Poo09

சரோஜா ஓங்கி ஒரு அறை விட சுருண்டு விழுந்தாள் பல்லவி. அக்காவின் நிலையைப் பார்த்த மாத்திரத்தில் துளசிக்குக் கண்ணீர் வெடித்துக் கொண்டு வந்தது.

பல்லவிக்கா!” ஓடி வந்தவள் பல்லவியைத் தாங்கி அணைத்துக் கொண்டாள். அத்தனைப் பேரும் பல்லவியின் வீட்டில் கூடி இருந்தனர்.

அத்தனைப் பேரும் என்றால் பல்லவியைச் சார்ந்தவர்கள் மாத்திரம். பவானியும் மருமகளுக்குத் துணையாகக் கூட வந்திருந்தார்.

மாதவன் காணாமற்போய் இரண்டு நாட்கள் கடந்திருந்ததென்றால் இங்கே மனோகர் பணம் கட்டுவதற்கும் இரண்டு நாட்கள்தான் பாக்கி இருந்தது. என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் மாமியாரும் மருமகளும் கிளம்பி பல்லவி வீடு வந்திருந்தார்கள்.

சோமசுந்தரத்திற்கு நடந்தது என்னவென்று இப்போது வரைத் தெரியாது. யாரும் அவரிடம் எதுவும் சொல்லவும் இல்லை. மகள் அற்புதாவின் குடும்பத்தைக் கணவருக்குக் காவல் வைத்துவிட்டு மருமகளோடு கிளம்பிவிட்டார் பவானி. மகள் குடைந்து குடைந்து ஆயிரம் கேள்விகள் கேட்ட போதும் பவானி வாயைத் திறக்கவில்லை. மௌனமாக இருந்தே சாதித்து விட்டார். ஆனால் பல்லவியைச் சார்ந்தவர்களிடம் எதையும் மறைக்கவில்லை.

பல்லவியின் அக்கா ஜெயாவும் அப்போது குடும்பத்தோடு அங்கேதான் வந்திருந்தார். பவானி எல்லோர் முன்பும் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார். பிரச்சனையின் வேர் எங்கே என்று அப்போதுதான் எல்லோருக்கும் பிடிபட்டது.

என்ன தைரியம் பல்லவி உனக்கு! அமுக்குணி மாதிரி இருந்துக்கிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை எங்கக்கிட்ட இருந்து மறைச்சிருக்கே!” சரோஜா பத்ரகாளி போல மீண்டும் மகளை நோக்கிக் கையை ஓங்கினார்.

அண்ணீ… போதும் விடுங்க.” இது பவானி. அந்தக் குரலில் தனது மாமியாரை நிமிர்ந்து பார்த்தாள் பல்லவி. எப்போது அவளைப் பார்க்கும் போதும் அந்த முகத்தில் இருக்கும் கனிவு இன்று தொலைந்து போயிருந்தது.

தனது குடும்பத்தின் முன்பாக அனைத்தையும் பவானி போட்டு உடைப்பாரென்று பல்லவி நினைத்திருக்கவில்லை. ஆனால் எல்லாம் அவள் அனுமதியின்றி விருப்பமின்றி நடந்து முடிந்திருந்தது. மனதின் ஒரு மூலையில் வலிக்க பவானியைப் பார்த்தாள் பல்லவி. அங்கே கருணையற்று நின்றிருந்தது மாதவனின் அம்மா என்று அவள் அந்த நொடி புரிந்து கொண்டாள்.

கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் சுற்றியிருந்த அனைவரையும் ஒரு முறைப் பார்த்தாள். அனைவரும் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். அவள் பேச முற்பட்ட போது வார்த்தைக்குப் பதில் கேவல்தான் வந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

யாருக்காவது தைரியம் இருந்தா…” வார்த்தைகள் அவள் தொண்டைக்குள் சிக்கியது.

யாருக்காவது தைரியம் இருந்தா எம் புருஷன் எம் பக்கத்துல இருக்கும்போது எம்மேல கை வெச்சுப் பாருங்க.” மகளின் சவால் பேச்சில் தியாகராஜன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். தனக்குப் பிடிக்காத தன் இளைய மருமகன் தன் மகளை அத்தனைத் தூரம் தாங்குபவனா?!

அத்தான்…” மெலிதாக மனோகரை அழைத்தாள் பல்லவி.

சொல்லு பல்லவி.”

எங்கூடக் கொஞ்சம் வர்றீங்களா? வெளியே போகணும்.”

போகலாம்.” சொல்லிவிட்டு மனோகர் எழுந்துவர வீடே அவர்களைப் பார்த்திருந்தது.

