TholilSaayaVaa16

16

வழக்கத்திற்கு மாறாக அதிகாலையே கண்விழித்தவள், அசந்து தூங்கிக்கொண்டிருந்த வாணி, பைரவ் தூக்கத்தைக் கலைத்து விடக் கூடாது என்று மெல்ல மெல்ல ஓசை படாமல் நடந்து செல்ல,

 

“எழுந்துட்டியா ?” பைரவின் குரலில், நாக்கை கடித்தபடி திரும்பியவள்,

 

“சாரி எழுப்பிட்டேனா ?” அவள் மெல்லிய குரலில் கேட்க, புன்னகைத்தவன், இன்னும் சுகமாய் போர்வையைப் போர்த்திக்கொண்டு,

 

“துக்கம் சரியா வரலை, ஆனாலும் இந்த கிளைமேட்க்கு எழுந்திருக்கவும் தோணலை” புன்னகைத்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

 

“சரி சரி நொசுக்கு” சிரித்தவள் சிட்டவுட்டிற்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.

 

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல ” போர்வையைச் சுற்றிக்கொண்டு புன்னகையுடன் நின்றிருந்தான் பைரவ்.

 

“என்னடா எழுந்துட்டே?”

 

“இல்லடா தூக்கம் கலைஞ்சு போச்சு” சோஃபாவில் அமர்ந்தவன் “ஆமா இன்னிக்கி என்ன பிளான்?”

 

“பிளான் போட்டதே நீ. என்னை கேட்கறே?” ஊஞ்சலைக் காலால் அசைத்தபடி ஆடத்துவங்கினாள்.

 

“என் பிளான் படியா எல்லாம் நடக்குது? உனக்குத் தான் எங்க பார்த்தாலும், முகிலனை தவிர வேற எதுவும் தெரியலை”

 

ஆடுவதை நிறுத்தியவள், “இப்போ அவனை எதுக்கு இழுக்கிற?” என்று முறைக்க,

 

“நீ மட்டுமே தனியா டூர் வந்திருக்கலாம், என்னை எதுக்கு கூட்டிகிட்டு வந்த? எனக்கு ரொம்ப போர் அடிக்குதுடா” கண்களை மூடிக்கொண்டான்.

 

மெல்ல எழுந்து அவனிடம் சென்றவள், முன்னிரவைப் போலவே அவன் போர்வைக்குள் சென்று தோளில் சாய்ந்தபடி,

 

“ஏனோ வாணிமா கதை கேட்டு எனக்கும் லவ் பண்ண ஆசை வந்தது.

 

முகிலனையும் பார்த்தவுடனே பிடிச்சுதா…

 

சாரி, உன்னைக் கஷ்ட படுத்திட்டேன். நேத்திக்கு மிஸ் பண்ணதுக்கும் சேர்த்து மீதி இருக்க ரெண்டு நாளும் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்”

 

“பரவால்ல விடு, உனக்குன்னு சில ஆசைகள் இருக்கும், நான்தான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்” முன்னிரவு அவள் தோளை அணைத்தவன் மறந்தும் இப்பொழுது அவளைத் தீண்டவில்லை.

 

“ஏன் இப்படி பேசற? நான் லூசுன்னு தெரியும்ல? விடு இவளோ குழப்பிக்காத, அதான் எனக்கு காதல் வராதுன்னு புரிஞ்சுபோச்சே” கண்களை மூடிக்கொண்டவள் குரலிலிருந்த ஏமாற்றம், அவனை உலுக்க

 

“இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவாங்க ? உணக்கானவன் வந்தா வரும். எனக்கு மட்டும் காதல் கத்திரிக்காய் எல்லாம் வருதா என்ன ? வாணிமாவே தினம் கேட்கறாங்க ஏண்டா மாயாவை லவ் பண்றியான்னு…” அவன் முடிக்கும் முன்னே,

 

“என்னடா சொல்ற?” மாயா அதிர

 

“நிஜமா தான் சொல்றேன்” புன்னகைத்தான்

 

முகம் வாடியவளோ “வீட்லயும் உனக்கு என்னால நிம்மதி போச்சா” வலியுடன் வந்தன வார்த்தைகள், பைரவ் பதில் தரும் முன்னே சற்று விலகி அமர்ந்தாள்.

