Poo 19 (final)

Poo 19 (final)
- shanthinidoss
- August 29, 2020
- 0 comments
வாசலில் கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்கவும் ஹாலில் உட்கார்ந்திருந்த பல்லவி எட்டிப் பார்த்தாள். பார்த்தவள் விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்து போனது. ஏனென்றால் காரிலிருந்து இறங்கியது கவிதா.
சட்டென்று எழுந்தவள் வாசலுக்கு விரைந்து போனாள். இதுவரை நேரமும் அவளை வாட்டிக் கொண்டிருந்த தலைசுற்றல் என்றொரு விஷயம் அவளுக்கு மறந்தே போய்விட்டது.
“கவிதா…” கூவிய படி வந்தவளை கவிதாவும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“என்ன பல்லவி? நல்லா இருக்கிறியளோ?”
“ஐயோ கவிதா! என்னால நம்பவே முடியலை. நீங்களேதானா?”
“ஹா… ஹா… பல்லவிக்கு எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்? நான் இந்தியா வாறது அவ்வளவு பெரிய விஷயமே?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க வந்திருக்கீங்க. என்னால அதை நம்பவே முடியலை. அத்தை…” உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தவள் தன் தோழியைக் கைப்பிடியாக உள்ளே அழைத்துச் சென்றாள்.
அப்போதுதான் குளியலை முடித்திருந்த பவானி பல்லவியின் குரலில் அவசர அவசரமாக வந்தார்.
“அத்தை… இது யாரு தெரியுமா? கவிதா. ஸ்ரீலங்கால இருந்து வர்றாங்க.” மருமகளுக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி வந்ததென்று
‘ஸ்ரீலங்கா’ என்ற ஒரு வார்த்தையிலிருந்து புரிந்து கொண்டார் பவானி.
“வாங்கம்மா… உக்காருங்க.” பவானி வரவேற்க அவரைப் பாராத்து கவிதா புன்னகைத்தாள்.
“ஆக… பல்லவியின்ட மனசைக் கொள்ளையடிச்ச அந்த மாமியார் நீங்கதானா?” கவிதா விளையாட்டாகக் கேட்க பல்லவி சிரித்தாள். ஆனால் பவானிக்கு எதுவும் புரியவில்லை
“புரியலைம்மா… நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”
“இல்லை… பல்லவி ஒருநாள் உங்களைப் பத்தியெல்லாம் பேசினவா. அப்போ என்ட மாமியாரைப் போல உண்டான்னு புகழ்ந்து தள்ளிட்டா.” சொல்லிவிட்டு கவிதாவும் சிரிக்க பவானியின் கண்கள் கலங்கி விட்டன. மருமகளின் தலையை வருடிக் கொடுத்தார்.
“பேசிக்கிட்டே இருங்க இதோ வந்தர்றேன்.” பவானி உள்ளே செல்ல கவிதா பல்லவியை நெருங்கி அமர்ந்தாள்.
“தன்விக்குக் கல்யாணம், பல்லவிக்குத் தெரியுமோ?”
“இல்லையே கவிதா எப்போ?”
“ரெண்டு நாளைக்கு முன்னாடி. நான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்தியா வந்துட்டேன்.”
“இதானே வேணாங்கிறது. இப்பதான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?”
“அப்பிடியெல்லாம் இல்லை பல்லவி. எக்கச்சக்க வேலை. அசைய முடியலேன்டா பாருங்களன். அதோட அப்ப வந்திருந்தா அவசரமா ஓட வேணும். இப்ப சாவகாசமா பல்லவியோட பேசலாமென்ன?”
“அதுவும் சரிதான். அப்பா வரலையா என்ன?”
“அப்பா ரெண்டு நாளைக்கு முதல் வந்து இன்டைக்குக் கிளம்பிட்டார். நான் அடுத்த கிழமைதான் போவன்.”
“அப்ப எங்க வீட்டுல ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் போகணும் கவிதா.”
“பின்ன எல்லாத்தையும் ஓரங்கட்டி வெச்சுட்டு வந்ததே அதுக்குத்தானே!” கவிதா கேலியாகச் சொல்ல இரு பெண்களும் சிரித்தார்கள்.
கையில் பெரிய ட்ரேயோடு பவானி வந்தார். ட்ரே முழுவதும் இனிப்புப் பதார்த்தங்கள் நிறைந்து இருந்தது.
“எடுத்துக்கம்மா.”
“ஐயையோ! இவ்வளவு ஸ்வீட்டையும் எப்பிடி ஆன்ட்டி சாப்பிடுறது?”
“அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. எங்க வீட்டுல ரொம்ப தித்திப்பான விஷயம் நடந்திருக்கு. அதை நாங்க எல்லாரும் கொண்டாடும் போதுதான் நீயும் வந்திருக்கம்மா.”
“அப்பிடியா? அதென்ன பல்லவி? எங்கிட்ட சொல்லக் கூடியதோ?” கவிதா கேட்கவும் பல்லவியின் முகத்தில் அழகானதொரு நாணம் வந்து உட்கார்ந்து கொண்டது.
“பல்லவி… நீங்க வெக்கப்படுறதைப் பார்த்தா…” கவிதா இழுக்கவும் பவானியும் சிரித்தார்.
“எம் மருமக முழுகாம இருக்காம்மா.”
“அட்ராசக்க… அப்போ நுவரெலியா ட்ரிப் நல்லாத்தான் வேலை செஞ்சிருக்கு என்டு சொல்லுங்கோ.” கவிதா கண்ணடிக்க பெண்கள் மூவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
கவிதா இருக்குமிடத்தைக் கேட்கவும் வேண்டுமா? அத்தோடு தோழியைக் கேலி பண்ண காரணமும் கிடைத்தவுடன் அந்த இடமே கலகலத்தது.