அக்கா, நானும் வரட்டுமா?” இது துளசி.

ம்… வா.” தங்கையையும் அழைத்துக்கொண்டு பல்லவி நேராக அவள் வேலைப் பார்த்த இடத்திற்குத்தான் வந்தாள். லிஃப்ட்டைப் பிடித்து ஐந்தாவது தளத்திற்கு வந்தவள் மனோகரையும் துளசியையும் வரவேற்பில் உட்கார வைத்து விட்டு நேராக கௌதமின் அறைக்குள் சென்றாள். எந்த முன் அறிவிப்பும் இன்றி தடாலென்று அவனது அறைக் கதவைத் திறந்தாள். வரவேற்பில் இருக்கும் பெண் நன்கு பரிட்சயமானவள் என்பதால் எல்லாம் இலகுவாக நடந்தது. நிதானமாகக் காஃபியை ருசித்துக் கொண்டிருந்த கௌதம் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான்.

அடடே! மிஸஸ். மாதவன்! வாங்க வாங்க. ஏது இவ்வளவு தூரம்? உங்க ஸ்கோடா எப்பிடி இருக்காரு?” அந்தக் குரலில் அத்தனை ஏளனம். பல்லவி உதட்டைப் பற்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். இல்லாவிட்டால் வார்த்தைகள் தெறித்து வீழ்ந்து விடும் அபாயம் நிறையவே இருந்தது.

ஏன் நிக்குறீங்க பண்ணையாரம்மா, உக்காருங்க. உங்க ஊரு மாதிரி ருசியான இளநீர், பதநீர் எல்லாம் இங்க கிடைக்காது. என்ன சாப்பிடுறீங்க? காஃபி, டீ, ஆர் மீ?” அவன் ஏளனம் இப்போது எல்லை மீறியது.

அவரு எங்க?” நிதானமாகக் கேட்டாள் பெண்.

அவரா? எவரு?” அவன் புருவம் உயர்த்தினான்.

கௌதம்! எம் புருஷன் எங்க?”

அப்போ நான் யாரு பல்லவி?” கௌதம் கேலியாகக் கேட்க பல்லவி இப்போது ஆழ மூச்சுகளை எடுத்துத் தன்னை நிதானப்படுத்தினாள்.

கௌதம், இது விளையாடுற விஷயம் இல்லை. எங்க வீட்டுல போலீஸ் வரைக்கும் போயிட்டாங்க.”

நீங்க எங்க வேணாப் போங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

கோபம் எங்க மேலன்னா அதை எங்கக்கிட்ட மட்டும் காட்டணும். அந்த மனோகர் என்ன பாவம் பண்ணினார்? எதுக்கு அவரைத் தண்டிக்கணும் கௌதம்?” பல்லவியின் குரல் கலங்கியது.

கோபம் உங்க மேலயா? உம்மேல! உம்மேல பல்லவி!” கௌதமின் குரல் இப்போது கர்ஜித்தது. பல்லவி எதிரில் இருப்பவனை அமைதியாகப் பார்த்தபடி இருந்தாள்.

அப்போ… இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் இல்லையா?” அதீத நிதானத்தோடு அவள் கேட்டபோது கௌதம் கோணலாகச் சிரித்தான்.

பல்லவி… இந்த கௌதமுக்கு ஒன்னு இல்லைன்னா அது யாருக்கும் இல்லை!” சொன்னவன் கண்கள் குரூரமாக மின்னியது.

அவரு எங்க? எப்பிடி இருக்காரு?”

இது ஆஃபீஸ் டைம் பல்லவி. இங்க நான் என்னோட தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் பேசுறதில்லை. இன்னைக்கு ஈவ்னிங் நாம மீட் பண்ணலாமா?” அவன் ஆவலாகக் கேட்க பல்லவி பற்களைக் கடித்துக் கொண்டாள்.

கௌதம் தன்னை அலைக்கழித்துப் பார்க்க முயல்வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் பொறுமையாக இருந்தாள். இது கோபப்படும் நேரமல்ல.

கல்யாணம் ஆன நாளிலிருந்து அன்பை மட்டுமே காட்டிய மாமியார் இன்று அவளுக்கெதிராக நிற்கிறார். கவலை அவருக்கு மட்டும்தானா? அவளுக்கில்லையா? மகனைத் தொலைத்துவிட்டு அவர் நிற்கிறார் என்றால் அந்த மகன் அவளுக்குப் புருஷன் அல்லவா. வேதனை அவளுக்கும்தானே. அதை ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை?

