியவள்,

“என்ன மாமா இப்படி முழிக்கிறீங்க? நான்தான் பூரணி. நம்ப முடியலையா?”
அவளது ஸ்பரிசத்தில் தன்னிலை மீண்டது என்னுள்ளம், அவள் பிடியினுள் இருந்த என் கரத்தைப் பொக்கிஷமாய்ப் பார்த்தவன், “நீ… நீ… இங்க எப்படி? யார்கூட வந்த?”

“சுத்தம்… என்னைப் பத்தி எதையுமே தெரிஞ்சுக்கலையா நீங்க?” கேள்வியோடுகூடிய அவளின் விழியசைவில் கட்டுண்டு போனவன், இல்லையென்று தலையசைத்தேன்.

எங்கள் வீட்டினருனுடன் அலைபேசியில் பேசும்போது அவளைப் பற்றி யாரேனும் பேசினாலே பேச்சை மாற்றி வேறு பேச ஆரம்பித்து விடுவேன்.

அவளைப் பற்றிய உரையாடல்கள் பெரும் தாக்கத்தையும் ஏக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால்.

“நான் இங்கதான் விஸ்வேஸ்வரய்யா மெடிக்கல் காலேஜ்ல மெடிசின் சேர்ந்திருக்கேன். நான் பெங்களூர் வந்து நாலு மாசம் ஆகுது. நீங்களா என்னைப் பார்க்க வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க வர்ற மாதிரி இல்ல. அதான் நானே உங்களைப் பார்க்க வந்துட்டேன்.”
இது நிஜம்தானா…? நான் இவளைவிட்டு விலக நினைக்க விதி இவளை மீண்டும் மீண்டும் என்னோடு இணைக்க முற்படுகிறதா? தமிழ்நாட்டில் எத்தனையோ புகழ்பெற்ற கல்லூரிகள் இருக்க, படிக்க இங்கு வருவானேன்? அதையே அவளிடமும் கேள்வியாக்கினேன்.

கலகலவென நகைத்தவள் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி, “உண்மையச் சொல்லவா? பொய் சொல்லவா?”
இன்னுமே பிரமிப்பிலிருந்து வெளிவந்திருக்காதவன், அவளது வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல்,

“புரியல பூரணி.”

“ம்ம்ம்… இங்க ஈசியா சீட் கிடைச்சுதுங்கறது பொய். உங்ககூட, நீங்க இருக்கற ஊர்லதான் படிக்கனும்னு அடம்பிடிச்சு கஷ்டப்பட்டு சீட் வாங்கி வந்தது உண்மை.”

அவள் வார்த்தைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். எனக்காக வந்தாளா? நிஜம்தானா இது? உணர்ந்துதான் வார்த்தைகளை உதிர்க்கிறாளா? இதோ அவள் கண்ணில் மின்னும் காதலும் முகத்தில் இருக்கும் நாணமும் வேறு கதை சொல்கிறதே… அவ்வளவு அதிர்ஷ்டசாலியா நான்? வானில் பறக்கும் உணர்வுதான் எனக்கு.

பூரணி என்ற வார்த்தையைத் தாண்டி வேறு வார்த்தைகள் வரவில்லை எனக்கு. சந்தோஷத்தில் இதயம் வெடித்து விடுமோ என்று பயந்து இரு கைகளாலும் இதயத்தைப் பற்றிக் கொண்டேன். என் உணர்வுகளை கண்ணில் மின்னும் சிரிப்போடு பார்த்திருந்தாள் என் தேவதை.

“வாங்க மாமா, உங்களோட கொஞ்சம் பேசனும். வெளியில போயிடலாம்.” எனக்குமே உள்ளுக்குள் அவளிடம் கேட்டுத் தெளிவுபெற ஆயிரம் விஷயங்கள் வரிசைகட்டி நிற்க, இருவருமே அங்கே அருகில் இருந்த பூங்கா ஒன்றில் சென்று அமர்ந்தோம்.