பல்லவி மாமனாரையும் கவிதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள். மாதவன் வந்த பிறகு பகலுணவை முடித்துக்கொண்டு அற்புதாவின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அடுத்த நாள் எல்லோருமாக பகலுணவையும் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குப் போனார்கள்.
கிணத்தில் குளியல் போட்டார்கள். மாதவனும் பல்லவியும் தங்களால் முடிந்த அளவு கவிதாவை தாங்கிக் கொண்டார்கள்.
இரண்டு நாட்களும் எப்படிப் போனது என்றே தெரியாத அளவிற்கு சந்தோஷம் அங்கு பொங்கியது.
!!!!!!!!!!!!!
காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது.
பல்லவிக்கு அது ஒன்பதாவது மாதம். அந்த மாதத்திலேயே வளைகாப்பை வைத்து விடுவது என்று இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தார்கள்.
பல்லவிக்குப் பிறந்த வீடு பக்கத்தில் இல்லையே என்ற கவலை இல்லாமல் புகுந்த வீடு அவளைத் தாங்கிக் கொண்டது.
பவானி மருமகளைத் தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மகனின் வாரிசு என்ற பாசமா இல்லை மனதில் இருந்த குற்றவுணர்ச்சியா எதுவென்று தெரியவில்லை. பல்லவியை கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்தார்.
அற்புதாவும் மகளும் வாரத்திற்கு ஒரு முறை அம்மா வீடு வந்துவிடுவார்கள். ஏற்கனவே இது வழமைதான் என்ற போதும் இப்போது அது தவறுவதேயில்லை.
பெண்கள் எல்லோருமாக கூடி சமைப்பதும் சாப்பிடுவதும் மணக்க மணக்க வெற்றிலைப் போட்டுக்கொண்டு காலாற நடப்பதுமாக பொழுது இனிமையாகவே கழிந்தது.
மாதவனைக் கேட்கவும் வேண்டுமா? சாதாரண நாளிலேயே மனைவி என்றால் மயங்கும் பேர்வழி அவன்! இப்போது அதிகப்படியான அக்கறையும் சேர்ந்து கொண்டது.
ஆகமொத்தம் பல்லவி புகுந்த வீட்டில் நிம்மதியாக இருந்தாள்.
அன்று மதியத்திற்கு மேல் ஊரைக் கூட்டி விமர்சையாக பல்லவியின் வளைகாப்பு நடைபெற்றிருந்தது. எந்தவிதக் குறையும் இல்லாமல் மாதவன் அனைத்தையும் பார்த்துப் பார்த்து ஜமாய்த்திருந்தான்.
பல்லவியின் பிறந்த வீடும் அன்று அதிகாலையிலேயே வந்து சேர்ந்து விட்டார்கள்.
வளையலடுக்கி முடிந்த கையோடு டவுனுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே விழாவை நடத்தி இருந்தார்கள்.
ஃபங்ஷன் முடிந்த போது பல்லவி ரொம்பவே களைத்துப் போனாள். வீட்டில் விருந்தினர்கள் தங்கி இருந்ததால் மனைவியை அழைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் தோட்டத்தில் இருக்கலாம் என்று வந்துவிட்டான் மாதவன்.
ஒன்பது மாத வயிறு அவளை இன்னும் பாடாய் படுத்தியது.
டாக்டர் நன்றாக நடக்க வேண்டும் என்றதனால் மனைவியின் கையைப் பிடித்தபடி அவளோடு கூடவே மெதுவாக நடந்து வந்தான் கணவன்.
தோட்டம் இப்போது பச்சைப் பசேலென்று பார்க்க அழகாக இருந்தது. நடப்பட்டிருந்த பயிர்கள் பூராவும் பூவும் பிஞ்சும் காயுமாக பயனளிக்க ஆரம்பித்திருந்தது.
மாதவன் வீட்டுத் தேவைகள் போக மீதம் அத்தனையும் வியாபாரத்திற்கென்று அனுப்பப்பட்டது. பல்லவிக்கு அதில் அத்தனை ஆனந்தம். அவள் முயற்சி வீண்போகவில்லை.
அவள் கால் வேறு இன்று அளவுக்கு அதிகமாக வீங்கி இருந்தது. கதிரையில் மனைவியை அமர வைத்துவிட்டு அவள் காலை மெதுவாகப் பிடித்து விட்டான் மாதவன்.
“பரவாயில்லை… விடுங்க.”
“இருக்கட்டும் பல்லவி. கால் கொஞ்சம் ஜாஸ்தியா வீங்கியிருக்கு இல்லை?”
“ம்…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ப்ளாக் ஆடி இவர்கள் தோட்ட வாசலில் வந்து நின்றது. உள்ளே வர முடியாத போதும் வெளி வாசலில் நின்ற காரை இவர்களால் இங்கிருந்தே பார்க்க முடிந்தது.
பல்லவியின் நெற்றி லேசாகச் சுருங்கியது. மனைவியின் காலைப் பிடித்துக் கொண்டிருந்த மாதவனும் சட்டென்று எழுந்து நின்றான்.
கௌதம் ரூபத்தில் வில்லங்கம் வருகிறது என்று எதிர்பார்த்தவர்கள் காரிலிருந்து இறங்கிய தன்வியைப் பார்த்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இவர்களைப் பார்த்த போது முதலில் தன்வியும் சிறிது தயங்கினாற் போலதான் தெரிந்தது. ஆனாலும் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்ட பெண் இவர்களை நோக்கி நடந்து வந்தது.