 

“போடி பைத்தியம்” அவள் விலகல் வலித்தது அவன் கண்களில் தெரிந்தது.

 

“இல்லை நான் ரொம்ப உரிமை எடுக்கறேன். இப்போகூட உன்கிட்ட ஒட்டிக்கிட்டு…

 

பாக்குறவங்களுக்கு அப்படிதான் தோணும்ல?” எழுந்தேவிட்டாள்

 

“எனக்கு டைம் குடு! கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்” உள்ளே செல்ல எத்தனித்தவளை, பிடித்து இழுத்தவன்,

 

“பைத்தியக்காரத்தனமா எதானா உளறினே பாரு…” பற்களைக் கடிக்க

 

“போடா! விடு பாஸ்” அவன் கையிலிருந்து கையை விடுவிக்க முயன்று தோற்றாள்.

 

“என்னடா நடக்குது?” என்றபடி வந்தான் மாதவன்

 

“அடேய்! காப்பாத்தாம” முறைத்தாள்

 

“அதானே பாரேன் தோணவே இல்லை” என்றவன் வேகமாகச் சென்று இருவரையும் விலக்கி, பைரவை மறைத்து அரணாய் நின்றபடி,

 

“அப்பாடா என் நண்பனை காப்பாத்திட்டேன்!” போலியாய் ஆழ்ந்த மூச்சைவிட்டவன், “உன் கற்புக்கு ஒன்னும் ஆகலையே பைரவ்?” போலி அக்கறையுடன் கேட்க,

அவனும் மாதவனுக்குத் தோதாய், ”நல்லவேளை வந்தே மாதவா இல்லைனா இவ என்னை…ஐயோ எப்படி சொல்லுவேன்” அவன் தோளில் சாய்ந்துகொண்டு வருந்த

 

“யக்! காலங்கார்த்தால…உருப்படாத முட்டைக்கோசுகளா” இருவரையும் அங்கிருந்த குஷனால் மொத்தி எடுத்தாள்.

 

முன்தினம் இருந்த மனயிருக்கம் இன்று பெரிதும் குறைத்திருந்ததை உணர்ந்தான் பைரவ்.

 

***

 

காலை போட்டிங் சென்ற இடத்தில் முகிலன் குழு ஏற்கனவே பேசிவைத்ததைப் போல வந்திருந்தனர்.

 

“ஹாய்!” என்று கையசைத்த மாயாவிடம் முகிலன் மீதிருந்த ஈடுபாடு வெகுவாகக் குறைந்திருந்ததை பைரவ் உணர்ந்தான்.

 

முகிலன் கேட்டதிற்கும் மேலே ஓரிரு வார்த்தைகள் பேசினாளே தவிர முன்தினம் இருந்த குழைவு இல்லை, அவன் கண்ணை நேராகப் பார்த்துத் தயக்கம் இல்லாமல் பேசினாள்.

 

அன்று முழுவதுமே தன் குழுவுடனே ஒட்டியபடி நடமாடினாள், அவர்களிடம் மட்டுமே எப்பொழுதும் போலப் பழகியவள், முகிலனிடம் ஒரு ஒதுக்கத்தை கடைப்பிடித்தாள்.

 

‘நல்லவேளை ஆர்வ கோளாறுல அவனை ப்ரொபோஸ் பண்ணலை’ பலமுறை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நிம்மதியடைந்தாள்

 

மாலை தங்கள் டூரை முடித்துக்கொண்டு அடுத்தகட்டமாக வேறு இடத்திற்குப் புறப்பட்ட முகிலன் அனைவரிடமும் அன்பாய் விடைபெற்று, பைரவை தனியே அழைத்தான்

 

இன்னமும் பைரவுக்கு முகிலன்மேலிருந்த வெறுப்பு குறையவில்லை,

 

“ம்ம்”

 

“என்னை பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியாது, நான் உன்ன என் பிரெண்டா தான் நெனைக்கிறேன். என்னைப் பாக்கும்போதெல்லாம் உன் கண்ணுல இருக்க கோவத்துக்கு காரணமும் எனக்குப் புரியலை. ” முகிலனின் நேரடி பேச்சில் பைரவ் எனோ மெளனமாக இருக்க, முகிலன் தொடர்ந்தான்.