“நான் இங்க இருக்கறது உனக்கு எப்படி தெரியும் பூரணி?”

“சிம்பிள். மாதவிக்கா.”
சற்று முன்புதான் மாதவி எனக்கு அழைத்துப் பேசியிருந்தாள்.

“பூரணி… எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல. நீ… நீ… எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கறது சந்தோஷமா இருக்கு. ஆனா…”
முடிக்க விடவில்லை என்னை அவள்.

“நான் சின்ன பொண்ணுதான் மாமா. காதலோ கல்யாணமோ பண்ற வயசு எனக்கில்லை. அது எனக்கும் தெரியும். ஆனா என் மேல இவ்வளவு பாசத்தை ஒருத்தர் வச்சிருக்கார்னு தெரிஞ்சும் எப்படி என்னால சும்மா இருக்க முடியும்? நீங்கதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாகுது.”

அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் எனக்கு. என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லையே. இவளுக்கு எப்படி தெரியும்? என்னைக் கண்டு கொண்டவள் பேச்சைத் தொடர்ந்தாள்.

“நான் நீங்க எழுதி வச்சிருந்த டைரியைப் படிச்சேன் மாமா.” அதிர்ச்சியில் கண்கள் விரிய நான் அவளைப் பார்த்திருக்க,

“மாதவிக்கா பாப்பாவை பார்க்க நானும் வினோத் மாமாவும் வந்திருந்தோம்ல, அப்ப எந்த காலேஜ் செலக்ட் பண்ணலாம்னு உங்கிகிட்ட ஒப்பீனியன் கேட்க உங்க ரூம்க்கு வந்தேன். நீங்க அங்க இல்ல. ஆனா, நீங்க டேபிள் மேல வச்சிருந்த பாக்ஸ் வித்தியாசமா இருக்கவும் திறந்து பார்த்தேன். அதுல ஒரு டைரி இருந்தது.”

லேசான குற்றக் குறுகுறுப்போடு என்னைப் பார்த்தவள், “அடுத்தவங்க டைரிய படிக்கறது தப்புதான். ஆனா அதனாலதான எனக்கு உங்களைப் பத்தி எல்லாம் தெரிய வந்தது. அதனால தப்பில்லை.” என்று சிரித்தாள்.

இதயத்தில் இதுநாள் வரை அடைத்துக் கிடந்த அனைத்துமே பட் பட் எனத் திறந்த உணர்வு. உண்மையில் நான் உணர்ந்ததை இதற்கு மேல் வார்த்தையில் வடிக்கத் தெரியவில்லை எனக்கு.

உலகில் உள்ள மொத்த சந்தோஷமும் என் காலடியில். உலகில் உள்ள மொத்த பண்டிகை கொண்டாட்டங்களும் என் உள்ளத்தில். உலகில் உள்ள மொத்த காதலும் என் கையருகே… அப்படியே எழுந்து ஓ… வென்று கத்த வேண்டும் போல ஒரு உணர்வு.

உணர்வுக் குவியலாய் உயரே பறந்து கொண்டிருந்தவன், அவளது மாமா என்ற அழைப்பில் தரையிறங்கினேன். எதுவுமே பேசாமல் நான் அமர்ந்திருக்கவும் என்னையே பார்த்திருந்தாள்.

“பூரணி, நிஜமா என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே என்கிட்ட இல்ல. ஆனா நம்ம குடும்பம்…” தயங்கினேன் அவள் வீட்டிலும் என் வீட்டிலும் ஒப்புக்கொள்ள வேண்டுமே?

“எனக்கு உங்கிகிட்ட பிடிச்சதே நீங்க குடும்பத்து மேல வச்சிருக்கற பாசம்தான் மாமா. நாம வீட்ல பொறுமையா பேசலாம் மாமா. நான் இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்களும் படிக்கறீங்க. படிப்பை முடிச்சிட்டு வீட்ல பேசலாம். எனக்காக அஞ்சு வருஷம் காத்திருக்க மாட்டீங்களா?”

