Alaikadal 10

அலைகடல் – 10

தரையில் சுருண்டிருந்தாள் பூங்குழலி. காலையில் உண்டது அதன்பின் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. நடந்து முடிந்த சம்பவங்கள் அவளைப் புரட்டிபோடத் தொண்டைத் தாகத்தில் கதறியதையோ வயிறு பசியில் அலறியதையோ அவள் உணரவே இல்லை.

அழுது அழுது கண்ணீரும் வற்றிவிட அசையாமல் படுத்திருந்தாள். எவ்வளவு நேரம் சென்றதோ வீட்டின் அழைப்பு மணி ஒலித்து அடங்கி, கதவைத் தட்டவும்தான் தெம்பில்லாத உடலைக் கடினப்பட்டு அசைத்து மெதுவே எழுந்தாள்.

கதவைத் திறக்க நான்கடி எடுத்து வைத்தப் பின்பு மூளை ஆரவ்வின் வார்த்தையை நியாபகப்படுத்த இப்போதுக் கதவைத் திறப்பதா? வேண்டாமா? என்று தெரியாமல் நின்றேவிட்டாள்.

“யா… யாரு” மெதுவே நெருங்கி மெலிதாகக் வினவ,

அதை கேட்டதிற்கு அடையாளமாக ஒரு நிமிடம் அமைதியைத் தத்தெடுத்த மறுபுறம் பின், “ஏன் பாதில நிறுத்திட்ட முழுசாக் கேட்க வேண்டியதுதானே யாரு நீங்கன்னு” என எரிந்து விழுந்தது.

அந்த குரலில் அது கூறிய வார்த்தையில் யாரென அறிந்தவள் அவன் கோபமும் நியாயம்தான் என்றெண்ணி நடந்ததைக்கூற மேலும் யோசிக்காமல் கதவைத் திறந்துவிட்டாள்.

வெளியே இருந்த அர்ஜுனோ கண்கள் சிவக்க உக்கிரத்தை முகத்தில் தாங்கி முறைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் பூங்குழலிக்கு பேச நினைத்த வார்த்தைகள் மறந்துவிட அவளைத்தாண்டி உள்ளே வந்தவனோ, “சொல்லு ஹோச்பிடல்ல ஏன் அப்படி கேட்ட?” என்றான் கூர்மையுடன்.

நெருங்கி வந்த பின்பே அவனிடமிருந்து வந்த வாடையில் அவன் குடித்திருப்பதை உணர்ந்தாள். ஆனால் அதற்கான அறிகுறியின்றி தள்ளாடாமல் போதையிலும் இல்லாமல் குரல் பிசிறின்றி வந்தது.

முன்பின் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளாததால் அதிர்ச்சியில் இருந்த மூளை கேள்வியைத் தாமதமாக உள்வாங்கி பதில் அளிக்க நினைக்கையில் அதுவரை பொறுமை இல்லாத அர்ஜுன் அடுத்தநொடி அவளின் தோளைப் பற்றி உலுக்க ஆரம்பித்தான்.

“கேட்குறேன்ல சொல்லு… எப்படி எப்படி ஒருமணி நேரத்துல அவன் பக்கம் போன? பணம் கொடுத்தானா சொல்லு… எவ்வளவு பணம் கொடுத்தான். நான் அதைவிட அதிகமா தரேன்…”

அவனின் பிடியில் சிக்கியிருந்தவளோ கையை விளக்கிவிட முயற்சி செய்தவாறு, “இல்லை இல்லை… அவன்…” என்று மறுத்து விளக்கம் கூறவர,

வலதுகையால் அவளின் இரு கன்னத்தைப் பற்றியவன், “இல்லைல இல்லைல? அப்புறம் ஏன் உண்மையை சொல்லல சொல்லு… நீ மட்டும் சொல்லியிருந்தா இன்னக்கி நடந்திருக்குற விசயமே வேற…” அதை எண்ணிப்பார்த்து அது நடக்காமல் போனதில் வெறியேறினான்.

தன்னிடமிருந்து தப்பிக்க துள்ளுபவளிடம் இப்போது கவனம் செல்ல, “வேற எதைடி கொடுத்து உன்னை மயக்கினான்? எப்படி எல்லாரும் அவன் சொல்றதையே கேட்குறீங்க” என்றவனின் பார்வை இப்போது பெண்ணைக் காணக்கூடாத இடங்களில் கண்டு துகிலுரித்தது.

