Poovanam-16

Poovanam-16

பூவனம்-16

விவாகரத்திற்கு பிறகு ரம்யாவின் மனநிலை மிகவும் பின்னோக்கி தள்ளப்பட, முன்னை விட ஆக்ரோஷமும், அழுகைகளும் அதிகமானதே தவிர குறையவில்லை.

யாரிடமும் மனம் விட்டு பேசாமல், எல்லாவற்றையும் தனக்குள்ளே மூடி மறைத்ததின் விளைவு, அவளுடைய நடவடிக்கையும், உடல்நிலையும் ஒரு கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டுப் போனது

அவளுக்கே தெரியாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தியும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும், மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டாள்.

சமயத்தில் யாரிடம் பேசுகிறோம் என்னும் நினைவு கூட அவளுக்கு இல்லாமல் போயிற்று.

இவை எல்லாவற்றையும் விட, தன் குழந்தையை தொட்டுத் தூக்காமல் தள்ளி வைக்க ஆரம்பிக்க, பிள்ளைக்கு பசியாற்றும் நேரம் ரம்யாவின் தாய் அவளிடம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

கடந்து வந்த பாதைகளும், கசந்து போன அனுபவங்களும் ஏற்படுத்திய மன அழுத்தங்களையும், உடல் பாதிப்புகளையும் வென்று சரியான நேர் கோட்டில் தன் பயணத்தை அமைத்துக்கொள்ள மிகவும் பிரயதனப்பட வேண்டியிருந்தது ரம்யாவிற்கு.

நொடிப்பொழுதும் கண் அயராமல் பெற்றோரும், உடன்பிறந்தோனும் இமையாய் காக்க, புதிய வரவாய் வந்த பூஞ்சிட்டும், தாயின் முகத்தை பார்த்து புன்னகை பூத்திட, ரம்யாவின் மனமும், உடலும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பியது.

மன அழுத்தத்திலிருந்து  விடுபட யோகாவும், தியானமும் கைகொடுக்க, அவள் மனதில் ஏற்பட்ட பயமும், குழப்பங்களும் நீங்கி தன்னம்பிக்கையோடு வாழ்வில் மேற்கொண்டு பயணித்திட, சரியான முறையில் ஆலோசனைகளும் மருந்துகளும் துணை புரிந்திட புதியதொரு பெண்ணாய் மறுபிறவி எடுத்தாள் ரம்யா…

மன நல ஆலோசனைகள் பல கட்டங்களில் மெதுமெதுவாய், பல யதார்த்தங்களை புரிய வைத்தது.

அவளுக்கு ஆலோசனை அளித்த பெண் மருத்துவர் பெண்களின் மனபோக்கையும், அவர்களின் வாழ்க்கை நடைமுறையையும் தெளிவாய் விளக்கிட தெளிந்து கொண்டாள்.

“மிசஸ் ரம்யா… உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது ரொம்ப சின்ன பிரச்சனை தான், பொதுவா பெண்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் வருது. எல்லா பிரச்சினைகளையும், எல்லோரிடமும் பெண்களால் பகிர்ந்துக்க முடியாது.

குடும்ப பிரச்சினைகள், நிம்மதியை குலைத்து கொண்டிருக்கும், கணவனின் செயல்பாடுகள் அதிருப்தியை அதிகப்படுத்தும்.

குழந்தைகளின் போக்கு, அவர்களிடம் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், கடுமையான மன உளைச்சலை உருவாக்கும்.

அதையெல்லாம் வெளியே சொல்லாம, நிறைய பெண்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைச்சு, தனிமையில் இருக்கும்போது அதை நினைச்சுப்  பார்த்து மனசு வருத்திப்பாங்க…

அந்த நிலைமைல தான் நீங்களும் இப்போ இருக்கீங்க. இப்படி யாரிடமும் கலந்து பேசாமல், தீர்வு காணவும் வழி தெரியாமல் மனதை குழப்பிக்கொண்டிருப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும்.

 

உங்க ரகசியம் வெளியே போககூடாதுனு நினைச்சு, நீங்க மனசு விட்டு பேசாம இருக்குறது தான், சில சமயங்களில் தீர்வு காண முடியாத அளவுக்கு அடுக்கடுக்காக பிரச்சினைகள் பின்தொடர காரணமாக அமைந்துவிடும்.