“அஞ்சு வருஷமா? ஆயுள் முழுக்க காத்திருக்கச் சொன்னாலும் உனக்காக காத்திருப்பேன். உன்னை நீங்கி எனக்கு வேற வாழ்க்கை இல்லை பூரணி.” வெகுவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தேன்.

“தெரியும் மாமா.”
கண்ணுக்குள் பார்த்து உயிர் உருகச் சொன்னவள், என்னகம் முழுக்க ஆனந்தமாய் நிறைந்தாள்.
ஆசையோடு பேசியிருந்துவிட்டு, கிளம்பும்போது என்னிருப்பிடம் வந்தவளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். கொண்டாட்டமாய் ட்ரீட் கேட்டவர்களுக்கு வாங்கித் தருவதாய் உத்திரவாதம் தந்துவிட்டு, அவளை அழைத்துக் கொண்டுபோய் அவளது கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு வந்தேன்.

இந்த நாள் இப்படி ஒரு ஆனந்தத்தையும் நிறைவையும் கொடுக்கும் என்று நினைக்கவே இல்லை. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் இதுவும் ஒன்று.
பொக்கிஷமாய் நடந்தவற்றை மீண்டும் மீண்டும் எனக்குள் ஓட்டிப் பார்த்துக் கொள்கிறேன். இனி திகட்டத் திகட்ட காதல் நினைவுகள் இருக்குமே. இந்த ஒரு டைரி போதுமா எழுத? மனப் பெட்டகத்தில் பூட்டி வைக்கப் போவதை எழுதவேறு வேண்டுமா என்ன?

—அலையடிக்கும் …

வேட்டை ஆரம்பம்…

சிக்மகளூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கெம்மணங்குண்டி செல்லும் சாலையில் வளைந்தது பளபளப்பான கறுப்பு நிற வெளிநாட்டு கார் ஒன்று… மெல்லிய நிலவொளியில் அடர்ந்த வனப்பகுதியில் ஹேர்பின் பெண்டுகளில் அந்தக் கார் நிதானமாக வளைந்து நெளிந்து மலை ஏறிக்கொண்டிருந்தது.

நள்ளிரவைத் தாண்டிவிட்ட நேரமாகையால் வாகனப் போக்குவரத்து சுத்தமாக இல்லாமல் அமைதியாக இருந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணித்த காரினுள் சற்று பயத்தோடு அமர்ந்திருந்தான் மகேஷ்.

காதில் மாட்டிய இயர்ஃபோனில் வழிந்த இசைக்கு ஏற்ப தலையை ஆட்டியவாறு வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டிருக்கும் சஞ்சையை சற்று கடுப்போடு நோக்கினான்.

இடது கையில் வைத்திருந்த பியர் டின்னை வேறு அவ்வப்பொழுது வாயிற்குள் கவிழ்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

சிவந்திருந்த விழிகள் அவன் போதையின் அளவைச் சொல்லியது. ஆனாலும் நிதானம் தவறாத டிரைவிங்… எப்பொழுதும் போல மகேஷ்க்கு ஆச்சரியம் கொடுத்தது.
ஆனாலும் இப்போது செய்ய நினைத்திருக்கும் காரியம்…

ஏற்கனவே பெண் விவகாரம் ஒன்றில் சிக்கி ஒருமாதம் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்திருக்கும் இந்த நேரத்தில் இது தேவையா என்று அவனுள்ளம் சிந்தித்தபடி வந்தது.

அருகிலிருப்பவனை பகைத்துக் கொள்ளவும் முடியாது.
அவனால் கிடைக்கும் ஆதாயங்கள் அதிகம். மது மாது என அறியாத பலவற்றை அறிமுகப் படுத்தியவன். கர்நாடக மாநில வனத்துறை அமைச்சரின் மகன். எந்தப் பிரச்சனை என்றாலும் காப்பாற்றி விடுவான்தான், இருந்தாலும் ஹரிணியின் வருங்கால கணவனை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

நினைத்ததை அப்படியே வாய்விட்டுச் சொல்ல, அவனைக் கொலைவெறியோடு முறைத்தான் சஞ்சய்.