இதற்கு மேலும் தாமதிப்பது நாகரிகமில்லை என்று உணர்ந்த பல்லவி எழும்ப போனாள். அவள் தோளில் கை வைத்து அவளை மீண்டும் அமரச் செய்த மாதவன் தானே சென்று தன்வியை வரவேற்றான்.
“வாங்க…” அதற்கு மேல் என்ன பேசுவதென்று மாதவனுக்குத் தெரியவில்லை. அவன் சங்கடத்தைப் புரிந்து கொண்டு பெண்ணே ஆரப்பித்தது.
“வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கதான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க. ஒருத்தரை வழிகாட்ட அனுப்பி வெச்சாங்க. அதான்…”
“ஓ… அப்பிடியா… வாங்க வாங்க.” மாதவன் இப்போது இயல்பாக வரவேற்க ஒரு புன்னகையோடு உள்ளே வந்தாள் தன்வி.
“வாங்க மேடம்.” பல்லவியும் இன்முகமாக வரவேற்றாள்.
“எப்பிடி இருக்கீங்க பல்லவி? வளைகாப்புக்கு எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீங்களா?” நெடுநாள் பழகிய நட்பு போல தன்வி பேசவும் கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இருவருக்குமே தன்வியைத் தெரியும். இருந்தாலும் இருவருமே ஒரு சங்கடமான சூழ்நிலையிலேயே அந்தப் பெண்ணைச் சந்தித்திருந்ததால் இத்தனைத் தூரம் நட்பு பாராட்ட அவர்களால் இயலவில்லை.
“இல்லை… சொந்தத்துக்குள்ள மட்டும் கூப்பிட்டோம்.” பல்லவி சமாளித்தாள்.
“ஊரையே கூப்பிட்டு விருந்து வெச்சிருக்கீங்க. இதுவே கவிதா இந்தியால இருந்திருந்தா கூப்பிடாம இருந்திருப்பீங்களா?” உரிமையாக தன்வி கோபித்துக் கொள்ள கணவனும் மனைவியும் பெயருக்குச் சிரித்து வைத்தார்கள்.
இப்போது தன்வியின் கண்கள் பல்லவியின் வயிற்றை இதமாக வருடியது. கையை நீட்டி பல்லவியின் கைகளிலிருந்த கண்ணாடி வளையல்களை ஆசையோடு தடவினாள்.
“எப்போ டியூ பல்லவி?”
“இன்னும் மூனு வாரம் இருக்கு.”
“அம்மா வீட்டுக்குப் போறீங்களா?”
“ஆமா.”
“கவனம் பல்லவி. பயணம் செய்றப்போ ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. அம்மா வீட்டுலயும் ரொம்ப கவனமா இருங்க. எப்பவும் யாரையாவது துணைக்கு வெச்சுக்கோங்க.” தன்வியின் அதீத அக்கறையில் குழம்பிப் போனாள் பல்லவி.
‘இந்த பெண்ணுக்கு என்ன ஆனது?’
“என்னடா சம்பந்தமே இல்லாம பேசுறாளேன்னு நினைக்கிறீங்களா? எல்லாமே தொலைஞ்சு போச்சு பல்லவி.” பெண்ணின் குரலில் இருந்த விரக்தி பல்லவியை அசைத்தது.
மாதவனைச் சட்டென்று பல்லவி நிமிர்ந்து பார்க்க அவன் முகத்திலும் குழப்பமே இருந்தது.
“என்னாச்சு மேடம்? ஏன் இப்பிடிப் பேசுறீங்க?”
“இன்னும் நாலைஞ்சு மாசத்துல நானும் உங்களை மாதிரி வளையல் போட்டுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன்.” மேலே பேச முடியாமல் தன்வியின் குரல் அடைத்துக் கொண்டது. பல்லவி திடுக்கிட்டுப் போனாள்.
“ஆனா… அந்த சின்ன ஜீவனுக்கு எங்களைப் பிடிக்காமப் போயிடுச்சு பல்லவி.” குலுங்கி அழுத தன்வியை வெறித்தபடி பார்த்திருந்தாள் பல்லவி. உடல் ஒரு முறை நடுங்கியது.
பல்லவியின் அருகில் வந்த மாதவன் சட்டென்று அவள் தோள்களை அழுத்திப் பிடித்தான். அவன் ஸ்பரிசத்தில் நிமிர்ந்து பார்த்த மனைவிக்குக் கண்ணால் ஜாடைச் செய்தான் கணவன். பல்லவி தன்னை அவசர அவசரமாக சுதாரித்துக் கொண்டாள்.
“மேடம்! இங்கப்பாருங்க மேடம். அழாதீங்க…” பல்லவியின் குரலில் இருந்த பதட்டத்தைக் கவனித்த தன்வி என்ன நினைத்தாளோ சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சாரி பல்லவி… நான் ஏதோ ஒரு கவலையில உங்களைச் சங்கடப் படுத்திட்டேன்.” கண்களை மேலும் அழுந்தத் துடைத்தவள் மாதவனைப் பார்த்தும் மன்னிப்புக் கோரும் வகையில் சிரித்தாள்.
“பல்லவி… ஆண்டவன் லேசுப்பட்ட ஆளில்லை. எங்க வெச்சு செய்யணுமோ அங்க தன்னோட வேலையைக் காமிச்சிடுவார். நீ ஆடுற மட்டும் ஆடுப்பா, எனக்கு உன்னை எங்க முடக்கிப் போடணும்னு தெரியும்னு பார்த்துக்கிட்டே இருப்பார் போல.”
“மேடம்…” பல்லவி லேசாக திகைத்தாள்.