 

நீங்க, உங்க நம்பிக்கைக்கு பாத்திரமான தோழியிடமோ, அல்லது உங்க மேல அக்கறை காட்டும் உறவுக்காரர்களிடமோ மனம் விட்டு பேசணும்.

 

அது தான் மன பாரங்களை இறக்கி வைக்க வடிகாலாக அமையும். நெருக்கடியான நேரங்களில் மனதுக்கு நெருக்கமானவர்கள் கூறும் ஆலோசனை, உங்களுக்கு ஆறுதல் தரும்.

 

மனம்விட்டு பேசுவது என்பது கூட ஒருவகை மருந்துதான்.

 

மன அழுத்தம் நீங்க, மனதை கலக்கமில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் சூழலில் அது சாத்தியமில்லாதது.

 

மகிழ்ச்சியான சூழல் உருவானால் மட்டுமே பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.

 

கடமைகளை செய்துகொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கையல்ல, வாழ்க்கை என்பது ஒரு கலை. அது அழகாக அமைய மனம் மிகவும் அவசியமாகிறது.

 

நீங்க உங்க கடமையை மகிழ்ச்சியான மனநிலையோடு செய்யும் போது, மன அழுத்தம் உங்கள விட்டு தூரமா போயிரும். எது வந்தாலும் கடந்து போக சொல்லும், எதையும் எதிர்கொள்ள மன தைரியத்தையும் கொடுக்கும்.

 

இப்போ உங்க கடமை, உங்க குழந்தையை நல்ல படியா வளர்த்து, அவங்க எதிர் காலத்தை சிறப்பா அமைச்சுக்க உறுதுணையா இருக்குறது தான்.

 

அதை நீங்க சந்தோசமா செய்யும் போது, அதுவே உங்கள் உலகத்தையும், உங்களை சார்ந்தவர்களையும் சந்தோசமா வச்சுக்க உதவும்.

 

உங்ககிட்ட இருக்கும் பலவீனம் என்னனு, நீங்களே மனதளவில் தெரிஞ்சுக்கோங்க.

 

அது உங்கள் செயல்களில், அணுகுமுறைகளில் அந்த பலவீனம் வெளிப்படாமல் பார்த்துக்கொண்டால், அதுவே உங்களின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

இடையறாத இன்னல்களையும், துன்பதையும் தந்த தன் பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, என்பதை நல்ல முறையில் புரிந்து கொண்டாலே போதும், உங்கள் வாழ்க்கைக்கு தடைக்கற்கள் எது வந்தாலும், அதை தாண்டி நீங்க முன்னேறலாம்” போன்ற ஆலோசனைகளை பல கட்டங்களில், மிகவும் பக்குவமாய் பேசி ரம்யாவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தார்.

அவரின் ஆலோசனைகள், மனதிற்குள் நன்கு பதிய, ரம்யாவிற்கு தன் சுயத்தை அறியச் செய்தது. அவள் சகஜநிலைக்கு மாறிட, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிடித்தன…

அதன் பிறகு வந்த காலகட்டங்களில் அவள் சென்ற பாதைகள் யாவும் வெற்றிபடிகளே… தனக்கென ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டு, தன் பெண்ணையும் கண்ணும் கருத்துமாய் வளர்த்திட முன் வந்தாள்.

துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரனல்லவா.

அந்த நிலையில் தான், தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த நிகழ்வுகளை புதைகுழியில் புதைத்து விட்டு, நிமிர்ந்து நடமாடிட பழக்கப் படுத்திக்கொண்டாள்.

அதனால் தான் கணவன் ஐந்து வருடத்திற்கு பிறகு வந்த போது முதலில் பதட்டமடைந்தாலும், அதன் பின்பு தைரியத்துடனே. பேருந்து நிறுத்தத்திலும் அவளது அலுவலகத்திலும் சந்தித்து வந்தாள்.

“ஆனாலும் விட்டேனா பார் உன்னை” என்னும் ரீதியில் மீண்டும் குடும்பமாய் வாழ அழைத்த கணவனை நிராகரித்து ஒதுங்கினாலும், அவன் பிடித்த பிடியினை விடாமல் மீண்டும் நீதி மன்றம், ஆலோசனை கூட்டம் என்று தன்னை இழுத்தது சற்றும் மனதிற்கு பிடிக்கவில்லை.