அவன் பார்வையில் உடல் கூசியவள் ஒருவழியாகக் கன்னத்தில் இருக்கும் கையைத் தட்டிவிட்டு, “உன் அம்மா தம்பி என் கஷ்டடில சொல்றதைச் செய்ன்னு சொல்றவன்கிட்ட வேற என்ன பண்ண முடியும்? அதுக்கு இப்படிதான் நடந்துப்பீங்களா? ச்சை… என்னை விடு என்னை… வெளிய போ” என கத்த அதில் தளர்ந்த அவன் கைப்பிடியில் இருந்து வேகமாக வெளியேறினாள்.

உடனடியாக தள்ளியிருந்த மேசை இழுப்பறையிலிருந்து வீட்டின் உபயோகத்திற்காக உபரியாக வைத்திருந்த கத்தியையும் எடுத்துக்கொண்டாள்.

இப்போது உக்கிரமாக முறைப்பது பூங்குழலி முறையானது. “இப்போ வெளிய போறீங்களா இல்லையா?” கத்தியை வைத்து அவனை வாசல் நோக்கி விரட்டினாள்.

“ஏய்… வெயிட் வெயிட் நான் போயிருறேன் அதுக்கு முன்ன மன்னிப்பு கேட்டுக்குறேன். ஐ அம் சாரி ஏதோ கோபம் அதான்” என சமாதானம் செய்ய விழைந்தான்.

மூச்சுவாங்க கத்தியை லேசாக கீழிறக்கியவள், “இப்போ நீங்க கிளம்புறீங்களா இல்லை சத்தம் போட்டு அக்கம் பக்கம் கூப்பிடவா?” என்றாள் அவனின் மன்னிப்பையோ சமாதானத்தையோ கணக்கில் கொள்ளாமல்.

“ஹேய் வெயிட்… முதல அந்த கத்தியை கீழ இறக்கி நான் சொல்றதை கேளுங்க. நீங்க ஆரவ் பக்கம் போயிடீங்கன்னு நினைச்சேன் அப்படி இல்லைன்னு தெரிஞ்சிருச்சி. அதுக்குள்ள அவசரப்பட்டதுக்கு சாரி. ஆரவ் பத்தி உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு நல்லாத்தெரியும் உங்க அம்மா தம்பியை கொன்றது பத்தாதுன்னு அதுக்கு ஆதாரமா இருக்குற உங்களையும் அழிக்கதான் பார்ப்பான்” என

‘வீட்டுக்குள்ள இருக்குற உன்னை கடத்த எனக்கு எவ்வளவு நேரம் ஆகிறப்போகுது?’ ஆரவ்வின் குரல் காதருகில் ஒலிக்க,

அர்ஜுன் மேலும் தொடர்ந்துக் கொண்டிருந்தான், “இப்படி தனியா இருக்குறதுக்கு என்கூட வந்தா பாதுகாப்பா இருக்கலாமே. நான் நல்லா பார்த்துப்பேன்” என்றான்.

இதை வந்ததும் கூறியிருந்தால் அவள் இருந்த மனநிலைக்கு உடனே கிளம்பிக்கூட போயிருப்பாள். ஆனால் அவனிற்கே இந்த யோசனை அப்போது இல்லையே. ஏன்? பூங்குழலியிடம் தவறாக நடப்பதும் கூட அவன் யோசனையில் இல்லை.

கோபத்தில் சண்டையிடக் கிளம்பி வந்துவிட்டான்தான் ஆனால் அவளைப் பற்றியிருக்கையில் புத்தியில் ஏறிய பெண்ணவளின் அழகும், மென்மையும் கூடுதலாக யாருமற்ற நிலையும் மனதினைச் சலனப்படுத்தக் குடித்திருந்த மது தராத போதையை மாதுவின் அருகாமை சர்ரென்று ஏற்றியிருந்தது.

அதற்குள் பூங்குழலி சுதாரித்துக் கத்தியை எடுத்ததால் இப்போது அவளைத் தன்னோடு அழைத்து சென்றால்போதும் என்ற முடிவிற்கு வந்துவிட, அவனின் உண்மை முகத்தைச் சிறிது நேரம் முன்பே கண்டிருந்த பூங்குழலியா அவனுடன் செல்வாள்?