இதற்கிடையில் அக்காவின் வாழ்க்கை வேறு கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கெல்லாம் விடை தன்னெதிரில் இருப்பவன்தான் என்றால் பொறுத்துத்தான் போக வேண்டும்.

சரி.” ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு பல்லவி எழுந்து கொண்டாள்.

ஈவ்னிங் செவன். நம்ம வழமையான மீட்டிங் ஸ்பாட். நான் காத்திருப்பேன்.” கடைசி வார்த்தைகளைக் கேட்க பல்லவி அங்கே இல்லை.

***

ஹேய் ஸ்கோடா! நான் பார்க்க எப்பிடி இருக்கேன் சொல்லு.” டிப் டாப்பாக உடுத்துக்கொண்டு வந்து மாதவன் முன்பாக ஸ்டைலாக நின்றான் கௌதம். மாதவன் முகத்தில் எப்போதும் போல இப்போதும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை.

ஏன்டா டேய்! இவ்வளவு அடி வாங்கியும் இந்த சிரிப்பை மட்டும் விட மாட்டேங்கிறியே. உனக்கே இது நியாயமா? ரெண்டு நாளா இப்பிடி அடைஞ்சு கிடந்தும் உன்னோட கொழுப்பு குறையலை பாரு. அங்க நிக்குறடா நீ!” சொல்லிவிட்டு கௌதம் கடகடவெனச் சிரிக்க மாதவனும் சிரித்தான்.

எங்கப் போறேன்னு சொல்லு பார்க்கலாம்?” கௌதம் மிதப்பாகக் கேட்க மாதவன் உதட்டைப் பிதுக்கினான்.

இவ்வளவு ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிக்கிட்டுப் போறேனே, இப்பக் கூடவா உன்னால கண்டுபிடிக்க முடியலை?”

பல்லவி வந்தாளா?” நிதானமாகத் தன் எதிரியைப் பார்த்துக் கேட்டான் மாதவன்.

அட்ராசக்க! அட்ராசக்க! எப்பிடி மாதவா?” வேண்டுமென்றே அவனைச் சீண்டினான் கௌதம்.

வேணாம் கௌதம்! பல்லவி உன்னால கஷ்டப்பட்டான்னு நான் கேள்விப்பட்டேன். உன்னோட சாவு எங்கையாலதான்.”

அடப்போடா! அதை விடு… இன்னைக்கு உங்க கிளியோபாட்ரா ஆஃபீஸ் வந்திருந்தாங்க.” இதை கௌதம் சொல்லும்போது மாதவனின் முகம் ஆவேசத்தைக் காட்டியது.

பாவம் பண்ணையாரம்மா, பாதியாகிட்டாங்க. இருக்காதா பின்னே, வர்ற கஷ்டம் சிங்கம் மாதிரி சிங்கிளாவா வருது? பன்னி மாதிரிக் கூட்டமா இல்லை வருது!”

இன்னும் என்னப் பண்ணி வச்சிருக்க கௌதம்?”

பெருசா ஒன்னும் இல்லை ஸ்கோடா. அதான் உன்னோட சகலை இருக்கானில்லை, அவன் பேரு என்ன? ஆங்… மனோகர். பாவம் நல்ல பையன்தானாம். ஆனா என்னப் பண்ண, பல்லவியோட அக்காவைக் கல்யாணம் பண்ணி இருக்கானே. அதால அவன் பேங்லயும் லேசாக் கை வைக்க வேண்டி வந்திருச்சு.”

கௌதம்!”

அதுக்கு நீ எதுக்கு உறுமுர ஸ்கோடா? இதுல மகாக் கேவலம் என்னன்னா… இந்த மனோகர் லெவலுக்கெல்லாம் நான் இறங்க வேண்டி இருக்கு. என்ன செய்றது… பல்லவியைக் காதலிச்சுத் தொலைச்சுட்டேனே! ஓகேப்பா. எனக்கு லேட்டாகுது. என் ஸ்வீட் ஹார்ட் எனக்காக ஏழு மணிக்கு நாங்க வழக்கமா சந்திக்குற இடத்துக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்க. பை.” சொல்லிவிட்டு கௌதம் நகர மாதவன் முகம் இறுகிப் போனது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். இதற்குப் பதில் சொல்ல அவனுக்கும் ஒரு நேரம் வரும். மாதவன் மனது கறுவிக்கொண்டது.

‌‌÷÷÷÷

பல்லவி அமைதியாக அமர்ந்திருந்தாள். மணி மாலை ஆறு. இனிக் கிளம்ப வேண்டும். இனியும் தாமதித்தால் சரியாக ஏழு மணிக்கு ஹோட்டலுக்குப் போக முடியாது.