“அவனால ஒரு டேஷ்ஷூம் புடுங்க முடியாது. பக்காவா பிளான் போட்டுதான் காரியத்துல இறங்கியிருக்கேன்.”

“இல்லடா ஏற்கனவே சஸ்பென்ஷன்ல இருக்கோம்.”

“அதுதான் மச்சி நமக்கு இப்ப ப்ளஸ் பாயிண்ட்டே… அவளை சிட்டியிலயே தூக்கனும்னு நினைச்சேன். அதைவிட இந்த ஃபாரஸ்ட் ஏரியால நமக்கு ஃசேப்டி அதிகம்.

நாம அவங்ககூட ட்ரிப்புக்கு வந்திருந்தாகூட நம்ம மேல சந்தேகம் வர வாய்ப்பிருக்கு. இப்ப நாம இங்க வந்ததும் யாருக்கும் தெரியாது போறதும் யாருக்கும் தெரியாது.

அவளை அந்த காட்டேஜ்ஜ விட்டு வெளிய வரவச்சிட்டா போதும். மத்ததெல்லாம் ப்ளான்படி நடக்கும்.”

“அவ நம்மைக் காட்டிக் குடுத்திட்டா என்னடா செய்யறது?” கலக்கமாகக் கேட்டவனைப் பார்த்த சஞ்சையின் பார்வையில் குரூரமே மிஞ்சியிருந்தது.

“அவளை உயிரோட விட்டாதான காட்டிக் குடுப்பா?”
அதிர்ந்து போன மகேஷ், “டேய் என்னடா சொல்ற?” இதுவரை விட்டில் பூச்சிகளைப் போல வந்து தானே மாட்டும் பெண்கள்தான் அவர்களது இலக்கு. சஞ்சயிடம் இருந்த தோரணையும் பணமும் நிறைய பெண்களை கவர்ந்திழுத்திருக்கிறது. அவனது பாச்சா பலிக்காதது ஹரிணியிடம் மட்டுமே.

“நான் குறி வச்ச எவளும் தப்பிச்சதில்ல. இவளை மட்டும் விட்ருவேனா? அதுமட்டுமில்ல என்பின்னாடி எத்தனை பேரு சுத்தறாளுங்க? ஆனா இவகிட்ட நானே வலியப் போய் லவ்வைச் சொன்னதுக்கு எப்படி அசிங்கப்படுத்தி அனுப்புனா? அவளைச் சும்மா விட்ருவேனா?” பழிவெறியில் அவனது கண்கள் மின்னியது.

ஹரிணியைப் பொருத்தவரை சஞ்சய் கேரக்டர் சரியில்லாத சகமாணவன். அவன் தன்னைக் காதலிக்கிறேன் என்று வந்து நின்றபோது, அதை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளாமல் அவனை சகமாணவிகளோடு சேர்ந்து கிண்டல் செய்து விரட்டியிருந்தாள். அவளைப் பொருத்தவரை இது ஒரு நகைச்சுவையான கல்லூரிகால நிகழ்வு அவ்வளவுதான். இதற்காக அவன் தன்னை பழிவாங்கக் காத்திருப்பான் என்பதெல்லாம் அவள் நினைத்தும் பார்த்திராத ஒன்று.

“எனக்கென்னவோ பயமா இருக்கு சஞ்சய். மாட்டினோம் ஜென்மத்துக்கும் வெளியில வரமுடியாது.”