“நோ தேங்க்ஸ்… என்னை நான் பார்த்துக்குறேன் நீங்க” அதற்கு மேல் பேசாமல் சைகையில் வாசலை காட்ட,

கதவுவரை நெருங்கியவன் பூங்குழலி எதிர்பாரா நேரத்தில் சட்டென்று கீழே குனிந்து அவள் பின்னால் வந்து கத்தி வைத்திருந்த கையை முறுக்கி கத்தியைப் பிடுங்கி வெளியே வீசினான்.

“கத்தி இருக்குற தைரியமோ? எங்கே இப்போ பேசுடி…” என்றவாறு கத்த சென்றவளின் வாயையும் பின்னிருந்தே மூடியவன் மேலும் அவளை இறுக அணைத்து அசையவிடாமல் செய்து காலால் கதவைச் சாற்ற பூட்டுவதற்கு எந்த கையை எடுத்தாலும் பூங்குழலிக்கு சாதகமாகும் என்பதால் அவளை உள்ளே இழுத்துச் செல்ல தடாலென கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்க்கும்முன் அர்ஜுன் கீழே கிடந்தான். மேலும் ஆஜானுபாகுவாய் இருவர் அவனை நையப்புடைத்துக் கொண்டிருந்தனர். அருகே மற்றொருவன் போனை காதில் வைத்திருக்க வாசலருகே ஒருவன் கையைப் பின்னால் கட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியோ நொடியில் பின்வாசல் வழியாக வெளியே ஓடப்பார்க்க அங்கு செல்லும் வழியை போனில் அழைத்துக் கொண்டிருந்தவன் மறித்து அவளின் கையை பிடிக்க சராமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் பூங்குழலி “விடு விடு…” என்றவாறு கடிக்கச் செல்ல அப்போது எதிர்ப்புறம் எடுத்துவிட்டது போல இவளை உள்ளே தள்ளியவன், “சார் இங்க அர்ஜுன்…” என்று நடந்ததைக்கூற,

எதிர்ப்புறம் இருந்த ஆரவ்வோ, “ஹ்ம்ம்… லீவ் ஹேர் நவ். அர்ஜுனை மட்டும் தூக்குங்க” என்றான்.

அவன் தள்ளிவிட்டதில் கீழேவிழாமல் தடுமாறி நின்றவளோ அர்ஜுன் அடிவாங்கிக் கொண்டிருந்த இடத்தைத்தாண்டி முன்புற வாசலை நெருங்க அங்கிருந்தவன் அவளைப்பிடிக்க வருகையில் உள்ளே இருந்தவன், “நோ… அவங்களை விட்ருங்க. இவனை மட்டும் கொண்டுபோனா போதுமாம் லெட்ஸ் மூவ்” என்றான் அவசரமாய்.

அதில் பூங்குழலியை விட்டுவிட்டு அர்ஜுனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நால்வரும் அங்கிருந்து கிளம்ப அடுத்தநொடி கதவில் இருக்கும் அனைத்து தாழ்ப்பாளையும் போட்டு அதன் மீதே சரிந்து அமர்ந்தாள் பூங்குழலி. இதயம் தாறுமாறாய் எகிறிக் குதித்தது. எதற்கு வந்தார்கள்? ஏன் விட்டுச் சென்றார்கள்? என ஒன்னும் புரியவில்லை. இரு கைகளால் தலையைப் பற்றிக்கொண்டாள்.

அவ்வளவு நேரம் நடந்த களேபரத்திற்கு நேர்மாறாய் அங்கிருந்த அமைதியும் தனிமையும் முகத்தில் அறைய இனி இப்படிதான் தன் வாழ்க்கை செல்லப்போகிறதோ என்ற எண்ணமும் கலக்கத்தைத் தர, தனக்கு நேர இருந்த வீபரிதமும் சேர்ந்து மேலும் கலக்கத்தை அதிகரிக்கக் கடைசியில் எண்ணங்கள் சுழன்று ஓரிடத்தில் நிலையாக நிலைத்து நின்றது.

‘இன்னும் இந்த உலகத்தில் என்ன இருக்குன்னு வாழனும் செத்துரலாம்… செத்தா என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. நிம்மதியா இருக்கலாம்’ என்பதே அது.

முடிவெடுத்தபின் தாமதமேது? பரபரவென்று அறைக்குச் சென்று தாயின் புடவையை எடுத்தாள். ‘அம்மா என்னையும் கூட்டிட்டு போயிரும்மா’ என்று முனங்கியவாறு மின்விசிறியில் தூக்குப்போட நாற்காலியை எடுக்க அதில் அழகாய் வீற்றிருந்தது பூங்குழலி வீசிய கப்பற்படையில் சேருவதற்காக கடைசி தேர்வான மருத்துவ சோதனைக் கடிதம்.