“அழகா ஆரம்பிச்ச வாழ்கை… சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஆசை ஆசையா இந்தக் குழந்தையை எதிர்பார்த்தோம். ஆனா… யாருக்கோ எங்கேயோ அநியாயம் பண்ணி இருக்கோம் பல்லவி. அதுதான்… தெய்வம் நிமிரவே முடியாம அடிச்சு நொறுக்கிடுச்சு.”
தன்வியின் வார்த்தைகளைக் கேட்ட போது மாதவனுக்கு மனது கிடந்து பதறியது. ஆனால் இப்போது பல்லவி கல்லுப் போல அமர்ந்திருந்தாள்.
“மன்னிச்சிடுங்க பல்லவி. உங்க மனசை நோகடிச்சிட்டு நாங்க நல்லா இருக்கப் போறதில்லை.” கையெடுத்துக் கும்பிட்ட தன்வி காரை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள்.
இது எதற்கும் பல்லவி அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் மாதவன் போகும் பெண்ணைத் தொடர்ந்து வந்தான். கார் கதவைத் திறந்த தன்வி மாதவனைப் பார்த்து விடைபெறும் நோக்கில் தலையை அசைத்தாள்.
“கௌதம் எப்பிடி இருக்கார்?” மாதவன் கேட்ட அந்த மூன்று வார்த்தைகளில் தன்வியின் கண்கள் மீண்டும் ஆறாகப் பெருகியது.
“என்னை விட கௌதம்தான் ரொம்ப ஆர்வமா இருந்தார். இப்போ… என்னால கௌதமைப் பார்க்க முடியலை.”
“என்ன ஆச்சு?”
“பைத்தியம் புடிக்காத குறைதான். எப்ப பார்த்தாலும் பப். எதுக்கு இப்பிடி பண்ணுறார்? யாரைத் தண்டிக்கிறார்? ஒன்னுமே புரியலை.”
“கவலைப்படாதீங்க, எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்.”
“நம்புறதைத் தவிர வேற வழி இல்லைங்க.” சொன்னவள் கசப்பாக புன்னகைத்துவிட்டு காரைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டாள்.
மாதவனின் மனதுக்குள் கவலை ஏறி உட்கார்ந்து கொண்டது.
***********
அன்று இரவே பல்லவியின் குடும்பம் கிளம்பி விட்டது. அற்புதா குடும்பத்தை கணவருக்குத் துணையாக வைத்துவிட்டு பவானியும் கிளம்பிவிட்டார்.
அன்று இருந்த மனநிலையில் மாதவன் ட்ரைவ் பண்ண விரும்பாத காரணத்தால் ட்ரைவர் வசம் காரை ஒப்படைத்துவிட்டு மனைவியோடு உட்கார்ந்து கொண்டான்.
மனம் ஏனோ கௌதமையே வட்டமிட்டது. மறந்தும் அதை மனைவியிடம் அவன் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அந்த சிந்தனையை அப்புறப்படுத்த அவனால் முடியவில்லை.
அப்படி என்ன பெரிதாக அவன் பாவம் பண்ணிவிட்டான் இவ்வளவு பெரிய தண்டனை அனுபவிக்க?!
பல்லவி மாதிரி ஒரு பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது?
உல்லாசியாக அவன் வாழ்ந்தது தவறாக இருக்கலாம். ஆனால், பல்லவிக்கு அவன் உண்மையாகத்தான் இருந்திருக்கிறான்.
பல்லவி மேல் அவன் வைத்த காதல் அவனை மூர்க்கனாக மாற்றிவிட்டது. தவறு என்று தெரிந்த போதும் தன் எதிரிக்காக மாதவனின் மனம் சப்பைக்கட்டுக் கட்டியது.
பாவம்… எத்தனைத் தூரம் அவன் குழந்தையை எதிர்பார்த்திருப்பான். எனக்குள் எவ்வளவு சந்தோஷம் பூத்தது.
அவனுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்! சுகமான கனவைக் காண்கையில் ஓங்கி அடித்து யாராவது எழுப்பினால் எப்படி இருக்கும்? கனவும் கலைந்து… வலியையும் சுமந்து…
“ம்…” தோளில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த பல்லவி அசையவும் நிஜத்திற்கு வந்தான் மாதவன். கைகள் இதமாக மனைவியின் தலையை வருடிக் கொடுத்தது.
அடுத்த நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்போ என்னவோ பல்லவி உறக்கத்திலேயே கழித்தாள். ஜெயா குடும்பமும் இங்கேயே தங்கியதால் வீடு ஜேஜே என்று இருந்தது.
ஜெயாவின் குழந்தைகளோடு துளசியும் சேர்ந்து கொள்ள வீடு அமர்க்களப்பட்டது.
எது எப்படி இருந்த போதும் மாதவன் மனதுக்குள் வண்டு போல கௌதமே அரித்துக் கொண்டிருந்தான்.
“மாதவன்!” அந்த அழைப்பில் சட்டென்று திரும்பினான் மாதவன். எதிரே ஜெயாவின் கணவர் மனோகர் நின்று கொண்டிருந்தார்.
“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” அவர் முகத்தில் கவலைத் தெரிந்தது. நடந்து முடிந்த பிரச்சனைகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையில் நல்லதொரு புரிதல் உருவாகி இருந்தது.
“பிரச்சனை ஒன்னுமில்லை மனோகர். சின்னதா ஒரு குழப்பம்.”
“ஓ… எங்கிட்ட சொல்லக்கூடியதா மாதவன்?”
“ஐயையோ! உங்கக்கிட்ட சொல்றதுல என்னங்க இருக்கு. தாராளமா சொல்லலாம்.”