“டேய், வழியில எத்தனை செக்போஸ்ட் வந்துச்சி எதுலயாவது நம்மை நிப்பாட்டுனாங்களா? கேள்வி கேட்டாங்களா?”
இல்லையென்று மகேஷின் தலை ஆடியது. “புதுசா வந்திருக்கற ஃபாரஸ்ட் ஆபிசர் அப்பாவுக்கு வேண்டிய ஆளு. இந்த ஃபாரஸ்ட் முழுக்க அவர் கன்ட்ரோல்லதான் இருக்கு. நாம இங்க வந்ததே யாருக்கும் தெரியாம அவர் பார்த்துக்குவாரு.

அவளை அந்த காட்டேஜ்ஜ விட்டு வெளிய வரவச்சு மலைக்கு மேல தூக்கிட்டு போய்ட வேண்டியதுதான். அவளை ஆசைதீர யூஸ் பண்ணிட்டு இருக்கற பள்ளத்தாக்குல எதுலயாவது வீசிட வேண்டியதுதான்.

உனக்கு ஒன்னு தெரியுமா? இங்க இருக்கற சில பள்ளத்தாக்குகள்ல இதுவரை மனிதர்களோட காலடிகூட பட்டதில்லையாம்… போகவே முடியாத இடங்கள்லாம் இருக்குதாம்.

அடிச்சுத்தூக்கி உள்ள போட்டா பாடியைக் கண்டுபிடிக்கவே போலீஸ்க்கு பலமாசமாகுமாம். அப்படியே கண்டுபிடிச்சாலும் அதுவரை காட்டு விலங்குகள் அவளை விட்டு வச்சிருக்கனுமே. இதெல்லாமே அந்த ஆபீசர் சொன்னதுதான்.” இடைவெளி விட்டவன்,

“என்ன… அவருக்கும் ஹரிணிய ஷேர் பண்ணிக்கனுமாம்.” என்று கேவலமாகச் சிரித்தபடிக் கூறியவனின் பார்வையில் மிஞ்சியிருந்தது பழிவெறி மட்டுமே. அவனுக்கு இதெல்லாம் புதிதில்லை என்பது அவனது பேச்சிலேயே தெரிந்தது.

நண்பன் பேசப்பேச சற்று தைரியம் வந்திருந்தது மகேஷ்க்கு. “சரிடா அவளை எப்படி வெளிய வரவைக்கறது?”

“உன்னை எதுக்குக்கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிற? நீதான் அவளை வெளிய வரவைக்கனும்.”

“நானா? நான் எப்படிடா? நான் கூப்பிட்டா அவ வருவாளா?”

“நீ கூப்பிட்டா வரமாட்டா. ஆனா நீ குரலை மாத்தி ரேணு குரல்ல பேசு தன்னால வருவா.”

“ரேணு குரல்லயா?” புரியாமல் குழப்பப் பார்வை பார்த்த மகேஷைப் பார்த்து சிரித்தவன்.

“உன் டேலண்ட்ட யூஸ் பண்ணு மச்சான்.” எனவும் சிரித்த மகேஷூக்கு பலகுரலில் மிமிக் செய்யும் திறமையிருந்தது.

“இந்த ஒரு மாசமா அவ பின்னாடியே அலைஞ்சு கண்காணிச்சதுல ஏகப்பட்ட விஷயம் தெரிய வந்தது. பத்து நாளைக்கு முன்னாடி சிட்டியில கலெக்டர் கொலை நடந்ததே அதுக்கு ஹரிணி முக்கிய ஐவிட்னஸ்.

அதுவுமில்லாம ரேணு அண்ணன் கொலைக்கும் இவ முக்கியமான சாட்சி. ரேணு அண்ணன் கொலைகேஸ்ல இவளை சந்தேகப்பட்டு விசாரிக்கக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.

அந்தச் சரணும் அவங்கப்பாவும்தான் அவளைக் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தது. இப்பவரைக்கும் அவ பேர்கூட எதுலயும் வராம பார்த்துக்கறது அவங்கதான்.”