ஒரு காலத்தில் இதே ஹோட்டலுக்கு துள்ளிக் குதித்துக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. பார்த்துப் பார்த்து அலங்காரங்கள் பண்ணிக்கொண்டு கண்களில் கனவுகள் மிதக்க இதே ஹோட்டலுக்கு பல்லவி போயிருக்கிறாள்.

அப்போதெல்லாம் கௌதம் பற்றி அவள் மனதில் மிகப்பெரிய அபிப்பிராயம் இருந்தது. அவன் கண்ணியத்தை அவள் என்றுமே ஆராய்ந்ததில்லை. ஆஃபீஸில் அவன் நடந்து கொள்ளும் முறையே அதற்குச் சான்று.

ஒரு கட்டத்தில் அது இல்லையென்று ஆகிப்போனது. அவன் நடவடிக்கைகளை நியாயப்படுத்த கௌதம் எவ்வளவோ முயன்ற போதும் பல்லவி ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் சொன்ன நியாயங்களில் அவளுக்கு உடன்பாடும் இல்லை. ஒரு உறவில் இருக்கும்போது மட்டும்தான் அவன் தூய்மையானவனா? அப்படியென்றால்… அவனையே கதியென்று நம்பி வரும் அவள் நிலைமை என்ன?

கை படாத ரோஜா ஆண்களுக்கு மட்டும்தான் விதித்ததா? ஏன்? பெண்கள் அதை எதிர்பார்க்கக் கூடாதா? வலித்த போதும் பல்லவி தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

கௌதம் கெஞ்சிப் பார்த்தான். பல்லவி இளகவில்லை. ஒட்டுமொத்தமாகக் கத்தரித்துக் கொண்டுவிட்டாள். கௌதம் திணறித்தான் போனான். காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் மூன்று மாதங்கள் தனக்குக் கிடைத்த கனடா வாய்ப்பில் தன்னை இணைத்துக் கொண்டான்.

பனி அடர்ந்த காடுகளில் அவள் நினைவோடு அவன் அங்கே சுற்றித்திரிய, இங்கே இவளோ இன்னொருவனுக்குச் சொந்தமாகிப் போயிருந்தாள்.

அக்கா.”

என்ன துளசி?”

தனியாப் போகாதே… நானும் வரட்டுமா?”

வேணாம்.” ஒற்றைச் சொல்லில் மறுத்தவள் கட்டியிருந்த புடவையோடே கிளம்பிவிட்டாள். வீடே அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்து. வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை, அவளை எதிரியைப் போலப் பார்த்தது.

அம்மா அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஏதோ கொலைக் குற்றவாளியைப் போல நடத்தினார். அப்பா ஏதோ கனவிலிருந்து விழித்தவர் போல அமர்ந்திருந்தார். ஒருவேளை அது தன் மகள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போன வலியோ? ஜெயாவும் எதுவும் பேசவில்லை. பல்லவியைக் கனிவோடு இருமுறைப் பார்த்தாள், அவ்வளவுதான்.

இவையெல்லாவற்றையும் விட பவானியின் இறுக்கம்தான் பல்லவியை மிகவும் வேதனைப்படுத்தியது. மனதும் உடம்பும் ஒன்றாக வலித்தது. கணவனைக் காணாத வேதனை ஒரு புறமென்றால் கூட நிற்கவேண்டியவர்களின் நிராகரிப்பு இன்னொரு புறம். பல்லவி துடித்துப் போனாள்.

ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு ஹோட்டல் வாசலில் வந்து இறங்கினாள். ஏழடிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் பாக்கி இருந்தது. அவள் இறங்கி நடந்து வந்தபோது பாதி வழியிலேயே கௌதம் அவளை எதிர்கொண்டான்.

ஹேய் பல்லவி! வா வா.” அவன் வாய் முழுக்கப் புன்னகை.

என்னடா கோலம் இது? இன்னும் கொஞ்சம் அழகா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம் இல்லை?” அவன் சரசத்தைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அவன் கைக்காட்டிய டேபிளில் அமர்ந்து கொண்டாள்.

கௌதம்… அவர் எங்கே?”

வந்ததும் வராததுமா அந்தக் காட்டானைப் பத்தித்தான் கேக்கணுமா பல்லவி?”

கௌதம் ப்ளீஸ்… உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன். அவரை விட்டுடுங்க. வீட்டுல எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சு போச்சு. எம்மேல கோபம்னா அதை எம்மேல காட்டணும். அதை விட்டுட்டு எதுக்கு அவரை? என்னால எங்க வீட்டைச் சமாளிக்க முடியலை.” இதோ இதோ என்று முட்டி மோதிக்கொண்டு வந்த கண்ணீரை வெகு சிரமப்பட்டு அடக்கினாள் பல்லவி. இவனிடம் கெஞ்சுவதே அவமானம். இதில் அழுது வேறு தொலைக்க வேண்டுமா?