“அப்போ இங்க வேணாம். வாங்க மொட்டை மாடிக்குப் போகலாம்.” மனோகர் சொல்ல இருவரும் மேலே போனார்கள். மாதவன் நடந்தவற்றைச் சுருக்கமாக சொல்ல மனோகர் முகத்திலும் இப்போது கவலைப் படர்ந்தது.
“நேத்து அந்தப் பொண்ணு வந்து எல்லாத்தையும் சொன்னப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது மனோகர்.”
“பல்லவிக்கு இதெல்லாம் தெரியுமா?”
“பல்லவியும் அங்கதான் இருந்தா.”
“ஏதாவது சொன்னாளா?”
“பேசினா, ஆனாலும்… கொஞ்சம் இறுக்கமா இருந்த மாதிரித்தான் தெரிஞ்சுது.”
“ஓ… பல்லவி மனசுலயும் வேதனை இருக்குமில்லை மாதவன்.”
“எனக்கும் புரியுது மனோகர். இருந்தாலும்…” மாதவன் முழுதாக முடிக்கவில்லை.
“மனசுல என்ன இருக்குதோ அதைத் தயங்காம சொல்லுங்க மாதவன்.”
“எனக்கு… கௌதமைப் போய் பார்க்கணும்னு தோணுது மனோகர்.”
“ஓ…” மனோகர் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். கௌதமால் தான் பாதிக்கப்பட்டதை விட எதிரில் இருப்பவன் பாதிக்கப்பட்டதே அதிகம். அவனே இப்படியொரு முடிவெடுக்கும் போது தான் சொல்ல என்ன இருக்கிறது?
“பல்லவிக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகுமே?”
“தெரியாமத்தான் பண்ணணும் மனோகர்.”
“பார்த்து மாதவன். இனி ஏதாவது பிரச்சனை கௌதமால வந்தா வீட்டுல யாரும் சும்மா இருக்கமாட்டாங்க.”
“புரியுது… ஆனா கௌதமோட மனநிலையை என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது மனோகர். எம் மனசுல இப்போ இருக்கிற சந்தோஷம் அவனுக்கு இல்லைங்கிறப்போ எனக்குக் கஷ்டமா இருக்கு.”
“இதே கௌதம்தான் எனக்குக் கிடைக்காத சந்தோஷம் யாருக்குமே கிடைக்கக் கூடாதுன்னு உங்களைப் பார்த்துச் சொன்னான்.”
“நான் அவனில்லையே மனோகர்.” மாதவன் சொல்ல மனோகர் முகத்தில் இளநகைப் பூத்தது. அந்த அருமையான மனிதனின் தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தவர் கீழே போய்விட்டார். மாதவன் தொலைவானை வெறித்தபடி நின்றிருந்தான்.
****************
அந்த இடம் பார்க்க கொஞ்சம் கலகலப்பாக இருந்தது.
வருவோர் போவோரின் ஆடை அணிகலன்களும் அவர்கள் வந்திறங்கிய விலை உயர்ந்த கார்களும் மாதவனின் கண்ணுக்கு வெகு வியப்பாக இருந்தது.
இப்படியும் கூட மனிதர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்களா?! சிந்தித்தபடியே தன் ஸ்கோடாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
அவன் தன் ஸ்கோடாவை பார்க் பண்ணிய இடத்திற்குப் பக்கத்தில் அந்த ப்ளாக் ஆடி நின்றிருந்தது. ஒரு மணி நேரமாக காத்திருக்கிறான். இன்னும் கௌதம் வந்தபாடில்லை.
கௌதம் வீட்டு வாட்ச்மேனைப் பிடித்துத் தகவல்களைச் சேகரித்திருந்தான். கௌதமின் நடவடிக்கைகளைக் கேட்டபோது வியப்பாகத்தான் இருந்தது.
அந்த ப்ளாக் ஆடியை நோக்கி யாரோ வருவது தெரிந்தது. ஆனால் அது கௌதம் அல்ல.
மாதவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். இல்லை… அது கௌதம்தான்!
முகம் கறுத்து கண்ணைச் சுற்றி கருவளையம் தோன்றி இரண்டு நாட்கள் ஷேவ் பண்ணாத முகத்தோடு கௌதம் வந்து கொண்டிருந்தான்.
மாதவன் அவன் கோலம் பார்த்து மலைத்துப் போனான். ஷூ நுனியில் கூட தூசு படாமல் திரிந்த கௌதமா இவன்?!
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட மாதவன் காரை விட்டு இறங்கினான். அலங்கோலமாக இருந்த போதும் அவன் நடை நிதானமாக இருந்ததை மாதவன் கவனிக்கத் தவறவில்லை.
இவனைப் பார்த்ததும் கௌதமின் நடை ஒரு கணம் தடுமாறியது. தலையை ஆட்டியபடி தன் ஆடியில் ஏறப்போனவன் மீண்டும் மாதவனைத் திரும்பிப் பார்த்தான்.
“ஏய்!” அது மாதவன்தான் என்று அவன் கண்கள் உறுதி செய்த மாத்திரத்தில் மாதவன் மீது பாய்ந்திருந்தான் கௌதம்.
மாதவன் இவற்றையெல்லாம் எதிர்பார்த்துத்தான் வந்திருந்தான். அதனாலேயே துணைக்கு வருகிறேன் என்று சொன்ன மனோகரைக் கூட தவிர்த்துவிட்டிருந்தான்.
கௌதமின் கை மாதவனின் கழுத்தில் லேசாக இறுகியது.