 

“பைரவ் நீ இன்செக்கியூர்டா பீல் பண்றியான்னு எனக்குத் தெரியல ஆனா அப்படி இருந்தா அதை விட்டுடு, உனக்குத் துளியும் அது தேவையே இல்லை.

 

மாயா பார்வை என்மேல ஆனா கவனம் உன் கிட்டாதான் இருக்கு! நொடிக்கு நூறு தரமாவது உன்னைப் பத்தி மட்டுமே பேசுறா. உங்களுக்குள்ள இருக்கிறது நட்பா, காதலா, அதையும் தாண்டி ஏதாவதா தெரியாது ஆனா எதுவா இருந்தாலும் லைட்டா பொறாமையா இருக்கு” சிரித்துக்கொண்டவன்

 

“மாயா உன்னைப் பாக்குறமாதிரி என்னையும் ஒருத்தி பார்ப்பான்னா அவகிட்ட ஆயுசுக்கும் உயிரா இருப்பேன். உங்க உறவு எதுவா இருந்தாலும், ஆல் தி பெஸ்ட் மை பிரென்ட்!” சினேகமாகப் புன்னகைத்தவன், நண்பர்களின் அழைப்பில் உடனே விடைபெற்றான்.

 

பைரவ் ஆணி அடித்ததை போல் அங்கேயே நின்றுவிட்டான், சற்று தொலைவில் மாதவனை வம்பிழுத்து கொண்டிருந்த மாயாவை என்ன வகையில் சேர்ப்பான்?

 

ஒன்றுமே தெரியாத குழந்தையும் இல்லை எல்லாம் தெரிந்த பெண்ணும் இல்லை, வாழ்க்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவமும் இல்லை.

 

‘அவனை லவ் பண்ண முயற்சி பன்றேன்னு என்னைப் பத்தியா பேசிகிட்டு இருந்த? ஏண்டா…” சிரித்துக்கொண்டவன்,

 

‘நான் வில்லனா நினைச்சவன் வில்லனே இல்லையா? எனக்கு நானே வில்லனா? ஒரே நாள்ல எல்லாரையும் கோவத்தால இழந்திருப்பேனே!’ தேவை இல்லாமல் நேற்று நடந்த நிகழ்வுகளை எண்ணி தன்னைத்தானே நோந்து கொண்டான்.

 

‘இனி எனக்கான ஸ்பேஸ்லேயே நான் இருக்க முயற்சிக்கிறேன்’ தீர்மானித்துக் கொண்டவன்,

 

“சரி சரி வாங்க போயி வாட்டர் ஃபால்ஸ்ல குளிப்போம்” சிரித்தபடி தம்மவர்களை நெருங்கினான்.

 

“ஐயோ நான் வரலை நீங்கலாம் போயிட்டு வாங்க, போட்டிங் பெடல் செஞ்சே கால் வலி” கீதா விலகிக்கொள்ள, கிருஷ்ணனும் வரவில்லை என்றுவிட வாணியும், “நீங்க மூணு பேரும் போயிடுவாங்க, ரொம்ப இருட்டுறதுக்கு முன்னாடி வாங்க”

 

மூவரும் அருவிக்குப் புறப்பட, பெற்றோர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட்டனர்.

 

பலத்த ஓசையுடன் பிரம்மாண்டமாகக் கொட்டிக்கொண்டிருந்த அருவியைப் பார்த்த ஆண்கள் நிமிடத்தில் தண்ணீருக்குள் குதித்துவிட, மாயா பாறையில் அமர்ந்தபடி கால்களை மட்டும் தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு,அவர்கள் இருவரையும் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள்.

 

“வாடா” பைரவ் அழைக்க, மறுப்பாகத் தலையசைத்து மாயா மறுக்க,

 

“அதுக்கு நீச்சல் தெரியாது, பயந்தாங்குலி” உரக்கவே சொல்லி வம்பிழுத்தான் மாதவன்.