தன் வாழ்க்கை மற்றவர் பார்வைக்கு காட்சிப்பொருளாய் இருந்தால் எந்த பெண்ணிற்கு தான் மகிழ்ச்சி அளிக்கும். அது மட்டமல்ல எந்தொவொரு தவறும் செய்யாமல், குற்றவாளி மனோபாவத்துடன் நீதமன்ற வாசலை மீண்டும் ஒரு முறை மிதிக்க சற்றும் விருப்பமில்லை அவளுக்கு.

உறவுக்கு அஸ்திவாரமான அன்பை இழந்து விட்டு, ஊருக்காகவும், உறவுகளின் பார்வைக்காகவும், மறுபடியும் அன்பு செலுத்த எவராலும் முடியாது, அப்படி நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

இழந்ததை திரும்ப பெற்றிட வாழ்க்கை என்பது இலாப நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்லவே. ஒருமுறை காதலாகி, கனிந்து, கசந்த நேசம் மீண்டும் அதே இடத்தில் துளிர்க்காது என்பது ரம்யாவின் திடமான எண்ணமாக இருந்தது.

அதே சமயத்தில் பிறந்த வீட்டின் சூழ்நிலையும் கருத்தில் கொள்ள தவறவில்லை அவள். முக்கியமாய் தன் அண்ணனின் திருமண வாழ்க்கைக்கு தடையாய் தானும், தன் குழந்தையும் இருப்பதை வெறுக்கத் தொடங்கினாள்.

எங்கே தான் தனியே வசிக்க தொடங்கினால் அவர்களின் மனம் காயமடையுமோ என்ற எண்ணமும் அவளை அலைகழித்தது.

அதுவே தாயின் சாதாரண பேச்சும் கூட இல்லாத, பொல்லாத எண்ணங்களையும் கட்டவிழ்க்க காரணமாய் அமைந்தது.

இங்கே இவளின் நிலை கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் எண்ணி மனதில் உரு போட்டுகொண்டிருக்க, அவள் கணவனுக்கும் அதே நிலை தான்…

எவ்வளவு வேலையில் மூழ்கிப் போனாலும் பிடித்தவர்களின் நினைவு ஒரு தென்றல் காற்றாய் வீசிவீட்டு தான் செல்கிறது…. நம் அவசர வாழ்க்கையில் சுவாசமாய் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம் பயணத்தை தொடர்ந்து செய்கிறோம்.

அப்பேர்ப்பட்ட நிலையில் தான் கிரிதரனும் தூர தேசம் வந்தாலும், மனம் முழுவதும் தன் வாரிசை சுமந்த மனைவியிடம் இருக்க, தன் வேலையை நேரம், காலம் பார்க்காமல் செய்து கொண்டிருந்தான்…

மனைவியிடம் பேசும் நேரம் குறைந்து போனாலும், அவன் நினைவோ எப்பொழுதும் அவளிடமே லயித்திருக்க, சந்தோஷமான மனநிலையில் தான், தன் தினப்படி வேலைகைளை தொடர்ந்தான்.

பிரசவ நேரத்தில் தான், மனைவியின் நிலை சற்றே அவனுக்கு புரிய, கதி கலங்கி போனாலும், தன் மகளின் வரவில் மனதை தைரியப்படுத்திக் கொண்டு, இளந்தளிரின் முகத்தை காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தான்.

அந்த நேரத்தில் தன் நிலையினை நினைத்து நொந்தவன், இனிமேல் வெளிநாட்டு வாய்ப்பை ஏற்கக் கூடாது என்ற பெரிய சபதத்தையே எடுத்திருந்தான்…

குழந்தை பிறந்த தினத்தை தவிர்த்து, அடுத்து வந்த நாட்களில் வேலை அவனை இழுத்துக் கொள்ள, ஒரு வாரம் கழித்து, அவன் தன் அன்னையிடம் பேசும் போது தான், வீண் பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகள் முளைத்ததை அறிந்து கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது…

மனைவியின் நிலையை அப்போது தான் அரைகுறையாக அறிந்தவன், தன் தாய் பேசிய பேச்சினை மனதில் வைத்துக்கொண்டு மாமனாரிடம் கோபமாய் பேசி, அப்பொழுதும் மனைவியின் நிலையை சரிவர கேட்டுக்கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் தன் பெற்றோரின் பேச்சும், தன் மாமனாரின் பேச்சும் கோபத்தை கிளப்பிட, தீர்வு காண வழிகள் அறிய முற்பட, அது விவாகரத்து என்னும் விசயத்தில், தன் குடும்பத்தார் நிலையாய் நிற்பதை அறிந்தவனுக்கு முள் மேல் நிற்கும் நிலை தான்.