மாதவன் எதுவும் பண்ணவில்லை. அமைதியாக அவனை அனுமதித்தான். ஒரு கட்டத்தின் மேல் மாதவனின் கழுத்தை விடுத்து அவன் ஷர்ட் காலரைக் கொத்தாகப் பற்றியவன் எதிர்பாராத நேரத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
அதன் பிறகு என்ன தோன்றியதோ மாதவனின் மார்பில் வீழ்ந்து குலுங்கி குலுங்கி அழுதான். மாதவன் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. அவன் முதுகை லேசாகத் தடவிக் கொடுத்தான்.
அந்த ஆறுதலைக் கூட தன் எதிரியிடமிருந்து விரும்பாதவன் போல திமிறிக்கொண்டு நிமிர்ந்தான் கௌதம்.
“உங்கூட சண்டைப் போட நான் வரலை கௌதம்.”
“பின்ன எதுக்கு வந்தே? எம் பொண்டாட்டி உன் கால்ல வந்து விழுந்தாளா? முட்டாள்! அவளுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு.” கௌதம் உறும நிலைமை கொஞ்சம் பிடிபட்டது மாதவனுக்கு.
“யாரும் யாரோட கால்லயும் விழலை. அவங்க துக்கத்தை எங்கக்கூட பகிர்ந்துக்கிட்டாங்க, அவ்வளவுதான்.”
“உனக்கு அப்பிடியே சந்தோஷம் பொங்கி இருந்திருக்குமே?” மூர்க்கத்தனமாக சொன்னவன் கை இரண்டையும் விரித்து காரில் சாய்ந்து கொண்டான். அவன் முகம் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையின் அளவைச் சொன்னது.
“ரொம்ப வேதனையா இருந்துது கௌதம்.”
“இஞ்சப்பார்ரா… என்னோட எதிரி எனக்காக வருத்தப்படுறதை!”
“நான் உன்னோட எதிரி இல்லை கௌதம்.”
“அ… அப்போ நீங்க யாரு சார்? என்னோட வாழ்க்கையை நீங்க தட்டி பறிக்கலை?”
“கௌதம்… இன்னொரு பொண்ணோட மனமொத்து குடும்பம் நடத்துற நீ இப்பிடியெல்லாம் பேசுறது நியாயம் இல்லை.” மாதவன் இதைச் சொன்ன போது கௌதம் சட்டென்று அமைதியாகிவிட்டான்.
“சாரி தனு.” அவன் வாய் முணுமுணுத்தது.
“ஆனா அந்த முட்டாளுக்கு என்ன பண்ணுறோம்னு புரியலை. எம் பேச்சைக் கேக்க மாட்டேங்கிறா. அவ மனசுல குத்த உணர்ச்சியா இருக்காம். மண்ணாங்கட்டி!” மீண்டும் குரலை உயர்த்தியவன் காரில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
“அது அவங்க மனசு. இப்போ அவங்களுக்கும் ஆறுதல் வேணும்தானே கௌதம்? அவங்களை அவங்க போக்குல விடலாமில்லை?” கௌதம் இப்போது எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தான்.
“என்ன ஆச்சு?” மாதவன் கேட்டபோது கௌதம் சட்டென்று எதுவும் பேசிவிடவில்லை. தலையைக் காரில் சாய்த்துக் கொண்டு வானம் பார்த்தான். நிமிடங்கள் நகர்ந்தன. இருந்தாலும் மாதவன் பொறுமையாக நின்றிருந்தான்.
“எல்லாம் நல்லாத்தான் போச்சு. நாலு மாசம் ஆச்சு. திடீர்னு வலிக்குதுன்னா. ஹாஸ்பிடல்ல என்னென்னமோ சொன்னாங்க. எம் மண்டையில எதுவுமே ஏறலை. அப்புறம் பார்த்தா… எம் பொண்ணு என்னை விட்டுட்டுப் போயிட்டா.” கண்ணீர் குரலில் அவன் சொல்ல மாதவனுக்கும் உருகிப் போனது.
முகத்தைப் பார்த்தால்தான் குழந்தை என்று ஆகுமா? அவன் மனைவி கருவில் இருந்ததும் அவன் குழந்தைதானே. பெண் குழந்தை என்று வேறு தெரிந்திருக்கிறது. எத்தனை எத்தனைக் கற்பனைகளை வளர்த்திருப்பார்கள்.
குழந்தை என்ற பேச்சு ஆரம்பித்ததிலிருந்து பல்லவி செய்யும் ஏற்பாடுகளை அவன் அறிவான்தானே. அது மட்டுமா? அந்தக் குழந்தையின் வாழ்க்கை வளம்பெற ஒரு தகப்பனாக மாதவன் மனதில் எத்தனைத் திட்டங்கள் இருக்கின்றன. அது போலதானே அவர்களும் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள். இப்போது மாதவனுக்கு வலித்தது. மெதுவாக தன்னைச் சமாளித்துக் கொண்டான்.
“ஏய் கௌதம்! எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறே? அப்பிடி என்ன வயசாகிப்போச்சு உனக்கு? வருத்தம்தான்… இல்லேங்கலை. அதுக்காக இப்பிடி உன்னையே அழிச்சுக்காத. அப்புறம் வாழ்க்கை நரகமாப் போயிடும்.”
மாதவன் அதன்பிறகு பேசிய எதற்கும் கௌதம் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கேட்டபடியே இருந்தவன் இறுதியில் கசப்பாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டுப் போய்விட்டான்.
‘பெண்களின் சாபத்திற்கு இத்தனை வலிமை உண்டா? பெண்கள் மட்டுமல்ல… பாதிக்கப்பட்ட ஜீவன் யாராக இருந்தாலும் அவர்கள் வேதனைக்கு என்றைக்கும் கூலி உண்டு.’