“என்னடா என்னென்னவோ சொல்ற.” ஆச்சர்யமாகப் பார்த்திருந்தவனைப் பார்த்துச் சிரித்தபடி தொடர்ந்தவன்,

“இப்ப நீ ரேணு குரல்ல பேசி… எங்க அண்ணனைக் கொன்ன கொலைகாரனோட ஃபோட்டோ கிடைச்சிருக்கு. நீ கொஞ்சம் வந்து அவனான்னு பார்த்துச் சொல்லுன்னு சொல்லி காட்டேஜ் வாசலுக்கு வரச் சொல்லு. அவ வருவா.”

“ப்ளான்லாம் பக்காவாதான் இருக்கு. ஆனா… அவகூடவே ஒட்டிக்கிட்டு இருப்பாளே ஒருத்தி சுஜி… அவளும் கூட வந்தா என்ன செய்யறது?”

“ஹா…ஹா… ஹா… டபுள் ட்ரீட்தான். மூனு பேரால அவளுக ரெண்டு பேரைச் சமாளிக்க முடியாது? குளோரோஃபார்ம் கர்சீப்பை மூஞ்சில வச்சு அழுத்தினா மயங்கிடுவாளுங்க, இழுத்து கார்ல போட்டுக்கிட்டு மலைக்கு மேல ஏறிட வேண்டியதுதான். வந்த வேலை முடிஞ்சதும் விடியமுன்ன சத்தமில்லாம இறங்கிட வேண்டியதுதான்.”

“அந்த ஃபாரஸ்ட் ஆபீசர்…?”

“அருவிக்கரைக்குப் போற பாதையில வெயிட் பண்றதா சொல்லியிருக்காரு. அந்தப் பள்ளத்தாக்கு இருக்கற பகுதிக்கு அவருக்குதான வழி தெரியும். அங்க போய் அவரை கார்ல ஏத்திப்போம்.”
இவர்கள் பேசிக் கொண்டே காட்டேஜை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்,

அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்தனர் ஹரிணியும் சுஜியும்.

காலையிலிருந்து நடந்தே பல இடங்களுக்குச் சென்றது கால்களில் உளைச்சலைக் கொடுத்திருந்தது சுஜிக்கு, வலி நிவாரணியைத் தடவியவள் படுத்ததும் தூங்கியிருந்தாள். சற்று முன்னர்தான் படுக்க அறைக்கு வந்திருந்தனர் இருவரும்.

சுஜி தூங்கியதும் சரணுக்கு அழைத்து சிறிது நேரம் பேசிய ஹரிணி, பிறகும் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாகத் தெரிந்த முழுமதியை ரசித்துக் கொண்டிருந்தாள். சற்று முன்புவரை கேம்ப் ஃபையர் அமைத்து நண்பர்களுடன் ஆடிப் பாடியது மனதுக்கு அப்படி ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

அனைவரும் தூங்கச் செல்லவும்தான் இவர்களும் அறைக்கு வந்திருந்தனர். மறுநாள் சிருங்கேரி ஷாரதாபீடம் செல்ல வேண்டும் என்று பிளான் செய்திருந்தனர். தூக்கம் வரவில்லை ஹரிணிக்கு. ராக்கோழி போல விழித்திருந்தவளை கையில் இருந்த அலைபேசி சிணுங்கி கவனத்தை ஈர்த்தது.

புதிய எண்ணாக இருக்கவும், இந்த நேரத்தில் யார் என்று யோசித்தபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ…”

“ஹலோ, நான் ரேணு பேசறேன்.” மகேஷின் திறமையில் ரேணுவின் குரல் அட்சர சுத்தமாக ஒலித்தது.
‘ரேணுவா?’ மனதில் தோன்றிய குழப்பத்தோடு, “புது நம்பரா இருக்கு ரேணு.”

“ஆ…ங் இப்பதான் மாத்துனேன். உனக்குக் கொடுக்க மறந்துட்டேன். நான் இப்ப ஒரு முக்கியமான விஷயத்துக்காகதான் கால் பண்ணேன்.”