 

சிரித்த பைரவ் “வா நாங்க ரெண்டு பேறும் இருக்கோம்ல?” கையை அவளை நோக்கி நீட்ட,

 

“ஆமா நாங்க ரெண்டு பேர் இருக்கோம், யாராவது ஒருத்தராவது உன்னை நல்லபடியா தண்ணில ஜலசமாதி செய்வோம், நம்பி வா” மாதவனும் கையை நீட்ட,

 

கண்களைச் சாசர்போல் விரித்த மாயா, “அட நல்லவனே! நான் இங்கேயே இருந்துக்கறேன்” சிரித்தபடி கைப்பேசியைப் பார்க்க,

 

“சொல்லிகிட்டே இருக்கேன்” வேகமாக நெருங்கிய பைரவ் அவள் கைப்பேசியைப் பிடுங்கி பாறையில் வைத்துவிட்டு அவளை இழுத்து தண்ணியில் தள்ள, ஆழமில்லை என்றாலும் சிலநொடி திணறியவள், தனக்கே நீர் இடுப்பளவு வருவதை உணர்ந்து ஆசுவாசமடைந்தாள்.

 

“இந்த பாறையைப் பிடிச்சுக்கிட்டு ஜாலியா குளி, நானும் அவனும் அருவில நிக்க போறோம்” பைரவ் மாதவனுடன் அருவியை நோக்கிச் செல்ல,

 

“டேய் அண்ணா நானும் வரேன் டா ப்ளீஸ்…” மாயா கெஞ்ச

 

“தொல்லையைக் கைல பிடிச்சுக்கிட்டு…வாய்ப்பே இல்லை” மாதவன் மறுக்க

 

மாதவனிடம் கேட்டுப் பிரயோஜனம் இல்லை என்று பைரவை பார்வையால் கெஞ்சினாள், அவனோ “பாவம் வரட்டும் மாதவா” என்றான்

 

“நீயே அவளை சமாளி. அவகூட ஒகேனகல் போயி நான் பட்டபாடு!” வேண்டுமென்றே அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி மாதவன் வம்பிழுக்க,

 

“சரி நான் இங்கேயே இருக்கேன்” முகம் வாடிய தங்கையை, நெருங்கிப் புன்னகைத்தவன்,

 

“உடனே இவ்ளோ அப்பாவியா முகத்தை வச்சுக்க வேண்டாம், கையை பிடிச்சுக்கிட்டே நிக்க மாட்டேன், ஒழுங்கா அங்க பாறையை பிடிச்சுக்கிட்டு நின்னு குளிக்கணும் சரியா?”

 

“சரி சரி” உற்சாகமானவள், மாதவன் கையை பிடித்தபடி அருவியை நோக்கிச் சென்றாள்.

 

இரவு மாயா சீக்கிரமாக உறங்கச் சென்றுவிட, பைரவும் மாதவனும் பேசிக்கொண்டிருந்தனர்.

 

“பைரவ் வருஷத்துக்கு ஒருமுறையாவது இப்படி டூர் வந்தா மனசுக்கு நல்லா இருக்கும் போல இருக்கு”

 

“ஆமா நல்லாத்தான் இருக்கும்”

 

“ஆமா கேக்கணும்னு நெனச்சேன், அதென்ன இவ ஒரே நாள்ல பிரேக்அப் ?” மாதவன் கேட்கச் சிரித்த பைரவ்

 

“அது பெரிய கதை…” துவங்கிய பைரவ் ஒரு வழியாக முன்னிரவு நடந்ததைச் சொல்ல, விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினான் மாதவன்.

 

“நீ என் ப்ரெண்ட் ஆனதுனால சொல்லறேன். அந்த குட்டி பிசாசை உனக்குக் கல்யாணம் செஞ்சுவைக்க வாணிமா பிளான் போடுற மாதிரி இருக்கு. ஃப்ரீ அட்வைஸ் ஓடிடு! அப்புறம் உன்னை காப்பாத்த யாராலையும் முடியாது”

 

புன்னகைத்தவாறே கண்களை மூடிக்கொண்டான் பைரவ்.

 

மறுநாள் அருகிலிருந்த மற்ற இடங்களைச் சுற்றி பார்த்தவர்கள் சென்னைக்குப் புறப்பட்டனர்.