***********
அன்று சரோஜா இரவு உணவை மொட்டை மாடியில் பரிமாறி இருந்தார். முழுக் குடும்பமும் ஒன்றாக அங்கே கூடி இருந்தது. பவானியும் எல்லோரோடும் இன்முகமாகவே கலந்துறவாடினார்.
பல்லவியின் முகம் கூட சற்றுத் தெளிந்தாற் போல இருந்தது. பகல் முழுவதும் ஓய்வெடுத்துக் கொண்டதால் முகம் நிர்மலமாக இருந்தது.
அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்ததால் வானம் முழுவதும் காரிருள். அதன் பிரதிபலிப்பு மொட்டை மாடியிலும் தெரிய துளசி சின்னச்சின்ன அகல் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தாள்.
“சின்னத்தான்! எங்க மொட்டை மாடி எப்பிடி இருக்கு?” துளசி மாதவனை வம்பிழுத்தாள்.
“ம்… செம ரொமான்டிக்காத்தான் இருக்கு.”
“அட! எங்க கிராமத்து அத்தானுக்கு இதெல்லாம் தெரியுது?!” துளசி வேண்டுமென்றே அதிசயப்பட சரோஜா மகளை முறைத்தார். ஆனால் மாதவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“இயற்கையோட வாழுறவன்மா. எனக்கு அனுபவிச்சு வாழ நல்லாவே தெரியும்.”
“உனக்கு வாய் ரொம்ப நீளமாப் போச்சு துளசி.” இது பல்லவி.
“மாமா.”
“சொல்லுங்க மாப்பிள்ளை.”
“உங்க கடைக்குட்டிக்கு எப்ப மாப்பிள்ளைப் பார்க்க போறீங்க?”
“நீங்க எப்பிடிச் சொன்னாலும் சரிதான் மாப்பிள்ளை. இதெல்லாம் எடுத்துப் பண்ண எனக்கென்ன பையனா இருக்கு. என்னோட மாப்பிள்ளைங்க எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.” தியாகராஜன் சொல்ல மனோகரும் மாதவனும் துளசியைப் பார்த்துச் சிரித்தார்கள்.
“அப்பா!” துளசி அப்போது சிணுங்க,
“ஊர்ப்பக்கமா நல்லா விவசாயம் பண்ணுற மாப்பிள்ளையா பார்க்கலாம்பா.” என்றாள் பல்லவி வேண்டுமென்றே.
“பாருக்கா பாரு. நல்லா பாரு. நம்ம அத்தான் மாதிரி சும்மா ஜம்முன்னு இருக்குற மாதிரி பாரு.”
“நம்ம அத்தானா?” பல்லவியின் முகம் அஷ்ட கோணலாகியது.
“அட ஆமாக்கா. நம்ம அத்தான் மாதிரி பாரு. அமையலன்னா எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. நமக்குத்தான் நம்ம அத்தான் இருக்காங்களே.” அந்த ‘நம்ம அத்தான்’ இல் ஒரு அழுத்தம் கொடுத்தாள் துளசி.
“அடிப்பாவி!” பல்லவியின் பக்கத்தில் இருந்த டம்ளர் துளசியை நோக்கி பறக்க, அப்போதும்…
“சின்னத்தான் என்னைக் காப்பாத்துங்க.” என்று வேண்டுமென்றே மாதவன் பின்னால் ஒளிந்து கொண்டாள் துளசி. குடும்பமே சிரித்தது.
இரவு உணவு உண்டு முடிய பெரியவர்கள் எல்லோரும் கீழே போய்விட்டார்கள். துளசியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தூங்க போய்விட்டாள். மனோகரும் ஜெயாவும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பி விட்டார்கள்.
உண்ட களைப்பு அதிகமாக இருக்க கணவனின் மடியில் சாய்ந்து கொண்டாள் பல்லவி.
“ஏங்க?”
“ம்…”
“நமக்கு என்ன கொழந்தைப் பொறக்கும்?”
“பொண்ணு.” சட்டென்று சொன்னான் மாதவன்.
“நிஜமா?”
“எனக்கு அப்பிடித்தான் தோணுது பல்லவி, உனக்கு?”
“எதுன்னாலும் ஓகே. ஒரு பிரச்சனையும் வந்திடக் கூடாது அவ்வளவுதான்.”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பல்லவி…”
“ம்…”
“இன்னைக்கு வெளியே போயிருந்தேன்.”
“உரம் வாங்குறதுக்கா?”
“இல்லைடா.”
“அப்போ?”
“பப் வரைக்கும் போயிருந்தேன்.”
“பப் ஆ?!”
“ம்…” மாதவனின் தயக்கத்தில் பல்லவியின் தலைக்குள் அபாய மணி அடித்தது. அதன்பிறகு அமைதியாகி விட்டாள். அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தான் மாதவன்.
“பல்லவி… யாரு நமக்குக் கெடுதல் நினைச்சாலும் இல்லை அநியாயமே பண்ணினாலும் நாம அதை ஆண்டவன் பொறுப்புல விட்டுடலாம். யாரையும் நாம சபிக்க வேணாம் நிந்திக்க வேணாம்.” கௌதமிற்காக அவன் மனம் இரங்கிய போதும் அவன் பெயரை மனைவியிடம் உச்சரிக்க மாதவன் விரும்பவில்லை.
“……………….”
“தப்புத்தான் இல்லேங்கலை. அதுக்காக… ஒரு மனுஷனோட துன்பத்துல நம்மோட பழியை நாம தீர்த்துக்க வேணாம்.”
“நான் அப்பிடி நினைக்கவே இல்லையே.”