“…”

“எங்க அண்ணனை கொலை செய்தவனை நீ பார்த்திருக்கல்ல?”
இது எப்படி இவளுக்குத் தெரியும் என்ற குழப்பத்தோடு, “ம்ம்ம்… ஆமா.”

“எனக்கு ஒருத்தன் மேல டவுட் இருக்கு ஹரிணி. நீ கொஞ்சம் வந்து அவனான்னு பார்த்துச் சொல்லேன். அவன் ஃபோட்டோ என்கிட்ட இருக்கு.”
இதை இவ்வளவு நேரம் கீழே இருந்தபோது சொல்லாமல் இப்போது சொல்கிறாளே என்று நினைத்தபோதும் ரேணுவின் மீது எந்த சந்தேகமும் தோன்றவில்லை ஹரிணிக்கு.

“உனக்கு அந்த ஃபோட்டோ எப்படி கிடைச்சுது?”

“எங்க அண்ணன் கேஸை பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்னுலயும் கொடுத்து விசாரிக்கச் சொல்லியிருக்கோம், அவங்க கொடுத்தாங்க.”

“சரி இரு உன் ரூமுக்கு வரேன்.”

“நான் ரூம்ல இல்ல. காட்டேஜ் வாசல்ல நிக்கறேன். ரூம்ல இன்னும் யாரும் தூங்கல. அதான் நான் வெளிய வந்து உனக்கு ஃபோன் பண்றேன்.”

“ஓ… சரி வெயிட் பண்ணு இதோ வர்றேன்.” என்றவள் குளிருக்காக ஷால் ஒன்றை எடுத்து மேலே தலையைச் சுற்றி போர்த்தியவாறு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சுஜியை எழுப்புவோமா என்று தோன்றிய எண்ணத்தை சுஜியின் அயர்ந்து உறங்கிய தோற்றம் செயல்பட விடவில்லை. சுஜியைத் தொந்தரவு செய்யாமல் மெதுவாக அறைக்கதவைச் சாற்றியவள், கீழே இறங்கி வந்தாள்.

அது தனியார் காட்டேஜ். மாணவர்கள் தனிப் பகுதியிலும் மாணவிகள் தனிப் பகுதியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். குளிருக்கு பயந்து வரவேற்பறையில்கூட ஒருவரும் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது. வரவேற்பறையைத் தாண்டி வாசலுக்கு வந்தவள், அங்கு யாரையுமேக் காணாமல் சற்று திகைத்து நின்றாள்.

காட்டேஜின் செக்யூரிட்டியும் அவருக்கென இருந்த அறையில் நன்கு உறங்கிக் கொண்டிருக்க, வெளியில் ரேணு இருப்பதற்கான தடமே தெரியாமல் இருந்தது. உள்ளே போகலாம் என்று முடிவெடுத்துத் திரும்பியவளை, “ஹரிணி” என்ற மகேஷின் குரல் நிறுத்தியது.
இருளில் இருந்து வெளி வந்த மகேஷை மங்கலான வெளிச்சத்தில் பார்த்ததும் ‘இவன் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறான்?’ என்று எண்ணியவள், “நீ… இங்க…” என்னும் போதே அவன் தங்களோடு டிரிப்புக்கு வரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவள் சுதாரித்து காட்டேஜினுள் செல்லும்முன் அவள் முகத்தில் குளோரோஃபார்ம் தடவப்பட்ட கர்ச்சீஃபை வைத்து அழுத்தினான் சஞ்சய். முகத்தில் எதையோ வைத்து அழுத்துகிறான் என்பதை உணர்ந்ததுமே மூச்சை இழுக்காமல் தம்கட்டி இருந்தாலும் முடியாமல் மூர்ச்சையாகி அவன்மீதே சரிந்து விழுந்தாள்.

நொடிகூட தாமதிக்காமல் அவளை இழுத்து காரினுள் போட்டவர்கள், அருவிக்கரைக்குச் செல்லும் பாதையில் காரைத் திருப்பியிருந்தனர்.