 

தன் அறையில் டூர் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த பைரவ் கைப்பேசியில் மாயாவை அழைத்தான்.

 

“ஹேய் தூங்கிட்டியா என்ன?”

 

“இல்ல பாஸ் தூக்கமே வரலை, உன்ன வானிமாவ அந்த ட்ரீ ஹவுஸ எல்லாத்தையுமே ரொம்ப மிஸ் பண்றேன்”

 

“நானும் அதான் கால் பண்ணேன்…”

 

எவ்வளவு நேர உரையாடல் நீடித்தது தெரியவில்லை, மாயாவின் மூச்சுக்காற்று மட்டுமே கேட்கும் வரை நீண்டது. அவனிடம் பேசியபடியே நிம்மதியாக உறங்கிவிட்டாள் என்பதை உணர்ந்தவனும் புன்னகையுடன் அதிகாலை உறங்கிப்போனான்.

 

மூன்றே நாட்கள் என்றாலும் அந்தப் பயணம் மாயா பைரவ் இருவரையும் முன்பைவிட இன்னும் நெருக்கமாக உணரவைத்தது. இப்பொழுது மாயாவிற்கு வாணியை இன்னுமும் பிடித்துப்போனது.

 

அலுவலகத்தில் மாயாவும் அவள் குழுவும் எப்பொழுதும் போல அரட்டை அடித்துக்கொண்டே வேலையில் மூழ்கியிருக்க,

 

வினோத்திற்கு ஏனோ மாயா டூர் சென்று வந்ததில் பொறாமை எட்டிப்பார்க்க “இருந்தாலும் என்னைக் கழற்றிவிட்டு டூர் போக எப்படி முடிஞ்சது? நான் பாவம் தனியா இருந்துருப்பேன்னு உனக்கு எண்ணமே வரலையா?”

 

“டேய் நீ தான் முறுக்கிக்கிட்டு போன, நான் வீக் எண்டு பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்த போறேன்னு?”

 

“நான் சொன்னா அப்படியே விட்டுடுவியா, உன்னோட உயிர்த் தோழனைக் கழற்றிவிட்டு போவியா?” வினோத் முறைக்க

 

வெங்கட்டோ மாயாவை முந்திக்கொண்டு, “இது எப்போலேந்து? சொல்லவேல்ல” வினோத்தை வம்பிழுக்க

 

“நீயே சொல்லு உனக்கு நான் பெஸ்ட் பிரெண்டா இல்ல அந்த பைரவ்சாரா?” மாயாவின் டேபிளை கோவமாகத் தட்டி வினோத் கேட்க,

 

“பைரவ் என் பெஸ்ட் பிரென்ட் (Best), நீ பெஸ்ட் பிரென்ட் (Pest – எரிச்சலூட்டும்)” துளியும் சிரிக்காமல் மாயா சொல்ல, பத்மா வெங்கட் சிரித்துவிட, வினோத்தோ மாயாவை வெட்டவா குத்தவா என்பதைப் போல் முறைக்க,

 

அவனைக் கிண்டல் செய்யத் துவங்கிய வெங்கட், போன் கால் வர அறையை விட்டு வெளியேறினான்.

 

வினோத் விடுவதாய் இல்லை, “நீ என்னைவிட்டு டூர் போயிருக்கே, சங்கத்துக்கு ஃபைன் கட்டு”

 

“முடியாது போடா” மாயா சொல்ல, பத்மாவோ அவளுக்கு ஹை ஃபை கொடுத்து வினோத்தை வெறுப்பேற்ற

 

“என்ன கூட்டணியா? இதெல்லாம் செல்லாது, இன்னிக்கி லன்ச் மாயா செலவுதான்” மாயாவிற்கு முன்னே மாயாவின் பர்ஸை எடுத்துக்கொண்டு வினோத் முன்னே செல்ல, சிரித்தபடி பெண்கள் இருவரும் பின்னே செல்ல, வெளியே சென்ற வெங்கட் கண்ணில் படவில்லை

 

“எங்க ஆளையே காணும்?” பத்மா தேட,

 

“கேர்ள் பிரென்ட் கால் பண்ணிருப்பா” வினோத் வெங்கட்டைத் தேடி கண்களை ஓடவிட்டபடி சொல்ல