“எனக்கும் அது தெரியும். இருந்தாலும் எனக்கு இதை உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு பல்லவி. மனசுல ஏதாவது ஒரு மூலையில சின்னதா ஒரு வெறுப்பு இருந்தாலும் அதைத் தூக்கி தூரப் போட்டுடு. நாம இப்போ முன்ன மாதிரி இல்லை. ஆண்டவனுக்கு அடுத்தபடியா நம்மளை நம்பி ஒரு உயிர் வரப்போகுது. இவ்வளவு காலமும் எப்பிடியோ… இனிமே நம்மளைச் சுத்தி எல்லாமே நல்லதா இருக்கணும். நம்ம பேச்சு, சிந்தனை, நடவடிக்கை எல்லாமே அழகா இருக்கணும்டா.” கணவன் பேசப் பேச அவனை இன்னும் நெருங்கி அணைத்துக் கொண்டாள் பல்லவி.
“கவனம் பல்லவி வலிக்கப் போகுது.”
“இல்லையில்லை.”
“நான் எது பண்ணினாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் பல்லவி.”
“அப்பிடியா?” அவள் கேட்ட விதத்திலேயே அவள் எங்கு வருகிறாள் என்று மாதவனுக்குப் புரிந்து போயிற்று. தன் பல்வரிசைத் தெரிய அழகாகப் புன்னகைத்தான்.
“குடுக்க வேண்டிய கடனுக்காக பொண்ணைத் தூக்கினீங்களே, அதுல என்ன சார் நியாயம் இருக்கு?”
“ஏய்! அபாண்டமா பழி போடாத. நான் எங்க பொண்ணைத் தூக்கினேன். எவ்வளவு அழகா கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்தேன்.”
“சரி சரி… நீங்க பாயின்ட்டுக்கு வாங்க.”
“அது… அந்த பொண்ணைப் பார்த்த உடனே…”
“ம்… பார்த்த உடனே?” அவள் எடுத்துக் கொடுக்க தன் இடது பக்க நெஞ்சை நீவிக்கொண்டான் மாதவன்.
“பைத்தியம் புடிச்சிடுச்சு பல்லவி.”
“ஹா… ஹா… பைத்தியம் புடிச்சா கல்யாணம் பண்ணிக்குவீங்களா?”
“ஆமா. பைத்தியம் தெளிய கல்யாணம் பண்ணுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க பல்லவி.”
“அடேங்கப்பா!”
“ஏம் பல்லவி?”
“ம்…”
“உனக்கு இன்னும் அந்த வருத்தம் இருக்கா?”
“எது?”
“கிராமத்துல வந்து இந்தப் பட்டிக்காட்டான்கிட்ட மாட்டிக்கிட்டோமேன்னு.”
“ஏங்க, இது உங்களுக்கே நியாயமா இருக்கா? ஊருக்கே தெரியுது நான் உங்க மேல எவ்வளவு பைத்தியமா இருக்கேன்னு. இதுல உங்களுக்குப் புரியலையாக்கும்?”
“புரியுதுதான்… இருந்தாலும்…” மாதவன் நீட்டி முழுக்க இருவரும் இப்போது சிரித்தார்கள்.
“ஆரம்பத்துல வருத்தம் இருந்துச்சுங்க. ஆனா போக போக புரிஞ்சு போச்சு. ஒரு மனுஷனை எதை வெச்சு எடை போடணும்னு.”
“எதை வெச்சு?”
“இன்னைக்கு மாதவன் ரொம்ப பேசுறாரு.”
“சரி பேசலை.” என்றவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.
“இதுக்கு அதுவே தேவலை.” அவள் சொன்ன விதத்தில் பக்கென்று சிரித்தான் மாதவன்.
“எனக்கு நேத்துல இருந்து இந்த கை ரொம்ப வலிக்குதுங்க.” மனைவியும் இப்போது அவனுக்கு இன்னொரு குழந்தையாகிப் போக மாதவன் அவள் காட்டிய கையை மெதுவாகப் பிடித்து விட்டான்.
“தூங்கு பல்லவி.”
“இங்கேயா?”
“ம்… சுகமா இருக்கில்லை. மொட்டைமாடி இருட்டு, சுத்திவர விளக்கு, சில்லுன்னு காத்து…”
“இருந்தாலும் நம்ம தோட்டத்தைப் போல வராதுங்க.” மாதவன் தன் மனைவியின் பதிலில் சிரித்தான். அவன் விரல்கள் அவள் புருவங்களை நீவிவிட பல்லவியின் கண்கள் லேசாக சொருகியது.
அவள் மேடிட்ட வயிறை மெதுவாகத் தடவிக் கொடுத்தான் மாதவன். அங்கே இரு உயிர்கள் இந்த சுகத்தை இழந்துவிட்டுத் தவிப்பது ஞாபகம் வந்தது. சட்டென்று மனம் அவர்களுக்காக ஒரு பிரார்த்தனையை வைக்க மனைவியை மெதுவாகத் தூக்கினான்.
அவன் காதலித்த போதும் அவளைப் பொறுத்தவரை அது கட்டாய திருமணம்தான். ஆனால் இன்று அவள் தன்மேல் உயிரையே வைத்திருக்கிறாள். இதற்கு அவன் தவமல்லவா பண்ணி இருக்க வேண்டும்!
‘தவமின்றி கிடைத்த வரமே…’ அந்த வரத்தையும் அதற்குள் இருந்த இன்னொரு சின்ன சுகத்தையும் தனக்குள் பத்திரப் படுத்திக் கொண்டான் மாதவன்.
இனி எந்போதும் தவறவிடப் போவதில்லை என்பது போல.