விதவிதமான காட்டுப் பூச்சிகளின் சப்தம் மட்டுமே ஒலிக்க, ஒருவிதமான அமானுஷ்யத்தோடு இருந்தது அந்த இடம். அருவிக்குச் செல்ல அங்கிருந்து சிறிதுதூரம் நடந்து செல்ல வேண்டும். கார் செல்ல பாதையில்லாததால் வண்டியை நிறுத்தி இறங்கியிருந்தனர் இருவரும்.

காத்திருக்கிறேன் என்று கூறியிருந்த ஃபாரஸ்ட் ஆபீசரும் அங்கு இல்லாததால், காரை அங்கு நிறுத்திவிட்டு டென்ஷனுடன் அந்த ஆபீசரின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

“ச்சே… சுத்தமா டவரே இல்லை. அந்த ஆளுவேற எங்க போய்த் தொலைஞ்சான்னே தெரியல. இதுக்கு மேல கார் போறதுக்கு வழியில்ல. இங்கதான் வெயிட் பண்றேன்னு சொன்னான்.”

“இந்த இடத்தைப் பார்த்தாலே பயமா இருக்குடா.” அந்தக் குளிரிலும் வியர்த்தது மகேஷூக்கு.
இருவரும் காரை விட்டிறங்கி பேசிக் கொண்டிருக்க, மயக்க மருந்தை அவ்வளவாக சுவாசிக்காததால் ஹரிணிக்கு லேசாக சுயநினைவு இருந்தது. அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டவளுக்கு அவளைச் சூழ்ந்துள்ள ஆபத்தின் அளவு புரிந்தது.

காரின் பின்சீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தவள், சற்று சுதாரித்து முழு நினைவுக்கு வந்தாள்.

சொருகிய கண்களை கஷ்டப்பட்டுத் திறந்தவள், மெல்ல எழுந்து பார்க்க… மங்கலான காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் இருவரும் நிற்பது புலனானது.

அவர்களின் நோக்கம் புரிந்து போக, தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உந்தியதில் மெல்ல காரின் கதவைத் திறந்து இறங்கியவள், பக்கவாட்டுச் சரிவில் இறங்கி இருளில் ஓடத்துவங்கினாள்.

சருகுகளின் ஓசையில் திரும்பிப் பார்த்தவர்கள், ஹரிணி இறங்கி ஓடுவதைக் கண்டதும், “டேய், அவ தப்பிச்சு ஓடறாடா.” என்றபடி அவளைத் துரத்தத் துவங்கினர்.

இடையில் தடுத்த மரங்கள் குற்றுச் செடிகள் எதையும் கண்டு கொள்ளாமல் பயத்தோடும் பதட்டத்தோடும் ஓடிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்க்க, சற்று தொலைவில் இருவரும் ஓடி வருவது மெல்லிய நிலவொளியில் தெரிந்தது.

காட்டுக்குள் எந்த திசையில் ஓடுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் எப்படியாவது தப்பித்தால் போதும் என்று மூச்சிரைக்க ஓடியவள் ஏதன்மீதோ மோதி கீழே விழ, அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் தன்முன்னே நின்றவனைக் கண்டதும் அதிர்ச்சியில் மேலும் விரிந்தது.

தன் முன்னே பயத்தோடும் பதட்டத்தோடும் கீழே விழுந்து கிடந்தவளைக் கை கொடுத்துத் தூக்கியவன், புருவ முடிச்சிடலோடு அவளுக்குப் பின்னே பார்க்க, அவளைத் துரத்தி வந்த இருவரும் பார்வையில் பட்டனர்.

நடுக்கத்தோடு அவனது கைப்பிடியில் நின்றிருந்தவள் மெல்லிய நிலவொளியில் தெரிந்த அவனது முகத்தைக் குழப்பத்தோடு பார்த்தவளின் உதடுகள் தந்தியடித்தன.

“ஹா… ஹாப்… நீங்… ஹா…”

—தொடரும்.

error: Content is protected !!