உனக்கிருக்கிற மாதிரி எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு பல்லவி. நீ என்னைத் தூக்கி எறிஞ்சப்போ இதேமாதிரி என்னோட குடும்பமும் என்னை ஏளனமாப் பார்த்துச்சு. கேலி பண்ணிச் சிரிச்சுச்சு. அது தெரியுமா உனக்கு?”

உங்களோட பழங்கதைப் பேச இப்போ நான் இங்க வரலை. அவரு எங்க?” இப்போது பல்லவியின் குரலில் கோபம் தெறித்தது. கௌதம் லேசாகச் சிரித்தான்.

எங்கிட்டத்தான் இருக்கான்.”

விட்டுடுங்க கௌதம்.”

விட்டுட்டு?”

எனக்குப் புரியலை.”

அவனை விட்டுட்டா நீங்க ரெண்டு பேரும் டூயட் பாடுவீங்க. நான் எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டுப் பாடணுமா?” கௌதம் சொல்லி முடிக்க பல்லவியின் கண்கள் அவனைத் துளைத்தது.

எனக்கு ஒன்னு இல்லைன்னா அது யாருக்கும் இல்லை பல்லவி!” குரோதத்தில் தோய்த்து எடுத்தாற்போல இருந்தது கௌதமின் குரல்.

இப்போ நான் என்னப் பண்ணணும்? டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணவா? அப்போ அவரை விட்டிடுவீங்களா?”

சேச்சே! நீ அப்ளை பண்ணினா? அவன் உனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டான் மறுவேலை பார்ப்பான் பாரு. என்னை இன்னும் கேனையன்னு நினைக்கிறியா பல்லவி?”

சரி… நான் என்னப் பண்ணணும்? அதையும் நீங்களே சொல்லிடுங்க.”

போயிடு பல்லவி. எங்கேயாவது தூரமாப் போயிடு. மாதவன் கண்ணுல நீ இனிப் படக்கூடாது. நம்ம மனசுக்குப் பிடிச்சவங்களைப் பிரிஞ்சா அதோட வலி எப்பிடி இருக்கும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரிய வேணாம்? என்னோட வலி என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாம்?”

சரி.” அந்த நொடி சட்டென்று முடிவெடுத்தாள் பல்லவி.

என்னம்மா! இப்பிடி சட்டுன்னு சம்மதிச்சுட்டே? சண்டைப் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்னு பார்த்தா…”

கௌதம்… தேவையில்லாத பேச்சு வேணாம். நாளைக்குக் காலையில இந்த ஊர்ல நான் இருக்க மாட்டேன்.”

ஊர்ல இருக்க மாட்டியா இல்லை… உலகத்துலேயே…” அவன் கேலிப் புன்னகையைப் பார்த்துப் பல்லவி பல்லைக் கடித்துக் கொண்டாள். கடவுள் ஒருவன் இருந்தால் இவனைத் தண்டிக்க எனக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்புக் கொடுப்பார். அதற்காகவாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.

நான் எப்பிடிப் போனா உங்களுக்கென்ன கௌதம். நான் சொல்லுற படி செய்வேன். நீங்க உங்க சொல்லைக் காப்பாத்துவீங்களா?”

அந்தப் பண்ணையாரை வெச்சுக்கிட்டு நான் என்னம்மா பண்ணப் போறேன்? அள்ளிக்கிட்டு வந்த மாதிரி அப்பிடியே கொண்டு போய் விட்டுர்றேன். ஆனா நீ எங்கேயாவது சொதப்பினே…”

இல்லை.” உறுதியாகச் சொன்னவளின் முன்னால் ஒரு சிம்மை வைத்தான் கௌதம்.

உங்க ஆருயிர் கணவர் வீடு போய் சேர்ந்த உடனே உனக்கு ஒரு ஃபோட்டோ இந்த நம்பருக்கு அனுப்புறேன். நான் சொன்னதைச் செஞ்சதுக்கு அதுதான் சாட்சி. அதுக்கப்புறமா என்னோட எப்போவாவது பேசணும்னு தோணிச்சுன்னா இந்த சிம்மைப் பத்திரமா வெச்சுக்கோ.” சொல்லிவிட்டு கௌதம் வெடிச் சிரிப்புச் சிரிக்க பல்லவி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அந்த சிம்மையும் எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டாள்.