 

“அவனுக்குக் கேர்ள் பிரென்ட் இருக்கா?” மாயாவால் நம்பவே முடியவில்லை, அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது வினோத் தலையை மறுப்பாக அசைத்தபடி ஓட்டமும் நடையாய் முன்னே செல்ல,

 

“டேய் டேய் சொல்லுடா…” கெஞ்சியபடி மாயா பின்னாலே ஓட, பத்மா சிரித்தபடி அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

 

வேகமாக நடந்து கொண்டிருந்த மாயாவை சிறிதும் கவனிக்காமல் முகத்தில் எரிச்சலுடன் புயலெனக் கடந்து சென்ற பைரவ் அன்று மாயாவிற்கு மட்டுமில்லாமல் அந்தக் கம்பெனிக்கே புதிதாகத் தெரிந்தான்.

 

வினோத் புருவம் உயர்த்தி, “என்ன உன் பெஸ்ட் பிரென்ட் உர்ர்ருன்னு போறார்? நீ ஏதாவது அவரோட டூர் போன இடத்துல …” அவன் பேச்சைக் காற்றில் கரைத்தது அதிர்ச்சியான வேதாவின் குரல்,

 

“என்ன பைரவ் கூட டூர் போனியா?” வினோத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்ட வேதாவின் முகத்திலிருந்தது என்ன? வெறுப்பா? கோவமா? தெரிந்துகொள்ள மாயா துளியும் விரும்பவில்லை,

 

“மூவ்!” ஆணையாக வந்த பெண்குரலில் மாயா வினோத் நகர்ந்துகொள்ள, நல்ல உயரம் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் அழகில் மாடல் போன்ற உடலமைப்பில் ஒரு பெண் போனில்,

 

“வாட் எவர்! பைராவ் என் கிட்ட பேச நேரமில்லைனு போறான், இப்போ நான் என்ன செய்ய? ஹெல் வித் யுவர் பிளான்!” கத்தியபடி, லிஃப்டை நோக்கி ஓடினாள்.

 

“வேதா நீ சண்டைபோட வேண்டியது மாயா கூட இல்ல அந்த அஞ்செலினா ஜோலி கிட்ட போலிருக்கே. இருந்தாலும் உனக்கு இவ்ளோ போட்டியா?” வினோத் கிண்டலாகச் சொல்லிவிட்டு

 

“நாம கிளம்புவோம்…பசிக்குது” மாயாவைக் கைபிடித்து இழுத்துச் சென்றான்.

 

திருதிருவென விழித்தபடி பத்மா பின்னே செல்ல, பார்க்கிங் லாட்டில் காத்திருந்த வெங்கட், முகமெங்கும் சிரிப்புடன் ஓடிவந்து,

 

“பாஸ் பண்ணிட்டேன்!” என வினோத்தை கட்டிக்கொண்டு குதிக்கத் துவங்கினான், அவர்களுடன் எதோ புரிந்தாற்போல் பத்மாவும் சேர்ந்துகொள்ள.

 

“டேய் என்னனு சொல்லுங்கடா எனக்கு மட்டும் ஒன்னும் புரியலை” மாயா விழிக்க

 

“வெங்கட் லவ்வை அவன் மாமா பொண்ணு ஓகே பண்ணிட்டா!” பத்மா குதித்துக்கொண்டே சொல்ல

 

“ஹை!” சரிவர விளங்கவில்லை என்றாலும் மாயாவுக்கும்  அவர்கள் உற்சாகம் தொற்றிக்கொள்ள, அவர்களைக் கட்டிக்கொண்டு கைதட்டிக் குதித்துக் கொண்டாடினாள்.