யாரையும் விட்டுக்கொடுக்காமால் எல்லோரையும் அன்பால் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே அவன் குறிக்கோள்.

தன் அன்னையின் பிடிவாதம் எப்பேற்பட்டது என்பதையும் அறிந்தவனால், தற்காலிகமாய் நிலைமையை சமாளிக்க மட்டுமே, தன் தம்பியின் உதவியுடன், தன் வழக்கறிஞர் கூறிய சட்ட நுணுக்ககங்களையும், அதற்குள் உள்ள சாதகங்களையும் அறிந்தே பிரிவிற்க்கான அஸ்திவாரத்திருக்கு சம்மதித்தான்.

அவன் நினைத்தது இரண்டு வருடம் கழித்து செல்லும்போது, தன் மனைவியை எளிதில் சமாளித்து விடலாம் என்று தான். ஆனால் காலம் செய்த சதி, அவனை ஐந்து வருடம் வரை வெளிநாட்டிலேயே கட்டி போட, நீதிமன்றமும் அவர்கள் கோரிய பிரிவினை உறுதிப்படுத்திய காரணத்ததால், பேசவும் வழியில்லாமல் போக மிகவும் தவித்து போனான்.

தன் தம்பியின் மூலம், மனைவியின் நிலையினை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்தவனுக்கு, தன் மேல் தனக்கே கோபம் வர, வாழ்க்கை என்னும் சக்கரத்தில், தான் மிகவும் கீழே தொங்கிகொண்டிருப்பதை அறிந்து துக்கத்தில் கரைய மட்டுமே முடிந்தது…

பெற்றோரிடம் அடங்காத கோபம் கொண்டு தான் கிராமத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் அவர்களின் ஆட்டம் அடங்காமால் மறுமணத்தை பற்றி பேசவும், சற்றும் தாமதியாமல் தன் வாழ்க்கை பயணத்தை சீர் படுத்திட விரைந்து விட்டான்.

எதிர்ப்புகளையும், கோப பேச்சுக்களையும் எதிர் பார்த்தே வந்தவனுக்கு, கிடைத்த வரவேற்ப்பே, அனைவருக்கும் தன் மேல் உள்ள கோபத்தை அவனுக்கு புரிய வைத்திட, மிகவும் சங்கடமான மனநிலையுடன் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயன்றான்.

அவன் மிகவும் அதிர்ந்து போனது தனது மனைவியின் பாராமுகமும், கோப பேச்சுக்களையும் பார்த்து தான்.

சேர்ந்து வாழ்ந்த சொற்ப காலத்தில் அவளின் சிணுங்கல்களையும், குழந்தை முகத்தையும் பார்த்து பழகியவனுக்கு, அவளின் புதிய அவதாரம் சற்றே மிரள செய்தது.

சமாதான பேச்சுக்களும், கெஞ்சல்களும் அவளிடம் எடுபடாமல் போக, வேறு வழியின்றி சட்டத்தின் உதவியை நாடினான்.

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. சட்டத்தின் மூலம் இழந்ததை, மீண்டும் அதே சட்டத்தின் மூலம் பெற்றிடவே மீண்டும் அவளை ஆலோசனைக்கு அழைத்தது.

அவன் தன் மனைவியிடம் உரைத்த உறுதிமொழிகளும், மன்றாடல்களும், அவனுக்கு நியாயத்தை வழங்காத போது, அவனும் வேறென்ன தான் செய்வான்?

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது, அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை என்ற எண்ணம் தான் அவனை அந்த முடிவுக்கு தள்ளியது.

இவனது நிலைமை இப்படி இருக்க, இன்னும் ஒரு நாள் இடைவெளியில், தன் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஆலோசனைக்கான நாளினை எதிர் பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவனுக்கு கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!