இடதுகையில் புடவை இருக்க வலது கையால் கடிதத்தை எடுத்தாள். இப்போது எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கி மூளை குழம்பியது. யோசித்தாள் யோசித்தாள் அதிதீவிரமாக யோசித்துக்கொண்டே இருந்தாள்.

மரணமா? மறுபிறப்பா? மண்டைக்குள் கேள்விகள் சுற்றிச்சுழற்றியது. ஆம்! கவலையின்றி தாய், தம்பியின் கூட்டில் வாழ்ந்தவளைத்தான் மரித்துபோக செய்துவிட்டார்களே இனி மீண்டும் வாழவேண்டுமானால் மறுபிறப்பெடுக்கத்தானே வேண்டும்.

கடைசியில் வீழ்ந்து எதிரிக்கு நிம்மதியைக் கொடுப்பதைவிட வாழ்ந்து அவனிற்கு பதிலடி கொடுத்திடும் தீர்க்கமான முடிவைத் தேர்ந்தெடுத்தாள் பூங்குழலி.

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் தானே? உயிரின் மீது பற்று இருக்கும்வரைதான் இந்த கலக்கங்களும் பயங்களும். என்ன வாழ்ந்து என்ன? நடக்குறது நடக்கட்டும் ஒருகை பார்த்திருவோம் என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்துவிட்டால் உலகத்திலுள்ள பெரிய பெரிய கடின செயல்களெல்லாம் எளிதாய் செய்து முடிக்க வைத்துவிடும். அம்மனநிலை அனைவருக்கும் சாத்தியம் இல்லையே!

பூங்குழலியின் அடுத்தடுத்த அடிகள் வாழ்வின் மீதான பற்றைத் துறக்க வைத்துவிட அவளின் கலங்கிய பூஞ்சை மனம் புலியின் மனமாய் உருமாறி வியூகம் அமைத்தது.

ஒற்றைப் பெண்ணாய் இவர்களிடம் சிக்காமல் பதுங்குவதுதான் நல்லது என்று தோன்ற பதுங்குவதற்கான ஆயுதமாக அந்த நள்ளிரவிலேயே கொல்கத்தா செல்ல ஆயுத்தமானாள் அவள்.

புலி மட்டுமல்லை பெண் பதுங்கினாலும் பாயத்தான் செய்வாள். அப்போது ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்குமென்று அப்பெண்ணிற்கு மட்டுமல்ல யார்க்குமே தெரியாது.

தேவையான அனைத்தையும் ஒரு பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள். சான்றிதல்கள் எடுக்கையில் கல்லூரிச் சான்றிதல் வாங்க இருமாதங்கள் கழித்து மீண்டும் சென்னைக்கு வரவேண்டும் என்று மூளை குரல் கொடுக்க.

அதை அப்ப பார்த்துக்கலாம் என்று அலட்சியப்படுத்தினாள். மருத்துவத்திற்கு என்று எடுத்திருந்த பணமும் லட்சக்கணக்கைத் தொட பணத்தை பற்றியக் கவலையும் இல்லை.

கடைசியாகத் தாய், தந்தை, தம்பியுடன் இருந்த ஒரு புகைப்படத்தையும் மனதில் வலியோடு எடுத்துக்கொண்டாள்.

தான் எங்கு செல்கிறோம் என்ற துப்புத் தேடினாலும் கிடைக்காதபடி செய்தவள் தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்து நடமாட்டம் சிறிதுமின்றி வெறித்திருந்தச் சாலையில் பயமின்றிப் பயணித்து சென்றேவிட்டாள், அத்தனை வருடங்களாக அவளின் சுக துக்கங்களின் சாட்சியாக இருந்த வீட்டினை விட்டு.

செல்லும் வழியில் நின்றவள் தன்னிடமிருந்த செல்பேசியை எடுத்து சாக்கடையில் வீசினாள். பின் சென்னை சென்ட்ரலில் தான் ஆசையாக வாங்கிய ஸ்கூட்டியை கண்டிப்பாகத் திருடு போய்விடும் என்ற நம்பிக்கையோடு சாலையில் சாவியுடன் விட்டுவிட்டுத் தனக்காக என்ன காத்திருக்கிறது என்றே தெரியாமல் புது வாழ்க்கைக்கான பாதையில் விதியின்வழி நடைபோட ஆரம்பித்தாள்.