 

ஹோட்டலில் நால்வரும் அமர்ந்திருக்க, கண்முன்னே உணவிருந்தும் யாருக்கும் சாப்பிட மனமில்லை, மாயாவிற்கு வெங்கட் தன் காதல் கதையைச் சொல்லத் துவங்க வினோத், பத்மா இருவருக்கும் முன்பே தெரிந்திருந்தும் உற்சாகம் குறையாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

 

“ஆகமொத்தம் மூணு வருஷம் போராடி ஓகே பண்ணிருக்கே, சூப்பர் கலக்கிட்டே”

 

“ஹலோ கலக்கினது நானு” பத்மா காலரைத் தூக்கிக்கொள்ள, “அதானே உழைச்சது நாங்க பாராட்டு அவனுக்கா?” வினோத்தும் முறைக்க

 

வெங்கட்டோ புன்னகையுடன் “சரி சரி நீங்க ரெண்டு பேரும் தான் காரணம்” கிண்டலாகச் சொன்னாலும், அவன் முகத்தில் வெற்றி புன்னகை.

 

“என்ன?” மாயா புருவம் சுருக்க

 

வெங்கட்டே பதில் சொல்லத் துவங்கினான், “ஊர் உலக வழக்கம் என்ன? அத்தை பெண்ணோ மாமா பெண்ணோ கல்யாண வயசுல இருந்தா பேசி முடிகிறது தானே ? ஆனா  எங்க வீட்டுல அப்படியொரு யோசனையே யாருக்கும் இல்ல!

 

எனக்குன்னு ஒரே ஒரு முறைப்பொண்ணு, அவளோ முறைப்பொண்ணுனா முறைச்சுகிட்டே இருக்கணும்னு நினைச்சாளோ என்னவோ, சிரிக்கவே மாட்டா, ஆனா பாரு அதுனாலவே எனக்கு அவமேல ஒரே லவ்ஸ்.

 

வீட்ல பேசச் சொன்னேன், உனக்கு வேணும்னா நீயே பேசி சம்மதம் வாங்கு பிறகு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க.

 

நானும் பேசி…”

 

இடைமறித்த வினோத் “ என்ன? என்ன?” முறைக்க

 

“சரி சரி பேச பயந்துகிட்டு இவங்க ரெண்டு பேரையும்தான் பேச சொன்னேன், அவங்களும் பேசி…”

 

“ஹலோ” இடைமறித்தாள் பத்மா “பேசினோமா? கெஞ்சினோம் கிட்டத்தட்ட கால்ல விழாத குறை…”

 

வெங்கட்டின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றி இப்பொழுதே நால்வரும் பேசி திட்டம் போடத் துவங்க, அங்கே தன் அலுவலக அறையில் பைரவோ, ஆவேசமாக அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

“நான்  சொல்லவேண்டிய எல்லாத்தையும் சொல்லிட்டேன். இனி இதை பத்தி பேச எதுவும் இல்ல” 

 

“நான் ஒன்னும் நீதான் வேணும்னு ஏங்கி இருக்கல! வீட்ல பெரியவங்க ஆசை படறாங்களேன்னு..” அவள் முடிக்கும் முன்பே 

 

“ஸ்டாப் மானசா! ஜஸ்ட் ஸ்டாப்! எனக்கு கல்யாணம் செஞ்சுக்குற ஐடியாவே இல்லை. அத்தைகிட்ட சொல்லிடு”

 

கோவமாக நாற்காலியிலிருந்து எழுந்த மானசா “அப்போ எல்லாரும் சொல்றது உண்மையா?”

 

பைரவ் கேள்வியாக அவளை பார்க்க, மனஸாவோ, “அதான் உனக்கு இங்க யாரோ ஒரு பொண்ணு…” அவளை பேசவிடாமல் செய்கையில் நிறுத்தியவன்.

 

“உனக்கு விளக்கம் கொடுக்க எனக்கு பொறுமை இல்லை, ஜஸ்ட் லீவ். எனக்கு வேலை இருக்கு” அவளை வெளியேறுமாறு முகத்திற்கு நேராகவே பைரவ் சொல்லிவிட, அவமானமாக உணர்ந்த மானஸா பதிலேதும் தராமல் கோவமாக வெளியேறினாள்.

 

கைபேசியில் வாணியை அழைத்த பைரவ் நடந்ததை அவரிடம் தெரிவித்துவிட்டு, “பாத்து வாணிமா, அநேகமா அத்தை வீட்டுக்கு வர வாய்ப்பிருக்கு…..சரி….சி யு”. 

 

அழைப்பை துண்டித்தவன் விரல் தன்னையும் அறியாமல் மாயாவிற்கு டயல் செய்தது.